“என்னடி அநியாயத்துக்கு வெட்கப்படுற. மாப்பிள்ளை கிட்டயாவது பேசுவியா?” அழகு பதுமையாக அமர்ந்திருந்த தங்கையின் காதோரம் கண் மையால் திருஷ்டிப் பொட்டு வைத்த சைத்ரா, செல்லமாக அவள் கன்னம் தட்டிக் கேட்டாள்.
“அக்கா” மெல்ல அழைத்தவள் அவள் இடையோடு கட்டிக்கொண்டாள். அவள் மனதில் இனம் புரியாத அச்சம் வாட்டி வதைத்தது. அதை வெளியே காட்டி யாரையும் தொந்தரவு பண்ணாது தனக்குள்ளேயே போட்டுப் புதைத்தாள்.
“நளி. முதல் நாள் அப்படித்தாண்டி இருக்கும். பயப்படாதே” தாம்பத்தியம் பற்றிய அச்சத்தில் இருப்பதாக நினைத்த ஆர்த்தி அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
“அக்கா இந்தக் கல்யாணம் எல்லாம் யாரு கண்டுபிடிச்சா? நம்ம மூணு பேரும் எப்பவும் போல நம்ம வீட்டுலயே இருந்திருக்கலாம்ல. எவ்ளோ சந்தோசமா இருப்போம். நானும் ஆர்த்தியும் சண்டை போட்டுட்டு உன்கிட்ட வந்து சமாதானத்துக்கு நிற்போம். சிரிப்பும் சந்தோசமுமா யாரைப் பத்தியும் கவலையே இல்லாம இருப்போம். இப்போ எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு அக்கா. நம்ம பேசிக்கணும்னா கூட இன்னொருத்தர் அனுமதி வேணும் இனிமேல்” பேசப்பேசவே நளிரா தேம்பி அழுதுவிட.
மூன்று பெண்களுக்குமே வேதனையில் கண்ணீர் பெறுகியது. யாரு சொன்னா பொண்ணைப் பெத்தவங்களுக்கு செலவு மட்டுமே மிச்சமாகும்னு.
அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க. நளிரா தன்னால் முடிந்த அளவுக்கு பெற்றவர்களுக்கு சேமிப்பை வைத்துவிட்டுத்தான் புகுந்த வீடு வந்திருக்கிறாள். ஆர்த்தியும் சைத்ராவும் ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டு பெத்தவங்களுக்கு தேவையானதை செய்துகிட்டுத்தான் இருக்கிறார்கள்.
இதையெல்லாம் ராஜனும் மலர்விழியும் கண்டும் காணாதது போல கவனித்து மனதுக்குள் பூரித்துப் போகிறார்கள். மகள்கள் உழைப்பில் வாழ நினைக்கவில்லை அவர்கள். ஆனால் மகள்கள் தங்களுக்காக பார்த்துப் பார்த்து அன்பை பொழிய, அதில் விரும்பியே நனைகிறார்கள்.
“ஏய் நளி. இவ்வளவு நேரம் பொம்மையாட்டம் இருந்துட்டு இப்பப் போய் அழுதுட்டு இருக்கியேடி” ஆர்த்தி அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
“இனிமேல் நீ என்னை நளிநெளின்னு சொன்னாலும் உன்னை திட்டியோ அடிக்கவோ முடியாதுல்ல. தள்ளி நின்னுதான் பேசணும்” நளிராவுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, சகோதரிகளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
பெண்களுக்கே உரிய வேதனை இது. தீரா வேதனை.
வாணியும் மனோகரியும் மிராவோடு அங்கே வந்து சேர. அவர்கள் கண்டது மூன்று சகோதரிகளின் அழுகையைத்தான்.
தங்கையை நிமிர்ந்து பார்த்த நளிராவுக்கு தன்னை வேலை செய்ய விடாது இவர்களே தன்னை வம்பு பேச்சுக்கு இழுத்துக்கிட்டே எல்லா வேலைகளையும் செய்யும் நேரங்கள் நினைப்புக்கு வரவும், மீண்டும் சகோதரிகளைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.
“இந்தப் பிள்ளையை எந்த வேலையும் செய்ய விடமாட்டோம் அத்தை. பாட்டும் சிரிப்புமா குழந்தையாட்டம் இருக்கறவளைக் கண்டா கஷ்ட்டப்படுத்தவே மனசு வராது. எங்க தங்கம் இவதான்” சைத்ராவும் தங்கையைக் கட்டிக் கொண்டு முத்தம் வைத்தாள்.
இவங்களை இப்படியே விட்டா சரியா வராது, மனோகரியின் கோபத்துக்கும் ஆளாக நேரும் என்று சுதாரித்த வாணி, “ஆர்த்தி சைத்ரா ரெண்டு பேரும் என்கூட வாங்கடி. கர்ப்பிணி பொண்ணுங்க நேரங்காலமா தூங்க வேண்டாமா. வாங்க போவோம்” பெண்களை தன்கூட வருமாறு அழைத்தார்.
“நளிராவை…” சைத்ரா தயங்கி நிற்க.
“அதை மனோகரி பாத்துக்குவாங்கடி. அவங்களும் அத்தை முறைதான ஆகுது. பாத்துக்கட்டும். நாம போகலாம்” கையைப் பிடித்து அழைத்துப் போனார் இரு பெண்களையும்.
“நான் கூட வரேன்” மிரா அவர்களுடன் நடந்தார்.
தனக்கு பலமாக இருந்த சகோதரிகள் செல்லவும், அவர்கள் போவதையே கலங்கி சிவந்த விழிகளுடன் ஏக்கமாய் பார்த்தாள் நளிரா.
மனோகரிக்கே அவளைக் கண்டு கவலையானது. இந்தப் பொண்ணு அநியாயத்துக்கு மென்மையாய் இருக்காளே. வெட்டு வெடுக்குன்னு பேசினாத்தான இந்தக் காலத்துல பொழைக்க முடியும். கவலை கொண்டவர்தான் இதே குணத்துக்காகத்தான் தனக்கு மருமகளாக்கிட ஆசைப்பட்டது என்பதை வசதியாக மறந்தும் போனார்.
மிரா அவர்கள் கிளம்பவும் அவர்களை கவனிக்க கிளம்பிவிட. மனோகரியும் நளிராவும் மட்டுமே அங்கே தனித்திருந்தனர்.
“எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கறதுதான்டி இது. ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு மாறிப் போய்தான் ஆகணும். இதான் விதி” அவளது கைகளை பிடித்துக்கொண்டவர்,
“உன்னைய என் வீட்டுக்கு மருமகளா எடுக்கணும்னு அத்தனை ஆசைப்பட்டேன். அதிர்ந்து பேசத் தெரியாத பொண்ணு. நம்மகிட்ட அனுசரிச்சு குணமா இருப்பான்னு நினைச்சேன். ஆனா அது நடக்கலை. யாருக்கு என்னன்னு கடவுள்தான முடிச்சுப் போடுவார். உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குடி. புத்தியா பொழைச்சுக்க” அவள் கூந்தலை சரிசெய்தார்.
“உன்னோட கொழுந்தனாருக்கு உடம்பு சரியில்லைன்னு குடும்பமே கவலையில் இருக்குடி. நம்மகிட்ட வாக்குத் தந்துட்டமேன்னு கல்யாணத்தை வச்சுட்டாங்க. கல்யாணமாச்சுன்னு ஆகாயத்துல மிதக்காம குடும்ப கஷ்டத்திலும் பங்கு எடுத்துக்க. இன்பம் துன்பம் எல்லா நேரத்திலும் கூட இருக்கறவதான் பொண்டாட்டி. என்ன புரியுதாடி?” வாழைப்பழத்தில் ஊசியை மெல்ல இறக்குவதைப் போலவே அவளது மனதில் புத்திமதியைப் புகுத்தினார் மனோகரி.
பொண்ணு சரியா இருந்தால் போதுமா. மாப்பிள்ளையும் சரியா இருக்கணுமே. அவனுக்கும் இது மாதிரியாப்பட்ட புத்திமதியை யாராச்சும் சொல்லியனுப்பினா தேவலையே…