லவ்.. லவ்.. எத்தனை வயது? – 45
மதியின் கவிழ்ந்திருந்த முகத்தை நாடி பற்றி நிமிர்த்திய தீரன் அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து பதறிப் போனான்..
“ஹேய் மதி.. என்ன ஆச்சு? உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.. என்னம்மா?”
அவன் குரலில் அக்கறை பொங்கி வழிய அவளை ஆழ்ந்து பார்த்திருந்த விழிகளை கண்டவளுக்கோ அதற்கு மேல் தனக்குள் அவனுக்கு தெரியாமல் புதைத்து வைக்க நினைத்த துக்கத்தை அடக்கி வைக்க முடியவில்லை..
உள்ளிருந்து வேதனை பொங்கி எழ அவன் வயிற்றுப் பகுதியில் இருந்த சட்டையை இறுக்கமாய் பிடித்து இழுத்து அவன் மார்பில் தன் நெற்றி சாய்த்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்..
“என்னடா மதி.. ஏன்டா இப்படி அழுற? எனக்கு பயமா இருக்கு மதி.. என்ன ஆச்சுன்னு சொல்லு.. அழாதமா ப்ளீஸ்..”
அவள் தலையை வருடியபடி கலக்கம் நிறைந்த குரலில் கேட்டுக்கொண்டு இருந்தான் தீரன்..
அவள் அழுகையில் அவனின் இதயம் ஆழமான வலி கொண்டது.. அவளோ கொஞ்சம் கொஞ்சமாக மனம் திறந்து தன் கவலைகளை எல்லாம் அவன் மார்பில் கொட்டி தீர்ப்பவள் போல் விம்மி வெடித்து அழ தொடங்கி இருந்தாள்..
அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.. அவள் முகத்தை மறுபடியும் நிமிர்த்தியவன் “என்னன்னு சொல்லுமா.. ஒரே பதறி போய் கிடக்கேன்.. என்னன்னு சொல்லாம அழுதுகிட்டே இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது? யாருக்காவது உடம்பு சரியில்லையா? ஒருவேளை மாமாக்கு ஏதாவது..”
“இல்லை” என்று அவசரமாக இடவலமாய் தலையை ஆட்டி மறுத்தவள் “ரொம்ப கஷ்டமா இருக்கு தீரா.. என்னால தாங்கவே முடியல.. என் மனசுல இருக்குற உணர்வுகளை வெளிக்காட்ட முடியாம இப்படி எவ்ளோ நாளைக்கு நடிக்க வேண்டி இருக்குமோன்னு நெனச்சா உயிரே வெறுத்து போகுது தீரா..”
அவனிடம் தன் மன வலியை மொத்தமாய் கொட்ட தொடங்கினாள்..
“என்னால இப்படி பொய்யா நடிக்க முடியல.. எனக்கு உள்ளுக்குள்ள உண்மையா என்ன உணர்றேனோ அதை அப்படியே வெளில கொட்டி தீர்க்கணும்னு தோணுது.. எப்பவும் போல ஒரு அமைதியான வாழ்க்கை வாழணும்னு ஆசையா இருக்கு தீரா.. ஆனா அப்படி பண்ண முடியாம இந்த பொண்ணு என்னென்னவோ வேலைகள்லாம் பண்ணி வச்சிருக்கா.. இப்படி என் மனசை கொன்னுட்டு நடிக்கிறது எனக்கு வலியை மட்டும் தான் கொடுக்குது.. அவளோட கனவு என்னோட கனவு இதை எல்லாம் அவ முழுசா நிறைவேத்தற வரைக்கும் பல்லை கடிச்சுக்கிட்டு என் மனசுல இருக்குறத வெளியில காட்டாம இப்படியே நடிச்சிட்டு போகலாம்னு பாத்தா இந்த பொண்ணு அதுக்கு வழி விட மாட்டா போல இருக்கு..”
“ஏன் அப்படி நினைக்கிற மதி? என்ன ஆச்சு?”
“அவளைப் பார்த்துப் பார்த்து வளர்த்தேன் தீரா.. எங்கம்மா இல்லாததனால அவ தப்பான பொண்ணா வளந்துட்டான்னு யாரும் சொல்லிட கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேன்.. ஆனா இப்ப அவ எங்க தடம் மாறிடுவாளோன்னு எனக்கு பயமா இருக்கு தீரா.. அவ போகற போக்கே சரியில்ல.. அவ இந்த அஞ்சு வருஷம் படிப்பை முடிக்கறதுக்குள்ள என் மனசு கெடந்து தவிக்கிற தவிப்புல என் உயிரே போயிடுமோன்னு பயமா இருக்கு தீரா..”
விம்மி வெம்மி வெடித்தவளின் கன்னத்தை தாங்கி “மதி மதி மதி.. இங்க பாரு.. நான் சொல்றதை கேளு.. எனக்கு உன் பயம் புரியுது.. அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு தடவை படிப்பிலிருந்து கவனத்தை சிதற விட்டு வேற ஏதோ நினைப்புல தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணி இருக்கா.. அது ஓரளவுக்கு சரி பண்ணி அவளை மறுபடியும் சரியான பாதையில் போக வச்சாச்சு.. ஆனா இந்த அஞ்சு வருஷம் அவ படிப்புக்கு எந்த பாதகமும் வராம நல்லபடியா முடியணுமேன்னு உனக்கு கவலையா இருக்கு.. அது எனக்கு புரியுது.. அது மட்டும் இல்லாம அவளை நம்ப வைக்கறதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியா இப்படி நடிக்கிறது உனக்கு எவ்வளவு பெரிய தண்டனைன்னு எனக்கு தெரியும்..”
அவள் வேறு ஏதோ அர்த்தத்தில் பேசிக் கொண்டிருக்க தீரனோ அவன் வார்த்தைகளால் அவள் உள்ளத்தை இன்னும் குத்தி கிழித்தான்..
“இல்லை தீரா.. நான் அப்படி சொல்லல..” என்று ஏதோ சொல்ல வந்தவளின் வாய் மேல் விரல் வைத்து மூடியவன் “ஷ்ஷ்.. நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. உன் நிலைமை எனக்கு புரியுது.. ஆனா உனக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன்.. இந்த தீரன் எப்பவும் சொன்னா சொன்னபடி செஞ்சு காட்டுவான்.. உன் தங்கை டாக்டர் படிப்பு முடிச்சு பெரிய டாக்டர் ஆவா.. அது என்னோட பொறுப்பு.. அவளை டாக்டரா ஆக்கி உன் முன்னால கொண்டு வந்து நிறுத்தறது இந்த தீரனோட வேலை.. நீ இப்படி அழாதடா.. முதல்ல அழுகையை நிறுத்து.. நிச்சயமா மலர் ஒரு டாக்டர் ஆனப்பறம் இப்படி நடிக்க வேண்டிய அவசியம் நம்ம ரெண்டு பேருக்குமே இருக்காது..”
அவன் சொன்னது போல் அவனுக்கு மனைவியாக நடிப்பது அவளை பொறுத்தவரை தண்டனை தான்.. நிஜமாகவே மனதளவில் அவனுக்கு மனைவியாகவே மாறி இருந்தவளை அப்படி நடிக்கச் சொன்னால் அது அவளுக்கு எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை..
“ஆமா தீரா.. என்னால இப்படி நடிக்க முடியல.. எனக்கு உங்க மனைவியா வாழணும்.. எல்லாம் முடிஞ்சு இங்க இருந்து போகும்போது என் மனசுல இருக்குறதை உங்க கிட்ட சொல்லிட்டு தான் போவேன்.. ஆனா இப்ப நான் அதை சொல்லமுடியாம உள்ளுக்குள்ளேயே வச்சு தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. ஏன்னா ஒருவேளை உங்களுக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லன்னு சொல்லிட்டீங்கன்னா அதுக்கப்புறம் என்னால உங்களோட மனைவியா நடிக்க முடியாது.. அது என்னை சுக்கு நூறா உடைச்சு போட்டுடும்.. நான் என்ன பண்ணுவேன் தீரா..”
மனதிற்குள் இப்படியே எண்ணி மறுகி போனவள் மறுபடியும் அவன் மார்பிலேயே சாய்ந்து கண்ணீர் விட அவனும் தன் ஒற்றை கை அணைப்பிலேயே அவளுக்கு ஆறுதல் தந்து கொண்டு இருந்தான்..
சரியாக அப்போது தன் அக்காவிடம் காபி கேட்டு குடிக்கலாம் என்று சமையல் அறைக்குள் நுழைந்த மலர் அங்கு கண்ட காட்சியில் சட்டென பின் வாங்கி வெளியே வர அதே சமயம் அவள் பின்னிருந்து இந்தரும் சமையல் அறைக்கு வர பின்னாலே வந்தவள் அவன் மார்போடு மோதி கொண்டாள்..
“ஏய் பாத்துடி..” என்று அவன் கத்த அவன் வாயை தன் கையால் இறுக்க மூடியவள் “ஷ்ஷ்ஷ்.. அக்காவும் மாமாவும் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. அப்படியே திரும்பி போ.. பேசாத..” என்று சொல்ல “நிஜமாவாடி?” என்று அவனும் ரகசியமாய் புருவம் உயர்த்தி கேட்க “அவங்களுக்கே தெரியாம காதல் உலகத்துல காலடி எடுத்து வச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்..”
ஆச்சரியமாய் விழியை விரித்து அவள் சொன்னதை கேட்டபடியே இந்தர் திரும்பி நடக்க போக அங்கே பக்கத்தில் இருந்த ஒரு பூச்சாடி அவன் கை பட்டு டமார் என்ற சத்தத்தோடு கீழே விழுந்தது..
சத்தம் கேட்டு பதறிப் போய் தீரனும் மதியும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் விலகிவிட இங்கே மலரழகியோ தலையில் அடித்துக் கொண்டு “போடாங்.. கொய்யால.. கண்ணை என்ன பொடறிலயா வச்சிருக்க.. உன்னை… பார்த்து நடக்க மாட்டே..” பல்லை கடித்து அவனை வசை பாடியவள் அதற்கு மேல் எதுவும் நடக்காது என்று உணர்ந்து மெல்ல சமையல் அறைக்குள் வந்து தொண்டையை செருமி “ம்க்கும்.. அக்கா ஒரு காபி ப்ளீஸ்..” என்றாள்..
மதியோ அவளை தீவிரமாய் முறைத்த படி டமார் டமார் என குவளைகளை உடைப்பது போல் எடுத்து வைத்து அவளுக்கு காபி கலக்க தொடங்க “ஓ.. இன்னும் கோவம் குறையலையா.. நேத்து வெச்ச வெடி ரொம்ப பலமா தான் வெடிச்சிருக்கு போல.. ஓவரா நடிச்சு கொட்டிட்ட போல இருக்குடி மலரு..” தனக்குள்ளேயே புருவம் உயர்த்தி தலை குனிந்து முணுமுணுத்துக் கொண்டவள் அப்படியே அமைதியாய் போய் சாப்பாட்டு மேஜை முன்னால் அமர்ந்து விட்டாள்..
எதிரே வந்து அமர்ந்த இந்தர் என்ன என்று புருவம் உயர்த்தி கேட்க அவளோ தன் அக்காள் கோபமாக இருக்கிறாள் என்பதை கையை பூதம் போல் சைகை காட்டி சொல்ல இவர்கள் சைகை பாஷையை பார்த்துக் கொண்டே வெளி வந்தான் தீரன்..
வெளிவந்தவன் அவளின் சைகையை வேறு மாதிரி புரிந்து கொண்டு இந்தரை முறைக்க அவன் பார்வையை தவிர்த்து சட்டென்று தலையை குனிந்து கொண்டான் இந்தர்.. “ஐயோ மறுபடியும் மறுபடியும் மாட்டறியேடா இந்தரு..” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான்..
தமிழ்வாணனும் அங்கே வந்துவிட அவர்களுக்கெல்லாம் காலை உணவை எடுத்துக் கொண்டு வெளியே வந்த மதி எல்லோருக்கும் பரிமாற அவளை பார்த்த தமிழ்வாணன் “ஏன்மா மதி.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. என்ன ஆச்சு..?” என்று கேட்க “ஒன்னும் இல்லப்பா.. நைட் எல்லாம் தலைவலி.. தூக்கமே இல்லை.. அதான் ஒரு மாதிரி இருக்கு.. எப்படியும் இன்னைக்கு லீவு தானேப்பா.. நான் பார்த்துக்கிறேன்..” என்றாள்..
“வீட்ல தான் இருக்க போறீங்களா ரெண்டு பேரும்.. அப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல..”
தமிழ்வாணன் சொல்லவும் மதியழகியோ “இல்லப்பா.. இன்னைக்கு ஒரு ஆடிஷனுக்கு போறோம்.. நான் தான் அவரை கூட்டிட்டு போறேன்.. அவரை படத்தில ஹீரோவா நடிக்க வைக்க ட்ரை பண்றேன்னு பாண்டி அண்ணா சொல்லி இருக்காரு.. அதுக்கு போறோம் பா.. 10 மணிக்கு மேல வர சொல்லி இருக்காரு..”
அவள் சொன்ன விஷயத்தை கேட்டா மூவருமே விழிகளை விரித்தனர்.. “கங்கிராட்ஸ் மாமா.. நீங்க வேணா பாருங்க.. நீங்க பெரிய ஆக்டரா வருவீங்க.. உங்க அழகுக்கும் ஸ்டைலுக்கும் லுக்குக்கும் நீங்க அப்படி எல்லாம் வரலைன்னா தான் ஆச்சரியம்.. மாமா இப்பவே நான் உங்க ஆட்டோகிராஃப்பும் போட்டோகிராஃபும் வாங்கி வெச்சுக்கறேன்..”
அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்த தீரன் அவள் தலையில் கையை வைத்து ஆட்டி “எப்பவும் விளையாட்டு தான் உனக்கு.. உனக்கு இல்லாத ஆட்டோகிராஃப் போட்டோகிராஃப்பா.. உனக்கு தான் முதல்ல.. அப்புறம் தான் மத்தவங்களுக்கு.. ஆனா அதுக்கு முதல்ல நான் நடிக்கணும்.. எனக்கெல்லாம் நடிப்பே வராது.. எனக்கு நம்பிக்கையே இல்லை.. மதி தான் அடம் பிடிச்சு கூட்டிட்டு போறா..”
“பரவாயில்லையே.. இந்த பழைய பஞ்சாங்கம் அக்கா கூட உங்களுக்காக நல்ல விஷயம் எல்லாம் பண்றா..”
அவள் மதியை வேண்டும் என்றே சீண்டிவிட “ஏய் ஓவரா ஆடாத டி.. காபி டிஃபனை முடிச்சுட்டு கிளம்புற வழியை பாரு.. இங்க உட்கார்ந்து நீட்டிமுழக்கி பேசிட்டு இருக்கா..” எரிச்சலாய் சொன்னாள் மதி..
இந்தர் தமிழ்வாணன் பக்கம் திரும்பி “மாமா.. நேத்து மாதிரியே நீங்க கிளம்பி ரெடியா இருங்க.. உங்களை நான் என் வண்டியிலேயே கூட்டிட்டு போய் விடறேன்..”
“சரிப்பா.. தீரா மாப்பிள்ளை போலவே தங்கமான புள்ளையா இருக்க நீயும்..” அவர் சொல்ல தீரனோ இந்தர் புறம் கவலையாய் தான் பார்த்து இருந்தான்..
எல்லோரும் அவரவர் வேலைக்கும் கல்லூரிக்கும் கிளம்பி போய்விட மதி தீரனை அழைத்துக் கொண்டு அந்த கதாநாயகன் தேர்வு நடக்கும் இடத்திற்கு போனாள்..
பாண்டி ஒரு காதல் காட்சியின் வசனங்களை தீரனிடம் கொடுத்து அங்கு ஆடிஷனுக்கு வந்திருந்த இன்னொரு பெண்ணோடு நடிக்கச் சொல்ல அவனோ அந்தப் பெண்ணை ஆசையாய் ஒரு பார்வை பார்ப்பது போல் கூட நடிக்க முடியாமல் அவஸ்தை பட்டு போனான்..
தொடரும்..