வேந்தன்… 28

4.7
(10)

வேந்தன்… 28

வரும் வழியில் என்ன சொன்னால் பொருத்தமாக இருக்குமென காரணங்களை யோசித்து வைத்தவளுக்கு வாசலில் காலை வைத்ததும்தான் காலையில் நடந்த கூத்து நினைவுக்கு வந்தது.

“ஆண்டவா பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாதுன்னு சொல்வாங்க. நான் வேற பொய் மேல பொய்ன்னு கணக்கில்லாம சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க போய் முடிய போவுதோ தெரியலையே, என்னை மன்னிச்சிக்கப்பா” கடவுளுக்கு ஒரு விண்ணப்பம் வைத்தவள் வீட்டுக்குள் வந்தாள்.

வரும் போதே வீட்டில் யார் யார் இருக்காங்கன்னு அவசரமாக பார்த்தும் பாராது கணக்கெடுத்தவள், நேராக வீட்டுக்குள் சென்றாள். நின்றால் பேச்சுக்கு பிடிச்சுக்குவாங்களே என்று உஷாராக உள்ளே போனாள்.

“எங்கடி போன? கடையிலும் உன்னைக் காணோம்” நளிரா வந்தும் வராததுமாய் தங்கையின் அருகே வந்த சைத்ரா அவளுக்கு மட்டும் கேட்குமாறு விசாரித்தாள்.

“கடைக்கு போனேன்க்கா. அங்க அங்கிள் இருந்தாரு. அதான் லைப்ரரி போனேன். அப்புறம் பாட்டு கிளாஸ் போனேன். வர்ற வழியில் என்கூட படிச்ச பொண்ணை பார்த்தேன். நின்னு பேசிட்டு வந்தேன் அக்கா” வர்ற வழியில் மனப்பாடம் செய்துக்கிட்டே வந்த காரணங்களை பிசிரில்லாமல் சொல்லிவிட்டாள் அக்காவிடம்.

பக்கத்து வீட்டு மாமியும் வாணி அக்காவும் மலர்விழியுடன் அமர்ந்து பேசியவாரு இருக்க. மாமியின் விழிகள் இவளையே ஆராய்ச்சி பண்ணியது.

தான் பார்த்த விஷயத்தை யாரிடமும் சொல்லவேயில்லை இன்னும். எதுவா இருந்தாலும் நளிராகிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு பொறுமையா இருந்தார்.

மாமி தன் வீட்டுக்காரர்கிட்டயே தேவையான அளவு வாங்கிக்கட்டியிருக்க, இனி இதோ இந்த வாயாடி வாணிக்கிட்டயும் வாங்குற அளவுக்கு சத்து இல்ல. அதனால நளிரா எப்போ வருவான்னு காத்திருந்தார்.

“அம்மாடி நளிரா” மாமி அவளை அழைக்க.

“மணி அஞ்சு மாமி. குளிச்சுட்டு சாமி கும்பிடுற நேரம் இது. அப்பாவுக்கு ஒரு பாட்டாவது என் குரல்ல கேட்டாகணும்னு உங்களுக்கே தெரியுமில்ல” நளிரா அவரிடம் பணிவாக சொல்லிக் கொண்டாள்.

“இப்பதான் வந்திருக்கா. குளிச்சு முடிச்சுட்டு வேற ட்ரெஸ் மாத்திக்கிட்டு அக்கடான்னு வரட்டும்டி” வாணி மாமிகிட்டே சொன்னார்.

குளிச்சுட்டு டாப்ஸ், ஸ்கர்ட் அணிந்தவள், தலையை துவட்ட.

“நளி என்னோட மாமியார் மேக்கப் டிசைன் கொண்டு வந்தாங்க. பார்த்து சொல்லுடி” ஆர்த்தி மேக்கப் டிசைன்கள் அடங்கிய புக்கை பெட் மீது வைக்க.

“உனக்கு என்ன செட் ஆகுமோ அதைப் பண்ணுடி. அடுத்தவங்ககிட்ட கேட்காதே” சீப்பை தூக்கி ஆர்த்தி மீது வீசியவள் அப்படியே தொப்பென விழுந்தாள் படுக்கையின் மீது. காய்ந்தும் காயாமலும் ஈரமாய் இருந்த முடிக்கற்றைகள் மீது காற்றுப் பட, தேகம் சிலிர்க்கக் கண்களை சுகமாய் மூடினாள்.

“நளி, படுத்துட்டியாடி” சைத்ரா அங்கே வர.

“ஹான் அக்கா. நாளையில இருந்து புடவை கட்டமாட்டேன். கேட்கறவங்களுக்கு நீயே பதில் சொல்லிக்க, இப்பவே உறுதியா சொல்லிட்டேன்” நளிராவின் குரலில் உறுதியும் கெஞ்சலும் தொனித்தது.

“கல்யாணம் வரைக்கும் கட்டேண்டி. இன்னும் ஆறு நாள்தானே இருக்கு?” ஆர்த்தி சொல்ல.

“கல்யாணம் உங்களுக்குடி. நானெதுக்கு இந்த வெய்யில்ல ஆறு முழம் புடவைய சுத்திக்கிட்டு இருக்கணும். உடம்பெல்லாம் வேகுதுடி” மறுத்துவிட்டாள் நளிரா.

“யாரவது வரப்போக இருப்பாங்கடி. நாளையில் இருந்து விசேஷம் ஆரம்பிக்கப் போகுது. உன்னை ஏதும் சொல்ல மாட்டாங்க. நானும் அம்மாவும்தான் அவங்க முன்ன பதில் சொல்லிட்டு நிற்கணும். ஏற்கனவே உன்னை விட்டுட்டு சின்னவளுக்கு பண்ணுறோம்னு பேச்சா இருக்கு. இதுல இதுவும் சேரணுமா?” சைத்ரா தங்கையின் கன்னத்தை மிருதுவாய் வருடி சொன்னாள்.

அக்காவின் மடியில் படுத்த நளிரா, “அப்போ அடுத்த வாரம், இதே நேரத்துக்கு இங்க இருக்க மாட்டியாக்கா?” அக்காவின் மடியில் இதுபோல சொகுசாய் படுக்க முடியுமா? என்ற துக்கத்தில் சட்டென கண்ணீர் கன்னம் தாண்டி வழிய, அக்காவைக் கட்டிக்கொண்டு தேம்பிவிட்டாள்.

துணிகளை மடித்து வைத்தபடி அவர்கள் பேச்சை கேட்டிருந்த ஆர்த்தியின் கரங்கள் அப்படியே நின்றுவிட, அதுவரை ஆரவுடன் பேசுவதும், நளிராவுடன் சண்டைக்கு நிற்பதுமாய் பொழுதை போக்கியவளுக்கு அப்போதுதான் நிதர்சனம் உரைத்தது.

அவளும் சகோதரிகளை கட்டிக்கொள்ள, மூவருக்கும், இந்த பந்தம் இப்படியே தொடரணுமே கடவுளே என்ற எண்ணம் தோன்றியது.

பிறக்கும் பொழுதே அழகான உறவுகளை கடவுளாய் பார்த்துக் கொடுக்கிறார். தானாய் அமையும் உறவுகளில் சிறு விரிசல் வந்தாலும் சாகும் வரைக்கும் ரணமாய் நெஞ்சில் பதிந்து போகிறது.

அதுவே ஒற்றுமையாய் இருந்தால் அதைவிட சொர்க்கம் வேறு எதுவுமில்லையே. ஒருவருக்கொருவர் அன்பாய் அனுசரணையாய் இந்த வாழ்க்கையை இன்னும் வாழ ஆசையாய் இருக்கும்.

எந்த வேலையும் செய்யத் தோன்றாமல் அப்படியே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தனர்.

“அக்கா எப்பவும் இப்படியே இருப்போமாக்கா?” ஆர்த்தி கலங்கிய கண்களை நளிராவின் உடையில் தேய்க்க.

“ம்ம்ம் இருப்போம்டி. நம்ம அக்கா தங்கச்சிங்கதான. நம்ம உறவு என்னைக்கும் விட்டுப் போகாதுடி” சைத்ரா அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள்.

அதற்குள் சாம்பிராணி நறுமணம் அறைக்குள் வீச, தாயைக் கண்டவர்கள் விலகி அமர்ந்தார்கள்.

“வெளிய வாங்கப்பா. வாணி அக்கா மாமி எல்லாம் வந்திருக்காங்க. வந்து பேசிகிட்டு இருங்க” மலர் பெண்கள் மூவரையும் அழைத்தார்.

“நான் வரலக்கா. ரெஸ்ட் எடுக்கறேன். நாளைக்கு மேக்கப் டெஸ்ட் பார்க்க நானும் கூட வரனும்ல. பேசியல், வாக்சிங், ஹேர் வாஷ் அப்படி இப்படின்னு பொழுதுக்கும் உட்காரனும். சாப்பாடும் வேண்டாம். பால் மட்டும் சூடா குடுங்க போதும்”

அக்காவிடம் சொல்லி அனுப்பிவிட்டு மீண்டும் கண்களை மூடிப் படுத்தவளுக்கு, அவன் சாப்பிடவும் குடிக்கவும் நேரா நேரத்திற்கு தந்தது நினைவு வரவும், ‘சாப்பிட வாங்கி தந்தா நல்லவனா?” இதழ்களை சுளித்தவள், சாமி கும்பிடவும் மறந்து போனாள்.

மறுநாள் பெண்கள் மூவரும் கிளம்பிவிட்டனர். மாப்பிள்ளையின் ஊருக்கு கிளம்பவேண்டும். பெண்கள் மூவரும். அவர்களுக்காக மனோகரி அனுப்பிய கார் வெளியே காத்திருந்தது. மனோகரியும் அவர்களை அழைத்துப் போக வந்திருந்தார்.

“இது அநியாயம் அக்கா. நம்ம ஊர்ல இல்லாத பார்லரா?” நளிரா கேட்டிருக்கவே, மனோகரியும் உள்ளே வந்தார்.

“நளிரா உனக்கும்தான் புக் பண்ணியிருக்கேன். நீயும் இவங்களோட பண்ணிக்க” மனோகரி சொன்னார்.

“எனக்கு வேண்டாம் அத்த. எனக்கு சுபியோட அத்தை பண்ணிவிடுவாங்க. அதுவே போதும்” நளிரா மறுக்க.

“என்னம்மா நீ. பொண்ணுப் பிள்ளைங்க கூடப்பிறந்தவ நீ. அவங்க கூட நீதான் துணைக்கு நிற்கணும். அப்படியிருக்கப்ப நீயும் அழகா நின்னாத்தான நல்லாருக்கும்?” கேட்ட மனோகரியின் குரலில் நிச்சயம் அக்கறைதான் இருந்தது.

ஆரம்பத்தில் தன் மகனை மறுத்த நளிரா மீது கோபமும் அதிருப்தியும் இருக்கத்தான் செய்தது. ஆனால் பழகப் பழக நளிராவின் குணமும், யாரையும் நோகடிக்காத இயல்பும், மறைத்துப் பேசாத குணமும் அவருக்குப் பழகிப் போனது.

“அத்த என்னோட ஸ்கின்க்கு எல்லாமே செட் ஆகாது. அதோட அவங்க பியுட்டிஷியன் மட்டுமில்லாம ஸ்கின் டாக்டரும்தான். அவங்ககிட்டயே பண்ணிக்கறேன் ப்ளீஸ்”

“பெரியவங்க பேச்சைக் கேட்கறதே இல்லடி நீ” மனோகரி அவளை முறைக்க.

“அச்சோ அத்த. அப்படியெல்லாம் இல்ல. ரிசப்ஷன்கு நீங்க செலக்ட் பண்ண புடவையைத்தான நான் எடுத்துக்கிட்டேன். பட்டுப்புடவை கூட நீங்களும் அம்மாவும் பார்த்து எடுத்திங்க. சொல்லப் போனா மேரேஜ்க்கு எனக்கு தேவையானது எல்லாமே நீங்களும் அம்மாவும்தான எடுத்தீங்க” நளிரா அவருக்கு விளக்கிக் கூறினாள்.

அதில் கொஞ்சம் சாந்தமானவர் “அதுலல்லாம் குறை சொல்ல ஒண்ணுமில்லடி. நான் பார்த்து வச்சவங்க பெரிய ஆர்ட்டிஸ்ட். அதான் யோசிக்கறேன்” அவளை ஊன்றிப் பார்த்தார் மனோகரி.

“ப்ளீஸ் அத்த. இவங்களுக்கு துணைக்கு மட்டும் வரேன். மத்தபடி நான் இங்கயே பார்த்துக்கறேன். இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் விட்டுக்குடுங்க” நளிரா அவரை உச்சி குளிர வைத்துவிட்டாள்.

“சரிடி. ஆனால் புடவைக்கு தக்க பண்ணச் சொல்லு. நல்லாயில்லைன்னா உன்னை சும்மாவிடமாட்டேன்” என்ற மிரட்டலோடுதான் அவளை விட்டார் மனோகரி.

அவர் சென்றதும் மூன்று பெண்களும் மூச்சை நன்றாக இழுத்துவிட்டார்கள்.

“ரொம்பக் கஷ்டம்டி” சைத்ரா நெஞ்சை நீவி விட்டுக்கொள்ள.

“இதுல புடவை கட்டமாட்டேன்னு வேற சொன்ன நீ. அதுக்கும் இப்படி ஒருமணிநேரம் சொற்பொழிவு நடந்திருக்கும்” ஆர்த்தி நளிராவின் பின்னலை இழுத்து விட்டுட்டே சொல்ல.

“சேச்சே அவங்க நல்லதைத்தான சொல்றாங்க?. என்ன அவங்க பேச்சு கொஞ்சம் அதிகாரம் போல இருக்கும் அவ்வளவுதான். மத்தபடி நல்லவங்கதான்” என்று ஆயிரம் வருத்தமிருந்தாலும் சகோதரிகளின் மாமியார் பற்றி நல்லவிதமாவே சொல்லிப் புரியவைத்தாள் நளிரா.

“சரிடி. அதைவிடு. நேத்து ஒருத்தன் கடைக்கு வந்தாண்டி. அழகுன்னா அவ்ளோ அழகுடி” ஆர்த்தி கண்கள் மின்ன சொல்ல.

“எரும உனக்கு கல்யாணம் ஆகப்போகுது. கண்டபடி பேசாத” நளிரா அவள் காதைத் திருக.

“கல்யாணம் ஆனா. சைட் அடிக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? அப்படித்தான் அடிப்பேன்” ஆர்த்தி சொல்லிட.

“எப்படியோ தொலை” தலையில் அடிச்சுக்கிட்டு விலகினாள் நளிரா. அவளுக்குத்தானே தெரியும் அந்த அழகனின் லட்சணம் என்னவென்று.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!