“என்னங்க வெளியே போகணும்னு சொன்னீங்க” ஆணின் கரங்கள் ஒரு நிலையில் நில்லாது பெண்ணவளின் தேகங்களில் மீட்டிட, அவனது அணைப்பும், விரல்களின் வித்தைகளும், அவளை நிற்க விடாமல் துவள வைத்தது. அவன் தோளில் கைபோட்டு அவன் மீதே சாய்ந்து நின்றாள்.
“இன்னும் நேரமிருக்குடி. போகும் போது சில இடங்களை காட்டிடணும்னு நினைச்சேன். ஆனால் நான் பார்க்க வேண்டியதே இன்னும் தீராமல் இருக்கேடி” அவளது வெற்றுத் தோள்களில் தன் இதழ்களால் அர்ச்சனை செய்தான்.
அவனை இன்னும் இறுக்கி அணைக்க, அவளைக் கைகளில் ஏந்தியவன் படுக்கையில் அவளோடு பொத்தென சரிந்து விழுந்து படுத்தான். அதன் பின்னர் மற்றதை நினைக்க எங்கே நேரமிருக்கும், தங்களின் உலகத்தில் சஞ்சாரம் செய்தனர் இருவரும்.
களைத்து போய் மோன நிலையில் படுத்திருந்தவர்களைக் கலைத்தது மொபைலின் அழைப்பு,
பார்த்துப் பார்த்துக் கட்டிய புடவை, அவனது அவசரத்தால் வெகு அழகாய் கட்டிலின் ஒரு முனையிலிருந்து டீபாய் மீது வரை படர்ந்திருந்தது. அவன் மார்பில் தலை வைத்து கண்களை மூடிப் படுத்திருந்தாள். மூச்சு வாங்கியது அவளுக்கு. முகமெல்லாம் சிவந்து பூரித்துப் போயிருக்க, இன்பமான அயர்வு அவளிடத்தில் மிகுந்திருந்தது.
தங்கள் நிலையை உணர்ந்தவள் இதுக்குத்தான் அந்தப் பாடா? என்று இருந்தது. பின்னே புடவையைக் கட்டிக்கச் சொல்லி எத்தனை பேச்சு. இப்பொழுது அது ஒரு பக்கம் பாவமேன்னு கிடந்தது.
சொல்லப் போனால். அவளும் இதைத்தான் சொல்லவும், அதன் வேலையை அது சரியாக செய்திருந்தது என்றே சிபின் சொன்னது நினைப்பு வரவும், அவள் இதழ்களில் வெட்கப் புன்னகை படர்ந்தது.
சிபினின் மொபைலில் அலாரம் ஒலிக்க, “என்னங்க போன்” அவனை அழைத்தாள்.
“எங்க கிளம்பறோம்?” நளிராவுக்கு எழுந்திருக்கவே சோம்பலாக இருந்தது. அவன் மார்பிலேயே திரும்பவும் அடைக்கலமாக.
“கார்லதான் போகப் போறோம் ஹனி. உனக்கு ரெஸ்ட் எடுக்க டைம் இருக்குடி. இப்போ கிளம்பி வா” அவளது கேள்விக்கு பதிலை சொல்லாமல், அவளை உலுக்கி எழுப்பினான்.
“கிளம்பறேன். ஆனால் புடவையெல்லாம் கட்ட மாட்டேன்” கட்டிய புடவையை அவனே ரசித்து முடித்துவிட, திரும்பவும் புடவை கட்ட முடியாதென்று மறுத்தவள், டாப்ஸ் ஜீன்ஸ் அணிந்து கொண்டாள்.
லாங் டிரைவ் என்பதால் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை அவனும். அவளைக் காரில் எற்றிக்கொண்டு கிளம்பினான்.
லாங் டிரைவ், கொஞ்சம் ஆறுதலை அளிக்க, நளிரா முகம் தெளிந்தது. ஆனாலும் பெற்றவர்களைப் பிரிந்ததில் இன்னும் சோகம் இருக்கத்தான் செய்தது. அவளது மனநிலையை மாற்றிட முடிவெடுத்தவனாய் ஒரு சந்தையின் நுழைவாயிலில் தங்கள் காரை செலுத்தினான். அது ஒரு புராதனமான சந்தை. சுற்றுலா வரும் மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, வேடிக்கை பார்ப்பதற்காகவே வருகை தருவார்கள்.
கடை வீதிகளில் காரை மெதுவாக செலுத்தினான் “இங்கே உனக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கறேன் ஹனி. இது கிடைக்கறதுக்கு அறிய பொருட்கள் மட்டுமே கிடைக்கற ஒரு மார்க்கெட். சந்தைனு சொல்வாங்க இங்குள்ள மக்கள். அப்படியே வேடிக்கை பார். பிடிச்சா இறங்கி வாங்கிப்போம்” சிபின் அவளிடம் சொல்ல.
ஏற்கனவே ஆர்வமும் ஆச்சரியமுமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவளுக்கு அவன் சொல்வது அரைகுறையாக மட்டுமே கேட்டது. அவளது கவனம் முழுவதும் விதவிதமான வர்ணங்களில் ஜொலித்த கலைப் பொருட்களில்தான்.
அந்த சந்தையில், பழைய புகைப்படங்ள், சங்கு சிற்பிகள், கைவினைப் பொருட்கள், மற்றும் பானங்களும், பழங்கள், மிட்டாய்களும் கண்களுக்கு குளிர்ச்சியாக விற்பனை ஆனது.
தங்கள் ஊரில் கடற்கரை, பார்க், படகில் செல்வது என மூன்று சகோதரிகளும் கூடவே சுபியும் சேர்ந்து கொள்ள நாட்கள் சர்க்கரை போலவே இனிப்பாய்க் கரையும். லீவ் நாட்கள் செல்வதே தெரியாது இவர்களுக்கு.
இங்கே சிபின் அழைத்து வந்த இடம் பார்த்ததும் நளிராவுக்கு உற்சாகம் ஆனது. காரில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதைக் காட்டிலும் நடந்து சென்றால் இயற்கை காற்றில் சுகமாய் இருக்குமே, ஓரக்கண்ணால் கணவனைப் பார்த்தாள்.
“ரொம்ப பழைமையான சந்தை இது. நீ பார்க்குறது தவிர்த்து சிலதை மறைமுகமாகவும் விற்பனை செய்வாங்க. விலைமதிப்பு மிக்க பொருளும் இங்கே கிடைக்கும். அதாவது பத்து ரூபாயில் ஆரம்பிச்சு கோடிரூபாய் வரைக்கும் மதிப்புள்ளது இங்கே சந்தைபடுத்துவாங்க” சிபின் அவளுக்கு விளக்கம் தந்தான்.
அவன் சொல்வதை வியப்புடன் விழிகள் விரியக் கேட்ட நளிராவுக்கு, அவன் தன்னிடம் இணக்கமாகப் பேசுவதே பெரிய விஷயமாக இருந்தது.
பெண்ணவளின் மெல்லிடையில் தன் கையை உறவாடவிட்டவன் பெண்ணின் சிவந்த அழகை விழியகற்றாது ரசித்தான்.
நளிரா, அந்த இடத்தின் பழம்பெருமையை உணர்ந்தவளாய் அருகில் தன்னையே சைட் அடிக்கும் கணவனை கண்டு கொள்ளாது வேடிக்கை பாக்கலானாள்.
ஒரு நூற்றாண்டு பழைய புகைப்படங்களை ஆர்வமுடன் பார்த்தவள், அழகா இருக்குங்க என்று சிலாகித்தாள்.
ஆசை தீர அவள் வேடிக்கை பார்த்து முடிக்க, அவளை அருகே உள்ள கிராமத்துக் கோவிலுக்கு அழைத்துப் போனான். அதன் பின்னர், கார் வெகுதூரம் சென்றது. போகும் இடமெங்கிலும் இயற்கை இயற்கை மட்டுமே. சிறு சிறு கிராமங்கள் அவ்வப்பொழுது இடையில் இருக்கும்.
நளிராவுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் வேடிக்கை பார்க்க முடியவில்லை. கண்ணயர்ந்தாள். இருக்கையை பின் புறமாக சாய்த்து அவளை நன்றாக படுக்க வைத்தவன் பயணத்தை தொடர்ந்தான்.
இரண்டு மணிநேர பயணத்திற்குப் பின்னர் கார் நின்றது. அரை விழிப்பில் இருந்த நளிராவும் கார் நிற்கவும் தானும் எழுந்தமர்ந்தாள். “இவன் இப்படியே இருக்கணுமே” இறைவனை வேண்டிக் கொண்டாள் நளிரா.
சிபின் யாருடனோ பேசிக்கொண்டு நிற்கவும், காரின் அருகில் நின்றாள் நளிரா.
“கால் பண்ணும் பொழுது வா போதும்” அவனிடம் அறிவுறுத்தியவன் சாவியை அவன் கையில் தந்துவிட்டு நளிராவிடம் வந்தான்.
“அதான் இவ்வளவு நேரம் ரெஸ்ட் எடுத்தாச்சே. நடந்துருவேன்” சின்னக் குழந்தையின் ஆர்வம் அவள் விழிகளில். இந்த மலைக்கு போகப் போறேமா என்ற ஆவலில் கால்கள் பரபரத்தது.
“அப்போ ஓகே. இந்த பேக் நீ எடுத்துக்கோ. பெரிய பேக் என்கிட்டே இருக்கட்டும்” என்று அவள் கையில் தண்ணீர் பாட்டில் இருக்கும் பேக்கை தந்தவன் மற்றதை தான் எடுத்துக் கொண்டான்.
“இங்கதான் தங்கப் போறோமாங்க?”
“எஸ்… டூ மன்த்ஸ்”
“அப்போ நமக்கு போட்டுக்க ட்ரெஸ்?” குழப்பம் அவளுக்கு.
“அதெல்லாம் ஏற்கனவே அங்கே எடுத்துட்டு போய்ட்டாங்க. நாம போனால் போதும்” சிபின் முன்னே நடக்க. அவனைத் தொடர்ந்து தானும் நடந்தாள் நளிரா.
கால்கள் வலிக்க நடந்ததும் காட்டேஜ் ஒன்று தென்பட்டது. “ஹனி! கேட் டச் பண்ணிடாதே. வெயிட் பண்ணு” என்று எச்சரிக்கை செய்தவன் ரிமோட் எடுத்து ஆன் பண்ண. கேட் தானாக திறந்தது.
“கேட்ல கரண்ட் இருக்கா என்ன?” அவள் விழிகளிள் மிரட்சி இருந்தது.
“அனிமல்ஸ் வராம இருக்க, அதுங்களை பயமுறுத்த வச்சிருக்கு. இல்லைன்னா இந்த மலைக் காட்டுக்குள் நாம இருக்க முடியாது”
“ஓ” என்று உதடு குவித்தவளுக்கு, இவரை விடவா அதுங்க பயம் தரப் போகுது? என்ற நினைப்பு உள்ளூர எழவும், திடுக்கிட்டுப் போனவள், ‘கடவுளே புருஷனைப் பத்தி தப்பா நினைக்கறது பாவம்தானே? என்னை மண்ணிச்சிக்கப்பா’ அவளுக்குள் இப்படி நினைக்க.
அவள் வானத்தைப் பார்ப்பதும், தனக்குள் பேசி வாயில் கையை வைத்து முத்தம் தருவதையும் வித்தியாசமாகப் பார்த்தவன், “என்னாச்சு?” விளங்காத பார்வையுடன் வினவினான்.
“ஹிஹி ஒன்னுமில்லைங்க, நத்திங். நத்திங்” அவனிடம் அசடு வழிந்து சமாளித்தவள் ‘அத்தனை பேர் இருக்கப்பவே பயமில்லாம நம்மளை சூப் வச்சுக் குடிப்பாரு. இப்போ தனியா சிக்குனா கைமாதான், அவ்வா, எப்பிடி வந்து சிக்கிட்டேன் பாரு’ எத்தனைக்கு குதூகலமாய் வேடிக்கை பாரத்தாளோ அதே அளவுக்கு பயமும் வந்தது.
‘முடிந்த அளவுக்கு சூதானமா தப்பிச்சிக்கணும்’ தனக்குள் ஒரு உறுதி எடுத்தவள், அவன் பக்கம் பார்வையைத் திருப்ப, அதிர்ந்தே போனாள். இன்னும் அவள் மீதான பார்வையை அவன் நகர்த்தவே இல்லை.
“ஒன்னுமில்லைங்க நாம உள்ளே போகலாமா?” அவனை அழைத்தாள் நளிரா.
மாலை நேரம் தாண்டியிருக்க, குளிர் காற்றும், ஈரப் பதமும் அவளை வருடிப் போக, குளிர் பிடித்தது, லேசாக பற்களும் தந்தியடித்தது மெல்ல.
சிபின் தங்கள் தேன்நிலவிற்காக தேர்ந்தெடுத்த இடமே இயற்கையும் கடலும் ஒன்றிணைந்த தீவுப் பகுதியாகும். மரங்கள் அடர்ந்த மலைபகுதியும் அதன் அடிப்பகுதியிலேயே அருவியும் ஓடையும் படர்ந்து பரவியிருக்கும்.
நளிரா சுற்றுமுற்றும் அரக்கப் பறக்க வேடிக்கை பார்க்க முயல,
“ஹனி. ரொம்ப டயர்டா இருக்குடி. நாளைக்கு பார்க்கலாம் வா” அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
“நமக்கு சாப்பாடு?” முக்கியமான கேள்வியை அவள் கேட்டிட.
“இன்னைக்கு வாங்கிட்டு வந்துட்டோம்டி. நாளைக்கு நாம சமைச்சுக்கலாம்” சிபின் அவளை அறைக்குள் அழைத்துப் போனவன், அதற்கு மேல் அவளைப் பேச விடாது கைகளில் அள்ளிக்கொண்டு குளியல் அறைக்குள் சென்றான்.
“ஹாவ் வரும் போதுதானே குளிச்சுட்டு வந்தோம்?” அவன் கைகளுக்குள் ஒய்யாரமாய் இருந்தவள் சிணுங்கினாள்.
“இனிமேல் நமக்கு முழு ரெஸ்ட். சோ எப்ப வேணா குளிப்போம், தூங்குவோம், அண்ட்” கள்ளச்சிரிப்புடன் நீருக்கு அடியில் அவளுடன் நின்றவன் அடுத்து என்ன என்பதை செயலில் காட்டினான்.
“அச்சோ” அவனைக் கட்டிக் கொண்டவளுக்கு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் வெட்கம் பிடித்துக் கொள்ள, அவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள் நளிரா.
புது தம்பதிகளுக்கே உரித்தான மோக நாட்களும், இன்பமுமாக நாட்கள் சென்றிட, வெளியே போகும் எண்ணமே வரவில்லை அவர்களுக்கு. துருவ் சம்மந்தப்பட்ட விஷயங்கள் தவிர்த்து அவளோடு பகிர்ந்து கொள்ள விஷயங்கள் இருந்தது அவனுக்கு.
சமையலில் அதிக அறிவு இல்லாதவள் அவனிடம் தெரிந்து கொள்ள, மலர்விழியும், மிராவும் அவளுக்கு மொபைல் மூலமாக சமைக்க கற்றுத் தந்தனர். அவனும் ஒரு குறையும் சொல்லாமல் சாப்பிட்டது இன்னுமே சந்தோஷம் நளிராவுக்கு.
அவன் மீதான சிறு நெருடல்கள் கூட அவனது அன்பிலும், கரிசனையான கவனிப்பிலும் ஓரமாய் ஒதுங்கி நின்றது. அவனோடான நாள் ஒவ்வொன்றும் தித்திப்பாய் கழிந்தது.
கிளம்புவதற்கு இன்னும் பத்து நாட்களே மீதம் இருக்க, இனியாவது சுற்றிப் பார்க்கலாமே என்று அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கிட, இதோ ஒரு வழியாக வெளி உலகம் பார்க்க வந்துவிட்டார்கள்.
நீர்வீழ்ச்சிகள் அருகே வந்தனர். இருவரும் தண்ணீரில் ஒன்றாய் குளித்தனர். தூரத்திலிருந்து கேட்கும் பறவைகளின் இசையும், வீசும் குளிர்ந்த காற்றும் அவர்கள் மனதை ஈர்க்கும் வகையில் இருந்தது.
அருவிக்கும் கீழே ஓடும் ஆற்றிற்கு சென்றனர். மூலிகை செடிகளின் வாசனை காற்றில் வழியே வந்து நாசியை வருடிட, அருவியின் சப்தமும், இரைச்சலுடன் வெண்ணிற நுரைகளாய் நுரைத்து பின்னர் பாதையில் தெளிந்த நீராய் செல்லும் ஆற்று நீரின் அழகும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதவை, மற்றும் மணலில் நடக்கும் பொழுது பாதங்களின் சுவடுகள் சூரியக் கதிர்களால் தகதகத்தது. தண்ணீரின் சப்தங்கள் ஒரு மெலோடியையாக செவியில் விழுந்தது.
கரையோரத்தில் அமர்ந்தபோது, பச்சை மலைகளின் பிரம்மாண்டத்தை விழிகளில் உள்வாங்கினார்.
நளிரா, மணலில் தனது கால்களை வைத்து மெல்ல நடந்தவள் , கடலுக்குள் செல்ல தயாராயினாள்.
இரண்டு மாதங்கள் எப்படிச் சென்றது என்பதையே உணர முடியாத அளவிற்கு இருவருக்கும் நாட்கள் இனிமையாய் கழிந்தது.
இப்படியே நாட்கள் சென்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கையை வாழத்தானே வேண்டும். அதனால் இருவரும் மனதே இல்லாமல் கிளம்பினார்கள் தங்கள் இருப்பிடம் நோக்கி.