வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௪ (24)

5
(16)

அம்பு – ௨௰௪ (24)

மார்க்கண்டேயனின் இதயத்தை கிழிக்கும் வார்த்தைகளில் யாரோ ஒரு கூடை நெருப்பை அள்ளி தன் மேல் வீசியது போல் இருந்தது வில்விழிக்கு… அவள் உடலில் ரத்தமே இல்லாமல் போய் எல்லாமே கண்களுக்குள் குடியேறியது போல் அப்படியே தன் கோபம் முழுக்க உள்ளுக்குள் கட்டுப்படுத்தியப்படி அவள் அமர்ந்திருக்க அவள் விழிகளோ ஏகத்துக்கு சிவப்பேறி போனது..

இந்தர் எதுவும் பேசாமல் அவளை கெஞ்சுதலாய் பார்க்க அவளுக்கோ அவன் வாய் மூடி இருந்தது மனதிற்குள் ரணமாய் வலித்தது..

“என் அம்மா வீட்டுக்கு என்னை கொண்டு விட்டுடுங்க இந்தர்… என்னால இங்க இருக்க முடியாது… நான் இப்ப இருக்கற நெலமையில ஏதாவது விபரீதமா ஆயிட போகுது…” அமைதியாக தரையை உறுத்துப் பார்த்தபடி சொன்னவளின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்த இந்தர் அவளை அழைத்துக் கொண்டு அவளுடைய தாய் வீட்டுக்கு புறப்பட்டான்..

அங்கே சென்றதும் தன் அன்னையை கண்ட நொடி முழுதுமாய் உடைந்து கதறி அழுதாள் விழி..

“அம்மா… ரொம்ப.. ரொ..ரொம்ப வலிக்குதும்மா.. என் குழந்தை என் உயிர் என்னை விட்டு போயிருச்சும்மா… என் வயித்துல வளர்ந்தது எனக்கும் குழந்தை தானம்மா.. ஒரு அம்மாவா அது எனக்கு எவ்வளவு பெரிய இழப்பு… அந்த குழந்தையை நான் கொன்னுட்டேன்னு…” அவளுக்கு பேசமுடியாமல் தொண்டை அடைத்தது…

இந்தர் புறம் திரும்பியவள் “அப்படி உங்க அப்பாவால எப்படி ஒரு வார்த்தை சொல்ல முடிஞ்சுச்சு.. என்னால முடியல இந்தர்.. அந்த நிமிஷம் அவரை குத்தி கொன்னு போடணும்னு தோணுச்சு… எப்பேர்பட்ட பழியை என் மேல போட்டு இருக்கார்… நம்ம ரெண்டு பேருக்கு இடையில இருக்கற ஆத்மார்த்தமான காதலுக்கு கிடைச்ச பரிசு டா இந்த குழந்தை… அதை நானே அழிக்க நினைப்பேனா? ஹாஸ்பிடல்ல நான் கண்ணு முழிச்சப்போ நீ என்கிட்ட உன் உயிரே போன மாதிரி உடைஞ்சு போய் நம்ம குழந்தை உயிரோட இல்லன்னு சொன்ன இல்ல… அந்த நிமிஷம் நான் ஏன் உயிரோடு இருக்கேன்னு எனக்கு தோணுச்சு… என் குழந்தையை காப்பாத்த முடியாம அதோட உயிரை பறி கொடுத்த எனக்கு இந்த உலகத்துல உயிரோட இருக்கிற அருகதையே இல்லைன்னு தோணுச்சு..”

“ஹேய்.. மலரு.. அப்படியெல்லாம் சொல்லாதடி… நீ இல்லனா எனக்கு எதுவுமே கிடையாதுடி.. இந்தக் குழந்தையை இழந்ததனால உனக்கு எவ்வளவு வேதனை இருக்கோ அதே அளவு வேதனை வலி எனக்கும் இருக்கு.. இப்போ நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டா தைரியமா இருக்கணுமே தவிர உடைஞ்சு போகக்கூடாது மலரு… இப்படி அழாதடி… உனக்கு ஏதாவது ஆயிட போகுது… இப்பதான் அபார்ஷன் ஆகி இருக்கு.. உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு.. டாக்டர் நீ ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது.. ரெஸ்ட் ல இருக்கணும்னு சொல்லி இருக்காங்க…”

தரையில் உயிரற்றவளாய் விழுந்து அழுது கொண்டிருந்தவளின் முன்னே அமர்ந்து தன் கைகளால் அவளை அணைத்து தாங்கிய படி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் இந்தர்…

ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்தவள் “விடு இந்தர்.. நீ ஏண்டா என்னை சமாதானப்படுத்திக்கிட்டு இருக்க..? நான்தான் என் குழந்தையை கொன்னு போட்டேனே… நான் எதுக்கு உண்மையா அழ போறேன்..? உங்க அப்பாவை பொருத்த வரைக்கும் இதெல்லாம் வெறும் நடிப்பு தானே.. உனக்கு கூட அப்படித்தானோ… நீ தான் எதுவுமே சொல்லாம அவர் என் மேல அநியாயமா பழி போட்டப்போ வாயை மூடிக்கிட்டு இருந்தியே…”

அவள் குரலில் நம்பிக்கை விட்டுப் போயிருந்தது..

அவள் முகம் நிமிர்த்தியவன் “இங்க பாரு மலரு..” என்க அவளோ அவனை விழி உயர்த்திப் பார்த்தாள் இல்லை… அவளுக்கு பார்க்கவும் தோன்றவில்லை..

“என்னை பாருடி மலரு… என்னை வெறுத்துறாத ப்ளீஸ்.. எங்க அப்பா தான் அப்படி சொன்னாரு… நான் அவரை எதிர்த்து பேசி இருக்கணும்… நீ அப்படி இல்லைன்னு சொல்லி சண்டை போட்டு இருக்கணும்.. ஆனா என்னால அது முடியலடி.. என் தப்பு தான்.. ஆனா உன்னை பத்தி எனக்கு தெரியும்டி.. நான் உன்னை முழுசா நம்புறேன்… நம்ம குழந்தையை பத்தி உன்னால அப்படி நினைக்க கூட முடியாது.. எனக்கு தெரியும்.. நீ அவனை வளர்த்து பெரிய ஆளாக்கனும்னு நினைச்சிருப்ப.. ஏன் பெரிய ஆர்ச்சர் ஆக்கணும்னு கூட கனவு கண்டு இருப்ப… ஆனா கடவுள் வேற விதமா பண்ணிட்டாரு…”

“கடவுள் இல்லை இந்தர்… நான்தான் நான்தான் கொன்னுட்டேன் என் புள்ளைய…” வயிற்றில் அடித்துக் கொண்டு சொன்னவளின் கரங்களைப் பிடித்து தடுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் இந்தர்..

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஒரு நிமிஷம் நான் லேட்டா போயிருந்தா சின்ட்டூ கட்டில்லருந்து கீழே விழுந்து இருப்பான்.. அவன் தலையில அடிபட்டு இருக்கும்.. இல்ல இன்னும் விபரீதமா கூட அவனுக்கு ஏதாவது ஆகி இருக்கலாம்.. ஒருவேளை நான் அவனை காப்பாத்தாம இருந்திருந்தா என் குழந்தை இப்போ உயிரோட இருந்திருக்கும் டா.. இன்னும் பொறக்காத குழந்தையை பத்தி யோசிச்சு ஆபத்தில இருக்கற ஒன்றரை வயசு குழந்தையை அதுவும் என் அக்கா குழந்தையை காப்பாத்தாம இருக்க முடியல டா.. அவன் கீழ விழறதை பார்த்த உடனேயே தன்னால என் கை அவனை போய் பிடிச்சு காப்பாத்துச்சு.. ஒருவேளை கீழே விழுந்து அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தா அப்போ உங்க அப்பா சந்தோசமா இருந்திருப்பாரா? சொல்லுடா…”

அவன் அணைப்பில் இருந்தபடியே அவனை மார்பிலும் தோளிலும் அடித்தபடி அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே அசைவற்று நின்றான் இந்தர்.. சின்ட்டூவின் உயிருக்கு ஆபத்து நேர்வதை பற்றி அவனால் யோசித்து கூட பார்க்கமுடியவில்லை…

“மலரு நீ நம்ம குழந்தைக்காக யோசிச்சு சின்ட்டூவை காப்பாத்தாம போயிருந்தா தான் எனக்கு ரொம்ப வேதனையா இருந்திருக்கும்.. நீ செஞ்சது தியாகம் மலரு.. அழாதடி… நமக்கு நிறைய குழந்தைங்க பிறக்கும்.. நமக்கு என்ன வயசா ஆயிடுச்சு.. அழாத கண்ணம்மா..”

“இல்ல இந்தர்.. என்னால தாங்கவே முடியல.. இப்போ உங்க அப்பா சொன்ன வார்த்தை தான் என் காதுல திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருக்கு…  இல்ல வேண்டாம்.. அவர் சொன்னதுல எந்த உண்மையும் இல்லாதப்போ அதை பத்தி நான் ஏன் கவலைப்படணும்.. இப்ப நான் சொல்றேன் கேட்டுக்கோ.. வர்ற ஸ்டேட் லெவல் சாம்பியன்ஷிப்ல நான் கலந்துக்குவேன்.. இந்த ஒரு மாசத்துல என் உடம்பை சரி பண்ணிக்கிட்டு நான் பிராக்டிஸ்க்கு போவேன்.. இதனால அந்த வீட்டுக்கு இனிமே நிரந்தரமா என்னால வர முடியாமலே போனாலும் எனக்கு கவலை இல்ல.. எப்படியும் என் மேல உங்க அப்பா அபாண்டமா போடக்கூடாத பழியை போட்டுட்டாரு.. இனிமே அவருக்காக நான் எதுக்கு என் கனவை விட்டுக் கொடுக்கணும்..”

“நானும் அதான் மலரு சொல்றேன்.. அவருக்காக நீ உன் கனவை விட்டுக் கொடுக்க வேண்டாம்.. ஆனா உன் கனவுக்காக நீ என்னை விட்டு கொடுத்திடுவியா மலரு… நான் உனக்கு வேண்டாமா?”

அவன் கேட்ட கேள்வியில் உறைந்து போனாள் அவள்.. அவன் இல்லாமல் அவளின் ஜீவன் தனித்து இயங்காதே.. அவளின் உயிருக்குள் உறைந்தவனாயிற்றே அவன்..

இந்தர் விழியை கட்டி அணைத்து சமாதானப்படுத்த தொடங்கும் போதே விழியின் பெற்றோர் இருவரும் அந்த இடத்தை விட்டு நீங்கி போயிருக்க அவளோ அவன் கேட்ட கேள்வியில் தவித்து துடித்து போனவள் அவனை இறுக்கமாய் அணைத்த படி

“எனக்கு நீ வேணும் இந்தர்.. நீ இல்லாம எனக்கு வாழ்க்கை இல்லை.. ஆனா உன் அப்பா உன்னை மட்டும் கொடுத்துட்டு என்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் பறிச்சுக்கணும்னு நினைக்கிறார்.. எதை இழந்தாலும் என்னால என் கனவை இழக்க முடியாது இந்தர்..”

“இல்லடி நீ உன் கனவை இழக்க வேண்டாம்.. இழக்கவும் கூடாது.. எங்க அப்பா பேசினப்போ நான் அமைதியா இருந்தது தப்புதான்.. ஆனா இப்ப நான் உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்றேன்.. உன்னை இப்படியே விட்டுட மாட்டேன்.. உனக்கு டெய்லி பிராக்டிஸ் கொடுத்து  உன்னை வேர்ல்ட் சாம்பியன் ஆக்குறதுதான் என்னோட முதல் வேலை… கடைசி நிமிஷத்துல ஸ்டேட் சாம்பியன்ஷிப்ல உன் பேரை கொடுக்கிறேன்.. இப்போதைக்கு வித்யா மட்டும் போறதாவே இருக்கட்டும்.. அப்பாக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம்.. தெரிஞ்சா வேற ஏதாவது ஏடாகூடமா பண்ணி வைப்பார்.. நான் லக்ஷ்மணை இங்க வந்து டெய்லி உனக்கு ட்ரெய்னிங் கொடுக்க சொல்றேன்.. இங்க இருக்கிற ஆர்ச்சரி ரேஞ்சுல இன்னும் காம்பவுன்ட் பௌவ், ஹை குவாலிட்டி பௌவ்ஸ் அன்ட் ஆரோஸ்னு சில எக்விப்மென்ட்ஸ் வாங்கி செட் பண்ணறேன்.. உனக்கு என்னென்ன ட்ரெய்னிங் கொடுக்கணுமோ அத்தனையும் கொடுப்பான் லக்ஷ்மன்.. உன்னை வேர்ல்ட் சாம்பியன் ஆக்கிட்டு தான் நான் ஓய்வேன்டி..” அவன் சொன்னதை கேட்டவள் அவனை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள்..

ஒரு மாதத்தில் அவள் உடல் நிலை நன்கு தேறி இருந்தது.. அதன் பிறகு இந்தர் சொன்னபடியே லட்சுமன் ஒவ்வொரு நாளும் அவளுக்கு பயிற்சி கொடுத்தான்..

இந்தரோ அவளை விட்டு இருக்க முடியாமல் அவளை பார்க்க அவள் வீட்டுக்கு வர அவளோ அவன் தன் தந்தை பேசும் போது அமைதியாக இருந்ததற்கு தண்டனையாய் அவனை வீட்டு வாசலோடு நிறுத்தி அப்படியே திருப்பி அனுப்பி விடுவாள்.. ஆனாலும் விக்கிரமாதித்தன் வேதாளத்தை தேடி வருவது போல தன்னை துரத்தி அடிக்கும் மோகினி பிசாசை தினமும் தேடி போய்க்கொண்டிருந்தான் இந்தர்..

மாநில அளவிலான போட்டிக்கு யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்று தேர்வு செய்யும் ஒரு முகாம் ஒரு வாரத்தில் நடக்க இருந்தது..  வித்யாவும் விழியும் அதற்குப் பெயர் கொடுத்திருந்தார்கள்..

அப்போது சரியாக திடீரென இந்திரதனுஷ் அகடமிக்கு மார்க்கண்டேயன் வந்திருக்க கண்களாலேயே லக்ஷ்மணை தேடினார் அவர்.. அங்கே வேலை செய்யும் ஒருவரிடம் மார்க்கண்டேயன் கேட்க

“சார்.. இந்த லக்ஷ்மன் சார் அடிக்கடி வெளியில எங்கேயோ போயிடுறாரு.. அகடமில இருக்கிறதே இல்லை.. அவர் வேலையும் சேர்த்து அகாடமில இப்ப நாங்க தான் சார் பார்க்கிறோம்.. இந்தர் சார்ட்ட பலமுறை சொல்லி பார்த்துட்டோம் .. ஆனா அவரு ஏதேதோ சொல்லி சமாளிக்கறாரே தவிர எங்களை எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறார்..”  மார்க்கண்டேயன் வந்ததும் அவரிடம் புகார் செய்ய ஆரம்பித்து இருந்தார் அந்த பயிற்சியாளர்..

அதைக் கேட்ட மார்க்கண்டேயனோ “அப்படி எங்க போறான் லட்சுமண்?” என்று கேட்க “தெரியல சார்.. காலைல போயிட்டு சாயந்திரம் தான் வராரு… கேட்டா இந்தர் சார் தான் எங்கயோ அனுப்பி இருக்காருன்னு சொல்றாரு.. யாருக்கோ வீட்ல போயி ட்ரெயினிங் கொடுக்கிறாராம்..”

அந்த நபர் சொன்ன விஷயத்தில் ஏதோ பொறி தட்ட லட்சுமனை கைபேசியிலிருந்து அழைத்தவர் “அப்புறம் லட்சுமன்.. எப்படி இருக்க..? மலர்விழிக்கு பிராக்டிஸ் எல்லாம் ஒழுங்கா போயிட்டு இருக்கா?” என்று கேட்க

ஏற்கனவே அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்று நினைத்த லட்சுமன் அவரிடம் எல்லாவற்றையும் உளறி கொட்டினான்..

“ஓ.. அப்படியா..? குட்.. நல்லா ட்ரெயினிங் கொடுத்து அவளை பெஸ்ட் ஆர்ச்சரா மாத்தணும்..” என்று அவனிடம் சொல்லிவிட்டு அமைதியாக வீட்டுக்கு வந்து விட்டார்..

அன்று வீட்டுக்கு வந்து இந்தரிடம் பேசினார் மார்க்கண்டேயன்..

“இந்தர்.. மலர் இந்த போட்டியில் கலந்துக்க கூடாதுன்னு நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன்.. இந்த வீட்டு பழக்க வழக்கம் எதுக்காகவும் யாருக்காகவும் மாறாது.. நான் சொல்றது புரியுதா?”

“அப்பா… அது வந்து.. அவ சேம்பியன்ஷிப்ல கலந்துக்கட்டும் பா.. இந்த ஒருமுறை அவ வர்ல்ட் சேம்பியன்ஷிப் வரைக்கும் போய் வின் பண்ணிட்டான்னா அதுக்கப்பறம் அவ வீட்டிலேயே ஆர்ச்சரி ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்றா பா.. ப்ளீஸ் பா.. ஏற்கனவே அபார்ஷன் ஆனப்ப நீங்க சொன்ன வார்த்தைல அவ மட்டும் இல்ல நானும் ரொம்ப காயப்பட்டிருக்கேன்பா.. இந்த சேம்பியன்ஷிப் விக்டரீஸ் அதுக்கு மருந்தா இருக்கும் பா”

“இங்க பாரு.. நான் கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டேன்.‌ இல்லன்னு சொல்லல.. நம்ம வீட்டு வாரிசு போயிருச்சேன்கிற ஆதங்கத்தில் பேசிட்டேன்.. அதுக்காக இப்ப என்ன உன் பொண்டாட்டி கால்ல விழுந்து என்னை மன்னிப்பு கேட்க சொல்றியா? இந்த வீட்டு நடைமுறையை மாத்துறது அதுக்கு சமம் தான்.. உன் பொண்டாட்டியை நீ எப்படி சமாளிப்பியோ ஏதா சமாளிப்பியோ எனக்கு தெரியாது அவ இந்த போட்டியில கலந்துக்க கூடாது.. அவ்வளவுதான்..” என்றார்..

அவனோ இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டான்.. அப்போது அவரை எதிர்த்து பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.. அந்த அமைதி தான் அவன் வாழ்வில் பெரும் துயரையே வரவழைக்கப் போகிறது என்று தெரியாமல் போனது அவனுக்கு..

ஆனால் விழிக்கு பயிற்சி கொடுப்பதை அவன் நிறுத்தவே இல்லை.. இந்த முறை அவளுக்கு முழுதாய் அவளைத் தாங்கி நின்று ஏற்றி விடும் தூணாய் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் அவன்..

அன்று சகுந்தலாவிடம் மார்க்கண்டேயர் “சக்கு.. விளையாட்டு போல மூணு மாசம் ஆயிடுச்சு மலரு நம்ம புள்ளைய விட்டு போய்.. எவ்வளவு நாள் தான் அவ அங்க அம்மா வீட்டிலேயே இருப்பா.. நீ போய் அவளை வீட்டுக்கு வர சொல்லி அழைச்சுக்கிட்டு வா.. அவ கிட்ட நான் பேசுனதெல்லாம் ஏதோ அந்த நேர கோவத்துல பேசிட்டேன்னு சொல்லி.. அதை எல்லாம் மறந்துட்டு அவளை வீட்டுக்கு வர சொல்லு..” என்றவரை ஆச்சரியமாக பார்த்தார் சகுந்தலா..

பின்னே அவ்வளவு எளிதில் இப்படி இறங்கி வருபவர் கிடையாதே அவர்..

சொன்னபடியே அன்று மாலை இந்தரோடு விழியின் வீட்டுக்கு சென்றவர் மலர்விழியை வீட்டுக்கு வர சொல்ல அவளோ தீவிரமாக முடியாது என்று மறுத்திருந்தாள்..

சகுந்தலா மார்க்கண்டேயன் சொன்னதை சொன்னது மட்டும் இல்லாமல் தன் மகனும் மருமகளும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் அவர் சொல்லாத ஒரு வார்த்தையை அவர் சொன்னதாக சேர்த்து கூறியிருந்தார்..

ஆமாம்.. மார்க்கண்டேயன் அவளிடம் ரொம்பவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக அவர் கூறவும் விழி நம்ப முடியாமல் அவரை பார்த்து இருந்தாள்..

இந்தருக்கும் அதே நிலை தான்.. அவனும் அவரைக் கேள்வியாக பார்க்க “ஆ..ஆமாண்டா அவர் சொன்னாரு… அன்னைக்கு ஏதோ கோபத்தில பேசிட்டாராம்.. அன்னிக்கு சின்ட்டூவை காப்பாத்த தான் அவ அப்படி பண்ணான்னு தெரிஞ்ச உடனேயே அவர் தான் பேசினதை நெனைச்சு ரொம்ப ஃபீல் பண்ணதா சொன்னாரு.. அந்த பொண்ணு மனசு ரொம்ப துடிச்சு போயிருக்கும்.. நான் அவகிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லி அவளை அழைச்சிட்டு வான்னு அவர் தான் சொன்னாரு..”

விழிக்கோ இன்னும் கூட அவர் சொன்னதை நம்ப முடியவில்லை.. அவள் இந்தரை கேள்வியாக பார்க்க அவனுக்கும் அவர் அப்படி சொல்லி இருப்பாரா என்று சந்தேகமாகத்தான் இருந்தது.. கண்ணை மூடி திறந்தவன் “எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று சொல்லி “எனக்காக வாடி” என்று கெஞ்சினான் அவளிடம்..

“ஆனாலும் மாமா நேர்ல வந்து இந்த மன்னிப்பை கேட்டு இருக்கலாம் அத்தை..” அவள் சொன்னதைக் கேட்ட சகுந்தலாவோ உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் எச்சில் கூட்டி விழுங்கினார்..

ஆனால் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தன் மகன் மருமகளின் வாழ்வு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சின்ன பொய் சொல்வதில் தவறு இல்லை என்று எண்ணிக் கொண்டார் அவர்.. ஆனால் அதனால் ஏற்பட போகும் விளைவு அவர்கள் வாழ்வை தலைகீழாய் திருப்பி போட போகிறது என்று தெரியவில்லை அவருக்கு..

அதற்கு மேல் மறுக்க முடியாமல் இந்தரோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மலர்விழி.. அடுத்த ஒரு வாரம் மார்க்கண்டேயன் அலுவலகத்துக்குச் சென்ற பிறகு லட்சுமன் இந்தர் வீட்டுக்கு வந்தே அவனுடைய வில்வித்தை களத்தில் மலருக்கு பயிற்சி கொடுத்தான்..

இந்தரிடம் மார்க்கண்டேயன் தன்னிடம் விசாரித்ததை பற்றியும் சொல்லி இருந்தான் அவன்..

அன்று இந்தரோடு பேசிய பிறகு மார்க்கண்டேயன் எதையும் கண்டுகொள்ளாமல் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கவே இந்தரும் அவர் விழி போட்டியில் கலந்து கொள்ளட்டும் என்று கண்டும் காணாமல் இருக்கிறாரோ என்று நினைத்துக் கொண்டான்..

ஆனால் மார்க்கண்டேயனோ வேறு மாதிரி திட்டமிட்டு கொண்டிருந்தார்..

இந்தர் அவருக்கு தெரியாமல் வில்விழிக்கு பயிற்சி கொடுத்தது அவரை பொறுத்தவரை பேரிடியாக இருந்தது.. இந்தர் தன் சொல்லை தாண்டி தனக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருந்தவர் அவன் தன்னை எதிர்த்துப் பேசியதோடு மட்டும் இன்றி தன்னை மீறி தனக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய வேலை செய்திருக்க எங்கேயோ அந்த தந்தையின் ஈகோ கொஞ்சம் அடி வாங்கியது..

அவனுக்கும் விழிக்கும் தன்னை மீறி அவர்களால் எதுவும் செய்து விட முடியாது என்று புரிய வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார் அவர்..

அதன் பலனாக விழியின் கனவை சுக்குநூறாக உடைக்கும் வேலையில் இறங்கி இருந்தார் அவர்…

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!