விதியின் முடிச்சு…(4)

4.3
(6)

தன் வீட்டிற்கு வந்தவுடனே ஓடிச் சென்று தன் அன்னையைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் வெரோனிகா. ரோனி என்னாச்சு ஏன் அழுதுகிட்டு இருக்க என்ற பூங்கொடி மகளை சமாதானம் செய்தார். ரோனி என்ன பண்ணுற நீ இப்படி அழுதால் மாப்பிள்ளை என்ன நினைப்பாரு என்று கதிரேசன் கண்டித்திடவும் மௌனமாகினாள் வெரோனிகா.

 

சக்திவேல், சரவணன் இருவரும் உதயச்சந்திரனிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.

 

அம்மா அக்கா பத்தி எதாவது தகவல் கிடைச்சதா என்ற வெரோனிகாவிடம் பிரபு கூட தான் ஓடிப் போயிருக்கிறாள். உன் பெரியப்பாவும், அப்பாவும் மாமா வீட்டுக்குப் போயி பெரிய சண்டையே போட்டுட்டு வந்துட்டாங்க. ஆனால் பிரபுவும், வினோதாவும் எங்கே போனாங்கனு மாமாவுக்கும் தெரியவில்லை என்ற பூங்கொடி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே ரோனி என்றார்.

 

பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லைம்மா ஆனால் எனக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லைம்மா இங்கே உங்க கூடவே இருக்கேன்மா என்று அழுதவளிடம் என்னடி இது குழந்தை மாதிரி அழுதுகிட்டு இருக்க எல்லாம் சரியாகிரும் என்ற பூங்கொடி கணவன் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மகளுக்கு அறிவுரை கூறினார்.

 

 

கவலைப்படாதே ரோனி கல்யாணம் நடந்தாலும் நீ திரும்ப ஸ்கூல் போகப் போற உன் மாமனார் அப்பாகிட்ட பேசிருக்காரு. நம்ம ஊரு ஸ்கூலில் பேசி உன்னோட டீசியை வாங்கியாச்சு உன்னை அவங்க ஊரில் உள்ள அவங்களோட ஸ்கூலிலே சேர்க்கப் போறாங்களாம் என்றார் பூங்கொடி. அவங்க ஸ்கூலில் வேலை பார்க்கிறாங்களா என்ற வெரோனிகாவைப் பார்த்து சிரித்த பூங்கொடி ஸ்கூலே அவங்களுடையது தான்டி என்றார். ஹும் சரிங்கம்மா என்றவளிடம் மேலும் பேசிக் கொண்டு இருந்தார் பூங்கொடி.

 

என்ன  மாப்பிள்ளை தனியா இருக்கிங்க சக்தியும், சரவணனும் எங்கே என்ற கதிரேசனிடம் போன் பேசிட்டு சக்தி போனாரு. சரவணனை பெரிய மாமா கூப்பிட்டாங்கனு போயிருக்காரு மாமா என்றான் உதயச்சந்திரன்.

 

ரோனி என்று அழைத்த கதிரேசனிடம் சொல்லுங்கப்பா என்றாள் வெரோனிகா. மாப்பிள்ளையை நம்ம தோட்டத்து வீட்டுக்கு கூட்டிட்டு போமா இங்கே கொஞ்சம் அவருக்கு அசௌகரியமா இருக்கும் போல என்றிட இல்லை மாமா பரவாயில்லை என்றான் உதயச்சந்திரன்.

 

இல்லை மாப்பிள்ளை சொந்தக்காரவங்க எல்லோரும் வந்துட்டு இருக்காங்க. வினோதா பற்றியே பேசிட்டு இருக்காங்க. அது உங்களுக்கு சங்கடத்தைக் கொடுக்குதுனு என்னால புரிஞ்சுக்க முடியுது மாப்பிள்ளை அதான் சொல்கிறேன் என்று கதிரேசன் கூறிட சரியென்று உதயச்சந்திரன் வெரோனிகாவுடன் கிளம்பினான்.

 

என்ன இது வயலுக்கு நடுவில் வீடா என்றவனிடம் ஆமாம் என்றாள். செம்ம ரசனை தான் என்றவனிடம் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பொழுது நைட்டு தூங்கிறதுக்காக முதல்ல சின்னதா கட்டிருந்தாங்க அப்பறம்  கொஞ்சம் பெருசா கட்டினாங்க என்றாள்.

 

தென்னைமரம், வயல்காடு இது இரண்டுக்கும் நடுவில் வீடு அந்தப் பக்கம் என்ன கரும்புத்தோட்டமா சூப்பரா இருக்கு என்றவனிடம் எல்லாமே நம்ம வயல்தான் என்றாள். உன் அப்பா, பெரியப்பாவுடைய வயல் நம்ம வயல்னு சொல்லுற என்று சொல்லிவிட்டு அவன் சென்றிட அவனை முறைத்து விட்டு அவள் அமைதியாக வந்தாள்.

 

 

ஏய் பார்த்துப் போங்க வயக்காடு வரப்பு கொஞ்சம் கரடு முரடா இருக்கும் என்றவளிடம் எனக்கு தெரியும் என்றவன் வரப்பில் கால் வைத்திட கால் சருக்கி விழப் போக அவனைத் தாங்கிப் பிடித்தாள் வெரோனிகா.

 

பார்த்து நான் தான் சொன்னேனே என்றவளைப் பார்த்தவன் தாங்க்ஸ் என்றிட அவள் சிரித்து விட்டு இளநீர் சாப்பிடுறிங்களா என்றாள். சரி என்றவனிடம் ஒரு நிமிசம் என்றவள் முத்து அண்ணா என்றிட சொல்லு பாப்பா என்று வந்தார் முத்து.

 

இளநீர் வேண்டும் என்றிட இரு பாப்பா என்றவர் மரத்தில் ஏறி சில இளநீர் காய்களை பறித்து வந்தவர் இருவருக்கும் சீவிக் கொடுத்தார். தாங்க்ஸ் என்று உதயன் கூறிட இருக்கட்டும் மாப்பிள்ளை என்ற முத்து பாப்பாவை நல்லா பார்த்துக்கோங்க என்று கூறி விட்டு கிளம்பினார்.

 

வேற எதுவும் வேண்டுமா என்றவளிடம் வேற என்ன இங்கே இருக்கு என்றான் உதயச்சந்திரன். வீட்டுக்கு பின்னாடி மாமரம், கொய்யாமரம் , சீதாப்பழமரம் எல்லாம் இருக்கு அதான் என்றிட எனக்கு ஒன்றும் வேண்டாம் என்றவன் வீட்டு வாசலில் இருந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தான். தென்னை மரங்கள் நிறைந்திருந்ததால் வெயில் இல்லாமல் நிழலாக இருந்தது. காற்றும் நன்றாக அடித்திட போனை பார்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

 

வெரோனிகா அமைதியாக அங்கு இருந்த ஈசிசேரில் அமர்ந்தபடி உறங்கிவிட்டாள். அவனுமே அந்த கயிற்று கட்டிலிலே நன்றாக உறங்கிப் போனான்.

 

 

உதயச்சந்திரனின் மொபைல் போன் ஒலித்திட உறக்கத்தில் இருந்து கண் விழித்தவன் மொபைலில் வந்த பெயரைப் பார்த்து புன்னகையுடன் எடுத்து ஓரமாக சென்று பேச ஆரம்பித்தான்.

 

அவன் போன் பேசி விட்டு வரும் பொழுதும் அவள் எழும்பவில்லை. அவள்பாட்டிற்கு உறங்கிக் கொண்டு இருந்திட அவளருகில் வந்தவன் அவளை எழுப்ப நினைத்தான்.

 

அவளைத் தொட கையை கொண்டு போனான் என்ன நினைத்தானோ கையை இறுக்கமாக மூடிக் கொண்டவன் ரோனி என்றிட அவள் அசையவே இல்லை. ஏய் ரோனி என்று கொஞ்சம் சத்தமாக எழுப்பிட ஹும் என்னாச்சு என்று அவள் வேகமாக எழும்பிட ஒன்றும் இல்லை என்றவன் ஏன் இங்கே தூங்குற நகை எல்லாம் போட்டுட்டு இப்படி வெட்ட வெளியில் தூங்கிட்டு இருக்க வீட்டுக்குள்ள போயி தூங்கு என்றான்.

 

அவள் அமைதியாக செல்ல ஏய் ஒரு நிமிசம் என்றவனிடம் உன் பெயர் என்ன ரோனியா என்றவனிடம் வெரோனிகா என்றாள். செல்லமா ரோனினு கூப்பிடுவாங்க என்றிட சரி போ என்றவன் அமைதியாக அங்கு அமர்ந்திருக்க உள்ளே வாங்க என்றாள்.

 

வீடு சூப்பரா இருக்கு என்றவன் ஹாலில் அமர்ந்து டீவி பார்க்க ஆரம்பிக்க அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். தண்ணீர் நல்லா டேஸ்ட்டா இருக்கே கேன்வாட்டர் மாதிரி இல்லையே என்றவனிடம் இது ஆத்து தண்ணீர் என்றாள்.

 

ஆத்து தண்ணீரா என்றவனிடம் ஆமாம் ஆத்துல தண்ணீர்ஊற்று தோன்டி தண்ணீர் எடுப்போம் என்றாள். சரி என்றவன் அமைதியாக டீவி பார்த்துக் கொண்டிருக்க வீட்டின் கதவு தட்டப்படவும் கதவை ஏன் சாத்துனிங்க என்றாள்.

 

ஏன் என்றவனிடம் இது கிராமம் பகலில் கதவு அடைச்சுருந்தால் தப்பா நினைப்பாங்க என்றவள் சென்று கதவைத் திறந்திட அர்ச்சனா, பிரகாஷ், ஊர்மிளா மூவரும் சரவணனுடன் வந்திருந்தனர்.

 

அண்ணா என்ற பிரகாஷிடம் எப்போ வந்திங்க என்றான் உதயச்சந்திரன். இப்போ தான் வந்தோம் என்றவன் தன் அண்ணனுடன் பேச ஆரம்பிக்க சரவணன் சென்று முத்து அண்ணனிடம் சொல்லி அனைவருக்கும் இளநீர் கொண்டு வந்தான்.

 

ரொம்ப தாங்க்ஸ் என்ற அர்ச்சனாவிடம் இருக்கட்டும்ங்க என்றவன் தன் தங்கையிடம் பாப்பா சாப்பாடு எல்லோருக்கும் இங்கேயே எடுத்துட்டு வரச் சொல்லட்டுமா என்றிட இல்லை அண்ணா அங்கே வருகிறோம். ஊருக்கு கிளம்பனும்ல என்றாள் வெரோனிகா.

 

இல்லை பாப்பா மாப்பிள்ளை குடும்பம் இன்னைக்கு இங்கே தங்கிட்டு நாளைக்கு தான் போறாங்க அதனால பிரச்சனை இல்லை. இன்னைக்கு ராத்திரி நம்ம ஊரில் பௌர்ணமி பூஜை நம்ம கோவிலில் இருக்கிறதால பூஜை முடிச்சுட்டு நாளைக்கு தான் ஊருக்கு போறாங்க என்றதும் சரிங்க அண்ணா என்றாள்.

 

மாப்பிள்ளை சாப்பாடு இங்கே கொண்டு வர சொல்லட்டுமா என்ற சரவணனிடம் இல்லைங்க நாங்க அங்கே வருகிறோம் என்றவன் என்ன பிரகாஷ், அர்ச்சு, ஊர்மி போகலாமா என்றான். சரிங்க அண்ணா போகலாம் என்று அவர்கள் கூறிட சரவணன் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

விருந்து உபசாரங்கள் எல்லாம் பலமாக இருந்தது. நெடுமாறன் தன் சம்மந்தி கதிரேசனிடம் வெரோனிகாவின் டீசி வாங்குவது பற்றி கேட்டிட அவரும் நீங்கள் சொன்னது போல டீசி வாங்கிவிட்டேன் சம்மந்தி என்றார்.

 

டீசி எதற்கு நெடுமாறா என்ற கல்யாணிதேவியிடம் நம்ம ஸ்கூலில் வெரோனிகாவை சேர்த்து விடலாம்னு உதய் முடிவு பண்ணிருக்கான்மா என்றார. நெடுமாறன்.

 

என்ன உதய் உன் முடிவு தானா என்ற கல்யாணியிடம் ஆமாம் அப்பத்தா அவள் படிக்கட்டும். உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை நம்ம வீட்டில் எல்லோருமே நல்லா படிச்சவங்க அவளோட படிப்பை நாம கெடுக்கலாமா என்றிட சரிங்கப்பா உங்க விருப்பம் நல்லபடியா படிக்கட்டும் என்ற கல்யாணிதேவி கதிரேசனைப் பார்த்து அவள் பள்ளிக்கூடம் போகணும் சம்மந்தி அதனால இந்த வாரத்திலே ஒரு நல்லநாளா பார்த்து தாலி பிரிச்சு கோர்த்துருவோம். தாலிச் செயின் போட்டிருந்தால் கல்யாணம் ஆனது யாருக்கும் தெரியாமல் இருக்கும்.

 

கல்யாணம் ஆனது தெரிந்தால் கூடப் படிக்கிற பிள்ளைகள் கிண்டல் பண்ணுங்க என்றிட சரிங்கம்மா உங்க விருப்பம் என்றார் கதிரேசன்.

 

அண்ணி என்ற அர்ச்சனாவிடம் என்னை அப்படி கூப்பிடாதிங்க அக்கா ஏதோ வயசானவங்க மாதிரி தோணுது. நான் உங்களை விட சின்னப்பொண்ணு தானே என்றாள் வெரோனிகா.

 

சரி வெரோனிகா என்றவளிடம் ரோனினே கூப்பிடலாம் என்றாள் வெரோனிகா. அப்பறம் திரும்பவும் ஸ்கூல் போக போறிங்க ஜாலி தான் என்றாள் அர்ச்சனா. யாரும் கிண்டல் பண்ண மாட்டாங்களே எனக்கு பயமா இருக்கு என்ற ரோனியிடம் அதெல்லாம் யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க என்ற ஊர்மிளா நீங்க என்ன க்ரூப் என்றாள்.

 

பர்ஸ்ட் குரூப் கம்ப்யூட்டர்சயின்ஸ் என்றிட ஏய் அப்போ நீ என்னோட க்ளாஸ் தான் என்றவள் சிரித்து விட ஏய் வாயை மூடுடி என்றாள் அர்ச்சனா.

 

எதற்கு சிரிக்கிற என்ற ரோனியிடம் நம்ம கிளாஸ்டீச்சர் யார் தெரியுமா என்றவள் மேலும் சிரிக்க ஊர்மி சும்மா இருக்க மாட்டியா இரு உன்னை சித்திகிட்ட சொல்லித் தரேன் என்றாள் அர்ச்சனா.

 

சித்தி இங்கே பாருங்க இவள் அண்ணிகிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கிறாள் என்றாள் அர்ச்சனா. ஏய் என்னடி உங்க சக்காளத்தி சண்டையை என் மருமகள்கிட்டையும் ஆரம்பிச்சுட்டிங்களா என்ற சுசீலா அவளுங்க கிடக்காளுங்க நீ வா ரோனி என்ற சுசீலா மருமகளை அழைத்துச் சென்றார்.

 

ஏன் அக்கா சொன்னால் என்ன அவளுக்கு தெரியத்தானே போகுது என்ற ஊர்மிளாவிடம் அவள் பயந்த சுபாவம், ரொம்ப அப்பாவியா இருக்கிறாள் நீ வேற அவளை கிண்டல் பண்ணிகிட்டு இருக்க என்றாள் அர்ச்சனா.

 

அண்ணன் தான் அவளோட கிளாஸ்டீச்சர்னு சொல்றதோட நீ விட்டுருப்பியா புருசன் டீச்சர் , பொண்டாட்டி ஸ்டூடண்ட்னு கிண்டல் பண்ணுவ அவள் அழுதுகிட்டு ஸ்கூல் போக மாட்டேன்னு சொல்லிவிட்டாள் அப்பத்தா அதையே பிடிச்சுகிட்டு அவள் படிப்புக்கு மங்களம் பாடிட்டாங்கனா என்ன பண்ணுறது என்ற அர்ச்சனா நீ அவள்கிட்ட எதையும் சொல்லாதே அவளாவே தெரிஞ்சுகட்டும் என்றாள் அர்ச்சனா.

 

சரிங்க அக்கா என்ற ஊர்மிளா அக்கா ஐஸ் வண்டி வருது இரு நான் போயி வாங்கிட்டு வரேன் என்று ஓடினாள்.

 

அம்மா ஐஸ் வண்டி வருது நான் போயி வாங்கிட்டு வரேன் என்று ஓடப் போன வெரோனிகாவின் கையைப் பிடித்த வசந்தி என்னடி பண்ணுற உனக்கு கல்யாணம் ஆகிருச்சு ரோனி என்னமோ சின்னப்பிள்ளை போல ஐஸ்வண்டியை பார்த்து விட்டு ஓடுகிறாய் என்றதும் கண்களில் நீர் கோர்த்திட மௌனமாக நின்றாள் வெரோனிகா.

 

 

….தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!