வெரோனிகா என்றவனிடம் என்ன மாமா ஊர் வந்திருச்சா என்று மெல்ல கண்விழித்தாள் வெரோனிகா. இல்லை நீ இன்னும் சாப்பிடவில்லையே இதோ ஒரு ஹோட்டல் இருக்கு வா சாப்பிடலாம் என்ற உதயனிடம் இது என்ன இடம் மாமா வீட்டுக்கு போயிருவோமே என்றாள் வெரோனிகா.
இன்னும் நேரம் ஆகும் அதனால தான் சொல்கிறேன் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். என்ன சாப்பிடுற என்றவளிடம் தோசை போதும் மாமா என்றாள். இருவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் வண்டிக்கு வந்தனர். அவள் தூங்கி விட அவன் பாடலை ஒலிக்க விட்டு வண்டியை இயக்கினான்.
நடுசாமம் தாண்டிய பிறகே அவளது கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். விடிவதற்கு இன்னும் இரண்டுமணி நேரம் தான் இருக்கிறது எதற்கு வீட்டில் தூங்குபவர்களை தொல்லை செய்ய என்று நினைத்த உதய் தானும் தன் மனைவியை பார்த்தபடி காரிலே உறங்க ஆரம்பித்தான்.
என்ன இது மணி ஐந்தாகிருச்சே பால் கறக்க வேண்டுமே என்று எழுந்த வசந்தி பால் கறப்பதற்காக வீட்டின் கதவைத் திறந்து பார்த்திட வீட்டின் கேட் அருகே கார் நிற்கவும் அடடா ரோனியும், மருமகனும் வந்துட்டாங்க போலையே என்று நினைத்து வேகமாக வந்தார் கேட் அருகே.
காருக்குள் உறங்கும் அவர்களைப் பார்த்தவர் அச்சச்சோ எத்தனை மணிக்கு வந்தாங்களோ தெரியலையே என்று நினைத்தவர் காரின் கண்ணாடியைத் தட்டிட அதில் கண் விழித்த உதயச்சந்திரன் அவரிடம் வணக்கம் வைத்திட அவரும் வாங்க மருமகனே என்று வரவேற்றார்.
வெரோனிகாவை அவர் எழுப்பிட நினைக்க இல்லை அத்தை அவள் தூங்கட்டும் நான் தூக்கிட்டு வரேன் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் வசந்தியுடன் வீட்டிற்கு வந்தான்.
அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை அவளது அறையில் படுக்க வைத்தவன் மற்றவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான். வசந்தியின் மனதிலோ இவ்வளவு நல்ல மாப்பிள்ளையை விட்டுட்டு அந்த பிரபு கூட ஓடிப் போயிருக்காளே நான் பெத்த சண்டாளி என்று நினைத்துக் கொண்டார்.
இந்த சின்னக்குட்டிக்கு இருந்திருக்கு இந்த அதிர்ஷ்டம் என்று பெருமூச்சு விட்டவர் பசுமாட்டின் மடுவில் பாலைக் கறந்தார்.
பூங்கொடி மருமகனை வரவேற்றவர் உறங்கும் மகளின் அருகில் வந்தார். என்ன மாப்பிள்ளை அவள் நெற்றியில் காயம் என்றிட அது ஒன்றும் இல்லை அத்தை ஸ்கூலில் கீழே விழுந்துட்டாள் என்றவன் சரவணன், சக்திவேல், கதிரேசன், கணேசன் எல்லோரிடமும் பேசிக் கொண்டு இருந்தான்.
மாப்பிள்ளை நீங்க பாவம் ராத்திரி முழுக்க வண்டி ஓட்டிட்டு வந்து அசதியா இருப்பிங்க நீங்களும் போயி தூங்குங்க என்று கணேசன் கூறிட அவனும் எழுந்து சென்று அவளருகில் படுத்துக் கொண்டான்.
சிறிய மெத்தை கொஞ்சம் இடைஞ்சலாக இருந்ததால் இருவரும் நெருக்கமாக படுத்திருக்க வேண்டிய சூழ்நிலை. உறக்கத்தில் அவனது கை அவளை அணைத்தபடி இருந்தது. அவளும் தலையணையாக அவனது நெஞ்சத்தில் தலை சாய்த்து உறங்க ஆரம்பித்தாள்.
உறக்கம் கலைந்து அவள் கண்விழித்திட கணவனின் அணைப்பில் உறங்குவதைக் கண்டு வெட்கம் கொண்டவள் உறங்கும் அவனை ரசிக்க ஆரம்பித்தாள். அவள் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க மெல்ல உறக்கம் கலைந்தவனும் அவளை பார்த்தான். ஒருநிமிடம் தான் பட்டென்று அவன் எழுந்து கொள்ள என்னாச்சு மாமா என்றாள் வெரோனிகா.
ஒன்றும் இல்லை என்றவன் நீ ஏன் என்னையவே பார்த்துட்டு இருந்த என்றவனிடம் இல்லை மாமா உங்க கை என் மேல இருந்துச்சு அதான் நான் எந்திருச்சா உங்க தூக்கம் கலைஞ்சுரும் என்று அவள் கூறிட சாரி தூக்கத்தில் என்றான். பரவாயில்லை மாமா இதற்கெல்லாம் சாரி சொல்லுவிங்களா என்றவள் எழுந்து கொண்டு நான் போயி குளிச்சுட்டு வந்துடுறேன் என்று கிளம்பினாள்.
என்னடி நல்ல தூக்கமா என்ற தேன்மொழியிடம் ஆமாம் அண்ணி என்றவள் குளியலறைக்குள் நுழைந்தாள். குளித்து முடித்து வந்தவள் சுடுதண்ணீர் வைத்துக் கொண்டு இருந்தாள்.
என்னடி நீ தான் குளிச்சுட்டியே என்ற தேன்மொழியிடம் இது என் மாமா இல்லை என் வீட்டுக்கார்ருக்கு என்ற வெரோனிகாவை தேன்மொழி கிண்டலடிக்க ஆரம்பித்தாள். போங்க அண்ணி என்ற வெரோனிகா தன்னறைக்குச் சென்று மாமா எழுந்திருங்க என்றாள்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே வெரோனிகா என்றவனிடம் அதெல்லாம் முடியாது வெந்நீர் ரெடி என்றவள் அவனை கிளப்பி வந்து குளிக்க சொன்னாள். அவனும் சிரித்து விட்டு குளிக்கச் சென்றான்.
காலையிலே விருந்து தடபுடலாக இருந்தது. இருவரையும் புத்தாடை அணிந்து வரச் சொன்னார் பூங்கொடி. இருவரும் புது துணிமணி உடுத்தி வந்தனர். உதயச்சந்திரன் வேஷ்டி, சட்டை அணிந்தும், வெரோனிகா பட்டுப்புடவை அணிந்தும் வந்திட இருவருக்கும் திருஷ்டி கழித்தார் பூங்கொடி.
இருவரும் காலை உணவு சாப்பிட்ட பிறகு கோவிலுக்கு சென்று வரச் சொல்லவும் வெரோனிகா சந்தோசமாக தன் கணவனை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றாள்.
மாமா இந்தக் கோவில் எங்க குலதெய்வம் கோவில். நல்லா வேண்டிக்கோங்க என்றவள் கோவிலில் இருக்கும் ஐய்யனாரிடம் தன் கணவன் நல்லா இருக்க வேண்டும் என்றும் , எந்தக் காலத்திலும் அவனைப் பிரியக்கூடாது என்றும் வேண்டிக் கொண்டிருந்தாள்.
என்ன வேண்டுதல் மேடம் என்றவனின் நெற்றியில் திருநீறு பூசி விட்டவள் வேண்டுதலை வெளியே சொன்னால் பழிக்காது மாமா என்றாள். அவளைப் பார்த்து சிரித்தவன் சரி உன் வேண்டுதல் பழிக்கட்டும் என்றான்.
மாமா நாம இப்போ வீட்டுக்கு போக வேண்டாம். இங்கே கோவிலுக்கு பின்னால் இருக்கிற மரத்தில் பெரிய ஊஞ்சல் இருக்கு அதில் கொஞ்ச நேரம் விளையாடிட்டு போகலாமா என்றாள்.
ரோனி நீ சின்னப் பொண்ணு விளையாடுற நானும் உன் கூட விளையாடவா என்றவனிடம் மாமா ப்ளீஸ் மாமா வாங்க மாமா என்று அவள் அவனை கையைப் பிடித்து இழுத்திட சரி வா என்று அவளுடன் சென்றான்.
மாமா நான் உட்கார்ந்துக்கவா என்றவளிடம் சரி என்றவன் அவள் அமர்ந்த்தும் ஊஞ்சல் ஆட்டி விட அவள் சந்தோசமாக சிரித்துக் கொண்டு மாமா வேகமா தள்ளி விடுங்க என்றாள். விழுந்திருவ ரோனி என்றவன் மெதுவாக ஆட்டிட மாமா ப்ளீஸ் என்று அவள் கெஞ்சிட அவள் விருப்பம்படியே ஆட்டினான்.
அவள் இறங்கிய பிறகு அவனை உட்காரச் சொன்னாள். ஏய் லூசு நான் என்ன சின்னப்பையனா ஊஞ்சல் எல்லாம் ஆடிக்கிட்டு என்றவனது கையைப் பிடித்துக் கொண்டு அவள் குழந்தை போல் அடம்பிடிக்க சரி வா என்று அவன் அமர்ந்திட அவனை ஆட்டி விட்டவள் மாமா நாம சேர்ந்து ஒருமுறை ஆடலாமா என்று அவனது அருகில் அமர்ந்தவள் ஊஞ்சல் ஆடிக்கொண்டே அவனுடன் செல்பி எடுத்தாள்.
அவனது கையைக் கட்டிக் கொண்டபடியே ஊரையே சுற்றி வந்தாள். ஊரில் பார்ப்பவர்களிடம் எல்லாம் பேசிக் கொண்டே சென்றாள். மாமா , மாமா என்று அவனிடம் வாய் ஓயாமல் அவள் விளையாடிய இடங்களை எல்லாம் அவனிடம் சொல்லிக் கொண்டே வந்தாள்.
இவள் இவ்வளவு பேசுவாளா என்பது போல் அவனுக்கு இருந்தது. மாமா இந்த கண்மாயில் நீங்க நீச்சலடிப்பிங்களா என்றவளிடம் எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் கண்மாயில் அடிச்சதில்லை ஏன் கேட்கிற என்றான். நான் நல்லாவே நீச்சலடிப்பேன் என்றவள் படித்துறையில் அமர்ந்து அவனிடம் கதை கதையாய் பேசினாள்.
அவனுக்கு இது அவளுடன் புது அனுபவமாகவே இருந்தது. பெண்களுக்கு தான் பிறந்து வளர்ந்த இடங்களைப் பற்றி கணவனிடம் சொல்வது ஒரு அலாதி இன்பம் போல என்று நினைத்தவன் அவளது சந்தோசமான முகத்தையே பார்த்தான்.
மாமா நேரம் ஆச்சு வாங்க வீடுக்கு போயி சாப்பிட்டு அப்பறம் ஊரைச் சுறலாம் என்றவளிடம் அப்போ எப்போ நாம நம்ம வீட்டுக்கு கிளம்புறதாம் என்றான் உதயச்சந்திரன்.
என்ன மாமா சொல்லுறிங்க நாம இன்னைக்கே கிளம்புகிறோமா என்றவளிடம் அப்பறம் நாளைக்கு நீ ஸ்கூல் போகனுமே ரோனி. நீ ப்ளஸ்டூ படிக்கிற அதை மறந்திடாதே என்றவனை பாவமாக பார்த்தாள் வெரோனிகா. எக்ஸாம் லீவு அப்போ இரண்டு நாள் இங்கே வரலாம் என்றவனிடம் சரியென்று தலையை ஆட்டினாள் வெரோனிகா.
ஊருக்கு உடனே கிளம்பலாம் என்று அவன் சொன்னதுமே அவளது முகம் சுருங்கியது. ச்சே இன்னைக்கே ஊருக்கு போகிறோம்னு தெரிந்திருந்தால் கொஞ்ச நேரம் அம்மா கூட பேசிட்டு இருந்திருக்கலாமே என்று வருந்தினாள்.
என்ன மேடம் சோகமா மாறிட்டிங்க என்று அவளது கன்னம் கிள்ளியவன் ரொம்ப யோசிக்காதே சும்மா சொன்னேன். நாளைக்குத் தான் போறோம் என்றவனது கன்னத்தில் கிள்ளியவள் ஏன் மாமா இப்படி என்னை ஏமாத்துறிங்க போங்க உங்க கிட்ட நான் பேசமாட்டேன் என்று சிணுங்கினாள்.
பேசலைனா போ என்றவன் தானும் அவளைப் போல முகத்தை வைத்துக் கொள்ள போங்க மாமா கிண்டல் பண்ணிகிட்டு என்றவள் அவனது கையில் நன்றாக கிள்ளி வைத்தாள் . ஆஆ வலிக்குதுடி லூசு என்றவனை முகத்தை சுழித்து பழிப்பு காட்டினாள் வெரோனிகா.
இருவரும் வீட்டிற்கு வந்த பிறகு மதிய விருந்து ஆடு, கோழி என தடபுடலாக இருக்க இருவரும் வயிறாற சாப்பிட்ட பின் உதயச்சந்திரன் சென்று உறங்கி விட்டான். இரவு சரியாக தூங்காத அசதியில் அவன் சென்று உறங்கி விட வெரோனிகா தன் அம்மா, பெரியம்மா, அண்ணி மூவருடனும் வாயடித்துக் கொண்டிருந்தாள்.
என்னடி ரோனி உன் மாமியார் வீட்டில் எல்லோரும் எப்படி என்ற வசந்தியிடம் வெரோனிகா தன் மாமியார் வீட்டு புராணத்தை ஆரம்பித்திட வசந்திக்குத் தான் தன் மகள் இந்த வாழ்க்கையை உதறிவிட்டு ஓடிப் போய்விட்டாளே என்று வருத்தம் இருந்தது.
தேன்மொழி தன் நாத்தனாரின் சந்தோசத்தைக் கண்டு கடவுளே இவள் இப்படியே சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
பிறகு வெரோனிகா தன் அண்ணன்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள். அன்றைய நாள் அவளுக்கு நன்றாகவே கழிந்தது.
உறங்கிக் கொண்டிருந்த உதயச்சந்திரனின் மொபைல் போன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்க அந்த சத்தத்தில் கண் விழித்தவன் எழுந்து பார்த்திட பிரகாஷ் தான் அழைத்திருந்தான். அவனிடம் பேசி விட்டு போனை வைத்திட வெரோனிகாவின் மொபைலுக்கு மேசேஜ் வந்திருந்தது.
நிகிலா தான் மெசேஜ் அனுப்பி இருந்தாள். ஏன் ஸ்கூல் வரவில்லை என்று அதைப் பார்த்தவன் போனை ஓரமாக வைத்து விட்டு அவளைத் தேடினான்.
அவள் தன் அண்ணன் மகன் கதிர்ரூபனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவனது அருகில் வந்த சக்திவேல் வாங்க மச்சான் என்றான். எங்கே என்றவனிடம் நம்ம தோப்புக்கு போகலாம் என்று அவனை அழைத்துச் சென்றான்.
அண்ணா எதற்கு மாமாவை கூப்பிடுறிங்க நீங்க மட்டும் போங்க என்றவள் மாமா நீங்க அது கூட போகதிங்க என்றாள். பாப்பா சும்மா இரு என்ற சக்தி உதயச்சந்திரனை அழைத்திட அது கூட போனிங்கனா உங்க கிட்ட நிஜமாவே நான் பேச மாட்டேன் மாமா என்றவள் கோபித்துக் கொள்ள உதயச்சந்திரனுக்கு என்ன விசயம் என்றே புரியாமல் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை உருவானது.
….தொடரும்….