இந்தர் தன் தந்தை கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு அவருக்கு விழியை பற்றி விளக்க முற்பட
“இனிமே இதெல்லாம் அவ எதுக்கு பாக்கணும்..? இனிமே அவ வீட்ல குடும்பத்தை பார்த்துகிட்டு இந்த வீட்டுக்கு மருமகளா உனக்கு பொண்டாட்டியா நாளைக்கு உங்களுக்கு பொறக்க போற குழந்தைகளுக்கு அம்மாவா தானே இருக்க போறா.. இப்ப இதெல்லாம் பார்த்து அவ என்ன பண்ண போறா..? ஆமா.. அவளுக்கு சமைக்க தெரியுமா?”
மார்க்கண்டேயன் கேட்க இந்தர் “இல்லப்பா.. அவ ரொம்ப சமையல் எல்லாம் பண்ண மாட்டாளாம்.. இனிமே தான் அம்மா கிட்ட கத்துக்கணும்னு சொல்லிட்டு இருந்தா..” என்றான்..
“அப்ப அந்த வேலையை பாக்க சொல்லு.. அவளை கிச்சனுக்கு போய் உங்கம்மா கிட்ட சமையல் கத்துக்க ஆரம்பிக்க சொல்லு.. இனிமே இதெல்லாம் தேவையில்லை..”
அவர் சொன்னதைக் கேட்டு பற்றிக் கொண்டு வந்தது வில்விழிக்கு.. உலக சாம்பியன் ஆக வேண்டும் என்று அவள் கனவு கண்டு கொண்டிருக்க மார்க்கண்டேயனோ அவள் பயிற்சி வகுப்புக்கு போவதையே நிறுத்த வேண்டும் என்ற ரீதியில் பேசிக்கொண்டு இருந்தார்..
என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம் இந்தரோ “வா.. போலாம்..” என்று அவள் கை பிடித்து அழைத்துக் கொண்டு சமையலறைக்கு போனான்..
அவளும் இந்தரை தீவிரமாய் முறைத்தபடி “நாளைக்கு நான் விஷ்வஜித் அகாடமி போகணும்.. என்னால உங்கப்பா சொல்ற மாதிரி ஆர்ச்சரி எல்லாம் விட முடியாது.. இந்தர் நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா?”
அவள் கொஞ்சம் இறுகிய குரலில் சத்தமாகவே கேட்க..
“மெதுவா பேசு மலர்.. அப்பாக்கு கேட்டுட போகுது.. நான் அவரோட பேசுறேன்.. கொஞ்சம் டைம் கொடு.. உடனே போகணும்னு சொல்லாத… ஒரு ஒன் வீக் எனக்கு டைம் கொடு ப்ளீஸ்..” என்றான்..
“இல்ல முடியாது.. நான் டைம் கொடுத்தா நீயும் உங்க அப்பாவும் சேர்ந்து என்னை அப்படியே இந்த வீட்லயே அடைச்சு வச்சிருவீங்க.. நான் உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன்.. அதுக்குள்ள எப்படியாவது பர்மிஷன் வாங்கி என்னை விஷ்வாஜித் அகடமிக்கு அனுப்பிவிடு..”
“சரி.. ரெண்டு நாள்ல நான் அப்பாகிட்ட பேசுறேன்.. ஆனா அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு.. அவரோட எதுவும் ஏடாகூடமா பேசிடாத ப்ளீஸ்..” கெஞ்சினான் அவன்..
அப்போதும் அவள் அவனை முறைத்தபடியே சமையல் அறைக்குள் சகுந்தலாவை தேடி போயிருந்தாள்..
ஆனால் சமையல் கற்றுக் கொள்வதில் அவள் எந்த குறையும் வைக்கவில்லை.. அவளாகவே சந்தேகங்கள் கேட்டு கேட்டு சமையலை முழு கவனத்தோடு கற்றுக் கொண்டாள்..
ஆனால் ஆர்ச்சரி பற்றிய அவளின் எண்ணங்கள் மனதின் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே தான் இருந்தது..
இந்தர் வில்விழியின் கூடல்களும் ஊடல்களும் இப்படி ஓடிக்கொண்டிருக்க அந்த வீட்டுக்குள் வந்த மான்விழியோ ப்ருத்வியோடு அறைக்குள் சென்றவள் அவன் காதலிலும் மோகத்திலும் பித்தாகி போனாள்..
தன் முத்தங்களாலும் அணைப்புக்களாலும் வருடல்களாலும் தீண்டல்களாலும் ஆளுமையினாலும் அவளை மொத்தமாய் ஆண்டு தனக்குள் ஒரு பகுதியாய் அவளை மாற்றி இருந்தான் பிருத்வி..
அவனன்றி அவளை சுற்றி வேறு உலகம் இல்லை என்பது போன்ற ஒரு இணை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் மான்விழி..
அவன் உயிரோடு தன் உயிர் கலந்திருந்தாள் பாவை அவள்.. இந்தரும் வில்விழியும் வில்வித்தை களம் சமையலறை என்று எல்லா இடங்களிலும் புழங்கி கொண்டிருக்க பிருத்வியோ மான்விழியை அவன் அறையை விட்டு அடுத்த நாள் மதியம் வரை வெளியே போக விட்டான் இல்லை…
அவளைப் பிரிந்தால் அவன் இதயத்துடிப்பு நின்று விடும் என்பது போல் அவளை அன்று மதியம் வரை தன்னுடனே கோர்த்து வைத்துக் கொண்டிருந்தான்..
அதன் பிறகு கூட காதல் ஆட்டம் ஆடியவர்களுக்கு களைப்பு மிகுதியாகி உடலுக்கு சக்தி தேவையாக இருக்க வயிற்றுக்கும் சிறிது ஈய வேண்டுமே என்ற நினைப்போடு வெளியே வந்தார்கள் அந்த காதல் சிட்டுக்கள்…
ஆனால் மார்க்கண்டேயன் மான்விழியையும் விட்டு வைக்கவில்லை.. மதிய உணவு உண்ணும் போது சகுந்தலாவிடம் சொல்வது போல் பொதுவாக மான்விழிக்கும் தலையில் தட்டி இருந்தார்…
“சக்கு.. இந்த வீட்ல பொண்ணுங்கள்லாம் காலையில ஆறு மணிக்கு முன்னால எந்திரிச்சு வந்து வேலைகளை பார்க்க ஆரம்பிக்கணும்.. மதியம் 12 மணி வரைக்கும் தூங்குறதெல்லாம் இந்த வீட்டு பழக்க வழக்கத்தில வராது.. புது மருமகளுங்களுக்கு இந்த வீட்டு பழக்க வழக்கத்தை நல்லபடியா சொல்லிக் கொடு.. முதல்லயே சொல்லிக் கொடுத்தா தான் கடைசி வரைக்கும் அதுக்கேத்த மாதிரி நடந்துப்பாங்க…”
அவர் ஜாடைமாடையாய் சொல்ல பிருத்வியோ அவரையும் சகுந்தலாவையும் மாறி மாறி பார்த்து தீவிரமாய் முறைத்துக் கொண்டிருந்தான்…
புதிதாய் திருமணமானவர்கள் என்று கூட பார்க்காமல் முதல் நாளே அவன் தந்தை இப்படி பேசியது அவனுக்கு எரிச்சலை தான் தந்தது…
ஆனால் மான்விழியோ ஒரு படி முன்னே சென்று “இனிமே உங்களுக்கு கோவம் வர மாதிரி நான் நடந்துக்க மாட்டேன் மாமா.. காலைல எழுந்து இனி எல்லா வேலையும் நானே பார்க்கிறேன்.. சாரி மாமா” என்றாள்…
மன்னிப்பு கேட்டதனாலேயே மார்க்கண்டேயன் பார்வையில் மதிப்பு கூடி இருந்தது மான்விழிக்கு…
வில்விழிக்கோ அவளை பார்க்க பார்க்க உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது..
“இப்ப எதுக்கு மானு சாரி கேட்கிறா.. கல்யாணம் ஆன புதுசுல இப்படி லேட்டா எழுந்து வர்றதெல்லாம் சகஜம் தானே… உங்க அப்பாவும் அந்த வயசை தாண்டி தானே வந்திருக்கிறார்… இப்படித்தான் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம எல்லார் முன்னாடியும் பேசறதா?”
வில்விழி இந்தரின் காதை கடிக்க “மலர் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன்… அப்பாவை எதிர்த்து எதுவும் பேசக்கூடாது.. திரும்பவும் சொல்றேன்.. அப்பாவ எதிர்த்து பேசணும்னு நினைக்க கூட நினைக்காதே… இந்த வீட்ல அதை மட்டும் நானு ப்ருத்வி ரெண்டு பேருமே அனுமதிக்க மாட்டோம்…” என்றான் அவன்..
“எல்லாம் சரிதான்.. ரெண்டு நாள்ல நான் அகாடமி போறதை பத்தி உங்கப்பா கிட்ட பேசறேன்னு சொல்லி இருக்கீங்க… எப்படியாவது சீக்கிரம் பேசி எனக்கு பர்மிஷன் வாங்கி கொடுங்க.. இல்லனா உங்களோட இந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாம் நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்க மாட்டேன்… நானே நேரா அவரோட பேசி சண்டை போட்டு அகாடமிக்க போவேன்.. அவர் ஒத்துக்கிறாரோ இல்லையோ ரெண்டு நாள் கழிச்சு நான் அகாடமிக்கு போய் தான் ஆகணும்…”
அவள் சொன்னதை கேட்டவனுக்கு உள்ளுக்குள் எப்படித்தான் இதைப் பற்றி தன் தந்தையிடம் பேச போகிறோமோ என்ற பதட்டம் நிறைந்து போனது..
சொன்னது போலவே இரண்டாவது நாள் இந்தர் மார்க்கண்டேயனோடு பேசினான்…
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் பா..”
“இது என்னடா புதுசா இருக்கு? என்கிட்ட பேசுறதுக்கு எல்லாம் பர்மிஷன் கேட்கிறே?”
தன் கையில் இருந்த செய்தித்தாளை பார்த்தபடியே அவர் குரல் மிரட்டலாய் ஒலிக்க சற்று தயங்கியவன் “அப்பா.. அது வந்து.. மலர்விழி சின்ன வயசுல இருந்தே ஆர்ச்சரி கத்துக்கிட்டு இருக்காப்பா..”
“சரி.. அதுக்கு என்ன இப்ப?”
அவர் கொஞ்சமும் அவன் பேச்சில் கவனத்தை வைக்காது செய்தித்தாளை படித்துக் கொண்டே அலட்சியமாக கேட்டார்..
“அவ டிஸ்ட்ரிக்ட் லெவல் சாம்பியன் பா.. அவளோட கனவே வர்ல்ட் சாம்பியன் ஆகணும்ங்கிறதுதான்.. அதனால அவ தொடர்ந்து ப்ராக்டிஸ் போகணும்னு..”
கையிலிருந்த செய்தித்தாளை விலக்கி கீழே வைத்தவர் “என்ன இந்தர்.. இந்த வீட்ல என்ன நடைமுறைன்னு உனக்கு தெரியாதா? நம்ம வீட்ல பொம்பளைங்க வெளியில போய் வேலை செய்யறது இந்த மாதிரி போட்டியில் கலந்துக்கறது இதெல்லாம் பழக்கம் கிடையாது.. எப்ப மலர் இந்த வீட்டு மருமகளா ஆனாளோ அப்பவே இந்த வீட்ல என்ன வழக்கமோ அதைத்தான் அவ ஃபாலோ பண்ணனும்.. அதனால இந்த பேச்சை இதோட விட்டுட்டு போய் உன் வேலையை பார்..”
“அப்பா இல்லப்பா… அவளுக்கு அது ரொம்ப பிடிச்ச விஷயம் பா… அவளோட பேஷன்.. எனக்கும் ஆர்ச்சரில அவளோட ஸ்டைல் ஸ்கில்ஸ் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும் பா… எனக்காக காம்படிஷனுக்கெல்லாம் அனுப்பலைனா கூட அட்லீஸ்ட் ப்ராக்டிஸ்க்கு அவளை அனுப்புங்கப்பா.. ப்ளீஸ்பா..”
அவன் கெஞ்சவும் அவனை நிமிர்ந்து பார்த்த மார்க்கண்டேயன் “ஓகே.. அவ ப்ராக்டிஸ் பண்ணட்டும்… ஆனா விஷ்வஜித் அகடமிக்கு எல்லாம் அவளை அனுப்ப முடியாது.. நம்ம அகடமிக்கு அவளை கூட்டிட்டு போ.. ஆனா ஒரு கண்டிஷன்… டெய்லி உன்னோட 8:00 மணிக்கு எல்லாம் அவ கிளம்பி அவ அகடமிக்கு வர முடியாது… வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு பத்து மணிக்கு மேல அவ வருவா… அப்புறம் ரெண்டு மணி நேரம் பிரக்டிஸ்… 12வது மணிக்கு திரும்ப அவ வீட்ல இருக்கணும்… இல்ல இந்த பிராக்டிஸை மொத்தமா நிறுத்திடுவேன்..”
கறாராக அவர் சொன்னதை கேட்டவன் “இது போதும் பா… தேங்க்ஸ் பா… நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன் பா..”
அவனிடம் அவர் அவ்வளவு கறாராக பல நிபந்தனைகளை போட்டு பேசி இருக்க வில்விழியிடம் இந்திர தனுஷ் அகடமியிலேயே அவளை அவர் பயிற்சி செய்ய சொன்னார் என்று மட்டும் சொன்னவன் அவளை போட்டிக்கு அனுப்ப அவர் அனுமதி தரவில்லை என்பதை அவளிடம் சுத்தமாய் மறைத்து இருந்தான்..
அவளிடம் இரண்டு மணி நேரம் அவள் பயிற்சி செய்யலாம் என்று அவர் சொன்ன பயிற்சி நேரத்திற்கான விதிமுறைகளை சொல்ல வில்விழியோ “ஒரு நாளைக்கு டூ ஹவர்ஸ் பிராக்டிஸ் எப்படி போதும் இந்தர்..? என்ன விளையாடுறீங்களா? நாள் ஃபுல்லா ப்ராக்டிஸ் பண்ணியே நாலு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் டிஸ்ட்ரிக்ட் லெவல்ல கம்பீட் பண்ணிட்டு இருக்கேன்.. நேஷனல் இன்டர்நேஷனல் லெவல் போகணும்னா நான் அதுக்கு இன்னும் ஸ்ட்ரகிள் பண்ணனும்… நீங்க என்னடான்னா டெய்லி டூ அவர்ஸ் பிரக்டிஸ்னு சொல்றீங்க.. அட்லீஸ்ட் ஒரு ஃபைவ் ஹவர்ஸாவது பிராக்டிஸ் பண்ணுனா தான் என்னால கொஞ்சமாவது அச்சீவ் பண்ண முடியும்.. நான் வெறும் ஆர்ச்சரி பிராக்டீஸ் மட்டும் இல்ல பாடி ஃபிட்னஸ் எக்விப்மென்ட் ஃபிட்னஸ் எல்லாமே பார்க்கணும்… நீங்க ஒரு கோச் தானே.. ? உங்களுக்கு இதெல்லாம் தெரியும் தானே இந்தர்..?”
அவள் கேட்டது அவனுக்கும் புரிந்தது..
“புரியுது மலரு.. ஆனா அப்பா இதுக்கு மேல இறங்கி வர மாட்டார்..”
“எனக்கு புரியல இந்தர்.. நான் ஆர்ச்சரி பிராக்டிஸ் பண்றதுக்கு அவர் எதுக்கு ஒத்துக்கணும்..? இது என்னோட ட்ரீம்… என்னால யாருக்காகவும் எதுக்காகவும் இதை விட்டு தர முடியாது..”
“யாரு உன்னை விட்டு தர சொன்னா..? நீ விட்டுத் தர வேண்டாம்… அதுக்காக தான் அவர் கிட்ட பெர்மிஷன் கேட்டேன்.. இல்லனா எங்க அப்பா ஒரு விஷயத்தை முடிவு பண்ணி சொல்லிட்டா அதுக்கப்புறம் இந்த வீட்ல அதை பத்தி இரண்டாவது முறை யாரும் டிஸ்கஸ் பண்ண மாட்டோம்.. உனக்காக தான் நான் அப்பாவோட முடிவை மாத்திக்க சொன்னேன்.. எனக்கும் தெரியும்டி.. ஸ்டேட் லெவல்ல நேஷனல் லெவல்ல கம்பீட் பண்ணணும்னா டூ ஹவர்ஸ் போதாது… நீ அகடமிக்கு வந்து டூ ஹவர்ஸ் ப்ராக்டிஸ் பண்ணு.. நீ வீட்டுக்கு வந்தப்புறம் வீட்ல இருக்குற இன்டோர் ரேஞ்ச்ல பிராக்டிஸ் பண்ணு… அப்பா எப்படியும் ஆஃபீஸ்க்கு போயிட்டு நைட் தான் வீட்டுக்கு வருவார்… அது வரைக்கும் இங்க வீட்ல நீ பிராக்டீஸ் பண்ணலாம்… அம்மா கிட்ட சொல்லிடறேன்.. அம்மா அப்பாக்கு தெரியாம பாத்துப்பாங்க… அது மட்டும் இல்லாம நான் வேணா லக்ஷ்மனை இங்க அனுப்பி வைக்கிறேன்… அவன் உனக்கு ட்ரெயினிங் குடுப்பான்..”
ஒரு பெருமூச்சை விட்டவள் “எனக்கு இன்னும் கூட புரியலை இந்தர்.. நான் எதுக்கு இப்படி திருட்டுத்தனமா ஆர்ச்சரி ப்ராக்டிஸ் பண்ணனும்… நான் எந்த தப்பான வேலையும் பண்ணலையே…”
அவள் சொல்ல “ப்ளீஸ் மலர்.. எனக்காக..”
அவன் கெஞ்சுவது போல் கண்ணை வைத்து இருக்க அவளும் ஆமோதிப்பாய் தலையாட்டினாள்..
அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தவன் “சாரிடி… எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..” என்றான்..
ஆனால் அவனுடைய தலைவலி அதோடு முடியவில்லை.. திருமணமாகி இரண்டாவது மாதமே மான் விழி கருவுற்றிருந்தாள்.. ஏற்கனவே மார்க்கண்டேயரின் செல்ல மருமகளாக ஆகி போனவள் இப்போது இன்னும் அவரின் சிறப்பு கவனத்திற்கு உரியவள் ஆனாள்..
பிருத்வியையும் சகுந்தலாவையும் அவளுக்கு பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்ய செய்தார்..
தன் குல வாரிசை பெற்றெடுக்க போகிறாள் என்று தெரிந்த நாளிலிருந்து அவளை தலையில் வைத்து தாங்காத குறை தான்..
ப்ருத்வி சகுந்தலா இருவருமே அவளை உள்ளங்கையில் தான் வைத்து தாங்கினார்கள்..
வில்விழி தினமும் வில் வித்தை பயிற்சி செய்பவள் கிட்டத்தட்ட அதுதான் சாப்பாடு அதுதான் தூக்கம் என்பது போல் அதற்காக உழைத்துக் கொண்டு இருந்தாள்… மார்க்கண்டேயன் இல்லாத நேரங்களில் முழுவதுமாக வில்வித்தை பயிற்சி செய்பவள் அவர் இருக்கும் நேரங்களில் தன் உடலை பாதுகாக்க உடற்பயிற்சி செய்தாள்…
வில்வித்தை பயிற்சிக்கு என்ன விதமான உடற்பயிற்சி எல்லாம் தேவையோ அதை எல்லாம் செய்து கொண்டிருந்தாள்..
இந்தர் மார்க்கண்டேயனுக்கு தெரியாமல் அவளுக்கு எல்லா பயிற்சிகளையும் கொடுத்துக் கொண்டிருந்தான்..
இப்படியே எட்டு மாதங்கள் ஓடி இருக்க.. மான்விழிக்கு ஆண் குழந்தை பிறக்க அவனுக்கு ஸ்ரேஷ்ட் சிரஞ்சீவி என்று பெயர் சூட்டினார்கள்.. ஆனால் சின்ட்டூ என்று செல்ல பெயர் வைத்து வில்விழி முதன் முதலில் அழைக்க அவனை எல்லோரும் அப்படியே அழைக்க தொடங்கினார்கள்…
மேலும் மேலும் மாதங்கள் ஓடின.. சரியாக இன்னும் மூன்று மாதங்களில் ஸ்டேட் லெவல் சாம்பியன்ஷிப் போட்டி வர இருக்க அந்த நேரம் சகுந்தலாவிடம் சொல்லி வில்விழியிடம் ஒரு விஷயத்தை விசாரிக்க சொன்னார் மார்க்கண்டேயன்…
அவர்களுக்கு குழந்தை ஏன் இன்னும் பிறக்கவில்லை… ஏதாவது தள்ளிப் போட்டு இருக்கிறார்களா என்று கேட்க வில்விழியும் “இப்ப என்ன அவசரம் அத்தை..?” என்றாள்….
அதே நேரம் சமையல் அறைக்குள் வந்த இந்தரோ “ஆமாம்மா… இப்ப என்னம்மா அவசரம்? அவ இன்னும் ஆர்ச்சரில ஒரு லெவல்க்கு வரட்டும்… அதுக்கப்புறம் குழந்தை பெத்துக்கறோமே… இப்போ குழந்தை குட்டின்னு பெத்துக்கிட்டா அவளால ஆர்ச்சரில கம்ப்ளீட்டா ஃபோக்கஸ் பண்ண முடியாது..”
அவன் சொன்னதை கேட்டபடியே உள்ளே வந்தார் மார்க்கண்டேயன்..
“என்ன ஆர்ச்சரியில ஒரு லெவலுக்கு வரத்துக்காக குழந்தை பெத்துக்கறதை தள்ளி போட்டிருக்கீங்களா? டேய் இந்தர்.. என்னடா பேசுற..? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா? இப்பவே உனக்கு வயசு 28 ஆகுது… வயசு ஆயிடுச்சின்னா குழந்தை வளர்க்கறது அதுக்கு அப்புறம் அதுக்கு வேண்டியது எல்லாம் செய்யறது எல்லாம் கஷ்டமாயிடும்… அதனால ஒழுங்கா எதையும் தள்ளி போடாம குழந்தையை பெத்துக்கங்க..”
“அப்பா… இன்னும் ரெண்டு வருஷம் டைம் கொடுங்கப்பா… அதுக்குள்ள அவ வர்ல்ட் சேம்பியன் ஆயிடுவா… அதுக்கப்புறம் நீங்க சொல்ற படியே..”
அவன் பேசி முடிக்கவில்லை.. அவனை கைநீட்டி தடுத்தவர் “என்கிட்ட என்ன சொல்லி நீ அவளை பிராக்டிஸ்க்கு அனுப்பி வெச்ச? அவ எந்த காம்பெடிஷன்லயும் கலந்துக்க மாட்டான்னு சொல்லித்தானே அவளை ப்ராக்டீஸ்க்கு அனுப்பிச்சே… இப்ப என்னடா அவ ஒரு லெவலுக்கு வரணும் ஒரு லெவலுக்கு வரணும்னு சொல்ற… அவ ஒரு லெவலுக்கு வந்துட்டான்னு உனக்கு எப்படி தெரியும்..”
மார்க்கண்டேயன் சொன்னதை கேட்ட வில்விழிக்கு அதிர்ச்சியாக இருந்தது… இந்தர்தான் அந்த விஷயத்தை முழுவதுமாக விழியிடமிருந்து மறைத்திருந்தானே…
அவனை தீவிரமாய் முறைத்தவள் “மாமா இந்த ஸ்டேட் லெவல்க்கு போயிட்டு வந்துட்டேனா அப்புறம் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பை ஒரே வருஷத்துல அடிச்சிடுவேன்… அது வரைக்கும் டைம் கொடுங்க… அப்புறம் நான் ஆர்ச்சரி ஃபீல்ட்லருந்தே நின்னுக்கிறேன்… ப்ளீஸ் மாமா… இது என்னோட கனவு..”
“பொம்பள பிள்ளைகளுக்கு எதுக்கு கனவு? பொம்பள பிள்ளைகளை பொறுத்த வரைக்கும் வீடு புருஷன் புள்ள குட்டிங்க இதுதான் கனவா இருக்கணும்… இனிமே உன் மத்த கனவை எல்லாம் மூட்டை கட்டி வை… இன்னையோட நீ ஆர்ச்சரி கிளாஸ் போக வேண்டாம்… நாளைல இருந்து வீட்ல இருந்து சமைக்கிறது துவைக்கிறது பாத்திரம் கழுவறது இந்த வேலையெல்லாம் பார்..” முடிவாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தார் மார்க்கண்டேயன்..
வில்விழி இந்தரை முறைக்க அவனோ இரண்டு பேரில் யாருக்காக பேசுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்தான்.. ஆனால் எப்போதும் போல் தன் தந்தையின் முன்னால் பேச முடியாதவன் விழியை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றான்..
அறைக்கு வந்தது தான் தாமதம் விழி படபடவென பொரிய தொடங்கினாள்..
“இந்தர் என்ன நெனச்சிட்டு இருக்காரு உங்க அப்பா.. என்னால ஆர்ச்சரியை விட முடியாது… எனக்கு ஆர்ச்சரில ஒரு லெவலுக்கு வந்த பிறகு தான் குழந்தையை பத்தி எல்லாம் யோசிக்க முடியும்… இப்ப உங்க அப்பாகிட்ட நீங்க பேசுறீங்களா? இல்லன்னா .நான் பேசவா..?”
“மலரு.. கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளு.. அவசரப்படாத.. நம்ம ஒரு குழந்தையை பெத்து அவர் கைல கொடுத்துடுவோம்… அதுக்கப்புறம் அவர் உன்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டார்.. கேட்டாலும் அந்த குழந்தையை வைத்து சமாளிச்சுடலாம்.. எனக்கும் நம்ம குழந்தை பாக்கணும்னு ஆசையா இருக்குடி.. நமக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு நான் அவரை எப்படியாவது பேசி கன்வின்ஸ் பண்ணி அதுக்கப்புறம் உன்னை முழுசா வேர்ல்ட் சாம்பியனா ஆக்கி காட்டுறேன்.. நீ வேர்ல்ட் சாம்பியனா ஆகணுங்கறது உனக்கு மட்டும் இல்ல… எனக்கும் கனவு தான்.. அதுக்கு இதுதான் சரியான வழி… அவர் கையில ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுத்துட்டா என் பேர் சொல்ல ஒரு புள்ள வந்துட்டான்னு அதுக்கப்புறம் வாயை மூடிக்குவார்… எதுவும் சொல்ல மாட்டார்..”
அவன் சொல்ல அவளோ முடியாது என்று பிடிவாதமாய் நின்றாள்… கொஞ்சம் கொஞ்சமாக இந்தர் சகுந்தலா இருவரும் சேர்ந்து அவள் மனதை கரைத்து ஒரு வழியாக அவர்கள் சொன்னது போல பிள்ளை பெற்றெடுப்பதற்கு சம்மதித்தாள் வில்விழி.. ஆனால் உள்ளுக்குள்ள அவளுக்கு தன்னை வீட்டோடு இதையே காரணமாய் வைத்து அடித்து விடுவார்களோ என்ற பயம் இருக்கத்தான் செய்தது… ஆனாலும் எல்லா தாயையும் போல தன் மகவை ஆசையோடு தான் அவளும் எதிர்பார்த்திருந்தாள்..
இந்தர் தான் எதிலும் குறி தப்பாதவன் ஆயிற்றே, அடுத்த மாதமே கருவுற்றிருந்தாள் வில்விழி..
மருத்துவரை பார்க்க சென்றபோது அவரோ அவளை பரிசோதித்து விட்டு வில்வழியின் கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அவளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்..
அதிலிருந்து வில்விழியை படுக்கையை விட்டு அசையை கூட விடவில்லை அந்த வீட்டில் இருந்தவர்கள்… அவளுக்கு ஏதோ சிறைவாசத்தில் இருப்பது போல தான் தோன்றியது அந்த நேரம்..
அடுத்த மூன்று மாதத்தில் ஸ்டேட் லெவல் சாம்பியன்ஷிப் போட்டி வர இருந்தது.. அவளால் அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.. அதனால் அந்த போட்டிக்கு வித்யாவை தேர்வு செய்து அவளுக்குத்தான் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தனர்..
படுக்கையிலேயே எத்தனை நாள் தான் படுத்து கிடப்பது என்று.. ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் மெல்ல நடந்து வீட்டுக்குள்ளேயே நடமாடிக் கொண்டிருந்தாள் வில்விழி…
அன்று மார்க்கண்டேயரும் சகுந்தலாவும் ஏதோ ஒரு உறவினரின் இறப்புக்குப் போய் இருக்க மான்விழி தான் சமைக்க வேண்டி இருந்தது… வில்விழியும் சமைக்க முடியாது இல்லையா? அதனால் அவள் சின்ட்டூவை உறங்க வைத்துவிட்டு சமையல் வேலையை பார்க்க போயிருந்தாள்…
வில்விழி மான்விழியின் அறைக்குள் எட்டி பார்க்க அங்கே சின்ட்டூ கட்டிலில் படுத்திருந்தவன் மெல்ல ஊர்ந்து வந்து கட்டிலின் நுனியில் கீழே விழுவது போல் படுத்திருக்க அவளுக்கு ஒரு நொடி இருதயம் படப்படப்பில் அதிவேகமாய் துடிக்க தொடங்கியது..
அவனைப் பார்த்ததும் பதட்டம் அடைந்தவள் சற்றே வேகமாய் அவன் அருகே நடந்து போக அவனோ அப்படியே கீழே சாய்ந்து விழப் போகவும் மெதுவாய் நடந்து கொண்டிருந்தவள் வேகமாக ஓடி சென்று கீழே விழுந்த சின்ட்டூவை தரையில் விழுவதற்கு முன் கையில் பிடித்திருந்தாள்.. குனிந்து அவனை பிடித்தவள் அப்படியே அவனை தூக்கி தோளில் போட வயிற்றில் சுர் என்று ஒரு வலி..
சின்ட்டூவை கட்டிலில் கிடத்திவிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு அப்படியே மயங்கி சரிந்தாள்.. மெல்ல அவளை சுற்றி ரத்தம் பரவத் தொடங்க வயிற்றைப் பிடித்துக் கொண்டு அம்மா என்று மயங்குவதற்கு முன் அவள் கத்திய சத்தம் கேட்டு மான்விழியும் ஓடி வந்து பார்த்தாள்..
ஓடி வந்தவள் வில்விழியின் நிலையை பார்த்து பதறி போனாள்.. சட்டென இந்தருக்கு அழைத்து விஷயத்தை சொல்லவும் அவனும் ஓடி வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துப் போக அங்கே மருத்துவர் அவள் கரு கலைந்து விட்டதை உறுதிப்படுத்தினார்..
கரு கலைந்த விஷயம் அறிந்த மார்க்கண்டேயர் அப்போதுதான் கருக்கலைந்து மிகவும் நொடிந்து போயிருந்த வில்விழியின் நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் மருத்துவமனைக்கே வந்து அவளையும் இந்தரையும் சரமாரியாக திட்டி வெளுத்து வாங்கினார்..
எங்கே அந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடியாதோ என்று தான் வில்விழி தன் கருவை கலைத்து விட்டதாக அபாண்டமாக வில்விழி மேல் பழி சொல்ல அதை கேட்டு அதிர்ந்து போனார்கள் இந்தரும் வில்விழியும்..
“இல்லப்பா..”
இந்தர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க “என்னடா.. அவ பண்ணலன்னு சொல்ல போறியா? அவளுக்கு சப்பைக்கட்டு கட்டாதடா… உனக்கும் தெரியும்… அவ இதை வேணும்னே தான் பண்ணி இருக்கான்னு… ஏற்கனவே அந்த சாம்பியன்ஷிப்ல கலந்துக்கணும்னு குழந்தை பேறையே தள்ளி போட்டவங்க தானே நீங்க? இப்போ அதுல எப்படியாவது கலந்துக்கணும்னு இந்த குழந்தையை அவ அழிச்சிருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்? இவ தான் அந்த குழந்தையை கொன்னு இருக்கா… ஈவு இரக்கமே இல்லாம காம்பெடிஷனில கலந்துக்கறதுக்காக குழந்தையை கொன்னு இருக்கா… நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வரியா.. சை.. ரெண்டு பேரும் என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க… அவளை பேசாம அவ அம்மா வீட்ல கொண்டு விடு.. எனக்கு அவளை பார்க்கவே வெறுப்பா
இருக்கு.. மனசாட்சியே இல்லாம வயத்தில இருந்த புள்ளையையே கொன்னவளுக்கு என் வீட்ல இடம் கிடையாது…”
வில்விழிக்கோ உயிர் வற்றி போனது அவர் பேசிய வார்த்தைகளை கேட்டு…