லவ்.. லவ்.. எத்தனை வயது? – 40
மதியழகியின் அடுத்தடுத்த உடல் மொழி மாற்றங்களையும் செய்கையிலும் அவளுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தாலும் ஏதோ ஒன்று அவள் தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறது என்று புரிந்து கொண்டான் தீரன்..
அது பெண்ணுக்கே உரிய நாணம் என்னும் குணத்தால் உண்டானது என்று புரிந்து கொள்ளாமல் அதை வேறு வித தயக்கம் என்று தவறாகவே புரிந்து கொண்டான் அவன்..
முட்டி தொடும் ஒரு ஷாட்ஸை தானாகவே இடக்கையால் சிரமப்பட்டு அணிந்து கொண்டான்..
அவள் சங்கடமாய் பால்கனிக்கு போய் நின்று கொண்டிருப்பதை பார்த்தவன் அவள் சங்கடத்தை போக்கி இயல்பாக்குவதற்காக “சாரி மதி.. உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேன்..” என்று அவள் பின்னாலிருந்து சொல்லவும் அவன் புறம் திரும்பியவள் “அப்படின்னு நான் சொன்னேனா? அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நானா விருப்பப்பட்டு தான் இதெல்லாம் செய்றேன்.. நீங்க இப்படி எல்லாம் ஒன்னும் ஃபீல் பண்ண வேண்டாம்.. உங்களுக்கு சீக்கிரம் குணமாகணும்.. அதுதான் எனக்கு முக்கியம்.. சரி.. நானும் குளிச்சிட்டு வரேன்.. அப்புறம் ரெண்டு பேரும் கீழே போகலாம்..” என்றவள் தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வேகமாய் குளியல் அறைக்குள் நுழைந்திருந்தாள்..
சிறிது நேரத்தில் இருவரும் தங்கள் அறையில் இருந்து கீழே வர அவன் அவளுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியும் அவனை எதுவும் செய்ய விடாது சாப்பாட்டு மேஜையின் எதிரே நாற்காலியில் அவனை அமர வைத்தவள் வேக வேகமாய் அன்றைய சமையலை செய்து முடித்தாள்..
அவள் சமையல் செய்து முடிக்கவும் மலரழகி தன் அறையில் இருந்து சாப்பாட்டு மேஜை அருகில் வரவும் சரியாக இருந்தது.. மலரழகி ஆறு மணிக்கு முன்னால் எழுவதெல்லாம் உலக அதிசயம்.. அவள் அவ்வளவு காலையில் எழுந்து வருவதை ஆச்சரியமாக பார்த்திருந்தாள் மதி..
அங்கே தீரனை பார்த்த மலரழகி “ஐயோ மாமா.. என்ன ஆச்சு உங்க கைல..? எவ்வளவு பெரிய கட்டு..? என்ன மாமா நீங்க..? கொஞ்சம் பார்த்து வேலை செய்யக்கூடாதா?” என்று கேட்க “பார்த்து தான் செஞ்சேன்.. உங்க அக்காவை பார்த்துகிட்டே செஞ்சதனால தான் இப்படி ஆயிடுச்சு..” என்று மனதிற்குள் அவள் கேள்விக்கு மதியழகியின் மேல் பார்வையை வீசியபடியே பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்..
“ஆனா உங்களுக்கு எதுவும் ஆகாது மாமா.. நீங்கதான் ஸ்ட்ராங் மேனாச்சே.. என்னோட சூப்பர் ஹீரோ.. நீங்க வேணா பாருங்க.. நாளைக்கே மறுபடியும் அங்க போயி இன்னும் நாலு பேரை அடிச்சு போட்டு சூப்பரா வேற லெவல்ல ஸ்டன்ட் பண்ணுவீங்க.. எனக்கு தெரியும்..” என்று சொன்னவளை முறைத்தாள் மதி..
“ஏய் மலரு.. அவருக்கு ரொம்ப அடிபட்டு இருக்கு.. டாக்டர் 15 நாள் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காரு.. அவரே இருப்புக்கொள்ளாம ரெண்டு நாள்ல சூட்டிங் போறேன்னு சொல்லிட்டு இருக்காரு.. நீ வேற அதுக்கு ஒத்து ஊத்திட்டு இருக்கியா? வாயை மூடிட்டு போடி..”
மலரழகியை அதடடியவள் தீரன் பக்கம் திரும்பி “இங்க பாருங்க தீரா.. இவ சொல்றான்னு நாளைக்கு ஷூட்டிங் போற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க.. நீங்க கைக்கு ரெஸ்ட் குடுக்கணும்.. பதினைஞ்சு நாளைக்கு அப்பறம் தான் ஷூட்டிங் போறதை பத்தி நீங்க யோசிக்கணும்.. சொல்லிட்டேன்..”
“ஐயோ.. என்னக்கா நீ.. மாமாவை இப்படி அடக்கி வைக்கிற? எந்த காலத்துல இருக்க நீ..? கொஞ்சமாவது மாமாவை புரிஞ்சுக்கோ கா.. அவர் ஸ்டண்ட் மாஸ்டர்.. ஒரு சூப்பர் ஹீரோ.. இந்த அடி எல்லாம் அவருக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல.. நாளைக்கு போய் நாலு பேரை அடிச்சு போட்டார்னா அவர் கை தன்னால சரியாயிடும்.. என்ன மாமா நான் சொல்றது சரிதானே?”
அவள் கேட்க அவனும் “ரொம்ப கரெக்டா சொன்ன மலரு.. இதைத்தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. உங்க அக்கா தான் கேக்க மாட்டேங்குறா..”
“ஐயோ.. அவ அப்படித்தான் மாமா.. சரியான பழைய பஞ்சாங்கம்.. இத்தனை நாளா அவ அன்பு தொல்லையால நான்தான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன்.. இப்போ உங்க டர்ன்.. ஆனா வேற வழி இல்ல மாமா.. அவ கிட்ட வசமா சிக்கிட்டீங்க.. ஒன்னு மட்டும் நிச்சயம் மாமா.. இந்த வீட்டில உங்களை என்னை மாதிரி யாராலயும் புரிஞ்சுக்க முடியாது மாமா..”
அவள் எதார்த்தமாய் சொல்லவும் மதியழகி அவள் அருகில் வந்து தீரனிடம் இருந்து அவளை தள்ளி நகர்த்தி விட்டு “நீ புரிஞ்சுகிட்ட வரைக்கும் போதும்.. போய் உனக்கு ஏதாவது வேலை இருந்தா பாரு.. அவர் சாப்பிடணும்..” என்று கோவமாக அவளை முறைத்தப்படி சொல்லிவிட்டு அவன் முன்னால் தட்டை வைத்து அதில் இரண்டு இட்லிகளையும் பரிமாறி சாம்பாரையும் ஊற்றினாள்..
அவன் மறுபடியும் தன் இடது கையால் அதை உண்ண முயல மதி அவனை தடுத்து “இருங்க தீரா.. நான் ஊட்டுறேன்..” என்று சொல்லவும் “அக்கா.. நீ போயி உள்ள சமையல் வேலை மிச்சம் இருந்தா பாரு.. மாமாவுக்கு நான் ஊட்டுறேன்..” என்று மலர் இட்லி தட்டை அவள் கையில் இருந்து வாங்க முயல மதியழகிக்கோ கோபம் உச்சகட்டத்தை அடைந்தது..
முகத்தில் கோபம் கொப்பளிக்க “எனக்கு எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு.. நான் அவரை பார்த்துக்கறேன்.. நீ போய் உன் காலேஜ்க்கு கிளம்புற வழியை பாரு..” என்றாள்..
“அக்கா.. நீ போய் எனக்கு காபி போட்டு கொண்டு வா.. நான் அவருக்கு ஊட்டுறேன்..”
மலரழகி மறுபடியும் அடம்பிடிக்க அப்போது சரியாக அங்கே தமிழ்வாணனும் வந்துவிட அதற்கு மேல் அவர் எதிரில் அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் உள்ளே சென்று அவளுக்கு காபி போடும் வேலையில் இறங்கினாள் மதியழகி..
ஆனால் உள்ளுக்குள் அவளுக்கு தன் தங்கையின் செயலை நினைத்து ஆத்திரம் எரிமலையாய் புகைந்து கொண்டிருந்தது..
“மலரு.. சொன்னா கேளு.. நானே சாப்பிடறேன்..” என்று சொன்ன தீரன் அவள் ஊட்டியதை மறுத்துவிட்டு அங்கு நடுவில் இருந்த ஒரு தேக்கரண்டியை எடுத்து இடது கையால் அந்த தேக்கரண்டியில் இட்லிகளை வெட்டி சாப்பிட தொடங்கி இருந்தான்..
உள்ளே இருந்து காப்பியை கலந்து கொண்டு வெளியே வந்த மதி அங்கு மலரழகி சாப்பாட்டு மேஜையின் இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருக்க தீரன் தேக்கரண்டியால் இட்லிகளை உண்பதை பார்த்தவள் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டு மலர்ழகியின் முன்னால் தான் கொண்டு வந்த காபி கோப்பையை டொக்கென கோவமாக வைத்தாள்..
அவள் எதற்கு கோபமாக இருக்கிறாள் என்று புரியாத மலரழகியோ “அம்மாடி.. இன்னைக்கு என்ன காபில ரொம்ப அனல் பறக்குது..” என்று எண்ணியபடியே மெதுவாக காபியை பருக தொடங்கினாள்..
அதற்குள் தமிழ்வாணன் தீரனிடம் கையில் பட்டிருக்கும் அடியை பற்றி விசாரிக்கவும் அவன் விஷயத்தை சொல்ல அவரும் மதியை போலவே “இந்த ஆபத்தான வேலை எதுக்கு மாப்பிள்ளை.. வேற ஏதாவது வேலை பார்த்துக்கோங்களேன் மாப்பிள்ளை..” என்றார் அக்கறையோடு..
“அப்பா.. ஏம்பா மாமாவை டிஸ்கரேஜ் பண்ணுறீங்க? எல்லா வேலைலயுமே ஏதாவது ஒரு ரிஸ்க் இருக்க தான்பா செய்யும்.. அதுக்காக இப்படி வேலை மாறிக்கிட்டே போக முடியுமா? தீரா மாமா சூப்பரா சண்டை போடுவார் அப்பா.. அது அவரோட பேஷன்.. அதை விட்டுட்டு வேற வேலை பாருங்கன்னா அவரால அது எப்படிப்பா முடியும்..? எனக்கு எப்படி டாக்டராகிறது பிடிச்சிருக்கோ.. அக்காக்கு எப்படி டீச்சரா இருக்கிறது கனவோ.. அதே மாதிரி தானே பா அவருக்கும்.. அந்த வேலையை அவர் ரொம்ப நேசிச்சு செய்யறார் பா.. தீரா மாமா.. நீங்க யார் சொல்றதையும் கேட்காதீங்க.. யார் சொன்னாலும் இந்த வேலையை மட்டும் விடாதீங்க.. நீங்க மட்டும் இந்த வேலையை விட்டீங்க அதோட நான் உங்களோட பேசவே மாட்டேன்.. சொல்லிட்டேன்..”
அவள் குழந்தையை போல் உதட்டை பிதுக்கிய படி சொல்லவும் தீரன் “அதெல்லாம் விடமாட்டேன் மலரு.. முழு நேரத்துக்கும் செய்யலன்னாலும் கொஞ்ச நேரத்துக்காவது இந்த வேலையை நிச்சயமா பார்ப்பேன்..”
அவன் சொன்னதும் “தீரா மாமான்னா தீரா மாமா தான்.. சூப்பர் மாமா நீங்க.. என்னோட ஃபேவரிட்..” என்று அவன் புறமாய் ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட இங்கேயோ ஒருத்திக்கு பொறுமை பறந்து போனது.. எரிதணலாய் மூச்சுகளை விட்டவள் மலர் அழகியை விட்டால் முறைத்தே எரித்து விடுவாள் போலிருந்தது..
“மலரு வாய் அடிச்சது போதும்.. நீ போய் கிளம்புற வழியை பாரு..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இந்தர் அங்கே வந்திருந்தான்.. காலை 6 மணிக்கு எழுந்து வந்து அவனும் தீரனுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தான்..
தன் அண்ணனின் கைகட்டை பார்த்தவன் “என்ன ஆச்சு.. நீங்க எப்பவும் ரொம்ப கவனமா இருப்பீங்களே.. இதுக்கு தான் நான் சொன்னேன்.. பேசாம இந்த வேலை வேண்டாம்.. வேற ஏதாவது வேலை பார்த்துக்கோங்கன்னு.. பாருங்க சின்ன சின்ன அடி தான் பட்டுக்கிட்டு இருந்தது.. இப்ப எவ்ளோ பெரிய அடி பட்டிருக்கு” புலம்பினான் இந்தர்..
“வந்துட்டான்.. அடுத்த மொக்க பீசு..” என்று தலையில் அடித்துக் கொண்டாள் மலரழகி..
“மாமா உங்களை யாருமே புரிஞ்சுக்கல.. இந்த வீட்ல உங்களை புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆள் நான் தான்.. பேசாம என்னை உங்க பர்சனல் அட்வைஸரா வச்சுக்கோங்க.. மத்தவங்க எல்லாம் உங்களை உருப்பட விடவே மாட்டாங்க..” என்று அவள் சொல்ல அவள் தலையில் ஓங்கி தட்டினாள் மதி..
“உனக்கு வர வர ரொம்ப வாய் அதிகமாயிடுச்சு.. இப்படியே பேசிட்டு இருந்த அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.. காப்பியை குடிச்சிட்டு போய் கிளம்புற வழியை பாரு..” அவளை விரட்டினாள் மதி..
அதற்குள் தமிழ்வாணன் “அம்மா மதி.. மாப்பிள்ளை இன்னைக்கு எப்படியும் நம்மள எல்லாம் கூட்டிட்டு போக முடியாது.. அவரால வண்டி ஓட்ட முடியாது இல்ல..? அதனால..”
அவர் ஏதும் சொல்ல வர தீரன் “ஏன் மாமா..? நான் இல்லனா என்ன..? இந்தர் இருக்கான்ல? அவன் உங்க எல்லாரையும் கூட்டிட்டு போவான்..” என்றவன் இந்தரிடம் “நீ வண்டி எடுத்துட்டு மாமா அவர் வேலை செய்யற இடத்துல விட்டுட்டு மலரை அவ காலேஜ்ல விட்டுட்டு நீயும் மதியும் காலேஜுக்கு போயிடுங்க..” என்று சொல்ல அவனும் “ஓகே ணா.. நானே கூட்டிட்டு போறேன்..” என்றான்..
அப்போது மதி “என்ன தீரா.. மறந்துட்டீங்களா? நேத்துதான் உங்க வண்டி எங்க ஆஃபீஸ் வாசல்ல நின்னுடுச்சே. அந்த மெக்கானிக் பையனை வந்து எடுத்துட்டு போ சொன்னீங்களே.. இன்னும் அவங்க வண்டியை கொண்டு வந்து விடலையே..” என்க அப்போது தான் அவனுக்கு வண்டியை நேற்று அங்கேயே விட்டு வந்தது ஞாபகம் வந்தது..
“அட ஆமா இல்ல..? ஒரு நிமிஷம் இரு..” என்று அந்த கம்மியரை கைபேசி மூலம் அழைத்தவன் “ஹலோ.. ஹான்.. சரத்து.. என்ன ஆச்சு? வண்டி ரிப்பேர் ஆயிடுச்சா? வீட்டுக்கு கொண்டு வந்து விடுறியா?” என்று கேட்க அங்கே ஏதோ பதில் சொல்லவும் இணைப்பை துண்டித்தவன் “வண்டியில ஏதோ பெரிய ரிப்பேர் போல.. நாலஞ்சு நாள் ஆகும்னு சொல்றான் சரத்து..” என்றான் மதியிடம்..
“அதனால என்ன தீரா? பரவால்ல.. மலரும் அப்பாவும் பஸ்ல போயிடுவாங்க.. இந்தர் அவன் வண்டியில போகட்டும்..” என்றாள்..
“அப்ப நீ..?” என்று தீரன் கேட்க “நான் இன்னைக்கு போகல.. காலையிலேயே லீவு சொல்லிட்டேன்.. உங்களை பாத்துக்க வீட்ல எப்படியும் ஒரு ஆள் வேணும் இல்ல.. உங்க அத்தையும் இன்னிக்கு காலைல ஊருக்கு கிளம்புறாங்களே..”
அவள் சொன்னதும் தான் வீரனுக்கு நினைவு வந்தது.. “ஆமால..? அவங்க பையன் இன்னைக்கு வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு.. ஆனாலும் நானே பார்த்துக்கறேன் மதி.. எனக்காக நீ லீவு எல்லாம் போட வேண்டாம்.. நீ இந்தரோட காலேஜுக்கு போயிட்டு வா..” என்றான்..
“நான் லீவு சொல்லியாச்சு.. இனிமே அதை பத்தி பேசாதீங்க நீங்க.. அமைதியா இருங்க.”
அதற்குள் மலரழகி “நீ வேணா காலேஜ் போயிட்டு வா கா.. நான் லீவு போட்டு இன்னைக்கு மாமாவை பாத்துக்கறேன்..” என்று சொல்ல “ஒன்னும் தேவை இல்ல.. ஒழுங்கா காலேஜ் போய் படிக்கிற வழியை பாரு.. நான் ஒரு நாள் இல்ல நாலு நாள் காலேஜ் லீவு போட்டு இருக்கேன். அவ்வளவு நாள் நீ லீவு போட்டா உனக்கு நிறைய லெசன்ஸ் போயிரும்.. நீ ஒழுங்கா காலேஜூக்கு போ.. என் புருஷனை எனக்கு பாத்துக்க தெரியும்..”
அவள் தீரனை தன் புருஷன் என்று சொல்லும்போது அவள் குரலில் ஒலித்த அந்த உரிமையான பாவனை தீரனுக்குள் ஒரு அழகிய ஆனந்த உணர்வை தூண்டி விட அவன் இதழில் பெரிதாய் ஒரு புன்னகை விரிந்தது..
மதி சொன்னதை கேட்ட தீரன் “சரி.. அப்போ இந்தரோட மாமா போகட்டும்.. இந்த வயசுல மாமா பஸ்ல எல்லாம் அலைய வேண்டாம்.. இந்தர்.. மாமாவை அவர் வேலை செய்ற இடத்துல விட்டுட்டு நீ அப்படியே காலேஜுக்கு போ” என்றான் தீரன்..
அப்போது மலரழகி “ஹூம்.. இப்ப மட்டும் என் வண்டி என்கிட்ட இருந்தா நான் அதுல டர்ன்னு ஏறி போயிருப்பேன்.. பஸ்ல போகணும்னு நினைச்சாலே கஷ்டமா இருக்கு..”
சலிப்பாய் அவள் சொல்ல அதை பார்த்த தீரன் “என்ன..? உனக்கு உன் வண்டி வேணுமா? சரி இரு..” என்றவன் இந்தரை பார்த்து “இந்தர் உன் வண்டியில மலரை அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் விடு.. அவ அங்கருந்து அவ வண்டியை எடுத்துட்டு காலேஜூக்கு வரட்டும்.. நீ வீட்டுக்கு வந்து மாமாவை கூட்டிகிட்டு உன் வண்டியில கிளம்பு.. சொல்றது புரியுதா?”
தீரன் சொல்லவும் “ம்ம்.. இவனோட வண்டியில போகணுமா? ஐயோ.. எல்லாம் என் தலையெழுத்து.. ஆனா எனக்கு என் வண்டி வேணுமே.. வேற வழி இல்ல.. போய்ட்டு வந்துருவோம்..” முகத்தை சுருக்கியபடி உள்ளுக்குள் புலம்பினாள் மலரழகி..
தொடரும்..