லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50
அறை வாசலில் தமிழ்வாணன் மயங்கி விழுந்திருந்ததை பார்த்த மதியும் தீரனும் பதறிப்போய் வேகமாய் சென்று அவர் அருகில் அமர்ந்து அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.
ஆனால் அவரோ எழுந்திருக்கும் வழியாய் தெரியவில்லை..
மலரோடு அவரின் அறைக்கு வந்தபோது தமிழ்வாணன் அவளிடம் “மலர் நம்மளால மாப்பிள்ளைக்கும் இந்தர் தம்பிக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும் போல இருக்கு.. பேசாம நம்ம நம்ம வீட்டுக்கே போய் இருந்துக்கலாம்.. நாளைக்கு காலைல கிளம்பிடலாம்..”
தமிழ்வாணன் சொல்ல “இல்லப்பா.. நான் எங்கேயும் வரல.. நான் இந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்னா நானும் மாமாவோட சேர்ந்து இந்தர் மேல பழி போடுற மாதிரி ஆயிடும்.. இந்தர் எந்த தப்பும் பண்ணலப்பா.. அவன் தப்பு பண்ணலன்னு மாமாக்கு புரிய வச்ச அப்புறம் தான் நான் இந்த வீட்டை விட்டு வருவேன்.. அது வரைக்கும் நான் இந்த வீட்டை விட்டு வர மாட்டேன்..” உறுதியாய் அவள் சொல்லவும் அவரும் அமைதியாக இருந்து கொண்டார்..
இருந்தாலும் வேறு எதுவும் விபரீதமாய் முடிவெடுத்து விட வேண்டாம் என்று தீரனிடம் சொல்வதற்காக அறைக்கு வெளியே வந்தவர் தீரனும் மதியும் பேசியது அனைத்தையும் கேட்டு நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்திருந்தார்..
அவர் எவ்வளவு எழுப்பியும் எழும்பாமல் போகவும் பயத்தில் மதிக்கு உடல் நடுங்கியது..
“தீரா.. அப்பா எழுந்திருக்கவே மாட்டேங்குறாரு.. எனக்கு பயமா இருக்கு தீரா.. அவருக்கு எதுவும் ஆகாது இல்ல?”
பதைபதைப்போடு அவள் கேட்க அவள் கையை இறுக்கமாய் அதே நேரம் ஆறுதலாய் பிடித்தவன் “அதெல்லாம் ஒன்னும் ஆகாது மதி.. நீ போய் கொஞ்சம் தண்ணி எடுத்துண்டு வா.. போ”
என்று அவளை அனுப்பி இருந்தான்..
ஆனால் அவனுக்கும் உள்ளுக்குள் பதட்டம் அதிகரித்து கொண்டே தான் போனது..
சற்று நேரத்தில் சமையல் அறைக்கு சென்று கொஞ்சம் தண்ணீரை கொண்டு வந்த மதி அதை அவர் முகத்தில் தெளிக்க மெல்ல மயக்கம் கலைந்தவர் மதியை பார்த்து நொடியே.. “மதி.. என்னை மன்னிச்சிடுடா.. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணையும் நான் தான் பெத்தேன்.. அந்த மலரை மாதிரி ஒரு கேடு கெட்டவளையும் நான் தான் பெத்து இருக்கேன்.. அவ வாழ்க்கைக்காக இப்படி உன் வாழ்க்கையை பணயம் வச்சிட்டியேடா.. இதுல நீ மாப்பிள்ளையை விரும்ப தொடங்கிட்டன்னு சொல்ற.. அவர் விவாகரத்துன்னு பேசிகிட்டு இருக்காரு.. உன் வாழ்க்கையே இப்படி நாசமா போச்சேடா.. எல்லாத்துக்கும் நான் பெத்த அந்த ராட்சசிதான காரணம்.. என் கையாலேயே பேசாம அவளை கொன்னே போடறேன்..”
அவர் அரை மயக்கத்தில் மூச்சு வாங்கிக் கொண்டே உணர்ச்சி வசப்பட்டு இப்படி பேச மதியழகியோ ஆற்றாமையோடு தீரனை தான் கேள்வியாக பார்த்திருந்தாள்..
“ஐயோ மாமா.. அது விவாகரத்துன்னு ஏதோ கோபத்தில சொல்லிட்டேன் மாமா.. அப்படியெல்லாம் பண்ண மாட்டோம்.. முதல்ல ஹாஸ்பிடல் போலாம் மாமா.. நான் ஒரு கேப் புக் பண்ணறேன்.. நீங்க பெட்ல படுத்துக்கோங்க மாமா” என்று சொல்லி இருவரும் சேர்ந்து அவரை அங்கிருந்து எழுப்பி அணைத்தார் போல் அழைத்துக் கொண்டு போய் அவருடைய அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார்கள்..
மலர் அழகியோ முதலில் இந்தர் குளியலறை ஜன்னல் வழியாக அவளை பார்த்ததாக நினைத்ததினால் அரண்டு போய் குளிக்காமல் வெளி வந்திருந்தவள்.. இப்போது உள்ளே குளித்துக் கொண்டிருந்தாளா..
தீரன் ஒரு வாடகை காரை அதற்கான செயலி மூலம் பதிவு செய்ய அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வாடகைக்காரர் வீட்டு வாசலில் வந்தது..
தமிழ்வாணனை மெல்ல அழைத்து போய் காரில் ஏற்றி அவரோடு மதியை அமரச் சொல்லிவிட்டு தான் சென்று முன் இருக்கையில் அமர்ந்து கொண்ட தீரன் ஓட்டுனரிடம் பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு வண்டியை விடச் சொன்னான்..
குளித்துவிட்டு வந்த மலரழகி அறையில் தன் தந்தையை காணாமல் ஒருவேளை வரவேற்பறைக்கு போய் மறுபடியும் தீரனுடனும் மதியுடனும் பேசிக் கொண்டிருப்பாரோ என்று எண்ணி வரவேற்பறைக்கு வந்து பார்த்தாள்..
அங்கேயும் யாரும் இல்லாது போகவே யோசனையோடு தன் கைபேசி எடுத்து மதியழகிக்கு அழைத்தாள்..
“அக்கா.. அப்பா எங்க? நீங்க எல்லாம் எங்க போனீங்க?” என்று கைபேசியில் அவள் கேட்,க கேட்க மதி அவளுக்கு விவரத்தை சொல்லி மருத்துவமனை சென்றதும் அவளுக்கு அழைத்து விவரங்களை சொல்வதாக சொல்லி இணைப்பை துண்டித்தாள்..
இப்போது மலரழகியை தந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற யோசனையும் கவலையும் தொற்றிக் கொண்டது.. அந்தக் கவலையுடனேயே சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் இந்தரிடம் அன்று என்ன தான் நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற யோசனை தோன்ற நேராக அவன் அறைக்கு சென்றாள்..
அவனுடைய அறை கதவு பூட்டப்படாமல் லேசாக திறந்து தான் இருந்தது.. கதவை தட்டி பார்த்தவள் யாரும் வராமல் போகவே “என்ன.. இன்னைக்கு யாருமே வீட்ல இருக்க மாட்டேங்கறாங்க? ஒருவேளை இவனும் எங்கேயாவது கிளம்பி போயிட்டானா?” என்று எண்ணிய படியே மெதுவாக கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள்..
அவள் கண்ட காட்சியில் மூச்சே நின்று விடும் போல இருந்தது அவளுக்கு..
அங்கே இந்தர் தன் கை நரம்பை அறுத்து அதிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க மயக்க நிலையில் படுத்து இருந்தான்..
அவன் அறைக்குள் வேகமாக ஓடி சென்றவள் கட்டிலின் வெளிப்புறம் தொங்கிக் கொண்டிருந்த அவன் தன் கையைப் பிடித்து கட்டில் மேல் வைத்து “ஏய்.. இந்தர் பக்கி.. என்ன வேலைடா பண்ணி வச்சிருக்க.. ஐயோ.. இப்ப நான் என்ன பண்ணுவேன்.. இவன் கையில் இருந்து பிளட் வேற நிக்காம வந்துட்டு இருக்கு.. முதல்ல அதை நிறுத்துறதுக்கு வழியை பார்ப்போம்..”
முதலில் அவன் கையில் வந்து கொண்டு இருந்த குருதியை நிறுத்தும் வழியை யோசித்தாள்.. அவளும் மருத்துவராக ஆகப்போகிறவள் தானே.. இப்படி கையில் வெட்டு பட்டால் முதல் உதவி செய்வது எப்படி என்று அவளுக்கு தெரியும்.. கீழே தன் அறைக்கு ஓடி சென்று தான் வைத்திருந்த முதலுதவி பெட்டி எடுத்துக் கொண்டு ஓடி வந்தவள் மெல்லிய பஞ்சு துணியை எடுத்து அவன் காயத்தில் வைத்து அழுத்தி ஒரு வழியாக ரத்தத்தை கட்டுப்படுத்தி விட்டு ஒரு சிறிய கட்டும் போட்டு விட்டாள்..
ஏற்கனவே அவள் அழைத்திருந்த வாடகை கார் வர அந்தக் கார் ஓட்டனரின் துணையோடு இந்தரை தூக்கி வந்து காரில் ஏற்றினாள்..
மருத்துவமனை நோக்கி விரைந்தது அந்த கார்..
தமிழ்வாணனை அனுமதித்து இருந்த அதே மருத்துவமனைக்கு தான் இந்தரையும் அழைத்துச் சென்று இருந்தாள் மலரழகி..
தமிழ்வாணனை அழைத்துக் கொண்டு போனது போல் அவசர சிகிச்சை பிரிவுக்கு இந்தரையும் அழைத்துக் கொண்டு போக அங்கே வெளியே தமிழ்வாணனின் நிலை குறித்த கவலையோடு நின்றிருந்த தீரனும் மதியும் ஒரு ஸ்ட்ரெச்சரில் இந்தரை தள்ளிக் கொண்டு ஒரு வார்ட் பாய் முன்னே வந்து கொண்டிருக்க பக்கத்தில் மலரழகியோ பதட்டத்தோடு நடந்து வருவதை பார்த்து அதிர்ந்து போனார்கள்..
இருவரும் மலரிடம் ஓடிவந்து “என்ன ஆச்சு மலரு..?” என்று பதட்டமாக ஒரு சேர வினவ மலரழகி தீரனிடம் “மாமா.. நான் அவன் கிட்ட இன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேட்கலாம்ன்னு அவன் ரூமுக்கு போனேன்.. அவன் கையை அறுத்துக்கிட்டு மயக்கமா இருந்தான் மாமா.. கைலருந்து நெறைய இரத்தம் போய்க்கிட்டு இருந்தது.. எப்படியோ ப்ளீடிங் ஸ்டாப் பண்ணி அவனை கூட்டிட்டு வந்துட்டேன் மாமா..”
அவள் சொன்னதைக் கேட்டு இடிந்தே போனான் தீரன்.. தன் தம்பியின் பக்கம் திரும்பி அவனை வாரி அணைத்து “ஐயோ இந்தரு.. ஏன்டா..? ஏன்டா இப்படி பண்ண..? கோவத்துல நான் சொன்ன வார்த்தைக்காக என்னை விட்டு ஒரேயடியா போகணும்னே முடிவு பண்ணிட்டியா நீ? இதுக்காடா உன்னை பார்த்து பார்த்து வளர்த்தேன்.. “கதறி கதறி அழுது கொண்டிருந்தான் தீரன்..
அதற்குள் அங்கு மருத்துவர் ஒருவர் வந்து “யார் இவரு..? ஹலோ மிஸ்டர்.. இது ஹாஸ்பிடல்.. இங்க இப்படி எல்லாம் அழக்கூடாது.. என்ன ஆச்சு இவருக்கு?” என்று இந்தரை பார்வையால் சுட்டி காட்டி கேட்க மலரழகி அவரிடம் நிகழ்ந்ததை சொன்னாள்..
“முதல்ல அவருக்கு ட்ரீட்மென்ட் பண்ணணும்.. கொஞ்சம் நீங்க அவர்கிட்ட இருந்து தள்ளி இருக்கீங்களா..? நீங்க இப்படியே கட்டி பிடிச்சு அழுதுட்டு இருந்து ட்ரீட்மென்ட்க்கு லேட்டாச்சுன்னா ரொம்ப க்ரிட்டிக்கலாயிரும்.. தள்ளி நில்லுங்க சார்..”
அங்கே பக்கத்தில் இருந்த வார்ட் பாயை பார்த்து “மகேஷ்.. அந்த எமர்ஜென்சி ரூம் நம்பர் டூக்கு இவரை கூட்டிட்டு போ.. நான் வந்து பார்க்கிறேன்..” என்று கறாராய் சொல்லிவிட்டு வேக வேகமாய் அந்த அறைக்குள் இந்தர் பின்னாலேயே நுழைந்தார் நுழைந்தார்..
மதியழகியோ கண்ணீர் வழிய தீரனை தான் கேள்வியாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் பார்வையின் தீர்க்கம் அவனை என்ன என்னவோ நியாயம் கேட்டுக் கொண்டிருந்தது..
“இப்ப சந்தோஷமா உங்களுக்கு? எப்படி சந்தோஷமா பட்டாம்பூச்சி கணக்கா எந்த கவலையும் இல்லாம திரிஞ்சிக்கிட்டு இருந்த புள்ள.. இப்படி உயிரையே எடுத்துக்கிற அளவுக்கு குற்ற உணர்ச்சியில சாக வெச்சிட்டீங்களே அவனை.. இந்தருக்கு மட்டும் ஏதாவது ஆச்சு நான் எப்பவுமே உங்களை மன்னிக்க மாட்டேன் தீரா..”
“ஐயோ மதி.. அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னாலயே என்னை மன்னிக்க முடியாது.. அடுத்த நிமிஷம் நானும் செத்துருவேன்.. அவனுக்காக மட்டும் தான் நான் வாழ்ந்துகிட்டு இருந்தேன்.. அவன் என் உயிர் மதி.. அவனை விட்டு என்னால இருக்க முடியாது.. ஆனா இந்தருக்கு ஒன்னும் ஆகாது.. அவன் திரும்ப என் கிட்ட வந்துடுவான்.. அவனுக்கு தெரியும்.. அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவனோட இந்த அண்ணன் உயிரோட இருக்க மாட்டேன்னு.. அவன் என்னை சாக விட மாட்டான்..”
அவன் அழுது புலம்புவதை பார்க்க பாவமாய் இருந்தாலும் அவன் பேசிய பேச்சு நினைவுக்கு வர அவனை வெறுப்புடனே நோக்கி இருந்தாள் மதி..