அத்தியாயம் 5
வேகமாக அவனருகில் சென்றவர், “எங்கே டா என் மருமக?..” என்றவரை புரியாமல் பார்த்தான் தீரன்..
“என்னப்பா சொல்லுறீங்க?.. துருபதாவைக் காணுமா?..” என கேட்டவனுக்கு, படபடவென இதயம் அதிவேகமாக துடித்தது..
நேற்று விருப்பமில்லாத கல்யாணம்?.. இன்று காணவில்லை என்றால், தவறாக ஏதாவது நடந்திருக்குமா?.. தற்கொலை எதுவும் செய்து கொண்டாளா? என பரிதவிப்புடன் சிதம்பரத்தை ஏறிட்டுப் பார்த்தான்..
“வீடு முழுக்க தேடுனீங்களா ப்பா?..” என கேட்டுக் கொண்டே, தலையில் அணிந்திருந்த தலைப்பாகையை கழற்றிக் கொண்டே, வெளியே செல்ல முயன்றவனின் பின்புறமாக கேட்டது அந்தக் குரல்..
“என்னாச்சி?..” என தென்னங்கீற்றில் உராய்ந்து வரும் தென்றல் காற்றினை போன்று மெல்லிய குரலில் கேட்டது தீரனின் காதில்…
குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவன், மெல்ல நிமிர்ந்துப் பார்க்க.. அங்கு மொட்டை மாடியின் மேல் நின்றிருந்தாள் துருபதா..
தன் முன்னால் இருந்த வேலைக்காரர்கள் அத்தனை பேரையும் பார்வையாலேயே சுட்டுப்பொசுக்கினான் தீரன்..
“இதுதான் நீங்க தேடும் லட்சணமா?” என்று முறைத்துத் தள்ளினான் அவர்களை..
“யம்மாடி.. நீ மேலே தான் இருக்கீயா?..” என சிதம்பரம் சற்று கலவரமான குரலில் கேட்டார்..
“ஆமா மாமா.. காலையில கொஞ்சம் ரீப்ரெஷ் பண்ணிக்கலாம்னு மேலே வந்தேன்..”
“அப்புறம் ஏன்மா? எல்லாரும் உன்னைக் கூப்பிடும் போது, ஒரு குரல் கூட கொடுக்கலை..” என்றதும் ஒரு கரத்தினை உயர்த்திக் காட்டினாள் இஷானி..
அதில் ஹெட்போன் இருந்தது..
“இதுல பாட்டு கேட்டுட்டு இருந்தேன் மாமா..” என்றவளின் பார்வை, சிதம்பரத்தைத் தொடர்ந்து, அங்கு வேர்வையில் முக்குளித்து.. காலெல்லாம் சகதியில் நின்றிருந்தவனை அறுவெறுப்பாக ஒரு பார்வை பார்த்தாள்..
“எப்பவும் அழுக்காத் தான் இருப்பானா?.. நல்லவேளை நேத்து குளிச்சிருப்பான் போல ஸ்மெல் எதுவும் அடிக்கலை..” என முகத்தை சுழித்துப் பார்த்தவளின், அஷ்டகோணலான முகமும்.. அதில் இருந்த அதீத வெறுப்பும் தீரனின் கண்களுக்கு படாமல் இல்லை..
அலட்சியமான சிறு புன்னகை ஒன்றை சிந்தியவன், தன்னறைக்குச் சென்றான்.
அதே சமயம் ஆதவ் தன் அறையில் இருந்து வெளியே வந்தான்..
காலையில் நடந்த கலவரம் எதையும் அறியாமல் தான் இருந்தான் அவன்..
அவன் எழுந்து வரவும், தீரன் குளித்து வருவதற்கும் சரியாக இருந்தது..
தீரனை தான் ஆதவ் அழுத்தமாக பார்த்தான்..
“ஆதவ்.. வா தோட்டத்து வரைக்கும் நடந்துப் போயிட்டு வரலாம்..” என தன் தம்பியின் தோளில் கைப்போட்டுக் கொண்டு, ஆதவ் மறுப்பதற்கு முன்பாகவே அழைத்துச் சென்றான்..
அண்ணன், தம்பி இருவரும் ஒற்றுமையாக கைப்போட்டுப் போனதை பார்த் சிதம்பரனின் நெஞ்சம் நிறைந்துப் போனது..
சற்று நெகிழ்வுடன் கண்களைத் துடைத்துக் கொண்டே தன்னறைக்குள் சென்றார்..
ஆனால் அதே காட்சியை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
“அண்ணனும், தம்பியும் ஒத்துமையா இருக்கீங்களா?..” என சற்று கடுப்புடன் நினைத்தவளுக்கு, ஏனோ அவர்கள் இருவருக்கும் இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் எழுந்தது..
தன் கால்களில் செருப்பை அணிந்தபடி, வேகமாக வெளியே ஓடினாள் அவர்கள் சென்ற திசையை நோக்கி..
“அக்கா.. அக்கா..” என்ற யாழினியின் சத்தம் அவளுக்குக் கேட்கவேயில்லை..
“இந்த அக்கா எதுக்கு இந்த ஓட்டம் ஓடுது?..” என நினைத்தவள், வேகமாக புறப்பட்டாள் காலேஜை நோக்கி..
யாழினி மூன்றாம் ஆண்டு படிக்கும் கெமிஸ்ட்ரி மாணவி..
“அம்மா நான் காலேஜ்க்கு போறேன்..” என்றவள், வெளியே வந்து தீரனை தான் தேடினாள்..
“அண்ணா.. தீரன் மச்சான் எங்கே?..” என அங்கே வேலைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை பார்த்துக் கேட்டாள்..
வழக்கமாக அவளை காலேஜில் விடுவது தீரன் தான்..
“பெரிய தம்பியும், சின்ன தம்பியும் இப்போ தான்மா இப்படி போனாங்க.. உங்களை கார்ல காலேஜ்ல விட சொல்லிட்டாங்க ம்மா..” என சற்று மரியாதை கலந்து குரலில் சொன்னான் தோட்ட வேலை செய்யும் சுப்பிரமணி..
“சரிண்ணா..” என்றவள், காரினுள் ஏறியமர, காலேஜை நோக்கிச் சென்றது அவளின் கார்..
அண்ணனும், தம்பியும் நேராக வந்தது வயற்காட்டிற்கு தான்..
வயல்காட்டின் வரப்பின் மீது செருப்பு அணியாது தான் இருவரும் நடந்துக் கொண்டிருந்தனர்..
இது அவர்கள் வயற்காட்டு மண் தேவதைகளுக்கு கொடுக்கும் பரிசு..
அவர்களுக்குப் பின்பு நடந்து வந்துக் கொண்டிருந்த இஷானியும் சட்டென்று தன் செருப்பைக் கழட்டி கைகளில் வைத்துக் கொண்டாள்..
இருவரும் நடந்துக் கொண்டே சென்றவர்கள் அங்கிருந்த மொட்டை கிணற்றின் கரையில் கால்களை தொங்க விட்டபடி அமர்ந்திருந்தனர்..
அவர்களின் பின்னால் நின்றிருந்தாள் துருபத இஷானி..
“ஏன்டா இப்படி பண்ணின?..” என சற்று ஆதங்கத்துடன் கேட்டான் தீரன்.
தீரன் இதுதான் கேட்பான் என அறிந்து தானே ஆதவ்வும் உடன் வந்தது..
“வேற என்ன அண்ணா பண்ண சொல்லுற?. உன்னை மணமேடையில இருந்து இறக்க சொல்லுறீயா?.. கண்டிப்பா என்னால முடியாது..” என்றவனின் குரலில் அப்படியொரு திவீரம் இருந்தது..
“நான் மணமேடையில் இருந்து இறங்குனா என்னடா தப்பு?..”
“தப்பு தான்.. எல்லாமே தப்பா போயிருக்கும்.. அன்னைக்கு மட்டும் உனக்கு கல்யாணம் ஆகலைன்னா, நீ உயிரோடோவே இருந்திருக்க மாட்ட..” என்றவனை புருவம் இடுங்க பார்த்தான் தீரன்..
அவனுக்குத்தான் இந்த ஜாதகம், ஜோசியத்தில் நம்பிக்கை என்றும் இருந்ததில்லையே..
“அந்த ராமச்சந்திர ஆச்சாரியார் சொன்னாரா?..” என்றவனை பார்த்து, ‘ம்ம்’ எனும் விதமாய் தலையாட்டினான் ஆதவ்..
“உங்கிட்ட எத்தனை தடவை சொல்லுறது ஆதவ்.. அப்பாக் கூட சேர்ந்து இதை நீயும் நம்புறீயா?.. இதுக்காகத்தான் அந்தப் பொண்ணோட வாழ்க்கையை பலி கொடுத்தீயா நீ..” என சற்று காட்டமாக கேட்டான் தீரன்..
“அண்ணா..” என்றவனுக்கு அடுத்த வார்த்தை பேச முடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ ஒன்று விக்கிக் கொண்டு வந்தது..
“நீ பண்ணது ரொம்ப பெரிய பாவம் ஆதவ்.. உன்னைக் காதலிச்சு, உன்னைக் கணவனா மனசுல நினைச்ச பொண்ணை, நீயே உன் கையால கழுத்தை நெறிச்சுக் கொன்னுட்ட?.. இப்பவும் ஒன்னு கெட்டுப் போகலை.. கண்டிப்பா துருபதாவை நான் டிவோர்ஸ் பண்ணிடுவேன்.. அப்புறம் நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ.. அவளை எங்கேயாவது அழைச்சிட்டுப் போயிடு. நீதான் அடிக்கடி பாரீன் போவீயே.. அந்த மாதிரி ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போ..” என்றபடி எழுந்து நின்று, திரும்பியவனின் கண்ணில் பட்டாள் துருபதா..
அவன் எழுந்துக் கொள்ளவும் ஆதவ்வும் எழுந்தான்..
“அண்ணா புரிஞ்சுக்கோ.. நீ துருபதாவை டிவோர்ஸ் பண்ணலாம்.. ஆனால் ஆச்சாரியார் சொல்லியிருக்காரு.. ஒரு தடவை தான் உனக்குக் கல்யாணம் பந்தமாம்.. அப்புறம் நீயே நினைச்சாலும், இன்னொரு பொண்ணோட கழுத்துல உன் தாலி ஏறாதுன்னு..” என சொல்லிக் கொண்டிருந்தவன், தீரனின் உறைந்த பார்வை தன்னிடத்தில் இல்லாது வேறெங்கோ இருப்பதை உணர்ந்து, ஆதவ்வும் திரும்பிப் பார்த்தான்..
அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் துருபத இஷானி.. அவள் கைகளைக் கட்டி நின்ற விதமே, பூகம்பத்தை தனக்குள் அடக்கி ஒரு பெண் இருப்பதை போன்று தான் தெரிந்தது..
“சோ.. எவனோ ஒருத்தன் எதையோ சொன்னான்னு, என் வாழ்க்கையில விளையாண்டுட்டல்ல ஆதவ்..” என்றவள் கிணற்றக்கு பக்கத்தில் தான் வந்து நின்றாள்..
“யாரோ எதுவோ இல்லை.. ராமச்சந்திர ஆச்சாரி..” என சொல்ல வந்த ஆதவ்வை, ஒற்றை விரல் உயர்த்தி எச்சரித்தாள்..
“வாயை மூடு ஆதவ்.. அவர் ஒன்னும் கடவுள் கிடையாது. ஏன்.. இந்த உலகத்துல என்னை விட்டு வேற பொண்ணே இல்லையா?.. எவளாவது வாய்க்கா, வரப்புல திரியுற ராக்காயீ, குப்பாயீன்னு எவளையாவது கட்டி வச்சிருக்க வேண்டியது தான டா..” என எகிறிக் கொண்டு வந்தவளின் கண்களோ கோபத்தில் மூக்கு விடைத்து சிவந்திருந்தது..
“நீ சொல்லுற எந்தப் பொண்ணோட ஜாதகத்துலையும் ஜென்ம நட்சத்திரம் இல்லையே.. உனக்குதான் அது இருக்கு..” என்றவனை புருவம் சுருக்கி ஒரு நிமிடம் பார்த்தவள்,
“என்னை உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணணும்னு எப்போ முடிவு பண்ணுன?..” என்றவளை அதிர்ந்து பார்த்தான் ஆதவ்..
“அது.. அது.. நான்…”
“ஆதவ்.. நீ சொல்லுற ஒவ்வொரு பொய்க்கும், பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ.. சொல்லு.. நீ எப்போ என்னை உங்க அண்ணனுக்கு தாரவார்த்து கொடுக்கலாம்னு நினைச்ச?..” என்றவளின் விழிகளோ கலங்கி அழுகைக்கு தயாராகி நின்றது..
துரோகம். பச்சைத் துரோகம்.. நம்பி வந்தவனே தனக்கு துரோகம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவளால்..
“சொல்லு ஆதவ்.. அவ கேட்குறாள்ல?..” என்ற தீரனைப் பார்த்து தலைகுனிந்தவன்,
“அவ இந்த ஊருக்கு வந்த பத்து நாள்லேயே முடிவு பண்ணிட்டேன்..” என்றவனின் கன்னத்திலேயே பளாரென்று அறைந்திருந்தாள் துருபதா..
“என்னை பார்த்தா உனக்கு எப்படி டா தோணிச்சு?.. பரத்தைப் பொண்ணு மாதிரி தோணிச்சு.. கை காட்டுறவனுக்கு எல்லாம் முந்தி விரிக்கிறவன்னு நினைச்சிட்டீயா டா..” என்றவளின் கேள்வியில் அதிர்ந்து விட்டான் ஆதவ்..
“இல்லை.. இஷானி..” என சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே, மொட்டைக் கிணற்றில் பாய்ந்துக் குதித்திருந்தாள் இஷானி..
“துருபதாஆஆஆஆஆ..” என்ற அலறலுடன் நொடி தாமதிக்காமல் குதித்திருந்தான் தீரன்..
கிணற்றின் மேல் மட்டத்தில் தேடிப் பார்த்தவனின் கைகளுக்குள் எதுவுமே சிக்கவில்லை..
கிட்டத்தட்ட 20 அடி ஆழ கிணறு அது.. அதில் அடி ஆழத்திற்கு சென்றிருப்பாள் என்றெண்ணியவன், தண்ணீரில் இருந்து மேலே எழுந்து வந்து, சிறு மூச்செடுத்துக் கொண்டு மறுபடியும் ஆழம் நோக்கிச் சென்றான்..
அங்கு தன் மூச்சை இறுக்கப் பிடித்தபடி கிணற்றுக்குள் இருந்த இஷானியின் தலைமுடி தான் சிக்கியது..
சட்டென்று அவளின் முடியைப் பற்றி இழுத்துக் கொண்டே வந்தான்.
அண்ணா.. அவளை எப்படியாவது காப்பாத்திடு..”என்ற ஆதவ்வை ஏகத்துக்கும் முறைத்தான் தீரன்..
தன் கைகளுக்குள் சிக்கித் தவித்தபடி மீண்டும் தண்ணீரை நோக்கிப் பாய்ந்தவளின் இடையோடு இறுகப் பற்றி அணைத்து, தன் மார்போடு ஒட்டிக் கொண்டபடி நீந்திக் கொண்டே, கிணற்றின் படிக்கட்டிற்கு வந்துநின்றான்..
கிணற்றில் விழுந்த அடுத்த கணமே காப்பாற்றியதால், மயக்கம் என்பதைப் போல் எதுவும் அவளுக்கு வரவில்லை..
வேகமாக அவளை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே வந்தவன்.. விட்டான் ஒரு அறை துருபதாவிற்கு செவிப்பறை கிழியும் வண்ணம்..
அத்தோடு நிறுத்தாமல் தன்னருகில் நின்றிருந்த ஆதவ்விற்கு அறைந்த அறையில் பொத்தென சரிந்து மொட்டைக் கிணற்றிற்குள் விழுந்திருந்தான் ஆதவ்..
அந்நிலையில் ஒரு உயிர் என பதறித் துடித்தபடி, “ஆதவ்வ்வ்வ..” என்றவளின் கைகளைப் பற்றிக் கொண்டான் தீரன்..
“அந்த நாய்க்கு நல்லா நீச்சல் தெரியும்.. நீ வா..” என்றவன், அவளை தன் கைச்சிறைக்குள் வைத்தபடி ரோட்டில் நடந்து வந்தான்..
அவர்களை மரணப்போரில் மல்லுக்கட்டிக் கொண்டு வர, “என்ன தீரா, காலையில பொஞ்சாதியை அழைச்சிட்டு வயக்காட்டுக்குப் பக்கம் போயிட்டு வந்திருக்க?..” என விஷமமும், குறும்பும் நிறைந்த கண்களோடு 80 வயசுப் பாட்டி வெட்கப்பட்டுக் கொண்டே கேட்க,
“இப்பத்தான் கிழவி.. கிணத்துக்குள்ள கசமூசா பண்ணிட்டு வர்றேன்.. நீ செத்த முன்னாடி வந்திருக்கப்பிடாது, ஓசியிலேயே ஒரு சீன் பார்த்திருக்கலாம்ல..” என்றவனின் இதழ்களில் சிறு அலட்சியப் புன்னகை..
“போடா.. பொசக்கெட்டப் பயலே.. அந்த காலத்துல உங்க தாத்தா பண்ணாத கசமூசாவா..” என சிரித்துக் கொண்டே போன கிழவியின் ரசித்துக் கொண்டே திரும்பிட, இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தாள் துருபதா..
“என்னஹ்?..” என ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்ட தீரனின் விழிகளில் குறுஞ்சிரிப்பு..
“எதுக்கு இப்போ சிரிக்கிற?..”
“இல்லை அந்தக் கிழவி சொல்லுற மாதிரி.. கிணத்துக்குள்ள கசமூசா பண்ணா, எப்படி இருக்கும்னு நினைச்சேன்.. அதான் சிரிச்சேன்..”
“ஏது கசமூசா பண்ணுவீயே.. டேய்ய்ய்.. டேய்ய்ய்..” என்றவளை தாண்டிச் சென்றவனை கோபத்தின் உச்சத்தில் முறைத்துக் கொண்டிருக்க, அங்கு ஆதவ் தொப்பலாக நனைந்தபடி அருகில் வந்து நின்றதும் தான் தாமதம்.. விட்டாள் ஒரு அறை..
“எல்லாம் உன்னால தான் நாயே..” என்றபடி அவளும் தீரனின் பாதசுவடுகளில், தன் சுவடெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்திருந்தாள் அவளையும் அறியாமல்..