லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 46

4.9
(10)

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 46

 

பாண்டி தான் எடுக்கும் படத்திற்கான ஆடிஷனில் தீரனை நடிக்க சொன்ன காதல் காட்சியில் எந்த உணர்வுகளையும் தன் முகத்தில் பிரதிபலிக்க முடியாது எதிரே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான் தீரன்..

 

“தீரா.. என்ன தீரா.. இங்க பாரு.. அவங்க கன்னத்துல கைய வச்சு ப்ரொபோஸ் பண்ணு.. உனக்கு தான் டயலாக் கொடுத்து இருக்கேன் இல்ல.. அதை பேசு தீரா..ஃ”

 

“கன்னத்துல கைய வச்சா..?” என்று அதிர்ந்து பார்த்தபடி கேட்டவன் அந்த பெண்ணின் முகத்தின் பக்கம் திரும்பி கன்னத்தில் கையை வைக்க போக கையை எப்படி வைப்பது என்று தெரியாமல் விரைப்பாய் கையை ஏதோ கன்னத்தில் அடிக்க வருவது போல் வைக்க அந்தப் பெண்ணோ பயந்து தலையை பின்னிழுத்துக் கொண்டாள்..

 

இங்கே தலையில் அடித்துக் கொண்டான் பாண்டி..

 

தீரனின் அருகில் சென்று அந்தப் பெண்ணின் கன்னத்தில் கை வைத்து அவனுக்கு நடிக்க வேண்டிய காட்சியை நடித்துக் காண்பித்தான்..

 

தீரனுக்கோ அவன் நடித்ததை பார்த்ததற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.. இப்படியே எங்கேயாவது தப்பி ஓடி விடலாமா என்று அவன் எண்ண ஓட்டம் போய்க் கொண்டிருந்தது..

 

பாண்டி பக்கம் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு திரும்பியவன் “பாண்டி.. என்னை விட்டுடு பாண்டி.. இது எனக்கு வராது.. மதி கிட்ட எனக்கு நடிக்க வராதுன்னு சொல்லிரு.. உனக்கு புண்ணியமா போகும்.. நான் கிளம்பி போறேன் பாண்டி.. கட்டையால ஏன் அருவாளால் கூட வெட்டு வாங்க ரெடியா இருக்கேன்.. ஆனா முட்டை தக்காளி இதெல்லாம் வேண்டாம் பாண்டி.. நிச்சயமா என்னை நடிக்க வச்சா உன் படத்துல உனக்கு அதுதான் கிடைக்கும்.. சொன்னா கேளு..”

 

தான் அரண்டு போனதும் இல்லாமல் அவனையும் பயமுறுத்தினான் தீரன்.. அவன் கெஞ்ச பாண்டிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை..

 

“தீரா.. ட்ரை பண்ணாம எதுவுமே முடியாதுன்னு சொல்ல கூடாதுல்ல..? இப்ப நான் வேணா உனக்கு ப்ராம்ப்ட் கொடுக்கிறேன்.. நீ அதை திரும்பவும் சொல்லி நடிக்க ட்ரை பண்ணு.. சரியா..?”

 

இப்படி சொல்லி அவனுக்கு வசனங்களை பின் இருந்து பாண்டி எடுத்துக் கொடுக்க தீரனோ காதலிக்க நேரமில்லை படத்தில்  “உன் காதல்ல இந்த உலகத்தையே மறக்கிறேன்..” என்று சச்சு நாகேஷை பார்த்து சொல்வது போல் இயந்திரத்தனமாய் வசனங்களை பேசிக் கொண்டிருந்தான்..

 

பாண்டிக்கோ பொறுமை பறந்து போனது..

 

“தீரா காதல்ங்கறது எவ்வளவு பெரிய விஷயம்.. உள்ளுக்குள்ள உணர்ந்து நம்ம நாடி துடிப்போட கலந்து நம்மளோட ஒவ்வொரு அணுவையும் தாக்கி நம்மளை சாய்ச்சு போடுற விஷயம்.. என்ன தீரா.. அதை ஏதோ மளிகை கடையில உளுத்தம் பருப்பு வாங்கற மாதிரி சாதாரணமா சொல்றே..”

 

மதி பக்கம் பாவமான முகத்தை வைத்துக்கொண்டு பார்த்தவன் “மதி ஸிஸ்டர்.. அவனால முடியல.. பேசாம..” என்று இழுத்தவனிடம் “இல்லண்ணா.. அவரால முடியும்.. ஒரு நிமிஷம் இருங்க.. அந்த டயலாக் பேப்பரை குடுங்க..” என்றவள் வசனம் அடங்கிய தாளை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டு தீரனை அழைத்துக் கொண்டு போய் தான் அமர்ந்த இடத்தில் எதிரில் அமர வைத்தாள்..

 

“தீரா.. என்னை பாருங்க.. இந்த வசனத்தை நல்லா படிச்சுக்கோங்க..” அவள் சொன்னதும் அவனும் நல்ல பிள்ளையாய் அந்த வசனம் அடங்கிய தாளை வாங்கி முழுவதுமாக படித்திருந்தான்..

 

படிச்சிட்டீங்களா என்று கேட்க அவனும் படித்து விட்டதாக தலையாட்டவும் “இப்ப இந்த டயலாக்கை என்னை பார்த்து பேசி நடிங்க..” என்று சொல்லிவிட்டு அவன் எதிரே வாகாக திரும்பி அமர்ந்து கொண்டாள்..

 

முதலில் தடுமாறி தலையை குனிந்து கொண்டிருந்தவன் மெதுவாய் நிமிர்ந்து அவள் கண்களை பார்க்க அவளும் தன் கண்களை மெல்ல மூடித் திறந்து அவனையும் கண்களை மூடி ஆசுவாசப்படுத்திக் கொள்ள சொல்ல அவனும் அப்படியே செய்து அவள் கண்களைப் பார்த்தான்..

 

அதன் ஆழத்தில் மெல்ல மெல்ல ஊறி வாய் திறந்து தன்னால் காதல் வசனங்களை பேச தொடங்கினான் அவளின் காதலன் அவன்..

 

“மதி..  உன்னை பாக்குற வரைக்கும் என் வாழ்க்கையில எங்க அம்மாவை தவிர வேற எந்த பொண்ணும் கிடையாதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா உன்னை பார்த்த நொடி என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு.. அதோட அர்த்தத்தையே முழுசா மாத்தி வச்சிருக்கே மதி.. நீ இல்லாத ஒரு நிமிஷம் என்னை பொறுத்த வரைக்கும் நரகம்.. ஆனா உன்னோட இன்னும் ஒரு நாள் தான் வாழ்க்கைன்னு சொன்னா கூட அந்த ஒரு நாளை வாழ்ந்துட்டு எத்தனை நரகத்துக்கு வேணா போகறதுக்கு நான் ரெடியா இருக்கேன்.. என் மனசுக்குள்ள என் உயிருக்குள்ள ஏன்.. என் ஒவ்வொரு அணுவுலயும் மதி மதின்னு உன் பேரு மட்டும் தான் மறுபடி மறுபடி நாடி துடிப்பா துடிச்சுக்கிட்டு இருக்கு.. நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே கிடையாது மதி.. என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் என் உயிரோட கலந்து நினைவோட பின்னி இருக்கிறதுக்கு நீ மட்டும் தான் வேணும்..  ஐ லவ் யூ மதி… ஐ லவ் யூ சோ மச்..”

 

அவள் கன்னத்தில் கையை இதமாய் வைத்து வருடியபடி பேசிக் கொண்டிருந்தவனின் கண்கள் நெகிழ்ந்து போய் கலங்கி இருந்தன.. மதிக்கோ அவன் தன் மனதில் உணர்வுகளை நிஜமாகவே தன்னிடம் சொல்வது போல் இருந்தது.. 

 

அவளின் கண்களும் மீதூற சட்டென தலையை குனிந்து தன் கண்களை துடைத்துக் கொண்டவளின் நெற்றியில் மெல்ல தன் இதழ் பதித்து “என் காதலை ஏத்துப்பியா மதி.. இல்ல நான் உனக்கு ஏத்தவன் இல்லைன்னு தூக்கிப்போட்டுடுவியா..? உன்னால மட்டும் தான் என் வாழ்க்கையை உயிர்ப்போட வச்சிருக்க முடியும்.. சொல்லு மதி.. நீயும் என்னை விரும்புறயா?” அவள் முகத்திலேயே கண்களை அலைப்புற செய்து ஏதோ நிஜமாகவே அவளிடம் கேட்பது போல் காதல் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தான் தீரன்..

 

மதியோ அவன் கேட்ட கேள்வி அவள் மனதை நேராகச் சென்று தாக்க அவனுக்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று தெரியாமல் திக்கி திணறி போயிருந்தாள்..

 

ஆனால் அவளை அந்த நிலையில் இருந்து காப்பது போல் கையை தட்டிக் கொண்டு அவர்கள் அருகில் வந்த பாண்டி “கட் கட் கட்.. சூப்பர் தீரா.. அந்த பொண்ணு கிட்ட நடிக்க தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த தீரனா இது..? எவ்வளவு சரளமா காதல் டயலாக் வருது உனக்கு..? நடிக்க வராதுன்னு இவ்வளவு நேரம் எங்க முன்னாடி எல்லாம் நடிச்சிட்டு இருந்தியா நீ அப்போ..?”

 

அவன் கிண்டலாய் கேட்க தீரன் தன் கண்களை துடைத்துக் கொள்ள அதை பார்த்து பிரமித்து போனான் பாண்டி.. இது ஏதோ நடிப்பு மாதிரி இல்லையே என்று எண்ணியவன் தீரனை கேள்வியாய் பார்க்க அவனோ “இல்ல பாண்டி.. என்னால அந்த பொண்ணு முன்னாடி இப்படி எல்லாம் பேச முடியாது.. ஏதோ மதி முன்னாடி பேசிட்டேன்.. எனக்கு அந்த பொண்ணு கிட்ட இந்த மாதிரி நடிக்க வராது பாண்டி..”

 

“புரிஞ்சிடுச்சு.. அப்போ மதி கிட்ட மட்டும் தான் நடிப்பீங்க சார்.. அய்யய்யோ உன்னை முதல் முதல்ல மதியோட நடிக்க வெச்சது தப்பா போச்சே.. ஏன் தீரா..  இதுக்காக எல்லா படத்திலயும் மதியை ஹீரோயினா போட முடியுமா? அதெல்லாம் நடக்குமா தீரா..?”

 

பாண்டி நிஜமான கவலையோடு கேட்க “என்னது..? ஹீரோயினா..? ஆளை விடுங்க.. எனக்கெல்லாம் நடிக்கவே வராது.. தீரா நான் உங்ககிட்ட ஒன்னு சொல்றேன்.. உங்களுக்கு என் முன்னாடி தான் நல்லா நடிக்க வருதுன்னா அந்த பொண்ணுக்கு பதிலா உங்க முன்னாடி நான் இருக்கறதா கற்பனை பண்ணிக்கோங்க.. அப்போ உங்களால நிச்சயமா நடிக்க முடியும்.. நான் சொல்றதை கேளுங்க.. நீங்க இப்ப போய் ட்ரை பண்ணி பாருங்க..”

 

அவனை எழுப்பி தள்ளி கொண்டு போய் அந்த பெண்ணின் எதிரில் அமர வைத்தாள் மதி..

 

அந்தப் பெண்ணை பார்த்த நொடி அவனுக்கு உடல் எல்லாம் மறுபடியும் வெடவெடத்து போக மதி பக்கம் அவன் திரும்பி கெஞ்சலாய் பார்க்க அந்தப் பெண்ணுக்கு பின்னால் நேராக தன் முகம் தீரனுக்கு தெரியும்படியாக அமர்ந்து கொண்டவள் தன் முகத்தை வட்டமிட்டு காட்டி அந்தப் பெண்ணை சுட்டிக்காட்டி அவளிடத்தில் தன்னை பார்க்குமாறு ஜாடை காட்ட அவனும் ஒரு முறை கண்ணை மூடி திறந்தவன் தன் எதிரில் மதி அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டான்..

 

அதன் பிறகு அவன் நடிப்பதில் எந்த குறையும் வரவில்லை.. சரளமாக காதல் வசனங்களை பேசி கொண்டே போக பாண்டி பலமுறை கட் சொல்லி அவனை நிறுத்த வேண்டி இருந்தது..

 

பாண்டி கட் சொல்லிய பிறகும் அவன் அந்த பெண்ணின் கன்னத்தில் கை வைத்தபடியே அவளையே பார்த்துக் கொண்டிருக்க “இது என்னடா புது பிரச்சனை..?” என்று மறுபடியும் புருவத்தை விரல் வைத்து நீவியபடி பாண்டி யோசிக்கத் தொடங்கினான்..

 

மதிக்கோ பாண்டி கட் சொன்ன பிறகும் தீரன் அப்படி அமர்ந்து இருந்தது உள்ளுக்குள் ஒரு பொறாமை தீயை பற்ற வைக்க நேராக அங்கே தீரன் அமர்ந்து இருந்த இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் கன்னத்தில் இருந்து அவன் கையை தட்டி விட்டாள்..

 

அவள் கையை தட்டி விட்டதில் தன் கற்பனை உலகத்தில் இருந்து விடுபட்டு வெளியில் வந்தவன் கண்ணை மூடி திறந்து வியப்போடு மதியை பார்க்க அவளோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு இடுப்பில் கை வைத்த படி அவனைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தாள்..

 

“பாண்டி அண்ணன் கட் சொல்லி பத்து நிமிஷம் ஆகுது.. இங்க பாருங்க.. ஷூட்டிங் போது மட்டும் தான் நீங்க என் முகத்தை கற்பனை பண்ணிக்கணும்.. பாண்டி அண்ணன் கட் சொன்ன நிமிஷம் என் முகமும் எதிரே இருக்குற பொண்ணு கிட்ட இருந்து கட் ஆகிடனும்.. இல்ல அப்புறம் நடக்கிறதே வேற..” 

 

ஏதோ அவனுக்கு நிஜமாகவே அவள் மனைவியாய் மாறிவிட்டது போல் மிரட்டினாள்.. அவர்களின் அலப்பறையை பார்த்த பாண்டிக்கும் அப்படித்தான் தோன்றியது..

 

“ஓகே ஓகே.. சாரி சாரி.. அம்மா உனக்கும் சாரி மா..” என்று அந்த பெண்ணிடமும் மன்னிப்பு கேட்டவன் “அதை விடு மதி.. நான் நல்லா நடிச்சேனா மதி..?” அவன் ஆவலோடு கேட்க “ம்ம்ம்ம்.. பத்து ரூபா குடுத்ததுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு நடிச்சி வச்சிருக்கீங்க.. போதும் போதும்.. அதுக்குன்னு ரொம்ப ஓவரா பண்ணாதீங்க.. ஞாபகம் இருக்கட்டும்.. கட் சொன்ன அடுத்த நிமிஷம் எதிருல இருக்குற பொண்ணுக்கும் உங்களுக்கும் இருக்கிற எல்லா கனெக்ஷனும் கட் ஆயிடனும்.. இல்ல நடக்கிறதே வேற..” 

 

அவளைப் பார்த்த பாண்டி “ஒரு கையில விளக்குமாறு இன்னொரு கையில கரண்டி மட்டும் தான் மிஸ்ஸிங்.. இருந்துருந்துச்சுன்னா பக்காவா இருந்திருக்கும்.. ” உள்ளுக்குள் நினைத்தபடி சிரித்துக்கொண்டான் அவன்..

 

“சரி சரி.. ஓகே.. நீ சொல்ற படியே கேட்டுக்கறேன்.. இனிமே பாண்டி கட் சொன்ன அடுத்த செகண்ட் நடிக்கிறதை நிறுத்திடுவேன்” என்றான் தீரன் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு..

 

பாண்டிக்கோ ஸ்டண்ட் மாஸ்டர் என்ற பெயரில் கம்பீரமாய் இருபது பேர் தன் எதிரில் வந்தாலும் அடித்து வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தவனா இவன் என்று தோன்றியது.. எப்போதும் ஒரு இறுக்கத்துடன் சிங்கமாய் சீறிக் கொண்டிருந்தவன் இப்படி பெட்டி பம்பாய் அடங்கிக் கிடக்கிறானே மதியிடம் என்று தீரனை பார்க்க பார்க்க ஆச்சரியமாய் இருந்தது அவனுக்கு..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!