அதிகாலைப் பொழுதில் அலாரம் விடாமல் அடித்துக் கொண்டிருக்க அது முழுவதும் அடித்து ஓய்ந்த பிறகு மெல்ல கண்விழித்தான் அவன். அந்த அறை முழுவதும் புத்தகங்கள் அங்கும் , இங்கும் சிதறிக் கிடந்திட அதை சட்டை செய்யாமல் எழுந்தவன் நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அந்த அறை முழுவதும் அவனது போட்டோக்களே சுவரெங்கிலும் இருந்தது.
குளித்து முடித்து தலை துவட்டியபடி அறைக்குள் அவன் வர அவனது அறைக் கதவு தட்டப்பட்டது. அவன் சென்று கதவைத் திறந்திட அவனது அம்மா கண்மணி நின்றிருந்தார் கையில் மகனுக்கு தேநீர் கோப்பையுடன்.
என்னம்மா நானே வருவேன்ல நீங்கள் ஏன் இதை எடுத்துட்டு வரணும் உங்களுக்கு சிரமம் தானே என்றவனிடம் இதில் என்ன தஷி சிரமம் என்ற கண்மணி அவன் கையில் தேநீர் கோப்பையை திணித்து விட்டு அங்கும், இங்கும் சிதறிக் கிடந்த புத்தகங்களை ஒழுங்காக அலமாரியில் அடுக்கி வைத்தார்.
ஏன்டா நீ படிப்பாளின்னு அம்மாவுக்கு தினமும் காட்டனும்னா புத்தகத்தை அங்கும், இங்கும் பரப்பி போட்டிருக்க என்று சிரித்த கண்மணி உன் வயசுப் பசங்க எல்லோரும் கல்யாணம் பண்ணி நான்கு பிள்ளை பெத்துட்டானுங்க நீ என்னடான்னா டிகிரி முடிச்சே ஆவேன்னு இருபத்தி ஐந்து வயசாகிருச்சு இப்போ தான் செகன்ட் இயரே படிக்கிற என்று சிரித்து விட மம்மி பில்டிங் ஸ்ட்ராங்க்கா இருக்கனும்னா ப்ரேஸ் மட்டமும் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கனும்ல அதனால நான் ஸ்கூல் கொஞ்சம் ஸ்ட்ராங்க்கா படிச்சேன் என்றான்.
பெயில் ஆனதிற்கு இப்படி ஒரு பிட்டாடா என்ற கண்மணியிடம் நானா பெயில் ஆனது போல சொல்றிங்கம்மா பேச்சு வரவில்லை, பேச்சு வரவில்லைன்னு எட்டு வயசுல ஸ்கூல் சேர்த்தால் எப்படி படிப்பு மட்டும் உடனே வரும் என்று சிரித்தவன் சரி, சரி எனக்கு நேரம் ஆச்சு வாங்க வந்து டிபன் எடுத்து வைங்க என்று தன் தாயை உணவு மேஜைக்கு இழுத்து வந்தான் தஷகிரிவன்.
என்ன தஷி இன்னும் ரெடியாகவில்லையா என்ற கார்த்திகேயனிடம் எங்கே அப்பா என்றான் தஷகிரிவன். இன்னைக்கு நீ என் கூட ஆபீஸ் வரணும்னு அம்மா கிட்ட சொல்லி இருந்தேனே என்றவரிடம் அப்பா ப்ளீஸ் நான் நம்ம கம்பெனி பொறுப்பை எடுத்துக்கிறேன் ஆனால் இப்போ இல்லை என்னோட டிகிரி முடிஞ்ச பிறகு. வெறும் வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் வைத்து நான் மேனேஜிங் டைரைக்டரா உங்க இடத்தில் உட்கார விரும்பவில்லை. நம்ம ஆபிஸ்க்கு இப்பவும் நான் வரத் தயார் ஒரு வொர்க்கரா . ஓனரா வர வேண்டும் என்றால் என்னோட தகுதியை கொஞ்சம் வளர்த்துக்கனும் அதுவரை கொஞ்சம் காத்திருங்கள் என்றவன் கட கடவென சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.
அவனால் தான் நலிவடைந்த தன்னுடைய தொழில் இத்தனை தூரம் வளர்ந்துள்ளது. தனது படிப்பை நிறுத்தி விட்டு தொழிலில் உதவிய மகன் இன்று பொறுப்பை ஏற்க சொன்னால் அதற்கான தகுதியை வளர்த்த பிறகு தான் பொறுப்பில் அமர்வேன் என்று சொல்வது கார்த்திகேயனுக்கு பெருமையாகவே இருந்தது.
என்னடி இன்னும் ரெடியாகாமல் தூங்கிட்டு இருக்கிற என்று வசைபாடியபடி வந்தார் காயத்ரி. அம்மா ஒரு ஐந்து நிமிடம் என்றவளது முகத்தில் தண்ணீரைத் தெளித்திட கண்களைக் கசக்கி விட்டு எழுந்தாள் நம் நாயகி ஷ்ராவனி.
என்ன மம்மி இப்படி காலையிலே எனக்கு அபிஷேகம் பண்ணுற என்றவள் எழ பாரு எருமை படுத்த படுக்கையை சரி பண்ணுதான்னு இதெல்லாம் காலேஜ்ல பாடம் எடுத்து என்று மகளை திட்டிக் கொண்டே அவளது படுக்கையை ஒழுங்கு படுத்தினார் காயத்ரி.
அன்னையின் அர்ச்சனைகளை காதில் வாங்கியும், வாங்காமலும் குளியலறைக்குள் நுழைந்தவள் பற்களைத் துலக்கினாள். குளித்து முடித்து வந்தவள் நேராக கிட்சனுக்குள் நுழைய வந்துட்டியா ஷ்ராவி என்றபடி தங்கையின் கையில் தேநீர் டம்ளரை கொடுத்தாள் வைஷ்ணவி. தாங்க்ஸ் அக்கா என்ற ஷ்ராவனியிடம் புன்னகை முகமாகவே அக்காவுக்கு தாங்க்ஸ் சொல்லுவியாடி லூசு என்றவள் அப்பா பூஜை அறையில் இருக்கிறார். அதற்குள்ளே நீ குளிச்சுட்டு வந்துட்ட என்றிட ஷ்ராவனி நல்லவேளை அம்மா வந்து எழுப்பினாங்க என்றாள்.
பூஜையை முடித்து விட்டு வந்த கதிர்வேலன் உணவு உண்ண அமர்ந்திட அவருக்கு பவ்யமாக பரிமாறினார் காயத்ரி.
அப்பா என்று அவர் முன் தயங்கியபடி நின்றிருந்த இளைய மகள் ஷ்ராவனியை பார்த்தவர் என்னம்மா என்றிட நேற்று சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்தேனே என்ன முடிவு பண்ணி இருக்கிங்க என்றாள்.
நீ வேலைக்கு அவசியம் போகனுமா என்ன என்றவரை பாவமாக பார்த்தவள் போனால் நல்லா இருக்கும்னு என் மனசுக்கு தோன்றுகிறது என்றாள் ஷ்ராவனி. அப்பறம் ஏன்மா என் முன்னே நின்னுட்டு இருக்க என்றவர் கை கழுவிட அப்பா அது என்று அவள் தயங்கிட சரி உன்னோட அம்மா என் கிட்ட கேட்டுக்கிட்டதால உன்னை நான் வேலைக்கு அனுப்புகிறேன் ஆனால் நீ உண்டு உன் வேலை உண்டுனு இருக்கனும். இந்த காதல் ,கத்தரிக்காய்னு எதுனாலும் சிக்கலை இழுத்துட்டு வந்தினா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன் என்றார் கதிர்வேலன். நிச்சயம் அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன் அப்பா என்றவள் சந்தோசமாக தன் அறைக்குள் நுழைந்தாள்.
அப்பாடா ஒரு வழியா இவரு வேலைக்கு போக சம்மதம் சொல்லிட்டாரு என்று சந்தோசம் அடைந்தவள் சென்று புடவையை மாற்றினாள். தலைவாரி பொட்டு வைத்தவள் தயாராகி வெளியே வர மகளின் தலையில் பூவை வைத்து விட்ட காயத்ரி மகளுக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி வேலைக்கு அனுப்பினார்.
என்னப்பா இன்னைக்கும் அண்ணன் கம்பெனி பொறுப்பை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா என்ற குகனிடம் ஆமாம் குகன் என்ற கார்த்திகேயன் சரி அவன் வரும் பொழுது வரட்டும் வா நம்ம வேலையை கவனிக்கலாம் என்றார்.
என்ன வைஷ்ணவி மேடம் யோசனையா இருக்கிங்க என்ற குகனிடம் நத்திங் சார் என்றாள் வைஷ்ணவி. அப்போ வேலையை பாருங்க வாங்குற சம்பளத்திற்கு வேலை பார்க்கனும் சும்மா கனவு கண்டுகிட்டு இருக்க உங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று அவளை கடிந்து கொண்டான் குகநேத்ரன். ஸாரி சார் என்றவள் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
என்ன வைஷு ஜி.எம் கிட்ட பயங்கர ரோஸ்ட் போல என்ற மகிழாவிடம் புன்னகைத்த வைஷ்ணவி ஏதோ இன்னைக்கு , நேற்று திட்டு வாங்குவது போல பேசுற இந்த ஆபிஸ்ல வேலைக்கு சேர்ந்து இரண்டு வருசம் ஆகுது. இந்த இரண்டு வருசத்தில் இந்த முசுடுகிட்ட திட்டு வாங்காத நாள்னு ஒன்று இருக்கா என்ன என்று சிரித்தவள் இன்னைக்கு ஷ்ராவிக்கு பர்ஸ்ட் டே காலேஜ் அதான் அவள் எப்படி சமாளிக்கப் போகிறாளோன்னு ஒரு சின்ன யோசனை அதான் அந்த முசுடுகிட்ட மாட்டிக்கிட்டேன் என்று சிரித்தாள் வைஷ்ணவி. வைஷு உன் தங்கச்சி லெக்சரர் என்னவோ பர்ஸ்ட் இயர் பொண்ணு பர்ஸ்ட் டே காலேஜ் போகிறது போல ரொம்ப பீல் பண்ணுற என்று சிரித்தாள் மகிழா.
பர்ஸ்ட் டே காலேஜ் போகும் போது இவள் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற ப்ரொபர்ஸ் பற்றி தான் கவலைப் பட்டேன் மகி ஆனால் இப்போ இவளையும் வச்சு செய்ய இவளை மாதிரி அராத்து பிடிச்ச ஸ்டூடண்ட்ஸ் வந்திருப்பாங்களேன்னு கவலைப் படுறேன் என்று சிரித்த வைஷ்ணவி முசுடு பார்க்குது அப்பறம் பேசலாம் என்று தன் வேலையை கவனித்தாள்.
கல்லூரி இரு சக்கர வாகன நிறுத்தத்தில் தனது ராயல் என்பீல்டு பைக்கை நிறுத்திய தஷகிரிவன் கூலிங் கிளாஸை கழற்றி சட்டையில் பார்க் செய்து விட்டு கையில் நோட்புத்தகத்தை சுத்தியபடி வர எதிரில் வந்த பெண்ணை கவனியாது அவள் மீது இடித்து விட்டான்.
ஏய் இடியட் அறிவில்லை என்றவளிடம் ஸாரி என்று கடந்து செல்ல இரிட்டேட்டிங் இடியட் என்றாள் அவள். எக்ஸ் கியூஸ் மீ அதான் ஸாரி சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன இரிட்டேட்டிங் இடியட் என்று அவன் கேட்டிட அவனை முறைத்தபடி கையைக் கட்டிக் கொண்டு நின்றாள் ஷ்ராவனி.
என்ன முறைப்பு என்றவனிடம் ஏதோ சொல்ல வர ஏய் நீ யாரு உன்னை நான் இந்த காலேஜ்ல பார்த்ததே இல்லையே என்றவனிடம் ஐயம் ஷ்ராவனி. இந்த காலேஜ்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கிற ட்ரைனிங் லெக்சரர் என்றாள் ஷ்ராவனி. ஓஓ நீங்க லெக்சரரா என்றவன் ஸாரி மேடம் என்று விட்டு சென்று விட அவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வேலையில் சேர்ந்து தனது வகுப்பறைக்கு சென்று விட்டாள்.
அவள் சென்ற வகுப்பறையில் அவனைக் கண்டவள் என்ன இவன் எருமை மாடு மாதிரி இருக்கான் ஆனால் செகன்ட் இயர் படிக்கிறானா என்று யோசித்தவள் ஹாய் ஸ்டூடண்ட்ஸ் ஐயம் ஷ்ராவனி என்றவள் இன்ட்ரட்யூஸ் யுவர்செல்ப் என்றதும் அனைவரும் அவளிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
தஷகிரிவன் இறுதியாக தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவனையும், அவனது பெயரையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் ஷ்ராவனி பாடம் நடத்த ஆரம்பித்தாள்.
அவனும் அவளை கண்டு கொள்ளாமல் பாடத்தை கவனித்தான். வகுப்பு முடிந்த பிறகு அவள் சென்று விட என்ன தல புது லெக்சரர் உன்னோட வரலாறைக் கேட்காமலே போயிருச்சு என்ற அசோக்கை முறைத்தான் தஷகிரிவன். அடிங்க என்னடா கலாய்க்கிறியா மவனே மூஞ்சை உடைச்சுருவேன் என்றவனிடம் விடு மச்சான் பொடிப் பயல் என்றான் அவனது தோழன் விஷ்ணு.
அவன் சொன்னது உண்மை தானே மச்சான் எந்த ப்ரொபசர் வந்தாலும் நம்ம இரண்டு பேரைப் பார்த்து நீங்க ஸ்டுடண்ட்டானு தானே கேட்கிறாங்க என்ற விஷ்ணுவைப் பார்த்து சிரித்தவன் அதற்கு என்னடா பண்ண முடியும் நாம கொஞ்சம் ப்ரேஸ் மட்டத்தை ஸ்ட்ராங்கா போட்டுட்டோம் அது தப்பா என்ன என்று சிரித்தான் தஷகிரிவன்.
தப்பே இல்லை தல என்ற அசோக்கைப் பார்த்து நல்லா தட்டுற மவனே ஜிங்சாங் என்று சிரித்தான் விஷ்ணு. ஏன் தல நீ வேற என்று சிரித்தான் அசோக்.
ஹாய் மேடம் என்று வந்த சுஜாதாவிடம் ஹலோ என்றாள் ஷ்ராவனி. என்ன யோசனை என்ற சுஜாதாவிடம் செகன்ட் இயர் க்ளாஸ்ல இரண்டு பேரு இருந்தாங்க ஆனால் நார்மல் செகன்ட் இயர் பசங்களை விட ஏஜ் அதிகம் போல இருந்தாங்க அதான் அவங்க நிஜமாவே ஸ்டூடண்ட் தானா இல்லை ஏகன் படத்தில் வரும் தல அஜித் போல எதுனாலும் கேஸ் இன்வெஸ்டிகேட் பண்ண வந்த போலீஸா என்று
ஷ்ராவனி கேட்டிட சுஜாதா கலகலவென சிரித்தாள்.
….தொடரும்….