லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 28

5
(4)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 28

தீரன் சொன்ன வார்த்தைகள் மதிக்குள் ஒரு அழகான இன்ப அதிர்வை ஏற்படுத்தியிருந்தது..

அவன் பாராட்டியதற்கு பதிலாய் “நம்ம மேல அக்கறை காட்டறவங்க கூடவே இருந்து நம்மள பாத்துக்கிட்டா நம்ம செய்ற வேலை எல்லாம் நிதானமா டென்ஷன் இல்லாம அழகா தான் செய்வோம் நான் இப்போ கோலம் போட்ட மாதிரி..”

இப்போது இன்ப அதிர்வுகள் தீரனின் மனதில்.. நாணமா.. நேசமா.. மகிழ்ச்சியா எது என்று பிரித்துக் கூற முடியாத படிக்கு அவள் முகத்தில் ஒரு அழகான மலர்ச்சியான பாவனை குடியேறி ஒளிர வைத்திருக்க அதை பார்த்து ரசித்து இருந்தவன் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்திலேயே ஆழ்ந்து நிலைத்திருக்க அந்தப் பார்வை பார்த்த விழிகளின் ஊடுருவலை ஒரு சில கணங்களுக்கு மேல் தாங்க முடியாதவள் தலையை குனிந்த படி “போய் சமைச்சிட்டு கிளம்பனும்.. வாங்க.. உள்ள போலாம்..” என்று சொல்லிவிட்டு காலியான வாளியை தூக்கிக்கொண்டு வேகமாக உள்ளே நடந்தாள்..

தீரனோ வேறு எந்த நினைவும் இல்லாமல் அவள் பின்னாலேயே காந்தத்தால் இழுபட்ட இரும்பு போல் அவளை தொடர்ந்து சென்றான்.. சமையல் அறைக்குச் சென்று அவள் சமையல் வேலையில் இறங்கி இருக்க அவள் வேலை செய்யும் அழகையும் நேர்த்தியையும் கண்டு வியந்த படி கண்கொட்டாமல் அவளையே பார்த்திருந்தான் தீரன்..

“ஆமா.. மஞ்ச பொடி.. மிளகா தூள்.. இதெல்லாம் எங்க இருக்கு?” அவள் கேட்கும் போது தான் மதி என்னும் காந்தத்தின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளிவந்தான் தீரன்..

“ஹ..ஹான்.. மஞ்ச பொடியா? இதோ இங்க இருக்கு..” என்று அவள் ஒவ்வொன்றாக கேட்க அவனும் அவள் கேட்டதை எல்லாம் அவளுக்கு எடுத்துக் கொடுத்தான்..

“ஏதாவது காய் அரிஞ்சு கொடுக்கணும்னா சொல்லு மதி.. நான் அரிஞ்சு கொடுக்கிறேன்..”

அவன் சொன்னதும் அன்று அவள் என்னென்ன சமைக்க போகிறாள் என்று சொன்னவள்.. அதற்கு வேண்டிய காய்களை அவனை அரிந்து தர சொல்ல அவனும் அந்த வேலையில் இறங்கினான்..

அவன் மெல்ல காய்கறிகளை அரிய தொடங்க அவளும் சமையல் வேலையில் தீவிரமாக இறங்கினாள்.. சற்று நேரத்தில் அவன் புறம் வந்தவள் அவன் அழகழகாய் பொடி பொடியாய் ஒரே வடிவத்தில் காய்கறிகளை நறுக்கி இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனாள்..

“அட.. எவ்ளோ அழகா நறுக்கி இருக்கீங்க? ஒரே சீரா சின்ன சின்னதா ஒரே ஷேப்ல நறுக்கி இருக்கீங்க..!! எனக்கெல்லாம் காலையில அவசர சமையல்ல ஏறக்குறைய ஒரே அளவா இருக்கிற மாதிரி நறுக்கறதே பெரிய சேலஞ்சா இருக்கும்.. நீங்க எப்படி வேகமாவும் நறுக்கறீங்க  அதே சமயம் இவ்வளவு சீராவும் நறுக்கறீங்க..!!”

அவள் ஆச்சரியமாக கேட்க “அது அப்படித்தான்.. நேரம் இருக்கும் போது  அப்பல்லாம் எங்க அம்மா சமைக்கும்போது காய் நறுக்கி கொடுத்து உதவி செய்வேன்.. இந்த காய்கறி அரிய ஆரம்பிச்சப்பவே பார்த்து பார்த்து ஒரே அளவா இருக்கிற மாதிரி நறுக்குவேன்.. அம்மாவும் இப்படித்தான் ஆச்சரியப்பட்டு போவாங்க அப்பலாம்.. அப்புறம் நாளாக நாளாக அதையே கொஞ்சம் வேகமாவும் செய்ய பழகிட்டேன்.. இப்போ சனி ஞாயிறுன்னா தம்பிக்கும் எனக்கும என்னோட நளபாகம் தான்.. அதனால இப்போ இது நல்லாவே பழகிருச்சு..”

“ஹ்ம்ம்.. எங்க வீட்ல சமைக்கும் போது எனக்கு இந்த காய்கறி அரியற வேலை தான் பெரிய வேலை.. இதை முடிச்சுட்டா பாதி சமையல் வேலை முடிஞ்ச மாதிரி ஒரு நிம்மதி கிடைக்கும்.. இங்க நீங்க பண்ணி குடுக்கறதுனால பாருங்க எப்பவும் சமையல் முடிக்க ஒரு ஒரு மணி நேரம் ஆகும் இன்னிக்கு அரை மணி நேரத்திலேயே அல்மோஸ்ட் சமையல் முடிஞ்சு போச்சு..”

சந்தோஷமாய் சொல்லிவிட்டு மறுபடியும் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை கிளறி விட செல்ல அவளையே பார்த்துக் கொண்டே கையில் இருந்த வெண்டைக்காயை அரிய அந்த கத்தி அவன் விரலில் பாய்ந்தது.. அவன் தான் இதை விட ஆழமான காயங்களை படப்பிடிப்பு தளத்தில் தன் சிறந்த வேலைக்கு கிடைத்த பதக்கங்களாக பெற்றிருக்கிறானே..

அதனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெட்டு பட்ட விரலை ஒதுக்கியபடி சிரமப்பட்டு மீதம் இருந்த கொஞ்சம் வெண்டைக்காய்களை நறுக்க முயன்றான்.. ஆனால் எவ்வளவு லாவகமாக நறுக்கியும் அவன் கையில் இருந்து சிந்திய ரத்தம் அந்த காய்கறியில் பட்டுவிட அந்த காய்கறியை ஒதுக்கி வைத்துவிட்டு அதற்கு மேல் எப்படி மீதமிருந்த நான்கைந்து வெண்டைக்காய்களை வெட்டுவது என்று தெரியாமல் விழித்தான்..

ரத்தக்கரை படிந்த அந்த வெண்டைக்காய் துண்டுகளை காய்கறி வெட்டிய கழிவுகளோடு எடுத்து குப்பை பையில் போட்டவன்.. தன் கையை மறைத்து வைத்த படி மதியிடம் “மதி.. இது போதுமா பாரு..” என்று கேட்க அங்கே மீதம் இருந்த நான்கு வெண்டைக்காய்களை பார்த்தவள் “இந்த நாலஞ்சு வெண்டைக்காயை மட்டும் எதுக்கு மீதம் வச்சிருக்கீங்க? அதையும் சேர்த்து கட் பண்ணிடுங்க.. சரியாதான் இருக்கும்..”

அவள் சொன்னதும் “சரி.. அரிஞ்சு கொடுக்கிறேன்..” என்று சொல்லியபடி அப்படியே அமர்ந்து இருந்தவனை பார்த்து “மத்த சமையல் எல்லாம் ஆயிடுச்சு.. இந்த வெண்டைக்காய்க்கு தான் வெயிட்டிங்.. நீங்க அரிஞ்சு கொடுத்தீங்கன்னா அதை அடுப்பில போட்டு வதக்கி எடுத்துருவேன்..”

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் தயங்கியபடியே “அது கையில கத்தி பட்டிடுச்சு.. அது ஒன்னும் ப்ராப்புலம் இல்ல.. ஆனா காய் எல்லாம் ரத்த கறை ஆவுது.. அதான்..” என்று சொல்லிய படி தான் மறைத்து வைத்த கையை வெளியே எடுக்க அதை பார்த்தவள் பதறி போனாள்..

“என்ன..? இவ்வளவு ஆழமா வெட்டி இருக்கு.. இப்படிதான் கவனம் இல்லாம வேலை செய்வீங்களா? கொஞ்சம் இருங்க..” என்றவள் வேகமாய் அலமாரியில் ஏதோ தேடினாள்..

“பரவால்ல மதி.. இதெல்லாம் ஒன்னும் பெரிய அடி இல்ல.. கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியா போயிடும்.. ரத்தம் கூட நின்னுடுச்சு பாரு..”

அவன் ரொம்பவும் அலட்சியமாய் சொல்ல “எங்க நின்னுச்சு.. வந்துகிட்டு தான் இருக்கு.. இருங்க வரேன்..” என்றவள் வேகமாக சென்று சக்கரை டப்பாவை எடுத்து அதிலிருந்து கொஞ்சம் சர்க்கரை எடுத்து தன் உள்ளங்கையில் வைத்து அவனுடைய வெட்டிய விரலை அந்த சக்கரையில் வைத்து அழுத்தினாள்..

“என்ன செய்ற மதி..?” அவன் கேட்க “இப்ப ரத்தம் நின்னுருக்கும் பாருங்க..” அவள் சொன்னது போலவே அவனுக்கு இரத்தம் வருவது நின்று இருந்தது..

“ம்ம்.. பரவாயில்லையே ஒரே செகண்ட்ல ரத்தத்தை நிறுத்திட்டே.. நான்லாம் இந்த மாதிரி அடி எல்லாம் பட்டா வேகமா கரடு முரடாக இருக்கிற செவத்துல கைய ஒரு நாலு தபா தேச்சிக்கினா அது அப்படியே நின்னுரும்..”

“ஐயோ.. எப்படி அதை இவ்வளவு கூலா சொல்றீங்க? எனக்கு நினைச்சு பார்க்கும்போதே வலிக்குது..” அவளின் பயந்த முக பாவனையை பார்த்து அவன் சிரிக்க “ஹ்ம்ம்.. என்னை பார்த்தா உங்களுக்கு காமெடியா இருக்கு இல்ல..? அது சரி.. நீங்க தான் ஸ்டன்ட் மாஸ்டர் ஆச்சே.. உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.. நான் எல்லாம் அடிதடி சினிமாவே பார்க்க மாட்டேன் பா.. எனக்கு வயலென்சே பிடிக்காது..”

“அது சரி.. ஸ்டண்ட் மாஸ்டரோட பொண்டாட்டிக்கு வயலன்ஸ் பிடிக்காதா? ம்ம்ம்ம்.. நம்ம வாழ்க்கை வித்தியாசமா தான் போயிட்டு இருக்கு..” மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான்..

மிச்சம் மீதி வெண்டைக்காயை அவளே நறுக்கி அடுப்பில் போட்டு வதக்கி எடுத்தாள்.. அதன் பிறகு அடுப்பில் அவள் பாலை வைக்க “அதான் நம்ம காபி குடிச்சாச்சே.. இந்தர் எழும்ப ரொம்ப நேரம் ஆகும்.. ஒரு வேளை இப்ப மலரும் உங்க அப்பாவும் எழுந்து வந்துருவாங்களா? அவங்களுக்காக காஃபிக்கு பால் வச்சிருக்கியா?”

அவன் கேட்டதும் “இல்ல.. பால் பாயசம் பண்ணலாமேன்னு..”

அவள் சொன்னதும் அவன் வியப்பில் விழி விரிக்க “இல்ல.. இந்த வீட்டுக்கு வந்து முதல் முதல்ல நான் சமைக்கிறேன்.. புது மருமக முதல் முதல்ல சமைக்கும் போது ஸ்வீட் பண்ணனும்னு சொல்வாங்க.. அதான்..”

அவனோ உள்ளுக்குள சந்தோஷ தாண்டவம் ஆடினான் அவள் வாயிலிருந்து அவள் அந்த வீட்டின் மருமகள் என்று சொன்னதைக் கேட்டு..

ஆனால் அந்த சந்தோஷம் இரண்டு நிமிடம் கூட நிலைக்கவில்லை..

அந்த சந்தோஷத்தை மொத்தமாக உடைத்து தள்ளுவது போல் “அது.. வீட்ல உங்க அத்தை இருக்காங்க.. அவங்க இதெல்லாம் எதிர்பாப்பாங்க இல்ல..? நமக்குள்ள இருக்கிற விஷயம் எல்லாம் அவங்களுக்கு தெரியாது இல்ல? அதான் நாமளே செஞ்சிடலாமேனு..” அவள் சொல்லி முடிக்கும்போது அவன் முகம் வாடிய மலராய் சுருங்கியதை அவளும் கவனித்தாள்..

சட்டென சுதாரித்தவன் “ம்ம்ம்ம்.. என்னோட லவ்வரா நடிக்கிறதுக்கு திணறின மதியா இது..? இப்ப இந்த வீட்டோட புது மருமகளா நடிப்பில பின்னி பெடல் எடுக்கிற..?”

அவன் அதை இயல்பாய் கேலி பேசுவது போல் சொல்லிவிட அவளுக்கு அவன் சொன்ன நடிப்பு என்ற வார்த்தை உள்ளுக்குள் ஒரு சிறு வலியை கொடுக்க அந்த வலியின் சாயல் கண்களில் தெரிவதை அவளால் அவனிடமிருந்து மறைக்க முடியவில்லை..

“ஆக்சுவலா நான் இதை அவங்களுக்காக மட்டும் செய்யல.. உங்களுக்கும் இந்தருக்கும் என் கையால முதல் முதல்ல சாப்பாடு செஞ்சு கொடுக்கிறேன்.. அதுக்காகவும் தான்..”

அவள் சட்டென உதடு சுழித்து கொஞ்சம் இறுக்கமான கோவமான முகத்தோடு சொல்லிவிட்டு அடுத்த நொடியே ஒரு வேளை தான் சொன்னதை தான் ரொம்பவும் அவர்களிடம் உரிமை எடுத்து கொள்வதாக அவன் தவறாக நினைத்துக் விடுவானோ என்று தோன்ற அவசரபட்டுவிட்டோமோ என்று தன் உள்ளங்கையை பிரித்து பார்த்தபடி அவள் தவிப்பாய் யோசித்து கொண்டிருக்க அவனோ அவள் அருகில் சென்று அவள் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தி பார்த்தவன் “தேங்க்ஸ் மதி..” என்றான் இதழில் ஒரு சிறு புன்னகையோடே..

அவளுக்கோ அவனுடைய அந்த நெருக்கமும் கண்களின் வழி அவள் இதயத்தை அதிரடியாய் தாக்கும் அவன் பார்வையும் சொல்லொணா உணர்வுகளை அவள் உடலுக்குள் மின்சாரமாய் பாய்ச்சிட அந்த உணர்வுகளின் தாக்குதலை தாங்க இயலாது அவனிடமிருந்து சற்றே விலகி நின்றாள் அவள்..

அவளின் விலகலில் அவள் நிலையை புரிந்து கொண்டவன் “சாரி மதி..” என்றுவிட்டு வெளியே வந்து வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு தன் செயலுக்காக தன்னையே திட்டிக்கொண்டான்..

“உனிக்கு இன்னாடா.. அவ்ளோ கன்ட்ரோலு இல்லாம பூட்ச்சி.. அந்த பொண்ணு இன்னா நெனைச்சுக்கினு இருக்கும் உன்னிய பத்தி?”

அவன் மனசாட்சி அவனை திட்டி தீர்க்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து போனான் அவன்..

இங்கே மதியோ அவன் கோவம் கொண்டுவிட்டானோ என்று எண்ணி தவித்து போயிருந்தாள்..  சிறு கலக்கத்துடனேயே பால் பாயசத்தை செய்ய துவங்கி இருந்தாள் அவள்..

🎵🎶🎼என் வீட்டு தோட்டத்தில் 

பூவெல்லாம் கேட்டுப்பார் 

என் வீட்டு ஜன்னல் கம்பி 

எல்லாமே கேட்டு பார் 

என் வீட்டு தென்னங்கீற்றை 

இப்போதே கேட்டு பார் 

என் நெஞ்சை சொல்லுமே 

 

வாய்பாட்டு பாடும் பெண்ணே

மெளனங்கள் கூடாது 

வாய் பூட்டு சட்டம் எல்லாம் 

பெண்ணுக்கு ஆகாது

 

வண்டெல்லாம் சத்தம் போட்டால்

பூஞ்சோலை தாங்காது

மொட்டுக்கள் சத்தம் போட்டால் 

வண்டுக்கே கேட்காது

 

ஆடிக்கு பின்னாலே

காவேரி தாங்காது

ஆளான பின்னாலே

அல்லி பூ மூடாது

ஆசை துடிக்கின்றது

 

சொல்லுக்கும் தெரியாமல்

சொல்லத்தான் வந்தேனே 

சொல்லுக்குள் அர்த்தம் போல

சொல்லாமல் நின்றேனே

 

சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் 

தூரங்கள் கிடையாது 

சொல்லாத காதல் எல்லாம்

சொர்க்கத்தில் சேராது🎵🎶🎼

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!