லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 33
கல்லூரிக்குள் போக திரும்பிய மதியின் கையை தீரன் பிடிக்க.. அதுவரை அமைதியாக இருந்த அவளின் இதயம் ஏனோ படபடவென அடித்துக் கொள்ள தொடங்கியது..
தன் இன்னொரு கையை நெஞ்சில் வைத்து தன் படபடப்பை குறைக்க முனைந்தவள் அதில் மொத்தமாய் தோல்வியுற்று தான் போனாள்..
அவனோடு நிகழ்ந்த முதல் சந்திப்பில் என்னவென்றே புரியாத உணர்வுகளோடு போராடியவளுக்கு இப்போது அவன் பால் தன் மனம் முழுவதுமாய் சாயத் தொடங்கி இருப்பது தெரிந்தது.. அவன் மொத்தமாய் தன்னை வேரோடு களவாடிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.. அந்த காதல் உணர்வுகளின் பொருள் அவளுக்கு விளங்கிட இப்போது அந்த உணர்வுகளின் தாக்கம் இன்னும் பன்மடங்காக அவளிடம் பெருகிக் தான் போனது..
அவள் அவனை சந்தித்த போது தனக்குள் நிகழ்ந்த அழகான தவிப்பான மாற்றங்களின் விவரம் எதுவும் புரிந்திடாத முதல் சில நாட்களில் அந்த உணர்வுகள் உள்ளுக்குள் இருந்து உடைத்து பொங்கி எழுந்தாலும் அதை வெளியே மற்றவர்க்கு தெரியாமல் தனக்குள்ளேயே அவளால் கட்டுப்படுத்தி வைக்க முடிந்தது..
ஆனால் இப்போதோ அவன் பார்வை தன்னை தீண்டும் போதே தனக்குள் நிகழும் ரசாயன மாற்றங்களை அடுத்தவருக்கு தெரியாமல் மறைத்து வைக்க பெரும்பாடு பட்டு போகிறாள் பாவை அவள்..
அப்படி இருக்க அவன் கை தீண்டலில் அவள் உடலில் அமைதியாய் இருந்த அத்தனை அணுக்களும் உயிர்த்து எழுந்தது போல் ஒரேயடியாய் சதிராட்டம் போட அதை அவன் கண்களுக்கு தெரியாமல் எப்படி தனக்குள்ளேயே புதைத்து வைப்பது என்ற வித்தை புரியாமல் விதிர்த்து போனாள் பெண் அவள்..
அவள் இப்படி தன்னுள் நிகழும் சிருங்கார மாற்றங்களில் சிலிர்த்து போயிருக்க அவளுடைய இந்த இனம் புரியா அவஸ்தைகளை பற்றிய தகவலை அவள் கைகளை பற்றி இருந்த தீரனுக்கு பனிக்கட்டியாய் சில்லிட்டு போயிருந்த அவளின் உள்ளங்கைகள் கூவி கூவி பறை சாற்றி கொண்டிருந்தன..
அவளின் கையை விடாமல் தொடர்ந்து பிடித்த படியே அவள் முன்னால் வந்து நின்று அவள் முகம் பார்த்தவன் அவள் நெற்றியில் முத்து முத்தாய் வியர்த்திருக்க படபடக்கும் இதயத்தோடு அவள் வேக மூச்சுகளை விட்டுக் கொண்டிருக்க அவள் நிலை கண்டு சிறிது அதிர்ந்து தான் போனான்..
அவளின் மனதில் அவன் பால் ஏற்பட்டு இருந்த காதல் தவிப்புகளை அவள் உடல் மொழி வெளிப்படுத்திக் கொண்டிருக்க அவனோ அதை வேறு மாதிரி புரிந்து கொண்டான்..
தான் அவள் கையைப் பிடித்ததை அவள் தவறாக எண்ணிக்கொண்டு தன்னுடைய செய்கையினால் ஏற்பட்ட பயத்தையும் அருவருப்பையும் தன்னிடம் காட்ட முடியாமல் இப்படி உணர்வுகளால் வெளிப்படுத்துகிறாள் என்று புரிந்து கொண்டான் அவன்..
இந்த தவறான புரிதல் நிகழ்ந்த அடுத்த நொடியே அவள் கையை சட்டென அவன் விடுவித்து விட அவளோ அவனுடைய விலகலில் கொஞ்சம் பதறித்தான் போனாள்..
சட்டென தன் கைகளில் இருந்து விலகிய அவன் கைகளை பிடித்தவள் தலையை வேகமாய் இடவலமாய் ஆட்டவும் அவளுடைய எண்ணத்தை அந்த ஒரே தலையசைப்பில் புரிந்து கொண்டான்..
அழகாய் புன்னகைத்தபடி அவள் உள்ளங்கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதித்து கொண்டவன்
“தேங்க்ஸ் மதி.. எங்க நீ என்னை தப்பா நினைச்சுட்டியோன்னு நெனச்சேன்.. அதனாலதான்..” என்று நிறுத்தியவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களை அப்போதும் சந்திக்க முடியாமல் சட்டென விழி தாழ்த்தினாள்..
தன் மனதில் இருப்பது காதல் தானா என்று இன்னும் அவளுக்கே பிடிபடாமல் இருக்க அதற்குள் அவனுக்கு எந்த தவறான புரிதலும் ஏற்படுவதற்கு தான் காரணமாக இருந்து விடக்கூடாது என்று தோன்ற “இல்ல.. ஒரு ஃப்ரெண்டு இன்னொரு ஃப்ரெண்டோட கைய புடிச்சா அதை ஏன் தப்பா நினைக்க போறாங்க.. அதெல்லாம் யாரும் தப்பா நினைக்கல..”
அவள் ஒரு சின்ன ஏளன புன்னகையோடு சொன்னதைக் கேட்டு தன் இதழ் விரித்து சிரித்தவன் “ரொம்ப தேங்க்ஸ் மதி… இவ்வளவு படிச்ச ப்ரொஃபஸர் நீ இந்த படிக்காத ஸ்டண்ட் மாஸ்டரை உன்னோட ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டது என்னை பொறுத்த வரைக்கும் எனக்கு ரொம்ப பெரிய அவார்டு கிடைச்ச மாதிரி.. தீரன் ரொம்ப குஜாலாயிட்டேன்”
தன் பழைய பேச்சு வழக்கு இடையில் புகுந்து விட சொல்லிவிட்டு தன் நாக்கை கடித்துக் கொண்டவனை அவசரமாய் நிமிர்ந்து பார்த்தவள் “இல்ல தீரா.. நீங்க படிச்சு இருக்கீங்களோ இல்லையோ.. உங்ககிட்ட பணம் இருக்கோ இல்லையோ.. நீங்க ரொம்ப நல்லவரா நேர்மையானவரா இருக்கீங்க.. பொண்ணுங்களை மதிப்போடயும் மரியாதையோடயும் நடத்துறீங்க.. அந்த ஒரு தகுதி போதும்.. என்னோட ஃப்ரெண்டா இருக்கறதுக்கு..”
அவள் சொன்னதை கேட்டவன் அவளின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போய் அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கி தன் பார்வையாலேயே தன் நன்றிகளை சொல்லிக்கொண்டிருந்தான் அவளிடம்..
பிறகு தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்து இருவரும் இயல்பாகி விட அப்போதும் அவள் கைகளை விடாமல் இன்னும் இறுக பற்றியவன் “மதி.. பார்கவி என்கிட்ட உங்க காலேஜ் பிரின்சிபல் இந்தரோடயும் உன்னோடயும் அந்த சேகரோடயும் என்னென்ன பேசினாங்கன்றதை பத்தி எல்லாம் சொன்னாங்க.. என்னோட கொஞ்சம் இப்ப பிரின்ஸிபல் ரூமுக்கு வந்துட்டு அப்புறம் கிளாசுக்கு போ.. ரெண்டு நிமிஷம் தான்..”
அவன் சொன்னதைக் கேட்டவுடன் புருவம் முடிச்சிட “அது முடிஞ்ச போன விஷயம்.. இப்ப எதுக்கு தீரா அதை பத்தி பேசிக்கிட்டு..” என்க “இல்ல மதி.. அவங்களுக்கு கொஞ்சமா சந்தேகம் இருந்தா கூட அதை சுத்தமா போக்க வேண்டியது நம்மளோட கடமை.. அதான் சொல்றேன்.. வா.. அவங்களை போய் பார்க்கலாம்..”
“ஓகே.. வாங்க போலாம்” என்று சொல்லி அவள் கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நடக்க அவனும் அவளை பின் தொடர்ந்தான்.. அவள் கையை அவன் அப்போதும் விடவில்லை..
அவள் கையைப் பிடித்த படியே கல்லூரி முதல்வரின் அறைக்கு அவளோடு சென்றவன் அறைக்குள் நுழைய அனுமதி கேட்க கல்லூரி முதல்வர் புருவம் சுருக்கி அவன் யார் என கேள்வியாய் பார்த்தார்.. அவன் கையைப் பிடித்த படி மெதுவாய் அவன் பின்னிருந்து மதி முன்னே வரவும் “உள்ள வா மதி.. இது யாரு?” அவனை தெரியாமல் கேட்டார் அவர்..
“மேடம்.. அது வந்து..” அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்க “எக்ஸ்யூஸ் மீ மேடம்.. நான் சொல்றேன்.. நான் இங்க படிக்கிற இந்தர்ங்கற ஸ்டுடென்டோட அண்ணா.. இப்போ மதியோட புருஷனும் கூட.. எங்க ரெண்டு பேருக்கும் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுச்சு.. இந்தருக்கும் மதிக்கும் நடுவுல இருந்த பிரச்சனை பத்தி எனக்கு எல்லாம் தெரியும்.. இனிமே அப்படி ஒரு பிரச்சனை இந்தரால நடக்காதுன்னு சொல்றதுக்கு தான் நான் இங்க வந்தேன்..”
அவன் சொன்ன விஷயத்தை புரிந்து கொண்ட கல்லூரி முதல்வர் ஒரே நாளில் திருமணத்தை முடித்துக் கொண்டு வந்து நிற்கும் மதியை ஆச்சரியமாக பார்த்தார்..
“கங்கிராட்ஸ்.. வாட் எ சர்ப்ரைஸ் மதி..? ஆமா உங்க பேரு..?” தீரனை பார்த்து அவர் கேட்க “என் பேரு தீரன்.. இரணதீரன்.. நான் சினிமால ஸ்டண்ட் மாஸ்டரா இருக்கேன்..”
அவன் பட்டென சொல்லிவிட அவருக்கோ அதை கேட்டு இன்னும் வியப்பு மேலிட்டது.. புருவம் உயர்த்தி மதி பக்கம் திரும்பியவர் “இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. ரொம்ப ரேர் காம்பினேஷனா இருக்கே.. எனிவேஸ் உங்களுக்கும் கங்கிராட்ஸ்.. மே காட் ப்ளெஸ் யூ போத் வித் எ ஹாப்பி மேரீட் லைஃப்.. ஆனா என்னை தப்பா நினைக்காதீங்க.. ஒரு க்யூரியாசிட்டியில தான் கேட்கிறேன்.. உங்களோடது லவ் மேரேஜா?”
அவர் இருவரையும் குறுகுறுவென பார்த்த படி கேட்க தீரனும் வேறு வழி இல்லாமல் “ஆமா மேடம்.. லவ் மேரேஜ் தான்..” கொஞ்சம் அசடு வழிந்த படி தான் சொன்னான் அவன்.. மதிக்கோ அவரை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை…
தலை குனிந்த படி அமர்ந்திருந்தவளை நம்ப முடியாமல் பார்த்தவர் “மை காட் என்னால நம்பவே முடியல.. வாட் எ கோயின்ஸிடன்ஸ்.. இப்படி கூட நடக்குமா? இங்க பிரச்சனை நடந்தப்ப இந்தர் தீரனோட தம்பின்னு உனக்கு தெரியாதா மதி..?”
“இல்ல மேடம்.. தெரியாது.. நாங்க ரெண்டு பேரும் ஒரு மாசமா தான் லவ் பண்றோம்.. எனக்கு இந்தர் இப்படி எல்லாம் பண்ணான்னு தெரிஞ்சதும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.. அவனுக்காக நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன் மேடம்..”
தீரன் பேச பேச அந்த கல்லூரி முதல்வருக்கோ வியப்பு அடங்கவே இல்லை “இன்ட்ரஸ்டிங்.. ஆமா.. மதி ரொம்ப அமைதியான பொண்ணு.. நீங்க ஸ்டண்ட் மாஸ்டர்ன்னு சொல்றீங்க.. அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில லவ் எப்படி..?”
அவர் வியப்பு குறையாமல் கேட்க “மேடம்.. காதல்.. பாசம்.. அன்பு.. நேசம்.. எந்த உணர்வா இருந்தாலும் நம்ம மனசை அதுவா வந்து ஆட்டுவிக்கும் மேடம்.. அது இப்ப வரும்.. அப்ப வரும்.. அப்படின்னு எல்லாம் சொல்ல முடியாது.. அந்த உணர்வு நம்ம உயிருக்குள்ள போய் நம்மளை முழுசா தலைகீழ போட்டு புரட்டி எடுத்து அவங்க இல்லாத உலகத்துல நம்மளால வாழவே முடியாதுன்கிற ஒரு நிலைமைக்கு நம்மள தள்ளிடும்.. ஒருத்தரோட நமக்கு அந்த மாதிரி ஒரு பிணைப்பு ஏற்படுறதுக்கு அந்த உணர்வு மட்டும் போதும் மேடம்.. படிப்பு அறிவு அழகு பணம் இது எதுவுமே தேவையில்லை.. அந்த உணர்வு வெறும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு வர ஈர்ப்பா இல்ல வாழ்க்கை முழுக்க தொடர போற உறவோட அடித்தளமான்னு நாம தான் மேடம் புரிஞ்சுக்கணும்”
தீரன் பேச பேச அவனை விழி விரித்து ஆச்சரியமாய் பார்த்தாள் மதி.. முழுக்க முழுக்க ஆஞ்சநேயர் பக்தனாய் இருந்தவனா இவன்? காதல் பற்றிய பெரிய விரிவுரையே நடத்திக் கொண்டிருக்கிறானே.. என்று எண்ணியபடி விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவனை..
அதை கவனித்த கல்லூரி முதல்வர் தன் தொண்டையை செரும அதில் தன் நிலை உணர்ந்தவள் அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் மறுபடியும் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்..
பதட்டமான குரலில் அவசரமாய் “உங்க டைம் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆயிடுச்சு.. நான் போகவா?”
மதி கேட்க “ஓகே மதி.. நீங்க கிளாஸ்க்கு போங்க..” என்றவர் தீரன் பக்கம் திரும்பி “நான் உங்களோட கொஞ்சம் பேசணும் தீரன்..” என்க மதிக்கோ அவர் என்ன பேச போகிறாரோ என்று கலக்கமாய் இருந்தது..
மதியை வகுப்புக்கு போக சொல்லி கண்ணை காண்பித்து விட்டு தீரன் கல்லூரி முதல்வர் பக்கம் திரும்பினான்.. வேறு வழி இன்றி அரை மனதாய் தன் வகுப்புக்கு கிளம்பினாள் மதி..
அவர் எதுவும் பேசும் முன் மெதுவாக பேச்சை தொடங்கினான் தீரன்..
“இந்தர் நல்ல பையன் தான் மேடம்.. அவனால வந்த இந்த பிரச்சனை உங்களுக்கு எவ்வளவு கோபத்தை கொடுத்திருக்கும்னு எனக்கு தெரியும்.. தயவு செஞ்சு அவனை இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க.. அவன் மறுபடியும் இந்த மாதிரி தப்பு பண்ணாம நான் பார்த்துக்குறேன்.. மத்தபடி அவன் காலேஜ்ல வேற எதுவும் தப்பு பண்ணி இருக்க மாட்டான்னு எனக்கு தெரியும்..”
அவன் அவ்வளவு நம்பிக்கையோடு சொல்ல அதை உடைக்க மனதிற்கு கஷ்டமாய் தான் இருந்தது அந்த கல்லூரி முதல்வருக்கு.. ஆனால் தாய் தந்தை இல்லா இந்தரை கண்ணும் கருத்துமாய் வளர்க்கும் தீரனிடம் உண்மையை மறைக்க அவர் மனம் ஒப்பவில்லை..
“மிஸ்டர்.தீரன்.. உங்க தம்பி மதி விஷயத்துல மட்டும் தப்பு பண்ணல.. அவன் மத்த விஷயங்கள்லயும் இர்ரெகுலரா தான் இருக்கான்.. அவனோட அட்டெண்டென்ஸ் ரொம்ப புவரா இருக்கு.. கிளாஸை எல்லாம் கட் அடிச்சுட்டு அவன் கிளாஸ் மேட்ஸோட பர்டிகுலரா கேர்ள்ஸோட தினமும் ஊர் சுத்திட்டு இருக்கான்.. மதியை அவனுக்கு பிடிக்கும்.. அதனால அவங்க கிளாஸ்ல மட்டும் 100% அட்டன்டன்ஸ் வச்சிருக்கான்.. மத்த எல்லா கிளாஸ்லையும் அவன் அட்டென்டன்ஸ் ரொம்ப புவரா இருக்கு.. மத்த ஸப்ஜெக்ட்ல எல்லாம் எக்ஸாம் எழுதுறதுக்கு தேவையான 65%ஐ எப்படியாவது மெயின்டைன் பண்ணிடறான்.. நல்லா படிச்சு எல்லா சப்ஜெக்ட்ஸ்லயும் எப்படியோ பாஸ் பண்ணிடறான்.. அது வேற விஷயம்.. ஆனா அவனால இன்னும் நல்லா படிக்க முடியும்.. இன்னும் நல்லா பெர்ஃபார்ம் பண்ண முடியும்.. இன்னும் கிளாஸ்சஸ் எல்லாம் ரெகுலரா அட்டென்ட் பண்ணா அவன் கிளாஸ்லையே டாப்பரா அவன் தான் இருப்பான்.. கிளாஸ்ல மட்டும் இல்ல காலேஜ்ல டாப்பரா வர்றதுக்கு கூட வாய்ப்பு இருக்கு.. நான் எவ்வளவோ தடவை அவனை கூப்பிட்டு இதெல்லாம் சொல்லி வார்ன் பண்ணி இருக்கேன்.. ஆனா நோ யூஸ்..”
அவர் சொன்னதைக் கேட்டு அவர் பேசுவது தன் தம்பியை பற்றி தானா.. தான் ஏதாவது கனவு கண்டு கொண்டிருக்கிறோமா.. என்ற யோசனையில் அப்படியே உறைந்து அமர்ந்திருந்தான் தீரன்..
“மேடம்.. நீங்க என் தம்பி இந்தர் பத்தி தான் நெஜமாவே சொல்றீங்களா?”
நம்ப முடியாமல் அவன் மறுபடியும் கேட்க “ஆமாம் சார்.. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்.. உங்க தம்பி இந்தர் பத்தி தான் சொல்றேன்.. மதி கிட்ட வம்பு பண்ணது உங்க தம்பி இந்தர் தானே?”
“ஆமாம் மேடம்..”
அவன் தயக்கமாய் சொல்ல “அப்படின்னா நான் இப்ப சொன்னது எல்லாமே உங்க தம்பி இந்தர் பத்தி தான்..”
அவர் உறுதியாக சொல்ல தீரனோ அதை கேட்டு முழுதாய் நொறுங்கி போனான்..
“இந்தரா இப்படி.. என் தம்பி இந்தரா..?*
அதிர்ச்சியில் அவனுக்கு அடுத்து எதுவும் பேச நா எழவில்லை..
தொடரும்..