அறைக் கதவைத் திறந்து உள்ளே வந்த நளிராவுக்கு அவன் இல்லாமல் இருக்கவும் நிம்மதியாக இருந்தது. அம்மா அத்தை சொன்னதற்காக வந்தவள் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்தாள்.
நினைப்பு மட்டும்தான் அவளுக்கு. ஆனால் அவள் பின்னே சப்தமில்லாது வந்தவன் அவளை பின்புறமிருந்து கட்டியணைத்தான்.
தன்னை அணைப்பது யார் எனத் தெரிந்து போக, தேகத்தில் மெல்லியதாக நடுக்கம் ஊடுருவ, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவளாக கண்களை மூடி அவன் அணைப்பிற்குள் நின்றாள்.
அவள் கழுத்தில் முகம் புதைத்தவனுக்கு அவள் அப்பொழுதே தேவையாய் இருந்தாள். ஏனோ துருவ் மீண்டுவிடுவான் என்று மருத்துவர் சொன்னதில் இருந்து ஒரு பாதுகாப்பின்மை அவனுக்குள் உருவானது.
எங்கே துருவ் வந்ததும், இரக்க சுபாவமுள்ளவள் அவன் மீது அன்பை வைப்பாளோ என்று நினைத்தவனுக்கு அவள் தன் மனைவி என்பதும், தன்னை விட்டு அடுத்தவனை மனதால் கூட நினைக்க மாட்டாள் என்பதும் புரியத்தானில்லை.
தான் இவ்வாறு நினைப்பதை அறிந்தால் அவள் துடித்துப் போவாளே என்று கொஞ்சமும் உணரவில்லை அவன்.
“ஹனி மை டார்லிங்” அவள் முதுகில் ஆவேசமாய் முத்தங்களை வைத்தவன், அவளை கைகளில் தூக்கியவாறே மஞ்சத்தை நோக்கி நகர்ந்தான். அவளோடு படுக்கையில் விழுந்தவன், கன்னங்களில் முத்தம் வைத்தான்.
அவனது மொபைல் அழைக்கவும் அலட்சியம் செய்தவன் அவள் இதழ்களில் தன் தடம் பதிக்க. மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
“ஒன் செக்கன் ஹனி” அவளிடமிருந்து விலகி எழுந்தவன் மொபைலை எடுத்தான்.
“உங்களுக்கு குடிக்க எதுவும் எடுத்துட்டு வரட்டுமாங்க?” அவனிடம் கேட்பதற்காக அவன் தோள் மீது கை வைக்கப் போக, அவள் கைபட்டு மொபைல் கீழே விழுந்து சிதறியது.
“காட்!” வாய் மீது கைவைத்தவளுக்கு ஏற்கனவே தனக்கு நேரம் சரியில்லாமல் இருக்க, இதில் இன்னும் வாங்கி கட்டப் போறோம் என்று புரிந்தது.
நொடியில் அவனருகிலிருந்து விலகி வந்தவள் கதவைத் திறக்க முயல, அதுவோ அவளுக்கு பணிய மறுத்து திறவாமல் அழுத்தமாய் நின்றது.
அவளுக்கோ நடுக்கம் பற்றிக்கொண்டது, “பிளீஸ் பிளீஸ்” தரையில் பார்வையைப் பதித்தவளுக்கு தன் அருகில் வருபவனை நிமிர்ந்து பார்க்கவும் அச்சம்.
அவள் அருகில் வந்து நின்றவனுக்கு வரும் பொழுதே அவள் மீது ஆத்திரம்தான்.
சகோதரிகளுடன் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டு இருந்தவளையும், அவளுடைய தாயின் மடியில் படுத்து ஏதோ பேசியவாறு இருந்ததும், நாதன் மகளின் நெற்றியை வருடிவிட்டு ஏதோ கேட்பதும், இவள் செல்லம் கொஞ்சுவதையும் பார்க்கப் பார்க்க இவனுக்குப் பத்திக்கிட்டு வந்தது.
‘தன்னிடம் முகத்தைக் காட்டவே நடுங்கி சாகுறவ, இவங்ககிட்ட மட்டும் எல்லா பல்லையும் கட்டிப் பேசுறா. அம்மாகிட்டக் கூட அத்தை அத்தைன்னு என்ன கொஞ்சல் கொஞ்சுறா. ஆள் மயக்கி எல்லாத்தையும் கைக்குள்ள போட்டுக்கறா’ தனக்குள் அவள் மீதான உரிமைப் போராட்டம் நடத்தியவன் அவளையே வெறித்தான்.
தரையில் விழுந்து உடைந்து கிடக்கும் அந்த மொபைலின் மதிபூ அவனுக்கு சாதாரணமானதே. அதுபோல இன்னும் வாங்கிட முடியும் அவனால்.
தன் முன் நிற்பவள் தன்னை தவிர்த்து எல்லோரிடமும் பேசுகிறாளே என்ற பொறாமை தொனித்தது அவனிடம்.
“எப்போ கிளம்புவாங்க?” அவள் மனதை முற்றிலும் உடைக்கக் கூடிய விஷயத்தைக் கையில் எடுத்தான் சிபின்.
“வந்த இடத்தில எப்படி இருக்கணும்னு அறிவு வேண்டாமாடி. அங்கே துருவ் உடம்பு சரியில்லாம படுத்திருக்கான். அந்த நினைப்பில்லாம குடும்பமா சேர்ந்து கொட்டமடிக்கறிங்க?” அவள் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டினான் இரக்கமற்று.
என்ன சொல்லுறார் அவனையே நம்பாத பார்வையில் வெறித்தவளுக்கு கண்களில் கண்ணீர் கரைகட்டியது.
“பொண்ணை கட்டிக்குடுத்துட்டு இங்கயே இருக்கலாம்னு நினைக்கறாங்களோ” அவளது தலையில் இரக்கமேயில்லாமல் இடியை இறக்கினான்.
மறுப்பாகத் தலையசைத்தவளுக்கு ஏன் இப்படியெல்லாம் என்று அழுகைதான் வந்தது.
“இல்லைங்க”
“பொண்ணை தகுதிக்கு மீறிய இடத்தில கட்டிக் குடுத்தா மட்டும் போதாதுடி. அவங்ககிட்ட எப்படி நடந்துக்கனும்னும் தெரியணும்” அவன் சொல்லச் சொல்ல இவளுக்கு வேதனையில் நெஞ்சே வெடிக்கும் போல இருந்தது.
அவ்விடம் விட்டுப் போகத் துடித்தவளுக்கு இப்பொழுது கால்கள் நகர மறுக்க, அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள். “நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி வதைக்கறீங்க. ப்ளீஸ் என்னால முடியலையே” ஒரே நாளில் மொத்த உயிரும் போனதைப் போல் இருந்தது அவளுக்கு.
அருமை பெருமையாய் வளர்த்த பெத்தவங்களை இப்படியொரு வார்த்தை சொல்லிட்டாரே. எப்போ கிளம்புவாங்கன்னு கேட்டுட்டாரே. இதை அவங்க காதுல கேட்டுட்டா? இந்த நினைப்பே அவளைப் பதற வைத்திட, தன் அருகே நின்றிருந்தவனின் கால்களை இருகரங்களாலும் பற்றினாள்.
“உங்களை கெஞ்சிக் கேட்டுக்கறேன். அவங்ககிட்ட இப்படிப் பேசிடாதீங்க. இன்னைக்கு சாயந்திரம் அவங்களே கிளம்பறேன்னுதான் சொல்லிட்டு இருந்தாங்க. கண்டிப்பா போயிருவாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” அவன் பாதத்தில் முகம் பதித்துக் கதறி அழுதவளைக் கண்டும் அசைந்தான் இல்லை.
‘உன்னோட நடிப்பை நம்புறதுக்கு நான் ஒன்னும் துருவ் இல்லைடி’ அவன் முகம் இன்னும் இறுகியது.