அடுத்த நாள் வித்யாவின் வழக்கு விசாரணைக்கு வர மறுபடியும் விஷ்வாவையும் அவன் நண்பர்களையும் கைது செய்து ரிமாண்டில் வைக்க ஆணை பிறப்பித்தது கோர்ட்..
அதன்படியே விஷ்வாவை கைது செய்யப் போன நேரம் அவன் பிசினஸ் விஷயமாக யூ எஸ் போய் இருப்பதாகவும் அடுத்த வாரம் தான் திரும்பி வருவான் என்றும் அவர்கள் வீட்டில் கூறினார்கள்.. அவனுடைய நண்பர்கள் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்க விஷ்வா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார் அந்த இன்ஸ்பெக்டர்…
மூன்று வாரங்களில் சகுந்தலாவும் தன் தோழிக்கு ஜூனியராக நீதிமன்றத்துக்கு சென்று வந்தாள்…
அப்போதைக்கு மான்விழி ப்ருத்வி சமையல் வேலை எல்லாம் முடித்த பிறகு அவனோடு கம்பெனிக்கு சென்று அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டாள்.. அவனிடம் அந்த வேலைகளைப் பற்றி கற்றுக் கொண்டாள்…
அந்நேரம் தொழிற்சாலையின் ஒரு வாடிக்கையாளர் அவர்களை குறிப்பிட்ட வடிவத்தில் அம்புகள் செய்ய சொல்லி வார்த்தைகளில் அதன் வடிவமைப்பையும் தன்மையையும் அது செல்ல வேண்டிய வேகம் அதன் உறுதி.. எடை.. என்று எல்லாவற்றையும் விளக்கி கேட்டிருக்க அந்த அம்பினுடைய வடிவத்தையும் அதை செய்ய பயன்படுத்த வேண்டிய பொருட்களையும் அவர்கள் கேட்ட விதத்தில் நிறுவனத்தின் வடிவமைப்பாளர் விதவிதமாக வடிவமைத்து வரைந்து கொடுத்தும் ஏனோ அது திருப்தியாக வரவில்லை…
அதை கண்ட மான்விழி “நான் ஒருவாட்டி ட்ரை பண்ணவா? இந்த ஏரோவை என்னால டிசைன் பண்ண முடியும்னு நினைக்கிறேன்.. நீங்க எனக்கு எந்தெந்த மெட்டீரியல்ல எப்படி பண்ணா அவுட்புட் எப்படி இருக்கும்னு சொல்லி இருக்கீங்க இல்ல ப்ருத்வி.. நான் அதை டிசைன் பண்ணி அதுக்கு என்னென்ன மெட்டீரியல் யூஸ் பண்ணலாம்னு மென்ஷன் பண்றேன்.. அது சரியா இருக்குமான்னு மட்டும் நீங்க பாருங்க..” என்றாள் பிருத்வியிடம்..
அந்த வடிவமைப்பாளரோ “மேடம் இத்தனை வருஷமா நான் இங்க டிசைனரா இருக்கேன்.. என்னாலேயே இந்த ஏரோவை டிசைன் பண்ண முடியல.. நீங்க ரெண்டு நாளா தான் ப்ருத்வி சார் கிட்ட இதை பத்தி கத்துக்க ஆரம்பிச்சு இருக்கீங்க.. உங்களால எப்படி முடியும்?” என்று கேட்க
“மிஸ்டர். ஷாஹித்.. நீங்க ரொம்ப எக்ஸ்பர்ட் டிசைனர் தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா ஒருவேளை நீங்க மிஸ் பண்ற ஏதோ ஒன்னை மான்விழி யோசிக்கலாம் இல்லையா..? ட்ரை பண்றதுல ஒன்னும் நஷ்டம் இல்லையே.. அவ ட்ரை பண்ணட்டும்.. அவ டிசைன் முடிச்சதும் நான் உங்ககிட்ட கொண்டு வந்து காட்ட சொல்றேன்.. நீங்க இப்போ உங்க ஒர்க் ப்ளேஸ்க்கு போய் இந்த டிசைனை வேற எப்படி எல்லாம் பண்ணலாம்னு கொஞ்சம் ட்ரை பண்ணுங்க..” என்றான்..
அவனும் சென்றுவிட “ஓகே மானு.. அந்த டிசைனர் ஒரே மாதிரி மோனோடனஸ்ஸா டிசைன் பண்றாரோ என்னவோ டிஃபரண்டா நீ ஏதாவது இன்னவெட்டிவா பண்றேனா பண்ணி பாரு..” என்றான்..
அவளும் அந்த அம்புத் தண்டு அம்பின் முனை அன்பின் கீழ் பகுதி அதில் இணைக்கப்பட்ட இறக்கைகள் என்று எல்லாவற்றையும் ஒரு வடிவமாக வரைந்தவள் அதற்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த வரைபடத்தில் குறிப்பிட்டிருந்தாள்…
அதைப் பார்த்த அந்த வடிவமைப்பாளரும் பிருத்வியும் வியப்பில் ஆழ்ந்து போனார்கள்..
“ஹே மானு.. எப்படிடி.. நான் உனக்கு ரெண்டு நாள் தான்டி சொல்லி கொடுத்தேன்.. அந்த கிளையன்ட்டோட ரெக்விஸிட்ஸ் எல்லாமே ஃபுல் ஃபில் ஆகுற மாதிரி எவ்ளோ அழகா டிசைன் பண்ணி இருக்கே.. இதுல யூஸ் பண்ணி இருக்கற மெட்டீரியல்ஸ் எல்லாமே அவங்க ரெக்வஸ்ட் பண்ணதுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு.. சூப்பர் டி..” என்று அவளை பாராட்டியவன் அவள் செய்து கொடுத்த வடிவமைப்பில் மாதிரி அம்பை தயாரிக்க சொன்னான்..
அந்த அம்பும் தயாரிக்கப்பட்டது.. அந்த வாடிக்கையாளரின் பிரதிநிதி ஒருவர் அவர்கள் தொழிற்சாலைக்கே நேரில் வந்து அந்த மாதிரியை பார்த்துவிட்டு பிரமித்து போனார்..
“வாவ்.. எக்ஸாக்ட்டா நாங்க என்ன எக்ஸ்பெக்ட் பண்ணோமோ அப்படியே பண்ணி இருக்கீங்க.. பெர்ஃபெக்ட் ஜாப்.. ப்ருத்வி உங்க கம்பெனியில இவ்ளோ நல்ல டிசைனர்ஸ் இருக்காங்கன்னு எனக்கு தெரியாது.. முன்னாடியே தெரிஞ்சி இருந்துதுன்னா அவங்களை எங்க கம்பெனிக்கு இழுத்துட்டு இருப்போம்..”
அவன் சொன்னதை கேட்ட பிருத்வி சத்தமாக சிரித்தான் “அது உங்க கனவிலே கூட நடக்காது.. ஏன்னா இந்த ஏரோவை டிசைன் பண்ண டிசைனர் என்னோட வைஃப் மான்விழி..” சொன்னவன் மான்விழியை அழைக்க அவளும் அங்கு வந்தாள்..
“நான் ஏரோ மட்டும்தான் அழகா பண்றாங்கன்னு நெனச்சேன்.. அவங்களும் ரொம்ப அழகா தான் இருக்காங்க..” மான்விழி அதை கேட்டு வெக்கப்பட்டு சிரிக்க பிருத்விக்கோ காதில் எரிமலை குழம்பாய் புகை வந்து கொண்டிருந்தது..
“மிஸ்டர் சாகர்.. அவங்க என் வைஃப்ன்னு சொன்னேன்..” என்றான் மான்விழியையும் சாகரையும் மாறி மாறி முறைத்தபடி..
“அதுலயும் நீங்க முந்திக்கிட்டீங்க..” என்று அவன் சொல்ல அவன் மண்டையில் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டால் என்ன என்று தோன்றியது பிருத்விக்கு..
மான்விழியோ இதழுக்குள் சிரித்துக் கொண்டவள் சாகரிடம் “அந்த விஷயத்துல நான் தான் ரொம்ப லக்கி.. நல்லவேளை.. உங்களுக்கு முன்னாடி நான் இவரை பார்த்துட்டேன்.. இல்லனா ப்ருத்வி மாதிரி ஒரு கோல்டன் மேனை மிஸ் பண்ணி இருப்பேன்..”
அவள் சொன்னதைக் கேட்டு இப்போது சாகரை பார்வையில் ஒரு கர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ப்ருத்வி..
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த வடிவமைப்பாளரோ “நல்ல ஜோடி.. யார் கண்ணும் படாம இருக்கணும்.. இவங்க இப்படியே எப்பவும் சந்தோஷமா இருக்கணும்..” என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டான்..
சாகரும் ஷாஹித்தும் சென்ற பிறகு மான்விழியை தன் அணைப்புக்குள் கொண்டு வந்த பிருத்வி “ஓய் பொண்டாட்டி.. அவன் உன்னை அழகா இருக்கன்னு சொன்னா வெட்கப்பட்டு சிரிக்கிற.. உன்னோட வெட்கம் எனக்கு மட்டும் தான் டி சொந்தம்.. வேற யார் முன்னாடியாவது வெட்கப்பட்ட அப்புறம் அதுக்கு தண்டனை ரொம்ப ஹெவியா இருக்கும்..” என்க
“ஆஹான் .. அப்படி என்ன தண்டனை கொடுப்பீங்க மை டியர் ஹஸ்பன்ட்..” என்று அவள் அவனை சீண்ட “அடியே இது ஆஃபீஸ் டி.. வீட்டுக்கு வா.. வெச்சு செய்யறேன் உன்னை..” என்க
“பார்க்கலாம் பார்க்கலாம்..” என்றவள் அவனை விட்டு விலகி “நான் ஃபேக்டரிக்கு போய் பாத்துட்டு வரேன்.. நீங்க இங்க சமத்துப் பிள்ளையா உட்கார்ந்து உங்க வேலையை பாருங்க..” என்று அந்த அறையை விட்டு சென்றாள்..
போகும் அவளை ஒரு அழகிய புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
மான்விழி அந்த நிறுவனத்தில் இப்படி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க சகுந்தலாவோ தன் முதல் வழக்கை எதிர்கொள்ள தயாரானாள்..
ஆம்.. விஷ்வா ஊருக்கு வந்திருந்தான்.. அதே சமயம் மார்க்கண்டேயன் வீட்டில் ஊர்மிளா படிப்பை முடித்துவிட்டு திரும்பி வந்திருந்தாள்..
ஏனோ அவள் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது.. முன்னே இருந்த அந்த உற்சாகம் அவள் முகத்தில் இப்போது இல்லை.. வில்விழி பலமுறை அவளோடு பேசி அவள் மனதில் என்ன கவலை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயன்றும் அவளால் எதையுமே அறிய முடியவில்லை…
ஒரு நாள் வில்விழி வித்யாவோடு அந்த வழக்கு விஷயமாக வெளியே சென்று இருக்க அப்போது ஒரு உணவகத்தில் லக்ஷ்மணும் ஊர்மிளாவும் உணவு உண்டு கொண்டே பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்..
வித்யா அவளிடம் அவர்களிடம் போய் பேசலாம் என்று சொன்னபோது அவளை பிடித்து நிறுத்தி வைத்தவள் “ஊர்மி எதுக்கு லக்ஷ்மணை தனியா பாக்கணும்? அவங்களுக்குள்ள..” என்று யோசித்தவள் “வித்யா நம்ம வேற ஹோட்டலுக்கு போலாமா?” என்றாள்..
“ஏன் கா.. நம்ப லக்ஷ்மணும் ஊர்மியும்தானே.. வாங்க.. அவங்க கிட்ட பேசிட்டு வரலாம்..” என்று வித்யா சொல்ல “அவங்களுக்கு நம்ப கூட சேர்ந்து பேசணும்னா இந்த ஹோட்டலுக்கு அவங்க நம்மளையும் கூட்டிட்டு வந்து இருப்பாங்க.. அவங்க தனியா பேசணும்ங்கறதுக்காக தான் இங்க வந்து இருக்காங்க.. அதை நாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. வா.. நம்ம வேற ஹோட்டலுக்கு போலாம்..” என்று அவள் சொல்ல
வித்யாவுக்கும் அவள் சொன்னது சரி என்று தோன்றியது..
வீட்டிற்கு வந்தவுடன் ஊர்மிளாவிடம் அதைப்பற்றி பேசினாள் வில்விழி.. “ஊர்மி இன்னைக்கு ஹோட்டல்ல நீ லக்ஷ்மனோட பேசிட்டு இருக்கிறதை நான் பார்த்தேன்.. எனக்கு கேட்கலாமான்னு தெரியல.. உன் பிரைவசில தலையிடணும்னு நான் நினைக்கல.. ஆனா உனக்கும் சக்கரவர்த்தி அங்கிள் பையனுக்கும் கல்யாணம் பேசி வச்சிருக்காங்க இல்ல..?அதுக்காக மட்டும் தான் கேட்கிறேன்.. நீ லக்ஷ்மணை..”
“ஆமா அண்ணி.. நானும் லக்ஷ்மணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்.. ஏற்கனவே இங்க காலேஜ் படிக்கிற டைம்லருந்து நான் அவனை லவ் பண்ணிட்டு இருக்கேன்.. ரொம்ப வெயிட் பண்ணிட்டேன் அண்ணி… எனக்கு இதுக்கு மேல அவனை விட்டு இருக்க முடியல.. எப்படியாவது எங்க கல்யாணத்தை ஒரு மூணு மாசத்துக்குள்ள நடத்தி வச்சிருங்க அண்ணி.. நீங்க போட்டு இருக்க கண்டிஷன் பத்தி எல்லாம் அம்மா என்கிட்ட சொன்னாங்க.. இந்த அஞ்சு மாசத்துக்குள்ள லக்ஷ்மணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்கன்னா எனக்கும் அதுக்கப்புறம் பிரச்சினை இல்லாம இருக்கும் அண்ணி..” என்றாள் அவள்..
“ஓகே.. அப்புறம் எதுக்கு லேட் பண்ணிக்கிட்டு.. வா உடனே பேசிடலாம்..” என்றவள் அந்த வீட்டிலிருந்த எல்லோரையும் வரவேற்பறைக்கு அழைத்தாள்..
“ஒரு முக்கியமான விஷயம் பேசத் தான் உங்க எல்லாரையும் கூப்பிட்டு இருக்கேன்.. நான் ஊர்மி கல்யாணத்தை பத்தி பேச தான் உங்க எல்லாரையும் இங்க வரவழைச்சேன்.. ஊர்மி ஒருத்தரை விரும்புறா.. அவரை உடனே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறா.. இன்னும் ஒரு மாசத்துக்குள்ள அவ விரும்பறவருக்கும் அவளுக்குஅ நிச்சயதார்த்தம் பண்ணி மூணு மாசத்துல கல்யாணத்தை முடிச்சுடலாம்ன்னு நினைக்கிறேன்.. நீங்க எல்லாம் என்ன சொல்றீங்க?”
மார்க்கண்டேயன் சட்டென தன் இடத்தை விட்டு எழுந்தார்..
“என்ன நெனச்சிட்டு இருக்க நீ? உன் இஷ்டத்துக்கு ஆடுவியா? ஏன் அவளுக்கு அம்மா அப்பான்னு நாங்க இல்ல.. நாங்க எல்லாம் என்ன செத்தா போய்ட்டோம்..? அவளுக்கு எப்போ யாரை எப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்களுக்கு தெரியும்.. நீ இதுல தலையிடாதே.. அவ எங்க பொண்ணு..”
“ஓகே.. கரெக்ட்.. அவ உங்க பொண்ணு.. நான் தலையிடல.. ஆனா அவ உங்களுக்கு மட்டும் பொண்ணு இல்ல இல்ல..? அத்தைக்கும் பொண்ணு தானே..? இந்த விஷயத்துல அத்தை முடிவு எடுக்கலாம் இல்ல..? அவங்க முடிவு என்னன்னு கேளுங்க.. அவங்க முடிவும் அதே தான்னா அப்புறம் ஊர்மியோட விருப்பத்தை பத்தி நாம பேசலாம்.. முதல்ல அவங்க முடிவை கேட்கலாம்..”
சொன்னவள் தாமதிக்காமல் சகுந்தலாவின் பக்கம் திரும்ப சகுந்தலா “ஊர்மி.. யாரடி லவ் பண்ற..?” என்று நேரடியாக தன் மகளிடம் கேட்டார்..
“அம்மா.. அது வந்து.. நான் நம்ப அகாடமியில வேலை செய்றாரு இல்ல லட்சுமண்..”
அவள் சொல்லி முடிக்கவில்லை “அந்த அனாதை பயலை தான் காதலிக்கிறியா நீ.. ஒன்னும் இல்லாத அந்த பயலுக்கு உன்னை கட்டி வைக்கணுமா? இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்..”
“எதுக்கு நீங்க ஒத்துக்கணும்..? அவ மேஜர்.. அவ யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவ தான் முடிவு பண்ணனும்.. சரி.. நீங்க சொன்ன பாயிண்ட்டுக்கே வரேன்.. அத்தையை கேட்கலாம்.. நீங்க ஒரு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்க.. இப்போ ஊர்மி ஒரு மாப்பிள்ளையை பார்த்து வச்சிருக்கா.. இந்த ரெண்டு பேர்ல யாருக்கு ஊர்மியை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அத்தை சொல்லட்டும்.. ஏன்னா ஒரு அம்மாவா ஒரு பொண்ணா அத்தையை விட இந்த விஷயத்துல பர்ஃபெக்ட்டா வேற யாராலயும் முடிவு எடுக்க முடியாது.. சொல்லுங்க அத்தை.. சக்கரவர்த்தி அங்கிள் பையனை உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்களா? இல்ல லட்சுமணை உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்களா..?”
“அவ லக்ஷ்மணை விரும்புறானா அவரையே கல்யாணம் பண்ணிக்கட்டும்.. என் பொண்ணு நல்லா படிச்சிருக்கா.. அவ பெரிய வேலைக்கு போய் பெரிய ஆளா வரணும்.. சக்கரவர்த்தி குடும்பத்துக்குள்ள போனா அவளை என்னை மாதிரியே வீட்டில அடைச்சு வச்சுடுவாங்க.. வேண்டாம்.. அவ லட்சுமணையே கல்யாணம் பண்ணிக்கட்டும்..”
சகுந்தலா சொல்லி முடித்ததும் மார்க்கண்டேயரோ “சக்கு.. என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா? உனக்கு அவ்வளவு ஏத்தமாயிருச்சா?” என்று கர்ஜித்தபடி அந்த வயதிலும் பாய்ந்து சகுந்தலாவை அடிக்கவே வந்திருந்தார் அவர்..
ஓங்கிய அவர் கையை அழுத்தமாக பிடித்தார் சகுந்தலா.. அவர் கையை உதறி தள்ளியவர் “போதுங்க.. என்னை அடக்கி அடக்கி என் வாழ்க்கையை கெடுத்தது போதும்.. என் பொண்ணாவது அவ விருப்பப்படி வாழட்டும்ங்க.. அவளுக்கு என்ன விருப்பமோ அந்த வேலையை செய்யட்டும்.. அவள வீட்டுக்குள்ள ஒரு கூண்டுக்குள்ள என்னை மாதிரி அடைச்சு வைக்க வேண்டாம்.. இந்த முறை நீங்க என்ன செஞ்சாலும் சரி.. நீங்க என்னை வீட்டை விட்டே போக சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.. உங்களை விட்டு பிரிஞ்சு போக கூட நான் தயாரா இருக்கேன்.. ஆனா என் பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போக விட மாட்டேன்.. அவ நிச்சயமா அவ விரும்பற லக்ஷ்மணை தான் கல்யாணம் பண்ணுவா..”
தைரியமாக பேசினார் சகுந்தலா.. அவ்வளவுதான் அப்படியே ஒடுங்கி அமர்ந்து விட்டார் மார்க்கண்டேயன்.. அதுவரை தன் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாத சகுந்தலாவா இது.. எப்படி அவளுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று அப்படியே பிரமித்து போய் உறைந்து அமர்ந்து விட்டார் அவர்..
இப்போது சகுந்தலா அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர் கையைப் பிடித்த படி “ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க.. நீங்க இதுவரைக்கும் என்னை எப்படி வச்சிருந்தீங்க? இந்த ஒரு மாசம் நான் எப்படி இருந்திருக்கேன்? இந்த ஒரு மாசமா நீங்க சகுந்தலாவா மாறி இருக்கீங்க.. ஆனா நான் மார்க்கண்டேயனா முழுசா மாறலைங்க.. இப்பவும் உங்ககிட்ட அனுசரணையா தான் பேசிகிட்டு இருக்கேன்.. நான் உங்களை மாதிரி மாறினா என்ன நடக்கும்னு யோசிச்சு பாருங்க.. எதுக்கெடுத்தாலும் கோபம்.. கையில கிடைச்ச பொருளை தூக்கி எறியறது.. வீட்டில் ரூல்ஸ் போடுறது.. மத்தவங்க எல்லாம் உங்க இஷ்டத்துக்கு தான் எல்லாத்தையும் செய்யணும்.. அவங்க எப்படி எப்படி இருக்கணும்னு நீங்க முடிவு பண்றீங்க.. பிள்ளைங்களை கூட ஒரு வயசுக்கு மேல இப்படித்தான் இருக்கணும்னு சொல்ல முடியாதுங்க.. அப்படி இருக்கும்போது நீங்க உங்க பொண்டாட்டி மருமக மக எல்லாரையும் ஆட்டி வைக்கிறீங்க.. உங்களை மாதிரி நான் மாறினா உங்களால ஒரு நாள் கூட என்னோட வாழ முடியாது.. ஆனா 50 வருஷமா உங்களோட நான் வாழ்ந்து கிட்டு இருக்கேன்.. என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா அது முழுக்க நீங்க மட்டும் தாங்க நெறைஞ்சி இருக்கீங்க.. என்னை என்னால பாக்கவே முடியல.. இப்படி ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு நான் வாழாமலே இருந்திருக்கலாம்ன்னு தோணுதுங்க.. ஆனா இந்த ஒரு மாசமா நான் சகுந்தலாவா வாழ்ந்து இருக்கேன்.. மார்க்கண்டேயனோட சகுந்தலாவா இல்ல.. வெறும் சகுந்தலாவா சந்தோஷமா சிறகடிச்சு பறக்கிற பறவை போல வாழ்ந்து இருக்கேன்.. இந்த வாழ்க்கை தாங்க சந்தோஷம்.. உங்க பொண்ணு.. என்ன இருந்தாலும் அவ உங்க இளவரசி இல்லையா? அவ சுதந்திரமான பறவை மாதிரி வாழணும் இல்லையா? அவ ஒரு கூண்டுக்குள்ள அடைஞ்சு வாழணும்னு நினைக்கிறீங்களா? இப்ப நீங்க சொல்லுங்க.. அவளுக்கு ஏத்த மாப்பிளை யாரு?”
அந்தக் கேள்விக்கு அவரால் லக்ஷ்மன் என்பதை தவிர வேறு பதிலை சொல்ல முடியவில்லை.. முற்றிலுமாக அந்த நிமிடம் வேறு மனிதராக மாறிப் போயிருந்தார் மார்க்கண்டேயன்.. அவருக்கு எல்லாமே புரிந்தது.. தான் செய்த தவறுகள் கொடுமைகள் அடக்குமுறைகள் எல்லாமே அந்த வீட்டில் அளவுக்கு மிஞ்சியதாக இருந்தது என்று புரிந்து போனது..
“ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க.. இந்தர் ப்ருத்வி ஊர்மி மூணு பேருமே உங்களுக்கு மரியாதை கொடுக்குறாங்க.. மதிப்பு கொடுக்கிறாங்க.. உங்களை யார்கிட்டயும் விட்டுக் கொடுக்கறதில்லை.. உங்களை அவமானப்பட விடறதில்லை.. ஆனா இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு நெனைக்கறீங்க.. அவங்க உங்க மேல வச்சிருக்கற பாசமும் அன்பும் தான் காரணம்னா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்.. ஆனா அப்படி இல்லைங்க… நீங்க அப்பா.. அந்த ஸ்தானத்துக்கு குடுக்குற பயம் கலந்த மரியாதை மதிப்பு மட்டும் தான் அது… ஆனா உங்களுக்கு அந்த மரியாதையை உங்க மேல அவங்க வச்சிருக்கற அன்புனாலயும் பாசத்துனாலயும் குடுக்கணும்னு நான் நெனைக்கிறேன்.. நீங்க அவங்களை கொடுக்க வைக்கணும்.. அதுல தான் அப்பாவா உங்களோட வெற்றி இருக்கு.. உங்களுக்கு புரியுதா?”
சகுந்தலா முதல் முறையாக இவ்வளவு நீளமாக தன் வீட்டில் அதுவும் மார்க்கண்டேயரிடம் பேசி இருக்கிறார்..
இப்போது மார்க்கண்டேயருக்கு பேச வார்த்தைகளே இல்லை.. சகுந்தலா இவ்வளவு நாள் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே அமைதி இப்போது மார்க்கண்டேயரிடம் குடி கொண்டது..
“என்னங்க எதுவுமே பேச மாட்டேங்கறீங்க..?”
சகுந்தலா கேட்க மார்க்கண்டேயன் அவள் கைபிடித்து அதில் முகத்தை புதைத்துக் கொண்டவர் உடல் அழுகையில் குலுங்கியது.. பதறி போனார் சகுந்தலா.. அவர் தலையை வருடி முகத்தை நிமிர்த்த “என்ன பேசட்டும் சக்கு.. என்னை மன்னிச்சுடு.. உன் வாழ்க்கையை இத்தனை நாளா நரகமாக்கிட்டு இருந்து இருக்கேன்.. அன்னைக்கு என் கையில் அந்த சூடு பட்டப்போ உன் கையில இருந்த தழும்பை பார்த்ததும் நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்றது அந்த நிமிஷமே எனக்கு புரிஞ்சிருச்சு.. உன் வார்த்தையால என் மண்டைல அடிச்சு ஒரே நிமிஷத்துல என்னை எனக்கு புரிய வெச்சுட்ட.. நான் முழுசா மாறிட்டேன்னு உனக்கு தெரிய வைக்க இதை தவிர எனக்கு வேற வழி தெரியல.. லக்ஷ்மண் வீட்டுக்கு சம்மந்தம் பேச எப்ப போகலாம்னு.. சொல்லுங்க மேடம்.. நீங்க ஆர்டர் பண்ணுங்க.. நான் அதை செய்யறேன்.. அடுத்த மாசம் லக்ஷ்மனுக்கும் ஊர்மிக்கும் நிச்சயதார்த்தம் நடத்திடலாமா..?”
அவர் சொன்னதைக் கேட்ட அனைவருமே மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனார்கள்.. ஆனால் அப்போதும் ஊர்மியின் முகத்தில் அதீத உற்சாகம் இல்லை.. சாதாரணமாகத்தான் இருந்தாள்.. இந்தப் பெண்ணுக்கு இன்னும் என்னதான் வேண்டும் என்று யோசித்தாள் வில்விழி..
ஏதோ இன்னும் சரியில்லை என்று தோன்ற அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று நேராகச் சென்று அவளை தனியாக அழைத்துக் கொண்டு போய் “ஊர்மி.. உனக்கு என்னதான் பிரச்சனை? ப்ளீஸ்.. என்கிட்ட உண்மையை சொல்லு.. லட்சுமணை நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன பிறகும் உன் முகத்தில சந்தோஷமே இல்லை.. என்ன தான்மா ப்ராப்ளம்..? என்னை உன் ஃப்ரெண்டா நினைச்சுக்கோ.. நிச்சயமா என்னை தாண்டி விஷயம் வெளியில போகாது.. ஏதாவது சீரியஸ் விஷயமா? சொன்னா தானே அதுக்கு ஏதாவது சொல்யூஷன் இருக்கான்னு பார்க்கலாம்..”
வில்விழி கேட்க “அண்ணி நீங்க இல்லனா இந்த கல்யாண பேச்சே நடந்திருக்காது.. அதனால உங்க கிட்ட சொல்றேன்.. நான் யுஎஸ் ல இருந்தப்போ சக்கரவர்த்தி அங்கிளோட பையன் என்னை மீட் பண்ணான்.. அவன்கிட்ட எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு நான் சொன்னேன்.. ஆனா அவன் எங்க வீட்ல எங்க அப்பா டிசைட் பண்ணறது தான் நடக்கும்..உங்க அப்பாவும் எங்க அப்பாவும் சேர்ந்து முடிவு பண்ணியாச்சு.. இனிமே நம்ம என்ன நினைச்சாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டின்னு சொல்லிட்டு போறான்.. அது மட்டும் இல்லாம அங்க அவன் லைஃப்பே வேற மாதிரி இருக்கு அண்ணி.. அவனுக்கு நிறைய பொண்ணுங்களோட..”
“என்ன..? என்ன சொல்ற” விழி கேட்க..
“ஆமா அண்ணி.. அவன் என்னை கூப்பிட்டு பேசினது ஒரு கிளப்ல தான்.. அந்த கிளப்லயே நிறைய பொண்ணுங்க அவனோட ஒரசிக்கிட்டு அவன் கூட ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு அவனுக்கு முத்தம் கொடுத்துக்கிட்டு பார்க்கவே அருவருப்பா இருந்தது.. போதா குறைக்கு அங்க ஒரு பொண்ணோட சேர்ந்து அவன் ஒரு ரூமுக்குள்ள வேற போயிட்டான்..”
அதிர்ந்து போனாள் வில்விழி..
“இந்த பையனுக்கா உன்னை கட்டி வைக்கணும்னு நினைச்சாரு உங்கப்பா.. அது சரி.. அவருக்கு என்ன தெரியும்.. அந்த பையன் எப்படின்னு.. அவன் யூஸ்ல இருந்து இல்ல இந்த அக்கிரமம் பண்ணிக்கிட்டு இருக்கான்..” என்றவள்..
“சரி.. அதான் அந்த பிராப்ளம் இப்ப சால்வ் ஆயிடுச்சு இல்ல..? நீ இப்ப லக்ஷ்மணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு உங்க அப்பாவே சொல்லிட்டாரே.. இன்னும் எதுக்கு மூஞ்சை உம்முன்னு வச்சிருக்கே.. இனிமே அந்த பையன் எப்படி இருந்தா நமக்கு என்ன..?”
அவள் கேட்க “இல்ல அண்ணி.. அது மட்டும் காரணம் இல்லை.. அன்னைக்கு கிளப்ல யாரோ எனக்கு மயக்க மருந்து கொடுத்து தப்பா எதோ நடந்திருக்கு அண்ணி..”
அதைக் கேட்டு சிலையாய் ஸ்தம்பித்து போனாள் வில்விழி..
“என்ன சொல்ற ஊர்மி..?” என்று அதிர்ந்து போய் கேட்டவளிடம் “ஆமா அண்ணி.. என் வயத்தில ஒரு குழந்தை வளருது.. இங்க வரதுக்கு முதல் நாள் ஒரே மயக்கமாவும் வாமிட்டிங்காவும் இருந்துச்சு.. ஊருக்கு வரணுமேன்னு ஹாஸ்பிடல் போனேன்.. அங்க செக் பண்ணப்போ நான் பிரக்னண்டா இருக்கேன்னு தெரிஞ்சுது அண்ணி..”
வாயில் கையை வைத்து அப்படியே உறை பனியாய் உறைந்து போனாள் வில்விழி..
“என்னம்மா சொல்ற? உன் வயத்தில குழந்தை வளருதா..?”
“அதுக்கு அப்பா யாருன்னு தெரிஞ்சாலாவது சட்டையை பிடிச்சு அவனை நியாயம் கேட்கலாம்.. அப்பா யாருனே தெரியாத குழந்தையை அபார்ட் பண்ணிடலாம்னு தான் நினைச்சுட்டு நான் இங்க வந்தேன்.. லக்ஷ்மண் கிட்டயும் அதை பத்தி தான் பேசினேன்.. லக்ஷ்மண் தான் இந்த குழந்தையை நான் அபார்ட் பண்ண வேணாம்னு சொன்னாரு.. அவரு இந்த குழந்தைக்கு அப்பாவா இருக்கேன்னு சொன்னாரு.. அவருக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை.. நான் எப்படி இருந்தாலும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார்.. என் வயிறு வெளிய தெரியறதுக்கு முன்னாடி இந்த கல்யாணம் நடக்கணும்னு தான் மூணு மாசத்துக்குள்ள சீக்கிரம் இந்த கல்யாணத்தை பண்ண சொன்னேன் அண்ணி..”
“சரி நீ சொன்னபடியே இது யாருக்கும் வெளியே தெரிய வேண்டாம்.. யாருன்னே தெரியாத எவனோ ஒருத்தனை தேடி வாழ்க்கையை தொலைக்கறதை விட நீ எப்படி இருந்தாலும் உன்னை ஏத்துக்குறேன்னு சொல்ற லக்ஷ்மணை கல்யாணம் பண்றது தான் சரி.. அன்னைக்கு நடந்ததை ஒரு கனவா நினைச்சு மறந்திரு.. மூணு மாசம் கூட தள்ளி போட வேண்டாம்.. அடுத்த மாசமே நிச்சயம் பண்ணி அதுக்கு அடுத்து ஒரு வாரத்திலேயே கல்யாணத்தையும் வச்சுக்கலாம்.. நான் மாமா கிட்ட பேசுறேன்” என்றாள் வில்விழி..
சொன்னபடியே எல்லோரிடமும் பேசி அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தாள்..
இதனிடையே விஷ்வாவையும் அவன் நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள்.. கைதுக்கு பிறகு அவர்கள் சொன்னபடி எந்த காணொளியையும் சோசியல் மீடியாவில் போடவில்லை.. வித்யாவுக்கு அப்படி என்றாவது போட்டு விடுவார்களோ என்று பயம் இருந்தாலும் இன்று போடாதவர்கள் இனிமேலா போடப் போகிறார்கள் என்று அந்த பயத்தை கைவிட்டாள்..
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது.. சகுந்தலா மிகவும் திறமையாக வாதாடி அந்த வழக்கை வித்யாவுக்கு சாதகமாக மாற்றி இருந்தார்.. ஊர்மிளாவின் நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து வரும் நாளை அந்த வழக்கில் தீர்ப்பு நாளாக அறிவித்தார் நீதிபதி..
நிச்சயதார்த்த வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன..