அத்தியாயம் 6
துருபதாவிடம் அடிவாங்கியபடி நின்றிருந்த ஆதவ்வோ, திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்..
“என்னடா இது? அவனும் அடிக்கிறான்.. இவளும் அடிக்கிறா.” என பொறுமிக் கொண்டே திரும்பியவனின் விழிகளில் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றது..
அங்கு அவன் பார்த்த திசையில் கைகள் இரண்டையும் கட்டியபடி நின்றுக் கொண்டிருந்தாள் யாழினி..
“யாழினி..” என மெதுவாக முணுமுணுத்தவனோ திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான்..
அவனையே துளைத்தெடுப்பதை போன்று பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி..
“அப்போ இஷானியும், நீங்களும் காதலிச்சிருக்கீங்க?..”
“அது.. அது.. நான்..” என்றவனை ஒற்றைக் கை உயர்த்தி தடுத்து நிறுத்தியவள்,
“நான் முழுசா கேட்டுட்டேன்.. சோ பொய் சொல்லி என்னை ஏமாத்த முடியாது..”
“ப்ச்ச்ச்..” என சலித்தவன், “ உன்னை யாரு ஏமாத்தப் போறா நகரு. வந்துட்டா பெருசா நாட்டாமை மாதிரி..” என அவளைத் தாண்டிச் செல்ல முயன்றிட,
“இதைப் போய் நான் மாமாக்கிட்ட சொன்னா உங்க நிலைமை என்னாகும்” என்றவளை திரும்பிப் பார்த்தவன் தீயாய் முறைத்தான்.
“என்னடி ப்ளாக்மெயில் பண்றீயா?..”
“ஆமா. ப்ளாக்மெயில் தான்.. மாமாக்கிட்ட மட்டுமில்லை.. நம்ம சொந்தம், பந்தம் எல்லார்க்கிட்டையும் சொல்லுவேன்.. நீயும், இஷானி அக்கா லவ் பண்ணீங்கன்னு..”
“இங்கே பாரு யாழினி.. நீ சொல்லுறது சின்ன விஷயம் கிடையாது.. இஷானியோட பேர் இதுல கெட்டுப் போச்சி, உன்னை குழி தோண்டி புதைச்சிருவேன்டி..”
“ஓஹோ.. அவ்வளவு காதலா அவுங்க மேலே..” என நக்கலாக கேட்டாள்.
“ச்சீய்ய்ய். வாயை மூடு.. நான் இஷானியை காதலிச்சேன் தான்.. ஆனா எப்போ என் அண்ணன் கையால தாலி ஏறிச்சோ, அப்பவே என் மனசுல இருந்து அவளை தள்ளி வச்சிட்டேன்.. இப்போ அவ என் அண்ணி மட்டும்தான்..”
“இதெல்லாம் நான் நம்புவேன்.. ஊர் நம்புமா?.” என கேலியாக கேட்டாள்..
ஆம்.. நிச்சயமாக நம்பாதே.. இந்த விஷயம் வெளியே சிறிது கசிந்தாலும், அதில் நிச்சயமாக பாதிக்கப்படப் போவது இஷானி மட்டுமே..
ஆண்களின் மேல் போடும் பழிச்சொல் அரைநாள் மட்டுமே.. ஆனால் பெண்களின் மேல் போடும் பழிச்சொல் ஆயுள் காலம் வரைக்கும் அவளைக் கொல்லுமே..
“வேண்டாம்.. யாழினி.. நீ இந்த மாதிரி பண்ணாதே..” என ஒரு விரல் நீட்டி எச்சரித்தவனின் கையை மடக்கியவள்,
“மாமா.. நீ யாரை வேணா லவ் பண்ணு.. யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ.. அதெல்லாம் எனக்குப் பிரச்சினையே இல்லை.. என்னை மட்டும் நீ அப்பப்போ கவனிச்சுக்கோ..”
“கவனிக்கணுமா?..”
“ஆமா.. கண்டிப்பா, உன்னைப் பத்தின ரகசியம் வெளியே போகக்கூடாதுன்னா, நீ எனக்கு லஞ்சம் கொடுத்தே ஆகணும்..” என்றவளை என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்தான்.
அவளிடம் வீம்பு பண்ணவும் அவனுக்கு விருப்பமில்லை..
“சரி.. என்ன வேணும்?..” என அழுத்தமாக நின்றபடி கேட்டான்..
“என்னோட உடைஞ்ச ப்ளூடூத் வாங்கிக் கொடு..”
“ப்பூ.. இவ்வளவு தானா?..” என்பதை போல் பார்த்தவன்,
“சரி.. வா..” என்றவன், அப்பொழுது தான் அவளை திரும்பிப் பார்த்தான்..
“காலேஜ் போகாம நீ இங்கே என்ன பண்ற?..”
“என்ன? குறுக்கு விசாரணையா?.. நான் காலேஜ்க்கு வந்த கார் ரிப்பேராகி அங்கே நிக்குது.. மாரி அண்ணா மெக்கானிக் அழைச்சிட்டு வர்றதுக்கு போயிருக்காங்க.. அதான் அப்படியே நம்ம வயக்காட்டை சுத்திப் பார்த்துட்டு இருந்தேன். அப்படியே கண்ணுல படக்கூடாததும் பட்டுத் தொலைஞ்சிடுச்சி..” என்றவளுக்கோ, ஆதவ்வின் மேல் அப்படியொரு கோபம் வந்தது..
இஷானியை எவ்வளவு பெரிய இக்கட்டில் மாட்டி விட்டுருக்கிறான் என்ற கோபம் அவன் மேல் ஏனென்று அறியாமலே வந்து தொலைத்தது..
இருவரும் நடந்துக் கொண்டே வீட்டிற்கு வந்தவர்கள்.. ஆதவ்வின் பைக்கை எடுத்துக் கொண்டு மொபைல் ஷாப்பிற்கு சென்றனர்..
“போ.. உனக்குப் பிடிச்சதை போய் எடுத்துக்கோ..” என்றவனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தவள்..
“பிடிச்சதை தானே, கண்டிப்பா எடுத்துக்கிறேன் மாமா..” என்றவள் மொபைல் ஷாப்பிற்குள் சென்று 5 நிமிடம் கூட ஆகியிருக்காது.. உடனே வந்து விட்டாள்..
“எடுத்துட்டீயா?..” என அதிர்ச்சியாக கேட்ட ஆதவ்வை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தவள்,
“எடுத்துட்டேன் மாமா.. நீ பில் பே பண்ணிடு..” என்றவள், நிற்காமல் அங்கிருந்து ஓடி விட்டாள்..
“இவ எதுக்கு இந்த ஓட்டம் ஓடுறா..” என தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டு, “எவ்ளோ ஆச்சிப்பா?..” என கேட்டான்..
“இரண்டரை லட்சம் சார்..” என ஆதவ்விற்கு ஹார்ட் அட்டாக்கே வரவைத்து விட்டார் அவர்..
“ஏது?.. இரண்டரை லட்சமா?.. என்ன சார் சொல்லுறீங்க?..” என்றவனுக்கு ஒன்றுமே புரியவில்லை..
ப்ளூடூத்தின் விலை இரண்டரை லட்சமா?..
“சார் அந்தப் பொண்ணு, ஐ போன் லேட்டஸ்ட் மாடல் வாங்கிட்டுப் போயிருக்காங்க.. அதுக்கான பில்..” என ஒரு பேப்பரை அவன் முன்னால் நீட்டினாள்..
பேப்பரை வாங்கிப் பார்த்தவனின் இதயத்தில் யாரோ, டூப்.. டூப்.. என துப்பாக்கியால் துளையிட்டதை போன்று இருந்தது..
அவன் அரும்பாடு பட்ட சம்பாத்தியம் அனாமத்தாக போனால் வருத்தமாக இருக்குமா?.. இல்லையா?.. அவனுக்கும் அப்படித்தான் இருந்தது..
“அட சண்டாளி.. பத்தாயிரம் பேறாத ப்ளூடூத்துக்கு, இரண்டரை லட்ச ரூபா பைன் வச்சிட்டாளே” என புலம்பியபடி தன் க்ரெடிட் கார்டை எடுத்து நீட்டினான்..
வேறு வழி.. ஒன்று பணம் கொடுக்க வேண்டும் இல்லை வாங்கிய பொருளை திருப்பிக் கொடுக்க வேண்டும்..
அவனிடம் தான் போனும் இல்லையே..
காசை கொடுத்து விட்டு வெளியே வர, அங்கு ரோட்டின் எதிர்த்திசையில் காலேஜ் பஸ்சில் அமர்ந்திருந்தாள் யாழினி..
இவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்புடன், வெவ்வே.. வெவ்வே.. என ஒழுங்குக் காட்டியவளை கோபத்தில் உச்சத்தில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்..
“என் கையில சிக்குடி.. அப்போ நீ செத்தடி..” என உள்ளுக்குள் கறுவிக் கொண்டே, பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான்..
வீட்டிற்குள் தொப்பலான நனைந்தபடி வந்தவர்களை பார்த்த காமாட்சி புருவம் சுருக்கினார்..
“என்ன தீரா?. ரெண்டு பேரும் நனைஞ்சுட்டு வந்திருக்கீங்க?..”
“ஹான்ன்.. கிணத்துக்குள்ள கசமூசா பண்ணிட்டு வந்தோம்.” என சத்தமாக சொல்லிவிட்டு சென்ற, துருபதாவை அதிர்ந்து பார்த்தனர் அத்தனை பேரும்..
இஷானி இப்படி சொல்வாள் என தீரனே எதிர்பார்க்கவில்லை..
காமாட்சி தீரனை குறும்பாக பார்த்தவர், “குளிச்சிட்டு வாப்பா, சாப்பிடலாம்..” என சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்..
“இவ என்ன லூசா?.” என விறுவிறுவென மாடியேறிச் செல்ல.. அங்கு சேலையை அப்பொழுது தான் கழற்றி வீசிய துருபதாவின் திவ்விய தரிசனம் தான் அவன் கண்ணில் பட்டது..
சட்டென்று கண்களை மூடிக்கொள்ளவும் மனமில்லை.. அவனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருக்க.. இமைக்காமல் பார்த்தவனை சட்டென்று திரும்பி பார்த்து விட்டாள் துருபதா..
“ஹேய்ய்ய்.. என்ன? அலையுறதை பாரு..” என்றவளின் அதட்டல் குரலில் சட்டென்று திரும்பி நின்றான் தீரன்..
அவன் காதுபடவே கதவை டமார் என்று அடித்துச் சாத்தினாள் துருபதா..
“பாக்குறதை பாரு, முழுசா முழுங்கி ஏப்பம் விடுற மாதிரி..” என்றவளுக்கு அப்படியொரு எரிச்சல் வந்தது..
இங்கு தீரனுக்கோ முள்ளின் மேல் நிற்பதை போன்ற நிலை..
என்னதான் ஆதவ்விடம் டிவோர்ஸ் பண்ணிவிடுவேன் என சொன்னாலும், அவனின் காதல் கொண்ட மனமோ தவித்துக் கொண்டுதானிருந்தது..
எத்தனை நாள் ஏங்கியிருப்பான்.. அவள் வாசம் தன் அறையில் வீச வேண்டும் என்று..
ஆனால் இன்று தன்னருகில் இருந்தும், ரோஜா முள்ளினை போன்று தொட முடியாமல் தவிக்கிறானே..
“துருபதா..” என மனதோடு சொல்லிப் பார்த்தான் அவள் பெயரினை..
கசப்பான புன்னகை அவன் உதட்டில்.. எட்டாக்காயாய் இருக்கும் அவளை நெருங்க மனம் துடித்தாலும், அமைதியாய் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை.
“அம்மாஆஆஆஆஆ..” என்ற அலறல் சத்தத்தில், திடுக்கிட்டு தன் நினைவில் இருந்து களைந்தான் தீரன்..
“துருபதா.. துருபதா.. துருபதா.. என்னாச்சி?..” என்றவனின் பதட்டமான குரல், துருபதாவின் காதில் விழவில்லையோ..
சத்தம் வராமலே இருப்பதைக் கண்டு சற்று பயம் கொண்டது தீரன் மனது..
என்னமோ நடந்திருக்கிறது? என உள்ளம் முரசு கொட்ட, சட்டென்று கதவை திறக்க முயன்றான்..
ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்த தாழ்ப்பாள் என்பதால், அவன் சற்று அழுத்தமாக தள்ளியதும், உடைந்து கதவை திறந்து அவனுக்கு வழிவிட்டது..
“துருபதா..” என்றவன் அங்கு அவள் கோலம் கண்டு திடுக்கிட்டுப் போனான்..
கரண்ட் ஷாக் அடித்து தரையில் விழுந்துக் கிடந்தாள் துருபதா.. ஆடைகள் கன்னாபின்னாவென்று நெகிழ்ந்து கிடந்தது..
அவளின் ஆடைகளை சரிபடுத்தியவன், அவளின் கன்னத்தை தட்டிப் பார்த்தான்..
ம்ஹூம்.. எந்த பயனும் இல்லை.. கண்களை திறப்பேனா என்றாள்..
வேகமாக தன் போனை எடுத்தவன், ஆதவ்விற்கு தான் அழைத்தான்..
“ஆதவ்வவா.. நம்ம கோகிலா டாக்டரை எங்கே இருந்தாலும், அழைச்சிட்டு வீட்டுக்கு வா..” என அவசரமாக சொல்லி முடித்தவன், துருபதாவின் மூக்கில் கை வைத்துப் பார்த்தான் மூச்சே வரவில்லை..
சட்டென்று நாடியைப் பிடித்துப் பார்க்க, அவளின் நாடித்துடிப்பு இருந்தது..
“மூச்சு விடாம ரொம்ப நேரம் இருக்க முடியாதே..” என்றவன், அவள் நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொடுக்க துருபதாவிடம் எந்தவித அசைவும் இல்லை.
“ப்ச்ச்ச்.. துருபதா.. துருபதா..” என அழைத்தவனுக்கு அப்படியே பார்த்துக் கொண்டிருக்கவும் மனமில்லை..
அதற்குள் அறையின் கதவு தட்டும் சத்தம் தான் கேட்டது.
வெளியே தட்டுவது யாரென்று தெரிந்தது..
கலைந்த மேகம் போன்று, அவளின் நெகிழ்வான ஆடையுடன் மற்றொருவர் பார்ப்பதை ஏனோ தீரனுக்குப் பிடிக்கவில்லை..
அவள் ஆடைகளை கழற்றி எடுத்தவன், விறுவிறுவென கபோர்டை நோக்கி ஓடினான்..
நல்லவேளை அவன் கையில் உடனே சிக்கியது அவளின் நைட்டி.
அதை அவளுக்கு மாற்றிவிட்டபின்பே கதவை திறந்தான்..
அங்கு பதட்டத்தின் உச்சத்தில் இருந்தார் காமாட்சி..
“என்ன தீரா?.. ஆதவ் போன் பண்ணி என்னென்னமோ சொல்லுறான். என்னாச்சி?..” என சற்று பதட்டத்துடன் அங்கு கட்டிலில் படுக்க வைத்திருந்த, துருபதாவை பார்த்தார்..
“என்னாச்சின்னு தெரியலை அத்தை.. திடீர்னு பாத்ரூம்ல இருந்து சத்தம் வந்தது.. போய் பார்த்தா அப்படியே மயங்கிட்டா..”
“டேய்ய்ய். ஹீட்டர் ஆன் பண்ணாளா, அதுல ஷாக் அடிக்குதுன்னு சொல்லியிருந்தேன்ல உன்கிட்ட..” என்றவரை சற்று அதிர்வுடன் பார்த்தான் தீரன்..
ஆம்.. கல்யாணத்தின் போதே சொல்லியிருந்தார் ஹீட்டரில் ஷாக் அடிக்கிறது என்று..
அதை சரி பண்ணத்தான் நினைத்தான்.. ஆனால் கல்யாண ஜோரில் அதை முழுவதுமாக மறந்து விட்டான்..
“அச்சோ..” என பதறினான்.. அவன் பதறிய வேளையில் காமாட்சி மூக்கின் அருகே பரிசோதித்துப் பார்த்தவருக்கு, திக்கென்றாகிப் போனது..
“என்னடா மூச்சே காணும்?.. ஏதாவது செஞ்சீயா இல்லையா?..”
“செய்யணுமா?.. என்ன செய்யணும்?..”
“லூசு.. போனவாரம் நம்ம குருவம்மா மயங்கி விழுந்தப்போ, கோகிலா டாக்டர் செஞ்சாங்களே, அது டா..” என்றவரை நெஞ்சில் கை வைத்து அதிர்ந்துப் பார்த்தான்..
அவர் செய்தது மருத்துவ முத்தம் அல்லவா..
மருத்துவ முத்தம்.. இவளிடமா?..
“இல்லை அத்தை.. வேண்டாம்..” ஏனோ அவள் அருகில் நெருங்கவே சற்று பயமாக இருந்தது..
“என்னடா நீ?.. எரிச்சலைக் கூட்டுற?..”
“உன் பொண்டாட்டிக்குத் தானே கொடுக்கச் சொன்னேன்.. நா வெளியே நிக்கிறேன்.. கொடுத்துத் தொலை..” என்றவர், வெளியே சென்று விட. இவனோ பயத்தில் எச்சில் விழுங்கினான்..
ஆனாலும் அவள் நிலையை கண்ணில் கொண்டு கண்களை இறுக்க மூடினான்..
இதுவரை அவன் பிள்ளை முத்தம் கூட யாருக்கும் கொடுத்தில்லை.. அப்பேற்பட்டவன் மருத்துவ முத்தம் என்றால் தடுமாறித்தான் போனான்..
அரைக்கண்ணால் தன் முன்னால் படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு, ஈர இதழ் ரோஜாக்கள் இரண்டும், அவனை ருசிப் பார்க்க அழைத்ததை போல் இருந்தது..
அவளின் ஈர இதழ்களை பார்த்தவன், தன் இதழ்களை வருடிக் கொண்டே சற்று அவளின் இதழ்களை லேசாக பிரித்தான்..
மூச்சுக்காற்றை அவளுக்குள் செலுத்த வேண்டும்..
அவன் சுவாசப்பையில் நிறைந்திருக்கும், மூச்சுக்காற்றை அவளுக்குள் செலுத்தி, அவளுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டுமே..
தவித்துப் போனான் அவன்..
ஆனால் செய்யாமலும் இருக்க முடியில்லை..
மிகமிக மெதுவாக, அவளின் ஈர இதழ்களோடு உரசியும், உரசாமலும் மெல்ல தன் மூச்சுக்காற்றை அவளுக்குள் செலுத்த ஆரம்பித்தான்..
கிட்டத்தட்ட 5 நிமிடங்கள், முழுதாக தன் மூச்சுக்காற்றை செலுத்தியபின்..
“ஹ்ஹாஆஆஆ..” அவளுக்கு மூச்சு வரவே ஆரம்பித்தது..
அவள் காற்றோடு கலந்த அவளின் சுவாசத்தை தன் முகத்தில் உணர்ந்த பின்பே அவளை விட்டு மெல்ல பிரிந்தான்..
உடலை அசைக்க முடியாமல் கண்களை பிரித்துப் பார்க்க. அவளின் எதிரே தீரன் மட்டும் நின்றிருந்தான்.
அவனுக்கோ பயம்.. பயம்.. பயம் மட்டுமே..
இவளுக்கு முத்தம் கொடுத்தது மட்டும் தெரிந்தது அவன் கதை அதோகதி தான்..
கண் திறந்தது காளியாத்தா பார்க்கிறதுக்குள் அப்படியே ஓடிவிட்டான் அறையை விட்டு..
அவன் வெளியேறவும், வீட்டிற்குள் கோகிலா டாக்டர் நுழையவும் சரியாக இருந்தது.
அடுத்த ஒரே வாரத்தில் சென்னை செல்லும் பஸ்சில் கழுத்தில் தாலிக்கூட இல்லாமல் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள் இஷானி..
தன் கைகளில் ஏந்தியிருந்த தாலியை இறுகப்பற்றியபடி ஊர் பஞ்சாயத்தின் மத்தியில் நின்றிருந்தான் தீரன் என்கின்ற விருகோத்தீரன்..