மீண்டும் ஓர் இடிச்சத்தத்தில் தன்னிலை அடைந்த இருவரும் வெட்கம் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் தவித்தனர். மாமா மழை நின்று விட்டது என்று வெரோனிகா கூறிட சரி வா போகலாம் என்றவன் அவளுடன் தன்னறைக்கு வந்தான். நீ டிரஸ் மாத்திட்டு வா என்றிட அவள் குளியலறைக்குள் நுழைந்தவள் உடை மாற்றி வந்த பிறகு அவனும் சென்று உடை மாற்றி வந்தான். தலையை பாரு என்றவன் அவளது தலையை துவட்டி விட்டு சரி தூங்கு குட்நைட் ரோனி என்றிட அவளும் குட்நைட் மாமா என்று அவனது மார்பில் தலை வைத்து உறங்க ஆரம்பித்தாள்.
அவளது நெற்றியில் முத்தமிட்டவன் அவளை அணைத்தபடி உறங்க ஆரம்பித்தான்.
என்ன ஸ்ரீஜா ஏன் ஒரு மாதிரி இருக்க என்ற வசுந்தராவிடம் என்னை ஏன்மா இந்த வீட்டுக்கு வர வச்சாரு அவரும், அவரு பொண்டாட்டியும் பண்ணுற ரொமான்ஸை பார்த்து நான் வயிற்றெரிச்சல் பட்டு சாகவா என்று அழுதாள் ஸ்ரீஜா.
ஸ்ரீஜா என்னடி ஆச்சு என்ற வசுந்தராவிடம் என்னால முடியலம்மா என் தயா மாமா வேற ஒருத்தி கூட முடியலம்மா என்று அழுதவளிடம் அவன் உன் தயா மாமா இல்லை ஸ்ரீஜா. தேவ் தான் உன்னோட புருசன் அதை புரிஞ்சுக்கோ. அன்னைக்கு நீ தானடி அவனை வேண்டாம்னு சொன்ன அவன் உன்னை வேண்டாம்னு சொல்லவில்லையே என்றார் வசுந்தரா.
என்னம்மா பேசுறிங்க தம்பிகாரன் கூட வாழ்ந்துட்டு அண்ணன் கூட கல்யாணம் எப்படிம்மா அது எவ்வளவு பெரிய அசிங்கம். அப்படி ஒரு காரியத்தை பண்ணினால் என் உடம்பு கூசாதா ஐயோ என்றவளிடம் அப்பறம் ஏன்டி நீ இப்போ அவனோட வாழ்க்கையை பார்த்து பொறாமை படுற அவன் ஒன்றும் மகான் இல்லை மனுசன்.
அவனுக்கும் ஆசாபாசம் எல்லாமே இருக்கும். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது. உன்னைக் காதலிச்சா கடைசி வரைக்கும் உன்னையே நினைச்சுட்டு அவனோட வாழ்க்கையை அழிச்சுக்கனுமா என்றார் வசுந்தரா.
நான் இருக்கேனேம்மா அவரை நினைச்ச மனசுல தேவ்வை நினைக்க முடியாமல் நான் இருக்கேனேம்மா என்று கதறி அழுதாள் ஸ்ரீஜா. எப்படிம்மா நீ தான் என்னோட உயிர், வாழ்க்கைனு எல்லாம் சொன்னாரே இப்போ அவரோட உலகம் அந்த வெரோனிகாவா இருக்கிறாளே என்ற ஸ்ரீஜாவிடம் போதும் நிறுத்து ஸ்ரீஜா.
நீ தேவ் மனைவி. உதய்யை ஒரு காலத்தில் காதலிச்ச ஆனால் அந்தக் காதல் கல்யாணத்தில் முடியவில்லை. ஆண்டவன் உனக்கு தேவ் கூட தான் வாழ்க்கைனு எழுதி வச்சுருக்கான் என்றவர் நிஜமாகவே உன் மனசுல தேவ்க்கு இடமே இல்லையா என்றார் வசுந்தரா.
இல்லை , இல்லை என்றவளிடம் அப்பறம் ஏன் வெரோனிகா அவன் சட்டையைப் பிடிச்சதும் வெரோனிகாவை அடிச்ச என்றார் வசுந்தரா. அம்மா அது என்றவள் ஏதோ சொல்ல வர என்ன உனக்கு வெரோனிகாவை பிடிக்காது அதனாலனு சொல்லப் போறியா என்ற வசுந்தரா முட்டாள் மாதிரி பண்ணாதடி.
உனக்கு நிதர்சனம் ஏன் புரியவே மாட்டேங்குது. கல்யாணம் ஆன நாளில் இருந்து நீ படுத்துற பாட்டிற்கு வேற ஒருத்தனா இருந்தால் சத்தியமா உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டு போயிருப்பான் ஆனால் தேவ் நீ தான் வேண்டும்னு நாய் மாதிரி உன்னையே சுற்றி சுற்றி வருகிறான்.
உனக்காவது அம்மா, அப்பா, தங்கச்சினு நாங்க மூன்று பேரும் இருந்தோம் . தேவ் இந்த வீட்டோட பையன் தான் அவன் கிட்ட ஊர்மிளா கூட முகம் கொடுத்து பேச மாட்டேங்கிறாள். அவனோட வலி எவ்வளவு கொடுமை. அவன் தப்பு பண்ணிட்டான் தான் ஆனால் அந்த தப்பிற்கு உதய் அவனை மன்னிச்ச பிறகும் வீட்டில் யாரும் அவனை மன்னிக்கத் தயாராக இல்லை. ஏன் நீ கூட அவனை மன்னிக்கவில்லையே.
உன்னோட காதலை அழிச்சவன் தான் ஆனால் அவனும் உன் மேல உயிரையே தானடி வச்சுருக்கிறான் உதய்யோட காதல் உனக்கு இல்லாமல் போனதை மட்டுமே சுயநலமா யோசிக்கிறியே தேவ்க்கு அவன் காதலிச்ச பொண்ணு கிடைச்சும் வாழ்க்கை நரகமா போச்சே அதைப் பற்றி எதுனாலும் யோசிக்கிறியா.
நிலா உன்னோட பொண்ணு தானே. அவளோட முகத்தில் ஒரு ஏக்கம் இருக்கே நீ கவனிச்சுருக்கியா. நீ தேவ் கூட பேசவே மாட்ட ஒரு வேளை பேசினால் சண்டை மட்டும் தான்.
அந்தக் குழந்தை உதய், ரோனி சந்தோசமா பேசிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு அப்படியே உன்னை பார்க்கிறாள். அந்தக் குழந்தைக்கு கூட ஏதோ புரிஞ்சுருக்குடி ஆனால் உனக்கு தான் புரியலை.
ஸ்ரீஜா உனக்கு அவனை பிடிக்கவில்லை , உதய் தான் வேண்டும் அப்படினா அன்னைக்கே ஹாஸ்பிடல் போயி ஒரு ஊசியை போட்டுட்டு உதய்யை கல்யாணம் பண்ணிருந்திருக்கலாமே ஏன் நீ அப்படி பண்ணவில்லை என்ற வசுந்தராவிடம் என்னம்மா பேசுறிங்க ஒரு நாளா இருந்தாலும் தேவ் கூட இருந்துட்டு எப்படிம்மா அது என்னால எப்படி முடியும் என்றிட அப்பறம் இப்போ நீ ஏன்மா உதய்யை மனசுல சுமந்துட்டு தேவ் கட்டுண தாலியை மட்டும் உன் கழுத்தில் சுமக்கிற இதுவும் தப்பு தானடி என்றார் வசுந்தரா.
அம்மா ஏழு வயசில் இருந்து உதய் தான் உன் புருசன், உதய் தான் உன் புருசன்னு சொல்லி , சொல்லி எல்லோரும் தானம்மா ஆசையை வளர்த்து விட்டிங்க இப்போ அது இல்லாமல் போனதும் உடனே மனசு மாறுன்னா எப்படிம்மா என்று அழுதவளிடம் நீ மனசு மாறித் தான் ஆகனும் ஸ்ரீஜா. அதுதான் உன்னோட வாழ்க்கைக்கு நல்லது. அம்மா சொல்லுறேன்லடா புரிஞ்சுக்கோ என்று கூறிய வசுந்தரா மகளைக் கட்டிக் கொள்ள தன் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்து அழ ஆரம்பித்தாள் ஸ்ரீஜா.
அழுதுரும்மா உன் துக்கம் எல்லாம் தீரும் மட்டும் அழுதிரு என்ற வசுந்தரா மகளைத் தட்டிக் கொடுத்திட அவள் தன் அன்னை மடியிலே உறங்கிப் போனாள்.
அத்தை என்று வந்த தேவ் உறங்கும் மனைவியைக் கண்டவன் சரிங்கத்தை அவள் இங்கேயே தூங்கட்டும் என்று சென்று விட்டான்.
என்ன பூங்கொடி என்னம்மோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்கிற என்ற கதிரேசனிடம் ஒன்றும் இல்லைங்க நம்ம பொண்ணை பற்றி தான் என்றார் பூங்கொடி. நம்ம பொண்ணைப் பற்றி யோசிக்க என்ன இருக்கு நான் கூட ஆரம்பத்தில் ரொம்ப பயந்தேன் நம்ம பொண்ணு சின்னப் பொண்ணாச்சே அவளை இந்த வயசில் கல்யாணம் பண்ணி கொடுக்கிறோமேன்னு ஆனால் நம்ம மாப்பிள்ளை ரொம்ப தங்கமான மனுசன் நம்ம பொண்ணை உள்ளங்கையில் வச்சு தாங்குறாரு. மாப்பிள்ளை மட்டுமா, நம்ம சம்மந்திங்க இரண்டு பேருமே தங்கம்னு தான் சொல்லுவேன். நம்ம பொண்ணை எப்படி பார்த்துக்கிறாங்கனு கண் கூடாக பார்க்கிறோம். நம்ம ரோனி சந்தோசமா இப்படியே வாழ்ந்தால் அதுவே எனக்கு போதும் என்றார்.
நீ தூங்கு காலையில் வெள்ளனே ஊருக்கு கிளம்பனும் அண்ணன், அண்ணி வேற வினோதா வீட்டில் இருந்து வெள்ளனவே கிளம்பிருவாங்க என்ற கதிரேசனிடம் சரியென்று தலையாட்டிய பூங்கொடி படுத்து உறங்கினார்.
அடுத்தடுத்து வந்த நாட்களும் வெரோனிகா, உதயச்சந்திரன் வாழ்வில் அழகான நாட்களாகவே கழிந்தது.
என்னங்க யோசனை என்ற தனலெட்சுமியிடம் இல்லை லட்சுமி நம்ம வீட்டிலே இரண்டு முறைப் பொண்ணுங்க இருக்காங்க. என் தங்கச்சி பொண்ணு சௌமியா, உன் அண்ணன் பொண்ணு இலக்கியா. அவங்க இரண்டு பேரில் ஒருத்தரை கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா இப்போ வேற பொண்ணை பிடிச்சுருக்குனு சொல்கிறான். அந்தப் பொண்ணோட அப்பா, சித்தப்பாகிட்ட பேசிட்டேன். நம்ம குடும்பத்திற்கு ஏற்ற சம்மந்நம் தான் இருந்தாலும் மனசு உறுத்தலா இருக்கு என் தங்கச்சியும், உன் அண்ணனும் என்று இழுத்தார் தனசேகரன்.
- இதோ பாருங்க விவேக் அப்பா என் அண்ணன்கிட்ட நான் பேசிட்டேன். இலக்கியாகிட்டையும் பேசிட்டேன் அவளுக்கும் நம்ம விவேக் அந்த அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்கிறதில் எந்த பிரச்சனையும் இல்லை என்ற தனலட்சுமி உங்க தங்கச்சிக்கு என்ன பிரச்சனைனு கேட்டு சொல்லுங்க என்றார்.
என் முடிவுக்கு என் தங்கச்சி கட்டுப் படும் ஆனால் நான் பெத்த பொண்ணு தான் அவளோட நாத்தனார் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு பிரியப் படுகிறாள் என்றார் தனசேகரன். அவளோட புருசனை தேர்ந்தெடுக்கிற உரிமையை தான் அவளுக்கு கொடுக்க முடியும் அவளோட அண்ணனுக்கு யார் பொண்டாட்டியா வரணும்ங்கிற உரிமை விவேக்குடையது. அவன் தான் வாழப் போகிறான். உங்க பொண்ணு ஏன் தேவை இல்லாத வேலை எல்லாம் பார்க்கிறாள்.
விவேக் அர்ச்சனா மேல ரொம்பவே ஆசை வச்சுருக்கிறான் அதனால உங்க பொண்ணுகிட்ட தெளிவா சொல்லிருங்க. அவள் கிட்ட தான் இருக்கு அவள் மாமியாரை கைக்குள்ள வச்சுக்க அதை விட்டுட்டு சௌமியா நம்ம வீட்டில் வாழ்ந்தால் அவள் அங்கே சுகமா வாழலாம்னு கிறுக்குத் தனமா யோசிக்கிறதை விட்டுட்டு குடும்பத்துக்குள்ள எப்படி அட்ஜஸ்ட் பண்ணி வாழறதுனு கத்துக்க சொல்லுங்க என்றார் தனலட்சுமி.
அவர் அமைதியாக யோசித்துக் கொண்டிருக்க என்ன யோசனை நாளைக்கு பொண்ணு பார்க்க போகிறோம் தானே என்ற தனலட்சுமியிடம் கண்டிப்பா போகிறோம் லட்சுமி என்ற தனசேகரன் எழுந்து தன்னறைக்கு சென்றார்.
பூனை போல மெல்ல பதுங்கியபடி வந்தவன் அம்மா சக்சஸ் தானே என்றிட என் மகனோட வாழ்க்கை எப்படி அம்மா பெய்லியர் ஆக்குவேன் எல்லாம் சக்சஸ்தான்டா செல்லம் என்றார் தனலட்சுமி.
அர்ச்சனா தான் என்னோட மருமகள். உன்னோட மனைவி என்ற தனலட்சுமியைக் கட்டிக் கொண்டவன் தாங்க்ஸ் மம்மி என்றிட எனக்கு மட்டும் தாங்க்ஸ் சொல்லாதே சௌமியாவுக்கும், இலக்கியாவுக்கும் சொல்லு அவளுங்க உன்னை ரிஜக்ட் பண்ணினதால தான் அர்ச்சனா உனக்கு கிடைக்கப் போகிறாள் என்றார் தனலட்சுமி.
என்ன மம்மி என்னை டேமேஜ் பண்ணுற இரண்டு பொண்ணுங்க என்னை ரிஜக்ட் பண்ணினதை பெருமையா சொல்லுற என்ற விவேக்கிடம் அப்போ அவளுங்க இரண்டு பேரையும் அக்சப்ட் பண்ணிக்க சொல்லட்டுமா என்ற தனலட்சுமியிடம் ஐயோ, மம்மி அவங்க ரிஜக்ட் பண்ணினது, பண்ணினதாகவே இருக்கட்டும் என்று ஓடியே விட்டான் விவேக்.
என்ன அண்ணி இன்னும் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்கிங்க என்ற வெரோனிகாவிடம் தூக்கம் வரவில்லை ரோனி என்றாள் அர்ச்சனா. கல்யாண கனவுகள் இம்சை பண்ணுதா நாத்தனாரே என்ற இந்திரஜாவிடம் ஏன் இந்து அக்கா உங்களுக்கு கல்யாண கனவுகள் எதுவும் வரவில்லையா என்ன என்றாள் வெரோனிகா.
அவளுக்குத் தானே கல்யாண கனவுகள் இல்லை ஹனிமூன் கனவுகளே வருது பக்கத்தில் படுத்திருக்கிற எனக்கு தானே தெரியும் இவள் எந்த மாதிரி கனவு கண்டுட்டு கிடக்கிறாள்னு என்று நக்கலாக சிரித்த அர்ச்சனாவை முறைத்தாள் இந்திரஜா.
…..தொடரும்….