வேந்தன்… 35

4.8
(10)

வேந்தன்… 35

“என்னங்க நம்ம குருஜிகிட்ட பேசிட்டு வரீங்களா? அடுத்து என்ன செய்யறதுன்னும் கேளுங்க” மிரா ஆரியனிடம் கூறினாள்.

“அதெல்லாம் நீ பேசு மிரா” அவள் அருகில் குனிந்து கூறினான்.

“ப்ச். சொன்னதை மட்டும் செய்ங்க. நான் அவர்கிட்ட பேசினா சுத்தி வளைச்சு வளவளான்னு பேசணும். நீங்களா இருந்தா ஒரு பேச்சுல பதில் சொல்லிடுவார்”

மிரா நறுக்குன்னு சொன்ன விதத்தில், “பயந்துட்டேன்” சிரித்துவிட்டான்.

“ஆமாமா ரொம்ப பயம்தான். போய் பேசிட்டு வாங்க”

“நீங்க பேசிட்டு இருங்க. டென் மினிட்ஸ்ல வரேன்” ஆரியன் எழுந்து சென்று விட்டான்.

போகும் அவனையே பிரமிப்புடன் பார்த்திருந்தார் ராகவன். இவரைப் போல மனதிடம் இருந்தால் எதையும் சாதிக்கலாமே. வானத்தைக் கூட வில்லாக வளைத்துக் காட்டிடலாமே. என்ற எண்ணம் உதித்தது அவருக்கு.

லேசாய் சாய்ந்து நடப்பதைக் கூட ஸ்டைலாக மாற்றி நடக்கும் ஆரியனின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்.

ஆரியன் இருக்கும் வரை சாந்த சொருபியாக இருந்த மனோகரி அவன் அங்கிருந்து செல்லவும் ஆரம்பித்து விட்டார். “என்னமோ என் மகளுக்கு அதிர்ந்து கூடப் பேசத் தெரியாது. தப்பு பண்ணவே மாட்டான்னு சொன்னாரு சம்மந்தி. ஆனா பாருங்களேன் என்ன வேலை பாத்திருக்கான்னு. அப்பாவிக்களை முகத்துல தாண்டவமாடுது போங்க” மனோகரி சிரித்த முகமாக ராஜனையும் மலர்விழியையும் தாக்கினார்.

“பாத்தியாடி அந்தம்மாவுக்கு இருக்க கொழுப்பை. இருக்கட்டும் இருக்கட்டும் ஆர்த்தி போய் நல்லா கரைச்சு விடுவா. அப்ப இருக்கு” சுபி கருவினாள்.

“ப்ச் சும்மாயிருடி. நானே இங்க அரண்டு கிடக்கேன்” தோழியை தட்டிவைத்தாள் நளிரா.

“இப்பவும் சொல்றேன் சம்பந்தி. என் மகள் மேல எந்தத் தப்பும் இருக்காது” ராஜன் உறுதியாகச் சொன்னார்.

“அப்புறம் எப்படி இங்க வந்து நிக்கறோம் நாம? அப்பாவிப் பொண்ணுக்கு பண்ணை வீட்டுப்பக்கம் என்ன வேலையாம். அதுவும் ஒரு பையனோட. நாம வரும் வரைக்கும் அவனோட ஒரே ரூம்ல இருந்திருக்காளே சம்மந்தி. இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?” மனோகரியின் பேச்சு அங்கே யாருக்குமே பிடிக்காமல் போகவும், அனைவருமே முகம் மாறினர்.

சிபினின் முகம் இறுகிப் போக, மிராதான் அவன் கை மீது தட்டி எதுவும் பேசாமலிருக்கும்படி சைகை செய்தாள்.

“அம்மா கொஞ்சம் பேச விடுங்க ப்ளீஸ்” தாயிடம் அறிவுறுத்தியவன், நேரடியாகவே ராஜன் முகம் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“மொதல்ல ஒரு விஷயத்தை நான் சொல்லிக்கறேன். உங்க பொண்ணு மேல எந்தத் தப்புமே இல்லை. இதில நான் மட்டும்தான் சம்மந்தப்பட்டு இருக்கேன்” சொன்னவன் மனோகரி எதோ பேச வரவும்.

“கொஞ்சம் பொறுங்க ஆண்ட்டி. நீங்க பேசியதற்குத்தான் நான் விளக்கம் சொல்லிட்டு இருக்கேன். சோ முழுசா சொல்ல விடுங்க” சிபினின் அழுத்தமான குரல் அவரை ஒரேயடியாக அடக்கிவிட, மனோகரியிடம் மூச்சுக் கூட சரியாக வரவில்லை. வாயை மூடிக்கொண்டார் மொத்தமாக.

உங்க பொண்ணை நான்தான் விரும்பறேன். பட் அவளுக்கு என் மேல எந்த ஆர்வமும் கிடையாது” சிபின் அவர்களுக்கு பதில் தர முன் வந்தான்.

விழிகள் பளிச்சிட நிமிர்ந்தாள் நளிரா. கல்யாணம் நிற்க இன்னும் வாய்ப்பு இருக்கே என்று குதூகலம் ஆனாள்.

“அப்போ இங்க என்ன வேலை அவளுக்கு?” மனோகரி சரியாகக் கேட்டுவிட.

“நான்தான் கம்பெல் பண்ணித் தூக்கிட்டு வந்தேன். அவகிட்ட என் விருப்பத்தை சொல்லிடணும்னு நினைச்சேன்” சிபின் நடந்ததை அப்படியே சொல்லிவிட்டு நளிராவைப் பார்த்து குறும்பு சிரிப்பை உதிர்த்தவன், சொல்லட்டுமா என்பது போல ஜாடை காட்டிக் கண் சிமிட்டினான்.

நளிராவுக்கு அவன் சொல்ல வருவது புரியவும், “நோ” சொல்லாதே என்பது போலத் தலையசைத்து மறுத்தாள். ‘வெட்கம் கெட்டவனே’ மனதில் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

“எனக்குத் தெரியும். நீங்க இதைப் பத்தி தெளிவா சொல்ல அவசியம் இல்லை” சிபின் மேற்கொண்டு பேசுவதை ராஜன் தவிர்த்தார்.

இன்னும் என்னென்ன பண்ணி வச்சிருக்கானோ, என்று மிரா பதட்டமாக. ராஜனும் அதே பதட்டத்தோடு சிபினின் பேச்சை நிப்பாட்டினார். ஏனெனில் தன் மகளைத் தூக்கிட்டு சென்றதாக அல்லவா அவருக்கு தகவல் வந்தது. விருப்பமுள்ள பெண்ணைக் கட்டாயப்படுத்தி தூக்கிக்கிட்டுப் போக வேண்டிய அவசியமில்லையே.

“அவர் சொன்னது போலவே நளிரா குட் கேர்ள்தான்” சிபின் நளிராவைக் காதலுடன் பார்த்திட.

அவனைப் பார்த்து பற்களை கடித்தவளுக்கு ‘எல்லாம் உன்னாலதான்டா’ என்று முகத்திலேயே நாலு அப்பு விடலாம்னு வந்தது. ஆனால் இப்போதைக்கு அசைந்தாள் கூட முழுத் தவறும் தன் மீது பாய வாய்ப்பிருக்கிறது என அடக்கி வாசித்தாள்.

“என் மகளைப் பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்” ராஜனும் அவன் சொல்வதை ஆமோதித்து சொல்லவும்,

கண்ணீருடன் “அப்பா” என்றழைத்தாள் நளிரா.

“அதுக்காக உன்மேல கோபமில்லைன்னு சொல்ல முடியாது நளிரா. எதுவானாலும் எங்ககிட்ட சொல்லுன்னு சொல்லித்தான் வளர்த்தினோம். நீ என்னடான்னா எல்லாத்தையும் அப்படியே மறைச்சிட்ட” ராஜன் வருத்தமாகச் சொன்னார்.

“சாரிப்பா” தந்தையிடம் மன்னிப்பு கேட்க மட்டுமே முடிந்தது அவளால். செய்த தவறை சரிசெய்ய முடியாதே இனிமேல்.

“எனக்கு உங்களை, உங்க பேமிலியை பிடிச்சுப் போச்சு மாப்பிள்ளை. அதோட என் மகளுக்கும் உங்களை பிடிச்சிருக்கு. அதனால எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம். அவளை நல்லா வச்சுக்கிட்டீங்கன்னா போதும்” மலர்விழி சொல்லிட.

“அம்மா அப்படியெதுவும் இல்லம்மா” நளிரா அவர் சொல்வதை மறுத்தாள்.

“பிடிக்கலைன்னா ஆரம்பத்திலேயே எங்ககிட்ட சொல்லியிருப்ப நீ. அதைவிட்டுட்டு இப்படி மூடி மறைச்சிருக்க மாட்ட. இவரோட கார்ல ஏறியிருக்க மாட்ட. சரிதான் உனக்குப் பிடிக்கலைதான்னே வச்சுக்க. இந்தக் கல்யாணமும் வேண்டாம்னு வை. வேற மாப்பிள்ளை பார்க்கட்டுமா” மலர்விழி மகளிடம் கோபமாக கேட்டார்.

“மா ப்ளீஸ். என்னை எப்பவும் போலக் கூப்பிடுங்க” அழுதுவிட்டாள் நளிரா. அப்பாவும் அம்மாவும் தன் மீது கோபமும் வருத்தமும் காட்டுவதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நளிரா என்று முழுப்பெயரிட்டு அவளை அழைப்பதை வேதனையோடு உணர்ந்தாள்.

“ஏய் அழாதடி” சுபி அவளை சமாதானப்படுத்தினாள்.

“அழுதா எதுவும் சரியாகாது நளிரா. கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லு. இவரை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. உனக்குப் பிடிக்கலைன்னாலும் பிரச்சனையில்லை. வேற பையனைப் பார்க்கவா?” மலர்விழி அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.

“மலரு எதுக்கு இப்படி நெருக்கற. வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம். இன்னைக்கே முடிவு சொல்லணும்னு என்ன இருக்கு?” ராஜன் மகள் அழுவதைத் தாங்க முடியாமல் மனைவியின் பேச்சை நிறுத்த முயன்றார்.

மலர்விழிக்குமே கணவர் சொல்வதுதான் சரியென்றுபட்டது. தங்கள் அளவில் மாப்பிள்ளை வீடு திருப்தியே. ஆனால் மகளுக்கும் விருப்பம் இருக்கணுமே?…

“நாங்க வீட்டுக்குப் போய், நெருங்கிய நண்பர்கள், அப்புறம் மத்த ரெண்டு பொண்ணுங்ககிட்டயும் கலந்து பேசிக்கறோம். நளிராகிட்டயும் தெளிவா விசாரித்து சொல்லுறோம். நீங்க முறைப்படி பெண் கேட்டு வாங்க எங்க வீட்டுக்கு. அதன் பிறகு நிச்சயம் பண்ணுறதைப் பத்திப் பேசுவோம்” ராஜனே அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டார்.

“ஆனா சம்மந்தி” ராகவன் ராஜன் முடிவில் விருப்பமில்லாமல் மறுக்க.

“பொண்ணுக்கு முடிவெடுக்க நேரம் தரலாம் சம்மந்தி. இல்லைன்னா மனோகரிக்கா சொல்லுறது போல, ஆகிடும்” மலர்விழியும் சொல்லிட.

ராகவனுக்கு மனைவி மீது அத்தனை கோபம் வந்தது. சற்று முன்னர் நிச்சயம் வரை பேசிவிட்டு, இப்போது வீட்டுக்குப் போய் பேசிவிட்டு முடிவு சொல்கிறோம் என்பது வரைக்கும் வரக் காரணம் இவள்தான். அப்படியென்ன குணம். அவருக்கே ச்சீன்னு ஆனது.

நளிரா குணத்துக்கு இந்தக் குடும்பம் அத்தனை பொருந்தி வரும். அத்தனையையும் கெடுத்து விட்டாளே. ராகவன் மனைவியை முறைக்க, மனோகரியோ கணவரின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. பார்த்தால் ஏதாவது சொல்வார் என்று தெரியும்.

மிராவும் சிபினும் அவர்கள் பேச்சில் குறுக்கிடவேயில்லை. அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும் என்பது போல அமைதியாய் இருந்து விட்டார்கள்.

அங்கே நடப்பதைக் கூர்ந்து கவனித்த நளிராவுக்கு மனோகரி தாய் தந்தையைக் குத்திப் பேசுவது புரியவும். அவர்கள் முன் விட்டுக்கொடுக்க விருப்பமில்லை. எனவே “அப்பா அம்மா உங்களுக்கு பிடிச்சிருந்தால் எனக்கும் ஓகேப்பா. எனக்கு சம்மதம்” என்று சொல்லி மனோகரியின் முகத்தில் இருந்த சிரிப்பை அப்படியே துடைத்து விட்டாள்.

“மாத்தி மாத்திப் பேசிக்கிட்டு இருந்தா இவங்க என்ன நினைப்பாங்க பொண்ணே. கிளம்புங்க வீட்டுக்குப் போய் ஆற அமரப் பேசிடலாம்” மனோகரிக்குப் பொறாமை. தன் மகனை வேண்டாமென சொல்லிவிட்டு, இத்தனை பெரிய இடத்திற்கு மருமகளாய் போகிறாளே என்று, அதனால் வீட்டுக்குப் போய் எதையாவது சொல்லி இவர்கள் மனதை மாற்றி விடலாமே என்று கருதினார்.

“வீட்டுக்குப் போனாலும் இதேதான் சொல்லுவேன். எனக்கு சம்மதம்” நளிரா சிபின் பக்கம் திரும்பவே இல்லை அதன் பிறகு.

“அப்புறம் என்ன சம்மந்தி. பொண்ணோட விருப்பம் கேட்கத்தான் வீட்டுக்குப் போய் தகவல் தறேன்னு சொன்னீங்க. அதான் அவளே சரின்னு சொல்லியாச்சே. இன்னைக்கே பூ வச்சு உறுதி பண்ணிப்போம்” என்று மீரா சொன்னதற்கு அங்கே யாரிடமும் மறுப்பில்லை.

சிபினுக்கு நளிராவை உறுதி செய்தார்கள் அன்றே.

“மிரா நாளைக்கும் அடுத்த நாளும் மட்டுமே நல்ல நாளா இருக்குன்னு சொன்னாரு நம்ம குருஜி. அதனால கல்யாணப் பேச்சை மூணு மாசம் தள்ளிப் போட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு” ஆரியன் தகவலோடு வந்தான்.

“நளிரா நீ கேட்ட டைம் தாராளமாவே இருக்குடா. மூணு மாசம் போனாலும் அதுக்கப்புறம் அரேஞ்மென்ட் அப்படி இப்படின்னு ரெண்டு மாசம் போகும். சோ நீயும் ப்ரீ ஆகிக்கலாம்” மிரா சொல்லவும், சிபினுக்குத்தான் அய்யோன்னு ஆச்சு.

ஐ எனக்கு கல்யாணம்னு அவன் மனது குதூகளிக்க, சூராவளியாய் குருஜி மொபைல் வழியாக நொறுக்கித் தள்ளிவிட்டார்.

 

.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!