வேந்தன்… 10

5
(5)
வேந்தன்… 10
ரவிக் ஆத்மா துருவ் மூவரும் தங்கள் ஊருக்கு வந்துவிட, “சரிடா மச்சான் பத்திரமா வீட்டுக்குப் போ, காக்கா தூக்கிட்டு போகப்போகுது” கலாய்த்தபடி துருவ்கு விடைக்கொடுத்தார்கள். 
“அயோக்கிய ராஸ்கல்ஸ்” காலில் இருந்த செருப்பை கழட்டப் போனவனை நண்பர்களின் ஆராவாரமான சிரிப்பு தடுக்க, நிமிர்ந்து நின்றவன் அசட்டு சிரிப்போடு அவர்களை முறைத்தான்.
“என்ன மச்சி, இனி செருப்பை நினைப்ப?” ரவிக் ராகம் பாடினான். 
“பிரிக்க முடியாத பந்தம்” ஆத்மா இழுத்து சொல்ல. 
இதற்கு மேல் போனால் இங்கேயும் மானம் போவும் என்பதால் “சரிடா கிளம்புங்க. பார்ப்போம்” துருவ் அவர்களுக்கு பை சொல்லி நிமிர, சிபியின் கார் மின்னல் போல அவனருகில் வந்து நின்றது. 
“ஹாய் மச்சி” நண்பர்கள் இரு கைகளையும் அசைத்து ஹாய் சொல்ல.
“ஹாய்!” ஒற்றை கை உயர்த்தி ஸ்டைலாக ஹாய் சொன்னான் சிபின்.
“கெத்துடா!” மூவரின் விழிகளும் சிபினின் ஆளுமையான தோற்றத்தில் அகல விரிந்தது. 
ஆத்மா ரவிக் இருவர்களுக்கும் எப்போதும் வரும் வியப்பு இப்போதும் வந்து போனது. சிபின் துருவ் இருவரும் அச்சு அசலாக ஒரே சாயல்தான். ஆனால் இருவரின் நடத்தையிலும் நூறு வித்தியாசங்களைக் கூறிவிடலாம். 
ஆம் சிபின் துருவ்வின் சகோதரன். ட்வின்ஸ். என்ன துருவ் போல சாக்லேட் பாய் இல்லை இவன், கரடு முரடான ஆள். ஓங்கி அடிச்சான்னா ஒன்றரை டன் வெயிட்டோ இல்லையோ நிச்சயம் ஆள் காலி. 
தேகத்தை கட்டுக்கோப்பாக வைக்க ரொம்பவே மெனக்கெடுவான். எதிராளி நம்மை பார்த்து மரியாதையை மட்டுமில்ல பயத்தையும் சேர்த்தே தரணும்டா என்பான். 
வீட்டில் மட்டுமே அகமும் முகமும் மலர உதட்டில் சிரிப்பிருக்கும். வீட்டின் வாயிலை தாண்டி விட்டான் எனில் மருந்துக்கும் புன்னகை இருக்காது அவனிடம். அப்படியே அவன் தந்தை ஆரியனின் குணம் இவனுக்கு. 
எப்போதும் ஒரு ராயல் லுக் அவனிடம் இருந்தே தீரும். 
துருவ்க்கு அப்படியே நேர் எதிர் இவன். 
துருவ் காரிலேறி அமர்ந்துக்கொள்ள. கார் சீறிப்பாய்ந்தது. 
துருவ் சீட்டில் சாய்ந்து கண்களை மூடியமர்ந்து கொள்ள. அவனை ஒரு பார்வை பார்த்த சிபின் கண்ணில் துருவ் தாடையில் இருந்து கீறல், மற்றும் சிவப்புத் தழும்பு பட்டுவிட்டது. ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அவனிடம். 
கார் வேகம் குறைய கேட் திறக்கப்பட்டது. 
சென்னையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பெரிய மாளிகை அது. ஒதுக்குப்புறமாக என சொல்ல முடியாது, ஒரு காட்டையே விலைக்கு வாங்கி அங்கே தனிமையை விரும்பி கட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளை நிறக் கல் கொண்டு செதுக்கி எடுத்தது போல வெண்ணிறத்தில் ஒயிலாய் மின்னியது. 
போகும் பாதையில் இரண்டு புறமும் பலவர்ண ரோஜா செடிகளை நட்டிருந்தார்கள். ஒன்று கூட மற்ற ரோஜாவின் கலர்களோடு ஒத்து வரவில்லை அந்த அளவிற்கு அதி கவனம் செலுத்தி நடப்பட்டு இருந்தது. 
ரோஜாவை ஒட்டி மற்றொரு அடுக்குகளாக மல்லிகைச் செடி வகைகள் அளவாய் வடிவமைக்கப்பட்டு நிறைய பூக்களோடு ரோஜா செடியை விட கொஞ்சம் உயரமாக இருந்து வைத்தது.
அதனை அடுத்து சற்றே உயரமாக ஒட்டு ரகத்தை சேர்ந்த சென்பக செடிவகைகள் சின்னதிலேயே பூக்களை தரும் ரகம் அது. ஆரஞ்ச் மற்றும் சந்தன நிறங்களில் பூக்கள் மனம் வீசிக்கொண்டு இருந்தது. 
அடுத்தது பாரிஜாத மலர்கள் இப்படி நான்கு அடுக்குகளை நடைபாதையின் இரு பக்கமும் வடிவமைத்திருந்தார்கள். 
கூடவே ஆங்காங்கே சிறு சிறு தொட்டிகளில் மரிக்கொழுந்தும் துளசியுமாக மனம் வீசிக்கொண்டு இருந்தது. 
அதனைச்சுற்றி அழகுக்கு அழகு சேர்ப்பது போல முன்புறம் முழுவதும் பலவர்ண பூக்கள் நிரம்பிய மரங்களும் அப்படியே பின்புறமாகச் சென்றால் அணைத்து வகையான கனிவகை மரங்களும் அங்கே வரிசைகட்டி இருந்தது. 
அங்கே மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்தாலே அங்கே இருந்து வரும் நறுமணத்தில் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். 
அங்கே இருக்கும் சிறு கல் கூட கர்வமாய் சிரிக்கும். நான் இருக்கும் இடத்தின் மதிப்பு என்ன தெரியுமா என்று.  
வாயிலில் தந்தத்தினால் ஆன பெண் சிலை ஒன்று ராணியின் கம்பீரத்தோடு வரவேற்பாய், ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தது. அதற்கு பட்டு கட்டி அலங்கரிக்கவென்றே ஒரு பெண் நியமிக்கப்பட்டு இருக்கிறாள். தினமும் ஒரு பட்டுடையில், நெற்றி வகிட்டில் வைர நெற்றிச்சுட்டிகளும், கழுத்தில், இடையில் ஆபரணங்களுமாக கம்பீரமாய் ஜொலிக்கும் அந்தப் பெண் சிலை. 
அதே பிரமிப்போடு உள்ளே சென்றால் நிச்சயம் மயக்கம் போடாத குறையாகத்தான் நிற்க வேண்டும். மைதானம் போன்ற ஹால் பிரம்மாண்டமாய் வீற்றிருந்தது. 
இருபுறமும் வரிசையாக கம்பீரமான பெரிய பெரிய தூண்கள் இருபதுக்கும் மேலே இருக்கும். 
அங்கேயே முன்புறமாக இருக்கைகள் போடப்பட்டு இருந்தது விருந்தினர்களுக்காக. 
கொஞ்சம் உள்ளே சென்றால் தூண்களுக்கு மறுபுறமாக பெண்களுக்கு காய்கள் கட் பண்ண அல்லது ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே பூக்கள் தொடுக்க இப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக தரையில் அமர்ந்து சாப்பிடுவது போல ஒரு பெரிய டைனிங் டேபிளும் அதன் கீழே பலகையால் ஆன முக்காளிகளும் போடப்பட்டு இருக்கும். 
சில சமயம் அந்த வீட்டின் குழந்தைகள் தங்கள் ஹோம்வொர்க்கை அதில்தான் அமர்ந்து எழுதுவார்கள். 
மற்றொரு டேபிள் போடப்பட்டு அதில் செஸ் அல்லது ஏதேனும் விளையாட்டுகளை அமர்ந்து விளையாடுமாறும் போடப்பட்டு இருக்கும். இளையவர்கள் ஒன்றாய் அமர்ந்து லூட்டி அடிப்பதற்கு ஏற்ற இடமும் அதுதான். அதுவும் சைந்தவியின் மகன் சரத் குறும்பு செய்துவிட்டு வசமாக மாட்டிக்கொண்டு முழிப்பது பார்க்கவே கண் கொள்ளாக்காட்சியாக இருக்கும் நமக்கு! 
விருந்தினர்களின் பார்வையில் தூண்களுக்கு மறுபுறம் இருப்பது தெரியாது என்றாலும் அங்கே இருக்கும் பெண்களுக்கும் இளையவர்களுக்கும் ஹாலில் என்ன நடக்கிறதென்று தெரியும்.   
ஹாலில் பிரம்மாண்டமாய் ஒரு விநாயகர் சிலை எப்படிப்பட்டவர் உள்ளே வந்தாலும் கையெடுத்துக் கும்பிடாமல் இருக்க முடியாது.. 
தினமும் பூஜை நடப்பதற்கு அறிகுறியாக அந்த சிலையின் கழுத்தில் பூ மாலையும் அதன் கீழே ஒரு தட்டில் மூடிவைக்கப்பட்ட பிரசாதமும் இருந்தது. 
“ஹாய் அங்கிள்” துருவ் தோட்டக்காரருக்கு ஹாய் சொல்ல.
“துருவ்!” சிபினின் சிம்மக் குரல் காதில் ஒலிக்க, வலித்த காதை ஒருமுறை தேய்த்துவிட்டவன், 
“என்ன சிபின்?” உடன்பிறந்தவனை நோக்கினான்.
“வொர்க்கஸ், தகுதியில்லாத ஆட்களோட பழக கூடாதுன்னு சொல்லியிருக்கேன் உனக்கு. ஆனால் உன்னோட நடவடிக்கை அப்படியில்ல துருவ்” சிபினின் கழுகு விழிகள் துருவ் கன்னத்தில் இருந்த காயத்தையே ஆராய்ந்தது.
சிபின் போல சீரியஸாக யோசிக்க வராத துருவ் விழிகள் அன்னையைத் தேடியது. உலகில் உனக்கு யார் ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டால் தன் தாய் தந்தை என்றுதான் சொல்வான். 
“துருவ்” சிபினின் குரல் ஓங்கி ஒலிக்க, ஒருகணம் உடல் உதறிப்போட, நின்றவன், அடுத்த நொடி “அம்மாஆஆஆ பேயி!” என்பது போல நிற்காமல் வீட்டுக்குள் ஓடினான் தாயை தேடி. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!