வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௮ (28)

5
(18)

அம்பு – ௨௰௮ (28)

சகுந்தலாவோ மார்க்கண்டேயரையே நம்ப முடியாமல் பார்த்திருந்தார்.. தனக்கு தீக்காயம் பட்ட போதுதான் அந்த வலி எப்படி இருக்கும் என்று மார்க்கண்டேயருக்கும் புரிந்தது.. சகுந்தலாவுக்கு அந்த காயம் பட்டபோது எவ்வளவு வலித்திருக்கும் என்று உணர தொடங்கியிருந்தார்…

அதன் வெளிப்பாடு தான்  இந்த அக்கறையும் அனுசரணையும்… இப்போதுதான் தான் செய்த தவறு என்ன என்று சகுந்தலாவுக்கு தெரிந்தது..

“எனக்கு வலிக்குதுன்னு அவருக்கு நான் புரிய வைக்கவே இல்லை.. அது புரிஞ்சா தானே என் வலிக்கு அவர் மருந்து போடுவாரு.. இனிமே என் வலியை அவர் கிட்ட சொல்லணும்..” இது அன்றைய நிகழ்வில் சகுந்தலா கற்றுக் கொண்ட பாடம்..

சகுந்தலா கையில் மருந்தை பூசியவர் நிமிர்ந்து அவர் முகம் பற்றி அவர் நெற்றியில் அழுத்தமாக முத்தம் தந்தார்.. அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.. ஆனால் தன் செய்கையாலேயே அவர் என்ன சொல்ல நினைத்து இருந்தாரோ அதை சொல்லி இருந்தார்…

என்னதான் அவர் சகுந்தலாவை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தாலும் அவ்வளவு வருடங்களாக தனக்கு இணையாக துணையாக நடந்து வரும் அந்த உயிர் மேல் அவருக்கு தீரா காதல் இருந்தது என்னவோ உண்மைதான்.. அவர் இன்றி மார்க்கண்டேயருக்கு ஒரு அணுவும் அசையாது.. அந்தக் காதல் தான் இன்று சகுந்தலாவின் வலியை அவருக்கு புரிய வைத்திருந்தது என்றும் சொல்லலாம்..

அவர் அந்த வலியை உணர்ந்ததால் அந்த வலிக்காக மட்டும் தான் கவலைப்பட்டாரே தவிர முழுதுமாய் மனம் மாறினாரா மார்க்கண்டேயன் என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

சகுந்தலாவும் அவர் மார்பில் சாய்ந்து கண்ணை மூடிக்கொள்ள மென்மையாக அவரை அணைத்தபடி அமர்ந்திருந்தார் மார்க்கண்டேயன்..

இந்த வயதிலும் அந்த மூத்த தம்பதிகளிடையே மெல்லிய அழகான காதல் உணர்வுகள்.. இத்தனை வருடங்களில் என்றைக்காவது ஒரு நாள் தனக்காக தன் கணவர் இப்படி அன்பும் அக்கறையுமாய் ஏதாவது செய்து விட மாட்டாரா என்று ஏங்கிய சகுந்தலாவுக்கு இந்த நாள் ஏதோ அவள் வாழ்க்கையின் மிக பெரிய  பொக்கிஷமாய் மாறியது போன்ற ஒரு நிறைவை தந்து இருந்தது…

மார்க்கண்டேயரின் இந்த சிறு அக்கறையான செயலிலேயே பெரிதாய் மனம் நெகிழ்ந்து போனார் சகுந்தலா… மார்க்கண்டேயருக்கும் உள்ளுக்குள் ஒருவித சொல்ல முடியாத நிறைவான உணர்ச்சி பரவியது.. அது தந்த மகிழ்ச்சியை கைவிட முடியாமல் வெகு நேரம் தன் மனைவியை அப்படியே  அணைத்தபடி அமர்ந்திருந்தார்…

மாலை பெண்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க ஆண்கள் சிற்றுண்டி செய்யும் வேலையில் இறங்கி இருந்தனர்…

அங்கே வந்து அமர்ந்த சகுந்தலாவின் கையில் ஆயின்மென்ட் பூசப்பட்டிருப்பதை பார்த்த விழி “ஆயின்மென்ட் போட்டுக்கிட்டிங்களா அத்தை..?” என்று கேட்க சட்டென விழியை நோக்கி குனிந்த சகுந்தலா அவளிடம் ரகசியமாய் “நான் போட்டுக்கல.. உங்க மாமாதான் போட்டு விட்டார்..” என்க

வியப்பில் விழி விரித்தார்கள் வில்விழியும் மான்விழியும்..

“மாமாவா பரவாயில்லையே.. இது நான் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே.. ம்ம்.. மார்க் மாமா சீக்கிரம் வழிக்கு வந்துருவார் போலையே..”

விழி சொல்ல சகுந்தலாவோ அவளை முறைத்தார்..

“என்னடி.. மரியாதை இல்லாம மார்க் மாமா பார்க்கு மாமா ன்னு சொல்லிக்கிட்டு.. ஒழுங்கா மாமான்னு சொல்லு..”

“பாரு மானு.. புருஷன் ஒரு நாள் பாசமா நடந்துட்டாருன்ன உடனே அப்படியே சைடு மாறி நம்ம மேல பாயறது..”

விழி சொல்ல சகுந்தலா முகத்தில் ஒரு வெட்கச் சாயம்..

“ஐயையோ அத்தை.. வெட்கப்படுறீங்களா? மார்க் மாமா எதோ பெரிய வேலை தான் பண்ணி இருக்காரு போலையே…”

அவள் கிண்டலாய் சொல்ல “அது.. கையில காயம் பட்டுச்சுன்னு மருந்து போட்டு விட்டார்.. அவ்வளவுதான்.. மத்தபடி எல்லாம் முன்னாடி மாதிரி தான்…”

“அத்தை விளையாட்டுக்காக பேசுறது எல்லாம் இருக்கட்டும்… இப்ப உங்களுக்கு புரியுதா..? நான் ஏன் இவ்வளவு ரூடா கொஞ்சம் ஓவரா நடந்துக்கிறேன்னு.. இப்படி நடந்துக்கலனா நம்ம எல்லாம் இருக்கிறதே கண்ணுக்கு தெரியாது இவங்களுக்கு‌. நம்ம கஷ்டங்கள் எல்லாம் அவங்க பார்வைக்கு போகவே போகாது.. நம்ம என்ன கஷ்டப்படுறோம்னு அவங்களுக்கு புரிஞ்சா தான் கொஞ்சமாவது நம்மளோட ஆசைகள் கனவுகள் கருத்துக்களுக்கு மரியாதை கொடுப்பாங்க.. மார்க் மாமா வழிக்கு வந்துருவாருன்னு தான் தோணுது.. நீங்க கவலைப்படாதீங்க…” என்றாள்..

அவள் சொன்னதைக் கேட்ட சகுந்தலா “எனக்கு இப்பதான் புரியுது.. நீ சொல்றதிலும் உண்மை இருக்கு.. இனிமே எனக்கு என்ன தோணுதோ அதை தைரியமா அவர்கிட்ட சொல்ல போறேன்.. செஞ்சே ஆகணும்னு கொஞ்சம் ஆர்க்யுவும் பண்ணலாம்னு தோணுது…”

“சூப்பர் அத்தை.. இப்படியே சூட்டோட சூடா உங்களை கொண்டு போய் பார் கவுன்சில்ல ரெஜிஸ்டர் பண்ணி உங்க ஃப்ரெண்ட் அனிதா லாயரா இருக்காங்கன்னு சொல்லுவீங்க இல்ல..? அவங்க கிட்ட ஜூனியரா சேர்ந்துக்கோங்க..”

“இவ்வளவு வயசுக்கு மேல இதெல்லாம் நடக்கிற காரியமா? சொல்லு..”

“எல்லாம் நடக்கும்.. நாளைக்கு நம்ம உங்க ஃப்ரெண்டை பாக்க போறோம்..”

ஆண்கள் மூவரும் அன்று மாலை சிற்றுண்டிக்கு வெங்காய பக்கோடா செய்து கொண்டிருந்தார்கள்..

மான்விழி உள்ளே சென்று “நான் வேணா எப்படி செய்யணும்னு சொல்லிக் கொடுக்கவா?” என்று பிருத்வியிடம் கேட்க

“ஒன்னும் தேவை இல்ல.. இப்பதான் எல்லாம் யூட்யூப்ல இருக்கே.. அதை பாத்து நாங்க சமைச்சுக்கறோம்… நீங்க உள்ள காலடி எடுத்து வைக்க கூடாது.. அப்புறம் நாங்க ரூல்ஸ் பிரேக் பண்ணிட்டோம்னு சக்தியை கூட்டிட்டு போறதுக்கா? இதெல்லாம் வேலைக்காகாது… முதல்ல நீ வெளியில போ.. நாங்க எல்லாம் டிபன் எல்லாம் முடிச்சிட்டு கொண்டு வந்து கொடுக்கிறோம்…” என்றான் அவன்..

மார்க்கண்டேயனோ பிருத்வியை முறைத்துக் கொண்டிருந்தார்.. “ரெண்டு பேரும் விட்டா பொண்டாட்டிக்கு காலம் பூரா கால் அமுக்கி சேவகம் செஞ்சிட்டு கெடப்பானுங்க போல.. ரெண்டும் எனக்கு புள்ளையா வந்து பிறந்திருக்கு பாரு..” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார் அவர்‌.

பக்கோடாவுக்கு வெங்காயத்தை அரிந்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயர்.. அவர் கண்களிலோ தாரைதாரையாக கண்ணீர்..

அவரைப் பார்த்த இந்தர் “ஐயோ அப்பா எதுக்குப்பா அழறீங்க? நீங்க அழுது நான் பார்த்ததே கிடையாதே.. ஆறு மாசம் தானே.? அழாதீங்க பா..” என்று அவர் கண்ணை துடைத்து விட வெங்காயத்தின் அருகில் வந்து நின்ற நேரம் அவன் கண்ணிலும் கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது..

“பாத்தியாடா? நீயும் அழற..?” என்று அவர் கேட்க “இது என்னபா இந்த வெங்காயம் அதை கட் பண்ணதுக்காக நம்மளை அழ வெக்குது..?” அவன் கேட்டுக்கொண்டே இருக்க அங்கே வந்த ப்ருத்வியோ மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான்..

“டேய் இந்தர்… அப்பா.. ஏன் நீங்க ரெண்டு பேரும் அழறீங்க? இப்ப இப்படி கண்ணீர் விட்டு அழற அளவுக்கு என்ன நடந்துச்சு?” என்று கேட்க வெங்காயம் அருகில் வந்ததும் அவன் கண்ணிலும் எரிச்சலும் கண்ணீரும்…

“இப்ப நீ எதுக்கு அழுறியோ அதுக்கு தான்டா நாங்களும் அழறோம்..” இந்தர் சொல்ல “அய்யய்யோ இது என்ன கண்ணுல தண்ணியா கொட்டுது.. கண்ணு வேற இப்படி எரியுது..”

சொல்லிக்கொண்டே கஷ்டப்பட்டு வெங்காயத்தை அரிந்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயன்..

அப்போது தண்ணீர் குடிக்க வந்த விழி  அவர்கள் மூவரையும் பார்த்து “ஒரு சமையல் செய்யறதுக்கு இவ்வளவு அக்கப்போரா? மூணு பேரும் எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கிறீங்க..?” என்று கேட்க அவளை தீவிரமாய் முறைத்தான் இந்தர்..

அவள் கேட்டதை வரவேற்பறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மான்விழியும், சகுந்தலாவும் உள்ளே வந்து அந்தக் காட்சியை பார்க்க சகுந்தலா “ஐயோ வெங்காயம் அரிஞ்சீங்களா? கண்ணு எரியுதா?” என்று கேட்டுக் கொண்டே மார்க்கண்டேயனின் அருகில் வந்து “அது.. வெங்காயம் அரியும் போது..” என்று ஏதோ சொல்ல தொடங்க நடுவில் வந்து தடுத்தாள் வில்விழி…

“அத்தை.. எதுக்கு அவங்களுக்கு சொல்றீங்க.. அவங்கதான் யூட்யூப் பார்த்து எல்லாத்தையும் பண்ணிடுவாங்களாமே.. மான்விழி வந்து ரெசிபி சொல்லி தரேன்னு சொன்னப்போ நாங்க யூட்யூப் பார்த்து பண்ணிக்கிறோன்னு திமிரா சொன்னாங்க இல்ல..? அவங்க பண்ணிக்குவாங்க.. நீங்க வாங்க.. நம்ம போகலாம்..” என்று மாமியாரின் கை பிடித்து இழுக்க..

“ஐயோ.. என்னை விடு விழி..” என்றவர் “என்னங்க வெங்காயத்தை தண்ணியில போட்டுட்டு அப்புறம் நறுக்குங்க… இல்லைன்னா வெளியில டைனிங் டேபிள்ல உட்கார்ந்து ஃபேன் போட்டுட்டு  நறுக்குங்க.. கண்ணு எரியாது..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்…

அவரும் அப்படியே செய்ய கண் எரிச்சல் இல்லாமல் போனது..

சகுந்தலாவிடம் வந்து “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று கேட்க “நானும் சமையல் செய்ய ஆரம்பிச்ச புதுசுல இப்படி தாங்க அழுதுகிட்டே வெங்காயம் நறுக்குவேன்.. உங்க அம்மா தான் எனக்கு இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்க…”

அதன் பிறகு ஒரு வழியாக வெங்காய பக்கோடா தயாரானது.. அதை ஒரு தட்டில் போட்டு காபியையும் கலந்து எடுத்து கொண்டு வந்து மூன்று பெண்களிடமும் தர அவர்களும் அதனை எடுத்து உண்டார்கள்..

“ஓகே.. நாட் பேட்” என்றாள் விழி..

“ரொம்ப நல்லா இருக்கு..” என்றார்கள் மான்விழியும் சகுந்தலாவும்..

ஆண்கள் மூவரும் திருப்தியாய் அடுத்து தாங்கள் வெங்காய பக்கோடா எடுத்து உண்டு பார்க்க அவர்களால் ஒரு வாய் கூட உண்ண முடியவில்லை.. வெங்காய பக்கோடா உப்பு கரித்தது..

“டேய் இந்தரு.. என்னடா உப்பு பக்கோடாவா இருக்குது.. அந்த யூட்யூப் வீடியோ பார்த்து தானடா பண்ணோம்…? நீதானடா உப்பு போட்ட.. அவங்க சொன்ன அளவு போடலையா…?”

“டேய் அவங்க எங்கடா அளவு சொன்னாங்க.. தேவையான அளவுன்னு சொன்னாங்க.. தேவையான அளவு எவ்வளவுன்னு எனக்கு எப்படி தெரியும்?”

“ஆனா அவங்க யாருமே இதுல இவ்வளவு உப்பு இருக்குன்னு சொல்லவே இல்லையே.. அப்படியே சாப்பிட்டாங்க..”

“நம்ம செஞ்சு குடுக்குறதே பெரிய விஷயம்னு சாப்பிட்டு இருப்பாங்க..” பிருத்வி சொன்னான்…

அப்போது சில நாட்களுக்கு முன்னால் தனக்கு சகுந்தலா செய்து கொடுத்திருந்த சட்னியில் ஒரு கல்லு உப்பும் கொஞ்சம் காரமும் தூக்கலாக இருந்தது என்று தட்டை அவர் முகத்திலேயே விட்டெறிந்த ஞாபகம் மார்க்கண்டேயனுக்கு வந்தது…

ஒரு பெருமூச்சு விட்டவர் “சரி ஆறு மணிக்கு நைட் சமையலை வந்து செய்ய ஆரம்பிக்கணும்…” என்றார்..

“இன்னைக்கு நைட்டுக்கு என்னப்பா?” இந்தர் கேட்க

“நைட் என்ன? தோசை இட்லி சப்பாத்தி தான் செய்வா உங்கம்மா.. இட்லி மாவு தோசை மாவு இல்லைன்னு சக்கு சொன்னா.. அப்போ சப்பாத்தி தானே செய்யணும்..? சப்பாத்தி செஞ்சு உருளைக்கிழங்கு மசாலா செஞ்சிடலாம்…”

மிகவும் எளிதாக வாயால் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.. ஆனால் ஒரு வெங்காய பக்கோடா செய்வதற்குள்ளேயே அந்த சமையல் அறையின் நிலை…

சமையலறையே களேபரமாக இருந்தது.. அங்கு ஏதோ கலவரம் நிகழ்ந்தது போல் ஒரு பக்கம் கருகிய வாணலி இன்னொரு பக்கம் காய்கறி நறுக்கிய குப்பை இன்னொரு பக்கம் அரைத்த மிக்ஸியில் இருந்து சுவர் எல்லாம் தெறித்திருந்த உணவு பதார்த்தங்கள் கொட்டி இருந்த குழம்பு சிந்தி இருந்த பொடிகள் என ஏதோ பெரிய யுத்த பூமியாக காட்சி அளித்தது சமையலறை..

அதைப் பார்த்தவுடன் சட்டென வாயை மூடி சிரித்த விழி “அத்தை.. ஆறு மாசத்துல நம்ம கிச்சனையே ரெனோவேட் பண்ண வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன்..” என்றாள்…

“ஐயையோ என்ன சமையல் ரூமை இப்படி ஆக்கி வச்சிருக்கிறாங்க? தரையில வேற மாவு எல்லாம் கொட்டி இருக்காங்க.. இரு.. நான் போய் கிளீன் பண்ணிட்டு வரேன்..” என்று தான் கட்டியிருந்த புடவை தலைப்பை இடுப்பில் சொருகிக் கொண்டு மான்விழி கிளம்ப அவள் கையைப் பிடித்து இழுத்தாள் வில்விழி…

“கிச்சனை இவ்ளோ அழுக்கு பண்ணவங்களுக்கு அதை சுத்தப்படுத்தவும் தெரியணும்.. அதெல்லாம் அவங்க சுத்தம் பண்ணுவாங்க.. நீ கெளம்பு..” என்றாள் மான்விழியிடம்…

“பாவம்டி மலர்.. தனியா எப்படி இவ்வளவு அழுக்கையும் கிளீன் பண்ணுவாங்க…”

“ஆஹான்.. இத்தனை நாள் நம்ம சமையல் பண்ணும் போது யாருமா வந்து கிளீன் பண்ணாங்க..? தனியா தானே பண்ணினோம்.. அதுவும் நம்ம ரெண்டு பேரும் இல்லாதப்போ இது அத்தனையையும் அத்தை தனியா செஞ்சிருக்காங்க.. மூணு பேரு இருக்காங்க இல்ல..? எல்லாம் சேர்ந்து செய்யட்டும்..” தரதரவென மான்விழியை ஹாலுக்கு இழுத்து வந்தாள் வில்விழி…

சமையலறை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு ஒரு ஒரு மணி நேரம் இடைவெளி கிடைத்திருக்கிறது என்று அறையில் வந்து அப்படியே ஒரு பெருமூச்சு விட்டு அமரலாம் என்று நினைத்த இந்தருக்கும் ப்ருத்விக்கும் அங்கே வேலை வைத்து காத்திருந்தார்கள் சக்தியும் சின்ட்டூவும்…

இருவரும் அப்போதுதான் உறங்கி எழுந்திருக்க மாலை அவர்களுக்கு பாலும்  பழங்களும் கொடுக்க வேண்டும்.. அந்த வேலையும் இப்போது இந்த குடும்பத்தலைவர்கள் தலையில் தானே…

ஒரு கையில் பழங்கள் அடங்கிய கிண்ணத்தையும் மறுகையில் சக்தியையும் தூக்கிக்கொண்டு இந்தர் அவளுக்கு வெட்டிய ஆப்பிள் பழத்தை ஊட்ட முயல அவளோ நானா என்று முகத்தை திருப்பி அவன் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

“சக்திமா நீங்க சாப்பிட்டா தானே பிக் கேர்ள் ஆக முடியும்.. நல்லா க்ரோவாகி அப்பா ஹைட்டுக்கு வர முடியும்.. இப்படி சாப்பிடாம இருந்தா சக்தி குட்டியாவே இருப்பாங்களே..” என்று சொல்லி ஊட்ட முனைய சக்தியோ மசியவே இல்லை…

அப்போது அவர்கள் அருகில் வந்த ப்ருத்வி “சக்திமா.. ஹார்ஸ் பாக்க போலாம் வரீங்களா?” என்று கேட்க “சாம் சாம்” என்று சக்தி ஷியாம் கர்ணாவின் பெயரை சொல்ல “ஷ்யாம் தான்.. வாங்க போயிட்டு  நீங்களும் ஷாமும் ஆப்பிள் சாப்பிட்ட அப்புறம் ரெண்டு பேரும் ரைட் போலாம் ஓகேவா?” என்று கேட்க அவளோ உடனே தன் சித்தப்பா கைகளில் தாவினாள்…

இதைப் பார்த்த சின்ட்டூவுக்கோ லேசான பொறாமை எட்டிப் பார்த்தது.. நானு என்று தன் அப்பாவை தூக்கிக் கொள்ள சொல்லி கை நீட்ட சட்டென அவனை தூக்கிக் கொண்டான் இந்தர்.. அவன் கையில் இருந்த பழக்கிண்ணத்தை ப்ருத்வி வாங்கி கொள்ள சின்ட்டூ சாப்பிட வேண்டிய பழக்கலவையை எடுத்துக்கொண்டான் இந்தர்..

இந்தரும் ப்ருத்வியும் இரண்டு குட்டிகளையும் தூக்கிக் கொண்டு ஷ்யாம் கர்ணாவே கதி என அவனிடம் வந்தார்கள்…

ஷ்யாம் கர்ணாவின் மேல் ரைடு போகலாம் என்று சொல்லி சொல்லியே சக்திக்கு அந்த பழக்கலவையை முழுவதுமாய் ஊட்டி விட்டிருந்தான் ப்ருத்வி.. அதேபோல சாப்பிட்டு முடித்தால் இந்தரோடு ஏரோ ஷூட் பண்ணலாம் என்று இந்தர் சொல்லிவிட சின்ட்டூவும் வேகவேகமாய் அந்த பழங்களையும் சாப்பிட்டு முடித்து பாலையும் சமர்த்தாக குடித்து விட்டான்…

எல்லாம் முடிந்து சக்தி குதிரை சவாரியை முடித்துவிட்டு வர சின்ட்டூவும் இந்தரும் மட்டுமின்றி அவர்களுடன் வில்விழியும் சேர்ந்து அரை மணி நேரம் அம்பை எய்து பயிற்சி செய்தார்கள்…

எல்லாம் முடிந்து ஒரு வழியாக உள்ளே வந்த நேரம் அடுத்த பிரச்சனை துவங்கியது.. சக்தி நேராக இந்தரிடம் வந்து “அவ்வா பாத்து..” என்க இந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை.. “என்னடா சக்தி வேணும்?” என்று கேட்க வில்விழியோ இதழுக்குள் சிரிப்பை அடக்கியபடி “அவளுக்கு பாத்ரூம் போகணுமாம்.. கூட்டிட்டு போங்க இந்தர்..”

அவள் சொல்லிட அப்போது ஒரு ஆயாசமான பெருமூச்சை விட்டவன் “வா போலாம்” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அவர்கள் அறையில் இருந்த குளியலறைக்கு சென்றான்.. ஆனால் முகம் சுளிக்காமல் குழந்தைக்கு எல்லாவற்றையும் செய்தான் அவன்.. தன் மகளை இளவரசி போலத்தான் பார்த்துக் கொண்டான்.. வில்விழியாவது சில சமயம் சக்தியை மிரட்டி உருட்டுவாள்…

ஆனால் இந்த தந்தையோ தாயின் அன்பையும் அரவணைப்பையும் கூட பின்னுக்கு தள்ளி இருந்தான்..

அன்று இரவு அவர்கள் செய்த சப்பாத்தி உப்பு சப்பு இல்லாத கோதுமை உப்புமாவாகவும் உருளைக்கிழங்கு மசாலா மசித்துவிட்ட உருளைக்கிழங்கு குழம்பாகவும் மாறி எல்லோரையும் உண்பதற்குள் ஒரு வழி ஆக்கி இருந்தது..

ஏற்கனவே சகுந்தலா போட்டு வைத்த ஊறுகாய் இருந்ததோ பிழைத்தார்கள்..

இப்படியே நாளொரு கருகலும் பொழுதொரு காந்தலுமாக சமையல் வேலையும் களைப்பும் ஆயாசமுமாக மற்ற வேலைகளும் நடக்க தொடங்கியது.. அந்த வீட்டில் ஆண்கள் எல்லோரும் வீட்டின் வேலை பளுவை சுமக்க முடியாமல் சுமக்கத் தொடங்கினர்…

கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் சிரமங்கள் எல்லாம் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது…

வில்விழி அகாடமிக்கு செல்ல தொடங்கி இருந்தாள்.. வித்யாவின் பழைய வழக்கை மீண்டும் புதுப்பிக்க எண்ணினாள் வில்விழி..

வித்யாவிடம் இது குறித்து பேசவும் அவளும் “அக்கா நான் அவங்க மேல கேஸ் போட்டா அந்த வீடியோவை அவங்க..”

அவள் தயங்கி தயங்கி சொல்ல வில்விழி “கவலைப்படாதே.. அதுக்கு ஒரு வழி இருக்கு.. நான் அத்தையை உன் கேஸை எடுத்து நடத்த சொல்றேன்.. அவங்க சீக்கிரமே கோர்ட்டுக்கு போக ஆரம்பிச்சிடுவாங்க.. அதுக்கப்புறம் அந்த வீடியோ வெளிய போகாம அந்த பொறுக்கிங்களை எப்படி அரெஸ்ட் பண்றதுன்னு பார்க்கலாம்.. ஆனா ஒரு விஷயம்.. இந்த முறை நீ நேஷனல் லெவல் சாம்பியன்ஷிப் போறதுக்கு முன்னாடி அவங்க எல்லாரும் ஜெயிலுக்கு போகணும்…”

“நிச்சயமாக்கா.. இனிமே என்கிட்ட இழக்கறதுக்கு ஒன்னும் இல்ல.. அந்த வீடியோ மட்டும் வெளியில போகாம இருந்ததுன்னா நான் அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறதை யாராலயும் தடுக்க முடியாது..”

“சரி.. முதல்ல நம்ம கேசை ரிஓபன் பண்றதுக்கு அத்தை ஜூனியரா ஜாயின் பண்ண போற அவங்க ஃபிரண்ட் அனிதா கிட்ட கேட்கலாம்..”

அதன்படியே அன்று மாலையே சகுந்தலாவையும் அழைத்துக்கொண்டு போய் அனிதாவை சந்தித்து பேசினார்கள் வில்விழியும் வித்யாவும்..

அனிதாவும் அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அந்த வழக்கை மறுபடியும் புதுப்பிக்கும் விதமாக மேல் முறையீடு செய்தார்..

அப்படியே சகுந்தலாவின் வேலை நிமித்தமாகவும் பேச மூன்று வாரங்களில் சகுந்தலா நீதிமன்றத்தில் வழக்குகளை எடுத்து வாதாடலாம் என்று சொன்னார் அவர்..

அதைக் கேட்டு சந்தோஷ மிகுதியுடன் திரும்பி இருந்தார்கள் மூவரும்..

திரும்பி வரும்போது வில்விழி சகுந்தலாவிடம் “அத்தை உங்ககிட்ட நான் ஒன்னு கேக்கணும்.. இந்தர் நான் இங்க திரும்ப வந்தப்போ ஊர்மிளாவை பத்தி ஒரு விஷயம் சொன்னார்.. ஊர்மிளாவோட கல்யாணம் அவ இஷ்டப்படி தான் நடக்கணும்னு நான் ஒரு கண்டிஷன் வச்சிருக்கேன்.. அதை பத்தி பேசும்போது விஷ்வாக்கும் ஊர்மிக்கும் மொதல்ல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணதா சொல்லிட்டு இருந்தாரு.. எப்படி அத்தை .. விஷ்வாக்கும் இந்தருக்கும் ஆகவே ஆகாது.. அவங்க அகடமிக்கும் நம்ப அகடமிக்கும் பயங்கர காம்பெடிஷன்… இப்போ அந்த விஷ்வாவை பத்தி யோசிச்சு பார்த்தா அவனை மாதிரி ஒரு பொறுக்கி யாருமே கிடையாதுன்னு தெரியுது.. அவனுக்கு போய் ஊர்மியை கொடுக்கணும்னு எப்படி அத்தை யோசிச்சீங்க..?”

“விழி மொதல்ல எல்லாம் விஷ்வஜித் அகாடமி ஒரு போட்டி அகாடமியா மட்டும் தான் இருந்தது.. விஷ்வாவுக்கும் இந்தருக்கும் அவ்வளவு பிரச்சனை எல்லாம் இல்லை.. அப்போ தான் விஷ்வாவோட அப்பா இந்தர் அப்பா கிட்ட வந்து பேசினார்.. ரெண்டு குடும்பமும் ஒன்னு சேர்ந்தா ரெண்டு அகாடமியையுமே பெரிசா வளர்க்கலாம்னு பேசினப்போ அவரும் அதுக்கு ஒத்துக்கிட்டாரு.. அப்போ விஷ்வா பத்தி எந்த தப்பான பேச்சும் கிடையாது.. எல்லாரும் அவனை பத்தி நல்ல விதமா தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. இது எனக்கும் அவருக்கும் விஸ்வஜித்தோட அப்பாக்கும் மட்டும் தான் தெரியும்.. இந்தருக்கும் பிருத்விக்குமே கூட இந்த விஷயம் அப்ப தெரியாது.. அதுக்கு அப்புறம் வித்யா விஷயத்துல விஷ்வா பத்தி தெரிஞ்சப்போ நாங்க அந்த பேச்சை விட்டுட்டு சக்கரவர்த்தி பையனுக்கு ஊர்மியை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணோம்..”

“தப்பா சொல்றீங்க அத்தை.. மாமா முடிவு பண்ணி இருப்பாரு.. நீங்க சரி சரின்னு தலையாட்டி இருப்பீங்க.. கரெக்டா..?” வில்விழி சரியாக கேட்க சகுந்தலாவோ அவளை மேல் கண்ணால் பார்த்து “தெரிஞ்சே எதுக்குடி வெந்த புண்ணுல வேலை பாய்ச்சற..?” என்று கேட்டார்..

சத்தமாக சிரித்த வில்விழியோ “ஓகே.. ஆனா அந்த சக்கரவர்த்தி அங்கிளும் நம்ம மார்க் மாமா மாதிரி தானே.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆச்சே.. பாவம் ஊர்மி அங்கேயும் போய் கஷ்டப்படணுமா.. வேணாம் அத்தை.. அவ வரட்டும்.. அவளுக்கு யாரை பிடிச்சிருக்குன்னு கேட்டு கல்யாணம் பண்ணி வைங்க.. அவளுக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ அப்ப கல்யாணம் பண்ணிக்கட்டும்.. இது விஷயமா நீங்க தான் மாமா கிட்ட தைரியமா பேசணும்.. ஊர்மி உங்க பொண்ணு.. உங்களுக்கு அவ கல்யாண விஷயத்தை பேசறதுக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு.. பாக்கலாம்.. நீங்க அன்னைக்கு சொன்னீங்க இல்ல.. எல்லா விஷயத்துலயும் ஆர்க்யூ பண்ண போறேன்னு.. கோர்ட்ல உங்க ஆர்க்யூமென்ட் நல்லா இருக்கும்னு எனக்கு தெரியும்.. வீட்ல உங்க ஆர்கியூமென்ட் எப்படி இருக்க போகுதுன்னு நான் பாக்குறேன்..” என்றாள் வில்விழி கண்ணை சிமிட்டி கொண்டு..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!