காரை ஓட்டிக் கொண்டிருந்த இந்தரோ சக்தி வில்விழியின் மடியில் அமர்ந்து இருந்தாலும் அவ்வப்போது அவனைப் பார்த்து சிரிப்பதும் மழலை மொழியில் அவனை ஏதோ சொல்லி அழைப்பதும் அவனை வண்டி ஓட்ட விடாமல் கையை பிடித்து இழுப்பதும் வில்விழி இடமிருந்து அவனிடம் தாவ முயல்வதும் என விளையாடிக் கொண்டிருந்ததை ஏக்கத்தோடு திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்..
அவன் பாதையில் முழு கவனத்தை வைக்காமல் அவர்கள் புறம் திரும்பி திரும்பி பார்த்த படி வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததை கவனித்த வில்விழிக்கோ அவன் நிலை புரிய அவனை பார்க்கவே பாவமாக இருந்தது..
அவள் தான் வண்டி ஓட்டுவதாக சொல்லவும் அவனோ அதற்காகவே காத்திருந்தவன் போல் அப்படியே வண்டியை நிறுத்தி வேகமாய் இறங்கி சென்று சக்தியை தன் கையில் ஆவலோடு வாங்கிக் கொண்டான்..
அதன் பிறகு தந்தையும் மகளும் அவர்கள் உலகத்தில் மொத்தமாய் தொலைந்து போயினர்.. அங்கு வில்விழி என்று ஒருத்தி இருப்பதே அவர்களுக்கு மறந்து போனது.. இதில் வில்விழிக்கு சற்று கடுப்பானாலும் இரண்டு வருடங்களாக அவனிடம் இருந்து அவன் மகளை பிரித்து வைத்த குற்ற உணர்வு அவளை எதுவும் பேசவிடாமல் செய்திருந்தது..
ஆனாலும் உர்ரென்று முகத்தை வைத்தபடியே வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தாள்..
அதை கவனித்த இந்தர் “என்னடி..? ஓராங்குட்டான் மாதிரி மூஞ்சியை வச்சிருக்க? ஏதாவது கோவமா?” என்று கேட்கவும்
எப்போதும் போல படபடவென பொரிய தொடங்கினாள் விழி..
“ஓ.. இங்க ஒருத்தி உக்காந்து இருக்கிறது உங்க கண்ணுக்கு கூட தெரிஞ்சிருச்சா? பரவாயில்லையே.. எங்க நான் திடீர்னு இன்விசிபிள் ஆயிட்டேனோன்னு தோணுச்சு..”
அவள் கோபம் அவனுக்கு சிரிப்பையே வரவழைத்தது.. அதே நேரம் அவளுக்கு தன் கவனிப்பு தேவைப்படுகிறது என்ற விஷயம் அவனுக்குள் இனித்தது..
“நான் என்னடி பண்ணேன்.. இங்க வந்ததுலருந்து நீ தான் என்னை கிட்டயே வர விட மாட்டேங்குற.. ஆனா என் பொண்ணை பாரு.. நான் தள்ளி போனா கூட என்னை கைய புடிச்சு இழுத்து என்னோட ஒட்டிக்கிறா.. என்னடா சக்தி பாப்பா? பாருடா உங்க அம்மாவோட அலப்பறையை..” என்றான்..
அவளுக்கும் தெரிந்தது தான்.. அவள் தானே அவனுக்கு எல்லா விதத்திலும் தடை போட்டு வைத்திருக்கிறாள்.. இல்லை என்றால் இந்நேரம் காதல் கொண்டவன் அவளை மொத்தமாய் தன் அதிரடி நேச மழையில் குளிப்பாட்டி கொண்டாடி இருப்பானே.. இப்போது அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கே தெரியவில்லை..
அவனை தள்ளி வைக்கவும் முடியவில்லை.. நெருங்க விடவும் முடியவில்லை.. நெருங்கினால் தன்னை அவனுக்குள் மொத்தமாய் தொலைந்துவிடுவாளே.. அவளுக்கு இந்த காதல் அவஸ்தை பெரிய கொடுமையாய் தெரிந்தது..
இப்படி இவள் நினைப்பு போய்க் கொண்டிருக்க சக்தியோ எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போல்
“அவ்வா அவ்வயு..” அவன் கன்னத்தை தன் பிஞ்சு கையால் மெல்ல தட்டி தட்டி சொல்லிக் கொண்டிருந்தாள் அவனுடைய அருமை மகள்..
சக்தியின் மழலையில் மீண்டும் தன்னை முழுதாய் தொலைத்திருந்தான் அவன்.. அவனின் கவனத்தை மொத்தமாய் தன் புறம் திருப்பி இருந்தாள் அவனின் செல்லமகள்..
அதை கண்ட விழியோ “ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் அம்மா லவ் யூ அம்மா ஐ லவ் யூ ன்னு என்னை சுத்தி சுத்தி வந்துட்டிருந்த.. இப்போ அப்பாவை பார்த்த உடனே நான் கண்ணுக்கு தெரியலையா டி உனக்கு..? அப்பா லவ் யூ வா? அங்கேயே இரு.. நான் எங்க அம்மா அப்பாவை பாக்க போறேன் இல்ல..? அவங்க கிட்ட என் லவ் மொத்தமும் சொல்லிக்கிறேன்.. இனிமே அப்பாவும் பொண்ணும் என் பக்கத்திலேயே வராதீங்க..”
சுறுசுறு வத்தியாய் பொரிந்தாள் அவள்..
“இது உனக்கே அநியாயமா தெரியலையா டி? உன் பக்கத்துல நான் வரக்கூடாதுன்னு எனக்கு கன்டிஷன் போட்டது நீ.. இப்ப நான் ஏதோ உன்னை அவாய்ட் பண்ற மாதிரி பேசற?”
அவன் நியாயம் கேட்க அவளோ உதட்டை சுழித்து “என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம்னு சொன்னேன்.. என்னை பார்த்து பேச வேண்டாம்னு நான் ஒன்னும் சொல்லல.. உன் பொண்ணை பார்த்ததும் நான் ஒருத்தி இருக்கிறதே உன் கண்ணுக்கு தான் தெரியலையே” சத்தமாக சொன்னவள்
ஆனால் அவள் உதட்டசைவை வைத்தே அவள் என்ன பேசுகிறாள் என்று கண்டு கொண்டவன் இதழுக்குள் சிரிப்பை அடக்கி தொண்டையை செறுமியபடி..
“இங்க பாரு.. என்னால எல்லாம் பேசிட்டு மட்டும் இருக்க முடியாது டி.. அதுக்கு தான் என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டு உன் பக்கமே திரும்பாம இருக்கேன்.. இப்ப கூட இதோ உன் உதட்டை சுழிச்ச பாரு.. அப்படியே அதை பிச்சு..”
ஏதோ பேச தொடங்கியவன் அப்படியே நிறுத்தி விழியின் கண்களுக்குள் பார்க்க மோகத்தில் சிவந்திருந்த அவன் கண்களின் ஆழ்ந்த பார்வையில் தடுமாறிப் போனாள் பெண்ணவள்..
“இங்க பாரு பேபி.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல.. அந்த கடைசி கண்டிஷனை மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு.. அப்புறம் மாமா எப்படி உன்னை கண்டுக்குறேன்னு பாரு..”
அவன் சொன்னதும் வண்டியை நிறுத்தியவள் அவன் புறம் திரும்பி கை இரண்டையும் சேர்த்து பெரிய கும்பிடாய் போட்டு “வேணாம் சாமி.. நீங்க என்னை கண்டுக்கவே வேணாம்.. இந்த ஆறு மாசம் நீங்க இப்ப எப்படி இருக்கீங்களோ அப்படியே இருங்க.. அப்படியே ஏதாவது கண்டுக்கணும்னு தோணுச்சுன்னா..” என்று நிறுத்தி அவனை ஒரு கண்ணால் பார்த்தவளை கூர்ந்து பார்த்தவன்
அவள் கண்ணடித்து சொல்ல அவனோ “அடிப்பாவி..” என்று நம்பமுடியாமல் பார்த்தான் அவளை..
இவர்கள் இப்படி பேசிக் கொண்டே இருக்கையில் சக்தி இந்தரின் நெஞ்சிலேயே தலை சாய்த்து உறங்கிப் போயிருந்தாள்..
சக்தியின் உச்சந்தலையில் மெதுவாய் முத்தம் பதித்து அவள் கன்னத்தை வருடி தன் குட்டி இளவரசி உறங்கும் அழகை ரசித்திருந்தான் இந்தர்..
அதைப் பார்த்த விழி “குழந்தை தூங்கும் போது ரசிக்க கூடாது இந்து..” என்க
“அடியேய்.. உன்னை கண்டுக்கலைன்னு இப்படி எல்லாம் கதை விடாதடி.. ஆனாலும் உனக்கு இவ்ளோ பொறாமை ஆகாது..”
“ஐய.. நான்ஒன்னும் பொறாமைல சொல்லல.. நிஜமாத்தான் குழந்தை தூங்கும்போது ரசிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. சரி நம்பலைன்னா போ..” என்றவள் கார் செலுத்துவதில் தன் கவனத்தை செலுத்தினாள்..
“ஓ.. தூங்குற குழந்தையை ரசிக்க கூடாது.. சரி.. அப்படின்னா முழிச்சிட்டு வண்டி ஓட்டுற குழந்தையை ரசிக்கலாம் தானே..?” என்று சொல்லியபடி அவன் அவளை அவன் ரசனையாய் கண்களால் வருட
அவளுக்கோ அவனின் பார்வை அவள் மேனி முழுதும் அத்து மீறி பயணிக்க உள்ளுக்குள் என்னென்னவோ உணர்வுகள் ஆர்ப்பரித்து கிளம்பியது..
அதற்கு மேல் வண்டி ஓட்ட முடியாமல் அப்படியே வண்டியை நிறுத்தினாள் அவள்..
“இப்படியே என்னை பார்த்துட்டு இருந்தா நான் எப்படி வண்டி ஓட்டுறது? எனக்கு ஒரு மாதிரி இருக்கு இல்ல..?”
“ரொம்ப படுத்துற டி நீ.. தொட தான் கூடாதுன்னு சொன்ன..? பாக்கறதுக்கும் தடா போடுறே.. ஆனாலும் நீ என்னை இவ்வளவு கொடுமை படுத்த கூடாது..” என்றவன் கோபமாய் காரின் வெளிப்பக்கம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..
அதற்கு மேல் அவனை படுத்த மனம் வராமல் தன் சீட்பெல்டை கழட்டியவள் அவன் பக்கமாக திரும்பி குழந்தைக்கு தொந்தரவு இல்லாமல் அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து அவன் இதழோடு தன் இதழ் சேர்த்து இருந்தாள்..
அவனோ அவள் காலரை பிடித்தபோதே “குழந்தைடி” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் வார்த்தை அவளின் வாய்க்குள் அடங்கிப் போய் இருந்தது..
தொடங்கியதுதான் அவள்.. அதன் பிறகு அந்த முத்தத்தின் ஆழத்தின் வரை சென்றவன் இதழ் வழியாகவே அவள் இதயத்தை முழுவதுமாய் உறிஞ்சுவது போல் அவளின் செம்மாதுளை அதரங்களை மொத்தமாய் ஆண்டிருந்தான்..
அந்த சாலையே வெறிச்சோடி இருந்தது.. சுற்றி மரங்களும் அதைத் தாண்டி நிலங்களும் இருந்தனவே தவிர அங்கு வீடுகளோ.. வாகனங்களோ.. மனித அரவமோ இல்லை..
அதனால் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற தயக்கம் இன்றி வெகுநேரம் தங்கள் முத்த விளையாட்டை தொடர்ந்திருந்தார்கள் அந்த இதழ் போராளிகள்..
பல நிமிடங்கள் கழிந்து மோக உணர்வு இருவரிலும் பீறிட்டு எழ அதற்கு மேல் தாங்காது என்று உணர்ந்த விழி அவன் இதழிலிருந்து தன் இதழை பிரித்தெடுக்க அவனோ அந்த இதழணைப்பு இன்னும் இன்னும் வேண்டும் என ஏங்கும் தன் அதரங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து போனான்..
“வி..ழி..” அவன் கிறக்கமாய் அழைக்க அவளோ அவன் பக்கம் திரும்பாமல் நேராக சாலையை பார்த்தபடியே
“ம்ம்..?” என்றாள்..
“விழி..” மறுபடியும் அவன் அழுத்தமாய் அழைக்கவும்
அவன் புறம் திரும்பியவள் அவனை சங்கடமாய் பார்த்தபடி “என்னடா..?” என்க
அவனோ அவளை பார்த்து “என்னடி.. பாவம் டி நானு..” என்க
“இல்லை இந்து.. ப்ளீஸ்.. சொன்னா புரிஞ்சுக்க.. இது உனக்கு எவ்ளோ கஷ்டமோ அதே அளவுக்கு எனக்கும் கஷ்டம்தான்.. ஆனா இந்த வைராக்கியம் இருந்தாதான் நான் என்ன நினைச்சு வந்தனோ அதை செய்ய முடியும்.. எனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லி இருக்க தானே? என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணாதடா..”
அதைக் கேட்டவன் தன் கண்ணை மூடி திறந்து தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு “ஓகே.. ஆனா உண்மையா சொல்லப்போனா ரொம்ப கஷ்டமா இருக்கு டி.. உன்னை இவ்வளவு பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால முடியல.. இந்த மூணு வருஷம் இருந்ததை விட இந்த ஆறு மாசம் எனக்கு ரொம்ப கொடுமையா இருக்கும் போல.. ஆனாலும் நான் இவ்ளோ கண்ட்ரோலா இருக்கிறதுக்கு காரணம் நான் உன்னை எதுக்காகவும் இழக்க விரும்பல.. எனக்கு நீயும் சக்தியும் வேணும்.. அதுக்காக எது வேணாலும் செய்வேன்..”
அவன் சொன்னதை கேட்டு அவள் கண்கள் நிறைந்து போயின..
“இப்படியே பேசிட்டு இருந்தா எனக்கு ரொம்ப எமோஷனலாகி வண்டியே ஓட்ட முடியாம போகப்போகுது.. ப்ளீஸ் இந்து.. இப்படியே போனா நம்ப அம்மா வீட்டுக்கு போய் சேர்ந்த மாதிரி தான்.. நான் ஏதாவது பாட்டு போடறேன்.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்..”
என்றவளின் கையைப் பிடித்து தடுத்தவன் “வேணாண்டி.. சக்தி தூங்குறா.. அவ எந்திரிச்சிக்கபோறா..” என்றவனை பாவமாய் பார்த்திருந்தாள் விழி..
ஒரு வழியாக விழியின் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள் இந்தரும் விழியும்..
வீட்டு வாசலில் வந்த நின்றவுடன் இந்தரின் கையை அழுத்தமாய் பிடிக்க அவனோ “ஒன்னும் ஆகாது.. வா.. நான் பேசிக்கிறேன்” என்க..
“எனக்கு அப்பாவை நினைச்சு டென்ஷன் இல்ல.. அவர் ஒன்னும் சொல்ல மாட்டார்.. ஆனா அம்மா கொஞ்சம்..” என்றவளை திரும்பி பார்த்தவன் “அதான் நான் பேசறேன்னு சொல்றேன்ல..? நீ எதுக்கு இவ்வளவு டென்ஷனாகுற? வா வீட்டுக்குள்ள போகலாம்..” என்று அந்த கேட்டை திறந்து கொண்டு வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான்..
வாசுகி தான் வந்து கதவை திறந்தார்..
வெளியே குழந்தையுடன் நின்றிருந்த இந்தரை பார்த்தவர் “மாப்ள.. யார் இந்த குழந்தை..?” என்று கேட்க அதே சமயம் அவன் பின்னாலிருந்து வெளிப்பட்ட விழியை பார்த்தவர் அதிர்ந்து போனார்..
“ஹேய்.. மலரு.. நிஜமாவே நீயாடி? எங்கடி போன? எங்க இருந்த? இந்த குழந்தை உன்னோடதா..?” அவள் தோளை பிடித்து கேட்டவர் அவள் மௌனமாய் நிற்கவும் தன் எதிரில் நிற்கும் மகளையும் பேத்தியையும் மாறி மாறி நம்ப முடியாமல் பார்த்தார்..
“அம்மா.. நான் ஆஸ்திரேலியா போயிருந்தேன் மா.. என் கனவை தேடி போயிருந்தேன்..”
“என்னது..? கனவை தேடி போனியா? அதுக்காக.. புள்ள பெத்திருக்க.. அவளுக்கு ரெண்டு வயசு இருக்கும் போல இருக்கு.. எங்க யார்கிட்டயும் எதுவுமே சொல்லணும்னு உனக்கு தோணலையா? அப்படி என்னடி உனக்கு பண்ணிட்டோம் நாங்க எல்லாம்..? உன்னால எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்க முடிஞ்சது..?”
“அம்மா.. நான் இங்கிருந்து போன ரெண்டாவது நாளே நான் பிரக்னண்டா இருக்கேன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு.. ஆனா நான் திரும்பி வந்து இருந்தேன்னா மறுபடியும் பழைய படி என்னை அந்த வீட்ல அடச்சி வெச்சி இருப்பாங்க.. என் வயித்துல இருக்கிற குழந்தை என் கனவை அடையறதுக்கு எப்பவுமே தடையாய் இருக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருந்தது.. அவ எனக்கு துணையா இருப்பான்னு நம்புனேன்.. அதனாலதான் யார்கிட்டயும் சொல்லாம இந்த குழந்தையை நான் பெத்துக்கிட்டேன்..”
“இவ்வளவு சுலபமா சொல்றே.. அந்த குழந்தை உன் வயித்துல வளர்ந்து இந்த பூமிக்கு வந்து ரெண்டு வயசு ஆகுற வரைக்கும் அப்பா பாட்டி தாத்தா சித்தப்பா சித்தின்னு எந்த உறவும் இல்லாம தனியா.. அநாதை மாதிரி..”
அதை சொல்லும்போதே அவரால் தாள முடியவில்லை.. கண்களை அழுத்தமாய் மூடியவர் “எதுக்குடி அவளுக்கு அந்த தலை எழுத்து? அவ எதுக்குடி அப்படி தனியா இருக்கணும்? ரொம்ப தப்பு மலர்.. நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால இதை மன்னிக்கவே முடியாது.. இப்ப மட்டும் எதுக்கு நீ இங்க வந்த? அப்படியே புள்ளைய வளர்த்து ஆளாக்கி கரை சேர்க்க வேண்டியது தானே? எதுக்குடி திரும்பி வந்த?” என்றவர் “அப்படியே போயிரு.. இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்ன.. நான் உன்னை அறைஞ்சு தள்ளிடுவேன்..” என்று அவளை அறைய கை ஓங்க அவருக்கும் விழிக்கும் நடுவில் வந்து நின்றான் இந்தர்..
“ப்ளீஸ் அத்தை.. அஜிடேட் ஆகாதீங்க.. அவ நெனச்சதெல்லாம் கரெக்ட் தான்.. அவ இப்ப வேர்ல்ட் சாம்பியன்.. இங்க இருந்து இருந்தா அவளால ப்ராக்டிஸ் கூட கன்டினியூ பண்ணி இருக்க முடியாது.. அவ செஞ்சது சரிதான்.. என்ன.. என்கிட்ட சொல்லி இருந்தா எங்க அப்பாக்கு தெரியாம அப்பப்போ வீடியோ கால்லயாவது இவளை பார்த்திருப்பேன்..”
அவளை திரும்பிப் பார்த்து அவன் அப்படி சொல்ல அவன் தன் தந்தைக்கு தெரியாமல் என்று சொல்லும் போது அவனை தீவிரமாய் முறைத்தாள் வில்விழி..
அவன் வாசுகியை நோக்கி “அவளே மூணு வருஷமா ரொம்ப கஷ்டப்பட்டு அடிப்பட்டு திரும்பி வந்து இருக்கா.. அவளை மேல மேல நோகடிக்காதீங்க அத்தை.. ப்ளீஸ்..” என்றான்..
“இல்ல மாப்ள.. அது..” என்று வாசுகி ஏதோ சொல்ல ஆரம்பிக்க
“போதும் அத்தை.. அவ செஞ்சது சரியா தப்பான்னு யோசிக்காதீங்க.. இப்ப அவ என்னோட வந்து சேர்ந்துட்டா.. இனிமே அவ நல்லா இருக்கணும்.. அதை பத்தி மட்டும் யோசிங்க.. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்போம்.. இதுல உங்களுக்கு எந்த டவுட்டும் வேண்டாம்.. முதல் முதல்ல உங்க பேத்தி உங்க வீட்டுக்கு வந்திருக்கா.. வீட்டுக்குள்ள வரவிடாம இப்படித்தான் வாசல்ல நிக்க வச்சு திட்டிக்கிட்டே இருப்பீங்களா?”
அவன் கேட்டதும் தான் அவருக்கு சக்தியின் நினைவே வந்தது.. சட்டென அவள் புறம் திரும்பினார்..
நடந்த களேபரத்தில் அவள் அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்து முட்டைகண்ணை உருட்டி உருட்டி எதிரே இருந்தவர் யார் என பார்த்துக் கொண்டிருந்தாள்..