சென்னையில் உள்ள மிகப் பிரபல்யமான வைத்தியசாலை. ஆம்புலன்ஸ் வண்டியின் சத்தம் ஒருபுறம், மருந்து எடுக்க வந்திருக்கும் மக்களின் சத்தம் ஒருபுறம், ஊசி போட்டதால் அழும் சிறு குழந்தைகளின் சத்தம், செக்அப் செய்ய நிறைமாத வயிற்றுடன் கணவனின் கைகளை பிடிக்துக் கொண்டு கண்களில் ஒருவித சந்தோசமும் பயமும் நிறைந்த கண்களுடன் இருக்கும் பெண்கள் ஒரு புறம் என அந்த வைத்தியசாலையே ரொம்ப பிஸியாக இருந்தது.
அறை ஒன்றில் டாக்டர் ஒருவரின் முன்னிலையில், கையில் ஒரு ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு, கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைக்கவும் மனம் இன்றி இருந்தாள் சம்யுக்தா. அவளைப் பார்க்க டாக்டருக்கும் பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்வது விதி வலியது அல்லவா. “சம்யுக்தா நீங்க தான் உங்களோட மனச தேத்திக் கொள்ளணும்…. இந்த நாலு மாசமா நீங்களும் என்கிட்ட ட்ரீட்மென்ட்டுக்கு வாரீங்க…. என்ன செய்றது நானும் என்னால முடிஞ்ச அத்தனை ட்ரீட்மென்ட்டும் பண்ணிப் பார்த்தேன்…. கடைசியாக ஃபாரின்ல இருந்து கூட டாக்டரை வர வச்சு உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணினேன்…. ஆனால் அதோட பலன்கூட உங்களுக்கு கை கொடுக்கவே இல்லையே… நீங்க உங்களுடைய ஹஸ்பண்ட்கிட்டேயும், உங்களோட மாமியார்கிட்டேயும், உங்க அம்மாகிட்டேயும் உண்மையை எடுத்துச் சொல்லுங்க…. அவங்க புரிஞ்சிப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்…. இதுக்கு மேல என்னால எதுவும் பண்ண முடியாது….” என்று சொன்னார் டாக்டர் வசுந்தரா.
டாக்டரிடம் பதில் எதுவும் சொல்லாமல், கண்களைத் துடைத்து விட்டு கையில் இந்த ரிப்போர்ட் எடுத்து வெறுமையுடன் பார்த்த சம்யுக்தா, டாக்டரிடம் எதுவும் பேசவில்லை. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
சம்யுக்தா அவளைப் பற்றி பார்த்து விட்டு வருவோம். சென்னைதான் சம்யுக்தாவின் பிறப்பிடம். தந்தை மணிகண்டன். பிஸ்னஸ் மேன். தாய் லீலாவதி. இவர் கிளப், மகளீர் சங்கம் என்று சுத்திக் கொண்டு இருப்பவர். சம்யுக்தாவின் தங்கை வித்யா. அமெரிக்காவில் பிரபல்யமான யூனிவர்சிட்டியில் படிக்கிறாள். அக்கா என்றால் மிகவும் பிரியம்.
உமேஸ்வரனுக்கு பிஸ்னஸில் ஒரு பிரச்சனை வர அதை சரி செய்யவதற்கு உதவியவர் மணிகண்டன். உமேஸ்வரனின் மனைவி கீதா. இவருக்கும் லீலாவதிக்கும் கிளப்பில் ஆரம்பமானது நட்பு. இருவரும் பணம், அந்தஸ்தை பெரிதாக நினைப்பவர்கள்.
சம்யுக்தாவைப் பார்க்க இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா போல் இருப்பாள். கண்களில் பெரிய கண்ணாடி,உப்பிய கன்னங்கள், உடல் பருமனும் சற்றே அதிகம். இவளை மணிகண்டனின் மகள் என்று யாருக்கும் பெரிதாக தெரியாது. ஏன் என்றால் மணிகண்டனும் சரி, லீலாவதியும் சரி அவளை எங்கேயும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். சம்யுக்தா எம்பிஏ படித்து விட்டு வேறு ஒரு கம்பனியில் ட்ரைனிங் செய்து கொண்டு இருக்கிறாள். அவளுக்கு பணம், ஆடம்பரம் இதில் நாட்டம் இல்லை. ரொம்ப சிம்பிளாக இருப்பாள்.
மணிகண்டனின் சொத்தின் மேல் உமேஸ்வரனுக்கு ஆசை. எப்படியாவது அதை அடைய வேண்டும் என்று நினைப்பவர். அவரின் மகன் பிரகாஷ். தந்தை சொல்படி கேட்பவன். ஆனால் தனக்கு பிடித்ததை எப்படியாவது அடைய வேண்டும் என்ற குணம் கொண்டவன்.
மணிகண்டனும் உமேஸ்வரனும் பேசி சம்யுக்தாவிற்கும், பிரகாஷ்க்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணம் நிச்சயமானாலும் சம்யுக்தா பிரகாஷிடம் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. அதேபோல பிரகாஷ்ஷீம் சம்யுக்தாவிடம் பேச அக்கறை காட்டவில்லை. அவனுக்கு இவளை பிடிக்கவே இல்லை. உமேஸ்வரனும் கீதாவும் பலவாறு பேசி சம்மதிக்க வைத்திருந்தனர்.
திருமண நாளும் வந்தது. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தாள் சம்யுக்தா. வரவேற்பு பெரியளவில் நடக்கவில்லை. சிம்பிளாகவே அனைத்தையும் முடித்து விட்டனர். இரவு சடங்கிற்காக அவளை தயார் செய்து கொண்டு இருந்தனர் லீலாவதியும் கீதாவும். கீதா அவளிடம், “பத்தே மாசத்தில் ஒரு குழந்தையை பெத்து எங்கிட்ட குடுத்திடு சம்மு…..” என்றார்.
சம்யுக்தா வெட்கத்தில் தலை குனிந்தாள். பின்னர் அம்மா, அப்பா, அத்தை, மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சுவாமி அறையில் விளக்கேற்றி வணங்கி விட்டு பிரகாஷின் அறைக்குள் சென்றாள்.
அறையில் பிரகாஷை காணவில்லை. உள்ளே வந்து, கொண்டு வந்திருந்த பாலை மேசையில் வைத்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது பால்கனியில் இருந்து, கையில் போனுடன் உள்ளே வந்தான் பிரகாஷ். தனது அறையில் இவளைப் பார்த்ததும் முகத்தை சுழித்தான். என்ன செய்வது எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தவன், மெல்ல அவள் அருகில் வந்தான்.
அவன் அருகில் வந்ததும் பதட்டத்துடன் எழுந்து நின்றாள். லீலாவதி சொன்னது ஞாபகம் வர, அவனது காலில் விழுந்தாள். அவனும், “எழுந்திரு….” என்று சொன்னான். பின் பாலை எடுத்துக் குடுக்க, “நான் பால் குடிக்கிறது இல்லை….” என்றான்.
அவளும் தலையை ஆட்டிவிட்டு பாலை மறுபடியும் மேசையில் வைத்தாள். கட்டிலில் இருந்தவன், அவளை அருகில் இருக்கச் சொல்ல, அவளும் வெட்கமும் தயக்கமும் போட்டியிட மெதுவாக அவன் அருகில் இருந்தாள். அவளிடம், “நீ ஏன் இவ்வளவு குண்டா இருக்க…? கண்ணுக்கு வேற கண்ணாடி போட்டிருக்கிற….?” என்று கேட்டான்.
அதற்கு சம்யுக்தா, “நான் ஸ்கூல் படிக்கும் போது மெலிவாகத்தான் இருந்தேன்…. அதுக்கு அப்புறம்தான் குண்டாகிட்டேன்…. அம்மாதான் கண்ணாடி போட்டுக்கோனு சொன்னாங்க…. அதுதான் கண்ணாடி போட்டிருக்கிறன்…” என்றாள்.
அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவன்,”இந்த காலத்தில உன்னை மாதிரி யாரும் இருப்பாங்களா….? அசிங்கமான உனக்கு நான் புருஷனா….? அவங்கதான் உங்கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொன்னால் உனக்கு அறிவு இல்லை….. இவ்வளவு அழகா இருக்கிறானே, இவனை நாம கல்யாணம் பண்ணிட்டா, இவனோட வாழ்க்கை என்னவாகும்னு நினைச்சி பார்த்தியா….? நான் என்னோட ஃபிரண்ட்ஸ்கிட்ட உன்னை எப்படி அறிமுகப்படுத்தி வைப்பேன்…? வெளியில போகும்போது உன்னை என்னால கூட்டிட்டு போக முடியாது…. இந்த வீட்டிற்குள் மட்டும்தான் நீ என்னோட பொண்டாட்டி…. என்ன புரிஞ்சுதா…? இதை உன் வீட்டில சொல்ல நினைச்ச அப்புறம் என் பெல்ட்தான் பேசும்…” என்றான்.
கல்யாணம் நடந்த முதல் நாளே கணவன் இப்படி பேசுவதை ஒரு மனைவியால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? அதுவும் இயற்கையாகவே மென்மையான குணம் கொண்ட சம்யுக்தாவால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுகை வந்தது. அழும் அவளது கன்னத்தை இறுக்கிப் பிடித்தான். “என் முன்னாடி கண்ணை கசக்கிக்கிட்டு நின்னைனா கொன்று புதைச்சிடுவன்….” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு விளக்கையும் அணைக்க போக, அவனை தடுத்தாள் சம்யுக்தா .
“என்னடி புருஷன் தொட்டா தடுக்கிற…? உன்னை யாரு தொடப்போறா….? உன்னை ஏறெடுத்துப் பார்க்கவே யாரும் இல்லை…. அதுக்குள்ள உன்னை யாரு தொடப்போறானு கேட்கிறன்…. உன்னை கல்யாணம் பண்ணின பாவத்துக்கு சந்தோசமா இருக்கலாம்னு நினைக்கிறேன்…. அதை தடுக்க உன்னால முடியாது. மரியாதையா என்னை அனுசரித்து போ….” என்றவன் விளக்கை அணைத்து அவளையும் அணைத்தான். பெண்ணை மென்மையுடன் கையாளும் ஆண் சிறந்தவன். இங்கோ பிரகாஷ் சம்யுக்தாவை போட்டு கசக்கிப் பிழிந்தான். முதல் நாள் இருவரும் இணைந்து அழகாக ஆரம்பிக்கும் தாம்பத்யத்தை அவனோ அதிரடியாக ஆரம்பித்தான். சம்யுக்தாவால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் இத்தனை நேரம் பேசிய பேச்சும் இவளை வதைத்தது. இருள் சம்யுக்தாவின் கண்ணீரையும், அவனது சித்திரவதைகளினால் உண்டான காயத்தையும் மறைத்தது.
அவனது வேலை முடிந்ததும் அவளிடம் இருந்து பிரிந்தவன், சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். புகையை சம்யுக்தா முகத்தில் விட்டான். சிகரெட் புகையினால் இருமினாள் அவள். தனது கையில் இருந்த சிகரெட்டால் அவளது காலில் சூடு வைத்தான். வலியில் கத்தப் போனவளின் வாயை மூடியவன், “கத்தின சத்தம் வெளியே வந்திச்சு கொன்னுடுவன்….” என்றான். அவனது இஸ்டப்படி அவளது காலில் சூடு வைத்தான். பின் அவனது கட்டிலில் இருந்து அவளை கீழே தள்ளி தலையணையையும் கீழே போட்டான்.
“எனக்கு எப்போது உன்னோட தேவையோ, அப்போது மட்டும்தான் இந்த கட்டில்ல உனக்கு அனுமதி…. மற்றைய நேரத்துல உன்னோட இடம் கீழேதான்…..” என்றவன் சிகரெட்டை முடித்து விட்டு படுத்து விட்டான்.
அடுத்த நாள் காலையில் தூக்கம் கலைந்து எழுந்து பிரகாஷ், குளித்துவிட்டு வந்தான். சுவரில் சாய்ந்து கொண்டு தூங்கும் சம்யுக்தாவைப் பார்க்க அவனுக்கு கோபம் வந்தது. குளியலறைக்குச் சென்று, குளிர்ந்த தண்ணீரை எடுத்து வந்து அவளது முகத்தில் ஊற்றினான். தூங்கிக் கொண்டு இருந்தவள் மீது குளிர் தண்ணீர் பட அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். அவளுக்கு முன்னால் எள்ளலாக சிரித்தபடி நின்றான் பிரகாஷ். “என்ன மேடமுக்கு பெட் காப்பி வேணுமோ….? சீபே…. போய் குளிச்சிட்டு எனக்கு காப்பி எடுத்திட்டு வா….” என்றான். எதுவும் பேசாமல் மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.
தான் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் பதிலுக்கு எதுவும் பேசாமல் நிற்கும் இவளை மேலும் கொடுமைப்படுத்தி சந்தோசப்பட்டான் பிரகாஷ். இப்படியே நாட்கள் சென்றன. புகுந்த வீட்டில் வேலைக்காரி போல இருந்தாள் சம்யுக்தா. பெற்றவர்களோ, கல்யாணம் பண்ணிக் குடுத்ததும், கடமை முடிந்தது என்று அந்தப் பக்கம் வருவதில்லை. யாரும் இல்லாத அநாதை போல இருந்தாள் சம்யுக்தா. வேலைக்காரர்களின் ஏளனப் பார்வையும் அவளை கூனிகுறுகச் செய்தது.
இரவில் பிரகாஷின் தேவை முடிந்ததும், அவளது காலில் வைக்கும் சிகரெட் சூட்டில் அவளது உயிரே போகும். ஆனால் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வராது. தினமும் சூடு வாங்குவதால் அதற்கு உடல் பழகி விட்டது. குண்டம்மா குண்டம்மா என்று அவளை கேலி செய்து சந்தோசப்பட்டான். சம்யுக்தாவை வேலைக்கு போக வேண்டாம் என்றும் சொல்லி விட்டான் பிரகாஷ். அவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.
பிரகாஷை அவளால் புரிந்து கொள்ள முடியவே இல்லை. கீதாவுக்கும் இவளை பிடிக்காது. சம்யுக்தா சில நேரங்களில் யோசிப்பாள், “நம்மளை பிடிக்கலனா எதுக்காக கல்யாணம் பண்ணினாங்க….? எதுக்கு இந்த வீட்டிற்கு மருமகளா கொண்டு வரணும்….?” என்று தனக்குதானே கேள்வி கேட்டுக் கொள்வாள். பாவம், அவளுக்கு அதற்குரிய பதில் தான் இதுவரை கிடைக்கவில்லை. இப்படியே கல்யாணம் நடந்து பன்னிரெண்டு மாதங்கள் கடந்து விட்டன.
அன்று அவள் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாள். பிரகாஷின் சொந்தக்காரர் இருவர் அவர்களது வீட்டிற்கு வந்திருந்தார். கீதாவும் பிரகாஷீம் அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்க, சம்யுக்தா வந்தவரை உபசரித்து ஜீஸ் குடுத்தாள். அதை வாங்கிக் குடித்தவர். சம்யுக்தாவை நலன் விசாரித்தனர். அவளும் நல்லா இருப்பதாக சொன்னாள்.
அவருடன் வந்திருந்த பெண், “கீதா உன் பையனுக்கு அப்புறம்தான் என்னோட பையனுக்கு கல்யாணம் நடந்திச்சு…. இப்போ என்னோட மருமகளுக்கு ஒன்பதாவது மாசம். வளைகாப்பு வச்சிருக்கிறம்…. அதுக்கு உங்களை அழைக்கிறதுக்குத்தான் நாங்க வந்திருக்கிறம்…. உங்க மருமகள் நல்ல செய்தி இன்னும் சொல்லலையா….? எதுக்கும் ஒரு தடவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ கீதா…. அப்புறம் உன்னோட வம்சத்துக்கு வாரிசு இல்லாமல் போயிடும்….” என்று கொழுத்திப் போட்டு விட்டுச் சென்றார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊