லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 23
சேகர் போன பின் இந்தரும் மலரழகியும் வெளியே வரவும் அங்கே பாண்டியும் பார்கவியும் சேகரை வழிமறித்து ஏதோ விசாரணை நடத்தி கொண்டிருந்தார்கள்..
இந்த திருமணத்திற்கான நிகழ்வுகள் எல்லாவற்றிலுமே இருவருமே ஆர்வத்தோடு கலந்து கொண்டிருந்தார்கள்.. பின்னே..? தீரன்.. மதி.. இருவரும் இணைவதற்கான முக்கிய காரண கர்த்தா அவர்கள் தானே..
தங்களின் தம்பி தங்கையின் நல்வாழ்வுக்காக வேறு வழியின்றி நிர்பந்தத்திற்காக மட்டுமே மதியும் தீரனும் இந்த திருமண முடிவை எடுத்திருக்கிறார்களே தவிர அவர்களின் திருமணத்திற்கு காதலோ நேசமோ இப்படி எந்த காரணியும் அச்சாரம் இடவில்லை என்று அவர்களுக்கு மட்டும் தானே தெரியும்..
எதற்காக இருந்தாலும் அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது அவர்களின் நலம் விரும்பிகளான இந்த தம்பதிக்கு பேருவகையையே தந்திருந்தது..
அந்த ஞாயிறன்று தீரன் பாண்டியை அழைத்து விஷயத்தை சொன்ன நொடியே அவன் முகம் பிரகாசமாய் விரிந்தது..
அவன் முகமலர்ச்சியை பார்த்த பார்கவி “என்னாச்சு சரவணா.. திடீர்னு இவ்ளோ சந்தோஷமா இருக்க?”
“ஏய் பவி செல்லம்.. நான் சொல்லப் போற விஷயத்தை கேட்டா உன்னால நம்பவே முடியாது.. நம்ம தீரனுக்கும் மதிக்கும் கல்யாணம்..”
“என்ன சொல்ற சரவணா?” முகத்தில் ஆனந்தம் கொப்பளிக்க கேட்டவளை சந்தோஷத்தில் இழுத்து அணைத்து கொண்டான் சரவண பாண்டியன்..
“ஆமாம்டி.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கு.. தீரன் அந்த ஹோட்டலுக்கு போறேன்னு சொன்னான்ல அங்க நம்ம மதியும் போய் இருக்கா..”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பார்கவிக்கும் மதியிடம் இருந்து அழைப்பு வந்தது..
மதியை அவள் வீட்டில் இறக்கி விட்ட மறுநிமிடமே பாண்டிக்கு விஷயத்தை அழைத்து சொல்லி இருந்தான் தீரன்..
இப்போது மதியும் அழைக்கவும் அழைப்பை ஏற்ற பார்கவியிடமா உணவகத்தில் நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் மதி..
பார்கவிக்கோ தன் செவிகளை நம்பவே முடியவில்லை..
“திடீர்னு என்னடி இவ்ளோ பெரிய சேஞ்ச் உன்கிட்ட.. ஒருவேளை தீரா அண்ணனை நிஜமாவே நீ..”
அவளுக்கு ஏற்கனவே ஒருவேளை மதி தீரனை விரும்புகிறாளோ என்று சந்தேகம் இருக்கவும் இப்போது அந்த சந்தேகம் இன்னும் வலுக்க அவளை வாய் திறந்து கேட்டே விட்டிருந்தாள் பார்கவி..
மதியோ “இல்லடி.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அது என்னை தொல்லை பண்றது அவரோட தம்பின்னு தெரிஞ்சப்புறம் இந்த முடிவு என் மேல இந்தருக்கு இருக்குற நெனப்பை முழுசா அழிச்சிடும்கிற யோசனைல தான் இப்படி முடிவு எடுத்தேன்.. எப்படி நாங்க காதலிக்கிறதா நாடகம் போட்டோமோ அதே மாதிரி தான் இந்த கல்யாணமும்.. இதுவும் ஒரு நாடகம் தான்டி.. மலர் இந்தர் ரெண்டு பேரும் செட்டிலான பிறகு நாங்க இந்த கல்யாணத்துலருந்து லீகலா பிரிஞ்சுருவோம்.. மத்தவங்க கண்ணுக்கு நாங்க புருஷன் பொண்டாட்டி.. எங்களை பொறுத்த வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ்.. அவ்வளவுதான்..”
அவள் சொன்னதைக் கேட்ட பார்கவிக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.. இருவரையும் காதலர்களாக நடிக்க சொன்ன போது தீரனுக்கான மதியினுடைய எதிர் வினைகள் எல்லாமே மதி அவனை விரும்புகிறாளோ என்ற சந்தேகத்தை ஆழமாக பார்கவியினுள் விதைத்திருந்தது..
ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ என்று உள்ளுக்குள் கொஞ்சம் நப்பாசையோடு தான் அந்த கேள்வியை கேட்டிருந்தாள் அவள்.. ஆனால் அப்படி இல்லை என்று மதி சொல்லிவிடவும் அப்படியே புஸ் என்று ஆனது அவளுக்கு..
ஆனாலும் எதிர்காலத்தில் இருவர் இடையே இருக்கும் பிணைப்பு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று தோன்றவும் மதி தீரனின் இந்த நல்ல முடிவுக்காக சந்தோஷப்பட்டாள் பார்கவி..
பாண்டிக்கும் அதே நிலைதான்.. அதே எதிர்பார்ப்பு தான்.. எப்படியும் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை அவனுக்கும் வலுவாக தோன்றியிருந்தது..
அதன் பிறகு இருவரும் அவர்களின் திருமண வேலைகளில் தீவிரமாகவே ஈடுபட்டிருந்தார்கள்.. அதுவும் அன்று காலை முதல் அந்த திருமணத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்கள் அவர்கள் இருவரும்..
திருமணம் முடிந்து எல்லாவற்றையும் ஏறக்கட்டி ஒரு வழியாய் நிம்மதி பெருமூச்சு விட்ட வேளையில் அங்கே சேகரை பார்த்து இருவரும் திடுக்கிட்டார்கள்..
பார்கவி நேராக அவனிடம் சென்று “டேய்.. நீ எதுக்கு இங்க வந்த? அன்னைக்கு ஹோட்டல்ல செமையா வாங்கினியா? அப்ப கூட உனக்கு புத்தி வரலையா? மறுபடியும் இங்க என்ன குழப்பம் பண்ண வந்திருக்க..?”
அவர்கள் கேட்க “நான் ஒன்னும் குழப்பம் எல்லாம் பண்ண வரல.. உண்மையை சொல்ல தான் வந்தேன்.. ஏன்.. அந்த உண்மை உங்களுக்கும் தெரியும் தானே? நீங்க தானே அவங்க நாடகத்துக்கு எல்லாம் கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதிக் கொடுக்கறது..?”
சேகரின் பேச்சில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள் பார்கவி.. ஆனாலும் சளைக்காமல் தன் முகத்தில் இருந்த அந்த உணர்வுகளை அவனிடம் இருந்து மறைத்து “என்ன மிரட்டுறியா? நீ என்ன வேணா பண்ணிக்கோ.. ஆனா இந்த கல்யாணம் உண்மையான கல்யாணம் தான்..”
அவள் அடித்து சொல்ல அவனோ சத்தமாக சிரித்தான்..
“எது..? உண்மையான கல்யாணமா? இதோ உன் புருஷன்.. அந்த தீரன் பய எல்லாம் சினிமாவில நடிக்கிறவங்க தானே..? அப்போ இதையும் சினிமா கல்யாணம் மாதிரி தான் பண்ணி இருப்பாங்க.. எல்லாம் எனக்கு தெரியும்.. சும்மா என் கிட்ட நடிக்காதீங்க.. இப்ப கூட இதைதான் போய் அந்த இந்தர்கிட்டயும் மலரழகி கிட்டயும் சொல்லிட்டு வரேன்.. ஆனா ரெண்டும் சரியான ட்யூப்லைட்டா இருக்குங்க.. நான் சொன்னதை நம்பாம அவங்க அக்காவும் அண்ணாவும் அப்படியே உத்தமங்கன்னு ஏதோ பேசிட்டு இருக்காங்க.. ஆனா அவங்களுக்கு உண்மையை தெரியப்படுத்தாம விடமாட்டேன்.. நான் மறுபடி மறுபடி அவங்களை மீட் பண்ணி அவங்களுக்கு உண்மையை தெரிய வப்பேன்.. என்னை வேணாம்னு சொல்லி என் வாழ்க்கையையே அழிச்சிட்டு அவ மட்டும் நல்லா நிம்மதியா வாழ்வாளா?”
“நீ என்ன வேணா பண்ணிக்கோ.. நீ நல்லது செஞ்சா நீ நினைக்கிறது எல்லாம் நடக்கும்.. நீ அடுத்தவங்க குடியை கெடுக்கணும்னு யோசிக்கிற இல்ல? அந்த நினைப்பே உன்னை அழிக்கும்.. வா பவி.. இந்த மாதிரி ஒரு கேடு கெட்டவன் கிட்ட எல்லாம் பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம்.. இவன் நம்மளோட இவ்ளோ டைம்க்கு வர்த்தே கிடையாது..” இப்படி சொல்லி பார்கவியின் கைப்பிடித்து அழைத்துச் சென்றான் பாண்டி..
சேகரும் தானே அங்கு வந்து அவ்வளவு பேசியும் எதுவும் நடக்காமல் போய்விட்டதே என்று ஏமாற்றத்தோடு அங்கு இருந்து வெளியேறினான்..
இதற்குள்ளாக பெண் மாப்பிள்ளை இருவரும் வீட்டுக்கு ஜோடியாக கிளம்ப அவர்கள் வண்டி அருகே நின்றிருந்தார்கள் அனைவரும்….
தீரன் மதியை பார்க்கும் பார்வையில் இந்தருக்கு அதீத காதல் தெரிய அவனால் சேகர் சொன்னது உண்மை என நம்பவே இயலவில்லை..
மலரழகியின் எண்ண ஓட்டமும் அப்படி தான் இருந்தது.. தீரனை போல் மதி அவனை வெளிப்படையாய் காதலாய் பார்க்கவில்லை என்றாலும் அவன் அவளை பார்க்காத போது அவனை ஆசையோடு பார்வையால் தீண்டியிருந்தாள் பெண் அவள்..
அவர்கள் கிளம்புவதை பார்த்துக் கொண்டே இருந்த மலர் அவர்கள் அருகில் வந்து “மாமா..” என்று ராகமாய் அழைக்க அந்த புதிய அழைப்பில் திடுக்கிட்டு அவளை திரும்பி பார்த்தான் தீரன்..
மதியோ அவளுடைய அழைப்பில் ஆச்சரியப்பட்டு போனாள்..
அதற்குள் தன் வியப்பிலிருந்து வெளி வந்த தீரன் “சொல்லு மலரு.. என்ன வேணும்..?” என்று கேட்க “ஏன் தீரா மாமா.. இவ்வளவு நாள் எங்க அக்கா எங்க கூட இருந்தா.. இப்ப இப்படி நீங்க எங்க அக்காவை எங்க கிட்டருந்து பிரிச்சு உங்க வீட்டுக்கு மொத்தமா கூட்டிட்டு போறீங்களே.. இப்ப அக்கா இல்லாம எங்க வீட்டுல நானும் அப்பாவும் மட்டும் இருக்க எவ்வளவு கஷ்டமா இருக்கும்..? ஒரு பேச்சுக்காவது என்னையும் எங்கப்பாவையும் உங்க வீட்டுக்கு வந்து எங்க அக்காவோட ஒரு பத்து நாள் தங்கி இருக்க சொன்னீங்களா?”
அவள் மாமனோடு மச்சினி என்ற உரிமையோடு சண்டையிட மதிக்கும் தீரனுக்கும் அவளுடைய அந்த மாற்றம் மிகவும் பிடித்திருந்தது..
“அதுக்கு என்ன? பத்து நாளில்லை.. எவ்வளவு நாள் வேணும்னாலும் உங்க மனசு நிறையற வரைக்கும் அங்க இருங்க.. இல்ல எங்க கூடவே வந்து நிரந்தரமா இருந்திருங்க.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..”
அவன் சாதாரணமாய் சொல்லிவிட தமிழ்வாணனுக்கோ மிகவும் சங்கடமாகி போனது..
“ஏய் மலரு.. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? அவங்க வீட்ல அண்ணனும் தம்பியுமா ஒண்ணா இருக்காங்க.. பொண்ணு குடுத்துட்டு நம்மளும் அவங்க வீட்டுல போய் உட்கார முடியுமா? ஏதாவது ஏடாகூடமாவே பேசிக்கிட்டு.. மாப்பிள்ளை இந்த கிறுக்கி ஏதோ உளறிக்கிட்டு இருக்கா.. நீங்க மதியை கூப்பிட்டுக்கிட்டு கிளம்புங்க மாப்பிள்ளை..”
“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா.. மலர் சொல்றது சரிதான்.. ஒரே குடும்பமா ஆயிட்டோம் நாம.. எதுக்கு தனி தனியா இருக்கணும்..? எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்.. இப்பவே எங்களோட வந்து பத்து நாள் தங்குங்க.. பத்து நாளுக்கப்பறம் உங்க வீட்ல இருக்குற சாமான் எல்லாம் கொண்டு வந்து எங்க வீட்டிலேயே எங்களோட தங்கிக்கோங்க.. எங்க வீட்ல எங்க ரெண்டு பேர் ரூம் தவிர இன்னும் ரெண்டு ரூம் இருக்கு.. நீங்க தாராளமா வந்து தங்கிக்கலாம்.. நீங்க வந்து தங்கினா மதிக்கும் சந்தோஷமா இருக்கும்..”
மதியும் “ஆமாம்பா.. நீங்க எங்களோடயே வந்துடுங்க..” என்று அவனுக்கு ஒத்து ஊத மதியிடம் “ஒரு நிமிஷம் என்னோட வாம்மா..” என்று சொல்லி அவளை அழைத்துக்கொண்டு தனியாக போய் “அம்மாடி.. அது எப்படிடா அந்த வீட்டுல உன் தங்கையையும் கூட்டிட்டு போய் வச்சிருக்க முடியும்..? அவங்க ரெண்டு பேரும் வயசு பிள்ளைங்க.. அவங்க சரியா இருந்தாலும் ஊர் என்ன பேசும் சொல்லு.. ஊர் வாய்க்கு அவலிட வேணாம்மா கண்ணு.. இது வேண்டாம்.. சொன்னா கேளு..”
ஆனால் மதியோ அவரிடம் “அப்பா தீரனை விட 20 மடங்கு நான் இந்தரை நம்பறேன்.. அவனால எந்த பிரச்னையும் வராது.. ஊர் பேசறதுக்கெல்லாம் பயந்தா அதுக்கெல்லாம் வரைமுறையே கிடையாதுப்பா.. அதை எல்லாம் கண்டுக்காதீங்க பா.. நம்மள பத்தி நமக்கு தெரியும்..” என்றவள் அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட காதில் வாங்காமல் தீரனிடம் சென்று “தீரா.. நம்ப அப்பாவையும் மலரையும் நம்மளோடயே கூட்டிட்டு போலாம்..” என்று சொல்ல தீரனும் தலையாட்டி தன் மாமனார் தோளில் கை போட்டு தன் வண்டிக்கு அழைத்துச் சென்றான்…
அதன் பிறகு தமிழ்வாணனை ஒரு வார்த்தை பேச விடவில்லை அவன்..
மதியழகியின் முகம் ரொம்பவும் பிரகாசமாக இருந்தது.. மலர் தீரனை மாமா என்று அழைத்தது ஏனோ அவளுக்குள் ஒரு நிம்மதியை படர விட்டு இருந்தது..
மாமனாரை வண்டியின் கதவை திறந்து ஓட்டுனர் பக்கத்து இருக்கையில் அமர்த்தியவன் ஓட்டுநர் இருக்கைக்குச் சென்று தான் அமரப்போக அவனை வந்து தடுத்திருந்தான் இந்தர்..
தீரன் அவனை கேள்வியாய் பார்க்க “அண்ணா நீங்க போய் அண்ணியோட உக்காந்துக்கோங்க பின்னாடி.. நான் வண்டி ஓட்டுறேன்..”
இந்தர் அப்படி சொல்லவும் ஆச்சரியத்தில் மதி தீரன் இருவரும் விழி விரித்தார்கள்..
“என்ன அண்ணா பாக்குற? போண்ணா..” தீரன் கையில் இருந்து வண்டி சாவியை வாங்கியபடி சொன்னான் அவன்..
பின் இருக்கையில் மதியோடு வந்து அமர்ந்தான் தீரன்.. வண்டியின் பின்னால் திருமணத்திற்கு எடுத்து வந்த சாமான்களை நிறைத்திருக்க அங்கு இருவர் மட்டுமே அமர இடம் இருந்தது..
அங்கே தீரனின் அத்தையும் மலரழகியும் இருவரும் ஏற்கனவே இறுக்கிக் கொண்ட அமர்ந்திருக்க பார்கவிக்கும் பாண்டிக்கும் அமர இடமில்லாமல் முன்னே வந்தார்கள்.. மதியை பார்த்து “மதி வண்டியில இடம் இல்லை.. நாங்க வேணா ஆட்டோ பிடிச்சு வந்துடறோம்.. நீங்க கிளம்புங்க..” என்றாள்..
மதிக்கோ அவளை எப்படி விட்டு செல்வது தர்ம சங்கடமாய் இருந்தது.. கல்யாண வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தவர்களை இடமில்லை என்று சொல்லி கோவிலிலேயே விட்டு செல்ல என்னவோ போல இருக்க தீரன் பக்கம் திரும்பி பார்த்தாள் அவள்..
அவனும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்க அந்நேரம் தமிழ்வாணன் “அது எதுக்கு மா இன்னொரு ஆட்டோ புடிச்சு வரணும்? ரெண்டு பேரும் மதியும் மாப்பிள்ளையும் உட்கார்ந்து இருக்கிற சீட்லயே ரெண்டு பக்கம் ஏறி உக்காந்துக்கோங்க.. இதோ ஒரு அரை மணி நேரத்துல வீட்டுக்கு போயிரலாம்..” என்றார்..
அவர் சொன்னதைக் கேட்டு தீரனையும் மதியும் பார்த்து தலையை ஒருவிதமாய் ஆட்டியபடி “அதுவும் சரிதான்.. சரவணா.. நீ அந்த பக்கம் போய் அண்ணன் பக்கத்துல உக்காந்துக்கோ.. நான் மதி பக்கத்துல உட்காருறேன்.. அப்படியே கொஞ்சம் இடுக்கிக்கிட்டு அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா ஒக்காந்தாங்க நாமளும் அட்ஜஸ்ட் பண்ணி இந்த வண்டிலயே போகலாம்..”
யாருக்கும் தெரியாமல் பாண்டியை பார்த்து கண்ணடித்தப்படி அவள் சொல்ல மதி அவளை பார்த்து முறைதான்..
அவளோ அதை கண்டு கொள்ளாமல் தன் இதழுக்குள் தோன்றிய சிரிப்பை மறைத்துக் கொண்டு சொன்னபடி வண்டிக்குள் ஏறி அமர்ந்தாள்..
அந்தப் பக்கம் பாண்டி வீரனே நெருங்கிக் கொண்ட அமர இந்த பக்கம் பார்கவி மதியழகியை தீரன் பக்கம் தள்ளியபடி அமரவும் சட்டை என அவள் தள்ளியதில் நிலை தடுமாறி தீரன் மேல் விழுந்தாள் மதி..
அவன் மார்பில் அவள் சாய்ந்து இருக்க தீரனும் எதிர்பாராமல் ஏதோ ஒரு பூக்குவியல் தன்மேல் விழுந்தது போல் ஒரு நொடி மலர்ந்து போனவன் அடுத்த நொடி தங்களையே எல்லோரும் பார்வையால் அளைந்து கொண்டு இருப்பதை பார்த்து மதியின் தோள்களை பற்றி அவளை நேராக அமர வைத்தான்..
அப்போது அவள் காந்த விழியை அவன் விழிகள் சந்தித்து விட அவளோ அந்த பார்வையிலும் நெருக்கத்திலும் சங்கடமாய் நெளிந்த படி அவன் பார்வையை சந்திக்க முடியாமல் விழி தாழ்த்தினாள்..
பாண்டி அவன் பக்க கார் கதவை மூடுவதற்காக தீரன் பக்கம் சாய இப்போது தீரனின் தோள் மதியின் தோளில் மோத அவளோ வலியிலீ “ஸ்ஸ்ஸ்..” என முனகினாள்..
“என்னடா பண்ற?” தீரன் பல்லை கடித்துக் கொண்டு பாண்டியை கேட்க “என்ன பண்றேன்.. கார் கதவை சாத்த முடியல.. அதான் கொஞ்சம் தள்ளி உக்காந்தேன்.. அதுக்கு ஏன் இவ்வளவு கோவப்படுற?” என்று கேட்க மதி பக்கம் திரும்பிய தீரன் “சாரி மதி..” என்க வண்டி கிளம்பவும் இருவரின் தோள்களும் மேலும் மேலும் இடித்துக் கொண்டே இருக்க இருவருக்குமே வசதியாக அமர முடியாமல் ரொம்பவும் அவஸ்தையாக இருந்தது..
சட்டென தீரன் மதி பக்கம் இருந்த தன் கையை எடுத்து மதியின் தலையின் பின்னால் கொண்டு போய் சீட்டின் மேல் வைக்க அவளுடைய வலப்பக்கம் முழுவதுமாய் அவன் மார்போடு உரச அதில் சிலிர்த்து போனவள் சட்டென நிமிர இருவரின் கண்களும் அவர்களின் அனுமதி இல்லாமலேயே கலந்து காதல் பேசிக்கொள்ள தொடங்கின..
இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது
பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி
மறைத்தது
தானாக பூத்து
வருகுது
தேடாமல் தேடி
கிடைத்தது
இங்கே
இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய
தாங்காமலும்
தூங்காமலும்
நாள் செல்லுதே.
இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….
அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்..
என் நெஞ்சமோ
உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத
தோற்றம்
இது நிரந்தரம்
அல்ல
மாறிவிடும் மன
நிலை தான்..
மனதிலே
முன்னூறு உணர்
வுகள்
மலர்ந்ததே முத்தான
உறவுகள்
திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
தேகம் இப்போது
உணர்ந்தது
தென்றல் என்
மீது படர்ந்தது
மோகம்
முன்னேறி வருகுது
முன்னே..
தொடரும்..