“ஐயோ.. இவனா..? இவன் எங்க இங்க வந்தான்? இவன் கூட இன்னொருத்தன் வேற வரான்.. யாரு மாப்பிள்ளைன்னு தெரியலையே.. எவனா இருந்தாலும் மானுக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்.. இவன் கண்ணால பார்த்து பார்த்தே என்னை டார்ச்சர் பண்ணுவான்”
இந்த யோசனையுடனே உள்ளே வந்து கொண்டிருந்த மூவரையும் வில்லிழி பார்த்துக் கொண்டிருக்க உள்ளே இருந்த மான் விழியோ “இவ்வளவு நேரம் என்ன பார்த்துட்டு இருக்கா?” என்று எண்ணமிட்டபடி
“மலரு.. என்னடி ஆச்சு? மாப்பிள்ளை வரலையா?” என்று அவள் பின்னால் வந்து நின்று வெளியே பார்க்க அவள் பார்க்கும் நேரம் இந்தரும் சகுந்தலாவும் அந்த ஜன்னலை கடந்து போயிருக்க சரியாக பிருத்வி அந்த இடத்தை கடந்தான்.. அதே நேரம் மான்விழியும் ஜன்னல் பக்கம் வந்து அவனைத் தான் பார்த்திருந்தாள்..
அவனும் யாரோ தன்னைப் பார்ப்பது போல் தோன்ற சட்டென அந்த சாளரத்தின் பக்கம் திரும்பி பார்த்தவன் கண்கள் மான்விழியின் கண்களோடு கலந்தன.. முதல் பார்வையிலேயே அவளிடம் மொத்தமாய் விழுந்திருந்தான் பையன் அவன்..
அவனுக்கு இந்த நிலை என்றால் அவளோ ஏதோ இதற்கு முன் பல ஜென்மங்களாய் தவமிருந்து அவனுக்காகவே பிறந்து காத்திருந்தது போல அவனிலேயே கட்டுண்டு கிடந்தாள் சில நிமிடங்கள்..
அந்த சாளரத்தின் வழி அவளின் பார்வை களத்தில் இருந்து அவன் மறையும் வரை அவனை பின் தொடர்ந்தது அவள் பார்வை..
முழு அலங்காரத்தோடு நின்றவளை பார்த்த உடனேயே அவள்தான் இந்தருக்கு பார்த்திருக்கும் பெண் என்று புரிந்து போனது ப்ருத்விக்கு..
இங்கே வில்விழியோ அவர்கள் சென்றதும் மான்விழியிடம் “மானு.. இந்த மாப்பிள்ளை உனக்கு வேண்டாம்.. உனக்கு தான் ஆர்ச்சர் பிடிக்காது இல்ல.. நானே அப்பா கிட்ட வேண்டாம்னு சொல்லிடறேன்..” என்றாள்..
மான்விழியோ “இல்ல இல்ல.. எனக்கு அந்த மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவர் என்னவா இருந்தாலும் பரவால்ல.. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..”
அவள் பட்டென முடிவை மாற்றி சொல்லிவிட மற்றவளுக்கோ உள்ளுக்குள் தவிப்பாய் போனது..
இந்தருடன் வந்தவன் மாப்பிள்ளை என்றால் சரிதான்.. ஆனால் இந்தர்தான் மாப்பிள்ளை என்றால்..
அந்த நினைவே அவளுக்குள் ஏதோ ஒரு வலியை கொடுத்தது..
“அவன் யாரை கட்டிக்கிட்டா எனக்கு என்ன? எனக்கு ஏன் இவ்ளோ டிஸ்டர்ப் ஆகுது?” குழம்பி தவித்து போனாள் அவள்.. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது தங்கள் வீட்டு தோட்டத்தில் போய் தனியாய் நின்று கொண்டாள் அவள்..
இதற்குள் வரவேற்பறையில் பரிமேலழகர் அவர்கள் மூவரையும் அமர வைக்க சகுந்தலா “அவருக்கு ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங் இருந்தது.. ஆனா இன்னைக்கு ரொம்ப நல்ல நாள்.. மிஸ் பண்ண வேண்டாம்னு எங்களை மட்டும் வந்து பொண்ணு பார்க்க சொல்லிட்டாரு.. அவரு ஏற்கனவே பொண்ணை பாத்துட்டேன்னு சொன்னாரு..” என்க
“ஆமா.. அது.. நான் அன்னைக்கு எதேச்சையா மார்க்கண்டேயனை கிளப்ல மீட் பண்ணுனேன்.. வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.. என் ரெண்டாவது பொண்ணு ஆர்ச்சரி கிளாஸ் போயிட்டு இருக்கா.. அவ வீட்ல ப்ராக்டிஸ் பண்றதுக்கு ஆர்ச்சரி குட்ஸ் வாங்கணும்னு சொன்னா.. அவன்தான் ஆர்ச்சரி குட்ஸ் மேனுஃபேக்சர் பண்ற கம்பெனி வச்சிருக்கான் இல்லையா? அதான் என்ன வாங்கலாம் அந்த ப்ராக்டிஸ்க்கு எங்க அவளோட டார்கெட் எல்லாம் செட் பண்ணலாம்னு அவன் கிட்ட ஐடியா கேட்டேன்.. அப்பதான் மான்விழியை பார்த்தான்.. உடனேவே தான் மகனுக்கு மான்விழியை கல்யாணம் பண்ணி குடுன்னு அவன் கேட்டதும் எனக்கு ஒன்னும் புரியல.. என்ன சொல்றதுன்னு தெரியல.. எங்க வீட்ல என் பொண்ணுங்களோட விருப்பம் தான் என் விருப்பம்.. நான் எதையும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்.. மான்விழிக்கு பிடிச்சிருந்தா நிச்சயமா நடத்தலாம்ன்னு சொன்னேன்..” என்றார் பரிமேலழகர்..
“நீங்க சொல்றதும் சரிதான்.. பொண்ணும் பையனும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கட்டும்.. பிடிச்சி இருந்தா மேற்கொண்டு பேசலாம்.. இந்தரை பொறுத்த வரைக்கும் அவனோட ஆர்ச்சரி அகடமி ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு.. அவனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.. நீங்க அவனை நம்பி உங்க பொண்ணை கொடுக்கலாம்..”
சகுந்தலா சொல்ல “மார்க்கண்டேயனோட பசங்க.. நிச்சயமா அவங்களை டிஸ்ஸிப்ளினோட தான் வளர்த்து இருப்பான்.. ஏன்னா அவன் அவ்வளவு டிஸ்ஸிப்ளின்ட்.. நாங்க ஸ்கூல்ல இருந்து ஃபிரெண்ட்ஸ்.. எந்த நேரத்திலும் எந்த ரூல்ஸையும் பிரேக் பண்ண மாட்டான்.. எல்லாத்தையும் பர்ஃபெக்ட்டா பண்ணுவான்.. இந்த இடத்தில இப்படித்தான் இருக்கணும்னா அப்படித்தான் இருக்கணும் அவனுக்கு. அதனால அவன் பசங்களும் இப்படித்தான் இருப்பாங்கன்னு எனக்கு ஏற்கனவே ஒரு யூகம் இருந்தது.. இப்ப நேர்ல பார்த்ததும் அது கன்ஃபார்ம் ஆயிடுச்சு..” இந்தரையும் ப்ருத்வியையும் பார்த்து சிரித்தார் பரிமேலழகர்..
இந்தருக்கும் பிரத்விக்கும் அவரைப் பார்த்த உடனேயே பிடித்துப் போனது.. அமைதியாக இயல்பாய் இதமாய் பேசும் மனிதர்.. எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் எல்லோருக்கும் மரியாதை கொடுத்து இன்முகமாய் பேசுபவரை யாருக்குத்தான் பிடிக்காது..
“சரிண்ணா.. அப்ப பொண்ணை வர சொல்லிருங்க…”
சகுந்தலா சொல்ல வாசுகி உள்ளே சென்று மான்விழியை கையில் காபி கோப்பைகள் அடங்கிய தட்டை கொடுத்து அழைத்து வந்தாள்..
மான்விழியும் ப்ருத்வி தான் தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை என்று நினைத்து முதலில் அவனிடம் காபி தட்டை நீட்டினாள்.. அவனும் கோப்பையை எடுத்தபடியே முழுவதுமாய் மான்விழியை விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தான்..
அவன் அருகாமையில் இருந்து நகர தோன்றாது மெல்ல அவனோடு பேசிய விழிகளை மனமே இல்லாது அகற்றிய படி அடுத்ததாய் இந்தருக்கு காபியை நீட்ட சரியாக சகுந்தலா “அவன் தான்மா மாப்பிள்ளை.. நல்லா பாத்துக்க..” என்க
அதை கேட்டு அதிர்ந்து போனவள் அந்த அதிர்வில் தன் கையில் இருந்த தட்டை தவற விட அதிலிருந்து காபி கோப்பைகள் கீழே விழுந்து சில்லுசில்லாய் நொறுங்கின..
இந்தரின் உடையிலும் கொஞ்சம் காபி தெறித்து விட அவளோ பதறிப் போய் “ஐயோ சாரி.. ரொம்ப சாரி.. தெரியாம..” என்று பதைபதைப்போடு சிதறிய கோப்பை சில்லுகளை தட்டில் சேகரிக்க ஆரம்பித்திருக்க சட்டென தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து வந்த பிருத்வியும் அந்த இடத்தில் இருந்த உடைந்த துண்டுகளை எடுக்க அவளுக்கு உதவினான்..
அவன் கீழே அவள் பக்கத்தில் அமர்ந்து அவற்றை எடுக்க தொடங்கிய நேரம் அவன் விழிகளை பார்த்தவளின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கியிருந்தது..
அதைப் பார்த்தவன் பதறிப் போக அவளோ சட்டென சிதறிய துண்டுகள் அடங்கிய அந்த தட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாய் விலகி உள்ளே சென்று இருந்தாள்..
ப்ருத்வி அவளையே பார்த்த படி தன் இடத்தில் சென்று அமர இந்தர் இதையே காரணமாக வைத்து “அங்கிள் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்தது என்னவோ போல இருக்கு.. அதனால இது வேண்டாம்.. நாங்க கிளம்பறோம்” என்று சொல்ல
முன்னே சென்று கொண்டிருந்த மான்விழிக்கோ இந்தர் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னதில் ஒரு நிம்மதி பரவியது நெஞ்சில்..
இந்தர் தன் அன்னையின் பக்கம் கண்ணை காட்டி தன் இருக்கையில் இருந்து எழ முயல அவன் கையை அழுத்தமாய் பிடித்து இருக்கையிலேயே இருத்தினான் ப்ருத்வி..
அவனைக் கேள்வியாய் பார்த்த இந்தர் “என்னடா..?” என்க
“டேய் மான்விழியை எனக்கு பிடிச்சிருக்கு.. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்..”
அவன் முடிவாய் சொல்லிவிட அவன் சொன்னது அறைக்குள் சென்ற மான்விழியின் செவிகளில் விழ அதுவரை அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் ஆனந்த கண்ணீராய் கன்னம் தாண்டி உருண்டோடியது..
உள்ளுக்குள் இருந்த ஆனந்த கொந்தளிப்பை தாங்க முடியாது இன்பமாய் படபடத்துப் போனாள் பாவை அவள்..
வில்விழியோ இந்தரை பார்த்ததிலிருந்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் இதயம் அதிவேகமாய் துடித்திருக்க அங்கேயே இருந்தால் எங்கே தனக்கு படபடப்பில் மூச்சு நின்று விடுமோ என்று பயத்தில் தோட்டத்திற்கு சென்று கிணற்றருகே கலக்கத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
அவள் மான்விழியோடு இல்லாததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.. இந்தரின் கண்ணை பார்த்தால் அவளோ தன்னையே மறந்து போவாள்.. மான்விழி வேறு மாப்பிள்ளை பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்க தான் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடப் போகிறோம் என்ற பயத்தில் தோட்டத்திலேயே அமர்ந்திருந்தாள் அவள்..
பிருத்வி சொன்னதைக் கேட்டு இந்தருக்கோ மகிழ்ச்சி தாளவில்லை.. அவன் புறம் திரும்பியவன் சந்தோஷமாய் அவன் கையைப் பிடித்து “சூப்பர் டா.. சான்சே இல்ல..” என்றவன் தன் அன்னை பக்கம் திரும்பி “அம்மா கல்யாணத்தை பேசி முடிச்சிடுமா.. அவன் தான் பிடிச்சிருக்குன்னு சொல்றான்ல..?” என்க
பரிமேலழகருக்கோ ரொம்பவுமே குழப்பமாக இருந்தது..
“தங்கச்சி மா.. பெரிய புள்ள இருக்கும்போது சின்ன பிள்ளைக்கு சம்பந்தம் பேசறது அவ்வளவு சரியா வருமா?”
அவர் தயங்கி தயங்கி கேட்க சகுந்தலா பதில் சொல்வதற்கு முன்னால் இந்தர் “அங்கிள்.. நீங்க கவலைப்படாதீங்க.. கூடிய சீக்கிரம் என் கல்யாணமும் நிச்சயமாகிடும்.. எனக்கும் பிருத்விக்கும் ஒரே நேரத்தில தான் கல்யாணம் ஆகும்.. அதனால நீங்க தயங்காம சம்மதம் சொல்லுங்க.. என் தம்பிக்கு புடிச்ச வாழ்க்கை அவனுக்கு கிடைக்கணும்..”
அவன் பொறுப்பாய் பேசியதை கேட்டவருக்கும் மனம் நிறைவாய் இருக்க “சரி இருங்க தம்பி.. மார்க்கண்டேயன் கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்துடலாம்..” என்றவர் உடனேயே மார்க்கண்டேயருக்கு அழைக்க அவரோ அந்த அழைப்பை ஏற்கவில்லை..
“கால் கட்டாகுதே..” பரிமேலழகர் சொல்ல ப்ருத்வி “அவர் மீட்டிங்கில் இருப்பார் அங்கிள்.. இன்னொரு 15 மினிட்ஸ்ல மீட்டிங் முடிஞ்சிடும்.. அப்புறம் பண்ணி பார்க்கலாம்..” என்றான்..
அதற்குள் வாசுகி “ஏங்க.. அவரோட ட்ரெஸ்ல எல்லாம் காபி கொட்டிருச்சு.. அவரை வேணா பின்பக்கம் போய் கழுவிட்டு வர சொல்லுங்க..” என்றார்..
பரிமேலழகரும் இந்தரிடம்” நீங்க போய் வாஷ் பண்ணிட்டு வாங்க தம்பி.. அவர் வரத்துக்குள்ள நீ இன்னொரு காப்பியும் பலகாரமும் எடுத்துட்டு வா வாசு..” என்றார்..
“இதோ போறேங்க..” என்று அவர் சமையலறைக்குள் சென்று விட இந்தரும் மெல்ல தோட்டத்து பக்கம் நடந்தான்..
அப்போதுதான் ஏதோ தோன்ற சமையலறையில் இருந்து தோட்டத்துக்குள் அங்கிருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த வாசுகி “அம்மாடி மலரு.. அந்த தம்பி மேல காபி கொட்டிடுச்சு.. வாஷ் பண்ண வந்திருக்காரு.. கொஞ்சம் தண்ணி எடுத்துக் குடு அவருக்கு..” என்றார்..
அங்கே நின்றிருந்த மலர்விழியும் சட்டென திரும்பி பார்க்க தோட்டத்து படியில் கால் வைத்து இறங்கிய இந்தரோ அவளை பார்த்ததும் இன்பமாய் அதிர்ந்து போனான்..
“ஹே மலர்விழி.. நீ எங்க இங்க?” அவனுக்கோ அவளைப் பார்த்த வியப்பு அடங்கவே இல்லை.. இனிமையான படபடப்பில் இதயத்துடிப்பின் எண்ணிக்கை எட்டாத உயரத்தை எட்டிக் கொண்டிருந்தது..
“மானு என் அக்கா தான்.. என்ன.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சா?” அவள் குரலில் கோபம் கொப்பளிக்க அவனுக்கோ சற்று அவளோடு விளையாட தோன்றியது..
“ம்ம்.. கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு.. அதுக்குத்தானே வந்திருக்கோம்..” என்றான் அவன் சீண்டலாய்..
“அப்படியே மொத்தமா முழுங்கற போல அன்னிக்கு என்னை வெறிக்க வெறிக்க பாத்துட்டு இன்னைக்கு அவளோட கல்யாணமா? ஹைய்யோ.. இவன் சரியான பிளேபாயா இருப்பான் போலையே.. அப்பா கிட்ட சொல்லி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடனும்.. இன்னும் எத்தனை பொண்ணுங்கள இந்த மாதிரி பார்த்து வச்சிருக்கான்னு தெரியாது..”
உள்ளுக்குள் முணுமுணுத்து கொண்டே இருந்தவள் சட்டென அங்கிருந்த வாளியில் இருந்து தண்ணீர் எடுத்து அங்கிருந்த துவைக்கும் கல்லின் மேல் அந்த தண்ணீர் பாத்திரத்தை ணங்கென்று வைக்க அவனோ “அம்மாடி பாத்ரம் பத்திரம்..” என்றான் இதழிற்குள் சிரிப்பை மறைத்தபடி..
அவளோ அவனை தீவிரமாய் முறைத்து விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்..
அங்கு இருந்த அந்த ஐந்து நிமிடங்களும் அவளைத்தான் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.. கோபத்தில் அவள் மூக்கு விடைத்து சிவந்திருக்க வாயும் தொடர்ந்து அவனை திட்டி முணுமுணுவென அர்ச்சித்துக் கொண்டே இருந்தது..
அவள் கோபத்தை முழுவதுமாக ரசித்தவன் தொண்டையை செறுமியபடி “ம்க்கும்.. ரொம்ப கோவமா இருக்காப்ல இருக்கு..” அவன் புருவம் சுருக்கி கேட்க அவளோ “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் கோபப்படுற அளவுக்கு உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு..? நீங்க எங்க அக்காவை கட்டிக்க போற மாப்பிள்ளை.. என்னை பொறுத்த வரைக்கும் அவ்வளவுதான்..” என்று வார்த்தையாலேயே வெட்டினாள்..
“ஓ ஆமாம்ல..? அப்படின்னா நீ என்னை மாமான்னு தானே கூப்பிடணும்.. இது கூட நல்லா இருக்கே..” அவன் சொன்னதைக் கேட்டு முறைத்தவள் “பொறுக்கின்னு வேணா கூப்பிடறேன்” தனக்குள் சொல்லிக்கொண்டவள் வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டாள் அவன் புறமிருந்து..
உடையை நன்கு கழுவிக் கொண்டவன் கை ஈரமாக இருக்க சட்டென அவள் புறம் நகர்ந்து வந்தான்.. ஒரு அடி பின்னால் தள்ளி நின்றாள் அவள்.. அவனோ எட்டி அவள் சேலையின் தலைப்பை பிடித்து இழுத்து அதில் தன் கையை துடைத்துக் கொள்ள அதிர்ந்தவள் விழிகள் வெளியே வந்து விடும்படி கண்களை பெரிதாய் விரித்து முறைத்தாள் அவனை..
சட்டென அவன் கையில் இருந்து தன் புடவை தலைப்பை உருவி “என்ன பண்றீங்க..?” என்று முறைத்தாள்..
“கை ஈரமா இருந்துச்சு.. இங்க சுத்தி பார்த்தேன்.. எதுவும் துணியை காணோம்.. அதான்..”
“அதுக்காக..” அவனை எரித்து விடுவது போல் முறைத்தவள் “நீங்க பண்றது எதுவுமே சரி இல்லை.. நான் முதல்ல அப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்றேன்..” என்றாள்..
“நீ என்ன பண்ணாலும் இந்த கல்யாணம் நடக்கும்.. இந்த கல்யாணம் மட்டும் இல்லை இன்னொரு கல்யாணமும் நடக்கும்.. உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது..” கண்ணடித்து சொல்லிவிட்டு உள்ளே வந்தவனின் பின்னாலேயே தொடர்ந்து அவளும் உள்ளே வந்தாள்..
இப்போது பரிமேலழகரை பார்த்தவன் உரிமையாய் “மாமா.. மான்விழி கல்யாணத்தோட எனக்கும் மலர்விழிக்கும் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிடுங்க.. எனக்கு மலரை ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்..”
அவன் சொன்னதை கேட்ட மலருக்குள்ளோ பூகம்பமாய் ஆனந்த அதிர்வு..
பரிமேலழகர் “இப்படி அண்ணன் தங்கையையும் தம்பி அக்காவையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா பின்னாடி குழப்பம் வராதா மாப்பிள்ளை..”
அவர் மாப்பிள்ளை என்று அழைத்ததில் சிரித்தவன் “என்ன குழப்பம் வந்தாலும் பாத்துக்கலாம் மாமா.. அதான் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டீங்க இல்ல..? இனிமே எந்த தடையும் இல்லை.. ரெண்டு கல்யாணமும் நடக்கட்டும்..”
அவன் சொல்லிக் கொண்டே இருக்கும் போதே முன்னே வந்து நின்ற விழி “நீங்க சொல்லிட்டா போதுமா? என் கல்யாணம் இது.. அதுக்கு என் விருப்பம் முக்கியம் இல்லையா? அப்பா அதெல்லாம் இவர் சொல்றாருங்குறதுக்காக என்னால எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” என்றாள் கோவமாக..
“சரிதான்.. உங்க பொண்ணு விருப்பமும் ரொம்ப முக்கியம்.. நீங்க உங்க ரெண்டு பொண்ணுகிட்டயுமே அவங்க விருப்பத்தை கேட்டுக்கோங்க.. ஆனா எனக்கு தெரிஞ்சு வேண்டாம்ன்னு ரெண்டு பேருமே சொல்ல மாட்டாங்க..” வில்விழியை குறும்பாய் பார்த்தபடியே அவன் சொல்ல..
“ஹா..ங்.. ஆனாலும் ஓவர் கான்ஃபிடன்ஸ் ரொம்ப ஓவரா தான் இருக்கு சாருக்கு.. அப்பா.. நான் அவரோட கொஞ்சம் பேசணும் பா.. அப்படி எல்லாம் டக்குனு முடிவு சொல்ல முடியாது..”
அவள் சொன்னதும் “அதுக்கு என்ன? தாராளமா பேசலாமே” என்றான் இந்தர் புன்னகையினூடே.. கரும்பு தின்ன அவனுக்கு கூலி வேண்டுமா என்ன..?
பரிமேலழகர் “சரி மா.. அப்ப அவரை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ..” என்றார்..
அவள் முன்னே செல்ல அவளின் பின்னழகில் அத்து மீறி பயணித்த அவன் கண்கள் கட்டுப்பாடு இல்லாமல் அவளின் அழகியல்களை ரசித்திருக்க ஒரு பெருமூச்சோடு அவளை பின்தொடர்ந்து இருந்தான் இந்தர்..