வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௨௰௧ (21)

4.9
(15)

அம்பு – ௨௰௧ (21)

அப்போது மான்விழிக்கு பதினைந்து வயது.. வில்விழிக்கு பதிமூன்று.. மான்விழிக்கு குதிரை ஏற்றம் என்றால் கொஞ்சம் பைத்தியம் என்றே சொல்லலாம்.. நாள் முழுவதும் குதிரை மேல் ஏறி சவாரி செய்யக்கூட அவள் அலுத்துக் கொள்வதே இல்லை..

பரிமேலழகர் குதிரையேற்றத்தில் நாட்டமுள்ளவர்.. வீட்டிலேயே தேஜஸ்வி என்ற குதிரையை வளர்த்து வந்தார்.. அவர் குதிரை ஓட்டுவதை பார்த்து பார்த்து  ஆர்வம் கொண்ட மான்விழி அவரோடு 12 வயதில் இருந்தே குதிரையேற்றத்தை பழக ஆரம்பித்தாள்..

இப்போது அவள் ஒரு தேர்ந்த குதிரையேற்ற வீராங்கனை.. தினமும் மாலையில் அருகில் இருந்த ஒரு திடலில் குதிரை சவாரி செய்வது அவளுக்கும் அவள் தந்தைக்கும் வழக்கமாகி போனது..

தினமும் ஒரு மணி நேரமாவது குதிரை சவாரி செய்பவர்களின் கூடவே விழியும் செல்வாள்.. ஆனால் தள்ளி நின்று இவர்கள் குதிரை சவாரி செய்வதை வேடிக்கை பார்ப்பானே தவிர அவளுக்கு குதிரையேற்றத்தில் பெரிதாய் நாட்டம் இருந்ததில்லை..

அது தீபாவளி பண்டிகை சமயம்.. இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை இருப்பதால் ஊருக்குள் எல்லோரும் வெடி வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.. வழக்கம்போல பரிமேலழகரும் மான்விழியும் மாற்றி மாற்றி முறை எடுத்து குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார்கள்..

மான்விழி குதிரை மேல் ஏறி வேகமாக சவாரி செய்து கொண்டிருந்தாள்.. அப்போது எங்கிருந்தோ வந்த ராக்கெட் வெடி குதிரையின் உடலில் தாக்கி விட குதிரையோ மிரண்டு போனது..

மான்விழி எவ்வளவு முயன்றும் குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை.. வேகமாய் கண்மண் தெரியாமல் குதிரை பயணிக்க தொடங்க பரிமேலழகருக்கு நடக்கப் போகும் விபரீதம் புரிந்தது.. அவரும் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ குதிரையின் பின்னால் ஓடி அதன் கடிவாளத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று முயன்று கொண்டிருந்தார்..

வில்விழியும் தன் தந்தையின் பின்னாலேயே கலவரம் நிறைந்த முகத்தோடு ஓடினாள்.. ஆனால் குதிரையோ அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.. சிறிது நேரம் வரை தைரியமாக குதிரையை கையாண்டிருந்த மான்விழி ஒரு நிலையில் பயந்து போக அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் எடுக்க தொடங்கியது..

தன் தந்தையை கூவி கூவி அழைத்தவள் எதுவும் செய்ய முடியாமல் குதிரையின் கடிவாளத்தை இறுக பிடித்து இருந்தாள்.. கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் வேறு சிறு பெண்ணவளுக்கு..

குதிரையும் அந்த தெருவை விட்டு வெளியே சென்று சாலையில் ஓட ஆரம்பித்தது.. வேகமாக சாலையில் தாறுமாறாக ஓடி வந்த குதிரையை பார்த்த மக்களும் தங்களுக்கு குதிரையால் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று சிதறி ஓடினரே தவிர மான்விழியின் உதவிக்கு யாரும் வரவில்லை..

பரிமேலழகர் விடாமல் குதிரையை துரத்திக்கொண்டு ஓட ஒரு இடத்தில் தடுக்கி விழுந்தவர் ஒரு கல்லில் தலை மோதி அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருக்க அதனை சட்டை செய்யாமல் தொடர்ந்து தன் மகளை காப்பாற்ற இன்னும் வேகமெடுத்து ஓடினார் அவர்..

கால் போன போக்கில் ஓடிய குதிரை இறுதியாக ஒரு ஏரிக்கரைக்கு ஓடி சென்று அதிவேகமாய் தண்ணீருக்குள் பாய்ந்தது.. மான்விழிக்கோ நீச்சல் தெரியாது..அவ்வளவு நேர மிரண்ட குதிரையோடு போராட்டம்.. இப்போது தண்ணீரோடு.. அவள் பின்னே ஓடிப்போன பரிமேலழகர் மான்விழியை காக்க வேகமாக ஓடிச் சென்று தண்ணீருக்குள் பாய்ந்து இருந்தார்..

சிறிது நேரம் தண்ணீரின் மேல் தத்தளித்த மான் விழி அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீருக்குள் மூழ்க தொடங்க பரிமேலழகர் வேகமாக நீந்தி சென்று அவள் தலை முடியை பிடித்து இழுத்து கரையில் கொண்டு வந்து சேர்த்தார்..

அவ்வளவு நேரம் குதிரையின் அசுர ஓட்டத்தில் உயிர் பயம் கொண்டு போராடிக் கொண்டிருந்தவள் அதன் பிறகு அவள் உயிரை மொத்தமாய் இழுத்துக் கொண்டு இருந்த தண்ணீரோடும் போராட வேண்டி இருந்தது.. சிறு பெண் தானே அவள்.. போராடி போராடி களைத்து போய் இனிமேல் எப்படியும் உயிர் பிழைக்க முடியாது என்று முடிவுக்கு வந்திருந்தாள்..

ஆனால் அவள் தந்தையால் காப்பாற்றப்பட்டாள்.. கிட்டத்தட்ட இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தவளுக்கு மனதில் அந்த சம்பவம் ஒரு மாறாத வடுவானது.. அதன் பிறகு குதிரைகளை கண்டாலே அவளுக்கு பயம் தான்..

ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்கும் போது தன் அறைக்குள் போய் போர்வைக்குள் பதுங்கிக் கொள்வாள் மான்விழி..

மான்விழியை காப்பாற்றிய பரிமேலழகர்  அவள் கண் விழித்ததும்  தத்தளித்துக் கொண்டிருந்த குதிரையை காப்பாற்ற மறுபடியும் நீருக்குள் குதித்து பலவாறு முயன்றும் தேஜஸ்வியை காப்பாற்ற முடியாமல் போனது..

அவருக்கு தலையில் பட்டிருந்த அடி வேறு அவரை கிட்டத்தட்ட மயக்கநிலைக்கு தள்ளிவிட தண்ணீருக்குள் இருந்து வெளி வருவதே அவருக்கு பெரும் பாடாகி போனது.. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இரண்டு நாள் மயக்கத்தில் இருந்து வெளிவருவதற்குள் பெண்கள் மூவரும் செத்துப் பிழைத்தார்கள்..

மான்விழி அந்த சம்பவத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தாள்.. அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அந்த சம்பவம் ஆட்டி படைத்து கொண்டு இருந்தது..

இது நடந்து எட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் கூட மான்விழிக்கு அன்று இருந்த அதே பயமும் நடுக்கமும் விட்டுப் போன பாடில்லை..

“நீ பிருத்விகிட்டு பேசுனியா.. நீ இங்க வந்து உட்கார்ந்து இருக்கிறதுதான் இந்த பிரச்சனைக்கு சொல்யூஷன்னு நினைக்கிறியா? நிச்சயமா இல்லை.. நீங்க பிரிஞ்சிருக்கறதனால உங்களுக்கு மட்டும் இல்ல.. சின்ட்டூக்கும் கஷ்டம்தான்.. உனக்கிது புரியுதா இல்லையா? ஏதாவது செஞ்சு இதை சால்வ் பண்ணனும்னு ரெண்டு பேருமே முயற்சி பண்ணலையா?”

“பண்ணாம இருப்போமா? ஆனா எனக்கு அந்த குதிரையை பார்த்தாலே பயமா இருக்குடி.. நடுக்கம் எடுக்குது.. எப்படியோ பிருத்விக்காக பொறுத்துக்கிட்டு நான் அந்த வீட்ல இருந்து கிட்டு தானே இருந்தேன்.. உனக்கு தெரியும் இல்ல..?”

“தெரியும்டி.. அதனால தான் கேட்கிறேன்.. நான் போற வரைக்கும் நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தானே இருந்த.. நீ கர்ணாவை அவாய்ட் பண்ண.. பிருத்வி மட்டும் அப்பப்ப கர்ணாவோட ரைட் போய்ட்டு வருவாரு.. அதுவரைக்கும் எல்லாம் ஸ்மூத்தா தானே போயிட்டு இருந்தது..?”

“ஆமா.. எல்லாம் ஸ்மூத்தா  தான் போயிட்டு இருந்தது.. ஆனா சின்ட்டூக்கு ரெண்டு வயசு ஆனப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ப்ருத்வியோட சேர்ந்து ஷ்யாம்கர்ணாவோட வெளையாட ஆரம்பிச்சிட்டான்..

பிருத்வி கூட அவன் அப்படி விளையாடுனப்ப எனக்கு அது ஒன்னும் பிரச்னையா இல்ல.. ஆனா ஒருநாள் சின்ட்டூக்கு உடம்பு சரியில்லன்னு அத்தை கிட்ட விட்டுட்டு நானும் ப்ருத்வியும் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தோம்.. திரும்பி வரும்போது பார்த்தா யாரும் பக்கத்துல இல்லாதப்போ சின்ட்டூ தனியா ஷ்யாம்கர்ணாவோட விளையாடிகிட்டு இருந்தான்.. அப்ப என் கண் முன்னாடி  அன்னிக்கு நடந்நது அப்படியே ஓடிச்சு மலரு.. ஒரு செகண்ட் எனக்கு ஆன மாதிரி விபரீதம் சின்ட்டூவுக்கும் ஆகற மாதிரி..” பயத்தில் தொண்டை அடைத்தது அவளுக்கு..

“அந்த நினைப்பு என்னை பதற வெச்சிருச்சு..  ஓடிப்போய் சின்ட்டூவை தூக்கிக்கிட்டு பக்கத்தில யாரும் இல்லையான்னு பார்த்தேன்.. அத்தை தோட்டக்காரரோட பேசிகிட்டு இருந்தாங்க.. அவ்வளவுதான்.. அடுத்த நிமிஷமே சின்ட்டூவை தூக்கிக்கிட்டு நான் இங்க வந்துட்டேன்.. விளையாட்டு போல ஒரு வருஷம் ஆகப்போகுது.. எனக்கு மறுபடியும் அந்த வீட்டுக்கு போறதுக்கு தைரியமே வரல மலரு..”

“அப்ப காலம் ஃபுல்லா அம்மா வீட்லயே இருக்க போறியா? ஏதாவது ஒரு காம்ப்பரமைஸ்க்கு வரணும் இல்ல மானு..?”

“நான் பிருத்விகிட்ட ஷ்யாம்கர்ணாவை வீட்ல வச்சுக்க வேண்டாம்னு எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன்.. ஆனா ப்ருத்வி முடியவே முடியாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டான்.. அந்த வீட்டை விட்டு ஷ்யாம்கர்ணா என்னிக்கு போறானோ அன்னைக்கு தான் நானும் சின்ட்டூவும் அந்த வீட்டுக்கு வருவோம்..”

அவள் உறுதியாய் சொல்லிட அவளை கவலையோடு பார்த்தாள் விழி..

“ம்ம்.. சரி.. அப்புறம் உன் இஷ்டம்.. ஏ மானு.. நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. இந்தரை  அவனோட அப்பா அம்மா ப்ருத்வி எல்லாரையும் விட்டுட்டு வர சொல்லி இருக்கேன்.. நானும் இந்தரும் இனி தனியா தான் இருப்போம்”

“அது எப்படி? அவங்க பிள்ளை அவரு.. அவங்க எல்லாரையும் விட்டுட்டு அது எப்படி உனக்காக தனியா வருவாரு? அது நியாயமே இல்லை விழி..”

“ஏன் நியாயம் இல்ல? நம்ம கல்யாணம் நடந்ததிலிருந்து மாமா எப்படி நடந்துக்கறாருன்னு உனக்கு தெரியும் இல்ல? என்னை எப்படி எல்லாம் கேவலமா பேசி இருக்காரு.. அப்படிப்பட்டவரோட ஒரே வீட்ல நான் எதுக்கு சகிச்சுக்கிட்டு வாழணும்?  தெனமும் காலைல எழும்பும் போதே இன்னிக்கு அவரு என்ன சொல்வாரோ.. ஏது சொல்வாரோன்னு டென்ஷனாகுது.. நான் டென்ஷன் ஃப்ரீயா இருக்கறதுக்காக அவங்களை விட்டுட்டு என்னோட தனியா வான்னு இந்தர் கிட்ட சொல்றது நியாயம் தானே?”

“அதெப்படி மலரு.. அவங்களோட அட்ஜஸ்ட் பண்ணி எப்படி ஒண்ணா இருக்கிறதுன்னு தானே நீ யோசிக்கணும்.. உன்னோட இந்த டென்ஷனுக்காக அவரோட உறவை எல்லாம் விட்டுட்டு வாங்கன்னு சொல்றது எப்படி சரியாகும்..? இத்தனை வருஷங்களா அவர் கூடவே இருந்தவங்க அவங்க.. திடீர்னு உனக்காக அவங்களை விட்டுட்டு வரணும்னா எப்படி?”

“ம்ம்.. சரிதான்.. என் டென்ஷனுக்காக அவங்களை விட சொல்றது தப்புன்னா உன்னோட பயத்துக்காக சின்ன வயசுல இருந்து தான் கூடயே வளர்ந்த ஷ்யாம்கர்ணாவை விட்டுட்டு வான்னு ப்ருத்வியை நீ சொல்றது மட்டும் எப்படி மானு நியாயமாகும்? ப்ருத்வியை பொறுத்தவரைக்கும் கர்ணாக்கும் இந்தருக்கும் பெரிய வித்தியாசம் இல்லன்னு அவரே சொல்லி இருக்கிறாரே.. இந்தர் அவரோட அண்ணான்னா கர்ணா அவரோட தம்பின்னு சொல்லி இருக்கிறாரே.. கர்ணா நம்ம குடும்பத்துல ஒருத்தன் மாதிரி.. அப்பறம் எப்படி ப்ருத்வியால அவனை எங்கேயோ கொண்டு விட முடியும்?”

அவள் கேட்ட கேள்வியில் சற்று திடுக்கிட்டு தான் போனாள் மானு.. விழியின் கேள்விக்கு பதில் இல்லை அவளிடம்..

“நீ கவலைப்படாதே.. நான் இந்தரை எல்லாரையும் விட்டுட்டு தனியால்லாம் வர சொல்லல.. அப்படி தான் பண்ணணும்னா அதுக்கு இவ்வளவு நாள் காத்திருக்கணும்னு அவசியம் இல்லை.. நான் வீட்டை விட்டு போகாம அப்பவே இந்தரை தனியா கூட்டிட்டு போயிருக்க முடியும்.. ஆனா அது இந்தருக்கு ரொம்ப வலிக்கும்னு தான்  நான் மட்டும் அவரை விட்டு பிரிஞ்சு போனேன்.. நாளைக்கு காலைல நான் நம்ம வீட்டுக்கு கிளம்புறேன்.. நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு.. உனக்கு பயமா இருக்குன்னா அந்த பயத்தை போக்குறதுக்கு என்ன பண்ணனும்னு பாரு.. அப்படி அந்த பயத்தை ஃபுல்லா போக்க முடியலையா? அதை கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணு.. அதுக்காக நீ பிருத்வியை விட்டுட்டு வர்றதோ இல்ல பிருத்வியை ஷ்யாம்கர்ணாவை விட்டு பிரிஞ்சு இருக்க சொல்றதோ இல்ல சின்ட்டூவை ஃப்ரீடம் இல்லாம ஒரு ஜெயில்ல வைக்கிற மாதிரி அடக்கி வளர்க்கறதோ சரி கிடையாது.. யோசிச்சு நைட்டுக்குள்ள ஒரு முடிவு எடு.. உனக்கு ஓகேன்னா நாளைக்கு காலைல என்னோட கிளம்பி வீட்டுக்கு வா.. சரி சக்தி என்ன பண்றான்னு தெரியல.. வா போய் பாக்கலாம்.. சின்ட்டூவும் சக்தியும் ஒருத்தங்க ஒருத்தங்களை பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணினாங்கன்னு தெரியல..” என்று சொல்லிய படியே மான்விழியையும் அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் விழி..

அங்கே சின்ட்டூ ஏதோ பெரிய மனிதன் போல சக்தியை தூக்கி தன் கையில் வைத்துக்கொண்டு “சக்தி… அண்ணா சொல்றபடி தான் கேட்கணும்.. அங்க இங்க ஓடக்கூடாது.. எப்பவும் அண்ணாவோட தான் இருக்கணும்.. சரியா?” என்று மிரட்டிக்கொண்டிருந்தான்..

அதைப் பார்த்து அங்கிருந்த

அத்தனை பெரியவர்களும் சிரித்து விட “ஆமா சக்தி.. பெரிய மனுஷன் சொல்லிட்டான்.. அப்படியே அவன் சொல்றபடி கேட்டு நடந்துக்கோ” என்றான் இந்தர்..

“பெரியப்பா நீங்க போகும்போது என்னையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா? எனக்கு அப்பா தாத்தா பாட்டி எல்லாரையும் பாக்கணும் பெரிப்பா..” சின்ட்டூ ஏக்கமாய் கேட்க வில்விழியும் மானுவை திரும்பி கேள்வியாய் பார்த்தாள்..

மானுவும் தலையை குனிந்த படி யோசிக்க ஆரம்பித்திருந்தாள்..

அதன் பிறகு இரவு வரை ஒன்றாக எல்லோரும் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க மானுவுக்கு பிருத்வி அங்கு இல்லாதது ரொம்பவும் வலியை கொடுத்தது தான்..

இரவு சாப்பிடும் போது அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்..

வில்விழியிடம் “மலரு.. நாளைக்கு காலையில நான் உன்னோட வரேன்.. நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்று சொல்ல அங்கு இருந்த அனைவர் முகத்திலுமே மகிழ்ச்சி தாண்டவமாடியது..

“ரொம்ப சந்தோஷம் டா.. என் மாப்பிள்ளையும் பொண்ணும் பிரியாம ஒண்ணா எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. சின்ட்டூக்கு அவன் அப்பா வேணும்டா.. இந்த முடிவை நீ எப்பவோ எடுத்து இருக்கணும்.. பரவால்ல.. லேட்டானாலும் நல்ல முடிவா எடுத்து இருக்கே.. என்ன எங்களுக்கு தான் சின்ட்டூவும் இல்லாம போர் அடிக்கும்.. இன்னைக்கு வேற சக்தி இந்தர் மாப்பிளை விழி எல்லாரும் வந்திருக்காங்க.. வீடே கலகலன்னு இருந்துச்சு.. நாளைக்கு காலையில நீங்க கிளம்பின அப்புறம் வீடே வெறிச்சோடி போயிடும்.. நானும் உங்க அம்மாவும் மட்டும் தனியா இந்த வீட்ல கொட்டு கொட்டுன்னு உட்கார்ந்து இருக்கணும்..”

வயதானவர்களை தனிமை வாட்டியது.. அது புரிந்த வில்விழியோ அங்கு நிலவிய இறுக்கத்தை மாற்ற “செகன்ட் ஹனிமூன் பீரியடை ஜாலியா கொண்டாடுவீங்களா? அதை விட்டுட்டு எங்க தொல்லை இல்லன்னு வருத்தப்படுறீங்க.. அம்மாவுக்கும் கொஞ்சம் உங்க லவ்வை கொடுங்கப்பா.. எல்லாத்தையும் எங்களுக்கே கொடுக்காதீங்க..” என்றாள்..

அதைக் கேட்டு வெட்கத்தில் முகம் சிவந்த வாசுகி “மாப்பிள்ளை முன்னாடி இது என்னடி பேச்சு?” என்று  சமையலறையில் ஏதோ வேலை இருப்பது போல் எழுந்து உள்ளே சென்றார்..

இந்த வயதிலும் அவருடைய வெட்கம் அவருக்கு கூடுதல் அழகை சேர்த்து இருக்க பரிமேலழகரோ ரசனையாய் தன் மனைவியையே பார்வையால் பின்தொடர்ந்திருந்தார்..

அதை கவனித்து விட்ட வில்விழி “அப்பா இன்னைக்கு நாங்கல்லாம் இருக்கோம்.. கொஞ்சம் அடக்கி வாசிங்க.. நாளைக்கு நாங்க எல்லாம் போயிருவோம்.. அப்புறம் ப்ரீயா ஜாலியா ம்ம்..ம்ம்..” என்றாள்..

இப்போது பரிமேலழகருக்கே வெட்கமாய் வந்தது.. “சரி நான் என் ஃபிரண்டுக்கு ஒரு கால் பண்ணனும்.. போய் பண்ணிட்டு வரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தார்..

இந்தரோ வில்விழியை பிரமிப்பாய் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஒரு வருடமாக மான்விழிக்கும் பிருத்விக்கும் நடுவே பிரச்சனை.. இழுபறியாக சென்று கொண்டே இருந்தது.. வந்த இரண்டு மணி நேரத்தில் அத்தனை பிரச்சனையையும் முடித்து இருந்தாள்..

இரவு  தன் அன்னையோடும் மான்விழியோடும் வெகு நேரம் பேசிக் கொண்டே இருந்துவிட்டு தன்னறைக்கு சென்றாள் வில்விழி..

உள்ளே நுழைந்தவள் கண்ட காட்சியோ கவிதை மயமாய் இருந்தது.. கட்டிலில் நெடுஞ்சாண்கிடையாய் இந்தர் படுத்திருக்க அவன் மார்பில் சக்தி கன்னத்தை அழுத்தமாய் பதித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..

அவள் தலையை மெல்ல வருடியபடி தன் அழகு மகளின் முகம் பார்த்திருந்தவன் அவள் உச்சியில் இதழ் பதித்தான்..

தந்தையினுள் தாய்மையின் சாயல்.. அந்த அழகை நெகிழ்வோடு பார்த்தபடி நின்றிருந்தாள் வில்விழி..

தன்னவனின் இந்த புதிய அவதாரத்தை ரசித்தபடியே உள்ளே வந்தவள் அவன் பக்கத்தில் வந்து தலையணையில் சாய்ந்து படுக்க அவளை திரும்பிப் பார்த்தவன் “தேங்க்ஸ் வில்லி” என்றான்..

“எதுக்கு தேங்க்ஸ்?”

அவள் கேட்க “இவ்வளவு அழகா என் பொண்ணு சக்தியை பெத்து கொண்டு வந்து என்கிட்ட கொடுத்ததுக்கு.. நடந்ததை நினைச்சுகிட்டு நீ வராமலே போயிருந்தா நான் இவளோட அழகான மொமென்ட்ஸை இன்னும் எவ்வளவு மிஸ் பண்ணி இருப்பேன்னு நினைச்சா தாங்கவே முடியலடி.. ரெண்டு வருஷம் அவ வளர்றதை பார்க்கலனாலும் இப்பயாவது அவளை கூட்டிட்டு வரணும்னு உனக்கு தோணுச்சே.. தேங்க்ஸ் டி..”

“ம்ம்.. அப்படியே நான் கூட்டிட்டு வரலைன்னாலும் இன்னும் ரெண்டு வருஷம் கூட உன் பொண்ணு உன்னை விட்டுட்டு இருந்திருக்க மாட்டா.. அவ ரொம்ப ஸ்மார்ட்.. சுத்தி இருக்கிறவங்களை ரொம்ப அப்சர்வ் பண்ணுவா.. நிச்சயமா அப்பா யாருன்னு என்னை கேட்டு கேட்டு கொடைஞ்சு அவளை இங்க கூட்டிட்டு வர வெச்சிருப்பா..”

அவள் சொன்னதைக் கேட்டவன் இதழ் விரித்து தன் மகளை பெருமிதத்தோடு பார்த்து இருந்தான்..

அவள் அப்படியே இந்தரின் சாயலில் தான் இருந்தாள்.. வில்விழி அவளுக்குள் இந்தரை பார்த்து பார்த்து தான் இந்த இரண்டு வருட பிரிவை கஷ்டப்பட்டு கடந்து இருந்தாள்.. இந்தரோடு அவளுக்கு இருந்த உருவ ஒற்றுமை இப்போது இன்னும் நன்றாகவே தெரிந்தது..

சட்டென தன் இடத்திலிருந்து எழுந்தவள் “அதான் தூங்கிட்டா இல்லை.. கொடு.. அவளை பக்கத்துல படுக்க வெக்கறேன்..”

அவள் சக்தியை தூக்க போக அவள் கையைப் பிடித்து தடுத்தவன் “வேண்டாம்.. அவ இப்படியே படுத்து இருக்கட்டும்..” என்றான்..

“எவ்வளவு நேரம் அவளை மேலயே படுக்க வச்சிருப்ப.. இரு.. அவளை கீழே எடுத்து விடுறேன்..”

“இதுல என்ன இருக்கு நீ கூடத்தான் என் மேல நைட் ஃபுல்லா படுத்துட்டு இருந்திருக்கே.. நீ படுக்கும் போது அவ படுக்க கூடாதா?”

அவளுக்கு கோவம் வரும் என்று தெரிந்து வேண்டுமென்றே தான் அப்படி கேட்டான் அவன்..

அவன் கேட்ட கேள்வியில் எதிர்பார்த்தது  போலவே சுர்ரென அவள் பார்வையில் அனல் ஏறியது..

சட்டென முகம் இறுக்கமாய் மாற “எல்லாம் ஞாபகம் இருக்கு..  மூணு வருஷம் கழிச்சு திரும்பி வந்து இருக்கேன்.. ஆனாலும் இவன் மரமண்டைக்கு ஒன்னும் தோணமாட்டேங்குது.. தன் பொண்ணை பத்தி மட்டும் தான் கவலைப்படுறான்.. என்னை பத்தி எந்த அக்கறையும் இல்லை..”

வாய்க்குள் முணுமுணுத்தவள் அவனுக்கு எதிர்ப்புறமாய் திரும்பி படுத்து விட்டாள்..

“இப்ப எதுக்குடி கோபப்படுற? ஏய் வில்லி.. என் சண்டிராணி.. என்னை பாருடி.. பாருடி..”

அவளை கொஞ்சி கெஞ்ச தொடங்கி இருந்தான் அவன்.. எதற்கும் மசியவில்லை அவள்.. ஏனோ அவள் கண்களின் ஓரமாய் கண்ணீர் வெளியே வர காத்து கொண்டு இருந்தது..

சக்தியை தூக்கி தனக்கு இன்னொரு பக்கத்தில் கிடத்தியவன் வில்விழியின் பக்கம் நகர்ந்து அவள் கைப்பிடித்து அவளை தன் பக்கமாய் திருப்ப அதற்குள் அவள் கண்ணோரத்தில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடி இருந்தது..

“ஹேய்.. அழறியா? நீயாடி அழற? இது என் விழியே கிடையாதே.. ஆஸ்திரேலியா போயிட்டு வேற மாதிரி மாறி வந்துட்டியா என்ன.. என் விழி சண்டை போடுவாளே தவிர அழமாட்டா..”

“இந்த பேச்சுக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்லை.. என் மேல சும்மா அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம்.. நீ உன் பொண்ணு கூடவே இரு..” என்று மறுபடியும் எதிர்புறமாய் திரும்பப் போனவளை தன் புறமாய் பிடித்து இழுத்து அவள் நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன்

“என்னடி..? என்னதான் வேணும் உனக்கு? மனுஷனை தள்ளியும் இருக்க விட மாட்டேங்குற.. நெருங்கவும் விட மாட்டேங்குற.. நான் என்ன தான்டி பண்ணுவேன்..” அவன் அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டான்..

“உங்களை நான் ஏன் நெருங்க விட மாட்டேங்கறேன்னு உங்களுக்கு தெரியாதுல?”

அவள் அவனை முறைத்தபடி கேட்க “சரி.. தெரியும்.. அதுக்கு நான் எவ்வளவோ முறை உனக்கு விளக்கம் சொல்லியாச்சு.. நம்ப மாட்டேன்னு நீ பிடிவாதம் பிடிச்சா நான் என்ன பண்றது சொல்லு,.. சரி இப்ப என்னை என்ன பண்ண சொல்ற?”

“எனக்கு அங்க இடம் வேணும்..”

அவன் மார்பை காட்டியபடி அவள் சொல்ல அழகாய் இதழ்விரித்தவன் இரண்டு கையையும் பெரிதாய் விரித்தபடி அவளை நோக்கி தன் நெஞ்சப் பகுதியை காட்டி கண்களால் ஜாடை செய்ய அதற்காகவே காத்திருந்தவள் போல அவன் மீது ஏறி அவனை இறுக்கமாய் அணைத்து மார்பில் முகம் புதைத்து படுத்துக் கொண்டாள் விழி..

இதன் பிறகு அவன் கைகள் சும்மா இருக்குமா? அவளில் தன் தேடலை துவங்க ஆரம்பிக்க சட்டென அவன் கையைப் பிடித்தவள் அதை பக்கவாட்டில் இருத்தி

“ம்ஹூம்.. நான் இப்படியே உன்னை கட்டி பிடிச்சிக்கிட்டு தூங்குறேன்.. நீயும் இப்படியே தூங்கு..” என்றாள்..

அவனுக்கோ அதைக் கேட்டு மூக்கின் மேல் கோபம் வந்தது..

“என்னடி விளையாடுறியா? எனக்கெல்லாம் அவ்வளவு கண்ட்ரோல் எல்லாம் கிடையாது.. நீ எழுந்து அந்த பக்கம் போய் படு..”

“முடியாது.. நான் இப்படித்தான் படுப்பேன்..” உடும்புபிடியாய் அவனை பிடித்துக் கொண்டாள் அவள்..

அவனுக்கோ பெரும் அவஸ்தையாகி போனது..

“ஏய் வில்லி.. நெஜமாவே நீ வில்லி தான்டி.. இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது..”

“ம்ம்.. அதெல்லாம் அடுக்கும்..அடுக்கும்.. உன் மேல சக்தி படுத்திருக்கறதா நினைச்சுக்கோ..”

அவள் சொல்ல அவளை இன்னும் தீவிரமாய் முறைத்தவன் “அப்படி எல்லாம் நினைச்சுக்க முடியாது.. சொன்னா கேளுடி.. முடியலடி ப்ளீஸ்..” அவன் விட்டால் அழுது விடுபவன் போல அவளை பாவமாய் பார்த்திருக்க..

சட்டென பக்கவாட்டில் சரிந்தவள் “ரொம்பத்தான்..” என்று உதட்டை சுழித்து அவனை கட்டி அணைத்தபடி அப்படியே படுத்து விட்டாள்.

அவனுக்குள் ஏற்கனவே மோக முடிச்சுகள் அவிழ்ந்திருக்க இப்போது அவனின் ஆண்மை உணர்வுகள் பீறிட்டு எழுந்திருந்தது..

சிரமப்பட்டு தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை கட்டி அணைத்தபடியே உறங்க முயற்சி செய்து கொண்டிருந்தான்..

உறக்கம் கண்ணை ஆட்கொள்ளும் நேரம் அவன் கழுத்தில் மென் ரோஜா இதழ்களின் ஊர்வலம்.. கண்ணை திறக்க வில்விழியோ அவனின் கழுத்து வளைவில் முத்த ஊர்வலம் நடத்தி கொண்டிருந்தாள்..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!