வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௫ (25)

5
(13)

அம்பு – ௨௰௫ (25)

மாநில அளவு தேர்வு நடப்பதற்கு முதல் நாள்..

சகுந்தலாவிடம் வந்த மார்க்கண்டேயன் “சக்கு.. மலருக்கு கர்பப்பை ஸ்ட்ராங்கா இல்லைன்னு நம்ம சக்கரவர்த்தி வைஃப் சிந்தாமணி கிட்ட நீ சொல்லி இருப்ப போல.. போன வாரம் சக்கரவர்த்தி பிசினஸ் விஷயமா என்னை பாக்க வந்தார்.. சிந்தாமணி ஏதோ கோயிலுக்கு போனாங்களாம்.. அங்க இங்க மூலிகை தீர்த்தம் கொடுத்தாங்க போல… இது குடிச்சா கர்ப்பப்பை நல்லா வலுப்படும்னு சொல்லி இருக்காங்க.. அதான் மலருக்கு வாங்கிட்டு வந்து இருப்பாங்க போல.. அவரு போன வாரமே இதை என்கிட்ட கொடுத்தாரு.. நான் தான் உன்கிட்ட கொடுக்க மறந்துட்டேன்.. நீ இன்னும் நாள் கடத்தாம மலருக்கு தூங்குறதுக்கு முன்னாடி பால்ல இதை ஒரு ஸ்பூன்  கலந்து கொடுத்துடு..”  என்று அவரிடம் ஏதோ ஒரு மருந்து குப்பியை கொடுக்க

அவரும் வெள்ளந்தியாக அதை வாங்கிக் கொண்டவர் “பரவாயில்லையே.. அவங்க கோவிலுக்கு போனப்ப கூட மலரை ஞாபகம் வச்சுக்கிட்டு வாங்கிட்டு வந்து இருக்காங்களே.. நான் உடனே சிந்தாமணிக்கு ஃபோன் பண்ணி தேங்க்ஸ் சொல்றேங்க..” என்றார்..

“இல்ல.. இப்ப எதுவும் போன் பண்ண வேண்டாம்.. அவங்க யூஎஸ்ல இருக்குற அவங்க மகனோட இருக்க போயிருக்காங்க.. டைம் சோன் செட் ஆகாது.. அதனால அவங்க வந்த அப்புறம் தேங்க்ஸ் சொல்லிக்கலாம்.. நீ இந்த மருந்தை மட்டும் கொடு..” எனவும் அவரும் “சரிங்க அவங்க இங்க வந்த உடனேவே பேசிக்கிறேன்..” என்றார்..

அன்று இரவு அதை பாலில் கலந்து அவள் அறைக்கு எடுத்துக் கொண்டு போக கிளம்பிய நேரம் இந்தர் அப்பொழுது தான் அகாடமியில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தான்..

அவனுக்கு அடுத்த நாள் போட்டி தேர்வுக்கு வித்யாவையும் தயாரிக்க வேண்டி இருந்தது.. அவளுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்கு திரும்பி இருந்தான்.. எட்டு மணி ஆகி இருந்தது..

அவர்கள் வீட்டில் தான் ஆண்கள் முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு தான் பெண்கள் சாப்பிட வேண்டும் அல்லவா? பிருத்வியும் மார்க்கண்டேயனும் ஏற்கனவே சாப்பிட்டு தங்கள் அறைக்கு சென்று விட இந்தருக்காக தான் காத்திருந்தார் சகுந்தலா..

இந்தரும் அன்று இரண்டு மூன்று மாணவர்களுக்கு அடுத்த நாள் தேர்வுக்காக பயிற்சி கொடுக்க வேண்டி இருக்க ஓய்வில்லாமல் அவர்களுக்கு தீவிரமாய் பயிற்சி கொடுத்திருந்தான்..

அவனுக்கு அது மிகுந்த களைப்பை தந்து இருக்க சகுந்தலாவிடம் “அம்மா.. இன்னைக்கு மலரும் ப்ராக்டிஸ் பண்ணிட்டு ரொம்ப டயர்டா இருப்பா.. அதனால நீங்க எனக்கும் அவளுக்கும் ரெண்டு தட்டுல சாப்பாடு போட்டு குடுங்கம்மா.. நான் ரூமுக்கு எடுத்துட்டு போய் அவளோட சாப்பிட்டுக்கறேன்.. பாவம் மா.. அவளும் ரொம்ப பசியோட இருப்பா..” என்றான்..

அவன் சொன்னதைக் கேட்டு இதழ் விரித்த சகுந்தலா “உங்க அப்பா எப்படி இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் சரியா வளர்ந்து இருக்கீங்க டா.. அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார்..

அவனுக்கு அவர் சொன்னதில் ஏதோ ஒரு ஏக்கமும் ஆதங்கமும் தெரிந்தது.. அவருக்கும் மார்க்கண்டேயரிடமிருந்து அந்த அக்கறை தேவைப்படுகிறது என்று முதல் முறையாக உணர்ந்தான் இந்தர்..

“இந்த அப்பா ஏன் தான் இப்படி இருக்காரோ.. எங்க கிட்ட ஸ்ட்ரிக்ட்டா இருக்கிறது எல்லாம் கூட ஓகே.. அம்மா கிட்ட கொஞ்சம் ஈஸியா இருக்கலாம் இல்ல..? அவங்க கிட்டயும் அதே ரூல்ஸ்.. ரொம்ப தான் பண்றாரு.. பாவம் அம்மா..”

மனதிற்குள் நினைத்துக் கொண்டானே தவிர அதை வெளியில் சகுந்தலாவிடம் சொல்லக்கூட அவனுக்கு தைரியம் இல்லை..

ஒரு தட்டில் விழிக்கும் தனக்கும் உணவு எடுத்துக் கொண்டு அறைக்கு போக திரும்ப அவனை அழைத்த சகுந்தலா “கொஞ்சம் இருப்பா.. இந்த பாலை மறக்காம மலரை குடிக்க சொல்லு.. இதுல மலரோட உடம்பு தெம்பா ஆகறதுக்கு மூலிகை மருந்து கலந்திருக்கேன்.. மறக்காம அவளுக்கு கொடுத்துடு..” என்றார்..

“நீங்க எவ்வளவு கேர் எடுத்துக்குறீங்க அம்மா எங்க மேல.. சோ ஸ்வீட் மா நீங்க..” என்று சொன்னவன் வில்விழிக்கு உணவு அடங்கிய தட்டையும் தன் உணவு தட்டையும் பால்குவளையையும் எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்..

அங்கே வில்விழியோ அறையில் ஒரு மூலையில் நின்று கொண்டு கையை தூக்கி தூக்கி ஏதோ உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள்..

அவளைப் பார்த்துக் கொண்டே போன இந்தர் “ஏய் மலரு.. என்ன பண்ணிட்டு இருக்க.. 8 மணி ஆயிடுச்சு.. இன்னும் என்ன எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்க.. ஓவர் ஸ்ட்ரெய்ன் பண்ணாதடி..” என்று கடிந்து கொள்ள

“சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் தான் பிராக்டிஸ் பண்ணேன்.. அப்புறம் மாமா வந்துட்டாரு.. அதான் கைய கால அசைச்சாவது கொஞ்சம் எக்சர்சைஸ் பண்ணலாம்னு பண்ணிட்டு இருக்கேன்.. நாளைக்கு ஒழுங்கா பண்ணனும் இல்ல..?”

“எல்லாம் சரிதான்.. அதுக்காக ஓவர் ஸ்ட்ரெய்ன் பண்ணாத.. இதை பாரு.. எவ்ளோக்கு எவ்ளோ பிராக்டீஸ் எக்ஸ்சசைஸ் இதெல்லாம் முக்கியமோ அவ்வளவுக்கு அவ்வளவு சாப்பாடு ரெஸ்ட் இதெல்லாமும் முக்கியம்.. இங்க வா.. முதல்ல இந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு பால் குடிச்சிட்டு படுத்து தூங்கு.. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க..? முதல்ல ரிலாக்ஸ் ஆகுடி..”

அவன் சொன்னதை கேட்டவள் “ரொம்ப பயமா இருக்கு இந்தர்.. நாளைக்கு செலக்ட் ஆயிடுவேன் இல்ல..? ஸ்டேட் சாம்பியன்ஷிப்க்கு செலக்ட் ஆகியே தீரணும்.. இந்த வாட்டி மிஸ் பண்ணவே கூடாது..” என்றாள் சிறிது பதட்டம் நிறைந்த குரலில்..

“அய்யய்ய நீ என்னடி இவ்ளோ டென்ஷன் ஆகுற..? சரி வா.. உக்காந்து முதல்ல சாப்பிடு..” என்று அவளை இழுத்து கட்டிலில் அமர வைத்தவன் சாப்பாட்டு தட்டை எடுத்து தன் கையாலேயே அவளுக்கு ஊட்டி விட தொடங்கினான்..

“பரவால்ல.. இந்தர்.. நீயே டயர்டா வந்து இருக்க.. நீ சாப்பிடு.. நானே சாப்பிட்டுக்குறேன்..”

சொன்னவளை முறைத்தவன் “உனக்கு ஊட்டி விட்டா எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுதுடி.. நாளைக்கு நீ வித்யா அப்புறம் இன்னும் ரெண்டு ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் செலக்சன் போறீங்க.. நானும் டென்ஷனா தான் இருக்கேன் மேடம்..”

அவன் சொன்னதை கேட்டவளின் கண்கள் லேசாய் நிறைந்து தான் போனது.. தனது தந்தையை எதிர்த்து பேசாதவன் தான்.. ஆனால் தன்னை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறானே.. தன்மீது திணற திணற காதல் மழையை பொழிகிறானே.. அவன் கொடுக்கும் காதலுக்கு முன்னால் அவன் தந்தைக்கு பயந்து அவர் முன்னே தனக்காக பேசாமல் இருப்பதையும் அவள் கடந்து விடுகிறாள் எளிதாக..

இருவரும் மாறி மாறி உணவை ஊட்டிக்கொள்ள இருவரிலும் கொஞ்சம் பதட்டம் குறைந்து இருந்தது.. உண்டு முடித்ததும் தட்டை கழுவி வைத்தவன் பால்குவளையை அவளிடம் கொடுக்க “வயிறு ரொம்ப ஃபுல்லா இருக்கு எனக்கு.. பால் வேண்டாம்..” என்றாள் சிணுங்கியபடி..

அவளை முறைத்தவன் “இங்க பாரு.. பாலை குடிச்சிட்டு படு.. இது சாதாரண பால் இல்ல.. ஸ்பெஷல் பால்.. இதை குடிச்சிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்.. நாளைக்கு தெம்பா போட்டிக்கு போகலாம்..” என்றான்..

அவளும் சிணுங்கியபடியே அந்தப் பாலை வாங்கி பாதி குடித்து முடித்து இருந்தாள்..

சட்டென நிமிர்ந்தவள் “ஆமா.. நீயும் தான் டயர்டா இருக்க.. நீயும் இந்த பால் குடிக்கலாம் இல்ல..?” என்று கேட்க

“பால் தானே..? நீ குடி.. நானும் குடிச்சுக்குவேன்..” என்றவன் அவள் அந்த குவளையில் இருந்த பாலை குடித்து முடித்ததும் அவள் இதழ் தேனோடு சேர்த்து பாலை குடிக்க ஆரம்பித்தான்..

இதழை விலக்கியதும் “யாரோ ரெஸ்ட் ரொம்ப முக்கியம்னு சொன்ன மாதிரி காதுல விழுந்துச்சு…” என்று அவள் ஓரப்பார்வை பார்த்தபடியே சொல்ல அவனோ “ரெஸ்ட் எடுக்குறதை விட ரிலாக்ஸ் ஆகுறது ரொம்ப முக்கியம் டி.. அதான் உன்னை ரிலாக்ஸ் பண்ண ட்ரை பண்ணறேன்‌‌.. இப்பதானே தொடங்கி இருக்கேன்.. உன்னை ஃபுல்லா ரிலாக்ஸ் பண்ணாம தூங்க மாட்டேன்..” என்றவன் மறுபடியும் அவள் இதழில் இளைப்பாற தொடங்கினான்..

அவளும் அவன் இதழுக்குள்ளேயே புன்னகைத்தபடி அவனோடு ஒன்றி போனாள்.. இருவரும் எப்போது உறங்கினார்கள் என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம்..

காலையில் வில்விழி கண்ணை திறக்கும் போது உடம்பெல்லாம் அடித்து போட்டார் போன்ற ஒரு வலி.. எதிரில் சகுந்தலா நின்று கொண்டு அவளை எழுப்பிக் கொண்டிருந்தார்..

“அம்மாடி மலரு… மணி 8 ஆயிருச்சு.. இந்தர் போகும்போது நீ எட்டு மணிக்கு கிளம்பி வருவேன்னு சொல்லிட்டு இருந்தானே..  நீ என்ன எட்டு மணி ஆகியும் எந்திரிக்கவே மாட்டேங்குற..?”

அப்போது சிரமப்பட்டு கண்ணை திறந்தவள் நேரத்தை பார்க்க 8 மணியை காட்டியது சுவற்றில் இருந்த அந்த காலச்சக்கரம்….

“ஐயோ கடவுளே… 8:30 மணிக்கு செலக்சன்.. 8 மணிக்கு அங்க இருக்கணும்.. நான் என்ன இப்படி தூங்கிட்டு இருந்திருக்கேன்.. காலைல 5 மணிக்கு எல்லாம் எழும்புறதுக்கு அலாரம் வச்சிருந்தனே..”

அவள் புலம்ப தொடங்க சகுந்தலாவோ “அலாரம் அடிச்சிருக்கும்மா… இந்தர் எழுந்துட்டான்.. அவன் உன்னை எழுப்பி பார்த்தப்போ நீ எழுந்துக்கிற வழியா தெரியல.. அவன் போட்டிக்கு அகாடமி கேண்டிடேட்ஸ் எல்லாம் அனுப்பணும்னு சொல்லி சீக்கிரமே கிளம்பி போயிட்டான்.. நேத்து ஓவரா எக்ஸர்சைஸ் பண்ணதுல கொஞ்சம் டயர்டா இருப்பியோன்னு நீ ஆறரை மணிக்கா எழும்பி வருவேன்னு சொன்னான்.. நான் உனக்காக காத்திருந்தேன்.. ஆனா நீ வர்ற வழியா காணோம்..  இந்தர் ஏழரை மணிக்கு ஃபோன் பண்ணி நீ வீட்லருந்து கெளம்பிட்டியான்னு கேட்டான்.. நான் இன்னும் நீ எழுந்தே வரலைன்னு சொன்னப்போ ரொம்ப கோவப்பட்டான்.. போய் சீக்கிரம் அவளை எழுப்பி அனுப்புமான்னு சொன்னான்.. ஏழரை மணிலருந்து அரை மணி நேரமா உன்னை எழுப்பிட்டு இருக்கேன்.. என்னம்மா ஆச்சு? எனக்கு ஒரு செகண்ட் உனக்கு தூக்கமா மயக்கமான்னு சந்தேகமே வந்துருச்சு.. இந்தருக்கு ஃபோன் பண்ணி வர சொல்லலாமான்னு கூட யோசிச்சேன்..”

அவர் சொன்னதை கேட்டவளுக்கு தலை சுற்றியது.. தலைவலி வேறு பின்னி எடுத்தது..

“இப்ப எதுவும் பேச டைம் இல்ல அத்தை.. நான் உடனே கிளம்பி போறேன்..”

வேக வேகமாக எழுந்து குளித்து உடுத்தி அவசரமாய் தேர்வு நடக்கும் இடத்திற்கு கிளம்பிச் சென்றாள்.. அவள் அந்த வீட்டு வரவேற்பறையை கடக்கும்போது பதட்டமாய் வெளியே ஓடிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்த மார்க்கண்டேயர் ஒரு வில்லத்தனமான சிரிப்பு சிரித்தபடி தான் நினைத்ததை சாதித்து விட்ட திருப்தியில் இருந்தார்..

இந்தரை தன் கைபேசியில் இருந்து அழைத்து அழைத்துப் பார்த்தவள் அவன் அவள் அழைப்பை ஏற்காமல் இருக்கவும் இன்னும் பதட்டம் அடைந்தாள்..

“ஒருவேளை தூங்கிட்டேன்னு கோவமா இருக்கானோ.. அங்க செலக்சன் முடிஞ்சிடுச்சோ.. என்னை வச்சு செய்ய போறான்..”

அவள் புலம்பிய படி ஒரு வழியாக தேர்வு நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்..  நேராக உள்ளே இந்தர் இருந்த இடத்திற்கு சென்று “இந்தர்..” என்று அழைத்த நேரம் அவளை தீவிரமாய் முறைத்தவன்

“எவ்வளவு தூரம் சொன்னேன்.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதன்னு.. உன்னால எந்திரிக்க கூட முடியல.. செலக்சன் எல்லாம் முடிஞ்சு போச்சு.. நீ இப்படின்னா அந்த வித்யாவும் வரவே இல்லை.. எல்லாம் என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க? அவளுக்கு ஃபோன் அடிச்சு அடிச்சு பார்க்கிறேன்.. ஃபோனை கூட எடுக்க மாட்டேங்கறா.. கட் பண்றா என் ஃபோனை..”

வெறுத்து போனான் அவன்.. முன்னாள் வரை மிகவும் சிரமப்பட்டு அவளுக்கு பயிற்சி கொடுத்திருந்தான்… லக்ஷ்மனை வில்விழிக்கு என்னவெல்லாம் பயிற்சி கொடுக்க சொன்னானோ அவளுக்கும் அதே முறையில் பயிற்சி கொடுத்து இருந்தான்… இருவரும்  தேர்வுக்கு வரவே இல்லை… அவனுக்கு கோவம் கோவமாய் வந்தது… ஆனால் அதைக் காட்ட அந்த பெண் அங்கு இல்லாமல் போகவும் அவள் மேலிருந்த கோபத்தையும் சேர்த்து வில்விழியின் மேல் காட்டி இருந்தான்..

அவள் கண்கள் கலங்கி இருப்பதை கூட கவனிக்காமல் “ஏய் மலரு.. நீ எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற? நீதான் எத பத்தியும் கவலை இல்லாம ஜாலியா தூங்கிட்டு நிதானமா ஆடி அசைஞ்சுட்டு வர்ற இல்ல? பேச்சு தான் பெருசா இருந்துச்சு.. ஸ்டேட் லெவல் நேஷனல் லெவல் வேர்ல்டு லெவல்னு.. நீ நல்லா தூங்கி எழுந்து நிதானமா ஆடி அசைஞ்சுட்டு வர வரைக்கும் உனக்காக இங்க செலக்சன் கமிட்டில எல்லாரும் காத்துட்டு இருப்பாங்கன்னு நெனச்சியா? இப்படி அழுதுகிட்டு நிக்காம பேசாம இங்கிருந்து போயிரு.. உன்னை பாக்கவே எரிச்சலா இருக்கு.. இந்த வித்யா வேற  ஃபோனை எடுக்க மாட்டேங்குறா.. எல்லாருக்கும் திமிர் ஆயிடுச்சு.. போய் எங்க அப்பா சொன்ன மாதிரி வீட்டிலேயே இருந்து எங்க அம்மாக்கு சமைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணிட்டிரு.. கிளம்பி போ.. இங்க எதுக்கு நிக்கிற? யூஸ்லெஸ் கிரீச்சர்ஸ்..”

எரிந்து விழுந்தான் அவன்… கண்களில் திரண்டு இருந்த நீரை உள்ளிழுத்துக் கொண்டவள் அப்படியே திரும்பி வீடு வந்து சேர்ந்திருந்தாள்..

தான் ஏன் இவ்வளவு நேரம் தூங்கினோம் என்று மறுபடி மறுபடி யோசித்து யோசித்துப் பார்த்தவளுக்கு தலை வலி தான் மிஞ்சியது..

சிறிது நேரம் சின்ட்டுவோடு சென்று விளையாடி விட்டு வந்தவள் பிறகு ஆற அமர உக்காந்து யோசிக்க ஆரம்பிக்கும் போது தான் அவளுக்கு முன்னாள் இரவு தான் பாலை குடித்த பிறகு வெகு நேரம் விழித்திருக்க முடியாமல் உறங்கியது நினைவுக்கு வந்தது..

இந்தர் அவளுக்கு முத்த மழையாய் பொழிந்து எதற்கோ அடி போட அவனிடம் தனக்கு தூக்கத்தில் கண்ணை சுழட்டுகிறது என்று சொல்லி உறங்கியது நினைவுக்கு வந்தது..

“அந்தப் பாலை குடிச்ச அப்பறந்தான் நான் நல்லா தூங்கிட்டேன்.. அந்த பால்ல தான் ஏதோ இருந்திருக்கு..”

இப்படி யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு இந்தர் கார் வீட்டுக்குள்ளே நுழையும் சத்தம் கேட்கவும் வேகமாக இறங்கி ஓடினாள்..

வரவேற்பறையில் இந்தர் நுழைய அங்கு அமர்ந்திருந்த மார்க்கண்டேயனோ “டேய் இந்திரா.. வாடா.. சொன்ன மாதிரியே மலர் போட்டியில கலந்துக்கல போல.. நீ அவளுக்கு ட்ரெய்னிங் கொடுக்கிறேன்ன உடனே இந்த வீட்டு பழக்கவழக்கத்தை மீறி அவளை போக வச்சிடுவியோன்னு கவலைப்பட்டேன்… பரவாயில்லை.. நான் அவ போட்டியில கலந்துக்க கூடாதுன்னு சொன்னப்போ நீ அமைதியா இருந்தியா? எங்க என்னை ஏமாத்திருவியோன்னு நெனச்சேன்.. என்ன நடந்துச்சோ.. அவ போட்டிக்கு போகல.. இனிமே இந்த வீட்டோட மருமகளா அவ ஒழுங்கா நடந்துப்பா.. நீ என் பையன்னு நிருபிச்சுட்டடா..”

இந்தருக்கு முதல் முறையாக அவர் பேசியது மிகுந்த எரிச்சலை தந்தது.. அவனே வித்யாவும் மலர்விழியும் அந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லையே என்ற விரக்தியில் வீட்டுக்குள் நுழைந்திருக்க அவர் இப்படி சொல்லவும்

“ஆமாம் பா… நீங்க நினைச்ச மாதிரி தான் எல்லாம் நடக்குது.. கடவுள் எப்பவுமே உங்க பக்கம் தான் இருக்கிறார்..” என்று எரிச்சலோடு சொன்னவன் வேக வேகமாய் அவன் அறைக்கு போக படி ஏற  வழியில் நின்று கொண்டிருந்த மலரை முறைத்து விட்டு தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான்..

அவனைப் பின்தொடர்ந்த விழி அவன் நேரே குளியலறைக்கு குளிக்க செல்ல எத்தனிக்க அவன் கையைப் பிடித்து தன் புறம் திருப்பியவள் “நில்லு.. முதல்ல நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ..”

“என்னடி கேக்கணும்? எல்லாத்தையும் சொதப்பிட்டு கேள்வி கேட்க போறியா?”

அவனும் பதிலுக்கு பேச “ஆமா.. உங்க அப்பா சொன்ன மாதிரியே என்னை வீட்டோட வைக்கணுங்குறதுக்காக நேத்து ராத்திரி அந்த பால்ல எதையோ கலந்து கொடுத்து என்னை தூங்க வச்சுட்ட இல்ல..? நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்ல… உன் அப்பா கிட்ட அவ்ளோ பயம் இருந்தா என்னை ஏன் கட்டிக்கிட்ட.. நான் உன்னை என் லைஃப்ல பார்த்திருக்கவே கூடாது..”

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. “என்னது பாலை கொடுத்து தூங்க வெச்சனா.. என்னடி உளர்ற..?”

“அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத.. உன் அப்பா நான் போட்டிக்கு போக கூடாதுன்னு சொன்னப்போ நீ அமைதியா இருந்து இருக்க.. நேத்து நைட் அந்தப் பாலை நான் குடிக்க மாட்டேன்னு சொன்னப்போ அது ஸ்பெஷல் பாலுன்னு சொல்லி என்னை ஃபோர்ஸ் பண்ணி குடிக்க வச்ச.. அதை குடிச்ச அப்புறம் தான் எனக்கு தூக்கம் தூக்கமா வந்துச்சு..”

அவள் சொன்னதை கேட்ட இந்தரோ அதிர்ந்து போனான்.. அந்தப் பாலில் ஏதாவது கலந்திருக்குமோ? தூக்க மருந்து கலந்திருக்குமோ? அவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்க அவன் யோசித்ததையும் அவள் தவறாக புரிந்து கொண்டாள்..

“என்ன.. பதில் எதுவும் சொல்லாம திருதிருன்னு முழிக்கிற? உன் குட்டு உடைஞ்சிடுச்சேன்னு கவலையா இருக்கா? என்னோட கனவை எல்லாம் இப்படி உடைச்சிட்டியே.. உங்க அப்பாவுக்காக என்னை ஏமாத்திட்ட இல்ல..?”

அவள் குரல் உடைந்து இருந்ததே தவிர அவள் அழவில்லை.. கோவமாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள்.. அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் சண்டைக்கோழியாய்..

அவனுக்கும் ஏதோ புரிந்தார் போல இருக்கவும் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விழித்தான்..

“என்ன முழிக்கிற? நீ பண்ணது சரியா? உன் காதலால என்னை இப்படி வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்கியே.. இது கரெக்டா? இப்படி உன் காதலை வச்சு என்னை ஏமாத்தி இருக்கியே.. உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..?”

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவன் அமைதியாக இருக்க அவளுக்கு மேலும் மேலும் அந்த அமைதி அவனை குற்றவாளியாய் காட்டியது..

அவனோ உண்மை என்னவென்று தெரியாமல் அவசரப்பட்டு தன் சந்தேகத்தை அவளிடம் சொல்லி ஏற்கனவே தன் தந்தையின் மேல் இருக்கும் அவளுடைய அதிருப்தியை கோபமாக வளர்க்க விரும்பாமல் அமைதியாக இருந்தான்.. அதுவே அவனுக்கு பாதகமாக போனது..

“அது சரி.. உனக்கு நான் அந்த போட்டியில கலந்துக்கிட்டா என்ன? கலந்துக்கலன்னா என்ன? அதான் உன் ஃபேவரிட் ஸ்டூடன்ட் வித்யா இருந்தால்ல? ஆனா கடவுள் இருக்காரு குமாரு.. அதனாலதான் என்னை நீ முடக்கி வச்சதுக்காக அந்த வித்யாவை வர விடாமே பண்ணிட்டாரு.. அவ உனக்கு வெச்சா இல்ல ஆப்பு..?” எரிச்சலில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் படபடவென பொரிந்தாள் அவள்..

ஏற்கனவே வித்யா வராத கடுப்பில் இருந்தவன் “மலரு வாயை மூடு… நான் ஏற்கனவே அந்த விஷயத்தில ரொம்ப டிஸ்ட்டர்ப்டா இருக்கேன்.. மேல மேல அதை பத்தி பேசாத.. எனக்கு புரியுது.. உன்னால போட்டி அட்டென்ட் பண்ண முடியாதது பெரிய கஷ்டம்தான்.. அதுக்காக கோபத்தை காட்டுறேன்னு என்னை நோகடிக்காதடி.. நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன்…” என்றான்.. அவன் குரலில் சுருதி குறைந்து இருந்தது.

“அதானே.. உனக்கு உன் கஷ்டம் தான் முக்கியம்.. நான் எப்படி இருந்தா உனக்கு என்ன அப்படித்தானே..? உன்னை பொறுத்த வரைக்கும் உங்க அப்பாவும் இந்த வீட்ல வச்சிருக்கிற ரூல்ஸூம் மட்டும்தான் முக்கியம்.. இதோ இப்பவே போய் கேக்குறேன்.. அவருக்கு இப்ப சந்தோஷமான்னு..” என்று வெளியே கிளம்பி போனவளை கை பிடித்து இழுத்து

“இப்ப அவர் கிட்ட போய் எதுவும் மரியாதை இல்லாம பேசாத.. நீ கோவத்தில இருக்க.. ஏதாவது தாறுமாறா பேசினா அவ்வளவுதான்..” என்று அவளை இழுத்து நிறுத்த

அவளோ “இல்ல நான் கேட்க தான் போறேன்.. அவருக்கு இதுல என்ன கிடைக்குதுன்னு எனக்கு கேட்டு தான் ஆகணும்..” என்று மறுபடியும் வெளியே போக எத்தனித்தவளை பிடித்து இழுத்து ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து இருந்தான் இந்தர்..

“சொல்லிக்கிட்டே இருக்கேன் இல்லடி.. பெரியவங்கங்கற மரியாதை இல்லையா? உன் இஷ்டத்துக்கு பேசுவியா? பேசாம இங்கேயே இரு.. வெளிய கால எடுத்து வச்சா கொன்னுடுவேன்..” என்றானே பார்க்கலாம்.. அவனை நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அவள்…

அவனும் என்ன நடந்தது என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தான்.. தன்னைத் தானே ஆசுவாசப்படுத்தி கொண்டவன் “ஐ அம் சாரி டி..” என்று அவள் அருகில் வந்து அவள் கன்னத்தை தாங்கி சமாதானப்படுத்த முயல

அவளோ அவன் மார்பில் கை வைத்து தன்னை விட்டு அவனை விலக்கி தள்ளியவள் அவன் மார்பில் சரமாரியாக அடித்து “விடுடா என்னை.. நீ என்னை ஏமாத்திட்ட போடா… எல்லாமே பொய்.. என் கனவை உன் கனவா நீ நினைச்சிருந்தேனா இப்படி பண்ணி இருப்பியா? இப்படி எனக்கு துரோகம் பண்ணிட்ட இல்ல?” என்று அவனை அடித்தபடியே இருந்தாள்

அவனோ அமைதியாக அவள் அடிகளை வாங்கிக் கொண்டான்..

அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அவனை ஆற்றாமையோடு பார்த்திருந்தாள் வில்விழி..

“உன் கோவம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சா? அடிச்சு முடிச்சிட்டியா? ஒக்காரு..” என்று அந்த கட்டிலில் அவளை அமர வைத்து “கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகு.. கொஞ்சம் நிதானமா உக்காந்து யோசி.. என்னையும் யோசிக்க விடு… நான் பண்ணலடி.. அந்த பால்ல நான் உனக்கு எதுவும் கலந்து கொடுக்கல.. சொன்னா கேளுடி.. இங்க பாரு.. நான் இந்த ரூம் கதவை சாத்தி கிட்டு போறேன்.. அமைதியா உட்கார்ந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆனப்புறம் இதை நம்ம பேசிக்கலாம்..” என்றவன் நேராக தன் அன்னையை தேடிச் சென்றான்..

அம்மா என்றழைத்தவனை திரும்பிப் பார்த்த சகுந்தலா “என்னடா.. பாவம் அந்த பொண்ணு கலங்கி போய் வந்திருந்தாளே.. அவ ஏன்டா அவ்வளவு நேரம் தூங்குனா?”

“அவ ஏன் அவ்வளவு நேரம் தூங்கினான்னு உங்களுக்கும் தெரியலையா அம்மா..?”

“இல்லையேடா.. நேத்து ஃபுல்லா ப்ராக்டிஸ் பண்ணதனால டயர்ட்ல தூங்கி இருப்பா..”

சகுந்தலா கேட்ட கேள்வியை வைத்தே அவருக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று புரிந்து போனது இந்தருக்கு..

“அம்மா நேத்து அந்தப் பால்ல எதோ கலந்து கொடுத்தேன்னு சொன்ன இல்ல..?”

“ஆமா.. மூலிகை மருந்து… அது.. உங்க அப்பா தான் கொண்டு வந்து கொடுத்தாரு.. அதை கலந்து கொடுத்தா மலரோட கர்ப்பப்பை வலுப்படும்னு சொல்லி சக்கரவர்த்தி ஏதோ கோவில்லருந்து வாங்கிட்டு வந்து கொடுத்ததா சொல்லி கொடுத்தாரு.‌ அதைத்தான் நான் அந்த பால்ல கலந்து உன் கிட்ட கொடுத்தேன்..”

“என்ன.. அப்பா கொடுத்தாரா?” என்று கண்களை இறுக்க மூடி ஒரு பெருமூச்சை விட்டவன்  “நேத்தே நீ இதை என்கிட்ட சொல்லி இருக்கலாமேம்மா.. நான் அந்த பாலை அவளுக்கு கொடுத்து இருக்கவே மாட்டேன்.. ஏன்மா..” என்று சலித்து கொண்டே திரும்ப அங்கே படியில் நின்ற படி அவன் பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் வில்விழி..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!