கண்ணில் கண்ட காட்சிகளும் காதில் கேட்ட தகவல்களும் அவளை பிரம்மையடையச் செய்தது. அதும் கல்யாணமா? இவனோடா? இவளுக்கு மொத்தமும் நடுங்கிப் போனது. வியர்த்துப் போனவளுக்கு அருகில் நின்றவனே பிடிமானமாகிப் போனான்.
“எனக்கு வேணுமே ஹனி. என்னோட இளமையை இன்னும் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க நானென்ன மடையனா?” அவன் கேட்ட கேள்வியில் இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“அதுசரி உங்ககிட்டப் போய் சொன்னேன் பாருங்க. என்னைய…” தலையில் கைவைக்கப் போனவள், அவனுடைய பார்வை மாறிய விதம் கண்டு “ஐ ஹேட் யூ” அவன் கையில் ஓங்கிக் குத்தினாள்.
“பட் ஐ லவ் யூ ஹனி. லவ் யூ சோ மச்” என்றவன் உதட்டை குவித்து அவளுக்கு காற்றோடு ஒரு முத்தத்தைப் பறக்க விட.
அதைக் கையில் பிடித்தவள் காலுக்கு அடியில் போட்டு மிதிக்கப் போக.
“மிதிச்சேன்னு வை. நச்சுன்னு ஒரு லிப் டு லிப் கிஸ் இப்பவே தருவேன்” ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தான் கள்ளச்சிரிப்புடன்.
“உங்கம்மாப்பா, என்னோட பேரண்ட்ஸ் சொன்னாலும் நீங்க எனக்கு வேண்டாம்”
இருவரும் இப்படியே வாக்குவாதம் செய்திட,
“ஏய் இங்க வாடி” சுபி யாருக்கும் தெரியாமல் நளிராவை இழுத்துப் போனாள்.
தான் செய்தது சரியா தப்பா என்று மனசுக்குள் ஏதோ ஊசியாய்க் குத்திக்கொண்டே இருக்க, தற்போது அவன் நடந்துகொண்டது தவிர்த்து சுபியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்.
“அடிப்பாவி. அவன்தான் வான்னு கூப்பிட்டான்னா உனக்கெங்கேடி போச்சு புத்தி?” சுபிக்கு வரும் கோபத்திற்கு நளிராவின் தலையில் பெரிய கல்லை எடுத்துப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.
அதற்கு பதில் தராது நளிரா அப்பாவியாய் விழித்தாள்.
“அறிவுகெட்டவளே உன்னை என்ன சொல்லி திட்டுறதுன்னு கூடத் தெரியமாட்டேங்குதுடி. எத்தனை அறிவுரைகள், விழிப்புணர்வுன்னு பார்க்கறோம் படிக்கறோம் கேட்கறோம். அப்படியிருக்கும் போது எவனோ ஒருத்தன் வான்னு மிரட்டினா அவன்கூடப் போவியா. சரிடி தப்பு ஏதும் நடக்கலைதான். அந்த தைரியத்தில் இப்ப என்கிட்டே வந்து சொல்லுற. ஆனால் உனக்கு ஏதாவது ஆகியிருந்தா இப்படி இருப்பியா?” தோழியை சப்பு சப்புன்னு ரெண்டு அரை வைத்தே விட்டாள் சுபி.
‘தப்பு நடக்க இருந்ததே’ விதிர்த்து நின்ற நளிராவுக்கு சுபி சொல்வது எல்லாம் புரியவும், ஒருவேளை அப்படி ஏதும் ஆகியிருந்தால்? யாருக்காக பாவம் பார்க்கிறோமோ அவர்களே தன்னை தூற்றும் நிலை வந்திருக்குமே, தலையில் கைவைத்து அமர்ந்தாள் நளிரா.
“ஹான் அம்மணிக்கு அதில வருத்தம் போல?” கேலி கூத்தாடியாது அவள் குரலில்.
“மைகாட் சுபி. தப்பு பண்ணிட்டேன்தான். அதான் உன்கிட்ட எல்லாத்தையும் ஒத்துக்கிட்டேனே. கொஞ்சம் இறங்கி வந்து எனக்கு ஆறுதல் கொடுடி. ப்ளீஸ்டி” நளிரா தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள்.
“ரொம்ப சரிடி. அவனுக்கு பிடிச்சிருந்தா என்ன வேணா பண்ணுவானா. பேட் டச் பண்ணுறதும். கிஸ் பண்ணுறதும்தான் ஹீரோயிசமா” சுபி கொந்தளிக்க.
“அதேதாண்டி. இவனுங்களா தூரத்தி தூரத்தி வருவானுங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்க கேட்பானுங்க. இல்லையா தூக்கிட்டுப் போய் தாலிய காட்டுவானுங்க” இப்படி பேச்சு செல்ல அவர்களுக்குள் இறுக்கம் தளர்ந்தது.
“நீ சொன்னது சரிதான். ஆனால் இங்கே அதை யாரும் கேட்கத் தயாரா இல்லை நளி. இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா நளி?” சுபி தோழிக்காகப் பரிதாபப்பட்டாள்.
“என்னால எதையும் யோசிக்கவே முடியலையேடி” நளிரா முகம் வாடினாள்.
சுபி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
“என்கிட்டே எதையாவது மறைக்கறியோன்னு எனக்கு உன் மேல டவுட் இருந்துச்சிடி. என்னோட வீட்டுக்கு வராமையே வந்தேன்னு ஆர்த்திகிட்ட சொல்லியிருக்க. அதான் உன்னை பாலோவ் பண்ணி வந்தேன். வந்த இடத்துல உன்னை ஒருத்தன் தூக்கிட்டுப் போறான். எனக்கு பதறிட்டு வந்துருச்சு. சரின்னு கார் பின்னாடியே வந்தேன்”
நளிரா தோழியின் அன்பில் உருகிப் போனாள்.
“அப்புறம் அவன் உன்னை தூக்கிட்டு உள்ளே போகவும்தான் உன்னோட வீட்டுக்கு அழைச்சு தகவல் சொன்னேன்.
ஆம் நளிராவின் பெற்றோர் மகளை காப்பாற்ற வந்திருக்க, ஆரியனும் மிராவும் அவர்களை வரவேற்றனர் இன்முகமாக.
“ராகவன் அங்கிளுக்கு நல்லா தெரிஞ்சவங்களாம் சிபின் சாரோட அப்பாம்மா. அதுக்குப் பிறகு கேட்கணுமாடி. மானே தேனே பொன்மானே எல்லாம் பாடி முடிச்சுட்டு, நீயும் சிபின் சாரும் லவ் பண்றதாவே முடிவு பண்ணிட்டாங்க இவங்களாவே”
“என்னடி சொல்லுற?”
“என்னத்த சொல்லட்டும்டி. எங்களால ஒண்ணுமே சொல்ல முடியலை. நான் சொல்ல வரதையும் மனோகரி ஆண்டி தடுத்துட்டாங்க. கூடவே ரெண்டு மலைமாடுங்க இருக்கானுங்க பாரு. அவனுங்க நான் பேச ஆரம்பிச்சாவே எதையாவது சொல்லிக் கெடுத்துட்டானுங்க. உனக்காக ஏதும் பேச முடியாம போச்சுடி” வருத்தமாக சொன்ன சுபி,
“நீ வந்தா முடிவு பண்ணிக்கலாம்னு ராஜன் அங்கிள் சொன்னாரு. ஆனால் அவங்க பேச்சை அப்படியே நிறுத்திட்டாங்க மனோகரி ஆண்டி” சுபியும் நளிராவும் பேசிக்கொண்டிருக்க.
“ஹாய் கேர்ள்ஸ் உங்களுக்கு அழைப்பு வந்திருக்கு” ஆத்மா ரவிக் அங்கே வந்தார்கள்.
“உங்களுக்கு இருக்குதுடா. பிறகு பாத்துக்கறேன்” அவர்களை எச்சரித்தாள் சுபி.
“நட்புக்காக உயிரை தருவோம் நாங்க” ரவிக் கூற.
அவன் தலையில் ஓங்கி கொட்டி வைத்தவள், “நாங்க அதே நட்பை சுக்கு நூறா உடைச்சுப் போடுவோம்” சவால் விட்டாள்.
“சரி வாடி. அங்க வந்து ஊமை மாதிரி இருக்காத. வாயைத் திறந்து ஏதாவது பேசு” சொல்லியே அழைத்து வந்தாள் சுபி.
சிபின் அதற்குள் அவர்களிடம் அறிமுகமாகி இருக்கவும், முகமெல்லாம் புன்னகையாக அவனிடம் பேசிக்கொண்டிருந்தனர் நளிராவின் பெற்றோர்கள். சிபினை அவர்களுக்குப் பிடித்துப் போனதை அவர்கள் முகமே அறிவித்தது.
அழகான மாப்பிள்ளை, பண்பாக பேசிடும் மாப்பிள்ளை, தலைக்கனம் இல்லாம எவ்வளவு தன்மையா பேசுறாரு. இவர்களுக்கு உச்சி குளிர்ந்து போனது.
“அத்த அதுவந்து” நளிரா பேசியது அவளுக்கே கேட்கவில்லையெனும் போது யாருக்கும் கேட்டிராதுதான்.
“நளிரா உனக்கு சம்மதமாடா. என் மகனைக் கட்டிக்கறியா?” மிரா அவளின் விருப்பத்தைக் கேட்டாள்.
“இதுல மறுக்க என்ன இருக்கு. அதான் ஒருத்தரையொருத்தர் விரும்பறாங்களே” மனோகரி அழுத்தமாகச் சொன்னார்.
தலைகுனிந்து அமர்ந்திருந்த நளிராவுக்கு மறுத்துப் பேசிடத்தான் தோன்றியது ஆனால். அதற்குப் பின்னர்?…
அப்பாம்மாவை மனோகரி அத்தை பேசியே கொன்றுவிடுவார். தவிர்த்து தன்னாலும் வேறு எந்த ஆணையும் அருகில் விடமுடியாது இனிமேல். அந்த நினைப்பில் கண்களில் கண்ணீர் அரும்பிட, அவர்களின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாதிருந்தாள்.
“நளிரா நீயே சொல்லும்மா. உனக்கு சம்மதம்னு உன் வாயால் சொன்னாதான் மேற்கொண்டு நாங்க பேசுவோம்” மிரா அவளின் விருப்பத்திற்கு முன்னுரிமை தந்தாள்.
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” நளிரா மெதுவாய் சொல்ல.
“எதுக்கு டைம் வேணும். என் மகனைப் பத்தி யோசிக்கவா? இல்லை தேதி தள்ளிப் போடணுமா” மிரா விளக்கமாகக் கேட்டாள்.
“இப்போ கல்யாணம் வேண்டாம்” நளிரா பதில் தந்தாள்.
“அதெப்படி?” மனோகரி ஆரம்பிக்க.
“கொஞ்சம் பொறுங்க. இவ மனசில என்ன இருக்குன்னு பார்ப்போம்” விட்டுக்கொடுக்காமல் பேசினாள் மிராவும். ஏனெனில் மிராவுக்கு ஓரளவு விஷயம் தெரிந்திருந்தது. சிபின் இங்கே வந்த நோக்கமே வேறு. அதே நேரம் இந்தப் பெண்ணின் முகத்திலும் மலர்ச்சியில்லை. கண்கள் கலங்கி சிவந்திருக்கு. மற்றவர்களால் அறிய முடியாததை மிரா ஒரே பார்வையில் தெரிந்துகொண்டாள்.
தன் மகனைப் பற்றி நன்கு அறிந்ததால்தான் நளிரா முகத்தை உற்றுக் கவனித்தாள். பார்த்தவிதத்தில் திருப்தியில்லை. அதனால்தான் மீண்டும் மீண்டும் விசாரித்தாள்.
“நீ சொல்லுடா. உனக்கு என்ன விருப்பம்? சிபினை உனக்கு பிடிச்சிருக்கா? அவனை கல்யாணம் பண்ணிக்கறியா?” திரும்பவும் தெளிவாகக் கேட்டாள்.
பெற்றவர்கள் முகத்தை பார்த்தவளுக்கு அவர்களுக்கும் இதில் விருப்பம் இருப்பது புரிய, மேற்கொண்டு எதையும் யோசிக்கவே தேவையில்லாது போனது.
“எனக்கு சம்மதம் அத்தை. ஆனால் கொஞ்ச நாள் போகட்டுமே. அக்காவும் ஆர்த்தியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிருவாங்க. அப்பாவும் அம்மாவும் தனியா இருப்பாங்க. அவங்க கூட நான் இருக்கணும். ப்ளீஸ் இப்ப உடனே ஏதும் வேண்டாம்” மிராவின் கைகளைப் பற்றிக்கொண்டு சொல்லியேவிட்டாள்.
“எப்படியும் நாம நிச்சயம் பண்ணுவோம். பத்திரிகை அழைப்பு அப்படி இப்படின்னு நாள் போகும். சிபினோட அத்தை மாமா இவங்கள்ளாம் வெளிநாட்டுல இருந்து வரதுக்கும் நாள் ஆகும். அதனால மூணு மாசம் கழிச்சு கல்யாணத்தை வைப்போம்” மிரா சொல்லவும்.
“இல்ல அத்தை ஆறு மாசம் போகட்டுமே ப்ளீஸ்” மிரா கெஞ்சலாக கேட்டாள்.
“நோ வே ஹனி. அவ்ளோ நாள் தள்ளிப் போட முடியாது. அம்மா சொல்றது போல மூணு மாசம். அதுக்கும் மேல என்னால வெயிட் பண்ணவே முடியாது” சிபின் உறுதியாக சொல்லிவிட.
‘மனுசனா இவர்?’ நளிராவுக்கு அவன் மேல எரிச்சல்தான் வந்தது.
மற்றவர்களுக்காவது உண்மை தெரியாமல் முடிவெடுக்கிறார்கள் என்று கருதலாம். ஆனால் தன் மனதை நன்கு அறிந்திருக்கும் இவனுடைய செயல்கள் ஒவ்வொன்றும் பெண்ணிற்கு அயர்வையே தந்தது. எப்படி இவனோடான வாழ்க்கையை வாழப் போகிறோம்? மலைப்பாக இருந்தது அவளுக்கு.
இதயத்தின் கதறல்களை நெருங்கிய உறவுகளின் விருப்பங்களுக்காக மௌனமெனும் போர்வையில் ஆழ்மனதில் அழுத்தி அழுத்தி வாழ்வின் நெடுகிலும் தவிக்கின்றேன்.
பிடிவாதக் காதலை சொல்லாமல் சொன்னது அவன் கண்கள், ஆனால் என் இதயமோ அதை ஏற்க மறுக்கின்றது
என் விருப்பமில்லா அவனின் நெருக்கம், என்னை முற்றிலும் பரிதவிக்கச் செய்கிறதே.
காதல் என்பது விருப்பம் ஆக வேண்டும், கட்டாயமென்று உதிர்ந்தால் இதயத்தில் கீறலாகவே நிற்கும்.
உறவின் வெட்கமின்றி, உணர்வின் ஆழமின்றி உண்டாகும் நெருக்கத்தில் ஆடிக்காற்றில் ஊசலாடும் பட்டமாய்த் தொலைந்து போனது என் கனவுகள் அத்தனையும்.
ஆசை வார்த்தைகள் இல்லாமல், நேசத்தின் சுவையின்றி நேரும் காதல் இல்லாத காமம் நெருக்கத்தை தரலாம், ஆனால் இதயத்தை நிரப்பாது காதல் இல்லா திருமணத்தில், உறவுகளின் வெட்கம் காண முடியுமா?