பெரியவர்கள் பேசுவதைக் காதில் வாங்கியவாறு அந்தந்த இடத்தில் மடித்து வைத்த துணிகளை அடுக்கினாள் நளிரா. “நளி அக்கா ஆர்த்திது எல்லாம் எப்பவும் போலவே அடுக்கி வைம்மா. மாத்தி வச்சுட்டா அவ்ளோதான்” மலர்விழி மகளிடம் சப்தமாக சொன்னார்.
“சரிம்மா” சொன்னவளுக்கு இவர்கள் தானாய் சென்று பேசுவதில் விருப்பமேயில்லைதான். ஆனால் இதற்கும் ஏதாவது மறுத்துப் பேசினால் தப்பாகப் போகுமோ என்று வாயை மூடிக்கொண்டாள்.
“என்னாச்சுங்க? ரொம்ப யோசிக்க வேண்டாம். கேட்டு பார்ப்போம். அவங்க சரின்னு சொன்னா மேற்கொண்டு பேசுவோம். இல்லைன்னா நம்ம வேற பக்கம் பார்ப்போம்” மலர்விழி திரும்பவும் கணவரை அழைத்துப் பேசினார்.
“பொண்ணு கிடைக்கறதுதான் இப்ப சிரமம்ங்க. அதனால நல்ல வரன் தட்டிப் போகுதேன்னு நினைக்காதீங்க”
“சரி பேசிப் பார்ப்போம்” மலர்விழி சொன்னதற்கு சம்மதம் சொல்லிவிட்டாலும் ராஜனுக்கு தயக்கமாகத்தான் இருந்தது. மனோகரி இடக்கு புடிச்சவர்ன்னு தெரிஞ்ச கதைதான். இதில இதைப் பத்திப் பேசினால் சரியாக வருமா என்றெல்லாம் யோசித்தார்.
தந்தையின் முகத்தில் படித்த சிந்தனையைக் கண்ட நளிரா “அப்பா விடுங்க. தேவைன்னா அவங்களே வரட்டுமே. எதுக்கு நாம போட்டு குழப்பிக்கணும்?” நளிரா தந்தையைத் தேற்ற முயன்றாள்.
தான் சென்றாலும் இந்த வீட்டுச் செலவையேனும் சமாளிக்கும் அளவுக்கான தொகையை வங்கியில் சேமிக்கிறாள் நளிரா. ஆர்டி தொகையை தவிர்த்து தற்பொழுது சேமிப்பதை திருமணத்திற்கென கொடுக்காது, தாய்தந்தையின் செலவுக்கென எடுத்து வைத்தாள்.
“அப்படி அலட்சியமா விடவும் முடியாதேம்மா. நல்லநல்ல இடமெல்லாம் உன்னைப் பெண் கேட்டுட்டு வராங்க. இவங்களை நம்பி வரவுங்களையும் விட்டுட்டு, கடைசியில கிடைக்கறதை கட்டிவைக்கற மாதிரி ஆகிடும்” என்ற ராஜனுக்கு தற்பொழுது அதுதான் கவலை.
அதிர்ந்து பேசத் தெரியாத, நல்ல குணமுள்ள பெண் நளிரா. ஆர்த்தி, சைத்ரா திருமணத்தின் பொழுது, வரன் பார்க்கும் பெற்றவர்கள் அவளது பற்கள் தெரியாத சிரிப்பும், பொறுமையான குணமும் கண்டு,
பொண்ணை மட்டும் தந்தா போதும்னு ராஜனுக்கும் சிவநாதனுக்கும் அழைப்பு மேல் அழைப்பாக விடுக்கின்றனர்.
அவர்களிடம் ஜாதகம் வாங்கும் முன் சிபினின் பெற்றவர்களிடம் ஒருவார்த்தை கேட்டுக்கொள்ள நினைத்தார்.
“தயங்கிட்டே இருந்தா நாள்தான் போகும்ங்க. நீங்க சம்மந்தியைக் கூப்பிட்டுப் பேசுங்க” மலர் அவரிடம் வலியுறுத்திக் கூறினார்.
ராஜனுக்கும் இதை இப்படியே தள்ளிப் போட விருப்பமில்லாது போகவே, ராகவனுக்கு அழைப்பு விடுத்துப் பேசிட சம்மதித்தார்.
ராகவனும் மனோகரியும் ஆரியன் மீராவிடம் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு திருமணம் பற்றிப் பேசினார்.
ராகவன் திருமணப் பேச்சை எடுக்கவும் மிராவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தலைசுற்றல் போல வரவும் சோபாவில் அப்படியே பொத்தென அமர்ந்தாள்.
“மாம் வாட் ஹாப்பன்ட்?” சிபின் அவர் அருகில் அமர்ந்தான்.
“நத்திங் சிபின்” அவனிடம் சொல்லிவிட்டு தன்னை நிதானப்படுத்தி பேசலானாள்.
“ஹலோ” எதிமுனையில் ராகவன் திரும்பவும் அழைத்தார். எங்கே லைன் கட்டாகி விட்டதோ என்ற நினைப்பில்.
“சொல்லுங்க” மிரா திரும்பவும் பேச.
“ஆமாங்க. அதுக்குள்ள இங்க ஒரு பிராப்ளம் ஆகிடுச்சு. அதில எல்லாத்தையும் மறந்துட்டோம்” மிரா அவர்களிடம் மண்ணிப்பும் கேட்டுக்கொண்டாள்.
சிபினின் முகம் அதில் நிறம் மாறியது. கீழுதட்டைக் கடித்தவனுக்கு அதற்கும் அவள் சரின்னுதான் தலையசைப்பாள் என்று தோன்றியது.
“அடக்கடவுளே அப்படியெதுவும் இல்லைம்மா. நீங்க பொண்ணு கேட்டீங்க நாங்களும் தரோம்னு சொல்லிட்டோம். அதான் ஒருதடவை என்னாச்சுனு விசாரிக்கலாம்னு” பதறிப் போனார் ராகவன். பெண்ணின் வாழ்க்கையல்லவா. முடிந்த வரை சுமூகமாகவே பேசிட நினைத்தார். அதற்காக தாழ்ந்தும் போக நினைக்கவில்லை அவர்.
“மாம் என்னவாம்?” அருகில் சிபின் குரல் கேட்கவும், ராகவன் நிமிர்ந்து அமர்ந்தார்.
மகன் தான் பேசுவதைக் கவனிக்கறான் என்ற நினைப்பே அப்போதுதான் வரவும், நெற்றியில் அடித்துக் கொண்டவள் “நான் நாளைக்கு கூப்பிடறேன்ங்க. என்ன ஏதுன்னு பேசிக்கலாம்” மிரா சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
மிராவுக்கு நாற்பது வயதென்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். ஆரியனுக்கு நாற்பத்தி எட்டு வயதாகிறது. சிபின் துருவ் இருவரின் தாய்தந்தைதான் இந்த சொத்துக்கள் அனைத்திற்கும் சொந்தமானவர்கள். ஒருவிபத்தில் காயமாகி உயிருக்கு போராடிய நிலையில், தன்னிடம் வேலை செய்த ஆரியனையும் அவன் மனைவி மிராவையும் மகன்களுக்கு கார்டியனாக நியமித்துவிட்டு, குழந்தைகளுக்கு எந்த ஏக்கமும் வராமல் தாய்தந்தையாகவே இருந்து பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள்.
அதுபோலவே இன்றுவரை மகன்களுக்கு அன்பில் ஒருகுறையும் வைக்கவில்லை இருவரும். துருவ் செல்லக் குழந்தையாக இவர்களையே சுற்றிச் சுற்றி வருவதில் தங்களுக்கு யாருமேயில்லையே என்ற ஏக்கம் கொஞ்சமும் வருவதில்லை ஆரியனுக்கும் மிராவுக்கும்.
சிபின் ஆரியன் போக்கிலேயே வளர்ந்ததால் அவனைப் போலவே குணமும் ஒத்துப்போனது.
மிராவின் முகத்தில் எந்த கவலையையும் பார்த்தே அறியாத சிபின் இப்போதெல்லாம் சதா நேரமும் சோகத்தையும் கண்ணீரையும் மட்டுமே பார்க்கிறான். பத்தாக்குறைக்கு புதிய பழக்கமாக இப்போதெல்லாம் விரதமும் இருக்கிறாள்.
“மாம் என்னன்னு கேட்டேன்” தாயின் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீரை வேதனையுடன் பார்த்துக் கேட்டான்.
“மூணு மாசத்துல பெண் கேட்டு வரோம்னு சொல்லியிருந்தோம் இல்ல. அதான் கேட்டிருக்காங்க. பொண்ணுக்கு கல்யாண நேரம் வந்திருச்சாம். விட்டுட்டா நாள் ஆகும்னு ஜோசியர் சொன்னாராம். அதான் விசாரிக்கறாங்க” மிரா அவனிடம் சொல்லவும்.
“கல்யாணம்?” சட்டென மூண்ட கோபத்துடன் எழுந்தவன் அங்கிருந்த கண்ணாடி டேபிளை தள்ளிவிட, சுக்கு நூறாக உடைந்து சிதறியது.
உடைந்த கண்ணாடி துகள்களைப் பார்த்தவளுக்கு இப்போதெல்லாம் இது பழக்கமான ஒன்றாக மாறிப்போனது. சிபினின் கைவரிசையால் ஏதாவது ஒரு பொருள் உடைவதும், அந்த இடத்தில் வேறு பொருள் வந்தமர்வதும் அடிக்கடி நடக்கிறது.
“அவ இந்த வீட்டுக்கு வேண்டாம்மா. திரும்பவும் அவளால எந்த பிரச்சனையும் வேண்டாம்”
“சிபின் இது தப்புப்பா. அவளைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு நீதான் சொன்ன. அதை நம்பி நாங்களும் அவங்க வீட்டுலே பேசிட்டோம். இப்ப இப்படி பேசுறது சரியில்ல சிபின்” மிராவுக்கு தோளுக்கு மேல் வளர்ந்தவனிடம் கோபப்பட மட்டுமே முடிந்தது.
“அதுக்காக அவளையே கட்டிக்கணும்னு என்ன அவசியம் அம்மா. என்னால அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழவே முடியாதும்மா”
“ஓகேப்பா. அப்போ அவளுக்கு வேற இடம் பார்க்க சொல்லிடலாம். இனி அந்தப் பொண்ணைப் பத்தின பேச்சு நமக்குள்ள வேண்டாம்” மிரா போனைக் கையில் எடுக்க.
“மாம்” அழைத்தவன் பேச்சற்று நின்றான்.
விட்டுக்கொடுக்க மனதில்லாத பிடிவாதக்காரன், நெருங்கவும் முடியாமல் அவள் மீதான காதல் முற்றிலும் கலைந்து போக, மீதமிருக்கும் சுவடுகள் அவனது உள்ளத்தை தீயாய் எரிக்கின்றது.
மறக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாமல் அலைபாயும் மனதை யாரிடமும் வெளிப்படுத்தாது உச்சி முதல் பாதம் வரை கோபம் எரிமலையாய் குமுறுவதை அவன் மட்டுமே அறிவான்.
“நானும் அப்பாவும் முடிவு பண்ணிட்டோம் சிபின். உன்னோட மனைவி அவதான். இதுல எந்த மாற்றமும் இல்லை. எங்க பேச்சை மீற மாட்டேன்னு நம்புறேன்” மிரா அவனிடம் உறுதியாய் சொல்லிவிட்டு நகர்ந்துவிட.
வேண்டாமென்று ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத தன் இயலாமையை அறவே வெறுத்தான் சிபின்.
“உன்னை விட்டுத் தொலைக்கணும்னு நினைச்சண்டி. ஆனால் நீயாய் வரும் போது எதுக்கு விடணும்” கழுகு விழிகள் சிவந்து பார்க்கவே மிரட்சியைத் தரும்படியாக இருந்தது.