லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 26
“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க..?” கேட்டுக்கொண்டே வந்தாள் மதி..
“அக்கா.. பாரு அக்கா இவனை.. அப்பாவும் நானும் கீழே இருக்கிற இந்த ரூம்ல படுத்துக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா கீழ ஒரு பெட்ரூம் தான் இருக்கு… தீரா மாமாவோட அத்தையும் இருக்காங்கல்ல..? அவங்கள இந்தர் ரூம் மாடியில இருக்குல்ல? அஙக கூட்டிட்டு போய் அவனோட ரூம்ல இன்னைக்கு ஒரு நாள் அவங்க படுத்துக்கட்டும்னு சொன்னா என் ரூம்ல யாருக்கும் இடம் கொடுக்க முடியாதுன்னு அடம் பிடிக்கிறான் கா..”
“திடீர்னு அவன் ரூமுக்குள்ள இன்னொருத்தர் வந்து படுக்கிறதுன்னா அவனுக்கும் கஷ்டமா தானடா இருக்கும்? மலர்.. நான் சொல்றதை கேளு.. இந்த ரூம்ல நீயும் அவங்க அத்தையும் படுத்துக்கோங்க.. இன்னிக்கு ஒரு நாள் அப்பா ஹால்ல சோஃபால படுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கட்டும்..”
அதற்கு மேல் சண்டை வேண்டாம் என்றெண்ணி அவள் அதை தீர்வாய் சொல்லிவிட அதே நேரம் இந்தர் நிமிர்ந்து பார்க்க மாடியில் அவர்கள் அறை வாசலில் தீரன் நின்று கொண்டு இந்தரை தான் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..
தன் குடும்பத்தினரால் இந்தருக்கு எந்த ஒரு தொந்தரவும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவள் சொல்ல அடுத்த நொடியே இந்தர் “இல்ல அண்ணி.. நானே சோஃபால படுத்துக்கிறேன்.. அத்தை என் ரூம்ல படுக்கட்டும்.. நீங்க அங்கிளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..”
இப்படி சொல்லிவிட்டு அவன் மறுபடியும் மேல் நோக்கி தன் அண்ணனை பார்க்க அவன் பார்வை சென்ற திசையை கவனித்த மதி தானும் நிமிர்ந்து பார்த்தாள்..
அங்கு தீரனை கண்டதும் “இவர் எழுந்து வந்துட்டாரா? சத்தம் போடாம தானே கதவை திறந்தேன்?” என்று எண்ணியவள் “சரி.. நீ இன்னைக்கு படுத்துக்கோ.. நாளைக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கலாம்..”
மலர் அழகியிடம் “மலர்..” என்று அவள் அழைக்க மலரழகியின் முகம் அந்த அழைப்பில் வாடித்தான் போனது..
தன்னை அழகி என்று மட்டுமே அழைத்து கொண்டிருந்த தன் சகோதரி தீரன் விஷயம் தெரிந்த அன்றிலிருந்து இப்படி அழைப்பதும் அதற்கு அவள் கூறிய காரணமும் இப்போது மலரழகியின் மனத்தில் தோன்றி அது ஆழமாய் அவளுக்குள் தீராத காயத்தை ஏற்படுத்தியது..
மறுபடியும் தன் அக்காளை பழையபடி தன்னை அழகி என்று அழைக்க வைக்க வேண்டும் என மனதிற்குள் கங்கணம் கட்டி கொண்டாள் அவள்.. அவளின் முகமாற்றத்தை கவனித்த மதி “என்ன மலர்.. என்ன அப்படி ஒரு தீவிரமான யோசனை உனக்கு?” அவளை கூர்ந்து பார்த்தபடி விசாரித்தாள்..
“ஒன்னும் இல்லக்கா..” என்று சொல்லி அமைதியாக அவள் தலை குனிந்து நின்றிட சிறு வயதில் இருந்து அவளுக்கு தாயாய் இருந்து வளர்த்தவளுக்கு அவள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை..
“உன்னை அழகின்னு கூப்பிடாம மலர்ன்னு கூப்பிடுறது எனக்கு ஒன்னும் சந்தோஷமா இல்ல மலர்.. ஆனா நீ செஞ்ச தப்பு என் வளர்ப்பை என்னை சந்தேகப்பட வெச்சுடுச்சு.. மறுபடியும் என் வளர்ப்பு தப்பா போகலைன்னு எனக்கு நம்பிக்கை வர்ற வரைக்கும் உன்னை அப்படி கூப்பிடனும்னு எனக்கு தோணாது.. அந்த நம்பிக்கையை வர வைக்க வேண்டியது இப்ப உன் கைல தான் இருக்கு..”
மதி உறுதியான குரலில் சொல்லிவிட மலருக்கு தன் அன்பு சகோதரி தன் மீது கோபம் இருந்தாலும் தன்னை நிரூபிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறாள் என்பது மகிழ்ச்சியையே தந்தது..
இவர்களின் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்த இந்தருக்கும் உள்ளுக்குள் வேதனை அவன் நெஞ்சை அறுக்க ஆரம்பித்தது.. தானும் தன் அண்ணனுக்கு இதே போன்ற ஒரு துயரை தானே பரிசளித்திருக்கிறோம்.. என்ற எண்ணம் நடு மண்டையில் அவனை ஓங்கி அடித்தது போன்ற வலியை அவனுக்கு கொடுத்தது..
கீழிருந்து தன் அண்ணனை மேல் நோக்கி பார்த்தவன் அப்படியே அந்தப் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டான்..
மலரழகி தனக்கு தன் உடன்பிறந்தவள் கொடுத்த அந்த சிறு நம்பிக்கைக்கு பதிலாக “நிச்சயமா கூடிய சீக்கிரம் உன்னை அழகின்னு கூப்பிட வெப்பேன்கா..” என்று உறுதியான குரலில் கூறவும் அவள் தோளில் தட்டி “ம்ம்ம்.. நானும் நம்பறேன் டி.. நீ என்னை அப்படி கூப்பிட வெப்பன்னு.. சரி.. இப்ப நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும்… என்னோட டிரஸ் எல்லாம் இருந்த பேக்கை நீதானே எடுத்துட்டு வந்த?”
அவள் கேட்டு முடிக்கும் முன் “என்ன கா என்கிட்ட வந்து கேட்டுகிட்டு இருக்க? அதை அப்பவே மாமா என்கிட்ட இருந்து வாங்கிட்டு போய் அவர் ரூம்ல வச்சுக்கிட்டாரேக்கா..”
அவள் சொன்னதை கேட்டு அப்படியே திரும்பி தீரனை பார்த்தவளிடம் “நான் சாயங்காலமே உங்க..” என்றவன் சுற்றி நின்றவர்களை பார்த்தவுடன் தன் தவறை உணர்ந்து தொண்டையை செறுமி கண்ணை மூடி திறந்து “உன் பேக்கை எடுத்துட்டு வந்து இங்க என் ரூம்ல இருக்கற வார்ட் ரோப்ல உன்னோட டிரஸ் எல்லாம் வச்சிருக்கேன் மதி… சரி நீ வா.. இந்தர் சோஃபால படுத்துக்குவான்..”என்றவன் இந்தரை பார்த்து “என்னடா.. நீ படுத்துகிறியா? இல்லை அத்தையை மதியோட என் ரூம்ல படுக்க சொல்லிட்டு நான் வந்து படுக்கவா சோஃபால..?”
தீரன் கேட்ட கேள்வியில் இந்தர் பதறி போய் “ஐயோ அண்ணா.. நீங்க எதுக்கு அண்ணா.. அதுவும் இன்னைக்கு..? தெரியாம முதல்ல சண்டை போட்டுட்டேன்.. சாரி.. இனிமே சண்டை போட மாட்டேன்.. இவங்க எல்லாம் இங்க இருக்கற வரைக்கும் நான் சோஃபாலயே படுத்துக்கறேன்..” சடாரென பக்கத்திலிருந்த மெத்திருக்கையில் எதிர்பக்கமாய் திரும்பி கவிழ்ந்து படுத்து கொண்டான் இந்தர்..
மதிக்கோ அவன் செய்ததைப் பார்த்து சிரிப்பு வர உதட்டுக்குள் அதை அடக்கி கொண்டவள் திரும்பி மலர் அழகியை பார்த்து முறைக்க “நான் அப்பவே ரூம்க்கு போய் படுத்துட்டேன்கா.. குட் நைட்..” என்று அவசரமாய் சொல்லியபடி தன் அறைக்குள் ஓடி சென்றுவிட்டாள்..
இப்போது தீரன் மேலிருந்து வாய் விட்டே சிரித்தான் பெரிதாக.. அவனின் சிரிப்பொலி கேட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்த மதியழகி அவனுடைய சிரித்த முகத்தின் அழகில் ஒரு நொடி மெய் மறந்து தான் போனாள்..
கண்ணகற்றாமல் அவனையே அவள் ஆழ்ந்து பார்த்திருக்க ஒரு நொடி அவளின் அந்த அகலாத ஆழ்ந்த பார்வையில் ஆடவன் அவனும் அழகாய் வெட்கம் பூக்க வேறு பக்கம் தலையை திருப்பி புன்னகைத்துக் கொண்டான்..
அவளோ அவனின் அழகான வெட்கத்தையும் ரசித்தவள் புன்னகைத்த படி தன் விழியை தாழ்த்திக் கொள்ள அதன் பிறகுதான் தான் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்பது பற்றியே யோசித்தாள்..
“ஐயையோ.. நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்..? இப்படி கண்ணு கொட்டாம பார்த்து வெச்சிருக்கேன் அவரை.. அவரு என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாரு.. சே.. மதி.. வர வர உனக்கு விவஸ்தையே இல்லாம போயிட்டு இருக்கு..” என்று தன்னை தானே கடிந்துக் கொண்டவள் வேக வேகமாய் மாடிப்படி ஏறி தீரனின் அறை வாசலுக்கு சென்றாள்..
அங்கு நின்றவன் அறையின் வாயிலை கையால் காண்பித்து அவளை உள்ளே போகுமாறு ஜாடை செய்ய அவளும் மெல்ல அறையினுள் நுழைந்தாள்..
“சாரி மதி..” அறைக்குள் வந்தவுடன் சொன்னவனை கேள்வியாக பார்த்தாள் மதி..
“எதுக்கு தீரா?”
“இல்ல.. உங்க டிரஸ் எல்லாம் நான் எடுத்துட்டு வந்தது உங்களுக்கு ஒரு வேளை பிடிக்கலையோ என்னவோ? ஆனா மத்தவங்க நமக்குள்ள ஒரு நல்ல பான்டிங் இருக்குன்னு நினைக்கணும்ங்கறதுக்காக தான் அப்படி பண்ணேன்.. தப்பா நினைச்சுக்காதீங்க மதி..”
அவன் சொன்னதைக் கேட்டவள் “ஐயோ.. இல்ல.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க செஞ்சது கரெக்ட் தான்.. நான் ஒன்னும் தப்பா நினைக்கல.. நீங்க நிம்மதியா படுத்து தூங்குங்க.. அப்புறம் இன்னொரு விஷயம்.. மறுபடியும் நான் சொல்றேன்.. என்னை நீங்க வாங்க போங்கன்னு மரியாதை குடுத்து கூப்பிடாதீங்க.. நீ வா போனே சொல்லுங்க.. ஏன்னா இங்க ரூமுக்குள்ள நீங்க அப்படி கூப்பிடுறதுனால தான் வெளியில போனாலும் உங்களுக்கு அப்படியே பேச தோணுது.. நான் உங்களை விட வயசுல சின்னவ தான்.. நீங்க என்னை ஒருமையில கூப்பிட்டா தப்பு கிடையாது..”
“ஓகே மதி.. நீங்க.. சாரி.. நீ சொல்ற படியே கூப்பிடுறேன்..”
அவன் அப்படி சொன்னதும் அழகாய் புன்னகைத்து அவன் அறையில் இருந்த அலமாரியை திறந்து அதனுள் தன் உடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து விழிகளை விரித்தாள் அவள்.. ஆடைகளை நேர்த்தியாக மடிப்பு கலையாமல் அழகாய் அடுக்கி வைத்திருந்தான் அவன்..
தன்னாடைகளை அவன் கைகளால் தொட்டெடுத்து அந்த அலமாரியில் அடுக்கி இருக்கிறான் என்ற நினைவே அவளுக்குள் ஒரு சொல்லில் அடங்காத சிலிர்ப்பான உணர்வையும் நாணத்தையும் ஒருங்கே உண்டாக்கியது..
தான் மாற்ற வேண்டிய உடைகளை கையில் எடுத்துக் கொண்டவள் அந்த அழகான நினைவுகளோடு வெட்கப்பட்டுக் கொண்டே அலமாரியின் கதவை மூட தன் படுக்கைக்கு மிக அருகில் அவள் நின்று கொண்டிருக்க அவள் நகர்வதற்காக காத்திருந்த தீரன் அவள் முகத்தில் தோன்றி கொண்டிருந்த அழகான உணர்வு மாறுதல்களை ரசித்துக்கொண்டு அவளையே உருத்து பார்த்தபடி நின்று இருந்தான்..
அதைப் பார்த்தவள் ஒரு நொடி ஒரு இனிமையான பதட்டத்தின் உச்சிக்கே போயிருந்தாள்..
தன் பதட்டத்தை மறைக்க அவசர அவசரமாய் தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் மதி..
அவளின் அழகான பதட்டத்தை கண்டவனுக்கோ உள்ளுக்குள் ஏதேதோ தோன்ற தன் கேசத்தை வேகமாய் முன்னிருந்து பின் பக்கமாய் கோதி கொண்டு “அய்யோ தீரா.. நீ இன்னிக்கு தூங்குன மாதிரி தான்டா..” என்று சொல்லிக் கொண்டே தரையில் தான் விரித்திருந்த படுக்கையில் விட்டத்தை பார்த்தபடி படுத்தவன் இதழில் அவ்வப்போது ஒரு மென் சிரிப்பு வந்து வந்து போனது..
மதிக்கும் இதே நிலைதான்.. உடை மாற்றி வந்து கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் கண்ணை எட்டவே இல்லை..
எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் இருவரும் உறங்கி இருக்க எப்போதும் போல காலை 4 மணிக்கு எல்லாம் மதிக்கு விழிப்பு தட்டியது..
கண் விழித்தவள் எழுந்து தீரன் படுத்திருந்த இடத்தை பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. அவனைப் பார்த்து புன்னகைத்தவள் தன் போர்வையை மடித்து தலையணை படுக்கையை சீர் செய்தாள்.. குளியல் அறைக்குச் தன் உடைகளை எடுத்துக் கொண்டு செல்ல எண்ணியவளுக்கு அது அலமாரியில் இருக்கிறது என்ற நினைவு வர அப்போதுதான் அந்த அலமாரியின் பக்கத்தில் தீரன் படுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து உடை எடுக்கப் போனால் அவனை எழுப்ப வேண்டி இருக்குமே என்று குளியலறை சென்று தன் காலை கடன்களை மட்டும் முடித்துவிட்டு வெளியே வந்தவள் அப்படியே கட்டிலில் அமர்ந்து அவன் எழுவதற்காக காத்திருந்தாள்..
🎵🎶🎼யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில்
என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை
இல்லை
ஊமை ஆகின்றதோ
மனம் மனம்
எங்கிலும் ஏதோ
கனம் கனம்
ஆனதே
தினம் தினம்
ஞாபகம் வந்து
ரணம் ரணம்
தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமோ இனி
சேர்வோமா..
மிக மிகக் கூர்மையாய்
என்னை
ரசித்தது உன்
கண்கள்தான்
மிருதுவாய் பேசியே
என்னுள்
வசித்தது உன்
வாா்த்தை தான்
கண்களைக் காணவே
இமைகளே மறுப்பதா ..
வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா
நானும்
வெறும் கானலா..🎵🎶🎼
தொடரும்