அழகான காலை வேளையில் அந்த திருமண மண்டபம் முழுவதும் சொந்த பந்தங்களால் நிரம்பி வழிந்தது. மண்டபத்தில் இருந்த சொந்த பந்தங்களுக்குள் ஏதோ சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது.
அக்கா இப்போ என்ன பண்ணுறது கல்யாணத்தன்னைக்கு அந்த படுபாவி இப்படி பண்ணிட்டு போயிட்டாளே. சொந்தக்காரங்களுக்கு விசயம் தெரிஞ்சு அவங்க வேற ஏதேதோ பேசிட்டு இருக்காங்க என்றார் பூங்கொடி. என்ன பண்ண சொல்லுற பூங்கொடி எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று வசந்தி தலையில் கை வைத்து அழுது கொண்டிருந்தார்.
அண்ணா எதாச்சும் பேசுங்க இப்படி உடைஞ்சு போயி உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம் என்ற கதிரேசனிடம் என்ன பேச சொல்லுற கதிரேசா என் மகள் கல்யாணத்தன்னைக்கு ஓடிப் போயிட்டாள்னு ஊரெல்லாம் தெரிஞ்சு என்னைக் காரித் துப்புறதுக்குள்ள ஒரு முழம் கயிறு இருந்தால் கொடு நான் தூக்கு போட்டு செத்துடுறேன் என்ற கணேசன் கண்ணீர் விட்டு அழுதார்.
அப்பா இப்போ என்ன பண்ணுறது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற பிரச்சனை பண்ணுறாங்க என்ற சரவணனிடம் என்னப்பா பண்ணுறது இப்படி ஒரு ஓடுகாலியை பெத்த பாவத்திற்கு அவங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் என்றவர் கண்ணீர் சிந்திட அண்ணன் அவங்க கிட்ட நான் பேசுறேன்.
வினோதா ஓடிப்போனால் என்ன அண்ணன் நம்ம சின்னப் பொண்ணு வெரோனிகா இருக்காளே அவளை கல்யாணம் பண்ணி வச்சுறளாமே என்ற கதிரேசனிடம் என்ன பேசுறிங்க நீங்க வெரோனிகா சின்னப் பொண்ணு அவளுக்கு பதினாறு வயசு தான் ஆகுது அவளை எப்படி என்றார் பூங்கொடி.
அப்போ மொத்த குடும்பமும் தூக்கு போட்டு சாகத் தான் வேண்டும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும், சொந்த பந்தங்களும் பேசுற பேச்சுக்கு என்று கூறிய கதிரேசனிடம் என்னங்க பேசுறிங்க நம்ம பொண்ணு பச்சப்பிள்ளைங்க என்றார் பூங்கொடி.
பச்சைப்பிள்ளை தான் பூங்கொடி ஆனால் என்ன பண்ணுறது நம்ம நேரம் அப்படி என்ற கதிரேசன் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச சென்றார்.
என்ன சொல்லுற சரவணா சித்தப்பா நம்ம பாப்பாவை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்காரா என்ற சக்திவேலுவிடம் ஆமாம் அண்ணா இதற்கு பாப்பா சம்மதிக்குமா என்றான் சரவணன்.
அவள் சின்னப் பொண்ணு அவளே சம்மதிச்சாலும் நாம எப்படி சம்மதிக்கிறது என்றாள் தேன்மொழி. தேனு நீ சும்மா இரு பெரியவங்க எடுக்கிற முடிவுல நாம தலையிடக் கூடாது என்றான் சக்திவேல்.
அண்ணியை ஏன் அண்ணா திட்டுற நம்ம பாப்பா இப்போ தான் ப்ளஸ்ஒன் முடிச்சுருக்கு. மாப்பிள்ளைக்கும், பாப்பாவுக்கும் கிட்டத்தட்ட பதினொரு வயசு வித்தியாசம் அவங்க கல்யாணம் எப்படி சரியா வரும் சட்டப்படி இது தப்பு என்ற சரவணனிடம் இது கிராமம் இங்கே அந்த சட்டம் எல்லாம் பேச்சுக்கு இல்லை என்ற சக்திவேல் நம்ம பேசுறதால எதுவும் மாறாது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன முடிவு பண்ணுறாங்கங்கிறது தான் முக்கியம் என்றான்.
என்ன சொல்லுறிங்க சம்மந்தி வினோதாவுக்கு பதிலா வெரோனிகாவை கல்யாணம் பண்ணி வைக்கிறதா. அவள் சின்னப் பொண்ணு என்றார் நெடுமாறன்.
சொந்தக்காரங்க முன்னாடி கல்யாணம் நின்று போயிட்டாள் இரண்டு குடும்பத்தோட மானமும் தானே போகும் சம்மந்தி அதனால தான் சொல்கிறேன் என்ற கதிரேசனிடம் இல்லை சம்மந்தி உதயா இதற்கு கட்டாயம் சம்மதிக்கவே மாட்டான் என்றார் நெடுமாறன்.
உதயாவை நான் சம்மத்திக்க வைக்கிறேன் என்ற கல்யாணிதேவி நீங்க போயி பொண்ணை ரெடி பண்ணுங்க என்று கதிரேசனை அனுப்பி வைத்தார்.
அம்மா என்ன பேசுறிங்க அந்தப் பொண்ணு சின்னப் பொண்ணு என்ற நெடுமாறனிடம் என்ன சின்னப்பொண்ணு அவள் அக்கா பண்ணின தப்புக்கு அவள் தான் பரிகாரம் பண்ணனும் என்றவர் அவள் வயசுல எனக்கு நீ பிறந்திட்ட இப்போ தான் சின்னப் பொண்ணாம் என்றவர் தன் பேரன் உதயச்சந்திரனின் அறைக்கு சென்றார்.
உதயா என்றவரிடம் சொல்லுங்க அப்பத்தா என்றான் உதயச்சந்திரன். என்னத்த சொல்ல கல்யாண மாப்பிள்ளை இப்படி உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம் தயாராகி மணமேடைக்கு போக வேண்டாமா என்றார் கல்யாணிதேவி. என்ன அப்பத்தா பொண்ணே இல்லாமல் மணமேடைக்கு போயி நான் என்ன ஐயர் கழுத்திலா தாலி கட்ட முடியும் என்றான் உதயச்சந்திரன்.
என்னப்பா இது பொண்ணு எல்லாம் ரெடி நீ தான் ரெடியாகனும் என்றவர் அந்த வீட்டில் ஒரு சின்னக்குட்டி இருக்காளே அவள் தான் பொண்ணு உன் மாமனார் வீட்டாளுங்க கிட்ட பேசியாஞ்சு அதனால இன்னைக்கு கட்டாயம் கல்யாணம் நடக்கும் நீ வா என்றார் கல்யாணிதேவி.
என்ன அப்பத்தா இது அந்தப் பொண்ணு வயசு என்ன என் வயசு என்ன அவளைப் போயி நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது நடக்கவே நடக்காது என்றான் உதயச்சந்திரன்.
எல்லாம் நடக்கும் என்ன பெரிய வயசு உன் அப்பா , அம்மாவுக்கும் அதே வயசு வித்தியாசம் தான். ஏன் உன் தாத்தாவுக்கும், எனக்கும் கிட்டத்தட்ட பதினாறு வயசு வித்தியாசம் எங்களுக்கு என்ன குறைச்சலா வாழ்ந்தோம். உங்க தாத்தா இருந்த வரை என்னை மகாராணி போல தான் பார்த்துக்கிட்டாரு என்ற கல்யாணிதேவி இந்தக் கல்யாணம் நம்ம குடும்பத்தோட கௌரவப் பிரச்சனை அதனால ஒழுங்கா மணமேடைக்கு வந்து சேரு.
இன்னைக்கு உனக்கு கல்யாணம் நடக்கவில்லைனா எனக்கு கருமாதி தான் நடக்கும் என்றார் கல்யாணிதேவி. அப்பத்தா என்றவனிடம் நான் சொன்னதை கட்டாயம் செய்து விடுவேன்னு உனக்கு நல்லாவே தெரியும் என்றவர் பிரகாஷ் உன் அண்ணனை ரெடியாகச் சொல்லி மணமேடைக்கு அழைச்சுட்டு வா என்று கூறி விட்டு சென்றார்.
என்னப்பா இது அந்த சின்னப் பொண்ணைப் போயி அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறிங்களா இது என்ன கொடுமையா இருக்கு அவள் இன்னமும் ஸ்கூலே முடிக்கவில்லை என்றாள் அர்ச்சனா. என்ன பண்ணுறது அர்ச்சனா உங்க அப்பத்தா ஒரு முடிவு எடுத்தாங்கன்னா அது சரியா தான் இருக்கும் என்றார் சுசீலா. என்ன பேசுறிங்க சித்தி நீங்க என்ற அர்ச்சனாவிடம் அர்ச்சனா வாயை மூடு என்ற மலர்கொடி சுசீ நீ போயி கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை கவனி என்றார்.
சுசீலாவும் சரிங்க அக்கா என்று தன் வேலையை கவனித்தார். தம்பி நீங்களும் சொந்த பந்தங்களை கவனிங்க என்கு மலர்கொடி கூறிட இளமாறனும் சென்று வேலையை கவனித்தார்.
என்ன சொல்றிங்கம்மா எனக்கு கல்யாணமா என்ன விளையாடுறிங்களா நான் இன்னும் ஸ்கூல் கூட முடிக்கவில்லை என்று அழ ஆரம்பித்தாள் வெரோனிகா. ரோனிமா புரிஞ்சுக்கோடி உன் அக்கா ஓடிப் போயிருவாள்னு நாம என்ன கனவா கண்டோம் என்ற பூங்கொடியிடம் என்னம்மா நீங்க பேசுறிங்க அக்கா ஓடிப் போனாள்னா அதற்காக என்னை பிடிச்சு கட்டி வச்சுருவிங்களா என்று அழ ஆரம்பிக்க அம்மாடி ரோனி இந்த பெரியப்பாவோட மானமும், உயிரும் இப்போ உன் கையில் தான்மா இருக்கு தயவு செய்து நம்ம குடும்ப மானத்தை காப்பாத்துடா என்று அவளது காலில் விழப் போனார் கணேசன்.
பெரியப்பா என்ன காரியம் பண்ணுறிங்க நீங்க போயி என்னுடைய காலில் என்ன இது என்றவள் சரி நான் சம்மதிக்கிறேன் என்று அவள் வாய் சொன்னாலும் மனம் முழுக்க வேதனையுடன் இருந்தாள்.
அவளுக்கு மட்டும் இல்லை மொத்த குடும்பமும் வேதனையுடனே இந்த கல்யாணத்தை நடத்த முடிவு செய்தனர்.
கணேசன், கதிரேசன் இருவரும் அண்ணன் தம்பிகள். கணேசனின் மனைவி வசந்தி . கணேசன் , வசந்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் சக்திவேல், சரவணன் ஒரு மகள் வினோதா.
கதிரேசனின் மனைவி பூங்கொடி. கதிரேசன் பூங்கொடி தம்பதிக்கு ஒரே மகள் வெரோனிகா.
சக்திவேலின் மனைவி தேன்மொழி. சக்திவேல், தேன்மொழி தம்பதியருக்கு ஒரு மகன் கதிர்ரூபன். கதிர்ரூபன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஐந்து வயது குட்டிப் பையன்.
கல்யாணிதேவிக்கு இரண்டு மகன்கள் நெடுமாறன், இளமாறன். ஒரு மகள் வசுந்தரா.
நெடுமாறனின் மனைவி மலர்கொடி. நெடுமாறன் , மலர்கொடி தம்பதியருக்கு ஒருமகன் உதயச்சந்திரன், ஒரு மகள் அர்ச்சனா. அர்ச்சனா கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
இளமாறனின் மனைவி சுசீலா. இளமாறன், சுசீலா தம்பதியருக்கு ஒரு மகன் பிரகாஷ், மகள் ஊர்மிளா. ஊர்மிளாவிற்கும் , வெரோனிகாவிற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது.
என்ன அண்ணா யோசனை என்ற பிரகாஷிடம் அந்தப் பொண்ணு வெரோனிகாவுக்கு நம்ம ஊர்மியோட வயசு பிரகாஷ் அந்தப் பொண்ணை நான் எப்படி கல்யாணம் பண்ணி எனக்கு நினைக்கவே கஷ்டமா இருக்கு ஆனால் இந்த அப்பத்தா பண்ணுறதை என்ன சொல்ல என்று புலம்பினான்.
அண்ணா இப்போ ஒன்றும் பண்ண முடியாது வேற வழி இல்லை. அப்பத்தா பற்றி உனக்கு நல்லாவே தெரியும் தானே அதனால வா என்றவனுடன் மணமேடைக்கு சென்றான் உதயச்சந்திரன்.
அழுது , அழுது கரைந்த வெரோனிகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அரைமணி நேரத்திற்கு முன்பு கூட அண்ணன் மகன் கதிர்ரூபனுடன் குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தவளுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம். இந்தக் கொடுமையை அவள் யாரிடத்தில் சொல்லுவாள்.
கடவுளே ஏன் இந்த கொடுமை அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன். அக்கா ஓடிப்போனால் தங்கச்சி தான் பலிஆடா என்று மௌனமாக கண்ணீர் சிந்தினாள் வெரோனிகா.
ரோனி என்ற தேன்மொழியைக் கட்டிக் கொண்டவள் அழ ஆரம்பிக்க அழாதடி என்ன பண்ணுறது நம்ம வீட்டுப் பெரியவங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது சின்னப் பொண்ணுனு கூட பார்க்காமல் இப்போ தான் மாலையை கழுத்தில் போட்டு பலிஆடு கணக்கா கூட்டிட்டு வரச் சொல்லுறாங்க என்றவள் நீ முடியாதுனு சாதிச்சுருக்கலாம்லடி என்றாள்.
என்னை என்ன அண்ணி பண்ண சொல்லுறிங்க பெரியப்பா என் காலில் விழ வரும் பொழுது என்றவளிடம் சரி அழாதே வா உன்னை அழைச்சுட்டு வரச் சொல்லுறாங்க என்ற தேன்மொழி வெரோனிகாவை அழைத்துச் சென்றாள்.
மணவறையில் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தவன் ஐயர் கூறும் மந்திரங்களைக் கூறிக் கொண்டு இருக்க அவனருகில் வந்து அமர்ந்தாள் வெரோனிகா.
கதிரேசன், பூங்கொடி இருவரும் மகளை கன்னியாதானம் செய்தனர். கன்னியாதானம் முடிந்த பிறகு ஐயர் கொடுத்த தாலியை கையில் வாங்கியவன் யோசனையுடன் தன் அப்பத்தாவை பார்த்திட கட்டுப்பா என்றார் கல்யாணிதேவி.
வேண்டா வெறுப்பாக வெரோனிகாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் உதயச்சந்திரன். தன் எதிர்காலமே சூன்யமாகிப் போனதாக உணர்ந்த மங்கையின் கண்கள் கண்ணீரை சிந்தியது கழுத்தில் தாலி ஏறிய நிமிடம்.
இனி தன் வாழ்வில் படிப்பு இருக்குமா. பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சின்னப் பெண்ணிற்கு திருமணம் என்றால் அவள் மனம் எப்படி துடிக்கும். அவளது கணவன் எப்படிப்பட்டவன் என்றும் தெரியாது. அக்காவை திருமணம் செய்ய வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அவ்வளவே அவனைப் பற்றி அவள் அறிந்த தகவல்.
அக்காவின் கழுத்தில் விழ வேண்டிய முடிச்சு விதியின் முடிச்சாக அவள் கழுத்தில் விழுந்தது. விதியின் முடிச்சு சரியாக இருக்குமா அடுத்தடுத்த பதிவில் பார்ப்போம்..
…..தொடரும்…