வேந்தன்… 20
ரொம்ப நேரம் தோழிகள் அப்படியே அமர்ந்திருக்க, கதவை தட்டும் ஓசையிலேதான் சுயநினைவுக்கு வந்தனர். நளிரா பதறி எழுந்திருக்க, “அம்மாதான் நளி. நீ படு. நான் ஏதாவது சொல்லிக்கறேன்” என்றவள் அவசரமாக யோசித்தாள். நளிராவின் முகமே அவளது கவலையைக் காட்டித் தரும். அதனால் எதையாவது சொல்லி சமாளிக்கணுமே.
சட்டென யோசனை உதயமாக, “அம்மா கதவு திறந்திருக்கும்மா” என்று சொன்ன சுபியின் கரங்கள் நளிராவின் கழுத்துச் செயினை கழட்டியது.
“செயினை காணம்னு சொல்லிக்கலாம் நளி. உளறி வைக்காத எதையாச்சும்” தோழியின் காதில் சொல்ல.
“ம்ம்ம்” தலையை அசைத்த நளிரா எழுந்து அமர்ந்தாள்.
அறைக்குள் வந்த ராஜி நளிராவைப் பார்த்து அதிர்ந்து போனார். “என்னாச்சும்மா” இன்னும் கண்ணீர் விழிகளில் மிச்சமிருக்க, அவளருகில் அமர்ந்தவர் அவள் நெற்றியை தொட்டுப் பார்க்க, காய்ச்சல் எதுவுமில்லையாதலால், “சுபி வர்ற வழியில பசங்க கலாட்டா பண்ணாங்களாடி?” கவலையாகக் கேட்டார்.
நளிரா திகைத்து விழித்தாள். எப்படி சரியாகச் சொன்னார் என்று.
“அய்யோம்மா. பொண்ணுங்க அழுதா உடனே அதான்னு நீங்களா நினைப்பீங்களா? அதெல்லாம் ஒண்ணுமில்ல” நளிரா உளறும் முன்னார் சுபி சுதாரித்துச் சொல்ல.
“அப்புறம் எதுக்கு அழுறா? அதுவும் அவங்க வீட்டுக்குப் போகாம நம்ம வீட்டுலே வந்து?. மலர் பொண்ணுங்களை அதட்டிப் பேசவே மாட்டாளே” ராஜி விடவில்லை.
“செயின் காணம்மா. அதான் அங்க போகாம பயந்துட்டு இங்க வந்திருக்கா” தாயிடம் அடுத்து என்ன சொல்லி சமாளிப்பது என்ற இக்கட்டுக்கு உள்ளானாள் சுபி.
“அதான் சொல்றேனேடி. மலர் இதுக்கெல்லாம் பொண்ணுங்களை மிரட்ட மாட்டான்னு” ராஜி விடவில்லை. துருவித் துருவிக் கேட்டார்.
“அவங்க மிரட்ட மாட்டாங்கதான்மா. ஆனால் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம். இருக்கற பணம் அத்தனையையும் எடுத்து செலவு பண்ணுற நேரத்தில இவளுக்குன்னு மிச்சம் இருக்கறது இதான். அதுவும் மூணு பவுன் செயின். இந்த நேரத்துல காணம்னு சொன்னா விடுவாங்களா?” சுபி கொந்தளிக்க.
சுபியின் ஆவேசத்தில் சற்றே நிதானித்த ராஜி, இருந்தாலும் கேட்போமே என்று கேட்டார். “அதும் சரிதான். மூணு பவுன்னா ரெண்டு லட்சம் ஆகுதே” சுபி சொல்வதை ஆமோதித்த ராஜிக்கே நளிராவை எழுப்பி அமரவைத்து நாலு திட்டு திட்டலாம்னு இருந்தது.
“மலர் கூடப் பாவம்னு விடுவாடி. ஆனா வாணியக்காவும் ஆர்த்தியும் சைத்ராவும் சும்மா விடமாட்டாங்க” ராஜி கோபமாக நளிராவை முறைத்தார்.
தாயின் முகபாவனையை கண்டுவிட்ட சுபி “அதான் காணோம்னு ஆச்சேம்மா. நானும் இவளும் எப்படியாவது தேடி எடுக்கறோம். நம்ம கடையிலேதான் விழுந்திருக்கும். தயவுசெய்து இவளைப் பேசி வைக்காதீங்க. ஏற்கனவே அங்க போக பயந்து இங்க வந்திருக்கா” கையெடுத்து கும்பிட்டுவிட்டாள் சுபி.
“மூணு பவுன்டி. ஒருகாசா ரெண்டு காசா. ரெண்டு லட்சம்டி” நளிராவை என்ன ஏதுன்னு கேட்காம இவருக்கு மனசு ஆறாது போல இருந்தது.
“ஆஹா அப்படியா. சரி கேளுங்க. எனக்கு கடையில வேலை பார்க்க விருப்பமில்லைன்னு தப்பிச்சு வெளிய ஜாப் தேடிட்டேன். உங்களுக்கு சிக்கியிருக்க நேர்மையான ஆடு இவதான். இவளையும் அதையும் இதையும் சொல்லி பத்திவிட்டுருங்க” கடையை முன் வைத்துப் பேசியதும் ராஜி முழிக்க.
இனி அம்மாவின் கேள்வித் தொல்லை விட்டதென நிம்மதியாக உணர்ந்தவள் “எனக்கென்ன அப்பாதான் இனிமேல் கடைக்குப் போகணும். நீங்களும் போயாகணும் சொல்லிட்டேன்” இவர்களின் பேச்சைக் கேட்டிருந்த நளிராவுக்கே சிரிப்பு வந்துவிட்டது.
“சரிடி நான் போய் சாப்பாடு செய்யறேன்” ராஜி எழுந்திருக்க.
“அத்த எனக்கு வேண்டாம், பீச்ல சுண்டல் சாப்பிட்டுட்டேன்” எழுந்தமர்ந்த நளிரா சொல்ல.
“வெறும் தயிறுசாதமும் வடகமும்தான் நளிம்மா. சாப்பிட்டுட்டு போ. அழுத பிள்ளையை வெறும் வயிரோட அனுப்பி வைச்சா எனக்குத் தூக்கமே வராது” என்றவர் “பொறுப்பா இருக்கப்பாரு நளிம்மா. அதெப்படி கழுத்துல இருக்கறது காணாம போகும்” சொல்லிவிட்டு சுபியின் முகத்தைப் பார்க்காமல் போயே விட்டார்.
“இவங்களை!” சுபி சிரித்து விட, நளிராவும் சிரித்தவாறே எழுந்தவள் முகம் கைகால் கழுவி வந்தாள்.
தலையை வாரி கிளிப் போட்டு அடக்கியவள், மீண்டும் தோழியின் மடியில் படுத்துக்க, மனமோ அதே நினைப்பில் இருந்தது.
“இந்த விஷயத்தை அக்காகிட்ட சொன்னியாடி?” சுபி கேட்க.
“ப்ச் இல்லடி” மறுத்தாள் மூடிய கண்களோடு சோர்வாக பதில் தந்தாள்.
“பைத்தியமாடி நீ. எப்படியும் அவன் அங்கதான் இருந்திருப்பான். அக்காகிட்ட சொல்லிட்டா அவனை மிரட்டி வைப்பாங்கல்ல?”
“சொல்லலடி”
“ஏண்டி?” சுபிக்கு அங்கலாய்ப்பு.
“சொல்லி என்ன பண்ணுறது? இன்னும் ரெண்டு வாரத்தில கல்யாணம். அதுக்குள்ளே ஒரு பிரச்சனையை இழுத்துவிடவா? தாங்கமாட்டாங்கடி” மீண்டும் கண்ணீர் அரும்பியது விழிகளில்.
“நிறைய பொண்ணுங்க பண்ணுற தப்பே இதாண்டி. ஏதும் பிரச்சனைன்னா யாருகிட்டயும் சொல்லாம உள்ளுக்குள்ளயே வைக்கறது. அதை வச்சு இன்னும் பிரச்சனை பெருசாதான் போகும். பிறகு அய்யோ அம்மான்னு வருந்துறது. இதுக்கு தப்போ சரியோ ஆரம்பத்துலயே சொன்னா சரி செய்யலாமே” சுபி சொல்ல.
“எங்க வீட்டை பத்திதான் உனக்கே தெரியுமேடி” நளிரா மீண்டும் அழுகையில் விசும்ப.
“சரிடி விடு” அவளை தேற்றினாள். தெளிவானவளைத் தானே திரும்பவும் அழ வைத்ததை எண்ணி.
இதற்குள் சுபியின் அம்மா ராஜி, நளிராவின் வீட்டுக்கு போன் செய்து தகவலை சொல்லிவிட்டார்.
“உன் மக செயினை தொலைச்சிட்டு அழுதுட்டிருக்கா மலர்” என்று சொன்னவர், அவள் அங்கே வர பயந்து இங்கே வந்திருப்பதாகவும் சொன்னார்.
“சரிங்கண்ணி அவரை வரச் சொல்லறேன்” சொல்லிவிட்டு போனை வைத்த மலர், கணவரை தேடி வந்தார். மூணு பவுன் செயின் என்றதும் மனசு பதறினாலும், மகளின் மனநிலையே முக்கியமாய்ப் பட்டது இவருக்கு.
“என்னங்க. நம்ம பிள்ளை சிவாண்ணா வீட்டுலே இருக்காளாம். இங்க வர பயந்துட்டு அங்கே இருக்கா போல. நீங்களும் அதட்டாம பிள்ளையை கூட்டிட்டு வாங்க” படபடத்தார்.
“கொஞ்சம் விளக்கமா சொல்லும்மா. மொட்டையா சொன்னா என்ன நினைக்கட்டும்?” ராஜன் மனைவியை நிதானப்படுத்த.
கணவருக்கு விளக்கம் சொன்னவர், “இப்பவே அவளை இங்க கூட்டிட்டு வாங்க. அழுதுட்டிருக்காளாம். எனக்கு அவளை பாத்தே ஆகணும்” மலருக்கு அழுகைதான் வந்தது.
மகள்களின் கண்ணீரைக் காணாப் பொருக்காத பெற்றவர்கள் இவர்கள்.
இருவருக்குமே, பிள்ளை இங்கே வர பயந்துட்டு அங்கே அழுதுகிட்டு இருக்கான்னு தகவல் வரவும், பெத்த மனசு பதறிப்போனது.
“அம்மா ஆட்டோ கூப்பிட்டுக்கலாம். நாம எல்லோருமே போய்க் கூட்டிட்டு வரலாம்” சகோதரிகளுக்கும் பதறியது. என்னதான் அடிச்சுக்கிட்டு புரண்டாலும் ஒருவருக்கொருவர் உயிராக இருப்பார்கள்.
“அதும் சரிதாண்டி. நம்ம கனகு இப்பதான் சாப்பாட்டுக்கு வந்தா. அவளையே ஆட்டோவை எடுத்துட்டு வரச் சொல்லு. ஒண்ணாவே போயிட்டு வருவோம்” சொன்ன மலர் வெளியே வரவும் ஆட்டோ தயாராக நின்றது.
இங்கே நளி குடும்பம் வருவதை ராஜி சுபியிடம் சொல்லிவிட, “ம்மா நீங்க இருக்கீங்க பாருங்க. ரேடியோவே தேவையில்லை போங்க. அவங்களையும் பதற வச்சுட்டீங்க. நானே கூட்டிப் போய் விட்டுட்டு வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே என்னென்ன வேலை பாத்துட்டீங்க” தலையில் அடிச்சுகிட்டவள் தோழியை சரிப்படுத்த உள்ளே சென்றாள்.
“நளி! எங்கம்மா அங்க உங்க வீட்டுலே போட்டு குடுத்துட்டாங்க. எழுந்திரு, திரும்ப முகம் கழுவிட்டு வா” அவளை அனுப்பி வைத்தவள், வெளியே வரவும், வெளிப்புறமாக தெரிந்த காயங்களில் க்ரீம் தடவி வெளியே தெரியாதவாரு சமாளித்தாள்.
“நளி முடிஞ்சா வீட்டுலே சொல்லிருடி. அதான் உனக்கு பாதுகாப்பு” தோழியிடம் அறிவுறுத்த.
“நீ ஏதும் உளறி வைக்காத. அப்புறம் உன்கிட்ட பேசவே மாட்டேன் சொல்லிட்டேன்” நளிரா சுபியை மிரட்டி வைத்தாள்.
ஆம் பெண்கள் செய்யும் பெரிய தவறே இதுதான். தனக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளியே சொல்வதே இல்லை. அப்படியிருக்குமோ இப்படியிருக்குமோ என்றஞ்சி அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.
தனக்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து நின்றாலே தன்னை காத்துக்கொள்ள முடியும். எத்தனை நாட்கள் பயந்து ஓடுவது.
நளிராவும் தன் பயத்தினால்தான் விருப்பமில்லாத வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்தாள்.