“ஏன்டா எவனாவது பணம் கொடுத்தா ஒரு வயசு பொண்ணை நாலு ஆம்பளைங்க கிட்ட கொண்டு விட்ருவியா? நீ எல்லாம் மனுஷனாடா? என்று சரமாரியாக அவனை அடித்து துவைத்தான் இந்தர்..
“டேய் விஷ்வா.. நேரடியா மோத தைரியம் இல்லாம இப்படி ஒரு கேவலமான வேலையை பண்ணி இருக்கியே.. உன்னை சும்மா விட மாட்டேன் டா.. மலர் இவனை கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுட்டு வரேன்.. நீ வித்யாவை கூட்டிட்டு வா..” என்றவன் ஆட்டோக்காரர் பக்கம் திரும்பி “டேய் இப்ப என்கிட்ட சொன்னது அத்தனையும் ஒரு வார்த்தை மாறாம அங்க போலீஸ் ஸ்டேஷன்ல வந்து நீ சொல்ற.. மாத்தி ஏதாவது பேசுன கத்தி எடுத்து அப்படியே சொருகிடுவேன் டா”..
அவனும் பயந்து போய் “இல்ல சார்.. சொல்லிடுறேன் சார்.. நான் அப்ரூவரா மாறிடுறேன் சார்..” என்றவன் இந்தரோடு காவல் நிலையத்திற்கு சென்றான்.. சொன்னது போலவே அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் இந்தரிடம் சொன்னதை அப்படியே சொன்னவன் அங்கிருந்த சிறைக்குள் அடைக்கப்பட அடுத்ததாக அந்த இன்ஸ்பெக்டர் “ஒரு பொண்ணுக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கு.. இதை சும்மா விடமாட்டோம்.. அந்த பொண்ணை ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க சொல்லுங்க சார்.. நான் உடனே ஆக்சன் எடுக்கிறேன்..” என்றார் அந்த இன்ஸ்பெக்டர்..
அவருக்கும் வித்யாவின் வயதில் ஒரு மகள் இருந்தாள்.. அவருக்கும் அந்த கயவர்களை நினைத்து ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.. வித்யா புகார் எழுதிக் கொடுத்தது தான் தாமதம்.. உடனேவே கிளம்பி விஷ்வாவையும் அவனுடன் இருந்த அவன் நண்பர்களையும் கைது செய்ய அரை மணி நேரத்தில் வாரண்டோடு புறப்பட்டார் அந்த இன்ஸ்பெக்டர்..
விஷ்வாவும் அவன் நான்கு நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள்.. விஷ்வா இந்தரை உறுமிய படி பார்த்துக் கொண்டிருக்க இந்தரோ. “என்னடா லுக்கு? நீ செஞ்ச வேலைக்கு உன்னை கண்ட துண்டமா வெட்டி போட்டு இருக்கணும்.. அகடமியை ஒழுங்கா திறமையா நடத்தி என்னை ஜெயிக்க முடியாம இப்படி ஒரு கீழ்த்தரமான குறுக்கு வழியில எங்களை ஜெயிக்கணும்னு நினைக்கிறியே சீ.. வெக்கமா இல்ல உனக்கு..?”
அந்த இன்ஸ்பெக்டரோ “செய்யறது எல்லாம் செஞ்சுட்டு பேச வேற செய்றியா? உள்ள வந்தேன்னா ஒரு எலும்பு கூட முழுசா இருக்காது.. பேசாம போய் உட்காருடா..” என்றார் அவனை..
ஊர்மிளாவோ நேராக அவன் இருந்த சிறைக்குச் சென்று அவன் சட்டையை பிடித்து “உனக்கு என்ன தைரியம் இருந்தா ஒரு பொண்ணு வாழ்க்கையை இப்படி கெடுத்து இருப்பே.. நீ எல்லாம் ஒரு மனுஷனா? உன்னலாம் அப்படியே கூட்டிட்டு வந்தது தப்பு டா.. உன்னைல்லாம் செருப்பால அடிச்சு கூட்டிட்டு வந்திருக்கணும்..” என்றவள் தன் செருப்பை கழட்டி அவனை ஓங்கி அடித்திருந்தாள்..
அந்த இன்ஸ்பெக்டர் அங்கு வந்து அவளை பிடித்து தடுத்து “மிஸ்டர் இந்தர்.. போலீஸ் ஸ்டேஷன்ல இப்படி எல்லாம் நடந்துக்க கூடாது.. என்ன இருந்தாலும் இவங்க குற்றவாளியை ஹேண்டில் பண்றது ரொம்ப தப்பு.. நீங்க அவங்கள கூட்டிட்டு போங்க..” என்று சொல்ல
அவளோ அவனை ஆத்திரம் பொங்க பார்த்துக் கொண்டே இந்தரோடு இழுபட்டு செல்ல விஷ்வாவோ ஒரு உறுமலோடு சிறை கம்பியை இறுகப்பற்றிய படி அவளை தான் எரிப்பது போல் பார்த்திருந்தான்….
அதன் பிறகு அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் நாளும் வந்தது.. வித்யாவை நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி சொல்ல வேண்டும் என்று சொல்லி இருக்க அன்று முழுவதும் அரை நாள் காத்திருந்தும் அவள் வராமலேயே போனாள்..
இந்தரும் வில்விழியும் எவ்வளவோ முறை அழைத்துப் பார்த்தும் அவள் அவர்கள் அழைப்பை ஏற்கவே இல்லை..
அதன் பிறகு எதுவும் செய்ய முடியாமல் அவர்களும் அந்த விஷயத்தை சில நாட்களுக்கு அப்படியே விட்டிருந்தார்கள்..
அடுத்த நாள் விழி அகடமிக்கு கிளம்ப அவளை பார்த்த மார்க்கண்டேயனோ “ஏ சக்கு.. நான்தான் போட்டி விளையாட்டெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன் இல்ல..? மறுபடியும் மறுபடியும் அகாடமிக்கு போனா என்ன அர்த்தம்..? அன்னிக்கு ஏதோ ஊர்மிளா போகணும்னு சொன்னதுனால சும்மா போயிட்டு வரட்டும்னு இருந்தேன்.. இனிமே அகாடமி எல்லாம் வேணாம்.. உன் மருமகளை ஒழுங்கா வீட்டை பார்க்க சொல்லு..” என்றார்..
இந்தர் அவரை முறைத்து பார்த்திருக்க சகுந்தலா “என்னங்க..” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க விழி அவர் பேச்சை நிறுத்தியவள் “சரி மாமா.. இனிமே நான் இந்த வீட்டிலேயே இருக்கேன்.. வீட்டு வேலை எல்லாம் பார்த்துக்கிறேன்.. நான் எங்கேயும் வெளியே போக மாட்டேன்..” சொல்லிவிட்டு அவள் தன் அறைக்கு சென்று விட இந்தரோ புருவம் சுருக்கி போகும் அவளையே பார்த்திருந்தான்..
அவனுக்கு அவள் நடவடிக்கை ஏதோ சந்தேகத்தை கிளப்பி விட்டது.. அறைக்கு சென்று அவளிடம் “என்ன அப்பாகிட்ட அப்படி சொல்லிட்டு வந்துட்ட.. நீ ப்ராக்டிஸ் வரப் போறது இல்லையா?” என்று கேட்க “எப்படியும் உங்க அப்பா இன்னும் ரெண்டு வாட்டி அழுத்தி சொன்னா நீங்க அமைதியா தான் இருக்க போறீங்க.. அவ்வளவு எனர்ஜியை அனாவசியமா அவர் எதுக்கு வேஸ்ட் பண்ணனும்..? அதான் முதல் தடவை சொல்லும்போதே ஓகே சொல்லிட்டேன்.. நீங்க நிம்மதியா அகாடமிக்கு போங்க.. நான் பாத்துக்குறேன்…”
அவனிடம் இப்படி சொன்னவள் அடுத்த நொடியில் இருந்து ஏதோ தேடலில் இறங்கி இருந்தாள்… அப்படித்தான் சம்யுக்த்தாவை பற்றி அறிந்து கொண்டு அவர் ஆஸ்திரேலியாவில் தன் அகாடமி தொடங்கி இருப்பதால் அதில் கோச்சாக இருக்க தேர்ந்த ஆர்ச்சர்கள் தேவை என்று விளம்பரப்படுத்தி இருந்ததையும் பார்த்தாள்…
அவர் அப்போது அந்த ஊருக்கு வந்திருப்பதையும் அறிந்து கொண்டாள்.. இரண்டு மாதங்களில் அவர் திரும்பி போய் விடுவார் என்பதை அறிந்து கொண்டு அவருக்கு அழைத்து தன்னிலை சொல்லிட அவர் “உடனே என்னோட ஆஸ்ட்ரேலியா வர்றியா..? நான் உன்னை கூட்டிட்டு போய் வேர்ல்ட் சாம்பியன் ஆக்குறேன்..” என்றார்..
“மேடம் அது..”
“இங்க பாரு.. உன்னை பெர்மனென்ட்டா அங்க வான்னு சொல்லல.. உன் கனவுகளை நிறைவேத்திக்கிட்டு திரும்பி உன் குடும்பத்தோட வந்து சேர்ந்துடு.. ஆனா நீ அந்த குடும்பத்தில் இருந்தா இந்த ஜென்மத்துல உன் கனவுகளை அடைய முடியாது.. நீ வெளியே வந்தா தான் உன்னால உன் கனவுகளை அடைய முடியும்.. இன்னும் உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன்.. அதுக்குள்ள உன் முடிவை சொல்லு.. அப்புறம் விசா வேலைகள் எல்லாம் பாக்கணும்..”
அவர் சொன்னதை கேட்டவளுக்கு அதற்கு மேல் யோசிக்க தோன்றவில்லை.. இதுதான் தன் கனவை அடைய சிறந்த வழி என்று உணர்ந்தவள் உடனேயே “நான் உங்களோட வரேன் மேடம்.. நான் பாஸ்போர்ட் எல்லாம் ரெடி பண்ணி எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு ஆஸ்திரேலியா செல்வதற்கான வேலைகளில் இறங்கினாள்..
இந்தருக்கு தெரியாமல் அந்த வேலைகளை முழுமூச்சில் செய்தவள் அவன் வீட்டிலிருந்த போது அவனோடு அந்த இரு மாதங்களில் தன் காதலை கொண்டாடவும் தவறவில்லை..
ஆஸ்திரேலியா கிளம்புவதற்கு முதல் நாள் இரவு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சம்யுக்தா வீட்டுக்கு சென்று அடுத்த நாள் ஆஸ்திரேலியாவுக்கும் பறந்து இருந்தாள் வில்விழி..
சம்யுக்தா தான் அவள் பெயரை வில்விழி என்று மாற்றி அந்த பெயரிலேயே அவளை போட்டியில் கலந்து கொள்ள வைத்தார்.. இதனிடையே அவள் கருவற்றிருப்பதையும் அறிய ம்யுக்தாவின் தீவிர கவனிப்பில் பயிற்சியினூடே பிள்ளையையும் பெற்றெடுத்து உலக சாம்பியன் ஆகி திரும்பி இருந்தாள் வில்விழியாய் மாறி இருந்த மலர்விழி..
இன்று தன்னவன் மார்பை மீண்டும் சேர்ந்திருந்தாள் சிங்கப் பெண் அவள்..
அவள் சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் ஏனோ அவளை எங்கோ பார்த்தது போலவே தோன்றும்.. எங்கே என்று யோசித்து யோசித்து குழம்பியது தான் மிச்சம்.. அவளுக்கு அவளை எங்கே பார்த்திருக்கிறோம் என்று தெரியவே இல்லை.. ஒரு வேளை சிறு வயதில் எங்காவது சந்தித்திருப்போமோ என்று நினைத்தாள் அவள்..
இந்த பழைய நினைவுகளிலேயே இந்தரை வில்விழி கட்டி அணைத்து படுத்திருக்க அவர்கள் உறங்கும் போது அந்த நாள் உறங்கி அடுத்த நாளின் விடியலுக்கு வழி விட்டு இருந்தது..
காலையில் வில்விழி இந்தர் மான்விழி சின்ட்டூ சக்தி ஐவரும் தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.. மனமே இல்லாமல் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள் பரிமேலழகரும் வாசுகியும்..
சிண்ட்டூவும் சக்தியும் வந்த உடனேயே ஷாம் கர்ணாவிடம் ஓடி அவனை தொட்டு தடவி விளையாட தொடங்கி இருந்தார்கள்..
பிருத்விக்கோ மான்விழியை கண்டதுமே இன்ப அதிர்ச்சியில் விழிகள் விரிந்து கொண்டன.. உள்ளிருந்து வேகமாய் வந்து அவள் கைப்பிடித்து தன்னோடு அழைத்துப் போயிருந்தான் அவன்.. வெளியே நின்று கொண்டிருந்த யாரைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை..
அவனோ “ஏய் மானு எதுக்குடி அழற.. அழாதடி.. எனக்கு கஷ்டமா இருக்கு.. முதல்ல நீ அழறதை நிறுத்து.. அதான் நீ வந்துட்ட இல்ல.. இனிமே எனக்கு ஒரு பிராப்ளமும் இல்ல.. என்னை பாருடி..”
அவள் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தவன் “அழாதமா ஏன்டா..” என்று அவன் கேட்க “சாரிங்க உங்களை எவ்வளவு படுத்துறேன்னு எனக்கு தெரியும்… நீங்க என் மேல ரொம்ப கேர் எடுத்துக்குறீங்க… எனக்காக அவ்வளவு கவலைப்படுறீங்க.. ஆனா நான் தான் உங்களை ரொம்ப படுத்தறேன்.. அம்மா வீட்ல இருந்தப்போ மாமா கிட்ட சண்டை போட்டுட்டு நீங்க அங்க வந்தப்போ கூட மாமாவோட சண்டை போடக்கூடாதுன்னு சொல்லி உங்களை திருப்பி அனுப்பி விட்டேன்.. என்னால உங்களுக்கும் மாமாக்கும் நடுவுல எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு தான் அப்படி செஞ்சேன்.. ஆனா என்னை விட்டு சின்ட்டூவை விட்டு இருந்தது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்னு எனக்கு தெரியும்… மலர் சொன்னா.. நீங்க சக்தியை தூக்கும்போதும் விளையாடும் போதும் சின்ட்டூவை ரொம்ப மிஸ் பண்ணது உங்க கண்ணுல தெரிஞ்சுதுன்னு.. ரொம்ப சாரிங்க..”
“பரவால்லடி நடந்ததெல்லாம் மறந்திடு… இப்பதான் நீ என்னோட வந்து சேர்ந்துட்ட இல்ல.. இப்பவும் இப்படி அழுகாச்சி காவியம் பாடிட்டு இருக்காத.. சந்தோஷமா இருக்க வேண்டிய டைம் இது.. இப்படி அழுதுகிட்டே இருந்தா நானும் அழுதுகிட்டே தான் இருக்கணும்.. இத்தனை நாள் உன்னை விட்டு பிரிஞ்சு இருந்து அழுததெல்லாம் போதாதா? இப்போவும் நான் வலியோட தான் இருக்கணும்னு நினைக்கிறியா?”
அவன் அப்படி சொன்னதும் தன் கண்களை வேக வேகமாக துடைத்துக் கொண்டவள் “இல்லை.. நான் இனிமே அழ மாட்டேன்.. ஆனா இன்னொரு சாரி கேட்கணும்.. எனக்காக இத்தனை வருஷமா உங்க கூடவே வளர்ந்த ஷ்யாம் கர்ணாவை விட்டுட்டு வர சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு மலர் சொன்னப்ப தான் எனக்கு புரிஞ்சது… எனக்கு இருக்கிற பயத்துக்காக உங்களுக்கு வலியை கொடுக்கிறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.. நான் எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி இருக்க ட்ரை பண்றேன்.. முன்னபின்ன நடந்துக்கிட்டேன்னா நீங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..”
“நீ என் கூடவே இருந்தா நான் எவ்வளவு வேணாலும் அட்ஜஸ்ட் பண்றதுக்கு ரெடி தான்.. அந்த கவுன்சிலிங்னால உனக்கு நிறைய இம்ப்ரூவ்மென்ட் ஆயிருக்குல.. அதை இன்னும் நல்லா கண்டினியூ பண்ணா நிச்சயமா உனக்கு இந்த பயம் சுத்தமா காணாம போயிரும்.. நிச்சயமா ஒரு நாள் ஷ்யாம்கர்ணா மேல ஏறி உக்காந்து நீ ரைட் பண்ணுவ.. நான் அதை பார்ப்பேன்…”
அவன் நம்பிக்கையோடு சொன்னதை கேட்டவள் “ரைட் பண்ணுவேனான்னு தெரியல.. ஆனா நீங்க பேசுறது கேட்டா எனக்கு அந்த நம்பிக்கை வருது..” என்றவள் கட்டிலை பார்க்க அங்கே அவளின் புடவை ஒன்று தாறுமாறாக கிடந்தது..
“இது என்ன.. என் புடவை இங்கே இருக்கு..? நான் பீரோல தானே வச்சுட்டு போனேன்.. அது எப்படி இங்க வந்துச்சு…?”
“பின்ன.. நான் என்னடி பண்ணுவேன்டி..? நீ என்னை விட்டுட்டு போயிட்ட.. சரி நான் அங்க நைட் வந்து தங்கலாம்னு பார்த்தா அதுக்கும் எங்க அப்பாக்கு இஷ்டம் இல்லாம வரக்கூடாதுன்னு சொல்லிட்டே.. என்னதான் பண்ணுவேன்.. உன்னை விட்டு பிரிஞ்சி இருக்க முடியல.. அதான் உன் புடவையை எடுத்து நெஞ்சோட அணைச்சுக்கிட்டு நைட்டு முழுக்க தூங்குறதுக்கு ட்ரை பண்ணுவேன்.. ஆனா தூக்கம் வரல டி.. விடிய காலைல தான் தூக்கம் வரும்.. அப்புறமா ஏதேதோ கனவு வரும்.. கனவு முழுக்க நீ தான்டி இருப்ப..” அவள் நெற்றியோடு நெற்றி முட்டி சொன்னவனை விழிகள் கலங்க பார்த்தாள் அவள்…
“நான் ரொம்ப கொடுமைக்காரி.. உங்களை ரொம்ப கொடுமை படுத்திட்டேன்.. இனிமே இந்த புடவைக்கலாம் இந்த கட்டில்ல வேலையே கிடையாது.. இப்பதான் நான் வந்துட்டேன் இல்ல.. இனிமே என்னை மட்டும்தான் நீங்க கட்டிக்கிட்டு படுத்துக்கணும்…”
அவள் தலை குனிந்த படி சொல்லிக் கொண்டிருக்க அவள் முகத்தை நாடி பிடித்து நிமிர்த்தியவன் “இந்த புடவைக்கு மட்டும் இல்ல.. இதோ நீ கட்டி இருக்கியே இந்த புடவைக்கும் இனிமே இந்த ரூமுக்குள்ள வேலை இருக்காது.. சின்ட்டூ ரெண்டு நாளைக்கு அம்மா அப்பாவோட படுத்துக்கட்டும்.. ரெண்டு நாளும் இந்த புடவைக்கு பதிலா நீ முழுக்க முழுக்க என்னைதான் உடுத்தியிருக்கணும்..”
அவன் சொன்னதைக் கேட்டவளின் முகம் வெட்க நிறம் பூசிக்கொள்ள விழியை தாழ்த்தியவளை “மானு இப்பவும் வெட்கப்படற… இப்படியே உன்னை வெட்கப்பட விட்டுட்டு இருந்தா வேலைக்காகாது… களத்துல இறங்கிட வேண்டியதுதான்..” என்றவன்
வெகு நாளைக்கு பிறகு அவள் இதழில் அழுத்தமாய் தன் அச்சாரத்தை பதித்து அவளைப் பிரிந்து இருந்த தாபத்தை எல்லாம் அந்த முத்த தூது மூலம் அவள் இதயத்துக்கு கடத்தி இருந்தான்…
அவனுக்கு அர்ப்பணமாய் இதழை கொடுத்துவிட்டு அந்த முத்தத்தில் ஆழ்ந்து மூழ்கியவள் அவனை பிரியவே மனம் இல்லாதவள் போல் அவன் இதழோடு தன் உதட்டை இன்னும் இறுக்கமாய் ஒட்டிக்கொண்டாள்…
வழக்கம்போல பகல் உணவுக்கு சமையல் செய்ய மான்விழி சமையலறைக்கு செல்ல அங்கே ஏற்கனவே மார்க்கண்டேயனும் இந்தரும் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள்…
“இந்தர் அத்தை எங்க..? மலர் எங்கே..? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? மாமா நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க..? கொடுங்க நான் பண்றேன்..” என்று அவரிடம் இருந்து அவர் நறுக்கிக் கொண்டிருந்த காய்கறியை கைகளில் வாங்க போனவளை கை பிடித்து தடுத்தான் அவள் பின்னாலேயே வந்த பிருத்வி…
“இனிமே எங்க சமையல் தான் இந்த வீட்ல.. உனக்கு எல்லாம் சமையல் ரூமுக்குள்ள வரதுக்கு பர்மிஷனே கிடையாது.. போயி ஹால்ல உக்காந்து அங்க உன் தங்கையோடும் அம்மாவோடயும் பேசிக்கிட்டு இரு.. நாங்க சமையல் முடிச்சிட்டு உன்னை சாப்பிட கூப்பிடுறோம்…”
அவன் சொன்னதை கேட்டவள் நம்ப முடியாமல் விழியை விரித்த படி “என்ன சொல்றீங்க..? அது எப்படி நாங்க சும்மா உக்கார்ந்துக்கிட்டு உங்களை சமைக்க விடறது.. அதெல்லாம் சரிப்பட்டு வராது.. மாமா.. நீங்க போங்க மாமா.. நான் சமைக்கிறேன்…”
அவள் சொன்னதை கேட்ட மார்க்கண்டேயனும் “நாங்க ஒன்னும் உனக்காகவோ உன் மாமியார்காகவோ இல்ல அந்த ராங்கிக்காரிக்காகவோ சமைக்கல.. என் பேத்தி சக்தி இந்த வீட்டை விட்டு போய்ட கூடாதுங்கறதுக்காக சமைக்கிறோம்.. அதனால இன்னும் ஆறு மாசத்துக்கு இதை பத்தி கவலைப்படாம போய் உட்கார்ந்து வேடிக்கை பாத்துட்டு இரு.. ஆறு மாசம் முடிஞ்சப்புறம் இந்தப் பக்கமே நாங்க வர மாட்டோம்…”
பிருத்வியோ அவள் கையைப் பிடித்துக் கொண்டு வேகமாய் அழைத்து வந்து வரவேற்பறையில் வில்விழியோடு அமர வைத்தவன்
“விழி.. உங்க அக்காவை பத்திரமா பாத்துக்க.. எங்களை வேலை செய்ய விட மாட்டேங்குறா.. இப்படியே போச்சு.. நீ என்ன பண்ண வந்தியோ அதை கெடுக்கிற முதல் ஆளு உங்க அக்காவா தான் இருப்பா.. முதல்ல அவளை அடக்கி வை” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சமையல் அறைக்குள் போனான்…
ப்ருத்விக்கோ அந்த வீட்டில் இருக்கும் அப்போதைய நிலைமை மிகவும் பிடித்து தான் இருந்தது.. எப்போதும் பெண்கள் சமைத்து துவைத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து கொண்டு அடுப்படியில் கிடக்க வேண்டும்.. ஆண்கள் சொகுசான வேலை பார்த்து எந்த கவலையும் இல்லாமல் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் ரொம்பவும் கொடுமையான விஷயமாக அவனுக்கு தெரிந்தது…
இந்த நடைமுறையில் வில்விழி கொண்டு வந்த இந்த மாற்றம் அவனுக்கு மிகவும் பிடித்தே இருந்தது.. வேலைகளை மிகவும் பிடித்து செய்தான் அவன்…
இப்படி சமைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மார்க்கண்டேயரின் சத்தம் கூடம் வரை கேட்க சகுந்தலா பதறிப்போய் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து சமையலறைக்குள் ஓடினாள்…
மார்க்கண்டேயனோ “அய்யய்யோ சுட்டுருச்சுடா.. சுட்டுருச்சுடா.. கடுகு தெறிச்சிருச்சுடா கையில..” என்று கத்தியவர் “டேய் ஏதாவது மருந்து எடுத்துட்டு வந்து போடுங்களேன் டா..” என்று வலி தாங்காமல் கத்த ஓடி சென்று அவர் கையைப் பிடித்து பார்த்தார் சகுந்தலா…
அவரோ கோபமாய் சகுந்தலாவின் கையை உதறி “இப்ப எதுக்கு நீ இங்க வந்த.. போ.. அங்க ஹால்ல உக்காந்து வேடிக்கை பாரு.. என் உடம்பெல்லாம் தீக்காயம் பட்டு கத்தினா கூட கிட்ட வராத..” என்று அவர் திட்ட அங்கே வந்த வில்விழியோ “ம்க்கும்.. காயம் பட்டிருக்கேன்னு அக்கறையோட பார்க்க வந்தா எப்படி எரிஞ்சு விழறாரு பாரு.. இவரெல்லாம்..” அவரை முறைத்தபடி சொன்னாள் அவள்..
அதற்குள் இந்தர் ஒரு ஆயின்மெண்ட்டை எடுத்துக்கொண்டு வந்து மார்க்கண்டேயரிடம் “எங்கப்பா அடிபட்டது?” என்று கேட்க அவரும் தன் கையின் சுண்டுவிரலின் ஒரு முனையை காட்ட அங்கு சிவந்திருப்பதற்கான அறிகுறி கூட தெரியவில்லை…
அதைக் கண்ட விழியோ பக் என்று சிரித்து விட்டாள்.. அவளைப் பார்த்து இந்தர் முறைக்க அவளோ திடீரென பதட்டமாய் முகத்தை வைத்துக் கொண்டு “இந்தர் வாங்க.. உடனே ஹாஸ்பிடல் போகலாம்..” என்றாள்…
“ஆமா.. அப்பாவை உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்.. அவருக்கு சூடு பட்டுருச்சு.. ஏதாவது ஆயிடுச்சின்னா..” இந்தர் சொல்ல “உங்க அப்பாக்கு இல்ல.. இந்தர்.. உங்க அம்மாவை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போகணும்…”
அவள் சொல்ல “அம்மாவையா? அம்மாவை எதுக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்..? அம்மா நல்லா தானே இருக்காங்க..?” என்றான்…
“என்ன இந்து.. இப்படி சொல்றீங்க.. இங்க பாருங்க.. உங்க அப்பாக்கு எங்க தீக்காயம் பட்டிருக்குதுன்னு கூட தெரியல.. ஒரு கடுகு தெறிச்சதுக்கு தீக்காயம் பட்ட இடத்தை தேடி தேடி அதுக்கு ஆயின்மென்ட் போடுறீங்க.. எங்க அத்தை கையை பாருங்க..” என்று சகுந்தலாவின் கையைப் பிடித்து இழுத்து அவர்கள் மூவரிடமும் காட்ட சகுந்தலாவோ தயங்கி தயங்கி கையை நீட்டினாள்…
“நேத்து நைட்டு அவங்க கைல மாமா சுட சுட சாம்பார் ஊத்தினாரா.. அதுல கை ஒரு மாதிரி பிரவுனா ஆயிருச்சு பாருங்க.. போதா குறைக்கு இங்க வளையல் போடுற இடத்துல தீக்காயம் பட்டு கொப்பளிச்சு போச்சு.. வளையல் போட முடியாம அத்தை இந்த கைல மாத்தி வளையல போட்டு இருக்காங்க பாருங்க.. எவ்வளவு பெரிய தழும்பு ஆயிட்டு இருக்குன்னு பாருங்க.. மாமாவோட அத்துனூண்டு காயத்துக்கு அவ்வளவு எரியுதுன்னா அத்தைக்கு இவ்வளவு பெரிய காயத்துக்கு எவ்வளவு வலிக்கும்..? எவ்ளோ எரியும்..? அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக வேண்டாமா? வாங்க இந்தர்.. முதல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்…”
அவள் சொன்னதை கேட்ட சகுந்தலா “ஐயோ விடும்மா.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. இது நாளைக்கு ஆறிடும்.. அது ஒன்னும் இல்ல.. நீயும் மானுவும் வேற இல்லையா? தனியாவே எல்லா வேலையும் பார்த்துட்டு இருந்தேனா? அதுல கொஞ்சம் கை நடுக்கம் எடுத்துருச்சு.. வேற ஒன்னும் இல்ல.. அதான் தெரியாம சுட்டுக்கிட்டேன்.. அதான் இப்ப நீயும் மானுவும் வந்துட்டீங்களே.. இனிமே இப்படி ஆகாது…”
“அது கரெக்ட் தான்.. அத்தை.. இன்னும் ஆறு மாசத்துக்கு அவங்க தானே சமைக்க போறாங்க.. உங்களுக்கு எதுவும் ஆகாது.. ஆனா இப்ப இந்த காயத்துக்கு ஹாஸ்பிடல் போகணும் இல்ல..? அட்லீஸ்ட் ஆயின்மென்ட்டாவது..”.
சகுந்தலாவுக்கு அவள் என்ன செய்ய முனைகிறாள் என்று புரிந்தது..
“அம்மாடி போதுண்டா… அவர் கைக்கு மருந்து போடட்டும்.. எங்க அந்த ஆயின்மென்ட்.. இங்க குடுங்க.. நான் உங்களுக்கு மருந்து போட்டு விடுறேன்..” என்று சகுந்தலா ஆயின்மென்ட்டை கேட்க இந்தர் கையில் இருந்து அதை எடுத்துக்கொண்ட மார்க்கண்டேயன் “வேண்டாம் நீ எனக்கு மருந்து போட வேண்டாம்” என்றார்..
அவள் அப்படியே நிற்க இந்தர் “கொடுங்கப்பா.. நான் போட்டு விடுறேன்..” என்று ஆயின்மென்ட்டை வாங்க முயல
“எனக்கு மருந்து வேண்டாம்” என்றார்..
“சரிப்பா.. குடுங்க.. இதை கொண்டு போய் வச்சுடறேன்..” என்று அந்த ஆயின்மென்ட்டை இந்தர் கேட்க “இல்ல அது என்கிட்டேயே இருக்கட்டும்… நான் ரூமுக்கு போய் மருந்து போட்டுக்குறேன்..” என்றவர் மறுபடியும் சமையல் வேலை செய்ய துவங்கி விட்டார்…
இந்தர் வில்விழியை முறைக்க அவளோ சட்டென சகுத்தலாவின் கைபிடித்து நீட்டிக்காட்டி “இதுக்கு நான் தான் உங்களை முறைக்கணும்.. நீங்க என்னை முறைக்காதீங்க…” என்றாள்…
அவனுக்கும் அவனுடைய அன்னையின் கையை இப்போது பார்த்த போது தாங்கள் எவ்வளவு எளிதாய் அவரை கவனிக்காமலேயே இருந்திருக்கிறோம் என்று புரிந்தது.. தலையை குனிந்து கொண்டவன் தன் காய்கறி நறுக்கும் வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்து இருந்தான்…
அன்று மதியம் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவரவர் அறைக்கு சென்று விட்டனர்..
தங்கள் அறைக்குள் நுழைந்த மார்க்கண்டேயன் அங்கே உள்ளே அவர்கள் அலமாரியில் இருந்த துணிகளை மடித்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சகுந்தலாவை அழைத்தார்..
“சக்கு.. ஒரு நிமிஷம் இங்க வா..” என்றவர் கட்டிலில் சென்று அமர சகுந்தலாவும் அவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்..
சமையலறையில் இருந்து தான் எடுத்து வந்த ஆயின்மெண்டை கையில் அவர் எடுக்க “மருந்து போடணுமாங்க? குடுங்க.. நான் போட்டு விடுறேன்.. எங்க அடிபட்டதுன்னு காட்டுங்க..” என்று அவர் கையில் இருந்து சகுந்தலா ஆயின்மென்ட்டை வாங்க போக
கைநீட்டி அவரை தடுத்த மார்க்கண்டேயன் அவரின் தீக்காயம் பட்ட கையைப் பிடித்து மெல்ல அந்த பெரிய தழும்பை வருடி பார்த்தார்…
எதுவும் பேசாமல் சட்டென அந்த ஆயின்மென்ட்டை திறந்து அவர் கையில் போட்டு பூசி விட்டார்…