வேந்தன்… 30
“அம்மம்மா கால் வலி தாங்க முடியலையே” நளிரா மலரின் மடியில் படுத்து நெற்றியில் கைவைத்துப் புலம்ப.
“கால் வலிக்கு எதுக்குடி நெத்தியில கைவைச்சுட்டு இருக்க?” சைத்ரா கேலி செய்தாள்.
“எலி வால் மாதிரி நீங்க போற இடத்துக்கெல்லாம் நானும் வரணுமாடி?. எனக்கு வேலை கெடுதில்ல. இந்த மாச சம்பளத்துல பாதிதான் வரப்போகுது எனக்கு” நளிரா புலம்பினாள்.
மலரும் ராஜனும் ஒருவரையொருவர் வேதனையோடு பார்த்துக் கொண்டார்கள்.
“என்னமோ இவதான் வீட்டு செலவை பாத்துக்கறாப்புல பேசுறா” ஆர்த்தி.
“அப்பாக்கு கொஞ்சமாவது ஒத்தாசையா இருப்பனில்ல. அது போக உனக்கும் ஆர்த்திக்கும் ஏதாவது வாங்கித் தருவனில்லக்கா. எனக்கும் உங்களுக்கு ஏதாவது செய்யத் தோணுமே” நளிரா தந்தையை விட்டுத் தராது சொன்னாள். அதில் ராஜனின் முகம் மலர்ந்தது.
“சும்மா புலம்பிட்டே இருக்காத நளிநெளி. சீன் போட்டாலும் பொருந்தப் போடு” காய்ந்த துணிகளை மடிக்கலாம் என்று எடுத்து வந்த ஆர்த்தி அப்படியே அவள் மீது குவியலாய்க் கொட்டிட.
“ஏய் ச்சீய் பிசாசு குட்டி. போடி அந்தப் பக்கம்” துணிகளை தன் மீதிருந்து தள்ளி விட்டவள், “பாரும்மா அவளை. எப்பப் பாரு என்னையவே தொந்தரவு பண்ணுறா” மலரிடம் சலுகை கொண்டாடினாள்.
“எந்தங்கப்பட்டுடி நீ” மகள் தன்னிடம் குறைபாடவும், உருகிப் போன
மலருக்கும் நளிரா மீது தற்சமயம் இரக்கம் அதிகமாய் வந்தது.
கழுத்தில் இருக்கும் ஒரே ஒரு செயின், காதில் அணிந்திருக்கும் ஜிமிக்கி தவிர்த்து மற்றது எல்லாவற்றையும் ராஜனும் மலர்விழியும் கேட்டதற்காக எடுத்துக் கொடுத்துவிட்டாள்.
கல்யாணப் பொண்ணுங்களுக்காக விதவிதமாக நகைகள் செய்து வாங்கி வரும் போது, அதை ரசித்துப் பார்ப்பாளே தவிர்த்து ஆசைப்படமாட்டாள்.
“கொஞ்ச நாள் போகட்டும்டா. உனக்கும் இதுபோல வாங்கித் தரோம்” என்று ராஜன் மகளுக்கு தேற்றுதலாய் சொல்ல.
“நீங்க வாங்கித் தருவீங்கன்னு எனக்குத் தெரியும்ப்பா. இப்போ அக்காகும் ஆர்த்திக்கும் பண்ணுங்க அது போதும்” என்று சமாதானம் செய்வாள்.
அம்மா அக்காவை மட்டும் கொஞ்சுவதைப் பார்த்துப் புகைந்தது ஆர்த்திக்கு.
“ஆமாமா சின்னப்புள்ள மடியில் வச்சுக் கொஞ்சுறீங்க. நாங்க பண்ணுற வேலையில் கால் வாசியாவது இவ பண்ணட்டும்மா. சோத்துக்குத் தெண்டமா சும்மாவே இருக்கா” ஆர்த்தி நளிராவின் பாதங்களை நகர்த்திவிட்டு வேணுமென்று அங்கே அமர்ந்து துணிகளை மடிக்க.
“கால் நீட்டுற பக்கம் வந்து உக்காந்துட்டு இருக்கா பாரும்மா. தள்ளிப் போடி அங்கிட்டு” அவளை எட்டி உதைக்கப் போக.
“நளி இதென்ன பழக்கம். கல்யாணமாகப் போற பொண்ணுங்களை எட்டி உதைக்கறதும், எதிர்த்துப் பேசுறதுமா இருக்க” வாணி அதட்டியவாறு அங்கே வந்தார்.
“வந்தாச்சு ஆலோசனை அமைச்சர்” நளிரா வாய்க்குள் முனக.
அவள் பேச்சு காதில் விழுந்தாலும் வாணி கண்டுகொள்ளவில்லை.
“மாமி அங்க என்ன பண்ணுற. வா இங்க” வெளியே இருந்த மாமியை அழைத்தார் வாணி.
“பந்தல் போடறதுக்கு ஆள் வருதுக்கா. அதான் நின்னு பார்த்துகிட்டு இருந்தேன்” மாமி உள்ளே வர.
“ஆமாடி உன்னோட வீடுதான எதிர்த்த வீடு. கொஞ்சம் நின்னு பார்த்துக்க. இவங்களுக்கும் வேற வேலையப் பார்க்க தோதா இருக்கும்” வாணி சொன்னார்.
“ஆமாக்கா. பார்க்காம விட்டுட்டா ரோட்டுல பள்ளம் தோண்டி வைப்பானுங்க. நம்ம செல்வி வீட்டுக்கு முன்ன பந்தல் போட்ட லட்சணம்தான் உங்களுக்கே தெரியுமே” மாமி புலம்ப.
“அட ஆமாண்டி. வரும் போது சொல்லு. நானும் வரேன். அப்புறம் கார் நிறுத்தப் புடிக்க சிரமம் பாத்துக்க” வாணியும் மாமியும் பேசியவாரு இருக்க.
நளிராவுக்கு திக்கென்று இருந்தது. மாமி வந்ததும் எழுந்து ஓடிவிடலாமா என்று கால்கள் துடித்தது.
“ஏய் நளி பெரியவுங்க வந்தா எழுந்து உட்காரணும்னு அறிவு வராதாடி” படுத்திருந்தவளை வாணி எழுப்பிவிட்டார்.
“ஆமா நேத்து வீட்டுக்கு வந்தவ எங்கடி போன?” மாமி அவள் வாயை கிளறினார்.
“எப்ப மாமி?” நளிரா முழு பூசணியை சோற்றில் மறைக்க தயாராக.
“சம்மந்திங்க வரதுக்கு முன்ன, நீ வீட்டுக்கு வந்தத நான் பார்த்தேண்டி” மாமிக்கு கோவம் கோவமாக வந்தது. இன்னைக்கு இந்த விஷயத்தைப் பேசியே தீர முடிவெடுத்தவர் அவளைப் பிடித்துக்கொண்டார்.
‘ஆத்தி இன்னைக்கு விடாது போலவே. எப்படியாவது சமாளிக்கணுமே’ யோசித்தவள் வாயில் கைவைத்து இரும ஆரம்பித்தாள்.
“இந்தா தண்ணி” ஆர்த்தி குடிக்க தண்ணி பாட்டிலை தர.
‘நீயுமாடி?’ அவளை ஏற இறங்க பார்த்த நளிரா திடமாகத் தயாரானாள்.
“அம்மா அதான் வரவே இல்லைன்னு சொல்றன்ல. வேணும்னா மாமியோட மாமாகிட்ட கேட்டுப் பாருங்க”
“நான் பார்த்தேண்டி” மாமிக்கு தலை சுற்றியது. நளிரா பொய் சொல்லாத பெண்ணாயிற்றே என்று கவலைப்பட்டார்.
நளிரா மேலும் பலமாக இரும,
“அம்மா பந்தல் போட வந்திருக்கோம்” வெளியே இருந்து ஆட்களின் குரல் வர.
“எனக்கெதுக்கு வம்பு. போய் வேலைய பாக்குறேன்” மாமி அவளை மறந்து செல்ல. நளிராவும் எழுந்து போய்விட்டாள்.
…..
ஆத்மாவின் மாமா செம்ம பதட்டத்தில் நின்றிருந்தார். ஆம் சிபின் எதற்காக இங்கே இதே ஊரிலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறான் என்று அறியாத அப்பாவியாக அவனை இறால் பண்ணைக்கு அழைத்துப் போய்விட்டார்.
சிபினின் குடும்பமே சுத்த சைவம். அதனால் இது போன்ற ஸ்மெல் அவனுக்கு ஆகவே ஆகாது.
நளிராவைப் பற்றிய நினைப்பில் இருந்த சிபின் அவருடன் பண்ணைக்குள் நுழைய.
மாமாவுக்கு சிபினைக் கண்டால் எப்போதுமே பிடிக்கும். அவனது அறிவும் திறமையும் இந்தக் காலத்தில் யாருக்கு வாய்க்கும் என்பார். சிபின் தன்னிடத்திற்கு வருகிறேன் என்று ஆத்மா சொல்ல. அத்தனை சந்தோசம் இவருக்கு. அவனுடன் சேர்ந்து பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைக்கிறதே என்று.
“இதுதான் இறால் சிபின். இதோட ஸ்மெல் அற்புதமா இருக்கும்” அவர் சொல்லவும்.
பெண்ணின் இனிய நறுமணத்தை தன்னுள் உணர்ந்தவனுக்கு துடித்த செவ்விதழ்களின் தேன் சுவையும், நெருக்கமாய் உணர்ந்த அவளுடைய இதயத்துடிப்பும் கண்களை சொருக வைத்தது மோகத்தில்.
திரும்பவும் அவளை சந்தித்திட ஆவல் பிறந்தது.
“சிபின் சிபின் சிபின்” மாமா அவன் தோள் தட்டி அழைக்க.
விழிகளை திறந்தவனுக்குள் மாய வலை அறுபட, நிதர்சனம் உணர்ந்து எதிரே பார்த்தவனின் கண்களில் நீருக்குள் ஒய்யாரமாய் உலாவும் இறால் மீனும், அதன் வாசமும் குமட்டிக்கொண்டு வந்தது.
அங்கிருந்து வேகமாய் வெளியே வந்தவன் இதற்குமேல் வயிற்றில் எதுமே இல்லையெனுமளவு வாமிட் பண்ணினான். அவர் கொடுத்த தண்ணீர் பாட்டிலை கவிழ்த்து முகத்தைக் கழுவியவன், நிமிர்ந்து நின்றான்.
“சிபின் இப்போ பரவாயில்லையா?” அவருக்கு இது பழகிய விஷயம்தான் என்றாலும் சிபின் என்பதால் பதறிப் போனார். ஆத்மாவுக்கு தன் மகளைக் கொடுக்கப் போகிறார். அதனால் அவனது தொழில் நண்பனான சிபினையும் கைக்குள் வைத்துக் கொள்ள நினைத்தார்.
“ஐ’ம் ஓகே அங்கிள்” சொன்னவன் வீட்டிலிருந்து அழைப்பு வரவும் முகத்தை துடைத்துக்கொண்டு அழைப்பை ஏற்றான்.
“மாம்” சொன்னவனுக்கு அங்கே நிற்கவே முடியவில்லை. அதன் வாசம் நாசிக்குள்ளேயே இருப்பது போல இருக்கவும், மாவாவிடம் விடைபெற்றுக் கிளம்பிவிட்டான்.
“என்னாச்சு சிபின் என்னவோ மாதிரி பேசுற? நீயும் அடிவாங்கிட்டியா?” மிராவுக்கு பதட்டம். இவனும் அடிவாங்கிட்டு அங்கே தனிமையில் அழுகிறானா என்று.
“மாம்!” அதிர்வில் காரை நிறுத்திய சிபின் “என்ன பேசுறீங்கம்மா?” தான் சரியாகத்தான் கேட்டிருக்கிறோம் என்றாலும் திரும்பக் கேட்டான் தெளிவுபடுத்திக் கொள்ள.
“உன்னோட வாய்ஸ் ஏன் கரகரன்னு இருக்கு” மிரா சமாளித்தாள்.
“ஆத்மா ரவி நம்ம வீட்டுலதான் இருக்காங்க ரைட்?” சிபினின் குரலில் சினம் தெரித்தது. போட்டுக் குடுத்துட்டானுங்களே என்று பற்களை கடித்தான்.
“நாங்க இங்க இல்ல மச்சி” ரவிக் தவளையாக கத்திட. அவன் குரல் பாதியில் தடைப்பட்ட விதமும் ஆத்மாவும் அருகில்தான் இருக்கிறான் என்று புரிய பற்களை கடித்தான்.
‘இவனுங்க முழியே சரியில்லைன்னு அப்பவே தோணுச்சு’ சிபின் காரின் வேகத்தைக் கூட்டினான். மீராவுக்கு சுற்றி வளைத்துப் பேச பிரியமில்லை. அதனால் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.
“சரிப்பா நாங்க அங்க வரோம். அந்த பொண்ணுகிட்ட பேசலாம். சீக்கிரம் கல்யாணத்தை வச்சுப்போம்” மிரா ஆர்வமாக கூறிட.
மறுக்க நினைத்தவனுக்கு, அம்மா சொல்வது நடந்தால் நடக்கட்டுமே என்ற ஆசையும் உதிக்க, “ஓகே மாம்” என்றுவிட்டான்.
“அப்ப நாங்க வரோம் சிபின்” மிரா போனை வைத்துவிட, காரின் வேகம் சற்றே மட்டுப்பட, நளிராவை பார்ப்பதற்காக கிளம்பினான் உல்லாச மனநிலையுடன். மறுப்பதற்கு தன்னிடம் எந்தக் குறையுமே இல்லையே என்று புன்னகைத்துக் கொண்டான்.
அவளை பார்ப்பதற்காக தான் வந்திருக்க, அதேநேரத்தில் அவளும் வர, கார் நளிராவின் அருகே நின்றது. நளிரா அப்போதுதான் கடைக்கு வந்தவள் அவன் காரைப் பார்த்துவிட்டாள்.
“மைகாட்” சுற்றிலும் பார்த்தவள் அவன் கார் அருகில் வந்தாள்.
“என்ன?” வெடுக்கெனக் கேட்டாள்.
“உன்கூடப் பேசணும்” கன்சிமிட்டலோடு சொன்னவனை இயலாமையோடு பார்த்த நளிராவுக்கு எல்லாமே இவன் இஷ்டமா என்று ஆயாசமாக வந்தது.
“இப்போதான் வந்தேன். எனக்கும் உங்ககிட்ட பேசணும். நாளைக்கு வரேன்” சுமூகமாகவே அவனிடம் பேசினாள். இல்லாவிட்டால் வம்புக்கென்றே நிற்பானே. பீச்சில் யாரைப் பற்றியும் கண்டு கொள்ளாது அவன் நடந்துகிட்ட விதத்தில் எச்சரிக்கையாகவே இருந்தாள்.
எட்டி அவள் கையைப் பற்றியவன் அதில் தன் உதடுகளை அழுந்தப் பதித்துவிட, துடித்துப் போய் அவனை விழிகள் விரியப் பார்த்தவளுக்கு அழுகைதான் வந்தது. நில்லாமல் கடைக்குள் சென்றுவிட்டவளுக்கு வேலையைப் பார்க்கும் மனநிலை சுத்தமாகப் போய்விட்டது. உள்ளங்கை வேறு சூடாக குறகுறுன்னு இருக்க எப்படி அழுந்த தேய்த்தாலும் அவன் தந்த முத்தத்தின் சுவடு போக மறுத்தது.
இது வேலைக்காகாது என்று முடிவு செய்து, சுபியை வரச் சொன்னவள் அவளோடு சென்றுவிட்டாள்.
…..
மறுநாள் அவன் சொன்னது போலவே சரியான நேரத்திற்கு வந்துவிட்டான். அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்து முடித்தவள் அப்பாடா என்று எடுத்து வைத்துவிட்டு நிமிரும் வரை அவன் அவளருகில் வரவேயில்லை.
“என்னம்மா வேலை முடிஞ்சதா?” என்று கேட்டுவிட்டு சிவா அவள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“இந்த மாசத்துக்கான அக்கவுண்ட் பார்த்து முடிச்சிட்டேன் அங்கிள். பத்து பைசா கூட நஷ்டமில்ல” நளிரா பல் வரிசைகள் அழகாய் தெரியப் புன்னகைக்க.
“நளிரா பொண்ணு இருக்கையில் நஷ்டம் வருமாடா. நீதான் தங்கமாச்சே” புகழ்ந்தவர், “சுபி உன்னை வரச் சொன்னாம்மா. நம்ம வீட்டுக்கு போ” அவளை அனுப்பி வைத்தார்.
தன்னுடைய தண்ணீர் பாட்டிலையும் மொபைல் போனையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், கடையை தாண்டி நடக்க, அவள் அருகே அந்தக் கார் நின்று, கதவு தானாகத் திறந்தது.
காரில் இருப்பவன் யாரென்று தெரிய, பெரிதாக மந்திர வித்தையைப் படிக்கத் தேவையில்லையே. அவனேதான் என்று புரியவும், இன்னைக்கு பேசியே தீரவேண்டும் என முடிவு செய்தவளாய் மறுக்காமல் காரில் ஏறி அமர்ந்தாள்.
கார் நேராக பண்ணை வீட்டுக்கே சென்றது.