வேந்தன்… 25
இவள் ஜன்னல் வழியாகப் பார்ப்பதைக் கண்டுவிட்ட எதிர் வீட்டு மாமிக்கு இப்போது பார்த்து பக்கத்து வீட்டில் யாருமே இல்லையேன்னு கவலையாக இருந்தது.
“பொண்ணுங்களை வளர்த்தணும்னா மலர்விழியப் பார்த்துதான் கத்துக்கணும்பா. நான்கூட கவலைப்பட்டேன். ராஜன் மூணு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்கானே. ஒரு சம்பளத்துல குடும்பத்தை எப்படிக் கொண்டு போவான். படிப்பு கல்யாணம்னு செலவு தாட்டணுமேன்னு அவனை நினைச்சு வருத்தமா பட்டேன். ஆனா பாரேன் ஒன்னொன்னும் வைரமாட்டம் மின்னுதுங்க”
“அட ஆமாப்பா. அதும் நளிரா மாதிரி பொண்ணு பிறக்கணும்னு என் மக ஆசைப்பட்டா பாத்துக்க”
இப்படி அந்த ஊர் ஜனங்க அத்தனை பேருமே ராஜன் வீட்டுப் பொண்ணுங்க புகழைப் பாடாம இருந்ததே இல்லை. சொல்லப் போனால் மாமியின் கணவரும் அதில அத்துப்படி.
ஆனால் அப்பேர்ப்பட்ட தங்கம் ஒரு அழகான வாலிபனோட தனியா வீட்டுக்குள்ள இருக்காளே!… மாமிக்கு இதைப் பத்தி யாருகிட்டயும் பேசலைன்னா மண்டையே உடையும் போலானது.
ஆண்கள்தான் ஓரிருவர் இருக்க, கார் அழகா ஸ்டைலா இருக்கேன்னு வேடிக்கை பார்த்தார்களே தவிர்த்து சிபின் வருகையைத் தவறாகவே நினைக்கவில்லை.
வேறு வழியே இல்லாமல் வேகமாக வீட்டுக்குள் சென்றார் கணவரை அழைத்து வருவதற்காக. அவர்தானே தங்ககம்பின்னு சொன்னது. அதனால் அவரையே கூப்பிட்டுக் காட்ட நினைத்தார்.
மாமி வீட்டுக்குள் செல்வதைக் கண்டுவிட்ட நளிரவுக்கும் எதிரே பிடிவாதக்காரனாய் நிற்பவனோடு செல்வதைத் தவிர்த்து வேறு வழி அகப்படவில்லை.
எப்ப எப்பன்னு வம்புக்கு காத்திருக்கும் மாமி ஒருபக்கம். மறுபக்கம் தங்கள் பெற்றோரோ அல்லது சம்மந்தி வீட்டாரோ எப்போது வேணாலும் வந்துவிடுவார்கள். அப்படியிருக்கையில் யாருமில்லாத வீட்டுக்குள் இப்படி ஒரு சூழலில்?… அய்யோ அதற்கு மேல் நினைக்கவே பயமாக இருந்தது இவளுக்கு.
“சரி வாங்க போகலாம்” அவனிடம் சொன்னவள்,
“நீங்க பக்கத்துல இருக்க பார்க்குக்கு முன்னே போங்க. நான் வரேன்” படபடவென அவள் சொல்லிட.
அவளது பதட்டத்தைக் கண்டு கொள்ளாது “அதென்ன தேவைக்கு? நீயும் என்கூடவே வா” அவளை கைபிடித்து கையோடு இழுத்துக்கொண்டு நடக்க.
அவன் கையைப் பிடிக்கவும், அரண்டு போனவள், “ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் கைய விடுங்க. உங்ககிட்ட கெஞ்சி கேட்டுக்கறேன்” அவன் விரல்களை தன் பஞ்சு விரல்களால் விடுவிக்க படாதபாடு பட.
அவளது கெஞ்சல் அவனுக்கு சுவாரசியமாக இருக்கவே, பாவம் பார்த்து விடுவித்தான். அப்போ வா என்பது போல அவன் காரை கை காட்டிட.
“இப்ப என்ன கார்லதான வரணும். வரேன் வரேன்”
‘வந்து தொலைக்கறேன்’
மனசுக்குள் திட்டியும் வெளியே திக்கி திணறியும் சொன்னவள், “தயவுசெய்து வாங்க போகலாம்” அவனுக்கு முன்பு சென்றவள் காரில் ஏறி அமர்ந்தாள்.
பின் இருக்கையில் அமர்ந்தவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன் ஏதும் பேசாமல், டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணினான்.
அவர்கள் அந்தப் பக்கம் சென்றதும், சொல்லி வைத்தாற் போல மனோகரியும் ரத்தினமும் தங்கள் காரை அதே இடத்தில் நிறுத்தினார்கள்.
வீட்டுக்குள் சென்ற மாமியோ “என்னங்க கொஞ்சம் வெளிய வந்து பாருங்க சீக்கிரம்” ஆண்டி கணவரை விவரம் சொல்லி அழைக்க.
“எப்ப பாரு உனக்கு இதே வேலையா போச்சு. அந்த வீட்டுப் பிள்ளைங்க மூணுமே தங்கம், தப்பு சொன்னா நாக்கு திரும்பிக்கும்” மனைவியை அதட்ட.
“அதெல்லாம் நீங்களே நிதானமா திருப்பிக்கலாம். முதல்ல வாங்க” கணவரை வெளியே அழைத்து வர, சொன்னது போலவே கார் நிற்க, அதுவோ சாம்பல் வர்ண கார். அவருக்கு குழப்பம் வந்தது. நாம பார்த்தது டார்க் பிளாக் கார் ஆச்சே? மண்டையை சொரிந்தவருக்கு ஒருவேளை காட்சிப்பிழையோ என்று தோன்றவும்.
“சரிவாங்க. உள்ளதான் அந்தப் பையன் இருக்கணும் காட்டுறேன். அப்ப என்னைய நம்புவீங்க” பிடிவாதமாக வீட்டுக்கு அழைத்துப் போனார்.
கணவனும் மனைவியும் வீட்டினுள் வர, அங்கே அமர்ந்திருந்த மனோகரியையும் ரத்தினத்தையும் பார்த்து இந்தம்மாவுக்கு மயங்கி விழுந்து விடுவோமோ என்றானது. கார் கலர்தான் மாறும் சரிதான் அதைக்கூட காட்சிப்பிழைன்னு வைப்போம். ஆனால் இங்கே மனிதர்களே மாறியிருக்கிறார்கள்? மாமிக்கு மாமாவின் கோபத்தை நினைத்துதான் பயமாக இருந்தது.
சத்தியமா நாம பார்த்தது உண்மையேதான். ஆனால் இதை சாமி சத்தியம் பண்ணாலும் இந்த மனுஷன் நம்பவே மாட்டாரே. கோபமாய் முறைத்த கணவரைப் பார்த்து முழித்தார்.
“அடடே வாங்க சம்மந்தி” அவர்களை வரவேற்ற மாமா, வெறுமனே நின்ற மாமியை பார்வையால் அதட்டினார்.
“என்ன நீ பாத்துக்கிட்டே நிக்கற. அவங்களுக்கு குடிக்க டீ வை. தண்ணி கொண்டு வா” மனைவியை அனுப்பிவிட்டு அவர்களுடன் பேச்சுக்கு அமர்ந்தார்.
“என்ன நடக்குதுன்னே புரியல” ன்னு புலம்பிகிட்டே மாமி டீ வைக்க ஆயத்தம் ஆக.
“இங்க பாருடி. வாய் இருக்குதுன்னு ஏதாச்சும் பேசி வச்சேன்னு வை. பேசறதுக்கு தேவையான நாக்கு இருக்காது பாத்துக்க. கட் பண்ணிருவேன். வாய மூடிட்டு இருந்துக்க” மாமா மாமியை கொடூரமாய் மிரட்டிவிட்டு திரும்பவும் அவர்களுடன் பேச்சுக் கொடுக்க சென்றுவிட்டார்.
“எங்க போய் முடியப் போகுதுன்னு தெரியலையே” மாமிக்கு வம்பு பேச்சு என்பதையும் தாண்டி நளிராவை நினைத்து கவலையாக இருந்தது. ஏற்கனவே இவளை விட்டுட்டு கடைக்குட்டிக்கு கல்யாணம் பேசியிருக்கிறார்கள். அந்தப் பேச்சே பரவலாக இருக்க, இந்தப் புள்ளை வீட்டுக்கு வந்த வேகமும், அவள் பின்னே அந்தப் பையன் வந்த வேகமும் இவர் மனதிற்கு தப்பாகவே பட்டது.
“தப்பு எதுவும் நடக்காமல் அந்தப் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பா பெருமாளே” கடவுளை வேண்டிக் கொண்டே டீயை வைத்தார் மாமி.