என்ன யோசனை இந்து என்ற அர்ச்சனாவிடம் ஒன்றும் இல்லை என்ற இந்திரஜா சரி தூங்கலாமா என்றாள். சரி என்ற அர்ச்சனா அவளுடன் படுத்துக் கொள்ள இருவரும் உறங்க ஆரம்பித்தனர்.
என்னம்மா சாப்பிடாமல் என்ன பண்ணிட்டு இருக்கிங்க என்ற ஸ்ரீஜாவிடம் இல்லைடி உன் கிட்டையும், தேவ் கிட்டையும் சொல்லவில்லை சரி எங்க கிட்ட கூட சொல்லாமல் உதய்க்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க அந்த அளவுக்கு நானும், உன் அப்பாவும் அவங்களுக்கு வேண்டாதவங்களா போயிட்டோமா என்ன என்றார் வசுந்தரா.
அம்மா ஏன் கோபம் படுறிங்க எங்களுக்கு சப்போர்ட்டா நீங்க இருக்கிறதால சொல்லிருக்க மாட்டாங்க விடுங்க என்ற ஸ்ரீஜா சாப்பிட்டு தூங்குங்க. காலையில் அங்கே தானே போக போறிங்க அப்பறம் என்ன என்றாள்.
அங்கே போகலாமான்னு தெரியலைடி. பேசாமல் இந்துவை வரச் சொல்லிட்டு நாங்க மூன்று பேரும் கனடாவிற்கே போகலாம்னு தோனுது என்றார் வசுந்தரா. ஏம்மா இந்து ஒன்றும் தயா மாமாவை லவ் பண்ணவில்லையே. அவர் இல்லைனா என்ன பிரகாஷ் மாமாவுக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சுர வேண்டியது தானே என்றாள் ஸ்ரீஜா.
நம்ம மனசுல மட்டும் ஆசை இருந்தால் போதுமா ஸ்ரீஜா அவங்க மனசுலையும் அந்த விருப்பம் இருக்கனும். எனக்கு ஆசை தான். என் பொண்ணுங்க என் அண்ணன்கள் வீட்டில் மருமகள்களா சந்தோசமா வாழனும்னு ஆனால் விதி நீ அந்த வீட்டு மருமகள். ஆனால் உன்னை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வலி அம்மா மனசுல எப்பவுமே இருக்குடி என்றார் வசுந்தரா.
எப்படிம்மா ஏத்துப்பாங்க நான் தானே அவரை வேண்டாம்னு சொன்னேன் அதுவும் மணமேடையில் வச்சு அப்படி இருக்கும் பொழுது எப்படிம்மா என்னை ஏத்துப்பாங்க. அது அவருக்கு எவ்வளவு பெரிய அவமானம். அண்ணன் தாலி கட்ட வரும் பொழுது எனக்கு உங்களை பிடிக்கவில்லை உங்க தம்பியைத் தான் பிடிச்சுருக்கு. நான் அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லி அவரை அசிங்கப் படுத்தினது நான் தானம்மா என்ற ஸ்ரீஜா கண்ணீர் வடித்திட அவளது கண்களை துடைத்து விட்ட வசுந்தரா எல்லாம் நம்ம நேரம்டி சரி பாப்பா எங்கே என்றார்.
நிலா தேவ் கூட இருக்கிறாள் என்ற ஸ்ரீஜா சரிங்கம்மா நீங்க தூங்குங்க நானும் போயி தூங்குகிறேன் என்ற ஸ்ரீஜா தன்னறைக்கு சென்றாள்.
குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டு கொள்ளாமல் அவள் படுத்து விட்டாள். ஸ்ரீஜா என்றவனிடம் என்ன என்றாள் அலட்சியமாக. நாளைக்கு அத்தை, மாமா கூட நாமளும் அங்கே போகலாமா என்றான் தேவச்சந்திரன். எதற்கு என்றவளிடம் அதான் உதய்க்கு கல்யாணம் முடிஞ்சுருச்சே இன்னமும் நாம ஏன் ஒதுங்கியே இருக்கனும்.
நம்ம பாப்பாவும் ஏன் எல்லா சொந்தமும் இருந்து தனியா வளரனும் என்றான் தேவ். என்ன எல்லா சொந்தமும் இருந்தும் ஹும் உனக்கென்ன கவலை எல்லா சொந்தமும் இங்கே தான் இருக்காங்க. நமக்கு இரண்டரை வயசுல பாப்பா இருக்குங்கிற விசயம் கூட அவங்களுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் ஏன் வரவில்லைனு உனக்கு தெரியாதா என்ன என்றாள்.
நீ பண்ணின துரோகம் அதனால தான் அவங்க நம்ம பிள்ளையை கூட பார்க்க வரவில்லை என்றாள் கோபமாக. இன்னும் எத்தனை வருசம் தான் இதையே சொல்லிட்டு இருப்படி. நமக்கு கல்யாணம் முடிஞ்சு மூன்றரை வருசம் ஆகுது உன் மேல நான் உயிரையே வச்சுருக்கேன் ஆனால் நீ என்றவன் எனக்கு வலிக்குது ஸ்ரீஜா புரிஞ்சுக்கோ. நாம போயி மன்னிப்பு கேட்டால் நிச்சயம் அவங்க நம்மளை ஏத்துப்பாங்க என்றான் தேவச்சந்திரன்.
நீ பைத்தியமாடா அங்கே போக மாட்டேன்னு சொல்லுறதே தயா மாமா பச் உன் அண்ணன் இருக்கிறதால தான். அவர் இன்னொருத்தி கூட சந்தோசமா வாழுற வாழ்க்கையை என்னால பார்க்க முடியாது தேவ். என்னை புரிஞ்சுக்கோ நாம இங்கேயே இருந்திருவோம். அவங்க சந்தோசமா வாழட்டும். தயாமாமா வாழ்க்கையில் திரும்ப நம்மளை எப்பவுமே சந்திக்க வேண்டாம் என்ற ஸ்ரீஜா இதுதான் என்னோட முடிவு என்று கூறி விட்டு படுத்துக் கொண்டாள்.
உறக்கம் கலைந்து எழுந்த வெரோனிகா மாமா என்றிட என்ன ரோனி விடிஞ்சுருச்சா என்றான் உதயச்சந்திரன். நீங்க விடிய விடிய இப்படியேவா உட்கார்ந்திருந்திங்க என்றவளைப் பார்த்து சிரித்தவன் உனக்கு கை உடைஞ்சு தூங்க சிரம பட்டு தான் என் மடியில் படுத்திருக்க. உன்னை தள்ளி படுக்க வைக்கும் பொழுது கையை அசைச்சுட்ட அப்படினா வலி எடுக்காதா சொல்லு என்றவன் எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை என்றான்.
சரி ரோனி நீ போயி குளி என்றவனிடம் இந்தக் கை நனையாத படி ப்ளாஸ்டிக் கவர் வச்சு கட்டி விடுங்க மாமா என்றாள் வெரோனிகா. அவனும் அவளுக்கு உதவிட அவள் சென்று குளித்து முடித்நள்.
மாமா என்றவளிடம் என்ன ரோனி என்றான் உதய். கொஞ்சம் அண்ணியை வரச் சொல்லுறிங்களா நான் டிரஸ் மாத்தனும் என்றாள் வெரோனிகா. அர்ச்சனாவை கூப்பிட போனால் அங்கே இந்திரஜா இருப்பாள். நாமளும், ரோனியும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கவில்லைங்கிற விசயம் அவளுக்கு தெரிய வேண்டாமே என்று நினைத்தான்.
வெரோனிகா என்னைப் பொறுத்தவரை ஒரு குழந்தை அவளுக்கு நானே டிரஸ் மாற்றி விடுறதில் என்ன தப்பு என்று நினைத்தவன் நீ வெளியில் வா நான் தானே இருக்கேன் என்றான். இல்லை மாமா அது என்றவளிடம் நான் உன் ஹஸ்பண்ட் தானே அப்பறம் என்ன வா என்றான் உதய். அவளும் தயங்கியபடி துண்டுடன் வெளியே வர அவனே அவளுக்கு தலை துவட்டி விட்டு உடை மாற்றி விட்டான்.
அவளுக்குத் தான் வெட்கம் பிடுங்கித் தின்றது. என்னதான் கணவன் என்றாலும் அவளுடைய கூச்சம் உணர்ந்தவன் அச்சச்சோ நாம என்ன பண்ணிட்டு இருக்கோம். அவள் மனசுல ஏற்கனவே நம்ம மேல லவ் இருக்கு. நானே இப்போ அதை அதிகப் படுத்தி விட்டுட்டேனோ என்று நினைத்தவன் சரி கிளம்பு என்றான்.
அத்தை என்று வந்த வெரோனிகாவிடம் வா ரோனி என்ற சுசீலா காபியை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டவள் ஊர்மி எங்கே என்றாள். குட்மோர்னிங் ரோனி என்ற ஊர்மிளாவிடம் ப்ராக்டிகல் எக்ஸாம் டேட் கொடுத்துட்டாங்களா என்றாள் வெரோனிகா. அதெல்லாம் கொடுத்தாச்சு ரோனி நெக்ஸ்ட் வீக் ப்ராக்டிகல் ஸ்டார்ட். நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு அப்பறம் ஸ்டடி ஹாலிடேய்ஸ் என்ற ஊர்மிளா எக்ஸாம் மூன்று நாளைக்கு முன்னே ஹால்டிக்கெட் வாங்க போகனும் அவ்வளவு தான் என்றாள். ஓஓ ஓகே என்றவள் அவளிடம் பேசிக் கொண்டிருக்க இந்திரஜா அங்கு வந்தாள்.
ரோனி இவங்க இந்து அண்ணி என் அத்தை பொண்ணு என்ற ஊர்மிளாவிடம் தெரியும் சந்துரு மாமா சொன்னாங்க என்றாள் வெரோனிகா. என்ன சந்துரு மாமாவா என்ற இந்திரஜாவிடம் உதய் அண்ணாவை ரோனி சந்துரு மாமானு தான் கூப்பிடுவாள் என்றாள் ஊர்மிளா.
என்ன இங்கே சந்துரு மாமா புராணம் ஓடிட்டு இருக்கு இந்த பிரகாஷ் மாமா பற்றி யாருமே பேச மாட்டிங்க போலையே என்று வந்தான் பிரகாஷ். உங்களைப் பற்றி தானே மாமா நான் பேசட்டுமா என்ற வெரோனிகாவிடம் அண்ணி நான் ரொம்ப பாவம் நீங்க பேச ஆரம்பிச்சா என் காதில் இரத்தம் வந்திடும் அதனால நான் என் முறைப் பொண்ணை முறைச்சு பார்த்துட்டு ஓடிறேன் என்றான் பிரகாஷ்.
அத்தை பாருங்க அத்தை மாமா என்னை கிண்டல் பண்ணுறாங்க என்றாள் வெரோனிகா. என்னடா சொன்ன என் மருமகளை என்ற சுசீலாவிடம் அண்ணி பேச ஆரம்பிச்சா காதில் இரத்தம் வரும்னு தான் மம்மி சொன்னேன் என்றவனைப் பார்த்து சரியா தானடா மகனே சொல்லிருக்க என்றார் சுசீலா.
பார்த்தியா ஊர்மி மாமியார் கொடுமையை அம்மாவும், மகனும் என்னை பிளேடுனு சொல்லுறிங்களா இருங்க இருங்க நான் சந்துரு மாமாகிட்ட சொல்லுறேன் என்ற வெரோனிகா உதயச்சந்திரன் வர அவனிடம் கூறினாள்.
என்ன சித்தி இது நீங்க ஏன் இப்படி சொன்னிங்க என்ற உதய்யை பார்த்து அப்படி சொல்லுங்க மாமா. இந்த பிரகாஷ் மாமாவையும் சேர்த்து கேளுங்க என்ற வெரோனிகாவிடம் பொறு ரோனிமா என்றவன் ஏன்டா பிரகாஷ் சித்தி தான் தப்பா சொல்லிட்டாங்க நீயாவது சரியா சொல்லக் கூடாது வெரோனிகா பிளேடு இல்லை ரம்பம்னு என்ற உதயச்சந்திரன் கூறிட எல்லோரும் சிரித்து விட்டனர்.
மாமா நீங்களுமா என்ற வெரோனிகா கோபமாக அங்கிருந்து செல்ல எத்தனிக்க ரோனி ரோனி நில்லு என்றான். போங்க மாமா என்கிட்ட பேசாதிங்க அதான் நான் ரம்பம் ஆச்சே என்றவளிடம் சரி போ ஊர்மி அப்போ உனக்கு மட்டும் தான் இந்த கிப்ட் என்றான் உதயச்சந்திரன்.
ஐஐ சூப்பர் அண்ணா என்ற ஊர்மிளா ரோனி உனக்கும் இருக்கு பாரு எக்ஸாம் கிட் என்றாள். அவனை முறைத்து விட்டு தாங்க்ஸ் என்று அந்த எக்ஸாம் கிட்டை வாங்கியவள் சுசீலா கொடுத்த சூப்பை குடித்தாள்.
என்ன சூப் இது என்ற இந்திரஜாவிடம் ஆட்டுக்கால் சூப் இந்து அவளுக்கு கை சரியாகனும்ல என்ற சுசீலா உனக்கும் வேண்டுமா என்றார். இல்லை அத்தை வேண்டாம் என்றவள் வெரோனிகாவிடம் பேச ஆரம்பித்தாள். இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவானது.
சித்தி நான் கிளம்புறேன் என்ற உதய் , பிரகாஷிடம் திரும்பி நீ எப்போ வர என்றான். பத்து நிமிசம் அண்ணா என்றவனிடம் சரி அப்போ நான் முன்னாடி போகிறேன் என்ற உதயச்சந்திரன் கிளம்பிட வாசலில் ஒரு கார் வந்து நின்றது.
அந்த காரில் இருந்து வசுந்தரா, நெடுஞ்செழியன் இருவரும் இறங்கினர். அவர்களைக் கண்டவன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள முயன்று வாங்க அத்தை, வாங்க மாமா என்று அவர்களை வரவேற்றான்.
சித்தி என்ற உதய்யிடம் என்னப்பா என்றார் சுசீலா. அத்தை, மாமா வந்திருக்காங்க என்றான் உதயச்சந்திரன். வாங்க அண்ணி, வாங்க அண்ணா என்று அவர்களை வரவேற்றார் சுசீலா.
அண்ணன், அண்ணி ஞாபகம் எல்லாம் இருக்கா அண்ணி உங்களுக்கு என்றார் வசுந்தரா. அண்ணி அது என்ற சுசீலாவிடம் போங்க அண்ணி என் அண்ணன் மகனுக்கு கல்யாணம் ஆன விசயம் கூட தெரியாமல் அவனுக்கு பொண்ணை கட்டிக் கொடுக்கனும்னு கனடாவில் இருந்து வந்திருக்கேன் என்றார் வசுந்தரா.
அண்ணி அது என்ற சுசீலா ஏதோ சொல்ல வருவதற்குள் வா வசுந்தரா எப்போ வந்த என்ற கல்யாணிதேவி வாங்க மாப்பிள்ளை என்று நெடுஞ்செழியனையும் வரவேற்றார்.
நேற்று தான் வந்தேன் என்ற வசுந்தராவிடம் சரி நல்லது நீயும், மாப்பிள்ளையும் சாப்பிட்டு ஓய்வெடுங்க எதா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம் என்றார் கல்யாணிதேவி.
…..தொடரும்…