லவ்.. லவ்.. எத்தனை வயது? – 48
எல்லோரும் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறையில் அடைந்து போக இந்தரோ சற்று காற்று வாங்கலாம் என்று வீட்டின் முன்பக்கம் இருந்த முற்றத்தில் உலவிக்கொண்டு இருந்தான்..
மலரழகிக்கும் உடல் ஏதோ கசகசவென்று இருப்பது போல் தோன்ற உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு வரலாம் என்று தன் தந்தையிடம் சொல்லிவிட்டு உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்..
அதே நேரம் வெளியே நடந்து கொண்டு இருந்த இந்தருக்கு பொத்தென ஏதோ விழும் சத்தம் கேட்கவும் என்ன சத்தம் என்று வீட்டின் பக்கவாட்டில் போய் பார்க்க அங்கே சேகர் மதில் சுவர் ஏறி வீட்டிற்குள் குதித்திருந்தான்..
அவனைக் கண்டவன் அவன் ஓடிப்போய் ஏதோ ஒரு பைப்பில் ஏற தொடங்க அவன் பின்னாலேயே ஓடி சென்று தானும் அந்த பைப்பில் ஏறி போனான்.. பைப்பில் ஏறி தீரனின் அறையின் பால்கனியை அடைந்த சேகர் பைப்பிலிருந்து தாவி பால்கனியில் ஏற பார்த்த அதே நேரம் பைப் மூலம் ஏறி அவனை அடைந்திருந்த இந்தர் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைக்க மேலிருந்து கீழே விழுந்து இருந்தான் சேகர்..
ஆனால் அவன் விழுந்த இடத்தில் சருகுகள் நிறைந்திருக்கவும் பெரிதாய் அடி படவில்லை.. லேசான காயங்கள் ஏற்பட்டிருக்க எழுந்தவன் தட்டு தடுமாறி வீட்டை விட்டு வெளியே ஓடி இருந்தான்..
அவன் விழுந்த சத்தம் தீரனுக்கும் கேட்க என்ன சத்தம் என்று பால்கனி வழியே வந்து எட்டிப் பார்த்த அதே நேரம் இந்தர் சேகரை துரத்துவதற்காக பைப் லைனில் வேக வேகமாக இறங்கிக் கொண்டிருந்தவன் மலரழகி இருந்த அறையின் குளியலறை ஜன்னல் பக்கமாக இருந்தான்.. அதே நேரம் குளியலறைக்குள் வந்திருந்த மலரழகியோ ஜன்னல் வழியே அவனைப் பார்த்து அலறி இருந்தாள்..
அவள் அழறியதை கேட்டு அரண்டு போனவன் வேக வேகமாக இறங்கி அவளுக்கு விஷயத்தை புரிய வைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் வீட்டுக்குள் ஓடி வர அதே நேரம் அவன் அறையின் பால்கனியிலிருந்து தீரனும் கதவை திறந்து கொண்டு வேகமாக கீழே இறங்கினான்.. மதியோ என்னவோ ஏதோ என்று அவன் பின்னாலேயே வந்தாள்..
“என்னாச்சு தீரா.. ஏன் இவ்ளோ படபடன்னு ஓடுறீங்க?” என்று கேட்டுக்கொண்டே வந்தவளை இந்த இந்தரை.. இன்னைக்கு நீ அவனுக்கு சப்போர்ட்டா எதுவும் பேசாத மதி.. அவனை என்ன பண்றேன் பாரு..” என்று சொல்லிக் கொண்டே வரவேற்பறைக்கு வந்திருந்தான் தீரன்..
அதேநேரம் மலரழகி குளியலறையில் இருந்து வெளியே பதட்டத்தோடு வெளியே வர தமிழ்வாணன் “என்னாச்சும்மா.. எதுக்கு அப்படி கத்தின? உனக்கு தான் கரப்பான் பூச்சி பயம் கூட கிடையாதே..” என்று கேட்க “அது.. அப்பா.. அது வந்து.. அங்க ஜன்னல் பக்கம் இந்தர்..” என்று இழுக்க அவருக்கும் அவள் சொன்ன விஷயம் புரிபடவும் அதிர்ந்து போய் பார்த்தார் அவளை..
“நீ வேற ஏதாவது நிழலாடுறதை பார்த்து தப்பா நினைச்சிருப்பமா.. அந்த தம்பி அப்படி எல்லாம் பண்ணி இருக்காது.. ஏதாவது உளறிக்கிட்டு இருக்காத மலரு.. அது தங்கமான புள்ளை.. இந்த மாதிரி நீ சொன்னதை மாப்பிள்ளை கேட்டா ரொம்ப வருத்தப்படுவார்..”
“நான் பொய் சொல்லல பா.. நிஜமா தான் பா..” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே யாரோ யாரையோ அடிக்கும் சத்தம் கேட்கவும் கதவை திறந்து கொண்டு இருவரும் வெளியே வந்தனர்..
அங்கே வரவேற்பறையில் “உன்னை இப்படியாடா நான் வளர்த்தேன்..? படுபாவி.. இவ்வளவு மோசமா கெட்டு போவன்னு நான் நினைக்கவே இல்லையேடா.. இப்படி பொறுக்கி தனம் பண்றதுக்கு நீ உயிரோடவே இருக்க வேண்டாம்.. பேசாம செத்து போயிடு.. நானே உன்னை கொன்னு போட்டுடறேன்..” என்று சரமாரியாக இந்தரை எந்த கேள்வியும் கேட்காமல் அடித்து துவைத்து கொண்டு இருந்தான் தீரன்..
“அண்ணா அடிக்காதீங்க அண்ணா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளுங்க அண்ணா.. நான் எந்த தப்பும் பண்ணல..”
அவன் கத்தி சொல்ல “எந்த தப்பும் பண்ணலையாடா நீ? நான் தான் மேலே இருந்து பார்த்தேனே நீ பண்ண வேலையை.. அதை வாயை திறந்து சொல்ல கூட முடியல என்னால.. நினைச்சாலே கூசுதுடா..”
இந்தருக்கோ தீரன் பேச பேச மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது.. தன்னை நம்பாமல் கூட பிறந்த அண்ணனே பழி சொல்லியது அவனுக்கு அதிகமாக வலித்தது..
“ஐயோ அண்ணா.. நான் எந்த தப்பும் பண்ணல.. அந்த சேக..” என்று அவன் சொல்ல தொடங்கிய நேரம் மலரோடு தமிழ்வாணன் அவர்களின் அறையை விட்டு வெளியே வந்திருந்தார்..
மலருக்கோ அவன் சேகரின் பெயரை முழுதாய் சொல்லாத போதும் அவன் பெயரை சொல்ல தொடங்கியதிலேயே விஷயம் அத்தனையும் புரிந்தது.. சேகர் தீரனின் அறைக்கு போய் இருக்க வேண்டும்.. இந்தர் அவனை துரத்திக் கொண்டு போனபோது தன் அறையின் குளியலறை வெளியே தான் அவனை பார்த்திருக்க வேண்டும்.. இப்போது தன்னோடு தன் தந்தை இருப்பதால் விஷயத்தை சொல்ல முடியாமல் அவன் நிறுத்தி இருக்க வேண்டும் என்று ஒரே நொடியில் புரிந்து கொண்டவள் “மாமா..” என்று தீரனிடம் ஏதோ சொல்ல வர அதற்குள்ளாக அவள் பின்னாலேயே வந்த தமிழ்வாணன் “மாப்ள.. என்ன ஆச்சு? ஏன் இப்படி இந்தர் தம்பியை போட்டு அடிக்கிறீங்க..?” என்று கேட்டார்..
முழுதாய் விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் தவறான எந்த வார்த்தையையும் விட்டு விடக்கூடாது என்று பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்..
“விடுங்க மாமா.. இவன் செஞ்ச வேலைக்கு இவனை கொன்னே போடணும்.. நான் இன்னும் பொண்ணு போடாம இருக்கனேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. என்னால தூக்கி வளர்த்த இதே கையால இவனை கொல்ல முடியல மாமா..” உடைந்து போன குரலில் பேசிக்கொண்டு இருந்தான் தீரன்..
“என்னாச்சு மாப்ள.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க..? மலரும் ஏதேதோ சொல்றா.. அவன் குளிக்க போகும் போது ஏதோ பார்த்ததா உளறிக்கிட்டு இருக்கா..”
இன்னும் கூட இந்த இப்படி ஒரு வேலையை செய்திருப்பான் என்று அவரால் நம்ப முடியவில்லை.. அனுபவப்பட்ட மனிதர் ஆயிற்றே..
ஆனால் அவர் சொன்னதைக் கேட்ட தீரனுக்கோ ஆத்திரம் பொங்கி வர இந்தரை இன்னும் சரமாரியாக அடிக்க துவங்கினான்..
“ஐயோ அப்பா.. மாமாவை நிறுத்த சொல்லுங்க.. அவன் மேல எந்த தப்பும் இருக்காது… அவன் வேற எதோ காரணமா தான் அங்க வந்திருப்பான்.” மலர் எவ்வளவு கத்தி சொல்லியும் இந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை.. தீரன் இந்தரை சரமாரியாக அடித்து துவைத்து வெளுத்து கொண்டிருந்தான்..
மதியழகிக்கோ ஒன்றும் புரியவில்லை.. “எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்ன நடந்ததுன்னு சொல்றீங்களா? தீரா.. நீங்க எதுக்கு இந்தரை போட்டு இப்படி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க? அவன் என்னதான் பண்ணான்..?”
மதி கேட்கவும் தீரன் “இந்தர் மாடியில இருந்து நான் பார்க்கும் போது பைப் லைன்ல ஏறி உட்கார்ந்துக்கிட்டு இருந்தான்.. அவன் இருந்தது….,…. மலரோட ரூம்ல இருந்த பாத்ரூமோட ஜன்னல் பக்கத்துல இருந்த பைப்ல..”
தயங்கி தயங்கி சொன்னவன் “சொல்லு மதி.. இதுக்கப்புறமும் நீ அவனுக்கு சப்போர்ட் பண்ண போறியா? இதைவிட இன்னும் என்ன கேவலத்தை இவன் பண்ணிட முடியும்..? இவன் என் தம்பியே இல்ல மதி.. ஒரு பொண்ணு குளிக்கிறதை பாத்ரூம் ஜன்னல்ல இருந்து பாக்கணும்னு நினைக்கிற ஒரு பொறுக்கி.. இவனை எல்லாம்..” என்று மறுபடியும் அவன் கை ஓங்க இந்தரோ அப்படியே சிலையாக நின்றான்..
தன்னோட அண்ணன் தன்னை உயிருக்கு உயிராய் வளர்த்த தன்னோட அண்ணன்.. அவனுக்கு தன் மேல ஒரு துளி நம்பிக்கை கூட இல்லையா? அது எப்படி இவ்வளவு கேவலமான ஒரு தப்பை தன் தம்பி செய்து இருப்பான்னு அவரால நினைக்கவும் முடிஞ்சது..? அவ்வளவுதானா? அவர் என் மேல் வச்சிருக்கற நம்பிக்கை.. பொண்ணுங்களோட சுத்துறேன்னு சொல்ற வரைக்கும் கூட பரவால்ல.. ஆனா ஒரு பொண்ணு குளிக்கிறதை பாத்ரூம் ஜன்னல்ல இருந்து பார்ப்பேன்னு என்னை பத்தி அவர் எப்படி இவ்வளவு கேவலமா நினைச்சார்.. நான் அவர் வளர்த்த பையன் தானே? யார் என் மேல பழி சொன்னாலும் என் தம்பி ஒருநாளும் இப்படி ஒரு தப்பை பண்ண மாட்டான்னு அவர் உறுதியா சொல்லவேண்டாமா?”
ஒரு நொடியில் உலகமே வெறுத்து போனது அவனுக்கு.. தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்ன பிறகும் அதற்கான விளக்கத்தை கூட ஒழுங்காக கேட்காமல் தனக்கு தண்டனையும் வழங்கிக் கொண்டிருக்கும் தன் அண்ணனையே விழியகலாமல் பார்த்திருந்தவன் அப்படியே இருந்த இடத்திலேயே இறுகி போனான்..
மதியழகி முன்னால் வந்து “ஒரு நிமிஷம் இருங்க.. அடிச்சு அடிச்சு அவனை கொன்னுடாதீங்க.. அவன் தான் தப்பு பண்ணலைன்னு ஏதோ சொல்ல வர்றான் இல்ல..? அவன் என்ன சொல்றான்னு தான் கேளுங்களேன்.. இந்தர் சொல்லு.. என்ன நடந்தது..? நீ நிச்சயமா இப்படி ஒரு தப்பை பண்ணி இருக்க மாட்டேன்னு எனக்குள்ள ஏதோ ஒன்னு சொல்லுது.. நீ என்னை நிஜமாவே உன் அம்மா ஸ்தானத்தில வச்சு பார்க்கிறேன்னா என்கிட்ட சொல்லு.. நிஜமா என்ன நடந்தது..?”
அவள் பொறுமையாக கேட்க இந்தர் “அண்ணி.. அது வந்து.. நான் எந்த தப்பு பண்ணல அண்ணி.. அங்க அந்த பைப் லைன்ல நான் இருந்ததுக்கு காரணம்..” என்று தொடங்கியவன் மறுபடியும் தமிழ்வாணனை கண்டு அவர் முன்னால் சேகரின் பெயரை சொல்ல முடியாமல் வாயை இருக்க மூடி கொண்டான்..
அவர் முன்னால் சேகரை பற்றி சொன்னால் அவன் ஏன் வந்தான் எதற்காக வந்தான் என்ற காரணத்தை சொல்ல வேண்டும்.. காரணத்தை சொன்னால் மதியும் தீரனும் நடிப்பது பற்றி சொல்ல வேண்டும்.. அப்படி சொன்னால் அவர்கள் ஏன் நடிக்கிறார்கள் என்ற காரணத்தையும் சொல்ல நேரிடும்.. அதைக் கேட்ட பிறகு தமிழ்வாணன் மொத்தமாய் நொறுங்கிப் போவார்.. இதையெல்லாம் யோசித்து வாயை திறக்காமல் அப்படியே பசை போட்டு ஒட்டிக் கொண்டான் இந்தர்..
“சொல்லு இந்தர்.. எதுக்கு அந்த பைப் லைன்ல ஏறினே..?” பதட்டத்தோடு அவன் தவறு செய்திருக்கமாட்டான் என்ற உறுதியோடு மதி அவனை பார்த்திருக்க “சாரி அண்ணி.. என்னை எதுவும் கேக்காதீங்க.. எதை சொல்ற நிலைமையிலயும் நான் இல்லை.. இந்த சூழ்நிலையில நான் எதையும் சொல்ல முடியாது.. என்னை நான் விளக்கி சொல்லி தான் புரிய வெக்கணும்னா என்னை யாரும் புரிஞ்சுக்கவே வேண்டாம்.. என்ன..? அண்ணன் இன்னும் ரெண்டு அடி அடிப்பாரு அவ்வளவு தானே? அவரு அடிக்கறது எனக்கு வலிக்கவே இல்ல அண்ணி.. ஆனா அவரு என்னை.. என்னை.. விடுங்க அண்ணி..” அவனால் அதற்கு மேல் பேச கூட முடியவில்லை..
அவன் அப்படி சொல்லவும் “எப்படி அவனால விளக்கம் சொல்ல முடியும்? அதுக்கு காரணத்தை எவ்வளவுதான் இட்டு கட்டி சொல்ல முடியும் அவனால?”
தீரன் பேச பேச இந்தரோ மனதளவில் ரணப்பட்டு போனான்..
தொடரும்..