மனுசியாடி நீ உனக்கு நாக்கா இல்லை தேள் கொடுக்கா இத்தனை நாள் தேவ் ஒருத்தனை மட்டும் தான் வதைச்சுட்டு இருந்த இன்னைக்கு அந்தப் பொண்ணு வெரோனிகாவை ஏன்டி இப்படி பண்ணுற என்றார் வசுந்தரா. வேற எப்படி பண்ண சொல்லுற அவளும், அவரும் கொஞ்சிட்டு இருக்கிறதைப் பார்த்து நானும் எங்கிருந்தாலும் வாழ்கனு பாட்டுப் பாடிட்டு போக சொல்லுறியா என்றாள் ஸ்ரீஜா.
ஸ்ரீஜா நீ என்ன பைத்தியமாடி உதய் ஒன்றும் உன் புருசன் இல்லை. தேவ் தான் உன்னோட புருசன். உதய் அவன் பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்கிறான் உனக்கு என்னடி பிரச்சனை என்ற வசுந்தராவிடம் என்னால பார்க்க முடியலம்மா. அவரு என்னோட தயா மாமா என்னை மட்டும் நினைச்சுட்டு காலம் முழுக்க இருப்பாருன்னு நம்பினேன். நான் அவரை மட்டும் தானம்மா நினைச்சுட்டு இருக்கேன் என்றவளிடம் அது தப்புடி ஏன்டி இப்படி இருக்க உனக்கும், தேவ்க்கும் கல்யாணம் ஆகிருச்சுடி என்ற வசுந்தராவிடம் அதனால் என்ன.
என்னோட காதல் எப்பவும் என் தயா மாமா மட்டும் தான். அவரு வேண்டும் என்றால் என்னை மறக்கலாம் நான் மறக்க முடியாது என்ற ஸ்ரீஜா இது என்னோட வாழ்க்கை அதில் தயவுசெய்து நீங்கள் தலையிடாதிங்க என்றாள்.
அமைதியாக தன்னறைக்கு சென்ற வசுந்தராவைப் பார்த்த நெடுஞ்செழியன் நான் சொன்னேன்ல உன் பொண்ணு எல்லாம் நல்ல பிறவியே இல்லை. அவளுக்கு எப்படினா அவள் ஆசைப்பட்ட ஒன்று அவளுக்கு கிடைக்கனும், இல்லையா அது யாருக்கும் கிடைக்க கூடாது. மலர் சொன்னாங்களே உன் பொண்ணை சாக்கடைனு அது உண்மை தான். அன்னைக்கு மண்டபத்தில் தேவ் தான் அவளுக்கு புருசனாகனும்னு கல்யாணத்திற்கு முதல் நாள் கூட சொல்லி இருக்கலாம். ஏன் உதய் தாலி கட்டப் போகும் போது சொன்னாள்னு என்னைக்காவது யோசிச்சுருக்கியா ஏன்னா அப்போ அவனை கட்ட விடாமல் பண்ணினால் சொந்ந பந்தங்கள் முன்னே அவனுக்கு அவமானமா இருக்கும். அதனால அவன் வாழ்க்கையில் திரும்ப ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு தான் அவள் அப்படி பண்ணினாள்.
சேடிஷ்ட் என்றவர் இப்போ அவன் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி , சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கிறது அவளுக்கு பொறுக்கவில்லை அதான் அந்தப் பொண்ணை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குத்திக் கிழிச்சுட்டு இருக்கிறாள் என்றார் நெடுஞ்செழியன்.
எல்லாத்துக்கும் காரணம் உன்னோட ஆசை தான் வசுந்தரா. நீ தானே உதய் கிட்ட கேட்ட என் பொண்ணையும், மருமகனையும் இந்த வீட்டுக்கு திரும்ப அழைச்சுட்டு வரணும்னு சொன்ன அவனும் உன் ஆசையை நிறைவேற்றினான். அவனுக்கு கிடைத்த பரிசு அந்த ரோனி பொண்ணை உன் பொண்ணு வார்த்தையால நோகடிக்கிறது.
பிரகாஷ் யாரு அவளோட தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறவன் அவன் கூட அந்தப் பொண்ணை சேர்த்து வச்சு அவள் யாரை அசிங்கப் படுத்திட்டு இருக்கிறாள். அவள் பேசின பேச்சுக்கு கோபமான பிரகாஷ் இந்திரஜாவை வேண்டாம்னு சொல்லிட்டான் என்ன பண்ண முடியும் சொல்லு என்றார் நெடுஞ்செழியன்.
என்னங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறிங்க என்ற வசுந்தராவிடம் நம்ம பொண்ணை நாம சரியா வளர்க்கவில்லை வசுந்தரா என்றவர் வெளியே சென்று விட்டார்.
ரோனி என்னைப் பாரு, என்னைப் பாருடி என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் என்ன நினைத்தாளோ அவனது மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். ரோனி ப்ளீஸ்மா அழாதடி என்றவனிடம் ஏன் மாமா அவங்க இப்படி பேசுனாங்க. பேசாமல் நான் கீழேயே விழுந்திருக்கலாம். இனி எப்படி நான் பிரகாஷ் மாமா முகத்தை பார்ப்பேன். எனக்கு என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை மாமா அருவறுப்பா இருக்கு பேசாமல் செத்துரலாம் போல இருக்கு என்றவள் அழுது கொண்டிருந்தாள்.
ரோனி என்ன பேசுற இந்த சின்ன விசயத்திற்கு எல்லாம் சாகனுமா என்றவனிடம் எது மாமா சின்ன விசயம் என்னையும், பிரகாஷ் மாமாவையும் எவ்வளவு பெரிய வார்த்தை அந்த அளவுக்கு நான் அவங்களுக்கு என்ன மாமா துரோகம் பண்ணினேன் என்று அழுது கொண்டிருந்தாள் வெரோனிகா.
என்ன சொன்னாலும் அவள் சமாதானம் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்தவன் அமைதியாகவே இருந்தான். அழுது, அழுது கரைந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
அவளை படுக்க வைத்தவன் எழுந்து வெளியே வந்திட ரோனி எங்கே உதய் என்றார் சுசீலா. அவள் தூங்குகிறாள் சித்தி என்றவன் பிரகாஷ் எங்கே என்றிட அவனும் டல்லா தான் இருக்கிறான் என்றார் சுசீலா.
அண்ணா சாப்பிட வாங்க என்ற ஊர்மிளாவிடம் பசி இல்லை ஊர்மி நீ போ என்றவனிடம் என்னை கோச்சிங் சென்டர்ல வந்து டிராப் பண்ணுங்க அண்ணா என்றாள் ஊர்மிளா. ஊர்மி நீ இன்னைக்கு அப்பா கூட போ அவனை விடு என்ற மலர்கொடி என்னப்பா ஏன் இப்படி உட்கார்ந்திருக்க என்றிட இல்லை பெரியம்மா அவங்க ஏன் இப்படி பேசினாங்க. எனக்கு ஊர்மிளா வேற, ரோனி அண்ணி வேறையா சொல்லுங்க. அவங்களை என் தங்கச்சி இடத்தில் வச்சு தான் பேசுறேன், பழகுறேன், விளையாடுறேன் அப்படி இருக்கும் பொழுது அவங்க ஏன் பெரியம்மா நான் அண்ணிகிட்ட பேசுறதும், பழகுறதும் உங்களுக்கு ஏதும் தப்பா தோனுதா என்று அழுதவனிடம் பிரகாஷ் என்ன பேச்சு இது அவள் ஒரு சாக்கடை அவள் என்னம்மோ சொல்லிட்டு போகிறாள். அவளுக்காக நீ பீல் பண்ணிட்டு இருக்க. ரோனி மேல நீ எவ்வளவு பாசம் வச்சுருக்கிற அவளை நீ என்ன மாதிரி நினைச்சுருக்கனு எனக்கும் தெரியும், உன் அண்ணனுக்கும் தெரியும். அவன் எதாவது தப்பா பேசினால் நீ பீல் பண்ணலாம். அந்த ஸ்ரீஜா எல்லாம் ஒரு ஆளுன்னு அவள் பேசினதை வச்சு நீ ஏன்டா கவலைப் படுகிறாய்.
அம்மா சொல்றேன்ல தங்கம் அழக்கூடாது வாப்பா வந்து சாப்பிடுடா என்றவரிடம் இல்லை பெரியம்மா பசிக்கவில்லை என்றான் பிரகாஷ். நீ சாப்பிடவில்லைனா நானும் சாப்பிட மாட்டேன் என்ற மலர்கொடியிடம் பெரியம்மா என்றான். என் மகன் சாப்பிடாமல் இருக்கும் பொழுது எனக்கு மட்டும் எப்படி சாப்பாடு இறங்கும் சொல்லு என்றவர் அர்ச்சனா என்றிட கையில் சாப்பாட்டு தட்டுடன் வந்தாள்.
அம்மா ஊட்டி விடுறேன் சாப்பிடுப்பா என்ற மலர்கொடி மகனுக்கு சாப்பாடு ஊட்டிட அண்ணி என்றான் பிரகாஷ். அவளை உதய் பார்த்துப்பான் என்ற மலர்கொடி சாப்பிடுடா என்று அவனுக்கு உணவினை ஊட்டினார்.
என்னடி பார்த்துட்டு நிற்கிற போ போயி தண்ணீர் எடுத்துட்டு வா என்ற மலர்கொடியிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் இந்திரஜா. பிரகாஷ் அவள் ஒரு பைத்தியம் அவள் சொன்னதுக்கெல்லாம் நீங்க ஏன் பீல் பண்ணிட்டு இருக்கிங்க எனக்கு தெரியும் என் பிரகாஷ் அவரோட அண்ணி ரோனி மேல எப்படிப் பட்ட பாசம், மரியாதை வச்சுருக்கிறார்னு அப்பறம் என்ன. அத்தை சொன்னது போல அவள் மனசுல அழுக்கு, சாக்கடை அதான் வார்த்தையில் வந்துருச்சு விடுங்க பிரகாஷ் என்றாள் இந்திரஜா.
பாருடா உன் பொண்டாட்டியே சொல்லிட்டாள். இன்னும் என்ன எழுந்திரு என்ற மலர்கொடி இந்து அவன் கூட கோவிலுக்கு போயிட்டு வா என்றார் மலர்கொடி. சரிங்க அத்தை என்றவள் அவனருகில் அமர்ந்தாள்.
இன்னும் என்ன பிரகாஷ் என்றவளிடம் இல்லை இந்து உனக்கு ரோனி அண்ணி பற்றி தெரியாது. ரொம்ப பாவம் அவங்க ரொம்ப சென்சிடிவ் ஸ்கூலில் அவங்களை நான் பைக்ல கொண்டு போய் விடுறதை யாரோ கிண்டல் பண்ணினாங்கனு இதுவரைக்கும் என் கூட பைக்ல வர மாட்டாங்க இப்போ வீட்டில் உள்ளவங்க இந்த மாதிரி பேசினதை அவங்க எப்படி எடுத்துப்பாங்களோ தெரியலை என்றவன் வருந்திட ரோனி என்ற சுசீலாவின் குரலில் பதறியவன் என்னாச்சு என்று ஓடிட இந்திரஜாவும் சென்றாள்.
சித்தி என்னாச்சு என்று உதயச்சந்திரனும் வர அங்கே வெரோனிகா தூக்கில் தொங்கியபடி கால்களை உதறிக் கொண்டு இருந்தாள். நல்லவேளையாக கதவை தாழ்ப்பாள் போடாமல் இருந்தாள்.
அவளை சாப்பிட அழைக்க சென்ற சுசீலா கதவைத் திறந்திட அவள் தூக்கில் தொங்கினாள். கழுத்து நெறி படவும் கால்களை அவள் உதறிக் கொண்டிருக்க ஓடிச் சென்றவர் அவளது கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
உதய் இங்கே வா அவள் கழுத்தில் நெறிக்கிற புடவையை கட் பண்ணு என்றிட புடவையை கத்தரித்தவன் கீழே விழுந்த அவளைத் தாங்கிப் பிடித்தான்.
ரோனி என்னடி பண்ணிட்ட என்றவன் அவளது கன்னம் தட்டிட அவளோ மயங்கிப் போயிருந்தாள். என்னடி இது என்றவன் அவளை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல எத்தனிக்க தேவ் வந்தான். அண்ணிக்கு என்ன என்றவனை சட்டை செய்யாமல் தன் மனைவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றான் உதயச்சந்திரன்.
நான் சொன்னேன்ல இந்து அண்ணிக்கு மட்டும் எதாவது ஆச்சுனா சத்தியமா என்னால தாங்கிக்கவே முடியாது என்றவனிடம் பிரகாஷ் ப்ளீஸ் அவளுக்கு ஒன்றும் ஆகாது என்று அவனை சமாதானம் படுத்த முயன்றாள் இந்திரஜா.
அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் வெரோனிகா. அவளைப் பரிசோதித்த மருத்துவர் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஒரு இரண்டு நாளைக்கு சரியா பேச முடியாது. குரல்வளை கொஞ்சம் டேமேஜ் ஆகிருக்கு என்றவர் பத்திரமா பார்த்துக்கோங்க என்று விட்டு சென்றார்.
ஏன்டி இப்படி பண்ணின என்ற மலர்கொடி யாருடி அவள் அவள் எல்லாம் ஒரு ஆளு அவள் சொன்னாள்னு இவள் சாகப் போறாளாம். நீ இப்படி பண்ணி அவள் சொன்னதை உண்மைனு நிரூபிக்கிறாயா என்ன என்றார் மலர்கொடி.
நீ என் வீட்டுக்கு வாழ வந்த மருமகள்டி. என் மகனை நம்பி தானே உன் அப்பா, அம்மா உன்னை விட்டுட்டு போயிருக்காங்க. உனக்கு ஏதாச்சும் தப்பா நடந்திருந்தால் அவங்களுக்கு என்னடி பதில் சொல்ல முடியும் என்ற மலர்கொடியிடம் அம்மா விடுங்க அதான் அவளுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்றான் உதயச்சந்திரன்.
இல்லைப்பா என்னால முடியலைடா அவள் சொன்னதை மட்டும் நினைச்சு சாக துணிஞ்சுருக்கிறாளே நம்ம யாரைப் பற்றியும் அவள் நினைக்கவில்லைல. உன்னைப் பற்றி கூட அவள் நினைக்காமல் தற்கொலை பண்ணிக்க முயற்சி என்ற மலர்கொடி அழுதிட வெரோனிகாவும் அழுதாள்.
என்னடி உன் பிரச்சனை உன்னால பாரு அண்ணி தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணி மனுஷியாடி நீ அரக்கி,அரக்கி என்றான் தேவச்சந்திரன். செத்துட்டாளா என்ன சாகலைல அப்பறம் என்ன போ என்றவள் தன் கையில் நகப் பூச்சை சரி செய்து கொண்டிருந்தாள்.
உனக்கு மனசுன்னு ஒன்று இருக்கிறதா, இல்லையாடி என்றவனிடம் இல்லை , இப்போ என்ன அதற்கு என்றாள் ஸ்ரீஜா. ச்சீ என்றவன் கோபமாக சென்று விட அவள் அமைதியாக அமர்ந்து விட்டாள்.
….தொடரும்…