அதிகாலை நேரம் 4 மணி, கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் பகுதி மேற்தரப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்று கூட சொல்லலாம்… அங்கு தான் அமைந்திருந்தது அந்த அழகான பங்களா… வீட்டினுள் தனது அறையின் மெத்தையில் அமர்ந்து தனது விரல் நகங்களை கடித்து கொண்டு இருந்தாள் இனியா மிக பதட்டத்துடன்,
முகத்தில் இருந்த சோர்வும் கண்களில் தெரிந்த சிவப்புமே கூறியது இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை என்று, அவளின் அருகே சாந்தமான முகத்துடன் உறங்கும் போது கூட உதட்டில் ஒட்டி இருக்கும் சின்ன சிரிப்புடன் குழந்தை போன்று உறங்கி கொண்டு இருந்தாள் திரவியா…
இனி கடிக்க நகமே இல்லை என்னும் அளவு விரல்களை கொறித்து முடித்த இனியா, திரும்பி தன் அருகே படுத்து இருக்கும் திரவியாவை பார்த்தவள், “குட்டி, குட்டி எழுந்திருடி” என்று அவள் கையை தட்டி அழைத்தாள்…
திரவியாவோ எந்த அசைவும் இன்றி படுத்து இருக்கவே, இப்போது குட்டி குட்டி என்று அழைத்தபடி அவளை உலுக்கினாள்… இதுக்கு எல்லாம் அசைவேனோ என்றபடி புரண்டு படுத்து தனது உறக்கத்தை தொடர்ந்தாள் திரவியா…
‘இத்தனை தடவை எழுப்பியும் எப்படி தூங்குறா பாரு கும்பகர்ணனுக்கு குளோஸ் ரீலேஷன் மாதிரி என்று தலையில் அடித்து கொண்ட இனியா,
‘இவள’ என்றபடி மெத்தையின் அருகே இருந்த டேபிளில் மீது வைக்கப்பட்டு இருந்த வாட்டர் பாட்டில் எடுத்து சிறிது அளவு தண்ணீரை கைகளில் எடுத்து திரவியா முகத்தில் தெளிந்தாள்…
குளிர்ந்த நீர் தன் முகத்தில் பட்டதும், “அய்யோ அம்மா” என்றபடி அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் திரவியா.. அவள் முன்பு தனது கை விரல்களில் இரண்டு விரல்களை நீட்டி தியா குட்டி “இந்த இரண்டு விரல்ல ஒன்னு தொடுடா” என்ற இனியாவை முடிந்த மட்டும் முறைத்தாள் தியா…
அவள் முறைப்பது புரியவே “சாரிடா நான் உன் செல்ல அக்கா தானே, உன் அக்கா ரொம்ப ரொம்ப கன்பூசியஸா இருக்கேன்… டாடி காலையிலே என்ன முடிவு சொல்லுவாங்களோ பயமா இருக்கு… அதான் டாடி எஸ் சொல்லுவாங்களா, நோ சொல்லுவாங்களா இந்த இரண்டு விரல்ல ஒன்னு தொட்டு சொல்லுடா” என்று இனியா கேட்டதும்,
அதில் மேலும் கடுப்பான திரவியா தன் முன்பு இனியா நீட்டிய கரங்களை தட்டி விட்டு, “ஏண்டி இதே கொஸ்டினா நைட்டுல இருந்து இப்ப வரை 40 தடவை கேட்டுட்டு, நானும் உனக்கு பதில் சொல்லிட்டேன்… மறுபடியும் மறுபடியும் தூங்குற என்ன ஏன்டி தொந்தரவு பண்ற, நீ எல்லாம் நல்லா இருக்கு மாட்ட, நல்லாவே இருக்க மாட்டா” என்று சந்தானம் ஸ்டைலில் கூறியவள்,
“உன் லவ்வுக்காக நைட்டு ஃபுல்லா நீ தூங்கம இரு அது நியாயம்,என் தூக்கத்தை ஏண்டி கெடுக்குற, இது ரொம்ப ரொம்ப அநியாயம்… டாடி என்ன சொல்லுவாங்க கேட்ட தானே இப்ப சொல்றேன்… டாடி நோ தான் சொல்வாங்க… உன் லவ் புட்டுக்கும், நீ லேடி தேவதாஸா சுத்த போற பாரு, எனக்கு கருநாக்கு சொன்ன பலிக்கும்… இன்னோரு தடவை என்னை டிஸ்டர்ப் பண்ண அவ்ளோ தான் உன்ன” என்று கழுத்தை நெறிப்பது போல் பாவனை செய்து விட்டு விட்ட தூக்கத்தை தொடர திரும்பி மெத்தையில் படுத்தாள்…
படுத்தவள் இரண்டு நிமிடம் கழித்து திரும்பி இனியாவை பார்த்தாள்.. அவள் முகம் வாடி இருக்கவே, ‘ச்சே கொஞ்சம் ஓவரா பேசிட்டோம் போல’ என்று தன்னையே கடிந்து கொண்டு, எழுந்து இனியா தோள் மீது கைப் போட இனியா தியா கையை தட்டி விட்டாள்…
மீண்டும் இனியா மேல் கையை போட்டவள், அவள் தாடையை பிடித்து “சாரி டியர் சாரி தெரியாம பேசிட்டேன்… இப்ப நீ ஏன் இவ்வளோ டென்ஷனா இருக்க, நைட்டு எல்லாம் தூங்கமா முழிச்சு கவலைப்படுற அளவுக்கு இதில் என்ன இருக்கு, நம்ம இரண்டு பேருமே டாடியோட பிரின்சஸ்… இதுவரை நாமே எதை ஆசை பட்டு கேட்டாலும் அதை ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்கமா டாடி வாங்கி கொடுத்து இருக்காங்க… அப்படி இருக்கும் போது உன் லவ் மேட்டர்ல டாடி நோ சொல்லிடுவாங்களோன்னு நீ ஏன் பயப்படுற, இது தேவையில்லாத டென்ஷன், ராகவ் மாமாவ டாடி வேண்டாம் சொல்லமாட்டாங்க, ஏன்னா அவரை உனக்கு ரொம்ப பிடிக்குங்கிறதால, அதுனால நீ உன் மனசை போட்டு ரொம்ப குழப்பிக்கமா நல்லா தூங்கு” என்று திரவியா கூறியதும்,
ஏதோ சொல்ல வந்த இனியாவை தடுத்தவள், “ச்சூ பேசமா படு ஒரு 2, 3 ஹவர்ஸாவது தூங்கு இனியா” என்று அவளை படுக்க வைத்து போர்த்தி விட்டாள் தியா..
இனியா, திரவியா இருவரும் பாலகிருஷ்ணன்- யமுனா தேவி தம்பதிகளின் புதல்விகள்.. பாலகிருஷ்ணன் கோவை, திருப்பூர் மாநகரில் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்… கோவையின் பிரபலமான தொழில் அதிபர்…
யமுனா அவருக்கு ஏற்ற நல்ல குடும்ப தலைவி… திரவியா, இனியா இருவருக்கும் கண்டிப்பான அம்மா… இனியா வயது 25 பட்ட படிப்பு முடித்து விட்டு தந்தைக்கு உதவியாக அவர்கள் தொழிலையே கவனித்து வருகிறாள்… திரவியா வயது 20 ஜெர்னலிசம் இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கின்றாள்… தந்தையின் செல்ல மகள்… திரவியா அந்த வயதுக்கே உரிய சேட்டை குறும்பு மிக்க சுட்டி பெண்… அதற்காக அராத்து வாயாடி அப்புடி சொல்லவும் முடியாது… அமைதியான பொண்ணுன்னு கிடையாது… இரண்டுமே அப்பப்ப எட்டி பார்க்கும்.. கொஞ்சம் பிடிவாதக்காரி அவ்வளவு தான்..
காலை 8 மணி டைனிங் டேபிளில் இனியா, திரவியா, பாலகிருஷ்ணன் அமர்ந்து இருக்க… யமுனா அவர்களுக்கு காலை உணவை பரிமாறி கொண்டு இருந்தார்… பாலகிருஷ்ணன் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருக்க, இனியா அவர் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்… திரவியா தனது மொபைலை நோண்டி கொண்டு இருந்தாள்… “தியா சாப்பிடுற இடத்தில் என்ன போன் கீழ வைச்சிட்டு சாப்பிடு, காலேஜ்க்கு டைமாகுது” என்று யமுனா கூற, “இருங்க மம்மி ஒரு நிமிஷம்” என்றாளே தவிர மொபைலை கீழே வைக்கவில்லை…
இனியா தந்தை எந்த பதிலும் கூறாது அமைதியாகவே இருக்க, “டாடி”….. என்று அழைத்தாள்…
அவள் முகம் பார்த்த கிருஷ்ணன்… அவள் தன்னிடம் இருந்து பதில் எதிர்பார்க்கிறாள் என்பது புரிந்து, “இனிம்மா நீ காதலிக்கிறாதா சொன்ன ராகவேந்திரன் பத்தி அவங்க குடும்பத்த பத்தியும் வெளிய விசாரிச்சேன் நல்ல விதமான தான் சொல்றாங்க… ஆனா அவரோட அண்ணா பேர் கூட ஏதோ தேவேந்திரன்” அவரை பத்தி என்று இழுக்கவே,
இவ்வளவு நேரம் இவர்களின் பேச்சை கவனிக்காது தனது மொபைலில் முகத்தை புதைத்து கொண்டு இருந்த திரவியா, ஏனோ தேவேந்திரன் என்ற பெயரை கேட்டவுடன் அனிச்சையாக தலை நிமிர்த்தி தனது தந்தையை பார்த்தாள்…
“டாடி மத்தவங்க எப்படியோ ராகவ் ரொம்ப நல்லவங்க… என் ரொம்ப ரொம்ப காதலிக்கிறாங்க… நாலு வருஷமா காதலிக்கிறோம்… என் மேல் உயிரையே வச்சு இருக்காங்க… என்னை சந்தோஷமா பார்த்துக்குவாங்க” என்று இனியா தன் காதலுக்காக பரிந்து பேச,
சில நொடிகள் யோசனை செய்த கிருஷ்ணன்.. “சரிம்மா உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்… அதனால் எனக்கு சம்மதம்… அவங்க வீட்டில் இருந்து வந்து பேச சொல்லு” என்று கூறியதும்… இனியாவுக்கு பயங்கர சந்தோஷம்… “தாங்க்ஸ் டாடி தாங்க்ஸ் டாடி” என்று அவரை கட்டி கொண்டாள்…
தியாவுக்கும் இதில் மகிழ்ச்சி… “இனி இப்ப ஹாப்பியா, நான் சொன்ன தானே டாடி கண்டிப்பா ஓகே சொல்லுவாங்கன்னு” என்று கூறவும், அவளையும் கட்டி கொண்டு “ரொம்ப ஹாப்பிடா தியா குட்டி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட,
“இந்த மாதிரி பண்ணி என்னை ஏமாத்ததாத டீரிட் கொடுடி” என்ற தியாவிடம்,
“கண்டிப்பா ஈவ்னிங் தரேன்” என்று கூறிய இனியா தனது மொபைலை எடுத்து கொண்டு ராகவ் இடம் தனது தந்தை சம்மதம் கூறியதை பற்றி சொல்ல அங்கிருந்து ஓடினாள்…
அவள் சென்றபின் யமுனா தனது கணவரிடம், “ஏங்க ஏன் இப்ப இனியா கிட்ட இந்த சம்மந்ததுக்கு ஓகே சொன்னீங்க… நான் வேண்டாம் சொல்ல சொன்னேனே, அந்த வீட்டில் நம்ம இனியா காதலிக்கிற பையனோட அண்ணா இன்னும் கல்யாணம் ஆகமா இருக்கான்… அவனை பத்தி வெளியே வேற ஒரு மாதிரி சொல்றாங்க அப்புடி இருக்கும் போது ஏங்க சரின்னு சொன்னீங்க”…
“இங்க பாரு யமுனா ஒரு வெள்ளை பேப்பரில் சின்னதா ஒரு கரும்புள்ளி இருக்கிறதால் அதை தூக்கி எரிய முடியாது… நம்ம பொண்ணு விரும்புற ராகவ்வும் அவங்க குடும்பமும் ரொம்ப நல்லவங்க… ராகவ் அண்ணா எப்படி இருந்தா நமக்கு என்ன, எனக்கு என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம் அதனால் தான் சரின்னு சொன்னேன்” என்றார்…
இவ்வளவு நேரம் இவர்கள் உரையாடலை கேட்டும் கேட்காத போல சாப்பிட்டு கொண்டு இருந்த தியா, “ஆமா அவங்க அண்ணாவுக்கு ஏன் கல்யாணம் ஆகல, வெளிய என்ன மாதிரி சொல்றாங்க” என்று சாதரணமாக தான் கேட்டாள்…,
“இது உனக்கு தேவையில்லாத விஷயம் பேசாமா சாப்பிடுடி என யமுனா அதட்ட,
“அப்படி என்ன நான் தெரிஞ்சிக்க கூடாத விஷயம்” என்று தியாவும் பதிலுக்கு கேட்க,
யமுனா அவள் தலையில் கொட்டி “தெரிஞ்சிகிட்டு நீ என்ன பண்ண போற, இது எல்லாம் பெரியவங்க விஷயம்.. சாப்பிட்டது போதும் பர்ஸ்ட் காலேஜ்க்கு கிளம்பி போ” என்று கொஞ்சம் கடுமையாக கூற,
‘பெரிய சிதம்பரம் ரகசியம் அதை நாங்க தெரிஞ்சுக்க கூடாதாமே’ என்று தனது வாயில் முனுமுனுத்து கொண்டே தனது தந்தையிடம் மட்டும் கூறி விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்…
பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறு இது தான்… குழந்தைகள் முன்பு தேவையில்லாத விஷயங்கள் பற்றி பேசுவது… அவர்கள் அது என்ன என்று கேட்கும் போது உனக்கு இது தேவையில்லாதது என்று கோபப்படுவது… இது மிகப்பெரிய தவறு…
இன்று தியா தேவாவை பற்றி கேட்ட போதே கூறி இருந்தாள்… அதை அவளும் இயல்பாக எடுத்து கொண்டு இருப்பாளோ என்னவோ…
மறைத்து வைக்கப்படும் பொருளின் மீதும் ரகசியத்தின் மீதும் தான் பொதுவாக அனைவருக்கும் ஆர்வம் ஏற்படும்… அதே போல் தான் யமுனா கூறிய நீ ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒன்றை கேள்வி தான்… ஏன் தெரிந்து கொள்ள கூடாது என்ற ஆர்வத்தை தியாவுக்கு உண்டாக்கி, பிற்காலத்தில் தேவாவின் மீது அவள் பித்தாகி அவன் பின்னே சுற்ற வைக்க போகின்றது என்பதை யமுனா அறியவில்லை...