லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 24
வண்டி வீடு வந்து சேர்ந்ததும் வரவேற்பறையில் எப்போதும் இருப்பது போல் ஒரு அமைதியும் இறுக்கமும் தனிமையும் இல்லாமல் மாறாக கலகலவென்று இருந்தது.. தீரனின் அத்தையோடு சேர்ந்து ஆறு பேரும் அங்கே அமர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்திருக்க தீரனுக்கு ஏதோ வெகு நாளைக்கு பிறகு தனக்கு ஒரு அழகான குடும்பம் கிடைத்ததாய் ஒரு நிறைவு தோன்றியது..
அந்த நிறைவு தந்த மகிழ்ச்சியில் மதியின் பக்கத்தில் அமர்ந்து இருந்தவன் தன்னையும் அறியாமல் அவள் தோளை சுற்றி அணைத்தாற் போல் யதார்த்தமாய் கை வைக்க அவளோ அந்த திடீர் தீண்டலில் சற்று திடுக்கிட்டு அவன் முகம் பார்த்தாள்..
அவனோ அவள் தோளை சுற்றி அவளை அணைத்தபடி பல நாட்களாய் உண்மையாகவே அவளை விரும்பி திருமணம் செய்தவன் போல் சகஜமாக இயல்பாக அமர்ந்து அந்த பிரக்ஞையே இல்லாமல் மற்றவர்களோடு சிரித்து பேசிக் கொண்டிருந்தான்..
ஆனால் வெகு நேரமாய் மதி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்ற சட்டென திரும்பி அவள் முகம் பார்த்தவன் அப்போதுதான் தன் கை அவள் தோளில் இருக்க அவள் அவஸ்தையாய் நெளிந்து கொண்ட அமர்ந்திருப்பதை உணர்ந்தான்..
அடுத்த நொடி பதறிப் போய் தன் கையை அவள் தோளில் இருந்து விலக்கினான்.. அங்கு சுற்றி அமர்ந்திருப்பவர்களை பார்வையாலேயே அவள் காட்ட புரிந்து கொண்டு அவளிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டான்..
அவன் ஒரு தோழனாய் தான் தன்னை தோளணைத்திருப்பான் என்றாலும் அத்தனை பேர் முன்னிலையில் அவனின் அந்த அணைப்பு கேலிக்கு இடமளித்துவிடும் என்று எண்ணி கொண்டிருந்தாள் பேதை அவள்.. ஆனால் அவன் பார்வையில் காதல் பொங்கி வழிந்ததை அங்கிருந்த மற்ற அனைவருமே கண்டு கொண்டிருந்தார்கள்..
இப்படியே அந்த நாள் கழிந்து விட கதிரவன் மறைந்து நிலாமகள் முகத்தை காட்டினாள்.. மாலையிலேயே பாண்டிக்கு ஏதோ படபிடிப்பு இருக்கிறது என்று அவன் சரி சென்று விட பார்கவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவும் அவளும் பாண்டியோடு வீட்டுக்கு கிளம்பி இருந்தாள்..
தீரனின் அத்தை இந்தரையும் மலரழகியையும் அழைத்து தீரன் மதியின் முதலிரவு அறையை அலங்காரம் செய்ய சொல்ல இருவரும் அதிர்ந்து போய் ஒரே சமயத்தில் கோரசாக “நாங்களா..?” என்று அலறிக் கொண்டு ஒருவரை ஒருவர் விழி விரித்து பார்த்துக் கொண்டார்கள்..
“அக்கா ரூமை டெக்கரேட் பண்ணனுமா? அதுவும் இவனோடயா? என்னாலல்லாம் முடியாது..”
பட்டென மலர் சொல்லிவிட அதைக் கேட்டவன் அவளை தீவிரமாய் முறைத்தபடி “ஓய்.. என்ன கொழுப்பா? உனக்கு பண்ண இஷ்டம் இல்லனா இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டு போ.. அது என்ன? என்னோட பண்றதுக்கு அவ்வளவு யோசனை? அப்படி என்ன செஞ்சுட்டேன் நானு.. இல்ல அந்த ரூமை உன்கூட வந்து டெக்கரேட் பண்ணா அப்படி என்ன செஞ்சிடுவேன் உன்னை நான்..?”
அவன் புருவம் உயர்த்தி அவளை கேட்க அவளோ அவசரப்பட்டு ஏதும் உளறி விட்டோமோ என்று ஒரு நொடி யோசித்தவள் அடுத்த கணமே இயல்பான ஒரு கல்லூரி பெண்ணின் துடுக்குத்தனம் வெளிவர குரலை தழைத்து அவன் காது அருகில் குனிந்தவள்
“நான் சொன்னதுல என்ன தப்பு? நீ இப்பதான் காலேஜ் படிச்சிட்டு இருக்கே.. அதுவும் எங்க அக்கா மாதிரி உன்னை விட அவளோ வயசானவங்களை லவ் பண்றேன்னு சொல்லி பின்னாடி சுத்துனவன் தானே நீ? அது மட்டும் இல்ல.. அன்னைக்கு நான் ஒரு ஃப்ரெண்டோட பீச்சுக்கு வந்து இருந்தேன் இல்ல? அவ கூட சொல்லி இருக்கா.. உன்னை நிறைய பொண்ணுங்களோட பார்த்து இருக்கான்னு.. அதை எல்லாம் கேட்ட அப்புறமும் நான் எப்படி அதுவும் ஃபர்ஸ்ட் நைட் ரூமை உன்னோட சேர்ந்து டெகரேட் பண்ண முடியும்? அங்க என்கிட்ட ஏதாவது நீ தப்பா நடந்துகிட்டா நான் என்ன செய்யறது?”
“அடியேய் ஒழுக்க சிகாமணி.. அடக்கி வாசிடி.. எங்க அத்தைக்கு இங்க நடந்த ஒரு விஷயமும் தெரியாது.. அவங்க காதுல தப்பி தவறி ஏதாவது என்னை பத்தியோ அண்ணா பத்தியோ தப்பா ஒரு விஷயம் விழுந்துது பெரிய ப்ரளயமே வந்துரும்டி இந்த வீட்ல..”
பல்லை கடித்துக் கொண்டு அவள் கையைப் பிடித்து அழுத்தி சொன்னவன் அவனுடைய அத்தையின் குரலில் அவர் பக்கம் திரும்பினான்..
“என்ன பிள்ளைங்களா.. நான் இங்க அந்த ரூமை டெக்கரேட் பண்ண சொல்லி உங்க ரெண்டு பேரையும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. ரெண்டு பேரும் என்னவோ நான் ஏதோ மலையை திருப்புங்க.. வானத்தை வளைச்சு போடுங்கன்னு பெரிய வேலை சொன்ன மாதிரி நாங்களா பண்ணனும்னு கேக்குறீங்க? அந்த வேலை சொன்னாலும் இந்த இளவயசுல செய்ய தயாரா இருக்கணும் நீங்க.. ஹான்.. இந்த காலத்து புள்ளைங்க எங்க.. பார்க்க அழகா அலங்காரம் பண்ணிக்கிறீங்களே தவிர உள்ள ஒரு சத்தும் இல்ல? நம்ம தீரனை பாரு.. அவன் தான் நம்ம வீட்டு பிள்ளை.. அப்படியே உங்க தாத்தா மாதிரி கம்பீரமா கட்டுமஸ்தானமா சும்மா கிண்ணுனு இருக்கான் பாரு புள்ள.. நீயும் இருக்கியே..”
அவர் கூறியதை கேட்டு மலர் “ஏன் பாட்டி.. இந்தர்க்கு என்ன? நல்லா தானே இருக்கான்.. இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல பாருங்க.. மாமா மாதிரியே அவனும் நல்லா ஆயிடுவான்..” என்றாள்..
அவள் சொன்னதை கேட்டவன் பெருமையாய் காலரை தூக்க அவன் அருகே குனிந்து ரகசியமாய் “ரொம்ப சீன் போடாதடா.. உன்னோட லுக்ஸ் பத்தி மட்டும் தான் நான் சொன்னேன்.. அதுக்காக உன்னையே நீ அப்படியே மாமா மாதிரின்னு நினைச்சுக்காத.. உன்னால எல்லாம் குணத்துல மாமா கிட்ட கூட நெருங்க முடியாது.. மாமா எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூடு பாக்காத பக்கா ஜென்டில்மேன்.. ஆனா நீ..? ஹி..ஹி.. அதை வேற எதுக்கு நான் என் வாயால சொல்லிக்கிட்டு..”
எல்லா பல்லையும் காட்டி இளித்து அவனுக்கு அழகு காட்டியபடி அவள் சொல்ல “அடிப்பாவி கிராதகி.. உயரத்துல கொண்டு போய் நிக்க வெக்கற மாதிரி பெருமையா பேசிட்டு அடுத்த செகன்டே அங்கே இருந்து அதல பாதாளத்துல போடுட்டியேடி.. இதுக்கு நீ என்னை பத்தி பெருமையா பேசாமயே இருந்திருக்கலாம்” என்றான் அவன் சலிப்பான குரலில்..
“அப்பப்ப என்னவோ ரெண்டு பேரும் கிசுகிசுன்னு பேசிகிட்டு இருக்கீங்க.. என்ன இது..? இந்த காலத்து வயசு பிள்ளைகளே இப்படித்தான் இருக்கீங்க..”
இந்தர் இதற்கு மேல் அத்தையை பேச விட்டால் பூமி தாங்காது என்று எண்ணி “அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை.. அது எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற டேஸ்டா..? ரூம் டெக்கரேட் பண்றதுக்கு ஐடியா ஒத்து போகணும் இல்ல.? அதுக்கு தான் நான் சொல்றபடி தான் ரூமை டெக்கரேட் பண்ணனும்னு நான் சொல்லிட்டு இருந்தேன்.. அவ சொல்றபடி தான் டெகரேட் பண்ணனும்னு அவ சொல்லிட்டு இருந்தா.. அதான் பேசிகிட்டு இருந்தோம்.. வேற ஒன்னும் இல்ல.. நாங்களானு கேட்டது வேற யாராவது வெளியில் இருந்து ஆளுங்க வந்து பண்ணுவாங்கன்னு நினைச்சு தானீ கேட்டோம்..” ஏதேதோ சொல்லி சமாளித்தான் அவன்..
“இல்லப்பா.. அது தீரனை கேட்டப்போ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டான்.. ஆனாலும் புதுசா கல்யாணம் ஆனவங்களை அப்படி எந்த அலங்காரமும் இல்லாத ரூம்க்கு முதல் நாள் அனுப்ப முடியாது இல்ல..? அதான்.. நீங்கதான் வயசு பிள்ளைங்களா இருக்கீங்க.. நான் வயசானவ.. நான் என்ன செய்ய முடியும்..? சொல்லு.. அதான் உங்க ரெண்டு பேரையும் பண்ண சொன்னேன்..”
“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க அத்தை.. உங்களுக்கு என்ன..? நைட்டுக்குள்ள ரூம் டெக்கரேட் ஆகி இருக்கணும்.. அவ்வளவுதானே..? அந்த ரூமை அழகா டெக்கரேட் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு.. நீங்க இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க.. ரூம் சூப்பரா பக்காவா டெக்கரேட் ஆகியிருக்கும்..”
“அப்படின்னா சரிப்பா.. நான் முதல்ல அந்த பாண்டியும்.. அவன் சம்சாரம்.. அந்த பொண்ணு பேரு என்ன?”
“பவி அக்காவா..?”
“ஹான்.. பார்கவி.. அந்த பொண்ணையும் பண்ண சொல்லலாம்னு தான் நினைச்சேன்.. எனக்கு அவ்வளவு தூரம் அவங்களை எல்லாம் பழக்கம் இல்லை.. அது மட்டும் இல்லாம அந்த புள்ள வேற சாயந்தரம் ரொம்ப உடம்பு முடியாம இருந்துச்சு.. அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்க.. நீ நம்ம வீட்டு பிள்ளை.. அதான் உன் கிட்ட சுலபமா கேட்டுட்டேன்.. உங்களால ஒன்னா செய்ய முடியலன்னா யாராவது ஒருத்தராவது ரூமை அலங்காரம் பண்ணிடுங்க.. மறந்துடாதீங்க.. அந்த ரூமுக்கு வேண்டிய பூவெல்லாம் இனிமேதான் கடையிலிருந்து வாங்கிட்டு வரணும்.. நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வந்து பண்ணிருவீங்களா?”
அத்தை கேட்க யோசனையுடனேயே நாலா பக்கமும் தலையை ஆட்டினான் இந்தர்..
அத்தை அங்கிருந்து நகர்ந்த பிறகு அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மலர் அழகியை பார்த்தவன் “என்ன முறைக்கிற? இப்ப என்ன.. என்னோட கடைக்கு வரியா..? இல்ல நானே போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டான்..
“உன்னை நம்பி தனியா அனுப்புறதுககு யோசனையா தான் இருக்கு.. எங்க அக்கா தன்னோட வாழ்க்கையை தொடங்க போற ரூம்.. அது நல்லபடியா அழகா டெகரேட் ஆகி இருக்கணும்.. நீ ஏதாவது சொதப்பி வச்சிட்டனா..? எனக்கு என்னவோ உன் டேஸ்ட் அவ்வளவு நல்லா இருக்கும்னு தோணல.. இரு.. நானும் வரேன்..” என்றவள்
உள்ளே சென்று வேறு இயல்பான உடையை மாற்றிக்கொண்டு வர புடவையில் அவ்வளவு நேரம் சிலை போல வலம் வந்தவள் திடீரென ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட் போனி டெய்ல் என ஐந்தே நிமிடங்களில் உரு மாறி வரவும் அவளைக் கண்டு அரண்டு போனான் அவன்..
“என்னடி..? உள்ள அப்படியே குடும்ப குத்து விளக்கு மாதிரி போன..? வெளியே வரும் போது ஏதோ ரிவால்வர் ரீட்டா மாதிரி வர..? எப்படி டி இது..?”
அவன் ஆச்சரியமாய் புருவம் உயர்த்தி கேட்க “ப்ச்.. அதெல்லாம் அப்படித்தான்.. ஹலோ.. நானும் காலேஜ் தான் படிக்கிறேன்.. நாங்க எல்லாம் ஒரு நாளைக்கு 10 காஸ்ட்யூம் கூட சேஞ்ச் பண்ணுவோம்.. அதுக்கு ஏத்த மாதிரி ஹேர் ஸ்டைல் ஜுவல்லரி எல்லாமே பக்காவா இருக்கும்.. என்னை என்ன நெனச்ச நீ? இப்படி நீ ஆன்னு பாக்கறதுல இருந்தே தெரியுது உன்னோட டேஸ்ட் எவ்வளவு கேவலமா இருக்கும்னு..” அவள் அலட்சியமாய் முகத்தை திருப்பி உதட்டை சுழித்து சொல்ல அவனுக்கோ அவள் பேச்சில் கோபம் மூண்டது..
அவள் பேசியதற்கு பதில் அடி கொடுக்கும் விதமாக “அது சரி.. அப்படியே உங்க அக்காக்கு நேர்மாறா இருப்ப போல.. அண்ணியை பார்க்கும்போதெல்லாம் அவங்க எப்படி டிரஸ் பண்ணி இருந்தாலும் கை எடுத்து கும்பிடணும் போல தான் தோணும்.. அவங்க மேல பார்த்த ஒரே நிமிஷத்துல மதிப்பும் மரியாதையும் வரும்.. நான் அப்படி அவங்க கிட்ட நடந்துக்க காரணம் கூட அவங்க பாக்க எங்க அம்மா மாதிரியே இருந்தாங்க.. அதனாலதான்.. எங்க அம்மா மாதிரி எனக்கு ஒரு லைஃப் பார்ட்னர் கிடைக்கணும்னு நினைச்சேன்.. மே பி அது தான் என்னை அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அடம் பிடிக்க வச்சது.. எங்க அம்மா இருந்த இடத்துல அவங்களுக்கு பதிலா என் கூடயே அண்ணி இருக்கணும்னு நினைச்சேன்.. அதை எப்படி பண்றதுன்னு தெரியாம தான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அது நடக்கும்னு நான் அவங்ககிட்ட அப்படி நடந்துகிட்டேன்.. ஆனா இப்ப அவங்க அண்ணியா எனக்கு வந்தது எனக்கு சந்தோஷம் தான்.. எப்படியோ எங்க அம்மா மாதிரியே ஒருத்தங்க என் வீட்ல என்னை பார்த்துக்க வந்துட்டாங்க.. அது போதும் எனக்கு..”
அவன் சொல்லிவிட்டு நிறுத்த அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு தன் அக்காளை நினைத்து பெருமையாக இருந்தாலும் தன்னை பற்றி அவன் ஏதோ கிண்டலாய் பேசுவது போல் தோன்ற இடுப்பில் கைவைத்து “எங்க அக்காவை பாத்தா அப்படியே கையெடுத்து கும்பிடணும் போல இருக்குன்னா எங்களை பார்த்தா எப்படி இருக்குது..?”
அவள் கேட்ட அடுத்த நொடி யோசிக்காமல் “ம்ம்.. கண்ணடிச்சு என் கேர்ள் ஃப்ரெண்டா வரியானு கேக்கணும் போல இருக்குது..” அவன் பட்டென சொல்லிவிட அவள் முறைக்கவும் தான் தான் என்ன சொல்லி விட்டோம் என எண்ணி பார்த்து நாக்கை கடித்துக் கொண்டான் அவன்..
“இருக்கும் இருக்கும்.. என் ஃப்ரெண்டு உமா கரெக்டா தான் சொன்னா.. கொஞ்சம் கொஞ்சமா உன்னை பத்தி அவ சொன்னது கரெக்ட் தான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டே இருக்கே நீ..”
“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே அதை நம்பி இப்படி ரியாக்ட் பண்றே.. உன்னை எல்லாம் பார்த்து கேர்ள் ஃப்ரெண்டுன்னு சொல்லி எவனாவது வான்டடா ஒரு புதைகுழில சிக்கிக்குவானா? அது தனக்கு தானே சூனியம் வெச்சுக்கறது மாதிரி.. உன்னை மாதிரி அராத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைக்கிறது தான் எப்பவுமே நல்லது.. எங்கேயாவது ஒரு பொண்ணா அடக்கமா இருக்கியா? எப்ப பாரு எகிறி எகிறி பேசிகிட்டு ஏதாவது ஏடாகூடமா செஞ்சுகிட்டு சரியான கிறுக்கி டி நீ..'”
“ஓ நாங்க அராத்தா? கிறுக்கியா? இருடா.. இனிமே இந்த அராத்தை அடிக்கடி பார்க்க வேண்டி இருக்கும் இல்ல..? நெஜமாவே ஒரு கிறுக்கி என்னெல்லாம் பண்ணுவான்னு உனக்கு லைவ் டெமோ காட்டுறேன்.. வாடா வா.. இப்ப முதல்ல போய் பூ வாங்கிட்டு வரலாம்..”
இருவரும் கிளம்பி முதல் இரவு அறைக்கு அலங்காரம் செய்ய பூ வாங்க சென்றார்கள்.. அந்த பூக்கடைக்காரர் ஒரு நிலையில் அழுது புலம்பிய படி தலையை பிடித்து கொண்டு தளர்ந்து அமர்ந்து விட்டார் அவர்கள் இருவரும் செய்த அக்கப்போரில்..
இந்தர்: உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்..
மலர்: என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்..
இந்தர்: ஹே பேய்கள் என்ற புரளியை
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்
நீ தானே என்றிருக்கேன்..
மலர்: தங்க பாப்பா நானு
தகர டப்பா பையன் நீயு
தங்க பஷ்பம் நானு
துரு பிடித்த கம்பி நீயு
இந்தர்: உன் வீட்டு கண்ணாடி
ரொம்ப பாவமடி
மலர் : போடா
இந்தர்: வாய் விட்டு கதருதடி
பாதரசம் பின்னாடி
மலர்: என் பின்னால் அலையிறியே
நீ என்ன மானம் கெட்டவனா
இந்தர்: என் உயிரை எடுக்குறியே
நீ என்ன வெட்கம் கெட்டவளா
மலர்: தினம் திங்கிற சோத்துலதான்
நீ உப்பே போடலையா
இந்தர்: ஹே அதிகம் பேசாதே
உன் மண்டைய பொளந்திடுவேன்
இந்தர்: ஐயோ இறைவன் எதிரில் தோன்றி
என்னிடம் வரம் கேட்டாலே
இந்த ராட்சஷி இல்லா உலகில்
ரகசிய இடம் கேட்பேனே
மலர் : அந்த இடம் கோவிந்தா தான்..
தொடரும்..