என்னம்மா இது உதய்க்கு கல்யாணம் ஆனதைப் பற்றி எங்களுக்கு எதுவுமே சொல்லவில்லை என்றார் வசுந்தரா. அவன் தான் என்னால இன்னொரு முறை ஊருக்கெல்லாம் எனக்கு கல்யாணம், கல்யாணம்னு பத்திரிக்கை வைக்க முடியாது , வேண்டும் என்றால் சிம்பிளா கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொன்னான்.
அது மட்டும் இல்லை அவன் கல்யாணமே ஒரு பெரிய கூத்தாகிருச்சு என்றார் கல்யாணிதேவி. அப்படி என்ன கூத்து என்ற வசுந்தராவிடம் உதய்க்கு நிச்சயம் பண்ணின பொண்ணு ரோனியோட அக்கா வினோதா தான். அவள் காதலிச்ச பையனோட ஓடிப் போயிட்டாள். அப்பறம் வேற வழி இல்லாமல் தான் ரோனியை கல்யாணம் பண்ணி வச்சோம். இரண்டாவது தடவையும் மணமேடை வரை வந்து கல்யாணம் நிற்கிறது அவனுக்கு இன்னும் கல்யாணத்தின் மீது வெறுப்பு வந்திருமோனு பயந்து தான் அவனைக் கட்டாயப் படுத்தி வெரோனிகாவை கல்யாணம் பண்ணி வச்சோம்.
அவள் ரொம்ப நல்ல பொண்ணு. ஆச்சி, ஆச்சினு என்னையவே சுத்தி , சுத்தி வருவாள். அத்தை, அத்தைனு மலர், சுசீ இரண்டு பேரோட முந்தானையை பிடிச்சுட்டு தான் சுத்துவாள். அவள் எவ்வளவு சூப்பரா சமைப்பாள் தெரியுமா. உதய்க்கு சரியான ஜோடி அவள் தான்.
அவன் மேல உயிரையே வச்சுருக்காள். வாய் ஓயாமல் சந்துரு மாமா, சந்துரு மாமானு அவனை சுத்தி தான் இருப்பாள். அவன் தான் என்ன அவளுக்கு ஒன்றுனா அவ்வளவு தான் துடிச்சுப் போயிருவான். அவனும் பழைய விசயங்கள் எல்லாத்தையும் மறந்துட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் ரோனி தான் என்றார் கல்யாணிதேவி.
எல்லாம் சரிதான் ஆனால் ஏன் கல்யாணம் பற்றி ஒரு வார்த்தை கூட எங்க கிட்ட சொல்லவில்லை என்றார் வசுந்தரா. உதய்க்கு கல்யாணம் அவன் பழைய விசயங்களை மறக்கனும். உனக்கு சொன்னால் உன் மகளுக்கு சொல்லனும். அவள் வந்தால் அவளோட புருசனும் வருவான் அவங்களை பார்த்தால் உதய்க்கு முதலில் ஏற்பாடு பண்ணின கல்யாணத்தோட கசப்பு தான் மனசுல இருக்கும். அப்பறம் எப்படி அவனால நிம்மதியா கல்யாணம் பண்ணிக்க முடியும். அதான் சொல்லவில்லை என்றார் கல்யாணிதேவி.
அர்ச்சனா, பிரகாஷ், ஊர்மிளானு இன்னும் மூன்று பிள்ளைகள் இருக்காங்களே அவங்க கல்யாணத்திற்கு சொல்லிக்கலாம்னு நான் தான் உன் அண்ணன் கிட்ட சொன்னேன் என்றார் கல்யாணிதேவி.
என்னம்மா பதில் இது. தேவ் கூட இந்த வீட்டு பையன் தான். அவங்க பண்ணினது தப்பு தான், துரோகம் தான் நான் இல்லைன்னு சொல்லவில்லை. ஆனால் அதற்காக குழந்தையை கூட யாரும் பார்க்கவில்லையே என்றார் வசுந்தரா.
பெத்த மகனே இல்லைன்னு மலர் தலை முழுகிட்டாள். அப்பறம் எப்படி பேத்தி சொந்தமாகும் சொல்லு. நான் கூட மலர்கிட்டையும், நெடுமாறன்கிட்டையும் சொன்னேன். அவங்க சொன்ன ஒரே பதில் எங்களுக்கு இருக்கிறது இரண்டே இரண்டு பிள்ளைகள் தான். உதயச்சந்திரன், அர்ச்சனா மட்டும் தான். எங்க இரண்டாவது மகன் தேவச்சந்திரன் செத்துப் போயிட்டான்னு சொல்லிட்டாங்க அப்பறம் அவங்க கிட்ட என்ன பேச சொல்லுற.
ஸ்ரீஜா உன் பொண்ணுங்கிறதால நீ அவங்க பக்கம் நின்னுட்ட. அசிங்கப் பட்டது உதய் தானே. என்ன தான் ஆயிரம் பிள்ளைகளை பெற்றாலும் அம்மானு கூப்பிட்ட முதல் வாரிசு மேல தான் எல்லா அம்மாவும் உயிரா இருப்பாங்க அதனால நீ ஸ்ரீஜா பக்கம் நின்னுட்ட. மலரோட மூத்த வாரிசு உதய் தானே. அவன் ஏமாந்து , அசிங்கப்பட்டு நின்றான். அப்போ அவள் அவன் பக்கம் தானே நிற்பாள் என்ற கல்யாணிதேவி சரி வசு முடிஞ்சு போன விசயத்தைப் பற்றி பேச வேண்டாம்.
நீயும், மாப்பிள்ளையும் வந்த விசயத்தை சொல்லு என்றார் கல்யாணிதேவி. ஏன்மா நீ கூட என் பேத்தி எப்படி இருக்கிறாள்னு கேட்க மாட்டியா என்றார் வசுந்தரா. அந்தக் குழந்தை மேல எனக்கு எந்த கோபமும் கிடையாது. ஏன் இந்த வீட்டில் யாருக்குமே குழந்தை மேல கோபம் இல்லை. அந்த குழந்தையை பெத்தவங்க மேல இருந்த வெறுப்பு தான் அந்த குழந்தையைப் பற்றி கூட யாருக்கும் விசாரிக்க மனசு இல்லை.
அதனால அந்தப் பேச்சு வேண்டாம் என்றார் கல்யாணிதேவி. சரி விடுங்க என்ற வசுந்தரா நான் இங்கே வந்தது உதய்க்கும், இந்துவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தான் ஆனால் இங்கே நிலைமை வேறையா இருக்கு. உதய்க்கு கல்யாணம் முடிஞ்சுருச்சுனு சொல்லுறிங்க. சரி அது பரவாயில்லை பிரகாஷ் இருக்கானே அவனுக்கும், இந்துவுக்கும் கல்யாணம் பேசலாமா.
அண்ணன்கள், அண்ணிகள் கிட்ட பேசிட்டு சொல்லுங்க என்றார் வசுந்தரா. நல்ல விசயம் தான் பிரகாஷ்க்கும் கல்யாண வயசு வந்துருச்சு தானே அவனுக்கும் பொண்ணு தேடிட்டு தான் இருக்கிறோம். நாளைக்கே இந்துவுக்கும், பிரகாஷ்க்கும் பொருத்தம் பார்த்துருவோம் என்றார் கல்யாணிதேவி.
அத்தை என்று வந்த மலர்கொடி வசுந்தராவைப் பார்த்து விட்டு வசு எப்போ வந்த என்றார். காலையில் வந்தேன் அண்ணி என்ற வசுந்தராவிடம் குங்குமத்தை நீட்டினார் மலர்கொடி.
கோவிலுக்கு போனேன் வசு என்றவர் கல்யாணிதேவியிடம் விபூதியை நீட்டினார். ரோனிக்கு பிரசாதம் கொடுத்தியா மலர் என்ற கல்யாணிதேவியிடம் இல்லை அத்தை இப்போ தான் வந்தேன். வந்ததும் உங்க கிட்ட தான் கொடுக்கிறேன் என்றார. மலர்கொடி.
சரி மலர் என்ற கல்யாணிதேவி அங்கு நின்ற ஊர்மிளாவை அழைத்தார். என்ன அப்பத்தா என்ற ஊர்மிளாவிடம் போயி ரோனியை அழைச்சுட்டு வா ஊர்மி என்றார் கல்யாணிதேவி. சரி என்று ஊர்மிளாவும் சென்றாள்.
ரோனி என்ற ஊர்மிளாவிடம் என்ன ஊர்மி என்றாள் வெரோனிகா. உன்னை அப்பத்தா கூப்பிட்டாங்க என்றதும் சரியென்று வெரோனிகா அவளுடன் வந்தாள்.
என்ன ஆச்சி கூப்பிட்டிங்களாமே என்ற வெரோனிகாவிடம் தூங்கிட்டு இருந்தியா ரோனி என்றார் கல்யாணிதேவி. இல்லை ஆச்சி படிச்சுட்டு இருந்தேன். சந்துரு மாமா போகும் போதே சொல்லிட்டு தான் போனாங்க ஈவ்னிங் டெஸ்ட் வைப்பேன் ஒழுங்கா படினு என்ற வெரோனிகாவிடம் சரி ரோனி எக்ஸாம் வருதுல அதான் படிக்க சொல்லிருப்பான் என்றார் கல்யாணிதேவி.
அவள் சிரித்து விட்டு சரிங்க ஆச்சி என்னை கூப்பிட்டு அனுப்புனிங்க என்னனு சொல்லவில்லை என்றவளிடம் உன் அத்தை உனக்காக வேண்டி கோவிலில் விளக்கு ஏற்றிட்டு வந்திருக்கிறாள் அதான் பிரசாதம் எடுத்துக்கோ என்றார் கல்யாணிதேவி. அத்தை நீங்களே வச்சு விடுங்க என்ற வெரோனிகாவிடம் இவங்க வசுந்தரா. உனக்கு பெரியம்மா, உங்க மாமாவோட தங்கச்சி என்ற மலர்கொடி அவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்றார்.
வசுந்தராவிடம் திரும்பி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க பெரியம்மா என்று வசுந்தராவின் காலில் விழுந்த வெரோனிகாவை தூக்கி நிறுத்தியவர் நல்லா இரும்மா என்று கூறி அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டார்.
அத்தை கோவிலில் புளியோதரை, பொங்கல் எல்லாம் கொடுக்கவில்லையா என்றாள் வெரோனிகா. ஏன்டி புளியோதரை வேண்டும்னு சொன்னால் நான் செய்து தரப் போறேன் என்று வந்த சுசீலாவிடம் நீங்க எவ்வளவு தான் பக்குவமா செய்தாலும் கோவில் பிரசாதம் டேஸ்ட் வராதுல என்ற வெரோனிகாவைப் பார்த்து சிரித்தார் வசுந்தரா.
சரிடி உதய், பிரகாஷ் எப்போ வராங்கனு சொன்னாங்களா என்ற சுசீலாவிடம் இப்போ தான் அத்தை சந்துரு மாமா பேசினாங்க. வேலை கொஞ்சம் அதிகமா இருக்குதாம் அதனால கேண்டீன்லயே சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டாங்க என்றாள் வெரோனிகா. சரி அப்போ நீங்க எல்லோரும் வாங்க சாப்பிட என்ற சுசீலா அனைவருக்கும் உணவினை பரிமாறினார்.
என்ன மேடம் ஏதோ பேசனும்னு சொன்னிங்க என்ற உதயச்சந்திரனிடம் சார் அது வந்து என்று அவள் சுற்றிலும் பார்த்தாள். அந்த பூங்கா முழுவதும் காதல் ஜோடிகள் இருப்பதைக் கண்டவன் மேடம் இங்கே பேச வேண்டாம் அதோ அந்த கோவிலுக்கு வாங்க அங்கே போயி பேசலாம் இந்த இடம் நமக்கானது இல்லை என்றான்.
ஏன் சார் அப்படி சொல்லுறிங்க என்ற வினித்ராவிடம் இங்கே முழுக்க , முழுக்க காதல் ஜோடிகள் தான் இருக்காங்க இங்கே நண்பர்களுக்கு என்ன வேலை என்றவன் சிரித்திட நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க சார் சிரிக்கும் பொழுது என்றாள் வினித்ரா.
அட ஏன் மேடம் நீங்க வேற என்றவன் சரி வாங்க அந்த கோவிலுக்கு போகலாம் என்றான். அவளும் அவனைத் தொடர்ந்து அந்த கோவிலுக்குச் சென்றாள். மேடம் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுறேன் என்றவன் தன் மனைவி பெயரில் அர்ச்சனை செய்தான்.
வெரோனிகா பெயரில் ஏன் என்ற வினித்ராவிடம் அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகி இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கிறாள் அதான் என்றவன் இறைவனிடம் வேண்டிட வினித்ராவும் கடவுளிடம் வேண்டினாள் தன் காதல் கை கூட வேண்டும் என்று.
சொல்லுங்க மேடம் என்ன விசயம் என்றவனிடம் சார் அது வந்து என்றவள் இழுத்திட என்ன விசயம் மேடம் தயங்காமல் சொல்லுங்க என்றான் உதயச்சந்திரன். சார் உங்க கிட்ட இதை எப்படி சொல்லுறதுன்னு தெரியலை என்றவளது மொபைல் போன் ஒலித்திட ஒரு நிமிசம் சார் என்றவள் போனை அட்டன் செய்து சொல்லு பவி என்ன விசயம் என்றிட பவித்ராவோ இரவு என்ன சாப்பாடு செய்திட என்றாள். அடியே கரடி நானே இப்போ தான் தைரியம் வர வச்சு அவன் கிட்ட காதலை சொல்ல வந்திருக்கேன் ஏன்டி நேரம் காலம் தெரியாமல் போன் பண்ணி உயிரை வாங்குற உப்புமா தானே உனக்கு கிண்ட தெரியும். அப்பறம் என்ன கேள்வி அதையே செய்து தொலை என்று போனை வைத்த வினித்ரா அவனருகில் வந்தாள்.
அவன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டு இருந்தான். சரி ரோனி நான் வாங்கிட்டு வரேன் என்றவன் வினித்ராவைப் பார்த்து விட்டு ஒரு நிமிசம் என்றவன் அம்மா தாயே நீ சொன்ன கலரிலே உனக்கு பிடிச்ச கண்ணாடி வளையல் வாங்கிட்டு வரேன் போதுமா என்றவன் நான் ஒரு ப்ரண்ட் கூட முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் அப்பறம் பேசட்டுமா என்றவன் போனை வைத்தான்.
ஸாரி மேடம் வீட்டில் இருந்து போன் என்ற உதயச்சந்திரன் சொல்லுங்க என்ன விசயம் பேசனும் என்றான். சார் என்னை தப்பா நினைச்சுக்காதிங்க என்ற வினித்ரா இதை உங்க கிட்ட சொல்லனும்னு பலமுறை ட்ரை பண்ணிருக்கேன். ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்துட்டே இருந்துச்சு என்ற வினித்ரா திக்கித் திணறிட என்ன மேடம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க பலமுறை ட்ரை பண்ணி சொல்ல முடியலைனா அப்படி என்ன பிரச்சனை மேடம் என்றான் உதயச்சந்திரன்.
சார் அது வந்து என்று மென்று முழுங்கியவள் தைரியத்தை வர வைத்துக் கொண்டு ஐ லவ் யூ மிஸ்டர் உதயச்சந்திரன் என்றாள். வாட் என்றவனிடம் ஆமாம் உதய் சார் நான் உங்களைக் காதலிக்கிறேன் என்றவள் அவன் முகத்தை பார்த்திட அவன் என்ன
சொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தான்.
…..தொடரும்….