என்ன ரோனி வினோதா வீட்டுக்கு போறோம்னு சொல்லிட்ட அவங்க தான் ஊருக்கு போயிட்டாங்களே என்ற உதயச்சந்திரனிடம் அட ஆமாம் மாமா மறந்தே போயிட்டேன் என்ற வெரோனிகா சரி அப்போ நாம வீட்டுக்கு போகலாம் என்றாள்.
ஏன் நாம வேற தியேட்டருக்கு சினிமா பார்க்க போகலாமே என்றவனிடம் மாமா எனக்கு தூக்கம் வருவது போல இருக்கு அதனால நாம வீட்டுக்கு போகலாமே ப்ளீஸ் என்றாள் வெரோனிகா. சரியென்று அவளுடன் வீட்டிற்கு சென்றான் உதயச்சந்திரன்.
நீ தூங்கு ரோனி நான் அப்பாகிட்ட பேசிட்டு வரேன் என்றவன் அறையை விட்டு சென்றான். அவள் சென்று படுத்த கொஞ்ச நேரத்திலே அவளுக்கு குளிரும், காய்ச்சலும் திடீரென ஏற்பட்டு உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள். உடல் சூடு அதிகமாகி உடல் எல்லாம் பொரி, பொரியாக ஏற்பட அவள் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்துக் கிடந்தாள்.
என்ன உதய் நிஜமாகத் தான் சொல்கிறாயா என்ற நெடுமாறனிடம் ஆமாம் அப்பா, பிரகாஷ் மனசுல இந்திரஜா தான் இருக்கிறாள். அவங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க அதனால் நீங்க கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிங்க என்றான் உதயச்சந்திரன்.
அர்ச்சனாவோட கல்யாணமும் முடிவாகிட்டாள் ரொம்ப சந்தோசம் இரண்டு கல்யாணத்தையும் ஒன்றாகவே நடத்திரலாம் என்றார் இளமாறன். அதுவும் சரிதான் இளமாறா என்ற நெடுமாறனும் தம்பி சொன்னதை ஆமோதித்தார்.
என்ன சுசீ இந்த ரோனியை இன்னும் காணோம் என்ற மலர்கொடியிடம் ஆமாம் அக்கா உதய் பெரியமாமாவை பார்க்க போனான். ரோனி ஏன் ரூமை விட்டு வரக்காணோம். ஒருவேளை நாம இனி நீ கிச்சன் பக்கமே வரக்கூடாதுனு சொன்னதால வராமல் இருப்பாளோ என்றார் சுசீலா. இல்லை இருக்காதே அவள் அப்படி எல்லாம் இருக்கிற ஆள் இல்லையே என்ற மலர்கொடி நீ இந்த பிரியாணியை பார்த்துக்கோ நான் போயி ரோனி என்ன பண்ணுகிறாள்னு பார்க்கிறேன் என்ற மலர்கொடி வெரோனிகாவின் அறைக்கு சென்றார்.
ரோனி என்னாச்சும்மா ஏன் இப்படி போர்த்திகிட்டு படுத்துருக்க பேன் , ஏசி எதையும் போடாமல் என்ற மலர்கொடி அவளை நெருங்கிட அவளது உடல் அனலடிக்க ஆரம்பித்தது. அவளது நெற்றியில் கை வைத்திட காய்சல் நெருப்பாக கொதித்திட ரோனி என்னாச்சுடி என்றவர் அவளை திருப்பி பார்த்திட அவள் முகம், கை , கால்களில் பொரி, பொரியாக இருக்கவும் உதய் என்று மகனை அழைத்தார் மலர்கொடி.
அம்மா என்னாச்சு என்று வந்த தேவ் வெரோனிகாவை பார்த்து விட்டு ஐய்யோ இது என்ன அம்மா அண்ணிக்கு ஏதோ அம்மை போட்டிருக்கிறது போல இருக்கிறது என்றான்.
அவனிடம் அவர் கோபமாக ஏதோ சொல்ல வர என்னாச்சும்மா என்று வந்த உதயச்சந்திரன் வெரோனிகாவைப் பார்த்திட அவளது உடலில் சிறு, சிறு கொப்பளங்கள் பொரிந்திருக்கவும் பயந்தான். பயப்பட ஒன்றும் இல்லை வெயிலுக்கு தான் அவங்களுக்கு அம்மை போட்டிருக்கு என்றான் தேவ் .
உதய் தரையில் பெட்சீட்டை விரிச்சு அவளை படுக்க வைப்பா. நம்ம வீட்டுக்கு முன்னே வேப்பமரம் இருக்குது பாரு போயி வேப்பிலை பறிச்சு எடுத்துட்டு வந்து வாசலில் கொஞ்சம் கட்டி வச்சுட்டு அவளைச் சுற்றி வேப்பிலை கொஞ்சம் போட்டு வை என்றார்.
அவனும் அதே போல செய்தான். அவனது கண்களில் கண்ணீர் வழிய உதய் எதற்கு அழற அவளுக்கு ஒன்றும் இல்லை ,ஒரு வாரத்தில் சரியாகிரும் நல்ல இளநீரா பார்த்து வாங்கிட்டு வா என்ற மலர்கொடி கிட்சனுக்கு சென்றவர் சுசீ ரோனிக்கு அம்மை போட்டிருக்கு என்றதும் அச்சச்சோ என்னக்கா சொல்லுரிங்க அவள் பாவம் தாங்கிக்க முடியுமா என்றார் சுசீலா.
அதெல்லாம் தாங்கிப்பா நான் அவளுக்கு உடம்புல பூசி விட மஞ்சளும், வேப்பிலையும் சேர்த்து அரைச்சுட்டு வரேன் என்றார். நான் அரைச்சு அவளுக்கு பூசி விட்டுட்டு வரேன் அக்கா என்ற சுசீலா மருமகளுக்கு மஞ்சள்,வேப்பிலை சேர்த்து அரைத்து உடலெல்லாம் பூசி விட்டார்.
உதய் நீ போப்பா நான் அவளை பார்த்துக்கிறேன் என்றிட இல்லை சித்தி நானே அவளை பார்த்துக் கொள்கிறேன் என்ற உதயச்சந்திரன் மனைவி அவளை ஒரு நிமிடம் கூட பிரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு உடலெல்லாம் வலி எடுத்து பொழுதுக்கும் அனத்திக் கொண்டே இருந்தாள். அவளுக்கு வேப்பிலை வைத்து விசிறிக் கொண்டே அவன் இருந்தான். உனக்கு ஒன்றும் இல்லை ரோனி என்று அவளை ஒரு குழந்தை போலவே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏழு நாட்களும் அவளை ஒரு நொடி கூட பிரியாமல் கவனித்துக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன். அவனுடைய அன்பே அவளுக்கு சீக்கிரம் அம்மை இறங்கியது. முதல் இரண்டு தண்ணீர் ஊற்றவுமே அவள் கொஞ்சம் தேறி இருந்தாள். உடலில் வெறும் தலும்புகள் மட்டும் தான் இருந்தது. காயங்கள் பெரிதாக இல்லை.
ஏய் உன்னை கண்ணாடி பார்க்க கூடாதுன்னு சொன்னேன்லடி என்ற மலர்கொடியிடம் அதான் மூன்றாம் தண்ணீர் ஊற்றியாச்சே அத்தை என்றவள் இந்த தலும்பு என்றிட சீக்கிரமே போயிரும். உனக்கு எந்த புண்ணும் ஆழமா இல்லையே அதனால பயப்பட வேண்டாம் ரோனிம்மா என்ற மலர்கொடி இன்னைக்கு என் மருமகளோட பதினெட்டாவது பிறந்தநாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோனி என்றார் மலர்கொடி. தாங்க்ஸ் அத்தை என்றவள் தன் கணவனை தேடினாள். அவள் காலையில் எழுந்த பொழுதில் இருந்து அவனை அவள் பார்க்கவே இல்லை.
இன்று மூன்றாம் தண்ணீர் ஊற்றியதும் அவளை ரெடியாகச் சொல்லிச் சென்ற மலர்கொடி கூட மீண்டும் வந்துவிட்டார். இத்தனை நாள் ஒரு நொடி கூட பிரியாமல் அவளுடனே இருந்த அவளது மணாளன் எங்கே சென்றான் என்று தவிப்பில் இருந்தாள்.
போர் அடிக்கிறதே என்ன செய்யலாம் என்று யோசித்தவளின் கண்களில் பழைய ஆல்பம் ஒன்று தட்டுப் பட அதை எடுத்தாள்.
அதில் வெறும் உதய் போட்டோ மட்டும் இருந்தது. அவனது குழந்தை போட்டோவில் இருந்து தற்போது உள்ள போட்டோ வரை இருந்தது. உதய், தேவ் இருவரையும் அடையாளம் காண அவர்களது முகத்தை உற்று பார்த்தாலே போதும் என்று சுசீலா ஒரு அடையாளத்தை கூறி இருந்தார் வெரோனிகாவுக்கு.
உதயச்சந்திரனின் கண்ணுக்கு கீழே ஒரு மச்சம் இருக்கும். தேவச்சந்திரனுக்கு அந்த மச்சம் இருக்காது. அதை வைத்து தான் அதில் இருந்த போட்டோக்களில் உதய் போட்டோக்களை அவள் சரியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
எல்லோ போட்டோக்களையும் பார்த்துக் கொண்டிருக்க இடையில் ஒரு போட்டோவைக் கண்டவள் அதிர்ந்து போனாள். ஸ்ரீஜா உதய்யின் கன்னத்தில் முத்தமிட்டபடி இருந்த அந்த போட்டோவைக் கண்டவள் இது என்ன இவங்க சந்துரு மாமா கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டு இருக்காங்க. தேவ் மாமான்னு தப்பா நினைச்சுட்டாங்களா என்று நினைத்த வெரோனிகா அந்த போட்டோவைத் திருப்பி பார்த்திட உதயச்சந்திரன் லவ்ஸ் ஸ்ரீஜா என்று எழுதி இருக்க அதிர்ந்து போனாள்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை அந்த நேரத்தில் அவளது பார்வை அங்கிருந்த டைரியின் மீது பட்டது.
இது என்ன மாமா டைரி என்றவள் அதை தொட ஏய் அது என்னோட பர்சனல் தொடாதே என்று அவன் சொன்னது நினைவிற்கு வர அவள் அந்த டைரியை எடுத்தாள்.
அதை எடுத்து அவள் படிக்க ஆரம்பித்தாள். படிக்க படிக்க அவளுக்கு கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.
அவங்களை இவ்வளவு லவ் பண்ணினதால தான் உங்களால என்னை லவ் பண்ண முடியலையா மாமா என்று நினைத்தவளது கண்கள் மேலும் கண்ணீரைச் சிந்திட அந்த போட்டோ, டைரி எல்லாவற்றையும் எடுத்த இடத்திலே வைத்து விட்டு சென்று பால்கணியில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தாள்.
அவளுக்கு கோபம், கோபமாக வந்தது. அவளுக்கு இருந்த கோபத்தில் அவனை நான்கு அடி கூட அடிக்கலாம் போல் தோன்றிட அறையை விட்டு வந்தாள்.
ஸ்ரீஜா தன் குழந்தை நிலாவை கொஞ்சிக் கொண்டு இருந்திட அவளைப் பார்த்த வெரோனிகா தேவ் மாமா எங்கே என்றாள். அவனை எதற்கு நீ கேட்கிற என்றவளிடம் சொல்லுங்க அவரு எங்கே என்றாள்.
தோட்டத்தில் தான் இருப்பான் என்றவள் தன் மகளுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டு இருக்க தேவ் முன்னே சென்று நின்றாள் வெரோனிகா . வாங்க அண்ணி என்ற தேவச்சந்திரனை முறைத்தவள் உங்களுக்கு என்ன என் மாமா மேல அவ்வளவு வெறுப்பு, பொறாமை என்றாள்.
அண்ணி என்ன சொல்லுறிங்க என்ற தேவச்சந்திரனிடம் உங்களை எல்லாம் என் மாமாவோட தம்பினு சொல்லவே அசிங்கமா இருக்கு. என்னை எப்படி கூப்பிட்டிங்க அண்ணினு தானே அதே போல ஏன் ஸ்ரீஜா அக்காவை பார்க்கவில்லை.
இத்தனை நாளா அவங்க தான் திமிர்பிடிச்சவங்க, கோபக்காரவங்க நீங்க ரொம்ப நல்லவர்னு நினைச்சேன். ச்சீ சொந்த அண்ணனுக்கு எப்படிப் பட்ட துரோகத்தை பண்ணி இருக்கிங்க நீங்கள் எல்லாம் ஒரு மனுசனா என்றவள் காரித்துப்பனும் போல இருக்கு என்றவள் அவனது சட்டையைப் பிடித்து ஏன் இப்படி அவரோட வாழ்க்கையை அழிச்சிங்க. நீங்க பண்ணின துரோகம் எவ்வளவு பெரியது. அதை விட நீங்க ஸ்ரீஜா அக்காவுக்கு பண்ணினது எவ்வளவு பெரிய பாவம். உங்களைப் போயி நல்லவர்னு நினைச்சு பழகினேன் பாரு . உங்களை உங்க அம்மா, அப்பா ஏத்துக்கனும்னு நினைச்சேனே ச்சேய் என்றாள் வெரோனிகா. அண்ணி நீங்க என்ன சொல்ல வரீங்க என்றவனிடம் நீங்க என்ன துரோகம் பண்ணுனிங்கனு மறந்துட்டிங்களா என்றாள் வெரோனிகா.
அவள் தேவச்சந்திரனின் சட்டையைப் பிடித்திருப்பதைக் கண்டு ஏய் என்னடி பண்ணுற என்று வந்த ஸ்ரீஜா வெரோனிகாவின் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.
இவன் உன் புருசன் இல்லை அவன் சட்டையை நீ ஏன்டி பிடிக்கிற அதோ வருகிறார் பாரேன் அவர் தான் உன்னோட புருசன் என்ற ஸ்ரீஜா கோபமாக அவளைப் பார்த்தாள்.
ஏய் என்னடி பண்ணின எதற்கு இப்போ அவளை அடிச்ச என்ற சுசீலாவிடம் என் புருசன் சட்டையைப் பிடிக்க அவள் யாரு என்ற ஸ்ரீஜா கோபமாக கேட்டிட ரோனி நீ ஏன் அவன் சட்டையைப் பிடிச்ச என்றான் உதயச்சந்திரன்.
அவனை கண்கள் கலங்கியபடி ஆற்றாமையுடன் பார்த்தவள் நேராக தன்னறைக்கு ஓடினாள். என்ன நடந்துச்சு தேவ் என்ற சுசீலாவிடம் ஒன்றும் இல்லை சித்தி என்றவன் தன்னறைக்கு சென்றான்.
அறைக்குள் புகுந்து அவள் அழுது கொண்டிருக்க அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தான் உதயச்சந்திரன். ரோனி என்றவனை அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. வெரோனிகா உன்னைத் தான் கூப்பிடுறேன் என்ன நடந்துச்சு ஏன் இப்படி அவன் சட்டையைப் பிடிச்ச என்றான் உதயச்சந்திரன். அவனையே பார்த்தவள் என்னை மன்னிச்சுருங்க மாமா உங்க மன வேதனை தெரியாமல் என்னை லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்கனு உங்களை நான் ரொம்ப காயப் படுத்திட்டேன் என்றாள் வெரோனிகா.
….தொடரும்…..