லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 43
“இங்க பாரு இந்தர்.. உன் காலேஜ்ல உன் கூட படிக்கிற பொண்ணுங்க கிட்ட நீ எப்படி நடந்துக்கிட்டாலும் அது உன்னோட காலேஜோடயே போய்டும்.. அங்கயும் இப்ப மதி இருக்கறதுனால நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும்னு உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. அப்படியே நீ இதுக்கு முன்னாடி நடந்துக்கிட்ட விதத்தினால மதிக்கு ஏதாவது பிரச்னைன்னாலும் அதை பார்த்துக்க நான் இருக்கேன்.. ஆனா மலர் விஷயம் அப்படி இல்லை.. மலரை மாமா என்னை நம்பி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்கி இருக்கார்.. அவளுக்கு ஏதாவது தப்பா நடந்துச்சுன்னா அதுக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான்.. அதுவும் உன்னால அவளுக்கு ஏதாவது தப்பு நடந்துச்சுன்னா அது ரொம்ப பிரச்னை ஆயிடும்.. நான் சொல்றது உனக்கு புரியுதா?”
தீரன் சொன்னதைக் கேட்டு சற்று முன் தான் நடந்து கொண்டதை தீரன் கவனித்து விட்டான் என்று இந்தருக்கு புரிந்தது..
எச்சில் விழுங்கிய படி “அது வந்துண்ணா..” என்று அவன் ஏதோ சொல்ல வாய் எடுக்க தன் கையை தூக்கி காட்டி அவனை நிறுத்த சொன்ன தீரன் “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்றது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. எவ்வளவு தூரம் நீ அதை புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறியோ அவ்வளவு உனக்கு நல்லது.. பார்த்து நடந்துக்க.. உன்னால மதிக்கோ மலருக்கோ மாமாக்கோ எந்த பிரச்சினையும் வரக்கூடாது..”
“இல்லண்ணா.. அப்படியெல்லாம் எதுவும் வராது.. நானும் மலரும் ஃப்ரெண்டா தான் ணா..”
அவனை முடிக்க விடாமல் இடையில் புகுந்த தீரன் “எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் இந்தர்.. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரிஞ்சிருக்கும்.. புரிஞ்சு நடந்துக்க.. அவ்வளவுதான்.. சரி போ.. உனக்கும் பசி இருக்கும்.. போய் ஏதாவது சாப்பிடு..”
தம்பியை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு தன் கையால் நெற்றியை நீவி விட்டபடி கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தான் தீரன்..
அதன் பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மாலை சிற்றுண்டி உண்ணும் போது இந்தர் மலரின் பக்கம் கூட திரும்பவில்லை.. வேகமாக உண்டு விட்டு சிற்றுண்டியை செய்து கொடுத்த தன் அண்ணிக்கு அதன் அபிரிமிதமான சுவைக்கான பாராட்டை தந்துவிட்டு தன் அறையில் போய் அடைந்து கொண்டான்..
அப்போது இந்தருடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.. யார் என்று எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தே போனான்..
“இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம் இவன் எதுக்கு எனக்கு கால் பண்றான்? அட்டென்ட் பண்ணி என்னன்னு கேட்டு வைப்போம்.” என்று எண்ணியபடி அந்த கைபேசி அழைப்பை ஏற்று “டேய் நீ எதுக்குடா எனக்கு ஃபோன் பண்ண..? அன்னைக்கு எங்க கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்கிட்டது பத்தலையா?”
இந்தர் ஆத்திரத்தோடு கேட்க அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருந்த சேகர் “ஏன்டா.. அந்த வீட்டிலேயே இருந்துக்கிட்டு ரெண்டு பேரும் நடிச்சு கொட்டிக்கிட்டு இருக்காங்க.. அவங்களை பார்த்தாலே தெரியலையா? அவங்க நடிக்கிறாங்கன்னு.. இன்னுமாடா அவங்களை நம்பிகிட்டு இருக்கீங்க..? அவங்க கிட்ட ஏன் நடிக்கிறீங்கன்னு கேட்டு ரெண்டு பேரோட நடிப்பையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இவ்வளவு நாள் உங்க ஆளுங்க கூட எப்படி சேரலாம்னு பிளான் பண்ணிட்டு இருப்பீங்கன்னு பார்த்தா என்னடா ஒன்னும் செய்யாம அந்த வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கீங்க..? உனக்கு தான் ஒன்னும் விளங்கல.. அந்த மலர் பொண்ணுமா இவங்க நடிப்பை எல்லாம் நம்பிகிட்டு இருக்குது..”
“டேய்.. வேண்டாம்.. நீ நேரில இருந்தா உன்னை நான் என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது.. அவங்களுக்குள்ள காதல் இல்லைன்னு உனக்கு தெரியுமாடா? அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க.. எனக்கு இது தெரியும்.. அவங்க ரெண்டு பேரையும் பிரிக்கணும்னு நினைக்கிற இந்த எண்ணத்தை எல்லாம் இதோட விட்டுட்டு மரியாதையா உன் வேலையை போய் பாரு.. நீ எவ்ளோ பேசினாலும் என் மனசை மாத்த முடியாது.. அவங்க என் அண்ணி.. என் அம்மாக்கு சமம்.. இனிமே அவங்கள பத்தி ஏதாவது தப்பா பேசினே நீ இருக்கிற இடம் தேடி வந்து உன் வாயை ஒடச்சிடுவேன் டா..”
“என்னடா மிரட்டுற? இங்க பாரு.. நீ வேணா அவ உங்க அண்ணி.. அம்மா மாதிரின்னு சொல்லி எதுவும் பண்ணாம இருந்துக்க.. ஆனா நான் அவங்க ரெண்டு பேரையும் பிரிப்பேன்.. அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு நெனச்சு நெனச்சு கதறுற மாதிரி அவங்கள துடிக்க வப்பேன்டா.. அவள காதலிச்ச ஒரே பாவத்துக்காக என் வாழ்க்கையையே அழிச்சவ அவ.. அவளை நிம்மதியா வாழ விட்ருவேனா..? ஆமா.. இன்னும் உங்க அண்ணியோட அப்பாக்கு இவங்க நடிக்கிற விஷயம் எல்லாம் தெரியாதுல்ல? அப்புறம் அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீ உன் அன்பு அண்ணியையும் மலரு அவளோட ஆசை மாமனையும் லவ் பண்ண விஷயம் கூட அவங்க அப்பாக்கு தெரியாது இல்ல.. அவருக்கு எல்லா விஷயத்தையும் சாட்சியோட சொல்லி தீரனும் மதியும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கிறாங்கன்னு ப்ரூவ் பண்ணி உங்க குடும்பத்தையே கதற வைக்கல.. என் பேரு சேகர் இல்லடா..”
“டேய்.. அண்ணி தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க இல்ல..? அப்புறம் அவங்களை விட்டு விலகிட வேண்டியதுதானே..? இப்ப அவங்க என் அண்ணன் கூட வாழ்ந்துட்டு இருக்காங்க.. உனக்கு எதுக்குடா இந்த ஈன பொழப்பு? இதை பாரு.. அண்ணன் அண்ணிக்கு எதிரா நீ ஏதாவது செஞ்சேன்னு எனக்கு தெரிஞ்சதுன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. அதோட கொன்றுவேன்டா உன்னை..”
அவன் சொன்னதை எல்லாம் அலட்சியப்படுத்திய சேகர் “என்னடா மிரட்டுறியா? அதெல்லாம் உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது.. நான் சொன்னதை முடிச்சிட்டு அப்புறம் உன்னோட பேசறேன்டா..” சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டிருந்தான் அவன்..
அவன் சொன்னதைக் கேட்ட இந்தருக்கோ கலக்கமாய் போனது.. தமிழ்வாணனுக்கு விஷயம் தெரிந்தால் அவர் உடைந்தே போவார்.. தன் பெண் நாடக கல்யாணம் செய்து தனக்கு தாலி கட்டியவனோடு மனைவியாக நடித்துக் கொண்டிருக்கிறாள் என்பது எந்த தந்தைக்கும் பெரிய இடி தானே..
யோசித்து யோசித்து தலை வலிப்பது போல் இருந்தது அவனுக்கு.. ஏற்கனவே தீரனுக்கு கையில் அடிபட்டிருக்கும் இந்த நேரத்தில் மதி அதை எண்ணி கவலையில் இருக்க இந்த விஷயத்தை சொல்லி மேலும் அவர்களை கவலை படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தான் அவன்..
சேகரை எப்படி சமாளிப்பது என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தும் அவனுக்கு எந்த யோசனையும் தோன்றவில்லை.. எப்படியாவது தமிழ்வாணனுக்கு விஷயம் தெரியாமல் அந்த சேகரை அடக்கி வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவனுக்கு அப்போது தான் மலரின் ஞாபகம் வந்தது..
“அதான் கரெக்ட்.. மலர் இதுக்கு ஏதாவது அதிரடியா நல்ல ஐடியாவா கொடுப்பா.. பேசாம அவ கிட்ட விஷயத்தை சொல்லி இதுக்கு ஏதாவது பண்ண சொல்லலாம்..”
இப்படி எண்ணிக்கொண்டு சட்டென தன் அறையில் இருந்து வெளியே போக கால் எடுத்து வைத்தவனுக்கு மாலையில் தன் அண்ணன் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது..
“மலரோட பேசுனா அண்ணன் வேற முறைப்பாரு.. அவருக்கு ஏற்கனவே இருக்கிற கவலை எல்லாம் போதும்.. சேகரை பத்தி வேற சொல்லி அவரை மேல மேல டென்ஷன் படுத்த வேண்டாம்.. இதை பத்தி பேசினா அவரும் அண்ணியும் நடிக்கிறாங்கங்கறது எனக்கும் மலருக்கும் தெரிஞ்சிருச்சுன்னு அதை நினைச்சு வேற கவலைப்படுவாரு.. நாங்க மறுபடியும் பழைய படி ஏதாவது ஆரம்பிச்சுருவோமோன்னு டென்ஷன் ஆவாரு.. வேண்டாம் இதை நம்மளே டீல் பண்ணிக்கலாம்.. ஆனா என்ன செய்யறது..?”
வெகு நேரம் அப்படியே யோசித்த படி அமர்ந்திருந்தவன் அதன் பிறகு இரவு 12 மணிக்கு மேல் எல்லோரும் உறங்கிய பிறகு மலரை அழைத்து பேசுவோம் என்று முடிவு செய்து நள்ளிரவு வருவதற்காக காத்திருந்தான்..
நள்ளிரவு 12 மணி அளவில் மெதுவாக ஓசை படுத்தாமல் தன் அறை கதவை திறந்து கொண்டு படி இறங்கி மலரின் அறை வாசலுக்கு சென்றவன் மெதுவாக “மலரூ..” என்று ரகசிய குரலில் அழைத்தபடி அவளின் அறை கதவை திறக்க அதே நேரம் பின் இருந்து தீரனின் குரல் கேட்டது..
“இந்தர்ர்ர்ர்..” தீரன் அழைப்பை கேட்டு வெடவெடத்து போனான் இந்தர்..
“டேய் இந்தரூ.. கரெக்டா வான்டடா வந்து சிக்கிட்டியேடா இவர் கிட்ட..” கண்ணை இறுக்க மூடி திறந்தவன் தீரன் பக்கம் திரும்பி மாந்தோப்பில் மாங்காய் திருடிவிட்டு மாட்டிக்கொண்ட சிறுவன் போல திரு திருவென முழித்தபடி “அண்ணா அது வந்து..” ஏதோ சொல்ல வந்தவனை பேசவும் விடாது அவன் கையை பிடித்து தரதரவென இந்தருடைய அறைக்கே இழுத்துப் போனான் தீரன்..
கதவை மூடிவிட்டு அவனுக்கு நேராக வந்து நின்றவன் அவனை எரிக்கும் பார்வை பார்த்த படி அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறை விட்டிருந்தான்..
கன்னத்தை கையால் பிடித்தபடி கலங்கி போய் அவனை பார்த்திருந்தான் இந்தர்..
“அண்ணா.. சாரி அண்ணா..”
“ச்சீய்.. வாயை மூடு.. சாயங்காலம் தானடா படிச்சு படிச்சு சொன்னேன்.. அந்த புள்ள இருக்கிற பக்கம் திரும்பி பார்க்காதன்னு.. என்ன தைரியம் இருந்தா நைட் 12 மணிக்கு அவங்க ரூம் கதவை போய் திறப்ப.. அந்த டைமுக்கு நல்லவேளை நான் வந்துட்டேன்.. ஒருவேளை நான் வரலைன்னா நீ என்னடா பண்றதா இருந்த.. நீ ஏண்டா இப்படி ஆயிட்டே இந்தரு.. நினைச்சு பார்க்கவே அருவருப்பா இருக்குடா.. என் தம்பியாடா நீ? உன்னை பத்தி எவ்வளவு பெருமையா நினைச்சிட்டு இருந்தேன்.. ஒவ்வொரு நாளும் அந்த எண்ணத்தை தரை மட்டமாக்கி குழி தோண்டி புதைக்கிறியேடா.. அதுவும் அவ பேரை கூப்ட்டுக்கிட்டே உள்ள போற.. என்னடா நெனச்சிட்டு இருக்க நீ.. நீ கூப்பிட்ட சத்தம் கேட்டு மாமா மட்டும் எழுந்து இருந்தாருன்னா அங்க என்ன நடந்திருக்கும்ன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.. அதுக்கப்பறம் அவர் முகத்தில நான் எப்படிடா முழிக்க முடியும்..?”
ஏற்கனவே இந்தர் செய்த வேலைக்கு அவன் அர்ச்சித்துக் கொண்டிருக்க மேலும் மேலும் வாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டான் இந்தர்..
“அண்ணா தமிழ்வாணன் அங்கிள் நைட் ஆனா தூங்குறதுக்கு மாத்திரை போடுறாரு ண்ணா.. அது தெரிஞ்சதுனால தான்..” ஆடு தானே தலையை கொண்டு போய் பலிபீடத்தில் வைத்தது..
“டேய்.. உன்னை.. அவர் தூங்கறாருன்னா அந்த ரூமுக்கு போய் நீ என்ன வேணா செய்வியா.. டேய் இந்தர்.. வேணாண்டா என் கோபத்தை மேலே மேலே கிளறாத.. இனிமே அவ பக்கம் நீ பார்த்தா கூட உன்னை இந்த வீட்டை விட்டு நிரந்தரமா வெளியில அனுப்ப வேண்டி இருக்கும்.. சொல்லிட்டேன்.. மாமாவையும் மலரையும் இந்த வீட்ல நிரந்தரமா இருங்கன்னு சொல்லி நான் கூட்டிட்டு வந்து இருக்கேன்.. என் வாயால இந்த வீட்டை விட்டு அவங்களை போக சொல்ல முடியாது.. அவங்களுக்கு உன்னால ஏதாவது பிரச்சனைனா ஒன்னை தான் இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டி இருக்கும்.. பார்த்து நடந்துக்க..” அவனை தீவிரமாய் முறைத்து விட்டு அந்த அறை கதவை படார் என சாத்திவிட்டு வெளியே சென்றவனை பயத்தில் எச்சில் விழுங்கி பார்த்தபடியே நின்று இருந்தான் இந்தர்..
தொடரும்..