லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 32
தன் தோழியிடம் மலரழகி “ஆமா.. என் தீரா மாமாவை நான் எனக்கு சொந்தமாக்கிக்கிட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டு கலங்கி தான் போனார்கள் தீரனும் மதியும்..
“என்னடி சொல்ற? அப்படின்னா அந்த தீரனை நீ..” அவள் தோழி உமா கேள்வியா அவளை பார்க்க “ஆமா.. தீரா மாமா எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. அப்போ அவர் எனக்கு சொந்தம் ஆயிட்டாரு தானே?”
தன் தோழியின் தோளை தன் தோளால் இடித்து மலரழகி சொல்லவும் “என்னது அந்த தீரன் உங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரா? என்னடி சொல்ற..? நீதானடி அவர் மேல ஆசையா இருந்த? கட்டிக்கிட்டா அவரை தான் கட்டிப்பேன்னு அவர் பின்னாடி துரத்தி துரத்தி சுத்திக்கிட்டு இருந்தே..”
“ஆமாண்டி.. சுத்திகிட்டு இருந்தேன் ஆனா அவரும் எங்க அக்காவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.. அது தெரிஞ்சும் நான் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்க முடியும்..? அதான்.. எங்க அக்காவுக்கு போனா போகுதுன்னு அவரை விட்டு கொடுத்துட்டேன்.. இதுவரைக்கும் எங்க அக்கா ஆசைப்பட்டு எதுவுமே தனக்குன்னு செஞ்சுகிட்டது இல்லடி.. எங்களுக்காகவே வாழ்ந்தவ அவ.. அவ மனசார ஆசைப்பட்டது தீரா மாமாக்காக மட்டும்தான்.. அதான் அவரை அவளுக்கே அவளுக்குன்னு கொடுத்துட்டேன்..”
அதைக் கேட்ட மதியழகிக்கோ ஏனோ இன்னும் மனதில் கலக்கம் சேர்த்துக் கொண்டது.. இன்னும் மலரழகி தீரனை பற்றிய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறாளோ என்ற யோசனை அவளுக்குள் ஒரு ஓரமாய் உறுத்திக் கொண்டே இருந்தது..
“அடி அம்மா.. உன் அக்கா பாசத்துக்கு அளவே இல்லாம போச்சு.. எப்படியோ இனிமே உன் ஆறடி அழகனை பார்க்கறதுக்கு ஷூட்டிங் அங்க இங்கன்னு கிளாஸ் கட் அடிச்சிட்டு அலைய தேவையில்லை.. அதான் தினமும் உன் தீரா மாமாவை வீட்டுலயே பாத்துட்டு இருக்க போற இல்ல..?”
“ஆமாமா.. அது மட்டும் இல்லாம தீரா மாமாக்கு எப்பவுமே இந்த கொழுந்தியா ஸ்பெஷல் தான்.. என் அக்கா என்னை திட்டுனா கூட என் மாமா என் அக்காவை என்னை திட்டவே விடறதில்லை.. தெரியுமா? இன்னைக்கு காலையில கூட எனக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணாரு தெரியுமா? எனக்கு என்னவோ எங்க அக்காவை விட எங்க மாமாக்கு நான் தான் செல்லம்னு தோணுது..”
அவள் அப்படி சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவள் பின்னால் வந்து நின்றான் தீரன்..
அவள் தலையில் ஆதுரமாய் கை வைத்து வருடி “ஆமா எனக்கு எப்பவும் மலர் ரொம்ப ஸ்பெஷல் தான்.. அவ அப்பாக்கு அவ எவ்வளவு ஸ்பெஷலோ அதே மாதிரி எனக்கும் ஸ்பெஷல் தான்.. அவளோட அப்பா ஒரு மகளா அவளை எவ்ளோ பத்திரமா பாத்துப்பாரோ அதே மாதிரி நானும் பாத்துப்பேன்.. சரி மலரு.. கிளாசுக்கு டைம் ஆச்சு இல்ல..? போ.. போய் நல்லா படிச்சு பெரிய டாக்டரா வரணும் ..என் கொழுந்தியா பெரிய டாக்டர் ஆனா எனக்கு இன்னும் ஸ்பெஷல் ஆயிடுவா.. கரெக்டா.. இந்த மாமனுக்கு அதுதான் ரொம்ப பெருமையை கொடுக்கும்..”
அவன் சொன்னதை கேட்டு தன் தோழியின் பக்கம் திரும்பியவள் தன் குர்தியின் கழுத்து பட்டையை பெருமையாய் தூக்கி விட்டபடி “பாத்தியாடி.. நான் சொல்லல..” என்றவள் தீரன் பக்கம் திரும்பி அவன் கன்னத்தைக் கிள்ளி “யூ ஆர் சோ ஸ்வீட் மாமா..” என்று கொஞ்சி விட்டு தோழிகளோடு வகுப்பை நோக்கி நடந்தாள்..
மதியழகிக்கோ மலரழகியினுடைய நடவடிக்கைகள் ஏனோ மனதிற்குள் கொஞ்சம் நெருடலாய் தான் இருந்தது.. அது மட்டும் மதியின் கலக்கத்திற்கு காரணமாக இல்லை.. தான் உயிராய் விரும்புபவனை இன்னொரு பெண் அது தன் தங்கையாகவே இருந்தாலும் அவ்வளவு உரிமையாய் சொந்தம் கொண்டாடுவது அவள் மேல் மதிக்கு கொஞ்சம் பொறாமையையும் கிளப்பி விட்டு இருந்தது..
“இந்த பொண்ணு இன்னும் தீராவை மனசுல நினைச்சுகிட்டு இருக்காளோ? எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடந்துச்சுன்னா அதுக்கப்புறம் அவர் நினைப்பை சுத்தமா மனசுல இருந்து அழிச்சுடுவான்னு நெனச்சேன்.. ஆனா அவ ஏதோ அவரை மறக்க முடியாமல் தவிக்கிற மாதிரி இருக்கே..”
தன் கழுத்தில் இருந்த சங்கிலியை விரல்களால் வருடியபடி யோசனையோடு நின்று கொண்டிருந்தவள் அருகில் வந்த தீரன் “என்ன மதி.. அவ்வளவு யோசனை?” என்று கேட்கவும் “அது.. மலர் பேசுனதை கேட்டா அவ இன்னும் உங்களை..” என்று சொல்லி நிறுத்தியவளை கூர்ந்து பார்த்தவன் ‘”இங்க பாரு.. நீ பயப்பட வேண்டாம்.. மலரை பத்தி எனக்கு நல்லா புரிஞ்சுடுச்சு.. அவ மனசுல எந்த கள்ளமும் இல்லை.. அவ இதெல்லாம் என்னை மாமான்னு அதாவது தன் அக்காவோட புருஷன்னு நினைச்சு தான் சொல்றா.. நிச்சயமா வேற எந்த மாதிரி நினைப்பும் அவ மனசுல இல்லன்னு நான் அடிச்சு சொல்லுவேன்.. உன் தங்கச்சியை நம்பு.. அவ தப்பு பண்ண மாட்டா.. அவ உன்னோட வளர்ப்பு.. நெனைச்சாலும் அவளால தப்பு பண்ண முடியாது.. உங்க காலேஜ்க்கு நேரமாச்சு.. இதெல்லாம் போட்டு மனசுல குழப்பிக்காம தெளிவா இரு.. ஆமா ரொம்ப நேரமா இந்த இந்தர் பையன் காருக்குள்ளேயே உட்கார்ந்து இருக்கான்.. அப்படி என்னதான் பண்றான்?”
அவளிடம் யோசனையாய் கேட்டபடி தன் மகிழுந்துவிற்குள் எட்டிப் பார்க்க அங்கே இந்தர் “இதோ காலேஜூக்கு தான் வந்துட்டே இருக்கேன் பேபி.. ஆனா இன்னைக்கு எங்கயும் வெளில போக முடியாது செல்லம்.. எங்க அண்ணன் கார்ல வந்துகிட்டு இருக்கேன்..”
ஏதோ ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்..
“இந்தர்.. என்னடா இது? என்னடா பேசிக்கிட்டு இருக்க..”
அவன் கேட்டதும் சட்டென தன் கைபேசி இணைப்பை துண்டித்தவன் “அது.. அது வந்துண்ணா.. அது என்னோட கிளாஸ் மேட் அண்ணா..”
“கிளாஸ் மேட்டா? கிளாஸ் மேட்டை பேபின்னு கூப்பிடுவியாடா? என்னடா இதெல்லாம்? என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று தீவிரமாய் முறைத்தவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் இந்தர் விழித்திருக்க மதி அவன் அருகே வந்து “தீரா.. அது.. இந்த காலத்து பசங்க பொண்ணுங்களை அப்படித்தான் கூப்பிடுறாங்க.. அதுக்கு தப்பா எதுவும் அர்த்தம் இல்லை.. சும்மா ஜாலியா கூப்பிடுறது தான்.. இந்தர் எந்த பொண்ணையும் தப்பா பார்க்க மாட்டான்.. எனக்கு தெரியும்.. நீங்க எப்படி மலரை 100% நம்பலாம்னு சொன்னீங்களோ அதே மாதிரி தான் இந்தரையும் 100% நம்பலாம்.. அவன் நீங்களும் உங்க அம்மாவும் சேர்ந்து வளர்த்த புள்ள.. தப்பா எதுவும் பண்ண மாட்டான்..” இந்தரை அர்த்தமாய் பார்த்துக் கொண்டே தீரனிடம் சொன்னவளை நன்றி கலந்த விழிகளோடு பார்த்தான் இந்தர்..
“ஆனாலும் இவன் எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி உன் கிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சானோ அப்போலிருந்து எனக்கு இவன் மேல கொஞ்சம் நம்பிக்கை குறைஞ்சு தான் இருக்கு.. அவனோட ப்ரொஃபஸர் நீ.. உன்கிட்டயே அப்படி நடந்துக்கிட்டவன் அவன் வயசு பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துப்பான்னு என்னால யோசிக்க கூட முடியல..”
தீரன் மேலும் மேலும் இந்தர் மேல் நம்பிக்கை இல்லாமலேயே பேசிக் கொண்டிருக்க “இல்ல.. எங்களுக்கு அவனை பத்தி காலேஜ்ல பொண்ணுங்க சைடுல இருந்து இதுவரைக்கும் ஒரு கம்ப்ளைன்ட் கூட வந்தது இல்லை.. அவன் எப்பவுமே பொண்ணுங்களுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா தான் இருந்திருக்கான்..”
மதி உறுதியாய் சொல்ல “நீ எதோ சொல்ற.. பார்க்கலாம்.. இனிமே இவன் நடந்துக்க போற விதத்துல தான் இவன் எப்படின்னு எனக்கு தெரியபோகுது..”
“சரி.. காலேஜ்க்கு டைம் ஆகுது.. உங்களை கொண்டு போய் டைமுக்கு விடறேன்..” தீரனின் குரலில் கொஞ்சம் விரக்தி கலந்திருக்க அது மதிக்கும் கொஞ்சம் கவலையை தான் தந்தது..
இந்தருக்கு தன் மீது நம்பிக்கை குறைந்துவிட்டது என்று தீரன் சொன்ன வார்த்தை உள்ளத்தில் முள்ளாய் தைத்தது.. எப்படியாவது அந்த நம்பிக்கையை மீண்டும் பழையபடி பெற வேண்டுமென்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான் அவன்..
கல்லூரியில் இந்தர் காரை விட்டு இறங்கியது தான் அவன் அருகில் வந்த ஒரு பெண் “ஹே.. இந்து டியர்.. ஏன் இன்னிக்கு காரில வந்துட்ட? உன்னோட வண்டியில போற அந்த ஃபீலே தனி டா.. அப்போ இன்னைக்கு அது கிடையாதா?”
அவள் இந்தருடன் கொஞ்சலாய் அவன் தோள் மீது கை வைத்து பேசிக் கொண்டிருக்க அவனோ தன் பின்னாலேயே நின்ற தன்னை கவனித்துக் கொண்டிருந்த அண்ணனையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்த படி திருதிருவென்று விழித்துக் கொண்டு இருந்தான்..
இந்த முறை மதியழகியும் அவன் உதவிக்கு எதுவும் செய்ய முடியவில்லை..
“ஷாலினி.. நான் சொல்றதை கேளு..” என்று அவன் ஏதோ சொல்ல தொடங்க “ஹேய்.. என்ன நீ.. அசிங்கமா என் ஃபுல் நேம் சொல்லி கூப்பிடுற.? நீ எப்பவும் ஷாலு பேபின்னு தானே கூப்பிடுவே.. அப்படியே கூப்பிடுறா.. அதுல தான்டா ஒரு கிக் இருக்கு..”
“கிக்கா? அடிப்பாவி.. நீ இப்ப பேசுன பேச்சுல எங்க அண்ணா கிட்டருந்து எனக்கு ஒரு பெரிய கிக் கிடைக்கப் போகுது..”
மனதிற்குள் புலம்பியவன் அவளை பாவமாய் பார்த்து வைக்க அவளோ பேசிக்கொண்டே போனாள்..
இன்னும் இரண்டு நிமிடம் அவள் பேசினால் தன் அண்ணன் அந்த இடத்திலேயே படத்தில் அவர் காட்டும் அத்தனை சண்டை சாகசங்களையும் காட்டி தன்னை அடித்து துவைத்து விடுவார் என்று புரிந்து போனது அவனுக்கு..
ஆனால் அந்தப் பெண்ணை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவன்..
அப்போது சரியாக அவனின் துணைக்கு அவனுடைய நண்பன் ரகு வந்தான்..
தூரத்திலிருந்து இந்தர் தன்னுடைய அண்ணன் தீரனோடு வந்திருப்பதையும் ஷாலினி எப்போதும் போல அவனோடு கொஞ்சி கொஞ்சி பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தவன் அவர்கள் அருகில் வந்து “ஏய்.. ஷாலு பேபி.. தினமும் நான்தானே உன்னை வண்டியில கூட்டிட்டு போவேன்.. அன்னைக்கு ஒரு நாள் ஏதோ நான் வரலைன்னு அவன் உன்னை அவசரத்துக்கு கூட்டிட்டு போய்ட்டான்.. அதுக்காக தினமும் நான் அவனையே உன்னை பிக்கப் பண்ண விட்டுடுவேனா.. எப்பவும் போல நீ என்னோடயே வா.. நான் வண்டியில தான் வந்து இருக்கேன்..” என்றவன் அவள் ஏதோ சொல்ல வர அவளை பேசவிடாமல் அவள் கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக்கொண்டு வேறு பக்கம் போனான்..
இந்தர் அதன் பிறகுதான் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியே விட்டான்..
அவன் அருகில் வந்து தீர “டேய் இந்தரு.. அந்த பையன் உன் ஃப்ரெண்டு தான?” என்று கேட்க “ஆமாண்ணா.. என் ஃப்ரெண்டு ரகு.”. என்றான் அவன்..
தலையை குனிந்த படி தீரனின் பார்வையை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்து இருந்தான் இந்தர்..
குற்றமுள்ள நெஞ்சு அவனுக்கு குறுகுறுத்தது.. தீரனோ “இங்க பாரு.. அவனுக்கு நீ ஒரு நல்ல ஃப்ரெண்டுன்னா முதல்ல அவன் இந்த மாதிரி காலேஜை கட் அடிச்சிட்டு ஊர் சுத்தறதை நிப்பாட்டிக்க சொல்லு.. படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் அழகே இல்ல.. அப்புறம் இந்த பொண்ணுங்களை என்ன என்னவோ கூப்பிடுறீங்களே.. அது என்னது.. பேபி டியர்.. இதெல்லாம் நல்லா இல்ல இந்தரு… இத்தோட நிப்பாட்டிக்கோ.. சரி.. உனக்கு கிளாசுக்கு நேரமாவது இல்ல..? நீ போ..”
அவனை வகுப்புக்கு அனுப்பி விட்டு திரும்பிப் பார்க்க அவன் அருகில் மதி அழகி வந்து நின்று இருந்தாள்..
“சரி.. அப்ப நானும் கிளாஸ்க்கு போறேன் பாய்…” என்று கல்லூரிக்கு போக திரும்பியவளின் கையை பிடித்தான் தீரன்..
அவ்வளவுதான்.. அதுவரை அமைதியாக இருந்த அவளின் இதயம் ஏனோ படபடவென அடித்துக் கொள்ள தொடங்கியது..
தொடரும்..