என்னடி காபி கொடுத்துட்டு வந்தவள் ஒரே யோசனையா இருக்கிற என்ற மலர்கொடியிடம் ஒன்றும் இல்லை அத்தை என்றவள் அத்தை நீங்களே சமைக்கிறிங்களா தலை கொஞ்சம் வலிக்குது என்றாள் வெரோனிகா.
சரி நீ போயி ரெஸ்ட் எடு என்ற மலர்கொடி , சுசீலாவுடன் சேர்ந்து சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
ஒரு வேளை அப்படி இருக்குமோ, ஒரு வேளை இப்படி இருக்குமோ என்று யோசித்தவள் தன்னறைக்கு செல்ல அவளது கணவன் எங்கேயோ கிளம்பிக் கொண்டு இருந்தான்.
எங்கே கிளம்பிட்டிங்க மாமா என்ற வெரோனிகாவிடம் ஏன் எங்கேனு சொன்னால் தான் மேடம் போக விடுவிங்களா என்றான் உதயச்சந்திரன்.
அவள் அமைதியாக அவனைப் பார்த்திட கொஞ்சம் வேலை இருக்கு அதான் கிளம்புகிறேன். நீ ரெஸ்ட் எடு. எதையும் யோசிக்க கூடாது. நான் சீக்கிரமே வந்துருவேன் ஈவ்னிங் கிளம்பலாம் என்றான்.
எங்கே மாமா என்றவளிடம் என்ன ரோனி மறந்துட்டியா உங்க வீட்டுக்கு விருந்துக்கு போகனுமே உங்க அப்பா, அம்மா வந்து அழைச்சுட்டு போனாங்களே அதற்கு ஷாப்பிங் பண்ண வேண்டாமா என்றான் உதயச்சந்திரன்.
அட ஆமாம் மாமா மறந்தே போயிட்டேன் என்றவள் ஊருக்கு நாளை மறுநாள் தானே போகிறோம் ஷாப்பிங் எதற்கு என்றாள் வெரோனிகா. உங்க வீட்டுக்கு போகும் போது சும்மா எப்படி போகிறது உன் அண்ணன் பையனுக்கு கிப்ட் ஏதாச்சும் வாங்கனும் தானே என்றவன் சீக்கிரமே வந்துருவேன் நீ கிளம்பி இரு என்று கூறி விட்டு உதயச்சந்திரன் கிளம்பினான்.
ஆமாம் அத்தை ஊர்மிளா எங்கே என்ற வெரோனிகாவிடம் அவள் ஸ்பெஷல்கிளாஸ் போயிருக்கிறாள் என்றார் சுசீலா. ஓஓ சரி சரி என்றவள் நான் போக வில்லையே என்றிட அது ஒன்றும் பிரச்சனை இல்லை உதய் காலையிலே உங்க கிருஷ்ணமூர்த்தி சார்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டான் உனக்கு உடம்பு சரியில்லைனு என்றார் மலர்கொடி. சரிங்க அத்தை என்ற வெரோனிகா கல்யாணிப் பாட்டியின் அறைக்கு சென்றாள்.
என்னடி ஏதோ யோசனையா இருக்க என்ற கல்யாணிதேவியிடம் இல்லை ஆச்சி எந்த யோசனையும் இல்லை என்றாள் வெரோனிகா. அவளது கையைப் பிடித்தவர் எதையும் யோசிக்காதே என்றிட இல்லை ஆச்சி அதைப் பற்றி யோசிக்க கூடாதுனு சந்துரு மாமா சொல்லிருக்காங்க அதனால கட்டாயம் யோசிக்க மாட்டேன் என்றவள் சிரித்திட உன் புருசன் அப்படியே அவங்க தாத்தா மாதிரி என்றவர் சரி எங்கே அவன் என்றார்.
அவங்க வெளியில் போயிருக்காங்க என்றவள் சரிங்க ஆச்சி எனக்கு கொஞ்சம் படிக்கிற வேலை இருக்கு நான் போயி படிக்கிறேன் என்று சொல்லி விட்டு வெரோனிகா தன்னறைக்குச் சென்றாள்.
என்ன ஊர்மி ஏன் டல்லா இருக்க என்ற நிகிலாவிடம் ஒன்றும் இல்லையே என்றாள் ஊர்மிளா. சரிடி ஆமாம் இன்னைக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கிறது ரோனிக்கு தெரியாதா என்ற நிகிலாவிடம் அவளுக்கு உடம்பு சரியில்லை என்றாள் ஊர்மிளா.
அர்ஜுன் முகம் வாடி இருப்பதைக் கண்ட கிஷோர் என்னாச்சு மச்சி ஏன் டல்லா இருக்க ரோனி கிளாஸ் வரவில்லை என்பதாலா என்றான் கிண்டலாக.
டேய் வாயை மூடு கொன்னுருவேன் என்று அர்ஜுன் கிஷோரை அடக்கிட என்னடா எப்பவும் போல தானே கிண்டல் பண்ணினான் என்றான் விஷால். இல்லைடா ஸாரி ஏதோ டென்சன் என்ற அர்ஜுன் கிஷோரிடம் ஸாரி சொல்லிட பரவாயில்லை விடுடா இப்போ தான் சாரி, பூரினு என்ற கிஷோர் பிச்சுகிச்சு வந்துருச்சு என்றான்.
என்னது பிச்சுகிச்சா என்னடா பிச்சுகிச்சு என்றாள் நிகிலா. ஹேய் பிசிக்ஸ் சாரைத் தான் அப்படி சொல்கிறான் என்ற ஊர்மிளாவிடம் நண்பேன்டா என்றான் கிஷோர்.
நிகிலாவும், ஊர்மிளாவும் சிரித்து விட்டு வகுப்பை கவனிக்க கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர் அனைவரது மிட் டெர்ம் டெஸ்ட் பேப்பரைக் கொடுத்தார்.
எல்லோருமே பரவாயில்லை எக்ஸாம் நல்லா தான் பண்ணிருக்கிங்க என்றவர் எல்லோருடைய பேப்பரையும் கொடுத்து விட்டு வெரோனிகா பேப்பர் என்கிட்ட இருக்கட்டும். கிளாஸ்ல வாங்கிக்கட்டும் என்றவர் பாடம் நடத்த ஆரம்பித்தார்.
மாமா என்றவளிடம் என்ன என்றான். ரூபன்க்கு என்ன கிப்ட் வாங்கப் போறிங்க என்றவளிடம் உனக்கு என்ன பிடிச்சுருக்கோ வாங்கு என்றவன் அவளுடன் வந்தான்.
அவளும் தன் அண்ணன் மகனுக்கு பொம்மைகளை வாங்கி விட்டு மாமா இந்த பொம்மை எனக்கு பிடிச்சுருக்கு எனக்காக இதை வாங்கிக்கவா என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவன் நீ என்ன குழந்தையா என்றிட இல்லை இந்த பொம்மை ரொம்ப அழகா இருந்துச்சு என்றாள்.
சரி சரி வாங்கிக்கோ என்றான். பிறகு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றவன் அவளுக்கு பிடித்த உடைகளை வாங்கிக் கொடுத்து விட்டு சரி என்ன சாப்பீடுற என்றான்.
எனக்கு ஜூஸ் போதும் மாமா என்றவளிடம் ஏன் என்றான் உதயச்சந்திரன். டயட் என்றவளை கேள்வியாக பார்த்தவன் சிரிப்பை உதட்டை மடக்கி அடக்கிக் கொண்டான்.
என்ன மேடம் டயட்டா என்றவனிடம் ஆமாம் மாமா டயட், டயட்தான் என்றாள். ஹும் சரி சரி என்றவன் அவளுக்கு ஜூஸை ஆர்டர் செய்து விட்டு தனக்கு பர்கரை ஆர்டர் செய்தான்.
பர்கர் வந்தவுடன் அவள் அதையே பார்த்துக் கொண்டு இருக்க அதை கவனித்தவன் தனக்குள் சிரித்து விட்டு என்ன ரோனி ஜூஸ் குடி நீ தான் டயட்ல இருக்கியே நான் டயட்ல இல்லைப்பா என்றான்.
அவள் மாமா என்றிட ஏமா என்றான் உதயச்சந்திரன். நான் நாளையில் இருந்து டயட்ல இருக்கேன் இன்னைக்கு பர்கர் சாப்பிடுறேன் என்று அவன் பக்கம் இருந்த பர்கரை எடுத்துக் கொண்டாள். அவன் சிரித்து விட்டு ஜூஸைக் குடித்து விட்டு சரி கிளம்பலாமா என்றான். சரிங்க மாமா என்றவள் அவனுடன் கிளம்பினாள்.
என்ன அர்ச்சனா யோசனை என்ற விவேக்கிடம் ஒன்றும் இல்லை என்றவள் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க சொல்லு அர்ச்சனா என்றான் விவேக். இல்லை விவேக் நம்ம காதலைப் பற்றி வீட்டில் எப்படி சொல்லுறதுனு ஒரே யோசனையா இருக்கு என்றாள் அர்ச்சனா.
சொல்லித்தானே ஆக வேண்டும். அவங்களா கண்டு பிடிச்சு பிரச்சனை வருவதற்குள் நாமளாவே சொல்லிட்டோம்னா நல்லதுனு தோணுது அர்ச்சனா.
இன்னும் கொஞ்ச நாளில் உன்னுடைய படிப்பு முடிஞ்சுரும். அதற்குப் பிறகு உங்க வீட்டில் கல்யாணத்திற்கு வரன் தேட ஆரம்பிச்சுருவாங்க அதனால தான் சொல்கிறேன் இப்பவே நாம இதைப்பற்றி இரண்டு வீட்டிலுமே பேசிட்டோம்னா நல்லது என்றான் விவேக்.
புரியுதுப்பா ஆனால் உனக்கே தெரியும் எங்க வீட்டில் நடந்த அந்த பிரச்சனை பற்றி உன்கிட்ட சொல்லிருக்கேனே என்றவளிடம் அது முடிஞ்சு போன விசயம் அர்ச்சனா. அதை உங்க அண்ணனே கூட மறந்திருப்பாரு என்றவன் கண்டதையும் யோசிக்காதே எங்க வீட்டில் பேசிட்டு உங்க வீட்டிற்கும் வந்து பேசுகிறேன் என்ற விவேக் சரிம்மா எனக்கு ஆபிஸ்ல வொர்க் இருக்கு கிளம்புகிறேன். நீயும் பத்திரமா வீட்டுக்கு கிளம்பு என்றான். புன்னகையுடன் அவனிடம் விடைபெற்றவள் வீட்டிற்கு கிளம்பினாள்.
என்ன அர்ச்சனா இப்போ தான் வீட்டுக்கு வருகிறாய். இவ்வளவு நேரம் எங்கே போன என்ற உதயச்சந்திரனிடம் ப்ரண்டை பார்க்க போனேன் அண்ணா என்ற அர்ச்சனா தன்னறைக்கு சென்றாள்.
என்ன ஊர்மி நீ ஏன் டல்லா இருக்க என்ற வெரோனிகாவிடம் தனது பிசிக்ஸ் பேப்பரைக் காட்டியவள் மார்க் கம்மியாகிருச்சு என்றிட ஏன்டி 68/75 நல்ல மார்க் தானே என்றாள் வெரோனிகா.
இது நல்ல மார்க்கா போன வருசம் வச்ச எல்லா மிட் டெர்ம் டெஸ்ட்லையும் 73, 72க்கு குறையவே மாட்டேன். க்ளாஸ் டாப்பர் நான். ஆனால் இந்த டைம் வெறும் 68 தான். எவ்வளவு கடுப்பா இருக்கு தெரியுமா ச்சே என்ற ஊர்மிளாவை ஆச்சர்யமாக பார்த்த வெரோனிகா தன்னறைக்கு சென்றாள்.
என்ன மேடம் எங்கேயோ பார்த்துட்டு வருகிறீர்கள் என்றவனிடம் மாமா 68/75 நல்ல மார்க் தானே என்றாள் வெரோனிகா. ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்றவனிடம் அதற்கு போயி உட்கார்ந்து பீல் பண்ணிட்டு இருக்கிறாள் இந்த ஊர்மி என்றாள் வெரோனிகா.
அவன் சிரித்து விட்டு சரி உனக்கு எத்தனை மார்க் எடுத்தால் போதுமானது என்றவனிடம் 50/75 போதும் அதற்கு கீழே போனாலும் கவலைப்பட மாட்டேன் என்றாள் வெரோனிகா.
அவளை கேள்வியாக பார்த்தவனிடம் நீங்க தானே சொல்லிருக்கிங்க புத்தகத்தை அப்படியே சாப்பிட்டு பரீட்சையில் எடுத்து வச்ச வாந்திக்கு எத்தனை மார்க் கிடைத்தாலும் பிரயோஜனமே இல்லை, எதையும் புரிஞ்சு படிச்சு அதில் பாஸ் மார்க் வாங்கினாளே போதும் என்று சொல்லிக் கொடுத்தது நீங்க தானே அதான் எனக்கு 50 மார்க்கே திருப்தி தான் என்றாள் வெரோனிகா.
ஹும் குட் கேர்ள் என்றவன் அவளது கன்னம் தட்டி விட்டு சரி நீ இந்த ரூமை எப்படி வச்சுருக்கனு பாரு ஒழுங்கா எல்லாம் நீட்டா எடுத்து வை நான் அப்பாவை பார்த்துட்டு வரேன் என்றவன் கிளம்பிட எப்போ பாரு ரூம் நீட்டா அழகா வச்சுருக்கனும்னு என்னை வேலை வாங்குவதே இந்த மனுசனுக்கு ஒரு பெரிய வேலையா இருக்கு என்று சளித்துக் கொண்டவள் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
என்ன விவேக் இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து வர இவ்வளவு நேரம் ஆச்சு என்ற தனலெட்சுமியிடம் கொஞ்சம் வேலை அம்மா என்றவன் அப்பா எங்கே என்றான்.
உன் தங்கச்சி வீட்டில் ஏதோ பிரச்சனையாம் அதனால அப்பா உங்க அத்தை வீட்டுக்கு போயிருக்கிறார். அவர்கிட்ட தலை தலையா அடிச்சுகிட்டேன் அந்தக் குடும்பத்தில் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்காதிங்கனு காதில் வாங்கினாரா வாரம் ஒரு பிரச்சனைனு இவர் போயி சமாதானம் பண்ண வேண்டி இருக்கு.
தயவு செய்து நீயும் உன் அப்பா சொல்கிறார்னு உன் அத்தை மகளை கட்டிக்காதடா என்ற தனலெட்சுமியின் கையைப் பிடித்தவன் சத்தியம் அம்மா அத்தை மகளை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்னை நம்பலாம் என்றான் விவேக்.
சரி அப்போ உனக்கு என் அண்ணன் பொண்ணு இலக்கியாவை பேசி முடிச்சுறலாமா என்ற தனலெட்சுமியிடம் ஏன்அம்மா அப்பாவோட தங்கச்சி பொண்ணு சௌமியா வேண்டாம்னு சொன்னால் உடனே உன் அண்ணன் பொண்ணு இலக்கியாவா.
எனக்கு இலக்கியாவும் வேண்டாம், சௌமியாவும் வேண்டாம் எனக்கு அர்ச்சனா தான் வேண்டும் என்றான் விவேக்.
அர்ச்சனாவா அது யாருடா என்ற தனலெட்சுமியிடம் நான் காலேஜ் படிச்சப்போ என்னோட ஜூனியர் என்றவன் ரொம்ப நல்ல பொண்ணும்மா உங்களையும், அப்பாவையும் நல்லபடியா பாத்துப்பா என்றான் விவேக்.
உன் அப்பாவை நானும், என்னை உன் அப்பாவும் நல்லாவே பார்த்துக் கொள்வோம். எங்களை பார்த்துக் கொள்ள வேண்டாம் உன்னை நல்லபடியா பார்த்துக் கொண்டால் போதும் என்ற தனலெட்சுமி அர்ச்சனானு பெயரை மட்டும் சொல்லிருக்க அவங்க குடும்பத்தை பற்றி சொல்லு என்றார்.
அர்ச்சனா குடும்பம் பற்றி சொன்ன விவேக் தன் அன்னையின் முகத்தைப் பார்த்திட உங்க அப்பா என்ன சொல்லுவாரோனு தெரியலையேடா என்றார் தனலெட்சுமி.
…..தொடரும்…