லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 29

5
(5)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 29

நெய்யில் வறுபட்ட முந்திரியுடன் சுண்ட காய்ச்சிய பாலும் சேர்ந்த வாசத்தில் அந்த வீடே மணமணக்க அந்த வீட்டில் உறங்கி கொண்டு இருந்த ஒவ்வொருவரையும் அந்த வாசம் கட்டி இழுத்தது.. எல்லோரும் எழுந்து பத்து நிமிடங்களுக்குள் காலை கடன்களை முடித்து வேகமாக குளித்துவிட்டு வந்திருந்தார்கள்..

ஒருவழியாக பால்பாயசத்தோடு சமையலை செய்து முடித்தாள் மதியழகி.. பால் பாயசத்தின் மணம் தீரனின் நாவின் சுவை மொட்டுக்களை தூண்டி விட உடனே அவள் பின்னால் சென்று நின்றவன் “மதி நான் கொஞ்சம் பால் பாயசத்தை டேஸ்ட் பண்ணலாமா?” என்று கேட்க “இதோ ஒரு நிமிஷம்..” என்றவள் ஒரு குவளையில் அந்த பால் பாயசத்தில் இருந்து கொஞ்சமாக ஊற்ற அவள் தனக்குத்தான் அதை தரப்போகிறார் என்று எண்ணி தீரன் கையை நீட்ட அவளும் அந்த குவளையை அவன் கையில் இருந்து எட்டி வைத்து ம்ம்.. இது உங்களுக்கு இல்ல வேற ஒருத்தருக்கு முதல்ல அவங்க குடிக்கட்டும் அதுக்கப்புறம் உங்களுக்கு கொடுக்கிறேன்.. எனவும் அவனுக்கோ ஏமாற்றமாய் போனது..

அவள் அதை எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியேற தீரனோ அவள் யாருக்கு அதை எடுத்துப் போகிறாள் என்று விளங்காமல் குழப்பத்தோடு அவள் பின்னாலேயே தொடர்ந்து சென்றான்..

மதி அந்த வீட்டின் பூஜை அறைக்கு அதை எடுத்து வந்து விளக்கேற்றி சுவாமி முன்னால் குவளையை வைத்துவிட்டு கண்ணை மூடி ஏதோ தீவிரமாய் வேண்டிக் கொண்டாள்..

அதைப் பார்த்தவனுக்கு அவளைப் போலவே எந்து இனிப்பு செய்தாலும் சாமிக்கு படைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த தன் அன்னையின் நினைவு வந்தது.. எவ்வளவு நாள் இந்தர் இனிப்பையும் பலகாரத்தையும் பார்த்து வாயூற கெஞ்சி கெஞ்சி தன் அன்னையிடம் உடனே தனக்கு அந்த பலகாரம் வேண்டும் என்று அடம்பிடிக்க சுவாமிக்கு படைத்துவிட்டு தான் அவனுக்கு தருவேன் என்று சொல்லி அவன் பொறுமையை சோதித்து இருக்கிறார் அவர்களுடைய தாய்..

இப்போது அந்த தாயின் உருவத்தை தன்னவளில் பார்த்தான் ஒரு நொடி..

அதே நேரம் அந்த சமையலின் வாசம் இந்தரை தவிர அந்த வீட்டில் இருந்த அனைவரையும் சுண்டி இழுக்க அத்தனை பேரும் எழுந்து குளித்து முடித்து சுவாமி அறைக்கு வந்திருந்தார்கள்..

மலர் தமிழ்வாணன் தீரனின் அத்தை தீரன் என எல்லோரும் மதியழகியோடு சாமியை கும்பிட அப்போது வரவேற்பு அறையில் தடார் என ஏதோ சத்தம் கேட்கவும் எல்லோரும் பூஜை அறையில் இருந்து ஓடி சென்று அங்கே பார்த்தார்கள்..

இந்தர் தான் படுத்திருந்த மெத்திருக்கையில் இருந்து அதற்கும் மேஜைக்கும் இடையில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்திருந்தான்..

தீரன் அவனை தூக்கி விடலாம் என்று குனிய அப்போது “ஏய் மலரு ஓடாதடி.. நில்லுடி.. எனக்கு வேணும்டி.. குடுடி.. மரியாதையா குடுடி..” என்று சத்தம் போட்டபடி கையை காற்றில் ஆட்டி ஆட்டி முன்னே எதையோ பிடிக்க நீட்டுவது போலும் காலை ஓடுவது போல் உதைத்து பாவனை செய்து கொண்டிருக்க அவன் செய்ததை பார்த்து அங்கிருந்த அத்தனை பேருமே திடுக்கிட்டு போனார்கள்..

மற்ற எல்லோரும் சேர்ந்து மலரை பார்க்க அவளோ தன் முகத்திலும் திகைப்பை சுமந்த படி “என்ன ஆச்சி இவனுக்கு..? தூக்கத்துல என் பேரை சொல்லி உளறிக்கிடடு இருக்கான்..” என்றவள் தன் தந்தையும் தன்னை முறைப்பதை பார்த்து சங்கடமாக நெளிந்தாள்..

“பைத்தியக்கார பையன் என்ன கனவு கண்ட தொலைச்சானோ தெரியல.. தூக்கத்தில ஏடாகூடமா ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கானே.. எழுப்பி கேட்டாங்கன்னா எக்கு தப்பா எதுவும் சொல்லாம இருக்கணும்.. இவங்க எல்லாரும் வேற  என்னை ஏதோ தப்பு செஞ்ச மாதிரியே குறுகுறுன்னு பாக்குறாங்களே..” இப்படி யோசித்தபடியே கீழே விழுந்து கிடந்த இந்தரை முறைத்துக் கொண்டிருந்தாள் மலர்.

தீரன் இந்தர் அருகில் உட்கார்ந்து அவன் தோளை உலுக்கி “ஏய்.. இந்தரு.. எழுந்திருடா.. என்னடா உளறிக்கினு இருக்கே.. எழுந்துருடா..” அவனை உலுக்கி உலுக்கி எழுப்ப சட்டென கண்ணை திறந்தவன் இன்னும் உறக்க கலக்கத்திலேயே இருக்க “அண்ணா.. அவளை கொடுக்க சொல்லுங்கண்ணா.. கொடுக்க சொல்லுங்க.. எல்லாத்தையும் அவளே தூக்கிட்டு ஓடுறா..”

அவன் மறுபடியும் அதே போலவே கத்த “டேய் இந்தரு முழச்சிக்கடா.. போதும்டா நீ கனவு கண்டது.. மானம் போவுது எனிக்கு..” மறுபடியும் அவன் கன்னத்தை தட்டி அவனை அவன் கனவுலகத்தில் இருந்து நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தான் தீரன்..

அப்போதுதான் தன்னை சுற்றி நின்றவர்களை பார்த்து தான் இவ்வளவு நேரம் கண்டது கனவு என்பதை உணர்ந்த இந்தர் தன் அண்ணனை பார்த்து பெரிதாக இளித்தபடி “சாரிண்ணா.. அது எங்கிருந்தோ பால் பாயாசம் வாசனை வந்துச்சா? அதை போய் குடிக்கலாம்னு போகும்போது இந்த மலரில்ல.. அப்படியே சட்டியோட பால் பாயசத்தை தூக்கிட்டு போயிட்டாண்ணா.. அதை முழுக்க அவ தான் குடிப்பாளாம்..  அதான் அவளை துரத்தி பிடிக்க ஓடுனேனா..?” என்றவனை தீரன் முறைக்க “பாயசத்தை வாங்க தான்ணா.. அதுவும் கனவுல.. அதான் கீழ விழுந்துட்டேன் போல..”

அவன் சொன்னதை கேட்டு அங்கிருந்த அத்தனை பேருமே பக் என சிரித்து விட்டார்கள்..

மலரோ “அடி பரங்கி மண்டையா.. உனக்கு கனவு காணறதுக்கு வேற ஆளே கிடைக்கலையா? நான் தான் கிடைச்சனா? என்னை பாத்தா ஒரு சட்டி பால் பாயஸத்தை அப்படியே ஒத்தையா குடிக்கிற மாதிரியா தெரியுது? கொன்னுருவேன்டா உன்னை..”

பொரிந்து தள்ளினாள் அவள் அவனிடம்..

அப்போது தமிழ்வாணன் “மலரு.. என்ன பேச்சு இது? வாயை அடக்கு..” என்று அவளை அடக்க தீரன் “மாமா அவளை எதுவும் திட்டாதீங்க மாமா.. இவ்வளவு நேரம் இந்தர் பேசினதை கேட்டு நம்ப எல்லாரும் மலரை தானே ஒரு மாதிரி பார்த்தோம்..”

அவன் சொன்னதைக் கேட்ட மலர் “அப்படி சொல்லுங்க மாமா.. ஒரு நிமிஷம் எல்லாரும் என்னை தப்பா நினைச்சுட்டாங்க இந்த கிராக்கு மண்டையனால..”

“ஏய் யாருடி கிராக்கு மண்டையன்.. நீதான்டி கிறுக்கச்சி..” என்று பொங்கி எழுந்தவனை மதி “இந்தர்.. விடு.. நீ முதல்ல போயி பல்லு தேச்சு குளிச்சிட்டு வா.. எல்லாரும் சாமி கும்பிட வந்திருக்கிறாங்க.. நீயும் வந்து சாமி கும்பிடு..”

“சாமி கும்பிடணுமா?” சோம்பலான பாவனையோடு இந்தர் கேட்க தீரன் “ரெண்டு வருஷமா அந்த பூஜை ரூம் பக்கமே திரும்பல.. பாவம் வேலை செய்ற சாந்தி அக்கா தான் அதை வந்து சுத்தப்படுத்தி தினமும் விளக்கேத்தி விட்டு போவாங்க.. இப்ப மதி சொன்னதும் உனக்கு பூஜை ரூமுக்கு வர்றதுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குதா? போடா.. போய் குளிச்சிட்டு வா.. மதி தான் சொல்றா இல்ல..?”

தீரன் கொஞ்சம் முறைப்பாய் சொல்ல அதை கேட்ட இந்தர் “சரிண்ணா.. அண்ணி சொன்னா செய்ய வேண்டியது தான்..” என்றதும் வேகமாக இரண்டு இரண்டு படிகளாக தாவி மாடியில் இருந்த தன் அறைக்கு சென்றான்..

இதற்காக காத்திருந்த நேரம் தீரனின் அத்தை.. “ம்ம்.. இந்த வீடு இது மாதிரி சமையல்.. பூஜை.. அப்படின்னு இருந்து கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகுது.. என்னைக்கு இவங்க அம்மா சரோஜா போய் சேர்ந்தாளோ அன்னையலருந்து இந்த வீடு கவனிப்பார் யாரும் இல்லாம ஏனோ தானோன்னு தான் நடக்குது..” என்று சலித்துக் கொண்டார்..

தீரனும் “அதான் இப்ப எல்லாம் நல்லா நடக்குது இல்ல அத்தை.. விடுங்க.. அதையே ஏன் சொல்லிக்கினு..” என்றான்..

“அதுவும் சரிதான்..” என்ற அத்தை சொல்லவும் இந்தர் தன் அறையிலிருந்து கீழ இறங்கி வரவும் சரியாக இருந்தது..

சுவாமி அறைக்கு எல்லோரையும் அழைத்து போய் தீபாராதனை காட்டி ஒவ்வொருவராக ஆரத்தி எடுத்துக்கொள்ளச் சொல்லி நீட்டினாள்..

தீரனிடம் தட்டை நீட்டும் போது அவனின் அத்தை “டேய் தீரா.. மருமக நெத்தியிலயும் மாங்கல்யத்திலும் அந்த குங்குமத்தை எடுத்து வை டா.. ” என்க அவனும் தன் மோதிர விரலையும் கட்டை விரலையும் கொண்டு குங்குமத்தை எடுத்து அவள் வகுட்டிலும் மாங்கல்யத்திலும் வைத்து விட்டான்.. அந்த அழகான கணங்களுக்குள்  இருவர் கண்களும் ஒரு நொடி நேச உணர்வோடு கலந்து மீண்டன..

அடுத்ததாய் மலரிடம் வந்தவள் திருநீரையும் குங்குமத்தையும் அவள் நெற்றியில் இட்டுவிட்டு அது கண்களில் விழாமல் இருக்க அவள் புருவத்திற்கு நேராய் தன் கையை வைத்து ஊதி விட்டாள்..

இந்தரிடம் வரும் பொழுதும் அவனுக்கும் திருநீர் வைத்து அதே போல செய்ய அவனோ அந்த ஒரு நொடி தன் அண்ணியின் உருவில் தன் தாயை கண்டு நெகிழ்ந்து போனான்.. தீரனையும் நெகிழ்வோடு கூடிய மதி மீதான ஒரு நேச உணர்வு ஆட்கொண்டது அந்த நொடியில்..

இதை எல்லாம் பார்த்த தீரனின் அத்தை “ம்ம்.. நான் அப்பப்ப ஊர்ல இருந்து வந்து பார்க்கும் போது கூட ரெண்டு பயலுகளும் ஏதோ ஹோட்டல் ரூமுக்கு வந்து தங்கிட்டு போற மாதிரி தான் இந்த வீட்டில இருப்பாங்க.. இப்படி எல்லாம் கூட இந்த வீடு இருக்குமான்னு நான் நெனச்ச நேரம் உண்டு.. இந்த வீட்டுக்கு நல்ல காலம் வந்துருச்சு போல.. அதான் இந்த வீட்டுக்கு அந்த மஹாலக்ஷ்மியா நீயே மருமகளா கிடைச்சிருக்க..” சுவாமி ஆரத்தியை கொண்டு வந்து நீட்டியவளின் கன்னத்தை வாஞ்சையாய் வருடி சொன்னார் தீரனின் அத்தை..

தன் பெண் முதல் நாள் அன்றே புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்கி விட்டாள் என்பது அவள் தந்தைக்கு பெருமிதத்தை தந்தது.. கண்கள் குளமாக நெகிழ்ந்து போய் தன் மகளை பார்த்தவர் அவள் பூஜை தட்டை தன் முன்னே நீட்டவும் அவள் தலையை வாஞ்சையாய் வருடி “நீயும் மாப்பிள்ளையும் நல்லா சந்தோஷமா இருக்கணும்மா.. அந்த கடவுள் உங்க ரெண்டு பேரையும் காலம் முழுக்க நல்லா வெச்சுருக்கணும்..” என கரகரத்த குரலில் சொல்லவும் அதை கேட்டு மதியும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு தான் போனாள்..

பூஜை அறையில் இருந்து தீரனுக்கு பாயசம் கொடுக்கலாம் என எண்ணி சமையல் அறைக்கு வந்த மதியழகி இன்னொரு குவளையில் பாயசத்தை எடுத்து தீரனுக்கு கொடுப்பதற்காக அவனிடம் நீட்ட அங்கே வந்த இந்தரோ நடுவில் கையை நீட்டி பாயசத்தை மதி அழகியின் கையில் இருந்து பறிக்க  அவன் மார்பு சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை எப்போதும் போல அவன் திறந்து விட்டிருக்கவும் அப்போது தீரனின் மார்புக்கு முன்னால்  நீட்டி இருந்த குவளையிலிருந்த பாயசம் கொஞ்சமாய் அவன் மார்பில் பட்டு தெறித்தது..

இந்தரோ அதை எல்லாம் கவனிக்காமல் ஏதோ பாயசம் குடிக்கவே பிறந்தவன் போல பாயசத்தை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு சென்று அமர்ந்து அதை ரசித்து ருசித்து குடிக்க தொடங்கிவிட்டான்..

பாயசம் இன்னும் ஆறாமல் சூடாக இருக்க அது தீரனுடைய நெஞ்சில் லேசாய் சுட்டுவிட “ஸ்ஸ்ஸ்ஸ்..” என்று அவன் முனகவும் மதியழகி தன்னிச்சையாக தன் கையால் அவன் மார்பு பகுதியில் பாயசம் சிந்திய இடத்தில் தடவி விட்டு “ஐயோ.. ரொம்ப சுட்டுடுச்சா? ரொம்ப எரியுதா?” என்று கேட்க அதற்கு பதில் கொடுக்காமல் அவன் அமைதியாய் இருக்கவும் கேள்வியாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்..

அவன் மார்பில் அவள் கை தீண்டல் உண்டாக்கிய வெப்பத்தின் எதிரொலி அவன் ஊடுருவும் விழிப்பார்வையின் கிறக்கத்தில் தெரிய தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அந்த நொடி விளங்கிக் கொண்டவள் பட்டென தன் கையை அவன் மார்பில் இருந்து எடுத்திருந்தாள்..

“ஸ.. சாரி.. சாரி தீரா.. அது உங்களுக்கு சுட்டுருச்சேன்னு ஒரு பதட்டத்துல..”

அவள் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்கவும் அவள் சாதாரணமாய் பதட்டத்தில் தீண்டியதை தான் வேறு விதமாய் உணர்ந்ததை நினைத்து சங்கடப்பட்டு போனான் தீரன்.. அவள் தன்னை மறுபடியும் தவறாக நினைத்திருப்பாளோ என்று கலங்கினான் அவன்..

🎶🎼🎵

புத்தம் புது காலை

பொன்னிற வேளை

என் வாழ்விலே

தினந்தோறும் தோன்றும்

சுகராகம் கேட்கும்

எந்நாளும் ஆனந்தம்

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ

இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ

மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்

குயிலோசையின் பரிபாஷைகள்

அதிகாலையின் வரவேற்புகள்…

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ

பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ

வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்

வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவை கூடுது…
🎼🎶🎵

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!