சிபினிடம் பேசிமுடித்துவிட்டு நேராக கணவனை தேடிச் சென்றாள் மிரா.
துருவ்வை பார்த்துவிட்டு, அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்திருந்தவனுக்கு மனதெல்லாம் அத்தனை சோர்வாக இருந்தது. உடல் சோர்வு, வலி இப்படி எதுவும் இருப்பின் ஒரு வலி நிவாரணியை எடுத்துக் கொண்டால் அதற்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் மனம்?…
உலகில் பாதி துன்பம் மனதளவில் மட்டுமே வருகிறது. ஆரியன் மகனின் நினைவில் படுக்கையில் படுத்திருக்க, கணவனின் முகம் பார்த்தவளையும் அவனது கவலை தொற்றயது.
“துருவ் எப்படி இருக்கான்?” வேதனையுடன் கேட்டாள்.
“ம்ம்ம் இருக்கான்” வெறுமையான பதில் அவனிடமிருந்து வந்தது.
துருவ் இல்லாமல் அவர்களால் செயல்படவே முடியவில்லை. உயிர் வாழத் தேவையான தண்ணீர் இல்லாது போனால் எப்படியிருக்குமோ அப்படியொரு நிலைக்கு வந்துவிட்டார்கள்.
சதாநேரமும் குறும்பும் துள்ளலுமாக புன்னகை முகத்தோடே இருப்பான் துருவ். தந்தை துருவ்வின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற எதுவும் என்னைப் பாதிக்காது என்று தாயின் அரவணைப்பிலேயே இருப்பவன் தந்தையையும் மயக்கி தன்னோடு வைத்துக் கொள்வான்.
சிபின் புத்தியாய் இருப்பதால் நிர்வாகம் பிழைத்தது. இல்லையேல் தாய்தந்தையை அழைத்துக் கொண்டு இவன் சுற்றுலா செல்வதில் மொத்தமும் கரைந்திருக்கும்.
ஆனால் சிபின்க்கு துருவ் மீது அத்தனை பாசம். கண்டிப்பானே தவிர்த்து கட்டாயப்படுத்த மாட்டான்.
மகன் இப்படியொரு நிலையில் இருக்கவும், அதிலிருந்து மீள முடியாமல் சோர்ந்து போனான் ஆரியன்.
“நீங்கதான பேசணும்?” மிரா அவன் தோளில் கைவைத்து சொல்ல.
“என்ன பேசட்டும் மிரா. இப்போ இந்தக் கல்யாணம்?” கண்களை மூடித் திறந்தவன்
“கல்யாணம் கூட ஓகே மிரா. ஆனால் அந்தப் பொண்ணுதான் வேணுமா? துருவ்க்கு இப்படி ஆனதே அந்தப் பொண்ணாலதான் மிரா”
“சிபின் கூட கல்யாணம் வேண்டாம்னுதான் சொல்லுறான்ங்க. ஆனால் அந்தப் பொண்ணை அவன் ரொம்ப விரும்பறான். அவளை விட்டுட்டு அவனால இருக்கவே முடியாது. எனக்குத் தெரியும் துருவ் அந்தப் பொண்ணை விரும்பினான்னு. அதுக்காக சிபின் மனசை நாம உடைக்கணுமா. ரெண்டு பேருமே நம்ம மகன்கள்தான?” மிரா சொன்னாள்.
“மிரா துருவ்தான் முதன் முதல்ல அந்தப் பொண்ணைப் பார்த்தான். அப்போ அவனுக்குத்தான அவள் மேல உரிமை இருக்கு” ஆரியன் தான் பேசுவதில் நியாயமில்லை என்று தெரிந்தாலும், மனதை ஆற்றுப்படுத்த முடியாது பேசிவைத்தான்.
நன்றாக ஆராக்கியமாக இருக்கும் மகனை விடவும் சற்று நலிந்த பிள்ளையிடம்தான் பெற்றவர்களின் அன்பும் கவனிப்பும் அதிகளவில் படியுமாம்.
அப்படித்தான் எப்போதும் குறும்பும் விளையாட்டுமாக பொறுப்பின்றி இருக்கும் மகனை தடம்மாறிப் போகாது காக்கும் பொருட்டு தங்கள் கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்.
கழுகின் இறகுக்குள் பொதிந்திருக்கும் சிறுபறவையானது சுதந்திரமாய் இருக்கும் நினைப்பிலேயே வானில் உலாவிடும். அது போலவேதான் துருவ்வும். உலகம் சுற்றும் வாலிபனாய் இருப்பதிலேயே மனம் லயிக்க, சுதந்திரமாய் சுற்றித் திரிந்தான். ஆனால் எக்கணமும் அவன் தவறான பாதையில் செல்லாமல் கவனமாய் கவனித்தார்கள் ஆரியன் மிரா இருவருமே.
ஒழுக்கம் இருப்பினும் பொறுப்புணர்வு என்பது அவனுக்கு அறவே இல்லை.
இப்பொழுதும் அப்படித்தான் யோசித்தான் ஆரியன். சிபின் எப்படியாவது சமாளித்துக் கொள்வான். அதனால் நளிராவை துருவ்க்கு கட்டி வைக்கலாமே என்று நினைத்தான்.
“என்னங்க ப்ளீஸ். துருவ் முதன் முதல்ல பாத்ததோட சரி அதுக்குப் பிறகு அவங்க சந்திக்கவேயில்ல. ஆனால் சிபினும் அந்தப் பொண்ணும் பேசியிருக்காங்க. பழகியிருக்காங்க” மிராவுக்கு கணவனின் பேச்சில் பொறுமை கட்டுடைந்தது.
படுக்கையை விட்டு எழுந்த ஆரியன் “அப்படி என்னன்னு பழகியிருக்கப் போறாங்க மிரா. இவன் அந்தப் பொண்ணுகிட்ட எப்பவும் போல ரூடாதான் பிகேவ் பண்ணுறான். அந்தப் பொண்ணு ரொம்ப சாப்ட்னு நினைக்கறேன். அதனால அவளை துருவ்க்கு பார்ப்போம்” தான் சொல்வதைக் கேட்காத மனைவி மீது கோபம்தான் வந்தது அவனுக்கு.
“அடேங்கப்பா என்ன புத்தி ஆரியன் உங்களுக்கு. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்திருந்து, இப்படி கோமால இருக்கவனுக்கு கட்டித் தரச் சொன்னா என்ன செய்வீங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கையை ஒத்தையா ரெட்டையா போட்டு விளையாட உங்களுக்கு என்ன உரிமை இருக்குதுங்க” ஆதங்கமாய் சொன்ன மிராவுக்கு கணவன் சொல்ல வருவதை ஏத்துக்கவே முடியவில்லை.
“சும்மாவா சொன்னாங்க. தாயைப் போலப் பொண்ணு தகப்பனைக் கொண்டு மகன்ங்க அப்படின்னு. சிபின் உங்க மாதிரியே இருக்கானேன்னு சிலநேரம் வருத்தப்படுவேன். மத்தவங்க உணர்வுகள் எப்பதான் அவனுக்குப் புரியப் போகுதோன்னு நினைப்பேன். துருவ் நல்ல மனுசனாய் இருக்கானேன்னு நிம்மதியா இருக்கும். அதுவும் தப்பு. ரெண்டு பேருமே உங்களைப் போலத்தான் இருக்காங்க” மிராவின் அழுகை எதிரே நின்றவனைக் கரைத்தது. ஆனாலும் கல்லாய் நின்றான்.
“அப்போ நான் வளர்த்தியது. நான் சொல்லித் தந்த ஒழுக்கம் இதெல்லாம் என்ன ஆச்சு? ஒரு பொண்ணோட வாழ்க்கையில் எவ்ளோ ஈஸியா மூணு பெரும் கேம் விளையாடப் பார்க்கறிங்க. பாவம் அந்தப் பொண்ணு. இவன் என்ன பண்ணான்னு தெரியலை முகமெல்லாம் கலங்கிப் போய், யாருகிட்டயும் காட்டிக்காம இருந்தா தெரியுமா. இவனைக் கட்டிக்க சம்மதம் சொல்லியிருக்கான்னா அதுக்கு காரணம் இல்லாமையா இருக்கும்” அதற்கு மேல் நளிராவின் காயங்களைப் பார்த்து மனம் நொந்ததை சொல்லாமல் தனக்குள்ளேயே புதைத்தவள், கண்ணீரோடு தளர்ந்து தரையில் அமர்ந்துவிட்டாள். தன் வளர்ப்பு தப்பாகிவிட்டதே என்று அழுதாள்.
மனைவியின் கதறல் கேட்டு கல்லுக்கும் அசைவு வர, தானும் தரையில் அமர்ந்து மனைவியின் கண்ணீரைத் துடைத்தவன் “அப்போ துருவ்?” தவிப்புடன் மனைவியைப் பார்த்தான்.
“சாரி மிரா. என்னால துருவ்க்கு இப்படி ஆனதை ஏத்துக்கவே முடியலை” மனைவியின் மடியில் படுத்துப் புலம்பினான்.
“என்னங்க நான் சொல்வதைக் கேளுங்க. நம்மால எதையும் மாத்தவே முடியாதுங்க. இப்போ சிபின் கல்யாணம் முடியனும், இல்லைன்னா இவனையும் நாம இழக்க வேண்டியது வரும்” மிரா சொல்ல.
“மிரா சிபின் பத்தி உனக்குத் தெரியாது. அவனுக்கு புடிக்கலைன்னா மோசமா நடந்துக்குவான். இந்தப் பொண்ணு மேல இவன் கோபமா இருக்கான். கண்டிப்பா இவனைக் கட்டிக்கிட்டா அந்தப் பொண்ணால நிம்மதியாவே இருக்க முடியாது” ஆரியன் சொல்வதை மிரா ஏற்கவே இல்லை.
“நானே பேசறேன். இந்தக் கல்யாணம் நடந்தாகனும். பிள்ளைங்க வாழ்க்கையில் உங்களைப் போலவே நானும் விளையாட மாட்டேன்” மிரா கோபமாய் அங்கே இருந்து சென்றுவிட.
ஆரியன் நடக்க இருக்கும் எதையும் தடுக்க முடியாது தவித்து நின்றான்.
நளிராவுக்கு துருவ் மட்டுமே சரியான ஜோடியாக இருப்பான் என்பதில் ஆரியனுக்கு அவ்வளவு நிச்சயம். ஆனால் விதி யாரை விட்டது.
இருவீட்டாரும் சந்தித்துப் பேசி கல்யாணத்தை முடிவு செய்தார்கள். திருமணத்தை எளிதாக தங்கள் வீட்டில் வைத்துக் கொள்வதாக சொல்லவும்.
பெண் வீட்டாருக்கும் அவர்கள் சூழல் புரியவும், அவர்கள் சொல்வதற்கு சம்மதித்தார்கள்.
சிபின் வீட்டு முறைப்படி கல்யாணம் நடக்க இருக்கிறது. அவர்கள் முறைப்படி பெண் வீட்டாரை அழைத்துப் போக இன்று வருகிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் இன்று வர இருப்பதாக தகவல் கிடைக்கவும், வீட்டில் வசதியாக இடம் பண்ணி வைத்தார்கள் நளிராவின் வீட்டில்.
“காரில் தூக்கிட்டுப் போற ராஜகுமாரன்னு திருத்திக்கலாம் ஆர்த்தி” சுபியும் கேலியில் கலந்து கொண்டாள்.
நளிரா முகத்தில் ரெடிமேடாக ஒட்ட வைத்த சிரிப்புடன், இதயம் முழுக்க பயம் நிரம்பிக் கிடக்க, இனிமேல் தன் வாழ்வு எப்படிப் போகுமோ என்ற அச்சத்தில் இருந்தாள். அவளால் சகோதரிகளின் சிரிப்பினில் கலந்து கொள்ளவே முடியவில்லை.
வெட்கப்படுகிறாள் என்று இன்னுமே அவளை கேலி செய்து சிரித்தனர் அனைவரும்.
“ஸ்ஸ்ஸ் ஆர்த்தி. எதுக்கு இப்படி வெட்டு வெடுக்குன்னு குனிஞ்சு நிமிருற. கவனமா இரு. சைத்ரா உனக்கும்தான். அப்போ அப்போ ஏதாவது சாப்பிடுங்க. வாமிட் வரதுக்கு தக்க உள்ளேயும் ஏதாவது எடுத்துக்கணும். இல்லைன்னா உடம்புல சத்திருக்காது” மலர்விழி எச்சரித்தார்.
“வாணிக்கா அசத்தரீங்க” ஆர்த்தி அழகாய் தயாராகி வந்த வாணியைப் பார்த்து வியந்தாள்.
“நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு நாமதான பளிச்ச்சுன்னு இருக்கணும். சீக்கிரம் வாங்க பொண்ணுங்களா. சுபி மட்டும் நளிரா கூட இருக்கட்டும்” பெண்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.
மிராவும் ஆரியனும் மட்டுமே வருகை தந்திருக்க, மாப்பிள்ளை சிபின் வரவில்லை. ஏமாற்றமாய் உணர்ந்தாலும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை யாரும்.
பொண்ணை அழைச்சுட்டுப் போக இருவர் மட்டுமா? வேறு யாரும் வரவேயில்லையே” மலர்விழிக்கு குழப்பம் வந்தது.
“துருவ்க்கு சின்ன ஆக்சிடென்ட். இப்போ கோமால இருக்கான். அதான் எங்களால எதையும் யோசிக்கக் கூட முடியலை. அவனுக்கு குணமாகிரும்னு நம்புனோம். ஆனால் நாள்தான் போகுது எந்த மாற்றமும் இல்லை. உங்களுக்கு கொடுத்த வாக்குக்காகத்தான் இந்தக் கல்யாணத்தை இப்போ பண்ணுறோம்” மிரா மெல்லிய குரலில் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தாள்.
அவர்களின் மீது ராகவனுக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதால், “இருக்கட்டும் சம்மந்தி. எங்க பொண்ணு வந்த நேரம் உங்க வீட்டில நல்லது நடக்கும்” நம்பிக்கை கொடுத்தார்.
“கண்டிப்பா சம்மந்தி” மிராவின் குரலில் ஒரு விரக்தி. வந்ததில் இருந்து பெண் எங்கே என்று கூடத் தேடவில்லை இருவரும்.
…..
மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்ணை அழைத்துப் போய்விட, அன்றே திருமணமும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தனித்துப் பேசிட சந்தர்பம் அமையவில்லை. அமைந்தாலும் பேசிக்கொள்ளும் ஆர்வமும் இல்லை.
எளிமையாய் வீட்டிலேயே ஒரு திருமணம் இனிதாய் நடந்து முடிய, மிராவும் ஆரியனும் முகத்தில் எந்த வருத்தமும் காட்டாது அவர்களோடு கலந்து பேசினார்கள். சிபின் எப்போதும் போலவேதான் இருந்தான்.
விருந்து முடிந்து சிபின் அருகில் அமர்ந்திருந்த நளிராவுக்கு அங்கே எதுவுமே ஒட்டவில்லை. சிபின் அவளிடம் சரியாக இல்லாதது போலவே உணர்ந்தாள். ஆனால் சரியாக இருப்பது போலவும் தோன்ற பொம்மை போலவே இருந்தாள்.
சிறிது நேரம் இருந்துவிட்டு நளிராவின் பெற்றவர்களும் அவள் பக்கமிருந்து வந்தவர்களும் தங்களுக்கு ஏற்பாடு செய்த வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.
“நம்ம வழக்கப்படி மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்திருக்கணும். கருகமணியைத்தான் கட்டுவாங்களாமே” மனோகரியின் முணுமுணுப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அருமையான குடும்பத்தில் மகள் வாக்கப்பட்டுப் போகையில் இதெல்லாம் ஒரு விஷயமா? என்பது போல இருந்துவிட்டார்கள்.
மகளைப் பிரிந்த சோர்வு மலர்விழிக்கு எழ, கொஞ்சநேரம் படுக்கறேன் என்று சென்றுவிட்டார்.
சைத்ரா ஆர்த்தி மட்டுமே சிபின் வீட்டில் இருந்துகொண்டனர்.
தன்னை இயல்பு போலக் காட்டிக்கொண்டவனின் இதயம் தீயாய் கனன்றது. அவள் மீது காதல் இருந்தாலும் தற்பொழுது வெறுப்பு மட்டுமே நிஜமாக.
பெற்றவர்களிடமும் சகோதரிகளிடமும் புன்னகை முகமாக பேசியும் பொழுது அவள் சிரிப்பும் பேச்சும் அவன் இதயத்தைக் கூர் கத்தியால் கீறுவதைப் போலவே எரிந்தது.