திருமண சடங்குகள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. உதயச்சந்திரன், வெரோனிகா தம்பதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
முதலில் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று பால், பழம் எல்லாம் கொடுக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தது. ஏனோ அது இருவருக்குமே பிடிக்கவில்லை.
சடங்குகள் முடிந்த பிறகு வெரோனிகா தன் கணவனின் வீட்டிற்கு கிளம்பினாள். அம்மா பூங்கொடியைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் சிறு பெண் அவளால் எப்படி இன்னொரு வீட்டில் தன் வாழ்வைத் தொடங்க முடியும். நிறையவே அவள் பயந்திருந்தாள்.
பூங்கொடியும், வசந்தியும் மகளுக்கு மாறி மாறி அறிவுரைகள் சொன்னாலும் அவளது அழுகை நின்றபாடில்லை. எல்.கே.ஜி போகும் குழந்தை பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து அழுவது போல தான் அவளும் அழுது கொண்டிருந்தாள் கணவன் வீட்டிற்கு செல்வதை நினைத்து.
கணேசன், கதிரேசன் இருவரும் மகளுக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி அனுப்பி வைத்தனர். சக்திவேல், சரவணன் இருவரும் தங்களின் குட்டித் தங்கையைக் கட்டிக் கொண்டு அழுதனர் . இவ்வளவு சின்ன வயதில் தங்கைக்கு திருமணம் என்பதை அவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் என்ன செய்வது விதி வலியது அல்லவா.
பெண்வீட்டில் இருந்து ஒருவர் மணப் பெண்ணுடன் செல்ல வேண்டுமே. அதனால் தேன்மொழி அவளுடன் சென்றாள்.
கணவனின் அருகில் காரில் அமர்ந்தவளது கண்கள் வீடு வரும் வரையில் கண்ணீரை மட்டுமே சிந்தியது. அவனுக்கும் ஒரே எரிச்சலாக இருந்தது. திருமணம் நின்று போயிருந்தால் கூட அவன் கவலைப் பட்டிருக்க மாட்டான். தன்னை விட பதினொரு வயது சின்ன பெண் அதுவும் பள்ளிக்கூடம் படிக்கும் பெண்ணை அவனால் எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை நினைக்க நினைக்க ஆத்திரமும், கோபமும் தான் வந்தது. ஒரு வழியாக வீட்டிற்கு வந்தனர்.
வாசலில் நின்ற உதயச்சந்திரன், வெரோனிகா இருவருக்கும் அர்ச்சனா ஆரத்தி எடுத்திட வீட்டிற்குள் வந்ததுமே உதயச்சந்திரன் நேராக தன்னறைக்குள் நுழைந்து கொண்டான். வெரோனிகா தனியாகத் தான் பூஜை அறையில் விளக்கேற்றினாள்.
பால், பழம் கொடுக்க வேண்டும் என்று அவனை அழைக்கச் சென்றார் சுசீலா. உதயா என்னப்பா இங்கே உட்கார்ந்திருக்க வா அங்கே சடங்குகள் எல்லாம் இருக்குதே என்றார் சுசீலா.
சித்தி உங்கள் யாருக்கும் மனசாட்சியே இல்லையா என்னால எந்த சடங்கும் பண்ண முடியாது. கொஞ்சம் தனியா இருக்க விடுங்க ப்ளீஸ். கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு கல்யாணம் நடந்திருக்கு. இதற்கு சடங்கு, சம்பிரதாயம் ஒன்று தான் குறைச்சல் என்று அவன் கத்திவிட என்ன பேசுற உதயா அவள் உன் சித்தி. இப்படித் தான் மரியாதை இல்லாமல் பேசுறதா என்று வந்தார் மலர்கொடி.
அம்மா ப்ளீஸ் தயவுசெய்து போயிருங்க நான் இருக்கிற கோபத்தில் எதாவது சொல்லிட்டேன்னா எல்லோருக்குமே சங்கடம் என்று அவன் கூறிட அக்கா விடுங்க நம்ம உதயா தானே பேசுறான் என்ற சுசீலா மலர்கொடியை அழைத்துச் சென்றார்.
என்ன மலர்கொடி என்ன சொல்கிறான் என்ற கல்யாணிதேவியிடம் அவன் கோபமாக இருக்கிறான் அத்தை விடுங்க அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் இனி என்ன சடங்கு இருக்கு இனி ராத்திரி தானே. வெரோனிகாவும் ரொம்ப டயர்ட்டா இருக்கிறாள் அதனால ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார் சுசீலா. சரி சரி என்ற கல்யாணி வெரோனிகாவை அழைத்துச் செல்லும்படி அர்ச்சனாவிடம் கூறிட அர்ச்சனா தன்னறைக்கு வெரோனிகா, தேன்மொழி இருவரையும் அழைத்துச் சென்றாள்.
அர்ச்சனா அவர்களிடம் நீங்க ப்ரஷ் ஆகிட்டு இங்கேயே இருங்க என்று கூறிவிட்டு சென்று விட வெரோனிகா தன் அண்ணி தேன்மொழியைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
ரோனி என்னடி பண்ணுற ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க என்றிட என்னால முடியலை அண்ணி. இனிமேல் நான் எப்படி ஸ்கூல் போவேன். எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க உங்களுக்கு தெரியும் தானே நான் ரொம்ப பயந்தாங்கொள்ளி எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கு. இந்த வீட்டில் இருக்கிற அவங்க அப்பத்தாவைப் பார்த்தாலே பயமா இருக்கு.
அவங்க அக்காவுக்கு பூ வைக்க வரும் போதே ரொம்ப கோபமா பேசிட்டு இருந்தாங்க என்றவளிடம் ரோனி அழக்கூடாது. இங்கே யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ திரும்பவும் ஸ்கூல் போகலாம் அதைப் பற்றி உன் வீட்டுக்காரர்கிட்ட நானே பேசுறேன் என்றாள் தேன்மொழி.
எனக்கு கல்யாணம் நடந்தது இந்நேரம் நம்ம ஊரில் எல்லோருக்குமே தெரியுமே என்னை கிண்டல் பண்ண மாட்டாங்களா என்றவளிடம் நம்ம ஊரு ஸ்கூலுக்கு நீ போனால் தானே உன்னைக் கிண்டல் பண்ணுவாங்க இந்த ஊரு ஸ்கூலில் உன்னை படிக்க வைக்க உங்க வீட்டில் மாமாவை பேச சொல்லுறேன்.
இங்கே உள்ள ஸ்கூலில் உனக்கு கல்யாணம் ஆனது யாருக்கும் தெரியாதுல ரோனி அதனால உன்னை யாரும் கிண்டல் பண்ணவே மாட்டாங்க என்ற தேன்மொழி பயப்படாதே ரோனி எப்பவும் தைரியமா இருக்கனும் என்று அவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தாள்.
கதவைத் தட்டி விட்டு மலர்கொடி வந்தார். வெரோனிகா என்றவரை நிமிர்ந்து பார்த்தவள் சொல்லுங்க என்றாள். அத்தைனு சொல்லு என்றவரிடம் சரியென்று தலையை ஆட்டினாள். இரண்டுபேரும் சாப்பிட வாங்க என்ற மலர்கொடி இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார்.
வெரோனிகாவின் முகம் அழுது, அழுது வீங்கி இருப்பதைக் கண்ட கல்யாணிதேவி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தார். அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது உதயச்சந்திரன் வந்தான். வாப்பா உதயா வா வந்து உன் பொண்டாட்டி பக்கத்தில் உட்காரு என்றார் கல்யாணிதேவி.
அவனும் அமைதியாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அவன் பக்கத்தில் அமரவுமே அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு சுசீலா, தேன்மொழி இருவரும் வெரோனிகாவை இரவு சடங்கிற்கு தயார் படுத்தினர்.
என்ன உதயா இங்கே நிற்கிற அறைக்கு போகவில்லையா என்ற நெடுமாறனிடம் என்னப்பா நீங்களும் அப்பத்தா மாதிரியே பேசுறிங்க என்னால எப்படிப்பா அந்தப் பொண்ணை பார்த்திங்களே சின்னப் பொண்ணு நம்ம ஊர்மி வயசு தான் அந்தப் பொண்ணுக்கு. பள்ளிக்கூடம் போற பொண்ணை என்னால நினைச்சு கூட பார்க்க முடியவில்லை.
அப்பத்தாவோட பிடிவாதம் இன்னைக்கு ஒரு சின்னப் பொண்ணோட எதிர்காலத்தையே கேள்விக்குறியா மாத்திருக்கு. நீங்க சொல்லுங்க நம்ம வீட்டுப் பொண்ணுக்கு இப்படி ஒரு கல்யாணம் நடந்தால் நாம சந்தோசம் படுவோமா என்றவன் கோபமாக சுவற்றில் குத்திட இப்போ என்னடா பண்ண சொல்லுற நடந்த கல்யாணத்தை மாற்ற முடியாது.
வேண்டும் என்றால் அந்தப் பொண்ணை படிக்க வைக்கலாம். உன்னோட மனைவியை நீ படிக்க வைக்க விரும்புற அப்படினா அப்பத்தாவால ஒன்றும் செய்ய முடியாது.
உதயா இது உன்னுடைய வாழ்க்கை இதை இன்றைக்கே நீ ஆரம்பிக்கனும்னு உன்னைக் கட்டாயப் படுத்த இங்கே யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் ஒரு விசயம் வெரோனிகா தான் உன்னுடைய மனைவி என்ற நெடுமாறன் நீ ரூம்க்கு போகலைனா உன் அப்பத்தா ஏதாவது சொல்லுவாங்க என்ற நெடுமாறன் கிளம்பிட உதயச்சந்திரனும் தன் அறைக்கு சென்றான்.
என்ன சுசீ அலங்காரம் எல்லாம் முடிஞ்சுருச்சா என்று வந்த மலர்கொடி வெரோனிகாவின் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்து விட்டவர் ரொம்ப அழகா இருக்க அம்மு என்றார். அவளது கையில் பால் சொம்பினைக் கொடுத்தவர் அவள் நெற்றியில் முத்தமிட்டு மகனின் அறைக்குள் அனுப்பி வைத்தார்.
அவள் பயத்துடனே அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு யாருமே இல்லாமல் போக அங்கு இருந்த மேஜையில் பால் சொம்பை வைத்து விட்டு கையை பிசைந்து கொண்டு ஒரு விதமான படபடப்புடன் நின்று கொண்டிருந்தாள்.
அந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு உதயச்சந்திரன் அறைக்குள் வந்தான். அவனைக் கண்டவளுக்கு கை , கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. உடல் முழுக்க வேர்வை வழிய அவளுக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது.
வந்தவன் அவளைக் கண்டு கொள்ளாமல் குளியலறைக்குள் சென்றவன் உடைமாற்றி விட்டு வந்து மெத்தையில் படுத்துக் கொண்டான்.
அவன் சென்று படுத்துக் கொண்ட பிறகு தான் அவளுக்கு மனம் சற்று ஆறுதலாக இருந்தது. அவள் ஒரு பெட்சீட்டை எடுத்துக் கொண்டு தரையில் விரித்து படுத்துக் கொண்டாள்.
என்ன பூங்கொடி ஏன் இப்படி இருக்க என்ற கதிரேசனை முறைத்த பூங்கொடி உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா நம்ம பொண்ணு குழந்தை அவளைப் போயி கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சுருக்கோம்.
வினோதா ஓடிப் போனது நமக்கு அசிங்கம் தான் இல்லைன்னு சொல்லவில்லை அதற்காக வெரோனிகாவைப் போயி அவளுக்கு நம்மளை விட்டால் வேற எதுவும் தெரியாது.
ரொம்ப பயந்த சுபாவம் அந்த வீட்டில் அவள் எப்படி எல்லோரையும் சமாளிப்பா அந்தக் கவலை உங்களுக்கு இருக்கிறதா இல்லையா. உங்க அண்ணன் செத்துருவேன்னு சொன்னதால என் பொண்ணோட வாழ்க்கையை பழி கொடுத்துட்டிங்களே என்று கண்ணீர் வடித்தார் பூங்கொடி.
உன் அண்ணன் மகன் பண்ணின தப்புக்கு நம்ம பொண்ணை வச்சு நான் பரிகாரம் பண்ணி இருக்கேன் பூங்கொடி அதை மறந்திடாதே வினோதா ஓடிப்போனது உன் அண்ணன் மகன் பிரபு கூட தான்.
அதனால தான் நம்ம பொண்ணு சின்னப் பொண்ணுனு தெரிஞ்சும் அவள் வாழ்க்கையை பழி கொடுத்திருக்கேன். உன் குடும்பத்தால தான் இந்த குடும்பமானம் போச்சுனு அண்ணியும், அண்ணனும் உன்னைக் குறை சொல்லிவிடக் கூடாதுனு தான் நம்ம பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் என்றார் கதிரேசன்.
வினோதா பிரபுவை விரும்புகிற விசயம் இந்த வீட்டில் யாருக்கும் தெரியாதா என்ன. அவங்க பொண்ணு மனசுல இன்னொருத்தன் இருக்கிறான்னு தெரிஞ்ச பிறகும் அவங்க அவளுக்கு வெளியில் மாப்பிள்ளை பார்த்து கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க இதில் என்னோட தப்பு எங்கே இருக்கு. எந்த தப்புமே பண்ணாத நம்ம பொண்ணுடையை வாழ்க்கையை தானே பழி கொடுத்திருக்கிங்க.
அந்த பெரிய குடும்பத்தில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா இருப்பாங்க அவங்களை புரிஞ்சு அனுசரிச்சு அவளால எப்படி வாழ முடியும். நம்ம கல்யாணம் முடிஞ்சு பதினேழு வருசம் ஆகுது இன்னமும் என்னாலையே உங்க அண்ணன் , அண்ணியை புரிஞ்சு நடந்துக்க முடியவில்லை. வெரோனிகா சின்னப் பொண்ணு அவள் எப்படி வாழப் போறாளோன்னு நினைச்சாலே பயமா இருக்கு என்றார் பூங்கொடி.
கவலைப் படாதே பூங்கொடி அந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் எல்லாம் விசாரிச்சு தானே கல்யாண ஏற்பாடு பண்ணினோம். நம்ம பொண்ணு நல்லா இருப்பாள் என்ற கதிரேசன் சென்று படுத்து விட பூங்கொடியின் பெற்ற மனமோ மகளின் எதிர்காலம் பற்றிய கவலையில் உறக்கமில்லாமல் தவித்தது.
…..தொடரும்…