லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 44
“ஐயோ இந்தரு.. உனக்கு நேரமே சரியில்லடா.. இப்படி வான்டடா போய் சிக்கற… இப்ப என்ன பண்ணுறது?” மறுபடியும் சேகர் பற்றிய கவலைகள் அவன் மண்டையை குடைந்தது..
திடீரென ஒரு யோசனை தோன்ற “இது ஏன் எனக்கு முன்னாடியே தோனாம போச்சு..? தமிழ்வாணன் அங்கிள் எப்படியும் நைட் தூக்க மாத்திரை போட்டு தான் படுத்து இருப்பார்.. இப்ப என்ன சத்தம் கேட்டாலும் எழும்ப மாட்டார் இல்ல..?” என்று எண்ணி அவன்
சட்டென தன் கைபேசியை எடுத்து மலருக்கு அழைத்தான்.. அங்கே மலரின் கைபேசி அடித்துக் கொண்டே இருக்க அவள் கைப்பேசியை எடுக்கவே இல்லை.. மேலும் இரண்டு முறை அழைத்தும் அவள் கைபேசி அழைப்பை ஏற்கும் வழியாய் காணவில்லை..
“இவ மத்த டைம்ல 24 மணி நேரமும் கையில் ஃபோனை வச்சுக்கிட்டு அதை நோண்டிக்கிட்டே இருப்பா.. ஆனா நான் ஃபோன் பண்ணும் போது மட்டும் எடுக்க மாட்டா..” தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் அவன்..
அப்போது அவன் கைபேசிக்கு மலரிடமிருந்து பதில் அழைப்பு வர ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டவன் “ஹலோ மலரு.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..” என்க “டேய்.. ராத்திரி 12 மணிக்கு தூங்க விடாம தூக்கத்தை கலைச்சு எழுப்பி அப்படி என்னடா தலை போற விஷயம்..? அப்படியே உன் தலையே போனாலும் எனக்கு கவலை இல்லை.. தூக்கம் தூக்கமா வருது டா.. சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லி தொல.. இப்படி மறுபடி மறுபடி ஃபோன் பண்ணி என் தூக்கத்தை மொத்தமா கலைச்சு விட்டுட்டியேடி.. இருடா.. நாளைக்கு காலைல உன்னை கவனிச்சுக்கறேன்..”
அவள் தூக்கம் கலைந்து கோபத்தில் கத்த “ஏய் மலரு.. நெஜமாவே தலை போற விஷயம் தான்.. அந்த சேகர் எனக்கு ஃபோன் பண்ணான்..”
அவன் சொன்ன விஷயத்தை கேட்டு படக்கென விழிகளை விரித்தவள் “என்ன சேகரா?” என்றாள் அதிர்ந்த குரலில்..
அவளுக்கு இருந்த அத்தனை தூக்கமும் கலைந்து காணாமல் போயிருந்தது.. அதன் பிறகு சேகர் அவனிடம் சொன்ன விஷயத்தை அவளிடம் அவன் சொல்ல “இவன் என்னடா விக்ரமாதித்தன் வேதாளம் மாதிரி நம்ம முதுகுலையே தொங்கிட்டு இருக்கான்.. சரி.. இப்ப என்ன பண்ணலாம் சொல்லு..”
“அடியேய்.. எனக்கு எதுவும் தோணாம தான் உன்னை கேட்கலாம்ன்னு ஃபோன் பண்ணேன்.. நீ என்னடான்னா என்னையே கேக்கற? இது நடுவுல உன்னை பார்த்து பேசலாம்னு கீழ இறங்கி வந்து அண்ணா கிட்ட வேற மாட்டிக்கிட்டேன்..”
“சரி அதை விடு.. அதை நான் சமாளிச்சுக்கிறேன். இப்போ அந்த சேகரை சமாளிக்க வேண்டியது தான் முதல் வேலை.. அவன் உங்க அப்பா கிட்ட இவங்க ரெண்டு பேரும் நடிச்சிட்டு இருக்காங்கன்னே ப்ரூவ் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. என்ன பண்ண போறான்னு தெரியலையே.. ஏதாவது குண்டக்க மண்டக்க செஞ்சு வச்சு உங்க அப்பா..”
“ஐயையோ ஆமாண்டா.. எங்க அப்பா கொஞ்சம் சென்ஸிட்டிவ் எமோஷனல் டைப்.. அவன் அவரு நம்புற மாதிரி எதாவது ப்ரூஃப் காமிச்சான்னா அவர் உடைஞ்சே போய்டுவார்.. ஆமா.. அவன் என்ன ப்ரூஃப் என்று ஏதாவது சொன்னானா..?”
“இல்லடி.. எனக்கு இருந்த கோவத்துல அவனை கன்னா பின்னான்னு திட்டிட்டேன்.. அவனும் நான் அவனுக்கு ஹெல்ப் பண்ண போறதில்லன்னு தெரிஞ்சதும் அண்ணா அண்ணி சைடு தான் இருக்கேன்னு தெரிஞ்சதும் அதுக்கு மேல எதுவும் சொல்லல.. அதை பத்தி எதுவும் பேசாம ஃபோனை கட் பண்ணிட்டான்..”
“அடேய் மங்குனி.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடா? அவன் கிட்ட பேசுற மாதிரி பேசி என்ன பண்ண போறான்னு தெரிஞ்சுக்காம இப்படி அவசரப்பட்டு குட்டையை குழப்பி விட்டிருக்க..?”
“சரி பரவால்ல.. விடு.. இப்போவும் ஒன்னும் கெட்டு போகல.. எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. அதை செஞ்சோம்னா ஆடு நிச்சயமா நம்ம வலையில சிக்கிரும்..” இப்படி சொன்னவள் அவளின் யோசனையை சொல்ல இந்தருக்கும் அது சரியாகத்தான் பட்டது..
அடுத்த நாள் காலை தமிழ்வாணன் குளித்துக் கொண்டிருக்கும் போது மலரழகி தன் கைபேசியில் இருந்து சேகருக்கு அழைப்பு எடுத்தாள்..
அவள் அழைத்ததும் உடனே அந்த அழைப்பை ஏற்ற சேகர் அழைத்தது யார் என்று கேட்க தான் மலரழகி என்று சொன்னதும் சட்டென “மலரா.. நீ எதுக்கு எனக்கு கால் பண்ணி இருக்கே..? என்ன..? அந்த இந்தர் பையன் மாதிரியே நீயும் என்னை மிரட்டுறதுக்காக கால் பண்ணியா? அவன் உன்கிட்ட விஷயத்தை சொல்லி இருப்பான்.. உடனே நீ அவனை மாதிரியே என்னை திட்ட போறியா?”
எடுத்த உடனே சேகர் இப்படி கேட்க “ஏய்.. அவசர குடுக்கை.. முதல்ல நான் என்ன சொல்றேன்னு கேளு.. இந்தர் என்கிட்ட விஷயம் சொன்னான் தான்.. ஆனா நான் அவனை மாதிரி கிடையாது.. இன்னும் கூட என் மாமா மேல எனக்கு விருப்பம் இருக்கு.. இப்போதைக்கு அவரை எப்படியாவது எங்க அக்கா கிட்ட இருந்து பிரிச்சு விட்டுட்டா போதும்.. அதுக்கப்பறம் இப்ப அவங்க ஒத்துக்கலன்னாலும் எப்படியாவது கொஞ்ச நாளைக்கு அப்பறம் அவங்களை சமாதானப்படுத்தி தீரா மாமாவை கட்டிக்குவேன்.. ஆனா இந்தர் கிட்ட நான் இதை பத்தி எல்லாம் சொல்லல.. அவனுக்கு தெரிஞ்சா உன்னோட சேர்த்து எனக்கும் ஆப்பு வச்சிருவான்.. அது சரி.. எங்க அக்காவையும் மாமாவையும் பிரிக்கிறதுக்கு நீ எதோ செய்யப் போறேன்னு சொன்னியாமே.. என்ன செய்யப் போற?”
அவள் கேட்கவும் “ஏன்..? அந்த இந்தர் பையன் அதை சொல்லலையா? உங்க அப்பாகிட்ட உண்மையை சொல்லி அதை ப்ரூவும் பண்ணிட்டா தன்னோட பொண்ணு இன்னொருத்தனோட பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு அவன் கூட இருக்கிறதை எந்த அப்பனும் விரும்ப மாட்டார்.. உடனேவே உங்க அக்காவை அந்த தீரன் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போய்டுவார்.. அதுக்கப்புறம் நீ உன் படிப்பு எல்லாம் முடிச்சுட்டு நல்ல வேலையில செட்டில் ஆனப்புறம் தீரன் கிட்ட உன் காதலை சொல்லி அவனோட சேர்ந்துக்கலாம்.. என்ன நான் சொல்ற இந்த ஐடியா ஓகே தானே..?”
“எல்லாம் ஓகே தான்.. ஆனா நீ சொல்ற விஷயத்தை கேட்டு எங்க அப்பா அதை நம்பணுமே.. அவர் எப்படி நம்புவாரு? அது மட்டும் இல்லாம அவர் ஒருவேளை நம்பிட்டாருன்னா அவருக்கு ஏதாவது ஆயிடுமோனு எனக்கு பயமா இருக்கு..”
“இங்க பாரு.. ஒன்னு கிடைக்கணும்னா இன்னொரு விஷயத்துல நம்ம ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்.. அதெல்லாம் உங்க அப்பாக்கு ஒன்னும் ஆகாது.. அப்படியே ஏதாவது ஆனாலும் அதுக்கு காரணம் உங்க அக்கா தானே தவிர நீ கிடையாது.. என்னைக்காவது ஒரு நாள் உங்க அப்பாக்கு இந்த விஷயம் தெரியாமயா போக போகுது? தெரியறப்போ எப்படி இருந்தாலும் அவருக்கு அது ஷாக் தானே..?”
“அட பரங்கி மண்டையா.. எங்கப்பாவை போட்டு தள்ளறதுக்கா ப்ளான் பண்ணற? இருடா.. எல்லாம் நல்லபடியா முடியட்டும்.. எங்க அக்காவும் மாமாவும் புருஷன் பொண்டாட்டியா ஒன்னா வாழ ஆரம்பிக்கட்டும்.. அதுக்கப்புறம் உனக்கு வெக்கறேன்டா வேட்டு..”
மனதிற்குள் அவனை கரித்து கொட்டியவள் “நீ சொல்றது சரிதான்.. ஆனா எங்க அப்பா நம்புற மாதிரி எப்படி சொல்ல போற? அவரு அவர் பொண்ணு மதியை பத்தி யார் எது சொன்னாலும் நம்ப மாட்டார்.. ஏன் நானே போய் எங்க அக்கா தீரா மாமாவோட சேர்ந்து நடிக்கிறான்னு சொன்னா என்னை அறைஞ்சிடுவாரு.. அவர் பொண்ணு மேல அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கு.. இதுல நீ சொல்றதை அவர் எப்படி நம்புவாரு?”
அவள் துருவி துருவி கேட்க சேகரும் “அதுவா..? நான் முன்னாடியே சொன்னேன் இல்ல.. அது மாதிரி தான் செய்ய போறேன்.. அந்த தீரன் மதி இருக்கிற ரூம்க்கு நைட் டைம்ல போய் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழலன்னு ஃபோட்டோ எடுத்து ப்ரூவ் பண்ணிட்டா அதுக்கு அப்புறம் உங்க அப்பா நம்பாம இருக்க வாய்ப்பே இல்லை..”
அவன் பேசியதைக் கேட்டு அவளுக்கு பற்றி கொண்டு வந்தது.. “எவ்வளவு கேவலமான மனிதனாய் இருக்கிறான் இவன்..!!” என்று எண்ணியவள் வேறு வழி இன்றி பல்லை கடித்துக் கொண்டு “சரி.. உன்கிட்ட இருந்து வர்ற நல்ல செய்திக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..” என்று சொல்லி அந்த கைபேசி இணைப்பை துண்டித்தவள் தன் கைபேசியை படாரென கட்டில் மேல் விட்டெறிந்தாள்..
ஆனால் அவ்வளவு நேரமும் அவள் பேசியதை அவள் அறைக்கு வெளியே அவளும் தன் தந்தையும் எழுந்து விட்ட அரவம் கேட்க அவளுக்கும் தன் தந்தைக்கும் காபி கொண்டு வந்து கொடுக்கலாம் என்று காபி தட்டுடன் வந்த மதி அவள் பேசிய முதல் சில வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போய் அப்படியே கதவின் பின்னால் மறைந்த படி அவள் பேசிய சம்பாஷனை முழுவதையும் கேட்டிருந்தார்..
“ஐயோ மலர்.. ஏண்டி என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற..? நான் தீரனை உயிருக்குயிரா விரும்புறேன்டி.. அவனை விட்டு என்னால இனிமே இருக்க முடியாது.. அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவர் உயிருக்கு ஆபத்தாயிடும்.. நீ ஏண்டி இப்படி இருக்க? உனக்கு என்னை பத்தி கவலை இல்லை.. தீரனை பத்தி கவலை இல்லை.. சரி.. அப்பாவை பத்தியும் கவலை இல்லையா? உனக்கு உன் ஆசை மட்டும் தான் முக்கியமா? ஐயோ கடவுளே.. எப்படி இவளை சமாளிக்கிறதுன்னு தெரியலையே.. இவளோட இதை பத்தி எவ்வளவு பேசி இருக்கேன்.. ஆனாலும் இப்படி பிடிவாதமா இருக்காளே..”
விழிகளில் நீர் வழிந்தோட என்ன செய்வது என்று தெரியாமல் கவலையும் குழப்பமும் நிறைந்த முகத்தோடு எடுத்து வந்த காபியை எடுத்துக் கொண்டு மறுபடி சமையலறைக்கே சென்று இருந்தாள் மதி..
சமையலறை மேடையில் அந்த ட்ரேவை கையில் ஜீவனற்று போனது போல் தள்ளிவிட்டு அந்த மேடையின் கீழே சரிந்து தரையில் அமர்ந்தவள் தலையில் கை வைத்த படி தனக்குள்ளேயே அழுது கரைய தொடங்கினாள்..
அப்போது சமையலறை வாயிலில் ஏதோ அரவம் கேட்கவும் சட்டென விழிகளை துடைத்து கொண்டு மேடையின் பக்கம் ஏதோ வேலை செய்வது போல் திரும்பி நின்று கொண்டாள்..
தீரன் தான் அங்கு வந்திருந்தான்.. “மதி.. கொஞ்சம் காபி தர்றியா? தலை வலிக்குது..” என்றவன் அங்கே மேடை மேல் கீழே காபி சிந்தி இருக்க அரை குவளை காபி இருந்ததை பார்த்து “என்ன ஆச்சு? காபி கீழ எல்லாம் சிந்தி இருக்கு.. ஏதாவது ப்ராப்ளமா உனக்கு?” கேட்டவன் அவள் அருகில் வந்து அவளை பார்க்க அவளோ தலையை குனிந்து அவனிடமிருந்து தன் முகத்தை மறைத்தாள்..
ஆனால் அவனுக்கு ஏதோ தவறாய் தெரிய அவள் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தி பார்த்தவன் அவள் கலங்கிய விழிகளை கண்டு அதிர்ந்து போனான்..
தொடரும்..